Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மெல்லிய காதல்கள்: 54

இரவின் குளிரில் விண்ணைப் பார்த்துக் கொண்டிருந்த விஜித்தா அவளை தாவி வந்து பிடித்த ஆரவின் திடீர் அணைப்பில் திடுக்கிட்டாள்.

" டேய் என்ன டா? "

ஆரவ் அவள் கழுத்தில் முகம் புதைத்து " கொஞ்சம் என்னையும் கவனி டி, மனுஷன் மாடா ஒழச்சி ஓடா தேஞ்சிப் போயிருக்கேன். "

அவன் இறுக்கத்தில் நெழிந்தவள் மேலும் அவன் அணைப்பை இறுக்குவதால் அவன் பிடியில் இருந்து தப்பிப்பதைவிட்டுவிட்டு அவனிடமே சரணடைந்தாள்.

" சரி என் அத்த பையனுக்கு என்ன வேணும் இப்போ? "

" கல்யாணம் வேணும். "

" ஏதே? "

" என்ன ஏதே? படிக்கிற வரைக்கும் வெயிட் பண்ணுன்னு சொன்ன, வெயிட் பண்ணேன். உன் அண்ணன் வாழ்கைக்கு விடிவுகாலம் வர வரைக்கும் வெயிட் பண்ணுன்னு நீ சொல்லல, ஆனாலும் நான் வெயிட் பண்ணேன். இப்போ அவன் என் தங்கச்சியோட அவங்க வீட்டுல ஜாலியா இருக்கான். இனிமே என்ன டி? "

விஜித்தா அவளது முழங்கையால் அவன் வயிற்றிலே குத்தினாள். ஆனாலும் ஆரவ் அசருவதாய் இல்லை.

" கல்யாணம் என்ன உனக்கு அன்னாச்சி கடைல போய் இரெண்டு கிலோ கேட்டா இரெண்டு பைல வாங்குற மாவு மாதிரி நினச்சியா? அதுக்கெல்லாம் ஒரு நேரம் காலம் சம்பிரதாயம்னு நிறைய இருக்கு. "

" ஆமா இருக்குத் தான். ஆனா அதெல்லாம் ரொம்ப போரிங் டி. நாம டக்குன்னு கல்யாணம் பண்ணிக்கலாம். "

விஜித்தா அவனைத் திரும்பி குழப்பமாய் பார்த்தாள். " டக்குன்னா? அதெப்புடி டக்குன்னு கல்யாணம் பண்ண முடியும்? "

" இந்த நேரத்துல போய் உங்கம்மா கிட்ட கல்யாணத்த பத்தி பேசுனா அவங்க என் மேல இருக்குர காண்டுல உன்ன தர மாட்டேன்னு சொல்லீடுவாங்க. அதுனால அத்தானுக்கு வேலை வைக்காம நீ காலைல கிளம்பி வந்துரு நாம ஊட்டிக்கு ஓடி போய் ஜாலியா டக்குன்னு கல்யாணம் பண்ணிக்கலாம். அப்பரம் ஒரு வர்ஷம் களிச்சு ஒரு பாப்பாவோடு வந்து நின்னா உங்கம்மா வா மருமகனே-ன்னு எனக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ப்பாங்க. "

மனதில் இப்போதே மணல் கோட்டை கட்டியவனை தலையில் அடித்து நடப்புக்கு அழைத்து வந்தாள் விஜித்தா.

" சொல்லுவ டா சொல்லுவ. நீ ஊட்டிக்கு இழுத்துட்டுப் போய் மேரேஜ் பண்ணுறதுக்குத் தான் நான் ஆறு வர்ஷமா கணவு கண்டுட்டு இருக்கனா? அதெல்லாம் முடியாது. "

ஆரவ் கோவத்தில் சேவல் போல் சிலிப்பிக் கொண்டு அவளை விட்டு விலகி நின்று முகத்தைத் திருப்பிக் கொள்ள, " இப்டியே பண்ணீட்டு இருந்தீன்னா நான் வேற பொண்ண எங்கம்மாவ பார்க்க சொல்லீடுவேன் டி. "

" உனக்கு ஓவர் தைரியம் தான். ஆனா உன்ன விட உன் மூஞ்ச என்ன தவிர வேற எவளும் பார்க்க மாட்டான்னு எனக்கு தைரியம் அதிகம். "

விஜித்தாவை ஓரக்கண்ணால் பார்த்த ஆரவ் மீண்டும் முறுக்கிக் கொண்டான்.

" டேய் கொஞ்சம் பொருமையா இரு டா, "

" எனக்கு வயசு 29 டி! இன்னும் எத்தன வர்ஷத்துக்கு என்ன சாமியாரா இருக்க சொல்ற? "

" போன மாசம் வரைக்கும் என் அண்ணனுக்காக ஏதோ மலையேறப் போறேன்னு பேசுனீல்ல? அனுபவி டா டேய், " விஜித்தா வேண்டுமென்றே இப்போது முறைத்துவிட்டு விருவிருவென அங்கிருந்து நடக்க வேகமாக திரும்பி அவளை பிடித்து சுவரோடு சாய்த்த ஆரவ்

" என்ன பாத்தா பாவமா இல்லையா டி உனக்கு? "

எக்கி அவன் மூக்கை வலிக்கும்படி கடித்த விஜித்தா ஆரவ் அசந்த நேரம் அவனை தள்ளிவிட்டு நகர்ந்திருந்தாள்.

" உன் விளையாட்டெல்லாம் என் கிட்ட வேலைக்கு ஆகாது அத்த பையா! ஒழுங்கா அத்தய கூட்டீட்டு வந்து பொண்ணு கேட்டு கல்யாணம் பண்ணிக்கோ. ஓடி வரனுமாம்ல ஸாருக்காக. போடா, "

தரையில் அமர்ந்து அவளை பார்த்துக் கொண்டிருந்த ஆரவ் சிரித்துக் கொண்டே அவன் தலையை கலைத்துவிட்டவன் எழுந்து அவளைப் பின் தொடர்ந்து ஓடினான்.

" இவள கட்டிக்கிறதுக்கு இன்னும் என்னவெல்லாம் நான் பண்ணனுமோ தெரியலையே. அடியேய் நில்லு டி, "

#

மதியின் வெளிச்சம் மட்டுமே அந்த அறையில் சூழ்ந்திருக்க, மெல்ல உறங்கும் ஆர்யாவிற்கு தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த சூர்யா கதவு திறக்கும் சத்தித்தில் திரும்பி பார்த்தாள்.

தன் அலைப்பேசியை அணைத்துவிட்டு சத்தமின்றி உள்ளே வந்த ஷிவனேஷ் சூர்யாவின் அருகில் வந்தமர, புருவம் உயர்த்தி என்ன என வினவியவளை கண்டு தலையை இடவலதாய் ஆட்டிவிட்டு உறங்கும் ஆர்யாவைப் பார்த்தான்.

" என்னாச்சு? "

ஷிவனேஷ் ஆர்யாவின் தலையை மென்மையாய் கோதி, குனிந்து அவன் நெற்றியில் மிருதுவாய் இதழ்பதித்துவிட்டு சூர்யாவிடம் திரும்பி அவளைப் பின்னிருந்து அணைத்துக் கொண்டான். அவன் தொடுகையில் சிலிர்த்த சூர்யா கன்னத்தின் ஓரத்தை கடிக்க, அவள் தோளில் தன் தாடையைப் பொருத்தி பெருமூச்சுவிட்ட ஷிவனேஷ்

" யாதேஷ் ஃபோன் பண்ணான். "

" ஹ்ம்ம். "

" ஷிவாவும் பாப்பாவும் அவன் கூட சேஃபா இருக்காங்கன்னு சொன்னான். "

" ஹ்ம்ம். "

" நாளைக்கு நேர்ல போய் பார்த்துட்டு வரலாம். ஆர்யா ஸ்கூல் லீவ் தான? "

" ஹ்ம் ஆமா. "

" நீயும் ஆபீஸ் போக வேணாமே... "

" ஹ்ம் சரி போகல. "

" என் பைக்ல போலாமா மூணு பேரும்? "

" ஹ்மம்ம், " இவ்வாறு அவனிடம் அனைத்திற்கும் பொம்மை போல் அவள் தலையாட்டிக் கொண்டிருக்க ஷிவனேஷ் சிரித்துக் கொண்டே ஆர்யா உறங்கியதை உறுதி செய்துவிட்டு சூர்யாவை அவன் புறம் திருப்பினான்.

ஆனால் சூர்யா அவன் சிரித்துக் கொண்டிருந்ததை காணாத அதிசயத்தைக் கண்டது போல் அதிசயத்துப் பார்க்க அவள் முகத்திற்கு நேராக சொடக்கிட்டு அவளை உலகிற்குக் கொண்டு வந்த ஷிவனேஷ்

" என்ன மேடம் ஏதோ பாக்காத அதிசயத்த பார்த்த மாதிரி இருக்கீங்க? " என அவள் தாடை உயர்த்தி ஆழ்ந்த குரலில் கேட்க மீண்டும் சூர்யாவின் பூ உடல் அதிர்ந்தது.

அவனது காந்தம் போன்ற கண்களுள் இழுக்கப்பட்ட பெண்ணவளும் எப்படியோ பார்வையை திருப்பி அவளை சமன்செய்து கொண்டவள் மீண்டும் அவனை எதிர்நோக்கி திரும்பிய போது அவளது மூச்சு தொண்டைகுழியிலே அடைத்துக் கொண்டது. ஏனெனில் அவர்களது மூச்சுக்காற்று ஒருவரை ஒருவர் தீண்டுவது போல் சூர்யாவின் முரடன் அவளை நெருங்கி வந்திருந்தான்.

பட்டென அவள் பின்னே விலக அவள் இடையை வளைத்திருந்த அவன் கரங்கள் மீண்டும் அவளை அவனிடமே இழுத்தது.

" நான் கேட்டதுக்கு பதில் சொல்லலையே, "

மருண்டு விழித்தவளை அவன் உருத்து நோக்க, கணவனின் புதிய முகத்தை எச்சில் விழுங்க நோக்கிக் கொண்டிருந்தவளுக்கு வார்த்தைகள் இதழை விட்டுப் பிரியவில்லை.

அவள் நெற்றி மீது வந்து விழுந்த கற்றை சிகையை ஒதுக்கி, அங்கங்கு மலர்ந்திருந்த வேர்வைதுளிகளை துடைத்துக் கொண்டே அவன் விரலை அவள் இதழிடம் இழுத்து வந்தவன் " எப்பவும் என்கிட்ட எதாவது கேட்டுட்டே இருக்குமே... இப்போ ஏன் இந்த வாய் ரொம்ப அமைதியா இருக்கு? "

சூர்யாவின் இதழ்கள் தந்தியடித்தது. அவன் கண்களில் தெரியும் உணர்வின் பெயர் தெரியாமல் அவன் ஆழ்ந்த குரலில் இருந்த அர்த்தம் புரியாமல் அவளது இதயம் வேகமாய் துடிக்க, மேலும் அவளை நெருங்கி சென்றவன் அவள் காதுமடலில் வேண்டுமென்றே இதழை உரச, சூர்யா பட்டென அவளது நிலையை பிடித்துக் கொண்டாள்.

" நான் உன் புருஷன் சூர்யா. என் கிட்ட என்ன பயம்? "

அவன் அந்த கேள்வியை கேட்ட அடுத்த நொடி அவன் மீசை அவள் கன்னத்தில் தந்த குருகுருப்பில் அவனை படக்கென தள்ளிவிட்ட சூர்யா

" யார்ரா நீ? என் முசுடு புருஷன் எங்க?! "

ஷிவனேஷ் அப்போதும் சற்றும் அலட்டாமல் அவளைப் பிடித்து இழுத்து அவன் கைவளைவிற்குள் சிறை வைத்துக் கொண்டான் ஆளை மயக்கும் புன்னகையுடன்.

" ஏன் உனக்கு என்னத் தெரியலையா? "

காதலித்த ஐந்தரை வருடத்தில் ஷிவனேஷ் ஒரு ஐந்து முறை தான் சிரித்து சூர்யா பார்த்திருக்கிறாள். அந்த முசுடு மூஞ்சான் தான் ஆதித்தியா சேனல் வைத்தாலும் ப்ரேக்கிங் ந்யூஸ் பார்க்கும் அறுபது வயது முதியவன் போல் அமர்ந்திருப்பானே. இதில் இவனெங்கு சிரிக்கப் போகிறான்? 

ஆனால் இப்போது அவள் மனதை கொள்ளையடிப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தவனின் நகை அவளை சுண்டி இழுக்க, கிரங்கிய இதயத்தை தலையில் தட்டி எழுப்பினாள்.

" ம்ஹும். என் புருஷன் அந்நியனுக்கு வேணா டஃப் குடுப்பான். ரோமியோவெல்லாம் வாய்ப்பே இல்ல. "

" இன்னும் எனக்கு என்ன பேரெல்லாம் வச்சிருக்க பேபி? "

அவ்வளவு தான். சூர்யாவின் ஆவி ஆப்கானிஸ்தானுக்கே பறந்திருந்தது. தன் காதல்காரியின் மீது பாவம் கொண்டு ஷிவனேஷ் சற்று தள்ளி அமர்ந்து அவள் இடையை அழுத்தி சூர்யாவை உலகிற்கு அழைத்து வந்தான்.

" நீ உன்னோட முசுடன் ஷிவனேஷ தான பார்த்துருக்க... இன்னும் உன்னோட புருஷன பார்க்கலையே... இனிமே டெய்லி பார்க்க தானே போற, பாரு. " என அசால்ட்டாக அவள் கன்னம் தட்டி கூறியவன் முற்றிலும் அவளுக்கு புதியவனே.

ஷிவனேஷின் கரங்கள் அவள் இடையை விட்டதும் தான் விட்டது, விட்டால் போதும் என துள்ளி எழுந்த சூர்யா ஆர்யாவின் மறுபுறம் போய் அவனை கேடையம் போல் வைத்துக் கொண்டு புரண்டு படுத்துவிட்டாள்.

இப்படி அந்நியனும் அம்பியும் கலந்த கலவையாய் இருந்தவன் திடீரென நான் உனக்கு மட்டும் ரோமியோ என சொல்லாமல் சொன்னால் அந்த பிஞ்சு மனம் கொண்ட பேதையும் என்ன செய்வாள்?

சிரித்துக் கொண்டே விளக்கை அணைத்துவிட்டு வந்த ஷிவனேஷ் ஆர்யாவின் மறுபுறம் ஒரு தலையணையை பத்திரப்படுத்திவிட்டு சூர்யாவை அவனோடு இழுத்துக் கொள்ள, படக்கென பதறிய பெண்ணவள் அவன் மென்மையாய் அவளை அவளது தலையணையில் அழுத்தித் திருப்பியதும் அவன் கண்களில் என்ன கண்டாளோ? இந்த புதிய பழக்கங்களுக்கு கட்டுண்டு அமைதியாக படுத்துக் கொண்டாள்.

ஷிவனேஷ் சூர்யாவின் தலையில் மிருதுவாய் இதழ் பதித்து வேறெதுவும் கூறாமல் அவளை அணைத்தபடியே கண்களை மூடிக் கொள்ள, அவர்களின் இதயங்கள் இரண்டும் அருகருகே கேட்ட வேறுபாடில்லா துடிப்புகளின் தீரா தித்திப்போடு உறங்கிப் போயினர்.

#

காலை வெயில் புளர்ந்த கதிர்கள் நேராக சென்று நம் நாயகனின் இமைகளில் தஞ்சம் கொள்ள, இமைகளை மெல்ல பிரித்தவனுக்கு முதல் தரிசனமே அவன் நெஞ்சில் தலைவைத்து உறங்கியிருந்த அவன் காதல் தேவதையும் அவன் மறுபுறம் அவன் கரத்தை கட்டிக்கொண்டு உறங்கியிருந்த அவன் அழகு மகளும் தான்.

யாதேஷின் இதழ்கள் அழகாய் விரிய, பட்டும் படாமல் இருவரது நெற்றியிலும் முத்தம் வைத்தவனுக்கு உலகையே வென்றது போல் ஒரு ஆனந்தம்.

அவன் பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் யோசித்து ஷிவன்யாவிற்காக வாங்கிய வீட்டில் இப்போது அவர்கள் இருவரும் அவர்களின் காதல் திருமணத்திற்கு அடையாளமான அவர்களின் செல்ல மகளோடு... இப்படி அனைத்தையும் நினைத்து பூரித்துப் போய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

யாதேஷிற்கு மட்டும் பறக்கும் சக்தி இருந்திருந்தால் இந்நேரத்திற்கு அவனை கையில் பிடித்திருக்க முடியாது. திருமணம் ஆன புதிதில் இப்படி எத்தனை கனவுகள் அவனும் கண்டிருப்பான்?

யாதேஷின் எண்ண அலைகளை ஷிவன்யாவின் அசைவு கலைக்க, சோம்பல் முறித்துக் கொண்டு தன்னவனின் கைவளைவில் நெழிந்த பெண்ணவள் கண்களை திறந்ததும் அருகில் அவன் காதல் விழிகளை கண்டு தேனுண்ட வண்டாய் அவன் விழி சிறைக்குள் ஆயுள்கைதியானாள்.

கதிரோனின் செங்கதிர்கள் அவள் விழிகளில் பட்டுத் தெறிக்க, நேரம் போவது தெரியாமல் இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தவளின் சிகையை வருடிய யாதேஷ்

" நீ பார்க்குறது எனக்குத் தெரியாதுன்னு நினைச்சுப் பார்த்துட்டு இருக்கியா யமுனா? " என ஹஸ்கி வாய்சில் அவள் காதை கடிக்க, அப்போதே தான் என்றும் போல் அவன் உறங்கும் போதெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பது போலே இப்போது தன் குட்டு வெளிப்பட்டது கூட தெரியாமல் பார்த்து மாட்டிக் கொண்டோம் என உணர்ந்த ஷிவன்யா

" அ... இ...இல்லையே. இல்லவே இல்ல. "

" நம்பீட்டோம் நம்பீட்டோம். "

" நீங்க நம்முனா நம்புங்க நம்பாட்டிப் போங்க. நான்— நான் போறேன். விடுங்க என்ன, "

" ஏ ஏய் இரு டி கொஞ்ச நேரம். "

" மணி எட்டாகுதுங்க! பாட்டி என்ன நினைப்பாங்க என்னப்பத்தி?! "

" இப்போ நீ எட்டு மணிக்கே லோட்டஸ்-அ போய் பார்த்து என்ன சூர்யநமஸ்காரம் பண்ண போறியா? சும்மாண்டு இரு செத்த நேரம். "

ஷிவன்யா இவன் அலும்பு தாங்காமல் அவன் கைவளைவிலே சினுங்க அதையெல்லாம் நம் நாயகன் கண்டுகொள்ளவில்லை. ஒரு பத்து நிமிடம் பின் அவனே அவனது பிடியை விலக்க, புரியாமல் அவனைப் பார்த்தவள்

" இப்போ மட்டும் விட்டுட்டீங்க? ஏன் இப்போ பிடிச்சு வச்சிருந்தீங்க என்ன? "

" இப்போ நான் இவ்ளோ நேரம் விடலன்னு உனக்கு கோவமா இல்ல சீக்கிரம் விட்டுட்டேன்னு கோவமா? "

ஷிவன்யாவின் கன்னம் சிவப்பேற " அதெல்லாம் ஒன்னும் இல்ல! பதில மட்டும் சொல்லுங்க. "

" என் பொண்டாட்டி இன்னைக்கு எப்டியும் ரொம்ப பிசியாகிடுவா... அதான் கொஞ்ச நேரம் எனக்குன்னு அவள நானே ட்ரெஷர் பண்ணிக்கிட்டேன். "

" ஹ்ம்? நான் ஏன் பிசியாக போறேன்? இன்னைக்கு ஆஃபீஸ் கூட இல்லையே... சனி கிளமை தானே? "

அதற்கு மர்மமாய் சிரித்த யாதேஷ் இவர்களின் பேச்சுக்களில் அங்குமிங்கும் புரளத் தொடங்கிய ஷிவானியை தட்டிக் கொடுத்துக் கொண்டே கண்களை மூடி தலையை சாய்த்துக் கொண்டான்.

ஷிவன்யா எழுந்து குளியலறை சென்று காலைகடன்களை முடித்துவிட்டு வந்த நேரமெல்லாம் தாமரை பாட்டி வீட்டின் கதவைத் திறந்து எப்போதும் போல பேப்பர் படிக்கத் தொடங்கியிருந்தார். கணவனின் அணைப்பில் உறங்கும் மகளை இரசித்துவிட்டு இந்த அழகிய தருணங்களை மனதில் சேர்த்துக் கொண்டவள் மனக்க மனக்க குலம்பிகளை போட்டு இரண்டு கப்புகளில் ஊற்றி எடுத்து வந்தாள்.

அதற்குள்ளாகவே தன் காலைகடன்களை முடித்துவிட்டு வந்த யாதேஷ் யாரிடமோ மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருக்க, அவளைப் பார்த்ததும் " ஆமா டா மா. நேரா நீங்க வந்துடுங்க, ஆரவ் இருப்பான். " என வேகமாக கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அதை கவனிக்காத ஷிவன்யா அவனிடம் ஒரு கப்பை நீட்டினாள். " எப்டி வீட்டுல பால் பாக்கேட்ல இருந்து எல்லாம் ஏதோ எடுத்து வச்ச மாதிரி கரெக்ட் ஆ இருக்கு? நீங்க இங்க நேத்தே வந்தீங்களா?  "

" நேரா இங்க தான் உங்கள கூட்டீட்டு வரனுமுன்னு இருந்தேன் யமுனா. அதான் லோட்டஸ் கிட்ட சொல்லி முன்னாடியே வாங்கி வைக்க சொன்னேன். "

" சரிங்க... யாருகிட்டையோ ஃபோன் பேசீட்டு இருந்தீங்களே... " என அவள் கேட்டுக் கொண்டிருந்த போதே வீட்டின் மணியோசை அடித்தது.

ஷிவன்யா யாதேஷைத் திரும்பி பார்க்க அவன் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்று அவளை வேகமாக சென்று கதவைத் திறக்க வைத்தது.

அவள் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் கதவின் மறுபுறம் அவளை நேசிக்கும் அவள் குடும்பம் அழகாய் காத்து நின்றது.

ஷிவனேஷ் சூர்யாவுடன் ஆர்யாவும் ஆரவ் மற்றும் விஜித்தாவிற்கு முன் புன்னகையோடு அக்காவை பார்த்து கண்ணடித்த சசியுடன் நின்றிருந்தார் ஷிவன்யாவின் அன்பு அன்னை ராசாத்தி.

விழி மீற வழி நாடி...

DhiraDhi ❤️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro