Sudum Nilavu Sudatha Suriyan - 10
சுடும் நிலவு சுடாத சூரியன் – 10
"வெற்றிவேலா?" என அதிர்ச்சியாக கேட்டான் மித்ரன்.
"ஆமாம். ஈரோடு பக்கம் அவர் பெரிய ஆளாம். மினிஸ்டரும் அவர் ஊர் தான் போலிருக்கு" என்றான் அகிலன்.
"அகில், நான் உங்கிட்ட வந்து நேரில் பேசறேன். அதுக்கு முன்னாடி அவர் பெயர் வெற்றிவேல் தானா என்று கன்ஃப்ர்ம் பண்ணி எனக்கு சொல்லு" என்று செல்லை அணைத்தான்.
வெற்றிவேல் தாத்தாவா? இப்போது தானே வந்து ஸம்யுவை பார்த்து விட்டு, அவனையும், சசியையும் அவளை ஒழுங்காக பார்த்துக் கொள்ள வில்லை என்று திட்டி விட்டு சென்றார்.
ஸம்யுவை தன் வீட்டிற்கு கூட்டி சென்று பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறேன் என்று வேறு சொன்னாரே. மித்ரனுக்கு தலை சுற்றுவது போலிருந்தது.
அவர் பெயரை சொல்லி வேறு யாராவது இதை செய்கிறார்களா என யோசித்தான். அவரிடம் யாராவது உதவி கேட்டிருக்கலாம். அவரும் என்ன கேஸ் என்று தெரியாமல் அமைச்சரிடம் உதவ சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது.
அவரிடம் நேரில் சென்று பேசினால், அவருக்கு உண்மை தெரிந்து பெயில் மூவ் பண்ணுவதை நிறுத்துவார் என்று தோன்றியது. தாத்தாவிற்கு ஸம்யுக்தாவின் மேல் எப்போதும் பிரியமும், பாசமும் அதிகம். கண்டிப்பாக உதவுவார் என்று தோன்றியது.
வெற்றிவேல் தாத்தாவின் வீட்டிற்கு மித்ரன் செல்வது இதுவே முதல் முறை. பெஸன்ட் நகரில் கடற்கரை சாலையில் அமைந்திருந்த மிக பெரிய வீட்டின் வாசலில் தன் வண்டியை நிறுத்தினான்.
வாசலில் நின்றிருந்த செக்யுரிட்டியிடம் தன் கார்ட்டை கொடுத்துக் காத்து நின்றான். கடலில் இருந்த எழுந்த குளிர் காற்று அவனது காக்கி உடுப்பையும் தாண்டி குளிர செய்தது.
சிறிது நேரத்தில், உள்ளேயிருந்து வந்த அவரது உதவியாளார் அவனை அழைத்துச் சென்றார்.
அவர் வீட்டின் ஹாலின் அளவே, தங்கள் மொத்த வீடும் என்று நினைத்துக் கொண்டான். உட்கார்ந்தவுடன் புதையும் குஷன் சோஃபா அவனை உள் வாங்கி கொண்டது. வீட்டில் எல்லாவற்றிலும் செல்வ செழிப்பு தெரிந்தது.
உள்ளேயிருந்து வந்த தாத்தா, "மித்ரன் வா, வா.. இன்னிக்கு தான் உனக்கு தாத்தா வீட்டிற்கு வர நேரம் கிடைச்சிருக்கு" என வரவேற்றவர், அவனை அமர செய்கை செய்தார்.
"என்ன சாப்பிடறே?" என பாசத்துடன் கேட்டவரிடம், "இப்ப தான் வர்ற வழியில் சாப்பிட்டு வந்தேன்" என்றான்.
"தாத்தா வீட்டிற்கு வரும் போது சாப்பிட்டு வரலாமா?" என உரிமையுடன் கேட்டவர், "முதல் தடவை வந்திருக்கே, பாலாவது சாப்பிடு" என்றவரிடம் மறுக்க முடியாமல் தலையசைத்தான்.
அவர் அருகே நின்றிருந்த உதவியாளர் தலையசைத்து விட்டு உள்ளே சென்றார்.
"என்ன திடீரென்று தாத்தாவை பார்க்க வந்திருக்கே, அதுவும் இந்த நேரத்தில்?" என அவரே கேட்டார்.
எப்படி விஷயத்தை தொடங்குவது என நினைத்தவனிடம் அவரே கேட்கவும், "தாத்தா, எனக்கு உங்ககிட்ட ஒரு உதவி வேணும்" என சொல்லும் போதே அவன் செல்ஃபோன் அடித்தது.
"ஹலோ" என்றான்.
"மித்ரன், கன்ஃப்ர்ம் பண்ணிட்டேன். அவர் பெயர் வெற்றிவேல் தான். அவர் வீடு சென்னையில் பெஸண்ட் நகரில் இருக்காம். நான் உனக்கு அவரோட அட்ரஸை டெக்ஸ்ட் பண்ணியிருக்கேன்" என்றான் அகிலன்.
"தாங்கஸ். நான் பார்க்கிறேன்" என செல்லை அணைத்தான்.
அகிலன் அனுப்பிய குறுஞ்செய்தி தாத்தா வீட்டின் முகவரியாகவே இருந்தது.
"என்னப்பா, என்ன உதவி வேணும்?" என கேட்டார்.
அவரை பார்த்து சங்கடத்துடன் புன்னகைத்தவன், "தாத்தா.." என எப்படி தொடங்குவது என்று தெரியாமல் அவரை பார்த்தான்.
"நீ இங்க போலீஸ்காரனா வந்திருக்கியா? என் பேரனா வந்திருக்கியா?" என கூர்மையாக அவனை பார்த்துக் கேட்டார்.
"ஐயோ தாத்தா. நான் என்னிக்கும் உங்க பேரன் தான்" என அவசரமாக மறுத்தான்.
"அப்பறம் பேரனுக்கு தாத்தா கிட்ட என்ன தயக்கம்? உரிமையா எதை வேண்டுமானாலும் கேளூ" என சிரித்தார்.
தொண்டையை சரி செய்தவன், "தாத்தா, ஸம்யுவை கடத்தினது உங்களுக்கு தெரியும். அவளை அடைச்சி வைச்சிருந்த வீட்டில் பார்த்த பையனை ஸம்யு அடையாளம் சொன்னாள். அதை வைச்சு நாங்க ரவிகுமார் என்ற பையனை கைது பண்ணினோம். நீங்க அவனை பெயிலில் எடுக்க போகிறதா எனக்கு இப்ப தகவல் வந்தது. எங்களுக்கு இப்ப இருக்கிற ஒரே நம்பிக்கை அந்த பையன் தான். அவன் வெளியே வந்திட்டா, எங்களுக்கு குற்றவாளியை கண்டு பிடிக்கிறது ரொம்ப கஷ்டமாயிடும்" என நிறுத்தினான்.
தாத்தா அவன் சொல்வதை எந்த உணர்வு மாற்றமுமின்றி கூர்மையான பார்வையுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
"அப்ப ரவி குற்றவாளி இல்லையா?" என அமர்த்தலான குரலில் கேட்டார்.
"இல்லை தாத்தா. இந்த கடத்தலை பக்காவா பிளான் பண்ணி, அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செஞ்சிருக்காங்க. அதனால் தான் எங்களால் ஸம்யுவை கண்டுபிடிக்க முடியலை. ரவி அந்த கூட்டத்தில் ஒரு எடுபிடி ஆளாக கூட இருந்திருக்கலாம். ஆனால் அவனை வைச்சு தான், அந்த கூட்டத்தை பிடிக்கனும்" என்றான்.
உதவியாளார் பாலை எடுத்துக் கொண்டு வர, மித்ரன் கையில் வாங்கி மேஜையில் வைத்தான்.
"பால் சாப்பிடு மித்ரன்" என்றவர் தன் உதவியாளரை பார்க்க அவர் உள்ளே சென்றார்.
"ஆர்கானிக் பால்" என சன்னமாக சிரித்தவர், "சென்னையில் இருக்கிற மொத்த மாட்டையும், கொசு வருது, வியாதி வருது என்று ஒழிச்சி கட்டிட்டு, பாக்கெட் பால் தான் நல்லது என்று சொன்னாங்க. கலப்படம் இல்லாத பால் என்று சொன்னாங்க. இப்ப திரும்பவும் ஆர்கானிக் பால் என்று மார்க்கெட்டிங் பண்ணறாங்க. அப்ப பாக்கெட்டில் வருவது இன் ஆர்கானிக் பால். இன் ஆர்கானிக் என்றால் கார்பனும், சயனைடும் இல்லையா? அது இரண்டும் விஷம் தானே?" என கேட்டார்.
பாலை குடித்து முடித்தவன், "அப்படி சொல்ல முடியாது தாத்தா. பாலை பதப்படுத்த தேவையான அளவு அதை உபயோக படுத்தறாங்க. சில நேரத்தில் விஷத்தையும் மருந்தா உபயோகபடுத்தறோம் இல்லையா?" என்றான்.
"மருந்து என்றால் சரிப்பா. இப்ப உணவில் தானே விஷத்தைக் கலக்கறாங்க. முன்னாடி பால்காரனாவது தண்ணியை தான் கலந்தான். இவனுங்க விஷத்தை இல்லை கலக்கிறானுங்க" என்றார்.
அவர் சாமர்த்தியமாக விஷயத்தை திசை திருப்புவதை உணர்ந்தவன், "தாத்தா, ஸம்யுவிறகாக நீங்க இந்த உதவியை செய்யனும்" என்றான்.
"நீ இன்னும் என்ன உதவி வேண்டும் என்றே சொல்லலையேப்பா?" என சிரித்தப்படி சொன்னார்.
வேண்டுமென்றே தவிர்க்கிறார் என்று உணர்ந்தவன், "நீங்க ரவிகுமாரை பெயிலில் எடுக்க போறதா கேள்விபட்டேன்" என சொல்லி விட்டு அவர் முகத்தை பார்த்தான்.
எந்த உணர்வுமின்றி அவன் சொல்வதை கேட்டு கொண்டிருந்தார்.
"நீங்க ரவிகுமாரை பெயிலில் எடுக்க வேண்டாம். ஒரு வாரம் எனக்கு டைம் கொடுங்க. அதுக்குள்ளே நாங்க அந்த கூட்டத்தை பற்றி அவன் கிட்டேயிருந்து விஷயத்தை வாங்கிடறோம்" என்றான்.
அவர் பதில் பேசாமல் இருக்க, மித்ரனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கடைசி அஸ்திரத்தை கையில் எடுக்க வேண்டியது தான் என நினைத்தான்.
"ப்ளீஸ். ஸம்யுவிற்காக இதை நீங்க செய்யனும் தாத்தா" என வருத்தமுடன் சொன்னான்.
அவர் எதுவும் சொல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.
"ஸம்யுவை விட அந்த பொறுக்கி பையன் உங்களுக்கு முக்கியமா தாத்தா?" என கோபமாக கேட்டான்.
அவர் கண்களில் ஆழ்ந்த வலி மின்னி மறைய, மித்ரனுக்கு சரியான இடத்தில் அவன் விட்ட அஸ்திரம் அடித்து விட்டது தெரிந்தது. அதற்குள் உள்ளேயிருந்து வேகமாக வந்த அவரது உதவியாளர், அவனை பேசாமல் இருக்கும்படி செய்கை செயதார். தாத்தா திரும்பி அவரை முறைத்துப் பார்க்க, அவர் அமைதியாக சுவரில் சாய்ந்து நின்றார்.
"எனக்கு தெரியும் தாத்தா. உங்களுக்கு அந்த பையன் என்ன கேஸிற்காக கைதாகியிருக்கான் என தெரிஞ்சிருக்காது. அதனால் நீங்க அவனை பெயிலில் எடுக்க சொல்லியிருப்பீங்க. இப்ப தெரிஞ்சதால பெயில் எடுக்கிறதை நிறுத்தடுவீங்க இல்லையா?" என இன்னொரு முறை அஸ்திரத்தை அதே இடத்தில் அடித்தான்.
"ரவிகுமார் நான் நடத்தற அனாதை இல்லத்தில் வளர்ந்த பையன். அவன் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கிருக்குப்பா" என வருத்தமாக சொன்னார்.
அவனுக்கு இந்த தகவல் புதியதாக இருந்தது. ரவி அனாதை இல்லத்தில் வளர்ந்த பையன் என்று விசாரணையில் தெரிந்தது. ஆனால் அது தாத்தாவின் அனாதை இல்லம் என்பதை கவனிக்காதது தெரிந்தது.
"பதினெட்டு வயசு வரைக்கும் தானே அவன் அங்கே இருந்தான். இப்ப அவன் உங்க பொறுப்பில் இல்லையே?" என கேட்டான்.
"இப்ப அவன் இல்லத்தில் இல்லாம இருக்கலாம். ஆனால் அவனை பத்திரமாக பார்த்துக்க வேண்டிய கடமை எனக்கு இருக்குப்பா" என சொன்னவரின் குரல் கரகரத்தது.
"தாத்தா, அது உங்க பெரிய மனுஷத்தனம். நான் அவனை ஜெயிலிலேயே வைச்சிருக்கேன் என்று சொல்லலையே. ஒரு வாரத்தில் விட்டுடறேன்" என்றான்.
அவர் மெளனத்தை தொடர, "ப்ளீஸ் தாத்தா. சம்யு மேல நீங்க வைச்சிருக்கிற பாசத்துகாக எனக்கு நீங்க இந்த உதவியை செய்யனும்" என கெஞ்சும் குரலில் கேட்டான்.
"சம்யு மேல நான் வைச்சிருக்கிறது பாசம் தான். ஆனால் ரவி மேல நான் வைச்சிருக்கிறது.. அதை கடமை என்று கூட சொல்ல முடியாதுப்பா. நான் ரவிகிட்ட பட்டிருக்கிறது கடன்பா. நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் அந்த கடன் தீராது" என சொன்னவரின் கண்களில் நீர் நிறைந்தது.
"மித்ரன், மன்னிச்சிக்கப்பா. நீ முதன்முதலில் வீடு தேடி வந்தும் என்னால் உனக்கு உதவ முடியலை" என எழுந்து நின்றவர், உள்ளே செல்ல திரும்பினார்.
"ரவி யார் தாத்தா?" என அவன் அடக்க முடியாமல் கேட்டான்.
அவர் எதுவும் சொல்லாமல், அவர் உதவியாளரை பார்த்து விட்டு தளர்ந்த நடையுடன் உள்ளே சென்றார்.
அவர் உள்ளே சென்றவுடன், அருகே வந்த உதவியாளர் வருத்தமாக அவனை பார்த்துப் புன்னகைத்தார்.
சோஃபாவிலிருந்து எழுந்தவன், இனி என்ன செய்வது என்ற யோசனையுடன் படிகளில் இறங்கி வாசல் கேட்டை அடைந்தான்.
அவனுடன் மெளனமாக வந்த உதவியாளரிடம், "நாதன் அங்கிள். யார் இந்த ரவிகுமார். அவனுக்காக தாத்தா ஏன் இத்தனை வருத்தபடறார்?" என யோசனையுடன் கேட்டான்.
வருத்தமாக அவனை பார்த்து சிரித்தவர், "இப்ப ராத்திரியாயிடிச்சு. நான் அவருக்கு தூங்கறத்துக்கு மருந்து கொடுக்கனும். நான் ஃப்ரியாக இருக்கும் போது, உனக்கு கால் பண்ணறேன். அப்ப உனக்கு எல்லாத்தையும் சொல்றேன்" என்றார்.
சரி என தலையசைத்து விட்டு கேட்டை திறந்தவனிடம், "மித்ரன், அதை நான் சொல்றதை விட வேற ஒருத்தர் சொன்னா தான் சரியாக இருக்கும்" என்றார்.
"யார் அங்கிள்" என ஆர்வமுடன் கேட்டவனிடம், வருத்தமாக சிரித்தபடி, "வசந்தன், உங்க அப்பா" என்றார்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro