Marukkathe Nee Marakkathe Nee - 16
மறக்காதே நீ மறுக்காதே நீ - 16
பத்தாம் நாள்...
காலை ஆறு மணி..
காலையில் செல்போனில் அலாரம் அடித்தும், எழுந்திருக்க மனமின்றி தலையணையை அணைத்தபடி படுத்திருந்தாள் சம்யுக்தா.
"சித்தார்த்" என தன்னையறியாமல் சொன்ன யுக்தாவை, "இப்போ என்ன சொன்னே?" என சம்யுவின் கோபமான குரல் மிரட்டியது.
"சித்..தா..ர்த்" என தயங்கியப்படி சொன்ன யுக்தாவை, "இப்போ காலையிலே உனக்கு எதுக்கு அவன் ஞாபகம்?" என எரிச்சலாக கேட்டாள் சம்யு.
"வந்து.." என மென்று முழுங்கியவள், "நேற்று முழுசும் அவனை பார்க்கலை, அதான்.." என பயந்தபடி சொன்னாள் யுக்தா.
"அதனால் என்ன? நேற்று ஒருத்தரை பார்க்கலைனா காலையிலே அவங்க ஞாபகம் தான் வருமா? ஸ்மிருதியை கூட தான் நேத்து பார்க்கலை, அவ ஞாபகம் ஏன் வரலை?' என அழுத்தம் திருத்தமாக கேட்டாள் சம்யு.
என்ன பதில் சொல்வது என தெரியாமல் விழித்த யுக்தாவிடம், "அவன் உனக்கு யார்? ஃபிரண்டா? ரிலேட்டிவா? ஆபிஸ் கொலிக்கா? இல்லை தெரிஞ்சவனா? இது எதுவுமே இல்லை தானே? அப்பறம் எதுக்கு அவனை நினைச்சே?" என கடுப்புடன் கேட்டாள் சம்யு
யுக்தா பதில் சொல்லாமல் மெளனமாக தலையணையை அழுந்த பிடித்தபடி படுத்திருந்தாள்.
"அவன் யாருனு நான் சொல்லட்டுமா? உன் கல்யாணத்தை நிறுத்தினவன். உன்னை கடத்திட்டு போய் அடைச்சி வைச்சவன்" என சத்தமாக இறைந்தாள்.
"இன்னும் எத்தனை நாள் அதையே சொல்லிட்டிருக்க போறே?" என முணுமுணுப்பாக சொன்னாள் யுக்தா.
"எத்தனை வருஷமானாலும் அது தானே உண்மை? உண்மையை தான் சொல்ல முடியும்" என அழுத்தமாக சொன்னாள் சம்யு.
"அது தான் அப்பவே அவன் மன்னிப்பு கேட்டானே?" என மெதுவான குரலில் கேட்டாள் யுக்தா.
"அவன் ஒரே ஒரு தடவை தானே ஸாரி சொன்னான்" என நக்கலாக கேட்டாள் சம்யு.
"ஒரு தடவை கேட்டாலும் அவன் அதை ரொம்ப ஃபீல் பண்ணி கேட்டான். அவன் ஏற்கனவே இருபது வருஷம் அவங்கப்பா அம்மா இல்லாம கஷ்டப்பட்டிருக்கான்" என தயங்கியப்படி சொன்னாள் யுக்தா.
"என்ன உளறிட்டிருக்கே? பாதி குற்றவாளிங்களுக்கு இதே மாதிரி அப்பாவோ, அம்மாவோ இல்லாம தான் இருப்பாங்க. அதனால அவங்களை மன்னிச்சு விட முடியுமா?" என சம்யு சலிப்புடன் கேட்டாள்.
"எனக்கு மத்தவங்களை பத்தி தெரியாது. ஆனா, அவன் அவங்கம்மாவை அதிகமா மிஸ் பண்றான். நேத்துக் கூட அவங்கம்மாவை நினைச்சு கண்ணில் நீரோட போனதை பார்த்து எனக்கு மனசு ஒரு மாதிரியாயிடிச்சு" என கவலையுடன் சொன்னாள் யுக்தா.
"நீ கிறுக்காயிட்டே. அதனால் தான் நான் சொல்றதை கேட்க மாட்டேங்கிறே. கொஞ்சம் யோசி, அப்பறம் ஃபீல் பண்ணி பிரயோஜனமே இல்லை" என கெஞ்சும் குரலில் சொன்னாள் சம்யு.
"அவனை உயிராக நேசிக்கும் தாத்தாவும், சுநீதியம்மாவும் இருக்கும் போது, அவனது அம்மாவை நினைக்கும் போதேல்லாம் எதற்கு அவன் கண்களில் நீர் நிறையுது.? விளக்கேத்த நான் கொஞ்சம் யோசிக்கும் போது, அவன் ஃபீல் பண்ணறதைப் பார்த்து சப்போர்ட்டா நந்தன் வந்த நின்ன போதும் அவன் இன்னும் எதுக்கோ ஏங்கினான் இல்லை?" என யுக்தா கனிவான குரலில் சொன்னான்.
"லூசா நீ, அவன் எதுக்காக வேணா ஏங்கிட்டுப் போகட்டும். உனக்கு அதைப் பத்தி என்ன கவலை?" என ஆயாசத்துடன் கேட்டாள் சம்யு.
அதற்கு என்ன பதில் என்ன சொல்வது என்று யோசிக்கும் போதே, அவளது செல்போன் குறுஞ்செய்தி வந்ததற்கு அடையாளமாக குவிக் என்று சத்தம் எழுப்பியது.
ஆர்வமாக அதை எடுத்து பார்த்தவள், சித்தார்த்தின் நம்பரில் இருந்து தான் குறுஞ்செய்தி வந்திருந்தது என்பதை உணர்ந்ததும், அவளது முகம் மலர்ந்தது. மென்மையாக அந்த செய்தியை தொட்டுத் திறந்தவள்,
'குட்மார்னிங் மிஸ் சம்யுக்தா வசந்தன், ஜஸ்ட் பதினோரு நாட்கள்'
என வந்திருந்த செய்தியைப் பார்த்ததும், தலையணையில் முகம் புதைத்துக் கொண்டாள்.
"யுக்தா, வேண்டாம், அவன் உன் மனசை மாத்திருவான். எவ்வளவு திமிரா உன்னை கவிழ்க்க இருபது நாள் போதும்னு சவால் விட்டிருக்கான். இன்னும் பத்து நாள் நீ ஸ்டராங்கா இருந்தா போதும்" என சம்யு, சொல்லும் போதே, "நீ என்னை குழப்பாதே. அவனும் இப்போ என்னை பத்தி தான் நினைச்சிட்டிருக்கான். டிஸ்டர்ப் செய்யாம இடத்தைக் காலி பண்ணு" என சொன்னவள் திரும்பி படுத்துக் கொண்டாள்.
சித்தார்த்தை நினைக்கும் போதே இதயத்தில் இருந்த எழுந்த இனிமையான உணர்வு அவளது உடலெங்கும் பரவியது. மூடிய கண்களுக்குள் அழகிய சிரித்த முகத்துடன் வந்து நின்றான்.
"சித்து.." என அவனது பெயரை மென்மையாக சொன்னவள், தலையணையை தன்னுடன் அணைத்துக் கொண்டாள். திரும்பவும் செல்போனை எடுத்து அவனிடமிருந்து வந்த செய்தியை இதழ்களில் விரிந்த புன்னகையுடன் படித்தாள்.
"சம்யு, மணி ஏழாக போகுது, இன்னிக்கு ஆபிஸ் போகலையா?" என கேட்டபடி வினோதினி உள்ளே வந்தார்.
"ஆபிஸ் போறேன்மா" என உதட்டில் உறைந்த புன்னகையுடன் எழுந்தவள் கையில் செல்போனுடன் குளியலறைக்குள் சென்றாள்.
பல மாதங்களுக்குப் பிறகு இன்று தான், சம்யுக்தாவின் முகம் மலர்ந்திருப்பதை உணர்ந்தார். உதட்டில் நிறைந்திருந்த புன்னகையும், கண்களில் தெரிந்த குறுகுறுப்பும் அவருக்கு தனது மகளின் மனநிலையை சொல்லாமல் சொல்லியது. தனது வேண்டுதல் கூடிய சீக்கிரம் பலித்து விடும் என்ற நம்பிக்கை பிறந்தது.
வேகமாக கிளம்பி கீழே வந்தவள், "என்னம்மா அண்ணனும், அண்ணியும் சாப்பிட வரலை?" என கேட்டாள்.
"மயூரி வீட்டுக்கு போயிருக்காங்க" என சொல்லியபடி இட்லியை எடுத்து அவளது தட்டில் வைத்தார்.
சட்னியை அவளது தட்டில் வைக்கும் போது, "அம்மா, ஏன் இட்லி சூடா இல்லை?" என கேட்டாள்.
ஒன்றரை வருடமாக என்ன சாப்பிடுகிறோம் என்பதையே உணராமல் சாப்பிடுபவள், இன்று உணவு சூடாக இல்லை என்று சொன்னதும், சாப்பிட்டுக் கொண்டிருந்த வசந்தனுக்கு அதிர்ச்சியில் புரைக்கேறியது.
"என்னப்பா, வேகமா சாப்பிட்டிங்களா? தண்ணியை குடிங்க" என அவரது தலையை தட்டி, முதுகை தடவியவளை பாசத்துடன் பார்த்தார்.
"ஒண்ணுமில்லைம்மா, நீ சாப்பிடு" என சொன்னவர் அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
சாப்பிட்டு எழுந்தவள், அவளுக்காக காத்திருந்த காரில் அலுவலகத்திற்கு சென்றாள்.
மாலை ஆறு மணிக்கு அவளை மித்ரன் போனில் அழைத்தான்.
"சம்யு, நம்ம வீட்டு பக்கத்தில் இருக்கிற அறுபடை முருகன் கோயிலில் இன்னிக்கு மயூரி வீட்டில் அபிஷேகம் செய்யறாங்க. அப்பாவை கூப்பிட நம்ம கார் போயிருக்கு. மயூரியோட பிரதர் வருவான், அவங்கூட வந்துடு. தனியா வந்து ஸ்டண்ட் அடிக்காதே" என்றான்.
"சரிண்ணா, நான் அவங்கூட வந்துடறேன்" என போனை வைத்தாள்.
செய்து கொண்டிருந்த வேலையை முடித்து விட்டு அலுவலகத்திலிருந்து வெளியே வந்தாள். தருணை மித்ரனின் திருமணத்திற்குப் பிறகு பார்க்கவில்லை என நினைத்தபடி சுற்றிலும் பார்வையை சூழல விட்டாள்.
.அவளது அலுவலகத்திற்கு எதிரே சித்தார்த் அவனது வண்டியில் சாய்ந்து நின்/றிருந்தான். நேற்று முழுவதும் அவனை பார்க்காமல் இருந்தவள், இன்று அவனை பார்த்ததும் அவளையறியாமல் முகத்தில் புன்னகை படர்ந்தது.
அதே நேரத்தில் அவளை திரும்பி பார்த்தவனது முகத்திலும் புன்னகை விரிந்தது.
கண்களில் மெல்லிய நகையுடன் அவளருகே வந்தவன், "ஹாய் யுக்தா" என்றான்.
"ஹாய்" என முணுமுணுப்பாக சொன்னவள், திரும்பவும் தன் பார்வையை சூழல் விட்டாள்.
"ஹனி, நான் தான் இங்கே இருக்கேனே? இன்னும் யாரை தேடறே?" என கேட்டான்.
"மயூரியோட பிரதர் என்னை பிக்கப் செய்வான் என்று மித்ரன் சொன்னான்" என சொன்னவள், ரோட்டில் தன் கவனத்தை பதித்தாள்.
"யுக்தா, மித்ரன் பிக்கப் என்றா சொன்னான்?" என குரலில் சற்றே கிண்டலுடன் கேட்டான்.
"ஆமாம்" என சொன்னவளுக்கு அப்போது தான் மயூரியின் பிரதர் என்று சொன்னது சித்தார்த்தை தான் என்று புரிந்தது.
ஐயோ, எப்போதிலிருந்து இப்படி முட்டாளாகி போனோம் என தன்னையே நொந்து கொண்டாள் இதில் பிக்கப் என்று வேறு இவனிடம் சொல்லி தானாக போய் வசமாக மாட்டிக் கொண்டோம் என தன்னையே திட்டிக் கொண்டாள்.
அவனது உதடுகள் ஏளனத்துடன் வளைய, அவளுக்குத் தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது.
"உன்னை ரொம்ப நாளா.. ஸாரி ரொம்ப நேரமா பிக்கப் செய்ய நான் வெயிட் பண்ணறேன்" என கண்களில் குறுகுறுப்புடன் சொன்னவன், "போகலாம், மித்ரன் நேரமாயிடிச்சுனா கவலைப்படுவான்" என சொல்லி விட்டு டிரைவர் சீட்டில் சென்று உட்கார்ந்தான்.
மித்ரனை வீட்டிற்குப் போனவுடன் நன்றாக விளாச வேண்டும் என மனதிற்குள் நினைத்துக் கொண்டவள், அவனது காரில் ஏறாமல் மெளனமாக நின்றாள். இரண்டு நாட்கள் முன்பு அவளை ரோட்டில் மிரட்டிய குண்டர்களையும், மித்ரன் ஸ்டண்ட் அடிக்காதே என்று சொன்னதையும் நினைத்துப் பார்த்தாள்.
முன் கதவை திறந்தவன், "யுக்தா.." என அவளை காரினுள் ஏற செய்கை செய்தான். இவனுடன் செல்ல தான் வேண்டுமா என யோசித்தவள், காரின் பின் கதவை திறக்க முயன்றாள். அதை அவன் லாக் செய்து வைத்திருக்க, வேறு வழியில்லாமல் முன் இருக்கையில் அமர்ந்தாள்.
"காரிலே ஏறவே இத்தனை ஸீன் போடறாளே?" என முணுமுணுப்பாக சொன்னவன், காரை ஸ்டார்ட் செய்தான்.
தனது இருகைகளையும் கோர்த்து மடியில் வைத்துக் கொண்டு வெளியே பார்த்த படி வந்தாள்.
"எப்போ சென்னைக்கு வந்தே?" என சீரியசான குரலில் கேட்டான்.
சென்னையில் தானே இருக்கிறோம், எதற்காக இதை கேட்கிறான் என புரியாமல் திரும்பி அவனை பார்த்தாள்.
"இப்போ தான் சென்னைக்கு வந்தா மாதிரி புதுசா பார்த்துட்டு வரியே? அதான் கேட்டேன்" என நக்கலாக சொன்னான்.
அவள் எதுவும் பதில் சொல்லாமல் மறுபடியும் வெளியே தன் பார்வையை பதித்தாள்.
"யுக்தா.." என அவன் மறுபடியும் மென்மையாக அழைக்க, என்னவென்று அவனை திரும்பி பார்த்தாள்.
"உன்னோட காரில் போகணும் என்று எத்தனை நாள் ஆசைப்பட்டிருக்கேன் தெரியுமா? இப்போ நீ எங்கூட வரது எனக்கு நம்ப முடியாத கனவு மாதிரி இருக்கு" என ஆழ்ந்த குரலில் சொன்னான்.
கார் ஸ்டீரியோவில் வரிசையாக அவளது போனில் இருக்கும் பிளே லிஸ்ட்டின் பாடல்களே ஒலித்துக் கொண்டிருந்தன. மறுபடியும் தனது போனை ஹாக் செய்து விட்டானா என்று நினைக்கும் போதே, கோபமாக வந்தது.
"நீயும் நானும் இதே மாதிரி லாங் டிரைவ் போகணும் யுக்தா. என் மனசில் இருக்கிறதை எல்லாம் உங்கிட்ட சொல்லணும். எனக்கு பிடிச்சது, பிடிக்காதது, உனக்குப் பிடிச்சது, பிடிக்காதது அப்படினு எல்லாத்தையும் பேசணும்" என கண்கள் கனவில் விரிய சொன்னான்.
"நாம தான் ஏற்கனவே ஏற்கனவே லாங் டிரைவ் போயிருக்கோமே சித்தார்த்" என புன்னகையுடன் சொன்னவளை யோசனையுடன் திரும்பி பார்த்தான்.
"உங்களுக்கு ஞாபகமில்லை? சென்னையிலிருந்து பெரிய லாங் டிரைவ், சத்தியமங்கலத்திற்கு போனோமே. ஏழு மணி நேரம் இருக்குமில்ல? அன்னிக்கு நீங்க பேசிட்டிருந்தீங்க, நான் தான் மயக்கத்தில் இருந்தேன்" என நிதானமான குரலில் சொன்னாள்.
அவள் சொன்னதைக் கேட்டவுடன், கனவுகளில் மிதந்த அவனது கண்கள், ஆழ்ந்த வேதனையில் தாழ்ந்தன. காரின் உள்புறம் திடீரென்று இறுக்கமானதாக இருவருமே உணர்ந்தனர்.
"யுக்தா" என மெல்லிய குரலில் அழைத்தவன், "அதை இன்னும் நீ மறக்கலையா?" என கேட்டான்.
"நடந்தது மறக்கிறா மாதிரியான விஷயமில்லை. நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் அதை மறக்கவே முடியாது" என சொன்னவளது குரலில் வலி தெரிந்தது.
"யுக்தா, எனக்கு என்ன சொல்றதுனே தெரியலை. என்னால் முடிஞ்சா நம்ம இரண்டு பேரோட வாழ்க்கையில் இருந்தும் அந்த அஞ்சு நாட்களை மொத்தமா அழிச்சிடுவேன். நான் செஞ்ச தப்புக்கு வெறும் ஸாரி சொன்னா மட்டும் பத்தாது என்று தெரியும். உன்னை ஒன்றரை வருஷமா பார்க்காம, பேசாம இருந்தது தான் எனக்கு நானே கொடுத்த தண்டனை. சென்னை வரும் போதெல்லாம் உன்னை பார்க்காமலேயே திரும்ப அமெரிக்கா போறது எனக்கு எத்தனை கொடுமையா இருந்தது தெரியுமா. நீயில்லாம ஒவ்வொரு நாளும் நான் அனுபவிச்ச வேதனையை வார்த்தையால சொல்ல முடியாது" என வேதனையுடன் சொன்னான்.
"நீங்க உங்களுக்குக் கொடுத்த தண்டையால எனக்கு எந்த வித பயனும் இல்லை. உங்களால என் வாழ்க்கையே மாறி போச்சு. என் கல்யாணம் நின்னு போச்சு. அப்பா கல்யாணத்துக்காக செஞ்ச செலவு, அம்மா ஆசையா செஞ்ச ஏற்பாடு எல்லாம் வீணா போச்சு" என்றவளின் குரலில் கோபம எட்டி பார்த்தது.
"யுக்தா, என்னை மன்னிச்சிடு. இதுக்கு மேலே எனக்கு என்ன சொல்றதுனு தெரியலை. நான் இதுவரைக்கும் என்னை பத்தி மட்டும் தான் நினைச்சிட்டிருந்தேன். இந்த கல்யாணத்தால் உங்கப்பாவுக்கு என்ன செலவாச்சோ அதை திருப்பி கொடுத்திடறேன். உன் கல்யாணம் நின்னு போனதால இத்தனை வருத்தபடுவேனு எனக்குத் தெரியலை. நான் வேற ஏதோ நினைச்சிட்டேன்" என ஆழ்ந்த குரலில் சொன்னான்.
அவள் எதுவும் சொல்லாமல், வெளியே தன் பார்வையை திருப்பினாள்.
"யுக்தா, நான் சசியை ஸண்டே மீட் பண்ணேன். அவனும் உன்னை மாதிரியே உங்க கல்யாணம் நின்னு போனதை நினைச்சு ரொம்ப ஃபீல் பண்றான். ஒகே, என்னால நின்னு போன உங்க கல்யாணம் என்னாலேயே திரும்ப நடக்கட்டும்" என நிதானமான குரலில் சொன்னான்.
ஒரு கையால் காரை ஓட்டியப்படி மறுகையால் தனது செல்போனை எடுத்து, சசிதரனுக்கு போன் செய்தவன், "ஹலோ சசி, சித்தார்த் ஹியர்" என அவளைப் பார்த்தபடி சீரியசாக சொன்னவனது உதடுகள் வளைந்திருக்க, கண்களில் ஏளனம் பரவியிருந்தது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro