Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Marukkathe Nee Marakkathe Nee - 19

மறக்காதே நீ மறுக்காதே நீ - 19
பதிமூன்றாம் நாள்...

காலை எட்டு மணி..

'குட்மார்னிங் மிஸ் சம்யுக்தா வசந்தன், ஜஸ்ட் எட்டு நாட்கள்'

காலையில் ஏழு மணிக்கு அவனது மெசெஜை பார்த்தவுடன் மனதில் சொல்ல தெரியாத உணர்வு தொடங்கி விட்டது. என்ன உணர்வு என்று ஆழ்ந்து கவனித்தும் புரியவில்லை.

அலுவலகத்திற்கு கிளம்பும் போது என்ன உடை உடுப்புது என்று தெரியவில்லை. அமிதாவின் கடையில் சித்தார்த் அவளுக்குப் புடவை தான் நன்றாக இருக்கும் என்று சொன்னது நினைவில் வந்து போனது. ஆலிவ் கீரின் சில்க் காட்டன் புடவையை எடுத்தவள், அவனுக்குப் பிடிக்கும் என்பதற்காக இதை கட்ட வேண்டுமா என யோசித்து அதை கீழே போட்டாள். பிரவுன் நிற ஸல்வாரை எடுத்தவள், அவன் டார்க் கலர்ஸ் தான் அவளுக்கு நல்லாயிருக்கும் என்று சொன்னது காதில் ஒலிக்க அதையும் கீழே போட்டாள்.

இருப்பதிலே பழைய காட்டன் ஸல்வாரை எடுத்தவள், இதை அணிந்து கொண்டால் அவன் சொன்னதை வேண்டுமென்றே மறுக்கிறேன் என்று அவனுக்கு தோன்றட்டும் என நினைத்தாள். இன்னொரு மனது அதுவும் அவன் சொல்வதற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக மறை முகமாக தோன்றும் என அவளை இடித்தது.

"சம்யு, அம்மா டிபன் சாப்பிட கூப்பிடறாங்க. இல்லனா டிஃபன் ஆறிடும் என்று சொல்ல சொன்னாங்க" என கதவை திறந்து கொண்டு வந்த மயூரி தரையில் கிடந்த துணிகளை குழப்பத்துடன் பார்த்தாள்.

"சம்யு, இன்னிக்கு ஆபிஸ் போகலையா?" என கேட்டாள்.

"ஏன் அண்ணி?" என வார்ட்ரோபில் இருந்து தலையை நீட்டினாள் சம்யுக்தா.

"வார்ட்ரோபில் இருக்கிற எல்லா டிரஸ்ஸையும் கீழே போட்டிருக்கியே. லீவ் போலிருக்கு, அதான ரூமை கிளீன் செய்யறே என்று நினைச்சேன்" என சொன்னாள்.

அப்போது தான் வார்ட்ரோபில் இருந்த துணிகளில் பாதிக்கு மேல் கீழே கிடப்பது தெரிந்தது.

"ஐயோ" என தலையில் அடித்துக் கொண்டவள், "இல்லை அண்ணி, இன்னிக்கு என்ன டிரஸ் போட்டுக்கிறதுனு தெரியலை" என்றாள்.

"ஏன் இன்னிக்கு என்ன ஸ்பெஷல்? ஏதாவது பார்ட்டிக்குப் போறியா?" என யோசனையுடன் கேட்டாள்.

"இல்லை" என வார்த்தையால் சொன்னவள் ஆமென்று என்று தலையசைத்தாள்.

"இதை எப்படி எடுத்துக்கிறது?" என புரியாமல் கேட்டாள் மயூரி.

"எனக்கே தெரியலை அண்ணி" என சொன்னவளை தலை முதல் கால் வரை பார்த்தவள், "சம்யு, ஆர் யூ ஒகே? உடம்பு ஏதாவது சரியாயில்லையா?' என கவலையுடன் கேட்டாள்.

தலையை பிடித்துக் கொண்டு அப்படியே படுக்கையில் அமர்ந்தவள், "அண்ணி, எனக்கு ஒரு டிரஸ் செலக்ட் செஞ்சி கொடுங்களேன், பிளீஸ்" என கெஞ்சும் குரலில் சொன்னாள்.

"சம்யு, இதை போட்டுக்கோ, உனக்கு நல்லாயிருக்கும்" என நீட்டிய டிரஸ்ஸை கையில் வாங்கி கொண்டாள்.

அடர்ந்த நீலத்தில் வெள்ளை பூக்கள் போட்ட ஃபுல் லெந்த் பாந்தினி ஸக்ர்ட்டும், வெள்ளை நிறத்தில் டாப்ஸும், மல்ட்டி கலர் துப்பட்டாவும், அணிந்து வந்தவளைப் பார்த்ததும், "வாவ் சம்யு, உனக்கு இந்த டிரஸ் சூப்பராயிருக்கு. இப்போ என் அண்ணன் மட்டும் உன்னை பார்த்தா, ஃப்ளாட் தான் போ" என சிரித்தபடி சொன்னாள்.

"ஐயோ, அண்ணி" என சிணுங்கியப்படி திரும்பவும் சென்று படுக்கையில் அமர்ந்தவளை, "கிளம்பு சம்யு, அப்பறம் இன்னிக்கு உனக்கு ஆறி போன டிஃபன் தான்" என வலுகட்டாயமாக அழைத்து சென்றாள் மயூரி.

அலுவலகத்தில் வந்து வேலை செய்ய தொடங்கிய பிறகும், படபடப்பாகவே இருந்தது. அவளது கட்டுரையை சரிபார்த்த எடிட்டர், "சம்யுக்தா, ஏதாவது பிராப்ளமா? டென்ஷனா இருக்கீங்க" என கேட்டார். ஒன்றுமில்லை என்று தலையசைத்து மறுத்தாலும், நேரம் செல்ல செல்ல அந்த உணர்வு அதிகரித்துக் கொண்டே வந்தது.

ஒரு விதத்தில் பார்த்தால் பரபரப்பாக இருந்தது, பயமாக இருந்தது, சங்கடமாக இருந்தது, குறுகுறுப்பாக இருந்தது, ஏதோ நடக்க இருப்பதை போல எதிர்பார்ப்பாக இருந்தது. ஒரு இடத்தில் உட்கார முடியாமல், வேலை செய்ய முடியாமல் அலுவலகத்தை சுற்றி சுற்றி வந்தாள்.

ஐந்து மணிக்கு அவனுக்கு போன் செய்து, இன்று வர முடியாது என்று சொல்ல போனை எடுத்தாள்.

"சம்யு, என்ன செய்யறே?' என கோபமாக கேட்டாள் யுக்தா.

"இன்னிக்கு டின்னருக்கு வரலைனு சொல்ல போறேன்" என அமர்த்தலாக சொன்னாள் சம்யு.

"அவன் அழகில், ஆளுமையிலே மயங்கிடுவோம்னு பயப்படுறியா? இல்லை அவன் பேசியே உன்னை கவிழ்த்து விடுவான் என்று பயப்படுறியா?" என கேட்டாள் யுக்தா.

"பயமா? எனக்கா? எத்தனை பெரிய தாதா, ரெளடியெல்லாம் பார்த்திருக்கேன், இவனுக்கா பயப்படுவேன்?' என்றாள் சம்யு.

"இது அந்த மாதிரி பயம் இல்லை. அவனை பார்த்து உன்னையே மறந்துடுவோம்னு பயம்" என்றாள் யுக்தா.

"நான் அவனை பார்க்க போறது அவங்கூட டின்னர் சாப்பிட இல்லை, சசிகிட்டே அவன் என்ன பேசினான் என்று தெரிஞ்சுக்க தான். அவன் என்னை கடத்தினதை இன்னும் மறக்கலை. ரிவெஞ்ச் எடுக்காம விட மாட்டேன்" என சொன்னாள் சம்யு.

"ஆமாம். கண்டிப்பா அதை நீ செஞ்சு தான் தீரணும். ஆயுள் முழுக்க அவனை படுத்தி எடுக்கலாம். டெய்லி டார்ச்சர் செய்யலாம். ஸ்வீட் ரிவெஞ்ச்" என சொல்லும் போதே, முறைத்த சம்யுவை பார்த்து ஒடி போய் ஒளிந்து கொண்டாள் யுக்தா.

ஆறு மணிக்கு போன் அடிக்க, தயங்கியப்படி எடுத்தவள் அதில் ஒளிர்ந்த மித்ரனின் நம்பரை பார்த்து சற்றே நிம்மதியானாள்.

"சம்யு, கிளம்பிட்டியா?' என கேட்டான்.

"இன்னிக்கு வேலையிருக்கு அண்ணா. லேட்டாகும். அம்மா கிட்ட காலையிலே சொல்லிட்டேன்" என மெதுவே சொன்னாள்.

"இப்போ தான் அம்மாவும் மயூரியும் ஷாப்பிங்கிற்கு காரை எடுத்துட்டுப் போனாங்க. நீ ஆட்டோ பிடிச்சு வந்துடறியா, இல்லை நான் வரட்டுமா?' என அக்கறையுடன் கேட்டான்.

"இல்லை அண்ணா, நான் வந்துடறேன்" என சொல்லி விட்டு போனை வைத்து விட்டாள்.

மாலை ஆறு மணிக்கு ஆபிஸ் வாசலில் வந்து நின்ற போது, வாசலில் காருடன் சித்தார்த் நின்றிருந்தான்.

வெள்ளை டீ ஷர்ட்டும், ப்ளு ஜீன்ஸ் அணிந்திருந்தவன், அவளைப் பார்த்து, "ஹாய் யுக்தா" என்றபடி அருகே வந்தான்.

அவனை பார்த்து வலிந்து புன்னகைத்தவள், "ஹலோ" என்றாள்.

"வாவ், இரண்டு பேரும் அதே கலர் காம்பினேஷனில் டிரஸ் போட்டிருக்கோம். நாம இரண்டு பேரும் சின்க், எப்படி சொல்றது ஒரே அலைவரிசையில் இருக்கோம், கரெக்ட்டா?' என கேட்டான்.

"அலைவரிசை இல்லை, அதுக்குப் பேர் ஒத்திசைவு" என அவனை திருத்தியவளை பார்த்து, "தாங்க்ஸ், நீ இப்படி டெய்லி ஒரு கஷ்டமான தமிழ் வார்த்தை சொல்லி கொடு. நான் கத்துக்கிறேன்" என சொன்னான்.

"அதுக்கு வேற..." என வேகமாக சொல்ல வந்தவள், அவன் அதற்கு என்ன பதில் சொல்வான் என்று தெரிந்ததால் பாதியிலேயே நிறுத்தனாள்.

என்னவென்று புருவம் தூக்கி பார்த்தவனை, ஒன்றுமில்லை என தலையசைத்து மறுத்தாள்.

அவன் காரின் முன் கதவை அவளுக்காக திறக்க, எதுவும் சொல்லாமல் அமர்ந்து கொண்டாள்.

அவன் ஹோட்டலுக்கு செல்லும் வரையில் எதையும் பேசாமல் மெளனமாகவே வர, சம்யுக்தாவிற்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. சசியுடன் என்ன பேசினான் என்று கேட்கலாமா என்று நினைத்தவள், சாப்பிடும் போது கேட்கலாம் என்று விட்டு விட்டாள். கார் ஸ்டிரீயோவில் மெல்லியதாக ஒலித்த சிதார் இசை இனிமையாக இருவரையும் சூழ்ந்து கொண்டது.

ஹோட்டலின் மாடியிலிருந்த ரூப் டாப் கார்டனிலிருந்து சென்னை ஒளி மிக்க விளக்குகளுடன் காட்சி தந்தது. வரவேற்பில் நின்றிருந்த கருப்பு உடையணிந்த பெண்மணி அவர்களை அறையின் ஒரத்தில் இருந்த டேபிளின் பல வித நிற செண்டட் கேண்டில்கள், டேபிளின் நடுவே வெவ்வேறு உயரங்களில் பொருத்தியிருந்தனர். கண்ணாடி அறை முழுவதும் கண்களை உறுத்தாத மஞ்சள் ஒளி பரவியிருந்தது.

அவளை அமர சொல்லி விட்டு வெளியே சென்ற சித்தார்த், வரும் போது கையில் பிங்க் நிற பூங்கொத்துடன் வந்து அவளிடம் அதை நீட்டினான்.

அவள் என்ன செய்வதென்று யோசிக்கும் போது, அவன் ஆழ்ந்த குரலில், "யுக்தா.." என்றழைத்தான். சித்தார்த்தை நிமிர்ந்து பார்த்தவள், அவனது நீல நிற கண்களில் விழுந்து, அதன் ஆழத்தில் மூழ்கி கரைந்து போனாள். இடம், பொருள் என்று எந்த பரிமாணமும் இல்லாத உலகில், முடிவிலாத காலத்தில் அவர்கள் இருவரும் மட்டுமே என்றும் இருந்ததாக உணர்ந்தாள். அவளது இதயம், தொலைந்து போன தனது இன்னொரு பகுதி அவனிடம் இருப்பதை கண்டு அதனுடன் ஒடி போய் சேர்ந்து கொண்டது. இதயத்திலிருந்து எழுந்த இனிமையான உணர்வு, உடலெங்கும் பரவியது.

"ஹனி.." என அவனது மென்மையான அழைப்பில், அப்போது தான் அவன் இன்னும் பூங்கொத்தை நீட்டியப்படி நின்/றிருப்பதை உணர்ந்தாள். சிரிக்கும் விழிகளுடன், அவளது இதழ்கள் புன்னகையில் விரிய அவனிடமிருந்து பூங்கொத்தை வாங்கியவள், அனிச்சையாக "தாங்கஸ்" என மென்மையாக சொன்னாள்.

"யூ ஆர் வெல்கம்" என சொன்னபடி அமர்ந்தவன், "தாங்க்ஸ், கடைசி நேரத்தில் நீ வராம பேக் அடிச்சிருவேனு நினைச்சேன்" என தலையை பின்னால் தள்ளியபடி சொன்னான்.

ஒரு நொடி அவனது செய்கையில் தன்னை தொலைத்தவள், "ஏன் அப்படி நினைச்சிங்க?" என மெதுவாக கேட்டாள்.

"ஜஸ்ட் லைக் தட் அப்படி தோணிச்சு" என தோள்களைக் குலுக்கியபடி சொன்னான்.

"நேத்து டின்னர் போலாமா என்று நீ கேட்டவுடன், எனக்கு அப்படியே ஒரு மாதிரி ஆயிடிச்சு" என ஆர்வத்துடன் சொன்னான்.

"ஷாக்காயிடிச்சா?" என முணுமுணுப்பாய் கேட்டவளிடம் தலையசைத்து மறுத்துவன், "இட் வாஸ் எ பிளஸண்ட் சர்ப்ரைஸ். நானே உன்னை டின்னருக்குக் கூப்பிடலாம்னு நினைச்சேன். கூப்பிட்டா வருவியா மாட்டியா என்று சந்தேகமா இருந்தது" என சிரித்தபடி சொன்னான்.

தன்னையறியாமல் புன்னகைத்தவளை பார்த்தபடி இருந்தவன், "யுக்தா, எனக்கு இது ஒரு பியூட்டிஃபுல் டீரிம் மாதிரி இருக்கு. கண்ணை முழிச்சு எழுந்து கனவு கலைஞ்சிடுமோ என்று பயமா இருக்கு" என உடைந்த குரலில் அவன் சொன்ன போது, அவர்கள் இருவரையும் கண்ணுக்குத் தெரியாத மெல்லிய நூல் ஒன்றாக கட்ட தொடங்கியிருப்பதை உணர்ந்தாள்.

"என் வாழ்நாள் முழுக்க உன்னை இப்படியே பார்த்துக்கிட்டிருக்க சொன்னா, அப்படியே பார்த்துட்டே இருப்பேன். சாப்பாடு, தண்ணி எதுவும் வேணாம்" என சாய்ந்து அமர்ந்தபடி மென்மையாக சொன்னான்.

"யுவர் ஆர்டர் ஸார்" என அவர்களருகே வந்து நின்றாள் உணவக பெண்மணி. சித்தார்த் அந்த பெண்மணியிடம் மெனுவை பார்த்து தனக்கு தேவையான உணவை சிரித்தபடி சொல்ல, அவளும் ஏதோ சிரித்தபடி பதில் சொன்னாள்.

சம்யுக்தாவிற்கு எதற்கென்று தெரியாமல் சுள்ளென்று அந்த பெண்மணியின் மேல் கோபம் வந்தது. சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு, தனக்கு தேவையானதை சொன்னவள், அவள் அந்த டேபிளை விட்டு போகும் வரை முறைத்துக் கொண்டேயிருந்தாள்.

அவளது முகம் மாறியதை உணர்ந்தவன், "என்னாச்சு?' என கேட்டான். ஒன்றுமில்லை என தலையசைத்து மறுத்தாள்.

"யுக்தா, யுவர் ஃபேஸ் இஸ் எக்ஸ்பிரஸிவ்" என்று சொன்னான். "உன்னை முதலில் பார்க்கும் போதே, என்னை விழ வைச்சுது உன்னோட இந்த கண்கள் தான்" என சொன்னான்.

"என்னை எப்போ முதலில் பார்த்தீங்க?" என கேட்டவளின் கண்கள், கூர்மையான அவனது பார்வையை பார்க்க முடியாமல் தாழ்ந்து கொண்டன.

"புடவை கடையில் தான் பார்த்தேன். வசந்தன் தன் ஃபாமிலியோட அந்த கடைக்கு வந்திருக்கார் என்று நியூஸ் கிடைச்சுது. மூணாவது மாடிக்கு வந்த போது, ஒரு பொண்ணு, ரெட் ரோஸ் கலர் பட்டுப்புடவை கட்டி தன்னை கண்ணாடியில் பார்த்துட்டிருந்தா. அவளைப் பார்த்தவுடன் ஒரு நிமிஷம் எனக்கு உலகமே நின்னுடிச்சு. இத்தனை நாளா என மனசில் தனியா இருக்கோம் என்கிற ஏக்கம் அவளை பார்த்தவுடன் போயிடிச்சு. அவளுக்கு அந்த புடவை அழகா இருக்கிறதா, சேல்ஸ்கேர்ள் சொன்னவுடன் அவ போட்டிருந்த ஜிமிக்கி அழகா சிணுங்க, கண்கள் வெட்கத்தில் கீழே போக, அவளோட சிவப்பு நிற இதழ்கள் அழகா சிரிச்சுது. என் இதயம் ஒரு நொடி அப்படியே நின்னிடிச்சு. அவளைப் பார்த்துட்டு அப்படியே என்னை மறந்து நின்னிட்டிருந்தேன். இப்பவும் அப்படி தான் இருக்கு. அவளையே வாழ்நாள் முழுசும் பார்த்துட்டிருக்கனும் என்று தோணுது. எனக்கு அதுக்கு அனுமதி இருக்கானு தெரியலை" என கண்கள் மின்ன சொன்னபடி அவளைப் பார்த்தான்.

அவனது கூர்மையான பார்வையை தாங்க முடியாமல், தாழ்ந்த அவளது விழிகள், லேசாக சிவந்த கன்னங்கள், மெல்ல துடித்த அவளது இதழ்கள். வேகமாக துடித்த இதயம், என தன்னிலை இழக்க தொடங்கியிருந்த சம்யுக்தாவை, "ஹாய் சம்யு.. ஹலோ சித்தார்த்" என்ற சசிதரனின் குரல் கலைத்தது.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro