Marukkathe Nee Marakkathe Nee - 12
மறக்காதே நீ மறுக்காதே நீ - 12
ஆறாம் நாள்...
காலை மணி ஆறு...
சித்தார்த் படுக்கையில் இருந்து எழுந்திருக்க மனமில்லாமல் தலையணையில் திரும்பவும் முகம் புதைத்துக் கொண்டான்.
இரவு முழுவதும் தூக்கம் வராமல் தவித்தவன், அதிகாலையில் தான் சற்று நேரம் தூங்கினான். மீண்டும் தூக்கம் கலையும் போது, சம்யுக்தாவின் இனிய முகமே நினைவில் வந்தது. இன்று நேற்றல்ல, இருபது மாதங்களாக காலையில் முதலில் நினைவில் வரும் முகம் அவளுடையதாகவே இருக்கின்றது.
ஐந்து நாட்களாக அவளை சுற்றி வந்தும் ஒரு முன்னேற்றமும் தெரியவில்லை. இன்றுவரை அவனை மன்னிக்க கூட அவள் தயாராக இருப்பதாக அவனுக்கு தோன்றவில்லை.
நேற்று சுநீதி இயல்பாக சம்யுக்தாவை விளக்கேற்ற சொன்னதில், அவளை விட அவனே அதிர்ந்து போனான். அனைவர் எதிரிலும் சம்யுக்தா விளக்கேற்ற மறுத்து விட்டால், பூஜை தொடங்கும் போது அபசகுனமாகி விடுமே என நினைத்தான். அது மட்டுமில்லாமல், சுநீதியம்மாவிற்கும் சம்யுக்தாவிற்கும் இதனால் பிரச்சனையாகி விடுமே என்றும் யோசித்தான்.
சுநீதியும் தடாலடியாக எதையும் செய்பவரில்லை. எதையும் நிதானத்துடன் கையாள்பவர், தொலைநோக்கு பார்வை கொண்டவர் பிஸினசில் சில முடிவுகளை வேகமாக எடுக்க நெருக்கடி நேரும் போது, அவரிடம் கலந்தோலசித்த பிறகே இறுதி முடிவை எடுப்பான். சுநீதியம்மா இப்போது ஏன் இப்படி செய்தார் என யோசித்தபடியே சம்யுக்தாவின் முகத்தைப் பார்த்தான்.
அவளது முகத்தில் குழப்ப ரேகைகள் படிந்து தீவிரமாக யோசிப்பது தெரிந்தது. வினோதினி எதையும் சொல்ல முடியாமல் தலையை குனிந்து கொண்டார். வசந்தனும், கெளதமனும் முணுமுணுப்பாக பேசி கொண்டிருந்தனர். பின்னனியில் ஒலித்த மங்கல இசையால், சுநீதி சொன்னதை யாரும் கேட்கவில்லை. பூஜைக்கு வந்திருந்தவர்கள் இயல்பாக பேசி கொண்டிருந்தனர்.
சுநீதி விளக்கேற்றுவதற்கு தீப்பெட்டியை நீட்ட, ஒரு நொடி கையில் வாங்காமல் மெளனமாக நின்றாள் சம்யுக்தா. எக்ஸாம் முடிவு வெளியிட ஒரு நிமிடம் முன்பாக இருக்கும் மனநிலையை அவன் அடைந்தான். தன் கையினால் தலை முடியை அழுந்த தள்ளி விட்டவன், தனது மனம் தடதடப்பதையும், லேசாக நெற்றியில் வியர்வை துளிர்த்திருப்பதையும் உணர்ந்தான். இயல்பாக மூச்சு விட முடியாமல், நுரையிரலை ஏதோ கனமாக அழுத்துவதாக தோன்றியது. யதுநந்தன் அருகே வந்து நின்று அவனது கைகயை பிடித்துக் கொண்டான். சொல்ல தெரியாத உணர்வுடன் நந்தனை பார்க்க, அவன் நம்பிக்கையளிக்கும் விதமாக தலையசைத்தான்.
"சம்யு.." என சுநீதி மறுபடியும் அழைக்க, தனது கையை நீட்டி அவரிடமிருந்து தீப்பெட்டியை வாங்கி விளக்கேற்றினாள். அவள் ஏற்றி முடிக்கும் வரை சித்தார்த் அவளையே நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் மீண்டும் ஸமிருதி அருகே வந்த நின்ற பிறகே இயல்பாக மூச்சு விட முடிந்தது. நந்தன் தனது கைப்பிடியை விட்டு, அவனது தோளில் தட்டி கண்கள் மின்ன சிரித்தான்.
அவள் ஏற்றிய விளக்கு மிகவும் பிரகாசத்துடன் எரிவதாக தோன்றியது. அந்த வெளிச்சத்தினால் அந்த வீடே திடீரென்று ஒளியால் நிறைந்ததாக உணர்ந்தான். அவனை அழுத்திய பாரம் விலகி, இறகை போல எடையற்று பறப்பதாக தோன்றியது. எதையோ சாதித்து விட்ட மகிழ்ச்சி உள்ளத்தில் தோன்றி, முகத்தில் புன்னகையாக விரிந்தது. சம்யுக்தாவுடன் தன்னை மன்னித்து விடுவதற்கான தொடக்கம் என நினைத்தான்.
பூஜை தொடங்கி விட, சம்யுக்தா தன் தவறை மன்னித்து விட வேண்டும் என்பதையே தனது வேண்டுதலாக தெய்வத்திடம் வைத்தான். பூஜை முடியும் வரையே அதையே மனதில் ஒரே சிந்தனையாக தியானித்தான். மணி அடிக்கும் ஒலியில் சிந்தனை கலைந்து, தீபாரதனை காட்டும் போது பல வருடங்களுக்குப் பிறகு மனம் நிறைந்து போனதை உணர்ந்தான்.
"யாராவது லக்ஷ்மி மேல ஒரு பாட்டுப் பாடுங்க" என பூஜை செய்பவர் சொல்ல, உடனே தாத்தா, "என் பேத்தி பாடுவா" என சொல்லியபடி சம்யுக்தாவை பார்த்தார்.
சம்யுக்தா எதிர்ப்பு தெரிவிக்காமல் விளக்கு ஏற்றியதே பெரிய விஷயம், தாத்தா திரும்பவும் அவளையே பாட சொல்லி பிரச்சனை செய்கிறாரே என நினைத்தான். இப்போதிருக்கும் இனிமையான சூழல் அவள் கோபமாக ஏதாவது சொல்லி விட்டாள் கெட்டு விடுமே என யோசித்தான்.
அவள் ஸ்மிருதியிடம் ஏதோ முணுமுணுக்க, அவளும் தலையசைத்தாள். இருவரும் புரந்தர தாஸரின், 'பாக்யதா லட்சுமி பாரம்மா' பாடலை இனிமையாக பாடினார்கள்.
சம்யுக்தாவிற்கு பாட தெரியும் என்று அவன் அவளைப் பற்றி சேகரித்த விவரங்களில் இல்லை. அவளைப் பற்றி அவன் தெரிந்து கொண்டவை அனைத்துமே புறவயமான விவரங்களே என அப்போது தான் உணர்ந்தான். அவள் சத்தியமங்கலத்தில் சொன்னது போல், அவனுக்கு அவளுடைய விருப்பு வெறுப்புகளைப் பற்றி பெரியதாக ஒன்றும் தெரியாது. அவளுடன் நெருங்கி பழகாமல் அதை தெரிந்து கொள்வது கஷ்டம் என நினைத்தான்.
நெருங்கி பழக என நினைக்கும் போதே அவனுக்கு சிரிப்பாக வந்தது. அவன் ஊரிலிருந்து வந்தது முதல், இயல்பாக பேச முயன்றாலே கோபமாகவோ, எரிச்சலாகவோ பதில் சொல்கிறாள். இன்று தான் முதன் முதலாக முகம் சுளிக்காமல், எரிச்சல் அடையாமல் பேசியிருக்கிறாள். அது கூட மற்றவர்கள் அருகே இருப்பதால் இருக்கலாம். எந்த காரணமாக இருந்தாலும் அவள் பேசியதே போதும் என்றே தோன்றியது.
சாப்பிட்டு முடித்து ஸ்மிருதியும், சம்யுக்தாவும் தாத்தாவிடம் விடை பெற்றுக் கிளம்பினர்.
"ஸ்மிருதி, உங்க அப்பா போன் நம்பர் கொடும்மா" என வெற்றிவேல் கேட்க, யோசனையுடன், "எதுக்கு தாத்தா?" என கேட்டாள்.
"சும்மா தான்மா. நீயும் நம்ம ஊர் பக்கம்னு சொன்னியா, அது தான்" என சாதாரணமாக சொன்னார். அவரிடம் தன் தந்தையின் செல் போன் நமபரை கொடுத்தவள், விடை பெற்று கொண்டு வாசலை நோக்கி சம்யுக்தாவுடன் நடந்தாள்.
வந்தவர்களை வழியனுப்புவதற்காக வாசலில் யதுநந்தனுடன் நின்று கொண்டிருந்த சித்தார்த், "ஸ்மிருதி, தாங்க்ஸ்" என்றான்.
"ஸிட், பூஜைக்குத் தானே வந்தேன். இதுக்கு எதுக்கு தாங்க்ஸ். சொல்ல போனா என்னை ஞாபகத்தில் வைச்சு கூப்பிட்டதுக்கும் உங்களுக்கும், சுநீதிம்மாவிற்கும் தான் தாங்க்ஸ் சொல்லணும்" என்று இயல்பாக சொன்னாள்.
"உங்க வாய்ஸ் ஸ்வீட்டா இருந்தது" என யதுநந்தன் மெதுவாக சொன்னான்.
யோசனையாக அவனை ஏறிட்டவளைப் பார்த்து சித்தார்த், "என்னோட தம்பி, யதுநந்தன். மீட் பண்ணியிருக்கீங்களா?" என கேட்டான்.
"மித்ரன் அண்ணா கல்யாணத்தில் பார்த்தேன். நைஸ் மீட்டிங் யூ" என இயல்பாக கையை நீட்டினாள்.
"நைஸ் மீட்டிங் யூ டூ" என அவளது கையை பற்றி குலுக்கிய யதுநந்தனின் குரல் சற்றே உடைந்ததை போல் உணர்ந்தான் சித்தார்த்.
"டைமாயிடிச்சு, அம்மா வெயிட் பண்ணுவாங்க பை" என இருவரிடம் பொதுவாக சொல்லிவிட்டு முன்னே நடந்தாள் ஸ்மிருதி.
"யுக்தா குட்நைட், ஸ்வீட் டீரிம்ஸ்" என கண்கள் மின்ன சொன்னவனை, பொருட்படுத்தாமல் யதுநந்தனை பார்த்து, "பை நந்தன், குட் நைட்" என சொல்லி தலையசைத்து விட்டு சென்றாள்.
யதுநந்தன் கிணடலாக ஏதாவது சொல்ல போகிறான் என திரும்பி பார்த்தவன், அவன் தீவிரமாக ஸ்மிருதியைப் பார்ப்பதை உணர்ந்தான்.
"யது?' என அவனது தோளை தொட, சட்டென்று தன்னிலை உணர்ந்தவன், "என்ன அண்ணா?" என கேட்டான்.
"ஆர், யூ ஒகே?" என கவலையுடன் கேட்டான். "ஐ ஆம் ஃபைன்" என தோளை குலுக்கி விட்டு சென்றவனின் முகத்தில் எப்போதும் இருக்கும் குறும்புதனம் குறைந்ததை போல உணர்ந்தான்.
யோசித்துப் பார்த்த போது, சம்யுக்தா விளக்கேற்றுவதற்கு முன்பு தனது அருகே வந்து நின்றவன், அதற்கு பிறகு அவனை விட்டு விலகவே இல்லை என்பதை உணர்ந்தான். எப்போதும் ஏதாவது சாக்கு சொல்லி, பெண்கள் நடுவே நின்று சிரித்துப் பேசி கொண்டிருப்பவன், இன்று வழக்கத்திறகு மாறாக அமைதியாக இருந்ததாக அவனுக்குத் தோன்றியது.
அதுவும் ஸ்மிருதியிடம் கை குலுக்கிய போது யதுநந்தன் சற்றே தடுமாறியதாக தோன்றியது. எந்த வயது பெண்களிடமும் பேசுவதற்கு அவன் தம்பி தயங்கியதாகவோ, தடுமாறியதாகவோ அவனுக்கு நினைவே இல்லை. அவன் பேச தொடங்கிய இரண்டு நிமிடங்களுக்கெல்லாம், பெண்கள் சிரிக்கவும், ஆர்வமாக பேசுவதையே இது வரை பார்த்திருக்கிறான். வீட்டில் யாராவது அவனை ஏதாவது சொல்லி விட்டார்களா என யோசித்தான். நாளைக்கு அவனிடம் இதை பற்றி கேட்க வேண்டும் என நினைத்த படியே தூங்க சென்றான்.
படுக்கையில் படுத்தவுடன் இன்று நடந்தது அவனுக்கு நிறைவளிப்பதாக உணர்ந்தான். கண்களை மூடிய போது, அழகான ரோஜா மலராக சம்யுக்தாவின் முகம் தோன்றியது. "யுக்தா, ஹனி, பேபி" என மென்மையாக முணுமுணுத்தப்படி இனிமையான கனவுகளுடன் தூங்கினான் சித்தார்த்.
அவளை நினைத்தபடி தலையணையை தன்னோடு அணைத்துக் கொண்டவன், பக்கத்திலிருந்த செல்போனை எடுத்து, நேற்று எடுத்த புகைப்படங்களைப் பார்த்தான். அவளது புகைப்படங்களை பார்த்தபடி வந்தவன், ஞாபகம் வந்தவனாக
'குட்மார்னிங் மிஸ் சம்யுக்தா வசந்தன், ஜஸ்ட் பதினைந்து நாட்கள்'
என்று அவளுக்கு மெசேஜ் அனுப்பினான்.
நன்றாக தூங்கி கொண்டிருந்தவளை, செல்லில் மெசேஜ் வந்த சத்தம் எழுப்பியது. கண்களை திறக்க முடியாமல் திறந்து பார்த்த போது, சித்தார்த்திடமிருந்து வந்த மெசேஜ் என உணர்ந்தாள். புதிதாக என்ன அனுப்பியிருக்க போகிறான் என நினைத்து மெசேஜ்ஜை திறக்காமல், திரும்பவும் கண்களை மூடி படுத்துக் கொண்டாள்.
ஐந்து நிமிடம் தாக்குப் பிடித்தவள், அதற்கு மேல் முடியாமல் அவனிடமிருந்த வந்த குறுஞ்செய்தியை படித்தாள். முதல் நாள் பார்த்த போது கோபம் வந்ததை போல் இன்று வரவில்லை. எதுவும் தோன்றாமல் கண்களை மூடி மறுபக்கம் திரும்பி படுத்துக் கொண்டாள்.
இத்தனை நாள் அவனை பேண்ட் ஷர்ட்டிலும், டீ ஷர்ட் ஜீன்ஸிலும் அவனை பார்த்திருந்தவள், நேற்று முதன் முதலில் அவனை பட்டு வேஷ்டியில், நெற்றியில் சீறு கீறலாக விபூதியூடன் பார்த்தவுடன், அவனது கம்பீரத்தில் அயர்ந்து போனாள். பட்டு வேஷ்டியை விட அவனது சருமத்தின் நிறம் வெண்மையாக மின்னுவதை அப்போது தான் உணர்ந்தாள். அவர்கள் உள்ளே வருவதை பார்த்தவுடன், அவனது உதடுகளில் தோன்றிய புன்னகையும், நீல கண்களில் தெரிந்த குறுகுறுப்பும், மலர்ந்த முகமும் அவளது இதயத்தை ஏதோ செய்தன. கண்கள் ஆசையுடன் அவனது அழகிய உருவத்தை ஆழ்மனதில் பதித்துக் கொண்டன.
அவளதருகே வந்து அவன் பேசும் போது, தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள மிகவும் போராடினாள். ஒரு சிறு முகமாற்றமோ, அலைப்புறுதலோ தன்னை காட்டி கொடுத்து விடும் என பயந்தாள். அவனருகே வந்து ஆசையுடன் அவள் அழகாக இருப்பதாக சொல்ல, ஏற்கன்வே அவனது தோற்றத்தில் தன்னை இழந்து கொண்டிருந்தவள், அவனை பக்கத்தில் வர வேண்டாம் என கஷ்டப்பட்டு சொன்னாள். ஆனால் அவனோ அதை உணராமல் ஏக்கத்துடன் பார்த்து, தனது மனம் அவளால் காயப்பட்டிருப்பதை சொல்ல, அவள் அவனது பார்வையில் அவனுள் கரைந்து தொலைந்தே போனாள். தன்னை மறந்தவளை அவளது புத்தி மீட்டு எடுக்க முயலும் போதே, சுநீதி அவளை விளக்கேற்ற அழைத்தார்.
முதலில் மறுக்க நினைத்தவள், சற்று முன் சித்தார்த் பார்த்த ஏக்க பார்வையை நினைத்து நெகிழ்ந்து போனாள். ஒர விழி பார்வையில் சித்தார்த் தவிப்பதை உணர்ந்தவள், மறுமுறை சுநீதி அழைத்த போது சென்று விள்க்கேற்றினாள். அவனது முகம் இயல்பானதையும், இறுக்கம் தளர்ந்ததை உணர்ந்த போது, ஏனென்று தெரியாமல் சற்றே நிம்மதியடைந்தாள். தாத்தா பாட சொன்ன போது, அவருக்காக ஸ்மிருதியுடன் பாடினாள். கிளம்பும் போது, அவன் ஸ்வீட் டீரிம்ஸ் என்று சொன்ன போது, எளிதில் உணர்வுகளை பிரதிபலிக்கும் தன் முகம் அவனுக்கு எதையாவது உணர்த்தி விடுமோ என நினைத்து யதுநந்தனிடம் மட்டும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினாள்.
படுக்கையில் சாயும் போது பட்டு வேஷ்ட்டியில் இருந்த அவனது உருவம், கண்களை மூடினாலும், திறந்தாலும் தெரிந்தது. என்றுமில்லாமல் அறிவு அவன் அழகாக, நேர்த்தியாக, கம்பீரமாக இருக்கிறான் என அவன் பக்கம் சாய்ந்தது. அவன் யூ லுக் பியூட்டிஃபுல் என்று சொன்னது காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது. அவனது மென்மையான குரலில் ஸ்வீட் டிரீம்ஸ் என சொன்னது இதயத்தின் ஒவ்வொரு லப்டப் ஒசையுடன் மறு ஒலிபரப்பு செயதது. இரவு முழுவதும் இனிய அவஸ்த்தையில் தூக்கம் வராமல் தவித்தவள், அதிகாலையில் தான் தூங்கியவள், காலையில் அவனது மெசெஜ் சத்தத்தில் தான் எழுந்தாள்.
சாப்பிடவதற்கு மட்டுமே கீழே சென்றவள், அன்று முழுவதும் தனது அறையை விட்டு வெளியே செல்லாமல் தனது அறையினுள்ளே இருந்தாள். கண்களை மூடியப்படி நேற்று நடந்ததை நினைத்தபடியே படுத்திருந்தாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro