Marakkathe Nee Marukkathe Nee -21
மறக்காதே நீ மறுக்காதே நீ - 21
பதினைந்தாம் நாள்...
காலை ஒன்பது மணி..
கபாலீஸ்வரர் கோயில் பிரகாரத்தில் ஸ்ம்ருதியின் அருகே யதுநந்தன் அமர்ந்திருந்தான்.
"நான் இங்கே இருப்பேனு உங்களுக்கு யார் சொன்னது?" என கேட்டாள் ஸ்மிருதி.
"காலையில் உங்கப்பாவிற்கு போன் செஞ்சிருந்தேன். உங்கம்மா தான் போன் எடுத்தாங்க. பேசிட்டிருக்கும் போது, உன்னை பத்தி கேட்டேன். அவங்க தான் நீ கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போயிருக்கிறதா சொன்னாங்க" என சொன்னான்.
"ஒ, அப்படியா" என கேட்டவள், இவனிடம் அம்மா எதற்காக தான் கோயிலுக்குப் போயிருப்பதை சொன்னார் என யோசித்தாள்.
"இன்னிக்கு ஆபிஸ் போகலையா?' என கேட்டான்.
"சேனலில் லீவ் கிடையாது. தேவைப்படும் போது ஆஃப் எடுத்துப்போம். நான் எப்பவும் ஸண்டே தான் ஆஃப் எடுத்துப்பேன். நேத்து வேலை அதிகமாக இருந்ததால். இன்னிக்கு எடுத்துட்டேன்" என சொன்னாள்.
"இன்னிக்கு என்ன கோயிலுக்கு வந்திருக்கே?' என இயல்பாக கேட்டான்.
"எனக்கு சிவன் ரொம்ப பிடிக்கும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கே வந்துடுவேன்" என சொன்னாள்.
அவளை அதிசயமாக பார்த்தவன், "எல்லா பொண்ணுங்களுக்கும் கண்ணனை தான் பிடிக்கும். நீ வித்தியாசமா சிவனை பிடிக்கும்னு சொல்றே" என கேட்டான்.
"சிவனை மாதிரி யாரும் தியாகம் செய்ய முடியாது. பாற்கடலை அமுதத்துக்காக கடையும் போது முதலில் வந்த ஆலகால விஷத்தால், உலகமே அழிஞ்சிடும் என்ற நிலை வந்த போது, அவர் எதை பத்தியும் யோசிக்காம அதை எடுத்து வாயில் போட்டுக்கிட்டார். அது எந்த காலத்திலேயும், எந்த விதத்திலேயும் வெளியே வர கூடாது என்று தன்னோட தொண்டையிலே நிக்க வைச்சிருக்கார். நமக்கு இரண்டு நாள் திரோட் இன்ஃபெக்ஷ்ன் வந்தாலே என்ன பாடு படறோம்" என சொல்லி விட்டு சிரித்தாள்.
"வெரி இண்ட்ரெஸ்டிங்" என அவளைப் பார்த்து சொன்னான்.
"நானும் சிவன் மாதிரி தான். அவரை மாதிரி என்னொட பெட்டர் ஹாப் கூட எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்க தயாராயிருக்கேன்" என ஆழ்ந்த குரலில் சொன்னான்.
"அர்த்தாங்கினி" என சொன்னவளை புரியாமல் பார்த்தான். "பெட்டர் ஹாஃப்போட இண்டியன் வெர்ஷன்" என சொன்னவள், "நீங்க எதுக்கு கோயிலுக்கு வந்தீங்க?' என கேள்வியாக அவனை பார்த்தாள்.
"இந்த கோயிலுக்கு வர பொண்ணுங்க ரொம்ப அழகாயிருப்பாங்கனு கேள்விபட்டேன். அதான்.." என சுற்றிலும் பார்த்தான்.
"சைட் அடிக்க வந்தீங்களா?" என நம்ப முடியாமல் கேட்டாள் ஸ்மிருதி.
இரு புருவத்தையும் மேலே தூக்கி இறக்கியவன், "அதுக்கு மட்டும் வரலை, என் வேண்டுதலை சாமி கிட்டே சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்" என சொன்னான்.
"ஒ, அப்படியா?" என கேட்டவள் பிரகாரத்தில் இருந்து எழுந்தாள்.
அவளுடன் எழுந்தவன், "என்ன வேண்டுதல் என்று கேட்க மாட்டியா?' என முகத்தை பார்த்தபடி கேட்டான்.
அவள் மெளனமாக நடக்க, "என் அர்த்தாங்கினியை என்னோட சீக்கிரம் சேர்த்து வைக்க சொல்லி வேண்டிக்கிட்டேன்" என உடைந்த குரலில் சொன்னான் யதுநந்தன்.
"நந்தன். உங்களோட பேசிட்டிருந்தா பொழுது போகிறதே தெரியலை. நான் அன்னிக்கே சொன்னேன். நாம் நல்ல நண்பர்களா இருக்கலாம்." என சொன்னாள்.
"ஸ்ம்ரு, நல்ல மேரெஜ்க்கு அடித்தளமே நல்ல நட்பு தான்" என தலைசாய்த்து சொன்னான்.
"நந்தன், நம்ம இரண்டு பேருக்கும் செட்டாகாது" என சொல்லி விட்டு வேகமாக முன்னே நடந்தாள்.
"ஏன் செட்டாகாது, ஒரு ரீஸன் சொல்லு" என அவளை விட வேகமாக நடந்து அவன் முன்னே நின்றான்.
"உங்களுக்கே தெரியும்" என நிதானமாக சொன்னவள், அவனை தாண்டி நடந்தாள்.
"நான் நேத்து அனுப்பிய மெசேஜை பார்த்தே இல்லை" என கேட்டான்.
"ஆமாம் பார்த்தேன். பழைய போட்டோக்களை டெலிட் பண்ணியிருந்தீங்க, ஸோ வாட்? அதனால அது எல்லாம் நடக்காததா ஆயிடுமா?" என கோபமாக சொன்னாள்.
"தனக்கு வர போறவ ஒழுக்கமா இருக்கனும் என்று ஆம்பிளைங்க நினைக்கிற மாதிரி தான் நாங்களும் நினைப்போம். நீங்க ஷேர் செஞ்சா மாதிரியே ஒரு பொண்ணு உங்களுக்கு தன் ஆண் நண்பர்களோட நெருக்கமா இருக்கிற போட்டோவை ஷேர் செஞ்சா நீங்க ஒத்துப்பிங்களா?" என ஆழ்ந்த குரலில் கேட்டாள்.
"ஹலோ, நீங்க சொன்னதெல்லாம், எங்க ஊரில் நார்மலான விஷயம். எனக்கு அதிலே எந்த பிராப்ளமும் இருக்காது. அவ பழைய வாழ்க்கை பத்தி எனக்கு கவலையில்லை" என தோள்களைக் குலுக்கியபடி சொன்னான்.
"ஸாரி, என்னால அப்படி சொல்ல முடியாது" என அவனது கண்களைப் நேராக பார்த்து சொன்னாள்.
"ஸ்மிருதி, என்னோட பழைய வாழ்க்கையை என்னால மாத்த முடியாது. ஸாரி, தப்பு செஞ்சிட்டேன் என்று உங்கிட்ட மன்னிப்பு கேட்க மாட்டேன். இப்போ கேட்டாலும் அந்த வாழ்கையை தப்பு என்று சொல்ல மாட்டேன்" என திரும்பவும் அவளது கண்களைப் பார்த்து சொன்னான்.
"நந்தன், அது உங்க வாழ்க்கை. அதை சரி என்று சொல்லவோ, தப்பு என்று சொல்லவோ எனக்கு மட்டுமில்லை யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது" என சொல்லியபடியே கோயிலின் வாசலுக்கு வந்தாள்.
"பை நந்தன்" என சொல்லி விட்டு, தனது காரில் ஏறி சென்றவளை பார்த்துக் கொண்டே நின்றான்.
நேற்று தனது தந்தையின் கேஸை விசாரிக்கும் விக்ரமிடம் சென்று பேசி விட்டு வந்தான். சென்னை வரும் போதெல்லாம் அவனை சந்தித்து வழக்கின் முன்னேற்றங்களை கேட்டுக் கொண்டிருந்தான்.
"விக்ரம், ஏதாவது தடயம் கிடைச்சுதா?" என ஆவலுடன் கேட்டான்.
"இல்லை சித்தார்த். நீங்க முயற்சி செஞ்சது என்னாச்சு? என கேட்டான்
"நானும் என் நெட்வொர்க் யூஸ் செஞ்சேன். நோ ரிசல்ட்ஸ். இப்போ இருக்கிற விஷய்ம் என்றால் ஈஸியா எடுத்துடுவாங்க. இது இருபது வருஷத்து முந்தைய விஷயம். எந்த விதமான தரவோ, ஆவணங்களோ கிடைக்கவே மாட்டேங்குது" என அலுப்பாக சொன்னான்.
"எஸ் சித்தார்த். நாம் நிறைய தடவை இதை பத்தி பேசிட்டோம். முரளிதரன் சந்தன கடத்தல் கும்பலோட தொடர்பு வைச்சிருந்ததுக்கு நிறைய ஆதாரங்கள் இருக்கு. அவங்களோட சேர்ந்து சந்தனம் கடத்தினார் என்பதற்கும் ஆதாரம் இருக்கு. ஆனா அவர் உங்கப்பாவை கடத்தினதுக்கு நேரடியாகவோ, மறைமுகமாவோ எந்த ஆதாரமும் இல்லை. வசந்தனோட சாட்சியத்தை தவிர குமர்வேலுக்கும், முரளிதரனுக்கும் வாக்குவாதம் நடந்ததற்கும் எந்த சாட்சியும் இல்லை. கொலைக்கான சாட்சி கிடைக்கலைனா கூட சந்தனம் கடத்தினார் என்று வேணா அவரை ஜெயிலில் தள்ளலாம்" என்றான் விக்ரம்.
"விக்ரம், நான் இத்தனை நாள் கஷ்டப்பட்டது அதுக்காக இல்லை. எங்கப்பாவோட சாவுக்கு முரளிதரனுக்கு தண்டனை வாங்கி கொடுத்தே ஆகணும்" என ஆயாசத்துடன் சொல்லி விட்டு எழுந்து வந்தான்
நாதன் பேசுவதில் கவனம் செலுத்த முடியாமல் சித்தார்த்தின் எண்ணங்கள் சம்யுக்தாவையே சுற்றி வந்தது.
தனது செல்போனை எடுத்து
'குட்மார்னிங் மிஸ் சம்யுக்தா வசந்தன், ஜஸ்ட் ஆறு நாட்கள்'
என்ற மெசெஜை அனுப்பினான்.
நேற்று ஞாயிறு என்பதால் சம்யுக்தா எங்கேயும் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருப்பதாகவும், எப்போதும் போல நார்மலாக தான் இருப்பதாகவும் மித்ரன் சொல்லியிருந்தான்.
"சித்தார்த்.. சித்தார்த்" என நாதன் இரு முறை அழைத்த பின்பே அவரை வெறுமையாக பார்த்தான்.
"இந்த டீல் சைன் பண்ணிடலாமா?' என கேட்டார்.
"ஒகே" என தலையசைத்தவன் எழுந்து தனது அறைக்குச் சென்றான்.
தனது மொபைலில் இருந்த சம்யுக்தா போட்டோவை எடுத்துப் பார்த்தவன், அவளை ரெட் ரோஸ் புடவையில் பார்த்த அந்த நொடி மனதில் வந்து போனது. கனவில் மிதக்கும் கண்களுடன் அவள் பின்னாலே சென்றான். அந்த நிமிடத்தில், அப்பா, அம்மா, தாத்தா என்று யாரும் நினைவு வரவில்லை. மனதில் அவள் யாரென்று கண்டுபிடித்து தன்னுடையவளாக்கி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.
"சம்யு, உனக்கு இந்த புடவை அழகாயிருக்கு" என நடு வயது பெண்மணி சொல்ல, "ஆமாம், என் கண்ணே பட்டு விடும் மாதிரி இருக்கு" என்று சொன்ன இன்னொரு பெண்மணி, "இங்கே பாருங்க, இந்த புடவை நம்ம பொண்ணுக்கு நல்லாயிருக்கில்லே?" என போனில் பேசி கொண்டிருந்தவரை கேட்டார்.
"என் பொண்ணுக்கு கட்டினா எல்லா புடவையும் அழகாயிருக்கும்" என சொல்லி அவளை அணைத்துக் கொண்டவரை பார்த்ததும் அதிர்ந்தான். இவன் வசந்தான் தானே, இவனை தேடி தானே இங்கே வந்தோம். கடவுளே, இது என்ன சினிமா மாதிரி வில்லன் பெண்ணையா எனக்குப் பிடிக்க வேண்டும்?' என நிராசையுடன் நின்றான்.
"ஆமாம் அங்கிள். என் சம்யுவிற்காகவே இந்த புடவையை டிசைன் பண்ணா மாதிரியே இருக்கு" என அவளது அருகே வந்து நின்று அவளையே ஆசையுடன் ரசித்தபடி நின்ற இளைஞனை பார்த்ததும், சொல்ல முடியாத கோபம் வந்தது.
"போ சசி" என அவள் செல்லமாய் சிணுங்கியதில் அவளது கண்களில் தெரிந்த வெட்கத்தைப் பார்த்து சித்தார்த்திற்கு இன்னும் கோபம் அதிகரித்தது.
"சம்யு, எத்தனை தடவை சொல்றது. மாப்பிள்ளையை வா போ என்று சொல்லாதே" என சொன்னவுடன், கண்கள் சிறியதாக, மூக்கை சுருக்கு, சிவந்த உதட்டை குவித்து, "சரி" என முறைப்பாக சொன்னவள், "கெட் லாஸ்ட் மிஸ்டர் சசிதரன்" என சொல்லி விட்டு வாய் விட்டு சிரித்தாள்.
அவள் சிரிப்பதை கண்கள் விரித்து பார்த்துக் கொண்டிருந்த சசிதரனை தாங்க முடியாத வெறுப்புடன் பார்த்தான் சித்தார்த்.
"சம்யு, மாப்பிள்ளை கிட்ட ஸாரி சொல்லு" என அவர் மிரட்டியதை காது கொடுத்து கேளாமல், இன்னொரு புடவையை கையில் எடுத்தாள்.
அதன் பின் இரண்டு நாட்கள், செய்வதறியாமல் பல வித யோசனைகளுடன் சுற்றி வந்தான். வசந்தனை பற்றிய செய்திகளை சேகரித்துக் கொண்டிருந்தாலும், முன்பு போல முனைப்புடன் எதையும் செயல் படுத்த முடியவில்லை.
வலுகட்டாயமாக தனது மனதிலிருந்து சம்யுக்தாவை அகற்றியவன், வசந்தனை எப்படி பேச வைப்பதென்று யோசித்தான். அவருக்கு எதுவும் பலவீனங்கள் என்று இருப்பதாக தெரியவில்லை. பிசினஸிலும் முடிந்த அளவு நேர்மையானவராகவே இருந்தார். அவரை பற்றி விசாரித்ததில் அனைவருமே அவரை நல்ல விதமாகவே சொன்னார்கள். நாதனும், தாத்தாவும் அவர் மிகவும் விசுவாசமானவர் என்றே சான்றிதழ் வழங்கினர். ஒரு மனிதனால் எப்படி அத்தனை பேரையும் நடித்து நம்ப வைக்க முடிகிறது என்று அவர் மேல் இன்னும் ஆத்திரம் வந்தது.
இத்தனை அழகாய் நடிப்பவரிடம் சென்று கேட்டால், கண்டிப்பாக உன் அப்பாவை நான் தான் கொன்றேன் என்று ஒத்துக் கொள்ள போவதில்லை. வேறு நம்புபடி ஏதாவது கதையை சொல்லி தன்னை திசை திருப்பி விடுவார். வெளிப்படையாக குற்றம் சாட்டினால் அவனது தாத்தாவே நம்பாமல் போகலாம்.
வேறு என்ன செய்யலாம் என்று அவன் யோசித்த போது, அவனுக்கு தெரிந்த ஒரே வழி அவரை கடத்தி அடைத்து வைத்து வலுகட்டாயமாக உண்மையை சொல்ல வைப்பது தான். மித்ரன் ஒரு போலிஸ் அதிகாரியாக இருப்பது அவனுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை.
லண்டனில் இருக்கும் போது அவன் இணைந்திருந்த தொழில்முறை சாரா இண்டெலிஜென்ஸ் நெட்வொர்க் அவனுக்குக் கை கொடுத்தது. வசந்தனை பற்றி அனைத்து தகவல்களையும், அவரது நகர்வுகளையும், அவரது மொபைலையும் ஹாக் செய்ய உதவினர். அவரை கடத்தி கொண்டு போய் வைப்பதற்கான வழிமுறையும், மாட்டிக் கொள்ளாமல் கடத்துவதற்கான தொழில் முறை திட்டத்தையும் வகுத்துக் கொடுத்தனர்.
எந்த இடத்திலும் அவனையோ, அவன் பெயரையோ உபயோகப்படுத்தாமல் அவரிடமிருந்து உண்மையை வரவழைக்கும் டீமையும் அமைத்துக் கொடுத்தனர்.
ஒரு முறை ஒத்திகை பார்த்து விடலாம் என நினைத்த அன்று எதிர்பாராமல் வசந்தனுடன் சம்யுக்தாவும் காரில் வந்தாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro