நண்'பா'...
நானென்ற சொல்லுக்கு நீயின்றிப் பொருளில்லை;
நட்பென்ற வார்த்தைக்கும் நாமின்றி முதலில்லை...
நாளெல்லாம் நவின்றவைக்கு இவ்வாழ்வே ஈடில்லை,
நம்போன்ற பந்தங்கள் ஏழுலகில் எங்குமில்லை!
கள்ளமில்லாச் சிரிப்போடு கதைகள் பேசினாய் நீ,
கண்ணுக்கு இமையாய் என்றும் எனக்கானாய் நீ,
கண்ணீரும் புன்னகையும் கச்சிதமாய்க் கூட்டிக்கொண்டு,
கைகோர்த்த பயணங்கள் என்னுடன் நடந்தாய் நீ!
பார்க்கும் திசையெல்லாம் வண்ணங்கள் தெளித்தாய் நீ,
பார்க்காத நாளையெல்லாம் பாலைகளாய் செய்ததும் நீ.
பகிர்ந்துண்ணும் உணவில் பாசம் கற்றுத்தந்ததும் நீ,
பனிக்கூழுக்குச் சண்டையிட்டுப் பல்லை உடைத்ததும் நீ!
மறக்காதபடி பாடங்கள் யாவும் புகட்டிவிட்டு,
மதிப்பெண்கள் வாங்க வைத்ததும் நீயே!
மாட்டேனென்று சொன்னாலும் ஏற்காமல் இழுத்து,
வகுப்புகளைத் தவிர்க்க வைப்பதும் நீயே!
தீப்போல் சுடுசொற்கள் பேசுவாய் சிலநேரம்
தீண்டினாலும் விலகி நிற்பாய் வெகுதூரம்
தீவிரமாய் கோபம்கொண்டு ஊடல் செய்தாலும்,
தீமை எனக்கென்றால் உருகுவது நீயல்லவா?
எட்டாத உயரங்களை எட்டிட முயன்று
எவரும் துணையின்றிச் சறுக்கி விழுகையில்,
என்றும் என்னைத் தாங்கிக்கொள்ளத் தயங்காத
எனது இரண்டாம் தாய்மடியும் நீயல்லவா?
காணாத தூரங்கள் சென்றாலும் மாறாத
மனதின் பாடலாய், உயிரின் தேடலாய்
இருப்பாய் என்றும் என் நினைவில்,
என் இனிய நண்பா..!
–– மது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro