Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌚7🌚

சென்னையில் அமைந்துள்ள அந்த தெரு,  "பீகொக் அவென்யூ" என்ற பெயரை வெளிக்காட்டக்கூடிய அழகான பெரிய எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பாரிய ஒரு இரும்பு கதவுடன் கம்பீரத்துடன் கூடிய பசுமையுடன் காட்சியளித்து.

அந்த பகுதியின் ஆரம்பத்திலேயே இருக்கும் இரும்புக்கதவுக்கருகில் பரிசோதனை கூடம் இருக்க, அதைத் தாண்டியே உள்ளே செல்ல வேண்டிய  அவசியம் காணப்பட அங்கு பாதுகாப்புக்கு கடமைக்கும் ஆட்கள் உள்ளனர் என்பதை அந்த நடைமுறை பறைசாற்றிக்கொண்டிருந்தது.

அந்த பகுதியில் சுமார் அறுபது வீடுகள். அனைத்து வீடுகளும் ஒரேவடிவமைப்புடன் ஒரே மாதிரியாக இருக்க நிறங்கள் மாத்திரம் வெவ்வேறாக இருந்தாலும் பெரும்பாலான வீடுகள் வெள்ளை நிறப்பூச்சையே தம் மீது போர்த்திக்கொண்டிருந்தன.

அந்த இரும்பு வாயிற்கதவை தாண்டி செல்ல நடுவில் தார்பாதையும் இருமருங்கிலும் தனித்தனி வீடுகளும் இருக்கின்றன. முதல் ஐந்து வீடுகளைத் தாண்டும் போது சிறிய அளவிலான ஒரு பல்பொருள் அங்காடியும் அதனை ஒட்டியதாக மருந்தகத்துடன் கூடிய சேனல் மையம் ஒன்றும் அமைந்து காணப்படுகின்றது.

வீடுகள் அனைத்தும் முடியும் இடத்தில் சிறிய அளவிலான வாகன பழுதுபார்த்தல் மற்றும் வாகன சேவை வழங்கும் நிலையம் ஒன்றும் இருக்கின்றது. அங்கு காணப்படும் அறுபது வீடுகளைச் சுற்றியும் தனித்தனியாக மதில்கள் அமைக்கப்பட்டிருக்க ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் பின்னாலும் அழகான முறையில் பூக்கன்றுகள் வளர்க்கப்பட்டு பாராமரிக்கப்படுகின்றன என்பதற்கு சாட்சியாக அனைத்து வீடுகளும் பசுமையாக காட்சியளித்தன. கூடவே அனைத்து வீடுகளிலும் பக்கவாட்டில் நடுத்தர அளவிலான நீச்சல் தடாகமும் இருக்கின்றது.

சுருக்கமாக கூறினால்,
நகரப்பகுதியிலும் ஒரு குட்டி நவீன நகரமாக அந்த பகுதி காட்சியளித்து. அந்த குட்டி நகரத்தில் உள்ளே ஆட்களை அனுமதி விடுவதில் இருந்து ஒவ்வொரு வீட்டில் இருந்தும் வெளியேற்றப்படும் கழிவுகளை முகாமை செய்வது வரை அனைத்து விடயங்களும் ஒரு செயன்முறையின் கீழே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

"பீகொக் கன்ஸ்ட்ரக்ஷன்" எனப்படும் கட்டுமானத்துறையில் பிரசித்திபெற்று வரும் குறிப்பிட்ட நிறுவனத்தின் கீழ் தான் இந்த மினி நகரம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

இங்கு வலது பக்கத்தில் இருந்து பன்னிரெண்டாம் வீட்டில் தான் இவ்வளவு காலமாக நிருஷனா தங்கி இருந்தாள். அந்த வீட்டில் அவளோடு அந்த வீட்டுக்கு சொந்தக்காரர்கள் வீட்டின் பராமரிப்புக்காக பொறுப்பில் அமர்த்தியிருந்த பணிப்பெண்ணும் இருந்தார்.

ஆனால் கடந்த இரண்டு கிழமைகளாக ரிதூவையும் கூட்டிக்கொண்டு வந்து தன்னோடு தங்க வைத்துக்கொண்டிருக்கிறாள் நிரு.

ரிதூவின் சித்தப்பாவான விஜய்யிடமும் காப்பக பொறுப்பாளியான நிஷாந்தனியிடமும் பக்குவமாக எடுத்துக்கூறி அவர்களின் அனுமதியோடு ரிதூவை இங்கு அழைத்து வந்திருக்கிறாள்.

விஜய்யும் இந்த பகுதியை பற்றி நன்றாக அறிந்து வைத்திருந்ததனால் எந்தவித கேள்வியையும் நிருவிடம் தொடுக்காமல் ரிதூவின் விருப்பத்திற்கு முன்னுரிமை அளித்து அவளுக்கு விருப்பம் என்றால் தனக்கும் விருப்பம் என்று கூறி இருந்தான்.

இதுவே நிருவிற்கு போதுமாக இருக்க ரிதூவை வழிக்கு கொண்டுவரும் வேலையை மிகவும் கட்சிதமாக செய்தவள் அடுத்த நாளே இவளை இங்கு கூட்டிக்கொண்டுவந்திருந்தாள்.

இது தான் நிரு.
இவள் அவ்வாறு தான்.
அவளது இயல்பு இது தான். எங்கு சென்றாலும் இவளை அறிந்தவர்கள் இருப்பார்கள். காரணம், இவள் எங்கெல்லாம் செல்லுவாளோ அங்கெல்லாம் நண்பர்கள் பட்டாளத்தை உருவாக்கி விடுவாள்.
அவளது நண்பர்கள் பட்டாளத்தில் சிலர் தானாக சேர்த்த கூட்டம்.
பலர் தானாக சேர்ந்த கூட்டம்.
இவளது ராசி அவ்வாறு.

இன்றைய இந்த மாலை நெருங்கும் வேளையில் தன் அறை பெல்கனியின் வழியாக கீழே இருக்கும் தோட்டத்தை பார்த்த நிருவுக்கு அவளையும் மீறி உதட்டில் புன்னகை அரும்பியது.

அதற்கு காரணம் கீழே தோட்டத்தில் இருக்கும் மர ஊஞ்சலில் சாய்ந்தமர்ந்த படி தன் போனில் மிகவும் சுவாரஷ்யமாக சிரித்த முகத்துடனும் விரிந்த வாயுடனும் எதையோ ரிதூ பார்த்துக்கொண்டிருப்பதாகும்.

இல்லாமல் இருக்குமா என்ன?

இவர்களது முதல் சந்திப்பு அன்றைய நேர்முகப்பரீட்சை நாளில் இடம்பெற்றிருக்க அன்றைய சந்திப்பின் முடிவில் நிரு இவளிடம் தொலைபேசி எண்ணைக் கேட்க அவளோ நிஷாந்தனியின் எண்ணையே கொடுத்தாள்.

எதுவும் சொல்லாமல் அதை இவள் வாங்கிக்கொண்டாலும் இவளிடம் உண்மையிலேயே ஒரு தொலைபேசி கூட இல்லையா என்ற கேள்வி நிருவின் மண்டையை அடிக்கடி குடைந்து கொண்டு தான் இருந்தது. ஒரு நாள் தொலைபேசி உரையாடலின் போதே இதை கேட்டு விட அவள் சொன்ன பதிலை கேட்டு பரிகசிப்பதா இல்லை இவளை எண்ணி பரிதவிப்பதா என்றிருந்தது அவளுக்கு.

காரணம் அவள் காலேஜ் படிக்கும்போதே அவளது சித்தப்பாவான விஜய் அவளுக்கு ஸ்மாரட் போன் ஒன்றை பரிசளித்திருந்தார். அவள் அப்பொழுது இருந்த மனநிலையில் அதை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை.

ரிதூவிடம் ஒரு நல்ல கொள்கை இருக்கின்றது.

அதாவது, ரிதூ ஏதாவது ஒரு முடிவெடுக்கும் போது மூன்று வகையில் வைத்தே எந்த முடிவையும் எடுப்பாள். ஒன்று அவள் எடுத்த முடிவை ஜஸ்ட் நவ் என்ற ரீதியில் உடனே செயற்படுத்துவாள். இரண்டாவது நொட் நவ் என்ற ரீதியில் எடுத்த முடிவை குறிப்பிட்ட காலம்வரை தள்ளிப்போடுவாள். அடுத்து நொட் எட் ஆல் என்ற ரீதியில் எடுத்த முடிவை செயற்படுத்தவே மாட்டாள்.

அன்று விஜய் அளித்த கையடக்கத்தொலைபேசிக்கும் பாவிப்பதா இல்லையா என்ற தெரிவில்  "நொட் எட் ஆல்" என்ற வகையமைப்பில் சேர்த்து அப்படியே வைத்திருந்தாள். நிருவின் உந்துதலில் தான் அதை பாவிக்கவே ஆரம்பித்திருந்தாள்.

சக மனிதர்களைப் போல இன்று அவள் அதனோடு ஐக்கியமும் ஆகியிருக்கிறாள்.

ரிதூவின் இப்பொழுதான இந்த மாற்றங்கள் விஜய்யை கூட பலபோது நெகிழ்வடையச்செய்துள்ளது. அப்பொழுதெல்லாம் விஜய்யினதும் தர்ஷியினதும் பார்வை நன்றி கலந்த பார்வையாக மாறி நிருவை தழுவிச்செல்வதும் நிரு அவர்களுக்கு மத்தியில் சங்கடமாக நெளிவதும் வாடிக்கையானது தான்.

எது எவ்வாறோ ரிதூவின் மாற்றம் தான் நமக்கு பிளஸ் புள்ளி ஆகும்.

கொஞ்ச நேரம் ரிதூவையே பார்த்துக்கொண்டிருந்த நிரு கீழேவந்து அவளுக்கும் தனக்குமான டீயை தயார் பண்ணி எடுத்துக்கொண்டு தானும் போய் அந்த ஊஞ்சலின் மறுபுறத்தில் அமர்ந்து ஒரு கப்பை அவளது கையில் திணித்தாள்.

"என்ன மேடம் ரொம்ப இன்ட்ரெஸ்டிங்ஆ ஏதோ பார்த்துட்டு இருக்க?" - நிரு

"ஹா ஹா.
இதைபாரேன்"
என்று அவளது போனைக் கொடுக்க அதில் பிளேயரில் வடிவேலினதும் கோவை சரளாவினதும் ஒரு நகைச்சுவை காட்சி ஒன்றிட்கு இன்றைய கால பாடல் ஒன்று சேர்க்கப்பட்டிருந்த நகைச்சுவை வீடியோ ஓடிக்கொண்டிருக்க அதைப் பார்த்து இவளும் ஆர்ப்பாட்டத்துடன் சிரித்தாள்.

இவர்கள் இருவரினதும் சிரிப்பொலி அந்த தோட்டத்தை அலங்கரிக்க அப்பொழுது சரியாக விஜய்யின் கார் வந்து வாசலில் நின்றது. அதைப் பார்த்தவளின் முகம் மேலும் பிரகாசமாக,

"நிரு வா உள்ள போலாம்.
சித்தப்பா வந்திருக்காரு"
முகத்தில் புன்னகை மாறாமல் நிருவையும் அழைத்துக்கொண்டு தோட்டத்தில் இருந்து வந்தாள் நம் கதையின் நாயகி ரிதூ.

அவளின் முகத்தில் ஒட்டியிருக்கும் புன்னகையை ரசித்த வண்ணமே அவளை ஒரு கையால் அணைத்துக்கொண்ட விஜய் தர்ஷினியிடம் ஏதோ கண்ஜாடை காட்டிவிட்டு ரிதூவுடன் முன்னே உள்ளே செல்ல அவர்களுக்கு பின்னாலே கொஞ்சம் நேரம் கழித்து உள்ளே வந்தனர் மற்றைய இருவரும்.

சுவாரஷ்யமான முறையில் போய்க்கொண்டிருந்த உரையாடலின் இறுதியில் தனது கையில் இருந்த கவரை ரிதூவின் கைகளுக்கு இடம்மாற்றினான் விஜய்.

புரியாமல் தன் சித்தப்பாவைப் பார்த்த ரிதூவிற்கு அவர் சொன்ன பதில் ஒரு நிமிடம் அவளை திக்குமுக்காட வைத்தது. பதட்டத்தோடு தன் சித்தியைப் பார்க்க அவரோ பார்வையாலே இவளை தழுவிக்கொண்டிருந்தார்.

தற்போது தனக்கு ஆதரவாக இருக்கும் ஒரே ஜீவனாகிய தன் உற்ற தோழியாக பல மாதங்களாக மாறிப் போயிருக்கும் நிருவைப் பார்க்க அவளோ இவளைப் பார்த்து கட்டை விரலை உயர்த்திக்காட்டி கண்சிமிட்டினாள்.

தன் நாவு வறண்டு போய் தொண்டை இறுகியிருப்பது போல் உணர்ந்தவள் எச்சிலை விழுங்கிக்கொண்டு ஒருவாறு பேச ஆரம்பித்தாள்.

"சித்தப்பா...
எனக்கு..." -ரிதூ

அவள் என்ன பேசப்போகின்றாள் என்பதை முன்னதாகவே ஊகித்து வைத்திருந்த நிரு,
"ரிதூ நீ பேசாம இரு.
நா சொல்றேன்"
என்று பேச ஆரம்பித்த ரிதூவை நிறுத்தி தான் பேசினாள் நிரு.

இவர்கள் இருவருக்குமான பிணைப்பு அந்த அளவு விரிவடைந்திருந்தது.

"சித்தப்பா உங்க அன்பு மகள் என்ன சொல்ல போறாள் தெரியுமா,

சித்தப்பா! எனக்கு கல்யாணம் எல்லாம் வேணாம். நா இப்டியே இருந்துக்குறேன். எனக்குன்னு நீங்க எல்லாம் இருக்குறீங்க தானே.
இவ்ளோ நாள் இருந்த மாதிரி மீதி இருக்குற காலத்துளயும் இருந்துக்குறேன்.
ப்ளீஸ் சித்தப்பா. கல்யாணம் எல்லாம் வேணாமே. ப்ளீஸ்"
இதை ரிதூ சொல்லியிருந்தாள் எந்த இடத்தில் அழுத்தம் எந்த இடத்தில் திருத்தம் கொடுத்து திக்கித்திணறி சொல்லி முடித்திருப்பாளோ அதே தொணியில் சொல்லி முடித்தாள் நிரு.

மற்ற இருவரும் வாயை மூடி சிரிக்க நிருவை முறைத்த ரிதூவும் கடைசியில் அவர்களோடு சேர்ந்து சிரித்தாள்.

ரிதூவின் சிரிப்பைப் பார்த்தவள்,
"அவ்வ்வ்வ்.
சிரிச்சிட்டாள் சிரிச்சிட்டாள்.
நீங்க நடக்க வேண்டியத பாருங்க சித்தப்பா. பொண்ண நான் ரெடி பண்ணிட்றேன்."
என்று சிரித்துக்கொண்டே நிரு சொல்லி முடிக்க.

அவ்வளவு நேரம் அவர்களுள் ஒருவராக சிரித்துக்கொண்டிருந்த ரிதூவின் முகம் சட்டென்று சிரிப்பை நிறுத்தி மீண்டும் கலவரத்தை அப்பிக்கொண்டது.

"இல்ல சித்தப்பா.
இது...
இது சரிப்பட்டு வராது சித்தப்பா."
என்று கூறி விஜய்யின் கையில் மீண்டும் அவர் கொடுத்த கவரையே திணித்து விடப்பார்த்த ரிதூவின் கையை ஆதரவாக அழுத்திக்கொடுத்தவர்.

"ஹேய். இல்லடாமா...
ஒன்னும் அவசரம் கிடையாது.
நீ பொறுமையா முடிவெடு.
முதல்ல நல்லா யோசிடா.
நாங்க ரெண்டு பேரும் நம்மளோட கடைசி வர உன் கூடவே இருக்கலாம். அதுல நமக்கு எந்த பிரச்சினையும் கிடையாது.
அதுக்கப்புறம்?
அதுக்கப்புறம் என் பிள்ளைங்க ரெண்டு பேரும் பார்த்துப்பாங்க தான். ஆனா நமக்குன்னு ஒரு துணைனு வர்ற போ எல்லா உறவுகளை விடவும் கடைசிவர எங்க கூட அவங்க தான் இருக்க போறாங்க.
உனக்குன்னு நான் எனக்குன்னு நீனு சொல்லுவாங்க இல்லையா. அதுமாதிரி.
இது ஒன்னும் அதிசயமோ ஆச்சரியமோ இல்லடா.
உலக நியதி இது தான்.
ஆதாம்க்கு எப்டி ஏவாள கடவுள் படைச்சாரோ அப்டி தான்.
நம்ம ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பாட்னர கடவுள் நமக்காக படைச்சு தான் வெச்சிருக்காரு.
அப்படி அவங்க ரெண்டு பேரும் திருமணம் எங்குற பந்தத்தினால இணையுற போதான் அங்கு ஒரு முழுமை இருக்கு."
அவளிடம் சொல்ல வேண்டும் என்று தான் எதிர்பார்த்ததை ஒருவாரு நிறுத்தி நிறுத்தி சொல்லி முடித்தார் விஜய்.

தன் பேச்சை முடித்து ரிதூவின் முகத்தைப் பார்க்க அவளோ குழப்பத்துடன் கூடிய முகபாவனையோடு யோசனையில் இருந்தாள்.

தன் கையை அவளது தோளில் போட்ட விஜய்.
"லெக்சர் பண்ணி குழப்பி விட்டுட்டேனா டா?
நான் வேற."
என்று தனது தலையிலேயே மானசீகமாக தட்டிக்கொண்டவர்,

"நீ எதுவும் குழப்பிக்காம நல்லா யோசனை பண்ணி சொல்லு டா.
அவசரம் ஒன்னும் கிடையாது. ஓகே."

"ம்ம்ம்"
என்று எதற்கு தலையை ஆட்டுகிறோம் என்று ஒருநிலையில் இருந்து தலையை ஆட்டாமல் தலையை ஆட்டினாள் ரிதூ.

இடையில் நிரு டீ போட்டு கொண்டுவந்திருக்க அதை அருந்தியவர்கள் இவர்கள் இருவரிடமும் விடைப்பெற்றனர்.
நிருவும் நான் பார்த்துக்கொள்கின்றேன் என்ற ரீதியில் அவர்களுக்கு ஆதரவாக செய்கை செய்து ரிதூவோடு சேர்ந்து வழியனுப்பி வைத்தாள்.

நம் நாயகனுக்கும் அவனது தாய் வரன் தேட ஆரம்பித்திருக்கிறார். அதே வேளை நாயகிக்கும் அவளது சித்தப்பா மாப்பிளை தேட ஆரம்பித்திருக்கிறார்.

இவர்கள் இருவருமே வெவ்வேறு துருவங்கள். இயல்பிலும் சரி குணாதிசயங்களிலும் சரி. இவர்கள் இருவருக்கும் இப்பொழுது இருக்கும் ஒரே தொடர்பு முதலாளி தொழிலாளி என்ற தொடர்பு தான். இந்த தொடர்பு எவ்வாறு இவர்களை திருமண பந்தத்தில் இணைத்து வைக்கும். இதற்கு சந்தர்ப்பம் இருக்குமா? சந்தர்ப்பம் இருந்தாலும் இது சாத்தியமாகுமா?

மனிதனுக்கு அவனது அடுத்த விடியலே சந்தேகமாக இருக்க இந்த கேள்விக்கான விடையை என்னால் இப்பொழுது கண்டுபிடிக்க முயலவில்லை.

அன்றைய ஞாயிறில் தன் வீட்டின் முன் பகுதியில் இருக்கும் சோபாவில் சாய்வாக அமர்ந்திருந்த படி தன் போனை நோண்டிக்கொண்டிருந்தான் நவா எனப்படும் நவநீதன்.

"நீ எப்போ வந்த கண்ணா?"
கேட்டபடியே வந்து தனக்கு மறுபக்கத்தில் அமர்ந்த தாயின் மடிக்கு தன் தலையை மாற்றியவன் தன் வேலையை தொடர்ந்தான்.

அவனது தலைமுடியை கோதிவிட்டவாறே,

"எப்போ வந்தன்னு கேட்டேன்"
கொஞ்சம் சத்தமாகவே கேட்டார் நிகிழினி.

"ஓஓஹ்.
கேக்கலமா.
இப்போ தான். ஒரு பாஃய்வ் மினிட்ஸ் இருக்கும்." -நவா

"ம்ம்ம் ஆபிஸுக்கு போகணும்னு சொன்னியே" -நிகிழினி

"அங்க போய்ட்டு தான் வந்தேன்மா."

மகனின் குரலில் ஏதோ வித்தியாசம் தோன்ற இவ்வளவு நேரம் மகனின் தலையில் பணியில் இருந்த விரல்கள் தானாக வேலை நிறுத்தத்திற்கு செல்ல நவாவின் முகத்தை வேகமாக ஆராய்ந்தார் நிகிழினி.

அதே நேரம் இவர்களது வாசலில் ஒரு கார் வந்து நிற்க அதில் இருந்து சனாவும் நிஷ்மிதாவும் இறங்கினர்.

அண்ணனின் காரை முதலில் பார்த்த கடைக்குட்டி மெதுவாக வாசலிற்கு அருகில் வந்து உள்ளே எட்டிப்பார்த்தாள். கண்களை அகல விரித்தபடி தன் அக்காவிடம் திரும்பியவள்,

"நவாண்ணா இருக்கான் கா.
எங்க போய்ட்டு வரீங்கன்னு கேட்டா என்ன சொல்லணும்னு சொல்லி கொடு"
என்று தன் அக்காவின் கையை சுரண்டினாள் பாசமலர் தங்கை.

"ஹீ ஹீ. அதொன்னும் அண்ணா கேட்க மாட்டார். நீ வா"
ஏதோ ஒரு தைரியத்தில் தங்கையை உள்ளே அழைத்துச்செல்ல முற்பட்ட தன் அக்காவை நிறுத்தினாள் சின்னவள்.

"இப்போ என்ன?"
முறைத்த படியே கேட்டாள் சனா.

"எனக்கு பயமா இருக்கு" -நிஷ்மிதா

"ம்ம்ம் அப்டீங்குற?"
கேலியாக இதழ் பிதுக்கி கேட்டாள் பெரியவள்.

"யெஸ்" -நிஷ்மிதா

"ஓகே நவாண்ணா என்ன செஞ்சிட்டு இருக்கான்னு சொல்லு பார்க்கலாம்" -சனா

மீண்டும் ஒருமுறை உள்ளே எட்டிப்பார்த்தவள்,
"அம்மாவோட மடியில தலை வெச்சு தூங்கிட்டு இருக்கான்." -நிஷ்மிதா

"அப்போ நீ கவலையை விடு பேபி.
அவனுக்கு அவனோட கட்டில விட அம்மாவோட மடியில தான் நல்லா தூக்கம் போகும்.
யூ நோ, தவளைக்கு தன் வாயால் தான் கேடு. நீயும் கேள்வி பட்டிருக்க தானே.
பேசாம மூடிக்கிட்டு போஃலோ மீ"
என்றவள் முன்னே நடக்க அவள் பின்னாலே வாயை கையால் மூடிக்கொண்டு பூனை நடை போட்டு உள்ளே சென்றாள் சின்னவள்.

இவர்கள் உள்ளே சென்று அம்மாவுக்கு மட்டும் செய்கை செய்து விட்டு மெதுவாக மாடிப்படியை நெருங்க,

"சனா"
என்ற கண்டிப்புடன் கூடிய அண்ணனின் குரலை கேட்டு இருவருமே நின்றனர்.

கடைக்குட்டி முதலில் சுதாகரித்து,
"உன்னதான் இல்ல கூப்பிட்டான்.
ஹீ ஹீ. நான் எஸ்கேப்.
இதுக்கு தான் களவு செய்ய போகும் போது பிளட் செருப்பு போடணும்னு சொல்றது.
தவளைக்கு தான் தன் வாயால் கேடு.
சனாக்கு தன் செருப்பால் தான் கேடு.
நல்லா மாட்டிக்கிட்ட பேபி.
நான் வர்றேன்"

என்று அக்காவின் காதில் கேலியாக கிசுகிசுத்துவிட்டு மேலே செல்ல எத்தனித்து முதல் படியில் இவள் காலை எடுத்து வைத்த அதே வேளை,

"குட்டிமா... உன்னையும் தான்"

என்று அதே கண்டிப்புடன் கூறியவன், அம்மாவின் மடியில் இருந்து எழும்பி நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro