Sudum Nilavu Sudatha Suriyan - 11
சுடும் நிலவு சுடாத சூரியன் – 11
அப்பாவா? அவருக்கு எப்படி ரவிகுமாரை தெரியும்? என ஒரு நிமிடம் அதிர்ந்து நின்றவன், தன்னை சமன்படுத்திக் கொண்டு கிளம்பினான்.
தன்னிடமிருந்த சாவியினால் கதவை திறந்து கொண்டு வீட்டினுள் சென்றான். கீழேயிருந்த படுக்கையறையில் வசந்தன், அசந்து தூங்கி கொண்டிருந்தார். சம்யு கடத்தப்பட்டதிலிருந்து ஒழுங்காக தூங்காமல் இருந்தவர், இரண்டு நாட்களாக தான் தூங்கிறார். அவரை எழுப்ப மனமின்றி, தன்னறைக்கு சென்று படுக்கையில் படுத்தவன், சிறிது நேர யோசனைக்குப் பிறகு தூங்கியே போனான்.
காலை எட்டு மணிக்கு அவன், கீழே இறங்கி வந்த போது, வசந்தன் வீட்டில் இல்லை. தினமும் அவர் காலை ஆறு மணிக்கே மருத்தவமனைக்கு சென்று, வினோதினியை வீட்டிற்கு ஒய்வெடுக்க அனுப்புவார். அம்மா இன்னும் ஏன் வரவில்லை என யோசித்தபடியே வேலைக்கு செல்ல கிளம்பினான்.
செல்லும் வழியில் மருத்தவமனைக்குச் சென்றவன், வினோதினி இன்னும் அங்கேயே இருப்பதை பார்த்தான். சம்யுவிடம் பேசி கொண்டிருந்து விட்டு கிளம்பினான்.
"அம்மா, அப்பா காலையில் இங்க வரலை? அவர் வீட்டிலும் இல்லை" என யோசனையுடன் கேட்டான்.
"இல்லைபா, அவர் இங்க வரலை. இன்னிக்கு காலையிலே வெற்றிவேல் ஐயாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்திடிச்சு. அவரை பார்க்க அப்பா போயிருக்கார்" என வருத்தமுடன் சொன்னார்.
தாத்தாவிற்கு ஹார்ட் அட்டாக்கா? நேற்று இரவு நாம் தானே அவருடன் கடைசியாக பேசி கொண்டிருந்தோம். அப்போது நன்றாக தான் இருந்தார் என யோசித்தான். ஆனால் கடைசியில் அவர் சோர்வாக, தளர்ந்து போய் அவர் அறைக்கு சென்றது மனதில் வந்து போனது.
"அம்மா, இங்க நான் ஸம்யுவோட இருக்கேன். நீங்க வீட்டுக்குப் போயிட்டு வாங்க. நான் ஆபிஸ் லேட்டாக போறேன்." என்றான்.
"நீ ஆபிஸுக்கு கிளம்பு. அமிதா இன்னும் பத்து நிமிஷத்தில் வந்திடுவா. அதற்கு அப்பறம் நான் வீட்டிற்கு போறேன்" என்றார்.
சரியென்று தலையசைத்து விட்டு காவல் தலைமையகம் வந்தவன், அகிலனை தேடினான். அவன் வேறு எங்கோ சென்றிருப்பதாக, அவனிடம் வேலை செய்யும் ரைட்டர் சொல்ல, தன் ஸீட்டிற்கு சென்றான்.
அவனை கூப்பிட்ட டிஸிபி ஒரு ஃபைலை கொடுத்துப் படிக்க சொன்னார். முழுவதையும் படித்து விட்டு தன்னை நாளை வந்து பார்க்க சொன்னார்.
அவரிடமிருந்து ஃபைலை வாங்கி படிக்க தொடங்கியவன், உணவு இடைவேளையின் போது தான் படித்து முடித்தான். காவல்துறை உணவகத்தில் சாப்பிட்டவன், தன் அப்பாவை அழைத்து பேசினான். அவர் இன்னும் வெற்றிவேலுடன் மருத்தவமனையில் இருப்பதாக சொன்னார்.
திரும்பவும் ஃபைலை எடுத்துப் பார்க்கும் போது, ரவிகுமாரை பற்றி பேச வேண்டாம் என நாதன் அங்கிள் ஓடி வந்து தடுத்தது ஞாபகம் வந்தது. ஒரு வேளை தான் நேற்று பேசியது, அவருக்கு ஹார்ட் அட்டாக் வர காரணமாக இருக்குமோ என்ற குற்றவுணர்வு தோன்றியது. தலைமையகத்திலிருந்து கிளம்பியவன், நேராக மருத்தவமனைக்கு சென்றான்.
அவரை இன்னும் ஐசியுவில் வைத்திருப்பதாக வசந்தன் சொன்னார். ஐசியு வாசலில் நாதன் அங்கிளும், வசந்தனும் மட்டுமே இருப்பதை பார்த்து, "அப்பா, தாத்தாவோட உறவுகாரங்க யாரும் வரலையா?" என கேட்டான்.
வருத்தமாக சிரித்தவர், அவருக்கு யாருமில்லையென சொல்லி தலையசைத்தார்.
"அப்பா, அவர் நமக்கு எந்த வகையில் உறவு, உங்க வழியிலா, அம்மா வழியிலா என கேட்டான்.
"மித்ரன், எனக்கு பசிக்குது, உணவகத்தில் போய் பேசலாம்" என அவனை அழைத்தார் வசந்தன்.
நாதனிடம் சொல்லிவிட்டு பக்கத்திலிருந்த கூட்டமில்லாத உணவகத்தின் மூலையில் சென்றமர்ந்தனர்.
வசந்தன் சாப்பாடு சொல்ல, மித்ரன் தனக்கு காப்பி ஆர்டர் செய்தான்.
வசந்தன் சாப்பிட்டுக் கொண்டே, "நேற்று நீ வெற்றிவேல் ஐயாவை பார்க்க, ராத்திரி வந்ததா நாதன் சொன்னார்" என்றார்.
ஆமென்று தலையசைத்தவன், அவரிடம் ரவிகுமாரை பற்றி எப்படி கேட்பது என யோசித்தான்.
"நாதன் கிட்ட வெற்றிவேல் ஐயா பற்றி கேட்டியாம், என்ன விஷயம்? ஏதாவது புது கேஸா?" என கேட்டார்.
"அப்பா ரவிகுமார் என்று ஒருத்தனை ஸம்யு கேஸில் கைது செயத்தாக சொன்னேனில்லை?" என கேட்டான்.
"ஆமாம். அவன் ஏதாவது சொன்னானா? யார் அவளை கடத்தினாங்க?" என ஆர்வமுடன் கேட்டார்.
"இல்லப்பா. அந்த ரவிகுமாரை வெளியே எடுக்க வெற்றிவேல் தாத்தா பெயில் மூவ் பண்ணியிருக்காரு. அதை பற்றி கேட்க தான், அவர் வீட்டுக்கு நேற்று ராத்திரி அங்கே போனேன்" என்றான்.
"அவனை ஏன் அவர் பெயில் எடுக்கனும்?" என அதிர்ச்சியாக கேட்டார்.
"அந்த பையன் அவரோட அனாதை இல்லத்தில் வளர்ந்தானாம்" என அவன் சொல்லும் போதே வசந்தனின் முகம் மாறி விட்டது.
"அவர்கிட்ட கெஞ்சியும், அவனை பெயிலில் எடுக்க போறதில் உறுதியாக இருந்தார். அவன்கிட்ட ஏதோ கடன்பட்டிருக்கிறதா சொன்னார்" என அவர் முகத்தை கூர்மையாக பார்த்தபடி சொன்னான். வசந்தனின் முகம் வருத்தமாகி சிறுத்து விட்டது.
"அப்பா ரவிகுமார் யாரு? அவனுக்கும் தாத்தாக்கும் என்ன சம்பந்தம்?" என கேட்டான்.
"அதுக்கு முன்னாடி வெற்றிவேல் ஐயாவை பற்றி சொல்றேன். உனக்கு தெரியும், நமக்கு சத்தியமங்கலம் பக்கத்திலிருக்கிற தளவாடி தான் சொந்த ஊர். வெற்றிவேல் ஐயா சத்திலே செல்வாக்கான மனுஷர். அவங்க தாத்தா எல்லாம் முன்னால் ஜமீந்தாராக இருந்தாங்க என்று எங்க தாத்தா சொல்வார். அவருக்கு ஈரோடு ஜில்லாவில் ஏகபட்ட பரம்பரை சொத்து இருந்தது. வெற்றிவேல் ஐயா தான் எங்க ஊரில் முதன் முதலா ரைஸ் மில் கொண்டு வந்தார். காட்டன் மில் கொண்டு வந்தார். அவர் ரொம்ப ராசியான மனுஷன், அவர் எதை தொடங்கினாலும், அது பெரிசாக வளர்ந்திச்சு. சில வருஷத்திற்கு பிறகு அவர் அங்கே ஒரு சர்க்க்ரை ஆலையும் கொண்டு வந்தார். நானும், சசிதரனோட அப்பா முரளிதரனும் அப்ப அவர்கிட்ட தான் வேலை செஞ்சிட்டிருந்தோம். நாங்க இரண்டு பேரும் ரொம்ப படிக்காத்தால் அவர் வீட்டிலேயும், வெளியேயும் இருக்கிற வேலையை செஞ்சிட்டிருந்தோம். அவரோட மனைவி ராஜலக்ஷ்மி, மகாலக்ஷ்மி மாதிரியே இருப்பாங்க" என நிறுத்தினார்.
"அவருக்கு குழந்தைங்க யாருமில்லையா?" என கேட்டான் மிதரன்.
"அவருக்கு ஒரே ஒரு பையன். குமரவேல் என்று பெயர். எங்க வயசு தான் அவருக்கும். அப்பா மாதிரியே பையனும் ரொம்ப சுறுசுறுப்பான புத்திசாலியானவர். பிஸினஸ் பத்தி படிக்கிறதுக்காக அமெரிக்காவில் இருக்கிற ஹாவர்ட் யுனிவர்ஸிட்டிக்கு போனார். கூட படிச்ச பெண்ணை அங்கேயே கல்யாணம் கட்டிக்கிட்டார். வெற்றிவேல் ஐயாவிற்கு ரொம்ப வருத்தம். அந்த பெண் தமிழ் பொண்ணு தான் என்றாலும், அவங்க குடுமபம் இரண்டு தலைமுறையாக அமெரிக்காவிலேயே இருந்தது. தன் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியலைங்கிற ஏக்கத்தில், அதை தீர்க்கிறதுக்காக எனக்கும், முரளிதரனுக்கும் அவர் தான் முன்னாடி இருந்து கல்யாணம் செஞ்சி வைச்சார். நாங்க சொந்தமாக தொழில் தொடங்கிறதுக்கு பணமும் கொடுத்தார்"
"குமரவேல் மட்டும் வருஷத்திற்கு ஒரு தடவை வந்து அப்பா அம்மாவை பார்த்திட்டு போவார். அவரோட மனைவியோ, அவருக்கு பிறந்த பையனோ ஒரு தடவை கூட இங்க வரலை. பேரன் பிறந்தவுடன், இவங்க போய் பார்த்திட்டு வந்தாங்க. அந்த பையனுக்கு அஞ்சு வயசு இருக்கும் போது பன்னாரி அம்மனுக்கு மொட்டை போடனும் என்று ரொம்ப வற்புறுத்தி கூப்பிட்டார்"
அப்பா பேச்சை தட்ட முடியாம குமரவேல், அவரோட குடுமபத்தோடு சத்திக்கு வந்தார். அவரோட மனைவி ராதிகா அப்ப தான் முதன்முறையாக இந்தியாவுக்கு வந்தாங்க. அவங்க அப்படி ஒரு அழகு. நல்முத்து கலரில் இருந்தாங்க. அவங்க கண்ணோட நிறமே நீல கலரில் இருந்தது. ராஜலக்ஷ்மி அம்மா, அவங்க மருமக பாண்ட் சர்ட், போட்டுட்டு, இங்கிலிஷில் பேசும் என்று பயந்தாங்க. ஆனா அவங்க அழகா புடவை கட்டிட்டு, நல்லா தமிழ் பேசினாங்க. எல்லார்கிட்டேயும் ரொம்ப அன்பா பழகினாங்க. வெற்றிவேல் ஐயாவுக்கு அவரோட பேரன் ஊருக்கு வந்ததில் ரொம்ப சந்தோஷம். மொட்டை போட்டு முடிச்சதும், ராதிகாம்மா மைசூர் பேலஸ் பார்க்கனும் என்று சொன்னாங்க.
மைசூருக்குப் போயிட்டு வரும் போது, ஒரு லாரி பின்னாடியிலிருந்து இடிச்சதில் குமரவேலும், ராதிகாம்மாவும் அந்த இடத்திலேயே இறந்துட்டாங்க. தெய்வாதீனமா அவரோட பேரன் மட்டும் பொழைச்சிட்டான். அவங்க காரை ஓட்டிட்டு போன டிரைவர் சண்முகமும் இறந்துட்டார்.
வெற்றிவேல் ஐயா விபத்தைப் பற்றி கேள்விபட்டதும் இடிஞ்சு போயிட்டார். நீத்தார் சடங்குக்கு வந்த ராதிகாவோட அப்பா, அம்மா அவங்க பேரனை திரும்பவும் அமெரிக்கா கூட்டிட்டு போயிட்டாங்க. வெற்றிவேல் ஐயா எவ்வளவோ கெஞ்சியும், அவங்க பேரனை அதற்கு பிறகு இங்கே அனுப்பவே இல்லை. இவர் மட்டும் வருஷத்திற்கு ஒரு தடவை போய் பார்த்திட்டு வருவார்" என முடித்தார்.
"அப்பா, ரவிகுமார் யார்?" என கேட்டான் மிதரன்.
"டிரைவர் சண்முகத்தோட மனைவி விபத்து நடந்த போது மாசமாக இருந்தா. பிரசவத்தில் அவ ஒரு பையனை பெத்திட்டு இறந்துட்டா. அவங்க பையன் தான் ரவிகுமார்" என்றார்.
"தாத்தா, ஏதோ அவனுக்கு கடன்பட்டிருக்கிறதா சொன்னார்?" என கேட்டான்.
"குமரவேல் இறந்ததில், ராஜலக்ஷ்மி அம்மா ரொம்ப உடைஞ்சு போயிட்டாங்க. படுத்த படுக்கையாய் அவங்களும் இரண்டு வருஷத்தில் இறந்துட்டாங்க. வெற்றிவேல் ஐயாவிற்கு அடி மேல அடி. தாங்க முடியாம நொறுங்கிட்டார். அப்ப தான் குமரவேலோட கூட படிச்ச நாதன் ஸார் வந்து எல்லா பொறுப்பையும் ஏத்துக்கிட்டார். அவருக்கு உதவியாக முரளிதரன் எல்லா வேலையும் செஞ்சிட்டிருந்தார். என்னோட பிஸ்னஸ் அப்ப வேகமாக சென்னையில் வளர்ந்ததால் என்னால் அவருக்கு உதவியாக இருக்க முடியலை. சண்முகத்தோட பையனை அவங்க அத்தையும் மாமாவும் தான் வளர்த்தாங்க. வெற்றிவேல் ஐயா கிட்ட மாசாமாசம் பணம் வாங்கிட்டு அவங்க அந்த பையனை ஒழுங்காவே கவனிக்கலை. படிக்கவும் வைக்கலை. அந்த பையனுக்கு பத்து வயசாகும் போது தான் ஐயாவுக்கு விஷயம் தெரிஞ்சி அவனை தன்னோட அனாதை இல்லத்தில் சேர்த்துக்கிட்டார். ஆனா அந்த பையனுக்கு ஒழுங்கா படிப்பு வரலை. எடுபுடி வேலை செஞ்சிக்கிட்டிருந்தான். ஆனால் அவன் இப்படி தப்பான ஆளாயிடுவான் என்று நான் நினைக்கவேயில்லை. ஐயா அவன் அப்படி உருப்படாம போனதிற்கு காரணம், அவர் அவனை முன்னாடியே கவனிக்காம விட்டது தான் என்று நினைக்கிறார்" என்றார்.
"இப்ப ஹாஸ்பிட்டலில் இருக்காரே, அவங்க பேரனுக்கு சொல்லிட்டிங்களா?" என கேட்டான்.
"அஞ்சு வருஷத்திற்கு முன்னாடி அவருக்கு ஃபர்ஸ்ட் அட்டாக் வந்தது. அப்பவே நாதன் அவங்க பேரனை இங்க வர சொன்னார். அதுக்கும் அவனோட அந்த தாத்தா அனுப்பலை. இப்பவும் சொல்லியிருக்கார், வருவானா என்று தெரியலை" என்றார்.
"சரிப்பா. நான் கிளம்பறேன். எதாவது ஹெல்ப் வேண்டுமென்றால் சொல்லுங்க" என கிளம்பினான்.
வண்டியில் வரும் போது, ரவிகுமாரிடம் தாத்தா கடன்பட்டிருப்பதாக சொன்னதிற்கும், வசந்தன் சொன்னதிற்கும் ஏதோ ஒரு இடைவெளி இருப்பதாக தோன்றியது. என்னவென்று தான் சரியாக அவனுக்கு தெரியவில்லை.
அன்று மாலை ரவிகுமாரை பெயிலில் வெளியே வந்து விட்டதாக அகிலன் சொன்னதும் மிதரனுக்கு சொல்ல முடியாத அளவு ஆத்திரம் வந்தது. அதிகார வர்க்கத்தில் நடக்கும் சில விஷயங்களை சகித்துக் கொள்ள வேண்டியிருப்பதை நினைத்து கோபம் வந்தது.
இரவு முழுவதும் வசந்தன், வெற்றிவேலுடன் மருத்துவமனையிலேயே இருந்தார். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு, மிதரனுக்கு வசந்தனிடமிருந்து ஃபோன் வந்தது.
"எங்கே இருக்கே மித்ரன்?" என கேட்டார்.
"இங்க பல்லாவரத்தில் ஒரு கேஸ் விஷயமாக அகிலனோட வந்திருகேன்பா" என்றான்.
"எனக்கு ஒரு உதவு செய்ய முடியுமா?" என கேட்டார்
"சொல்லுங்கப்பா, கண்டிப்பாக செய்யறேன்" என்றார்.
"வெற்றிவேல் ஐயாவோட பேரன் அவரை பார்க்க வர்றானாம். ஃப்ளைட் ஒன்பது மணிக்கு சென்னை வருமாம். நாதன் சாருக்கு ராத்திரியெல்லாம் கண் முழிச்சதில் உடம்புக்கு முடியலை. நீ அவனை கூட்டிட்டு ஹாஸ்பிட்டல் வந்திடறியா? நாதன் ஸார் உனக்கு அந்த பையனோட டீடெயில்ஸ் வாட்ஸாப் பண்ணியிருக்கார்" என்றான்.
அகிலனுடன் ஏர்போட் வந்து, விமான வருகை இடத்திற்கு அருகே ஜீப்பை நிறுத்தினான்.
"அந்த பையனை பார்த்திருக்கியா மித்ரன்?" என கேட்டான் அகிலன்.
"அவங்க தாத்தாவே வருஷத்திற்கு ஒரு தடவை அமெரிக்கா போய் அவனை பார்த்திட்டு வருவாராம். வயசான காலத்தில் பாவம், அவருக்கு யாரும் இல்லை. இந்த நேரத்தில் அவர் கூட இல்லாமல், இந்த பையன் வாழ்க்கையில் என்ன செய்ய போறான்?" என எரிச்சலுடன் சொன்னான்.
"அது அவங்க லைஃப் ஸ்டைல். இங்கேயே நிறைய பேர் அப்படி தான் இருக்காங்க" என சொன்னான் அகிலன்.
"அந்த பையனை பத்தி டீடெயில்ஸ் வந்திடிச்சா?" என கேட்டான்.
"அவனோட பாஸ்போட் ஸ்கேண்ட் காப்பியை நாதன் அனுப்பியிருந்தார். நம்ம விக்னேஷ் தான் இன்னிக்கு பாக்கேஜ் செக்கிங்க் பார்க்கிறான். அவனுக்கு அதை அனுப்பியிருக்கேன். அவன் கூட்டிட்டு வர்றேன் என்று சொன்னான்" என்றான் மித்ரன்.
மிதரனிடமிருந்து ஃபோனை வாங்கி பார்த்தான் அகிலன். அதில் அந்த பையன் கழுத்தை தாண்டி தொங்கிய முடியுடன், காதில் வளையத்துடன், கண்ணாடி அணிந்திருந்தான்.
"மித்ரன், இது ஆறு வருஷத்துக்கு முன்னாடி எடுத்த போட்டோ. பாஸ்போர்ட் இஷ்யு டேட் பாரு. இந்த போட்டோவை வைச்சு எப்படி கண்டு பிடிக்கிறது?" என கேட்டான்.
"இவனை கண்டுபிடிக்கிறது என்ன கஷ்டம், அமெரிக்க ஆக்ஸ்ண்டில் இங்கலீஸ் பேசிட்டு, இரண்டு காதிலேயும் இயர் போன்ஸ் சொருகிட்டு, லூஸா ஒரு டீ ஷர்ட்டை மாட்டிக்கிட்டு, அதை விட லூஸா ஒரு ஷாட்ஸ் போட்டுக்கிட்டு, மூஞ்சியை மறைக்கிற மாதிரி கூலர்ஸ் மாட்டிக்கிட்டு, வாயில் எதையோ மென்னுகிட்டு, கையில் ஒரு வாட்டர் பாட்டில் வைச்சிட்டு, இட்ஸ் ஹாட் என்று விசிறிட்டே எவனாவது லூஸுத்தனமா வருவான். அவனை அப்படியே ஜீப்பில் தூக்கி போட்டுட்டு ஹாஸ்பிட்டலுக்குப் போக வேண்டியது தான்" என வெறுப்பாக சொன்னான்.
மணி பத்தாகியும் அவன் வரவில்லை. விக்னேஷிடம் போன் செயது கேட்ட போது, அது மாதிரி யாரும் வரவில்லை என்றான். பாக்கேஜ் செக்கிங்கில் அவனை மிஸ் செய்திருக்கலாம் என்றான்.
"அந்த லூஸு எங்கே போச்சு என்று தெரியலையே" என சொன்ன மித்ரன், நாதன் அங்கிளுக்கு போன் செயது அவன் அமெரிக்க போன் நம்பரை கேட்டான். அதை அனுப்புவதாக சொன்னவர், அவன் இப்போது தான் தன்னிடம் பேசியதாகவும், அவனுக்கு மித்ரனின் போன் நம்பரை கொடுத்திருப்பதாக சொன்னார்.
"எக்ஸ்கியுஸ் மீ ஜெண்டில்மேன். நீங்க இரண்டு பேரும் ரொம்ப நேரமாக என்னை தான் தேடிட்டிருக்கிங்க என்று நினைக்கிறேன்" என அவர்கள் ஜீப்பின் எதிரே நின்றவன், வெள்ளை சட்டையும், ப்ளு ஜீன்ஸும் அணிந்திருந்தான். அடர்த்தியான கறுத்த முடியை படிய வாரியிருந்தான். டிராலியில் ஒரு டிராவல் பேகும், லாப்டாப் பேகும் இருந்தன.
அவர்கள் இருவரும் ஒருவரை பார்க்க, "மித்ரன் ரைட்? அப்ப நீங்க அகிலன். என்னை கூட்டிட்டு போக வந்திருக்கீங்க. நான் வெற்றிவேல் தாத்தாவோட பேரன் சித்தார்த்" என சொன்னான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro