Marukkathe Nee Marakaathe Nee - 4
மறக்காதே நீ மறுக்காதே நீ - 4
சித்தார்த்தைப் பார்த்ததும் சம்யுக்தாவிற்கு ஒரு நொடி எதுவும் புரியவில்லை. காண்பது கனவா, நினைவா என்றும் தெரியவில்லை. அவன் ஏன் திருமணத்திற்கு வரவில்லை என்று நான்கு நாட்களாக யோசித்துக் கொண்டிருந்ததால், பக்கத்தில் நிற்கும் தருணை சித்தார்த்தாக மனம் உருவகம் செய்கின்றோதோ என தடுமாறினாள்.
தருண் என்று நினைத்து அவனது கையை பற்றி போட்டோ எடுத்துக் கொள்ளும் போது தெரியாவிட்டாலும், எதிரில் நிற்பவர்களை பார்தததும் சம்யுக்தாவிற்கு அது தனது மனசித்திரம் இல்லை என்பது தெரிந்து போனது. அவளது இதயம் ஒரு நொடி நின்று போய், செவிகள் அடைத்துக் கொண்டது போல் தோன்றியது. அவளை கூர்மையாக துளைத்த நீல கண்களைப் பார்த்து முதலில் அதிர்ந்தாலும், மனதில் தோன்றிய இனிமையான உணர்வு, கண்களில் மிகையான ஓளியாகவும், முகத்தில் மலர்ச்சியாகவும் வெளிவந்தன. அந்த நிமிடத்தில் உலகத்தில் அவர்கள் இருவரும் மட்டும் தனித்திருப்பதாக அவளுக்குத் தோன்றியது. அவனது நீல கண்களில் ஆழத்தில் விழுந்து கரைந்து விட விரும்பினாள்.
ஆனால் அவளது அறிவோ ஒன்றரை வருடங்களாக அவன் தொடர்பு கொள்ள கூட முயலவில்லை என்பதை நேரங்காலம் தெரியாமல் நினைவுறுத்தியது. ஒரு நொடியில் கட்டுக்களை உடைத்துக் கொண்டு ஒடிய தன் மனதையும், உணர்வுகளையும் கஷ்டப்பட்டு சமன் செய்து கொண்டாள். அகிலனிடம் திருமணத்திற்குச் சித்தார்த் வரவில்லை என்று தானே மித்ரன் சொன்னான் என யோசித்தபடி தன் முகத்தை இயல்பாக திருப்புவது போல் மறுபுறம் திருப்பினாள்..
மேடையையே அனைவரும் பார்ப்பதை உணர்ந்தவள், சித்தார்த்தைப் பிடித்திருந்த தன் கையை விலக்க முயன்ற போது, அவன் இயல்பாக அவளது கையை விடாமல் பற்றிக் கொண்டான். அவள் தன் கைகளை, அவனிடமிருந்து விடுவிக்க முயன்ற போது, சிறிதளவு கூட அசைக்க முடியாமல் தவித்தாள். வலுகட்டாயமாக அவனது கைகளை விலக்கி, சீன் கிரியேட் செய்யவும் அவள் விரும்பவில்லை.
சித்தார்த் அவனது வலது கையை நீட்டி மித்ரனிடம், "கங்கிராட்ஸ் மித்ரன்" என சிரித்தபடி சொன்னான்.
சித்தார்த்தின் கையைப் பிடித்த மித்ரன், "தாங்க்ஸ் டியூட். நீ வர மாட்டேனு சொன்னே?" என புன்னகையுடன் கேட்டான் மித்ரன்.
"உன் வெட்டிங்க்கு எப்படி வராமல் இருக்க முடியும்? உனக்கு பிளஸண்ட் சர்பரைஸ் கொடுக்க தான் அப்படி சொன்னேன்" என சொன்னான்.
"எனக்கு மட்டும் தான் சர்பரைஸ் கொடுக்க நினைச்சியா இல்லை..." என சம்யுக்தாவை பார்த்தபடி புருவத்தைத் தூக்கினான் மித்ரன்.
"மத்தவங்களுக்கு அது சர்பரைஸாகவும் இருக்கலாம், ஷாக்காகவும் இருக்கலாம்" என சொன்னவன, "கங்கிராட்ஸ் மயூரி, யூ ஆர் ஸோ லக்கி டூ ஹாவ் மித்ரன்" என சொன்னான்.
"தாங்க்ஸ் சித்தார்த். மித்து நீங்க வரலைனு ரொம்ப வருத்தபட்டார். ஆனால் நீங்க கண்டிப்பாக கல்யாணத்திற்கு வருவீங்க என்று மித்துக்கிட்ட பெட் கட்டியிருந்தேன்" என சிரிப்புடன் சொன்னாள்.
மயூரி இயல்பாக சித்தார்த்திடம் பேசியதைக் கேட்டு சம்யுக்தாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. இருவரும் ஏற்கெனவே அறிமுகமனாவர்கள் போல பேசுவது அவளுக்குத் திகைப்பாக இருந்தது.
"எப்படி வராம இருக்க முடியும், நாமெல்லாம் ஒரே ஃபாமிலி இல்லையா?" என சித்தார்த் சொன்னதைக் கேட்டதும், சம்யுக்தாவிற்கு இவன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என எரிச்சல் வந்தது. வலிந்து தன் கையை விடுவிக்க முயன்ற போது, அவன் இன்னும் அழுந்த பற்றிக் கொண்டான்.
"ஒகே, ஹாப்பி மேரீட் லைஃப்" என சொன்ன சித்தார்த், அவளது கையைப் பிடித்து இழுத்தபடி கீழே இறங்கி வெற்றிவேல் தாத்தாவின் அருகே சென்றான்.
"யுக்தா, இவர் தான் என் மாமா கெளதமன்" என அறிமுகம் செய்தான். இயல்பாக அவனது பிடியிலிருந்து தனது கைகளை விடுவித்தவள், வலிந்து அவரைப் பார்த்து புன்னகைத்து செய்தாள்.
"இவங்க என் அம்மா சுநீதி" என அவன் அறிமுகம் செய்தவரைப் பார்த்து திகைத்தாள். நான்கு நாட்கள் முன்பு புடவை கடையில் அமிதாவுடம் அவரைப் பார்த்தது நினைவுகளில் வந்து போனது. அன்று இவரைப் பார்க்கும் போது, தனக்கு ஏன் அவரை முன்பே பார்த்தது போலிருந்தது என்று புரிந்தது. மித்ரன் ஒரு முறை சித்தார்த்தின் ஃபாமிலி போட்டோவை காண்பித்திருந்தான். அதில் இவரை பார்த்த ஞாபகம் இருந்தது.
அவளை ஆசையுடன் பார்த்த சுநீதி, "சம்யுக்தா வா, இங்கே என் பக்கத்தில் உட்கார். உங்கூட நிறைய பேசணும்" என்றார்.
"இல்லை ஆண்ட்டி, நிறைய ஃபிரண்ட்ஸ் வந்திருக்காங்க" என சொல்லிவிட்டு அங்கேயிருந்து வேகமாக நகர்ந்தாள். அவள் செல்வதை பார்த்துவிட்டு யோசனையுடன் சித்தார்த்தைப் பார்த்தார் சுநீதி.
சம்யுக்தாவிற்கு குளிரூட்டபட்ட திருமண ஹால் திடீரென்று மூச்சு முட்டுவதாக தோன்றியது. வெளியே சென்று பால்கனியில் நின்றவளின் கண்களில் ஏனென்று தெரியாமல் நீர் வழிந்தது. மனதை ஏதோ பாரமாக அழுத்துவதாக உணர்ந்தாள். சித்தார்த்தைப் பார்த்ததும் பழைய நினைவுகள் மனதில் வந்து மோதின. ஒரே நேரத்தில் மனதில் துக்கமும், மகிழ்ச்சியும் மாறி மாறி தோன்றின. அவனை நினைத்தவுடன் நெகிழ்ந்த அவளது இதயம், அடுத்த நொடியே வெறுப்பில் கசந்தது.
தனது தோள்களைத் தொட்ட கைகளை உணர்ந்தவள், "ஸ்மிருதி..." என மேலே சொல்ல முடியாமல் பொங்கி வந்த அழுகையைக் உதட்டை அழுந்த மூடி கட்டுப்படுத்தினாள்.
"சம்யு.. ப்ளீஸ் அழாதே" என அவளை ஆறுதலாக அணைத்துக் கொண்டாள்.
"ஸ்மிருதி, இவன் ஏன் இப்படி செய்யறான்? என் கல்யாணத்தைத் தான் நடக்க விடாம நிறுத்தினான். காலையிலிருந்து நான் ஹாப்பியா இருந்தேன். இவன் வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டான்" என கண்களில் நீர் வழிய சொன்னாள்.
"சம்யு, அவனை கண்டுக்காம விடு. நீ வருத்தப்பட்டா எல்லோருக்கும் கஷ்டமாயிருக்கும். உங்கம்மா முகத்தில் இன்னிக்குத் தான் நிறைய நாளுக்குப் பிறகு சந்தோஷத்தைப் பார்த்தேன். நீ வேதனையோட இருந்தா மித்ரன் அண்ணாவால் தாங்கவே முடியாது. அவர் சந்தோஷமா இருந்தா தான் மயூரியும் நிம்மதியா இருப்பா. நீ அழுததில் உன் மேக் அப் கலைஞ்சிடிச்சு. போய் முகத்தை சரி பண்ணிட்டு, ஹாப்பியா வந்தவங்களை கவனி" என அவளை சமாதனம் செய்தாள் ஸ்மிருதி.
"என்னால் முடியலை, மனசு பாரமாயிருக்கு" என கண்களைத் துடைத்தபடி சொன்னாள்.
"சம்யு, உங்க உறவுக்காரங்க எல்லாரும் ஏற்கெனவே உனக்கு கல்யாணம் செய்யாம, மித்ரனுக்கு ஏன் செய்யறாங்க என்று வம்பு பேசிட்டிருப்பாங்க. நீ அங்கே இல்லாம இருந்தாலோ, அழுதிட்டு இருந்தாலோ, வேற விதமா பேசுவாங்க. அவன் இங்கிருக்கிறதையே மறந்துடு" என சொல்லி அவளை வலுகட்டாயமாக அழைத்துச் சென்றாள் ஸ்மிருதி.
பத்து நிமிடத்தில் தன் முகத்தை சீர் செய்து வெளியே வந்த சம்யுக்தா, மறந்தும் சித்தார்த் இருந்த பக்கம் திரும்பவில்லை. தோழிகளிடமும், தெரிந்தவர்களிடமும் பேசியதில் மனதின் இறுக்கம் தளர, சிறிது நேரத்திலேயே இயல்பான நிலைக்குத் திரும்பினாள்.
எங்கு சென்றாலும் சித்தார்த்தின் பார்வை தன் மேல் படிந்திருப்பதை, தன் உள்ளுணர்வால் உணர்ந்தாலும், அதை பொருட்படுத்தாமல் இருக்க முயன்றாள். வரவேற்பு முடிந்ததும், ஸ்ம்ருதியுடன் சாப்பிட்டு விட்டு, தனது அறைக்குச் சென்று படுத்துவிட்டாள். தூங்கவதற்கு ஒரு நொடி முன்பு, அவனது நீல கண்களின் கூர்மையான பார்வை மனதில் வந்து போனது.
மறுநாள் மித்ரன் திருமணம் முடியும் வரை, சம்யுக்தா எதைப் பற்றியும் நினைக்காமல் மனதை அடக்கி கொண்டாள். தனது அண்ணனின் நல்வாழ்விற்காக மங்கல நாண் முடிச்சிடும் போது கடவுளிடம் மனமுருகி வேண்டி கொண்டாள். மற்ற திருமண் சடங்குகள் தொடர, அவள் ஸ்மிருதியுடன் சேரில் வந்து அமர்ந்தாள்.
"சம்யு, இந்த ப்ளூ கலர் ஸாரி அழகாயிருக்கு" என சொன்னாள்.
"என் செலக்ஷன் இல்லை. சுநீதி ஆண்ட்டி தான் இந்த புடவை எனக்கு நல்லாயிருக்கும் என்று சொன்னாங்க" என்றாள்.
"என்னது, சுநீதி ஆண்ட்டியா, சித்தார்த்தோட அத்தையா?" என ஆச்சரியத்துடன் கேட்டாள்.
சம்மதமாக தலையசைத்தவளிடன், "இது எப்போ நடந்தது? மாமியோர் கூட மேடம் ஷாப்பிங் போயிருக்கீங்க, எங்கிட்ட இதை சொல்லவே இல்லை" என கிண்டலாக சொன்னாள்.
"ஸ்மிருதி, திரும்ப ஆரம்பிக்காதே" என அன்று கடையில் நடந்ததை சொன்னாள்.
"இன்னிக்கு அவங்க கல்யாணத்துக்கு வந்திருக்காங்களா?" என கேட்டாள் ஸ்மிருதி.
"ஹ்ம்ம்.. அவங்க எல்லோருமே வந்திருக்காங்க. நேத்தே அவங்க அத்தை பேசினதுக்கு நான் ஒழுங்கா பதில் சொல்லலைனு ஃபீல் பண்ணேன். அவங்க இந்த கல்யாணத்துக்காக தான் அத்தனை தூரம் வந்திருக்காங்க" என வருத்தமாக சொன்னாள்.
"உனக்கு அவங்க மேலே ஏதாவது கோபமா?" என கேட்டாள் ஸ்மிருதி.
இல்லை என தலையசைத்து மறுத்தவளிடம், "அவங்க தனியா தான் உட்கார்ந்திருக்காங்க, போய் பேசு" என சொன்னவளை தயக்கத்துடன் பார்த்தாள்.
"சம்யு, அவங்க அத்தனை தூரம் வந்தது மித்ரன் கல்யாணத்துக்கு மட்டுமில்லை. உன்னை பார்க்க தான் முக்கியமாக வந்திருப்பாங்க" என சொன்னாள்.
"அவங்க எதுக்கு என்னை பார்க்க வரணும்?" என கேட்டவளை, "அவங்க எதுக்கு வந்திருக்காங்க என்று உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும். நான் என்ன சொன்னாலும் நீ ஒத்துக்க போறதில்லை. இப்போதைக்கு அவங்க ஃபாமிலி ஃபிரண்ட் என்று நினைச்சு அவங்களோட பேசு" என கிண்டலாக சொன்னாள் ஸ்மிருதி.
சரியென்று தலையசைத்தவள், "ஹாய் ஆண்ட்டி" என சுநீதியின் அருகே அமர்ந்தவள், "ஸாரி, நேத்திக்கு பிஸியா இருந்தேன். உங்களோட பேச முடியலை" என வருத்தமுடன் சொன்னாள்.
"எதுக்கு ஸாரியெல்லாம் சொல்லிட்டிருக்கே. நேத்து நிறைய பேர் வந்திருந்தாங்க" என சொல்லி விட்டு மென்மையாக புன்னகைத்தார்.
"ஆண்ட்டி தாங்க்ஸ், இந்த ஸாரி நல்லாயிருக்கு என்று எல்லோரும் சொன்னாங்க" என பெருமையுடன் சொன்னவளின், தலையை இதமாக வருடியவர், "சில பேருக்கு மட்டும் தான் எந்த டிரஸ் போட்டாலும், எந்த கலர் போட்டாலும் அழகாயிருக்கும்" என சொன்னவர், "உன் ஜெர்னலிஸ்ட் வொர்க் எப்படி போயிட்டிருக்கு" என இயல்பாக பேச தொடங்கினார்.
சிறிது நேரம் கடந்தவுடன் சம்யுக்தாவின் பக்கத்து சேரில் வந்தமர்ந்தவன், "ஹாய் சம்யுக்தா. ஐ ஆம் நந்தன், யதுநந்தன்" என்றான்.
"சம்யுக்தா, இவன் என் இரண்டாவது பையன்" என அறிமுகம் செய்தார்.
அவனைப் பார்த்து நட்பாக புன்னகைத்தவள், "ஹாய்" என்றாள்.
"யூ லுக் ஸோ பிரிட்டி. நேத்தைக்கு விட இன்னிக்கு தான் நீங்க அட்டகாசமா இருக்கீங்க" என ஆர்வமுடன் சொன்னான்.
"யது, பிஹேவ் யுவர்செல்ஃப்" என தடித்த குரலில் சொன்னார் சுநீதி.
"ஸ்வீட்டி, பொறாமைப்படாதே, நீ தான் என்னிக்கும் நம்ம வீட்டில் எவர்கீரின் பியூட்டி" என அவரது கன்னங்களை தொட வந்தவனின் கைகளை தட்டி விட்டார் சுநீதி.
"சம்யுக்தா, இவங்களும் இவங்க பையனும் ரொம்ப போர். எப்பவும் எதையாவது சீரியசா பேசிட்டு, செஞ்சிட்டிருப்பாங்க. இப்போ கூட பாருங்க இவங்க புருஷனும், பையனும் வந்த வேலையைப் பார்க்காம, அங்கே பிசினஸ் பேசிட்டிருக்காங்க" என யதுநந்தன் கை காட்டிய இடத்தில் சித்தார்த்தும், கெளதமனும், யாருடனோ பேசி கொண்டிருந்தனர்.
அவள் பார்த்த, அதே நேரத்தில் சித்தார்த்தும் திரும்பி பார்க்க, இருவரின் பார்வையும் ஒரு நொடி சந்தித்துக் கொண்டன. அவனது கூர்மையான பார்வையை தாங்க முடியாமல் சம்யுக்தா தன் முகத்தை அவசரமாக திருப்பி கொள்ள, சித்தார்த் சிரிப்புடன் பேச்சைத் தொடர்ந்தான்.
"சம்யுக்தா, நீங்க வெட்கப்பட்டால் இன்னும் அழகாயிருக்கீங்க" என யதுநந்தன் சொல்ல, புரியாமல் அவனை பார்த்தாள்.
"ஸ்வீட்டி, நான் பத்து நிமிஷம் பேசினா கூட பொண்ணுங்களை வெட்கபட வைக்க முடியலை. ஆனா உன் பையனைப் பாரு. ஒரே ஒரு செகண்ட் தான் சம்யுக்தாவைப் பார்த்தான். அதுக்கே இவங்க முகம் எப்படி சிவந்து போச்சு" என சிரித்தபடி சொன்னான்.
"யது, யூ ஆர் கிராஸிங் தி லிமிட்ஸ்" என கடுமையாக சொன்னார் சுநீதி.
"ஒகே" என தோளைக் குலுக்கியவன், "சம்யுக்தா, நீங்க டென் மினிட்ஸ் முன்னாடி ஒரு ஆலிவ் கீரின் டிரஸ் போட்டிருந்த பொண்னோட பேசிட்டிருந்தீங்களே, அவ பெயர் என்ன?" என்று சீரியசாக கேட்டான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro