Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

11.அவனாக

விதியே அத்துடன் ஓய்ந்துவிட்டது போலும்... மேற்கொண்டு எந்தப் பேச்சும் பிரச்சனையும் வளர்க்கவில்லை இருவரும்.

ப்ரகதியின் தலைமையில் அவனது சவ்வு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

அவர்கள் ஆர்த்ரோஸ்கோப்பியில் கண்டதைப் போலவே தான் உள்ளிலும் இருந்தது. லேபராஸ்கோப்பி எனப்படும், நுண்துளை சிகிச்சை முறையைத் தான் அவனுக்குப் பயன்படுத்தி இருந்தாள் அவள். நாற்பது நிமிடங்களில் அவனது மூட்டின் சிதைந்திருந்த சவ்வை நீக்கிவிட்டு, செயற்கை பாலிமர் சவ்வை  அதனிடத்தில் பொருத்தியிருந்தாள். கைகள் நளினமாக நகர, நடன அசைவுபோல இலகுவாக அவனது சவ்வில் தையல்கள் இட்டாள்.

அவனைப் பற்றிய சிந்தனைகள் எதுவும் இன்றி, முழுக்க முழுக்க சிகிச்சையின் சிந்தனை மட்டுமே அவள் மனதில் வியாபித்திருந்தான. அவளைப் பொறுத்தவரை, அப்போது அவன் ஒரு உடல். மாற்று சிகிச்சை தேவைப்படும் ஒரு மூட்டு இருக்கும் உடல். அவ்வளவே.

சிகிச்சை முடிந்து அவனது சலனமற்ற முகத்தை அனிச்சையாக ஒரு நொடி பார்த்தாள். அவன் இன்னும் மயக்கத்திலேதான் இருந்தான். 'அப்ஸர்வேஷன்'இல் வைத்திருக்குமாறு கூறிவிட்டு நகர்ந்தாள் அவள்.
செவிலியர்கள் அவனது அறைக்கு அவனைக் கொண்டு சென்றனர்.

மணி ஐந்தானதும் தனது அறையில் அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு, பயோமெட்ரிக் வருகைப்பதிவேட்டில் கைரேகை பதித்துவிட்டு, உதவியாளரிடம் தேவையான கட்டளைகள் கொடுத்துவிட்டுக் கிளம்பினாள் அவள்.

"என்ன ஒரு நீளமான நாள்...இந்த நாள் இதைவிட மோசமாகவே முடியாது.." என மனதிற்குள் பேசிக்கொண்டே தன் ஸ்கூட்டரை அடைந்து, அதை உயிர்ப்பித்தாள்.

வாசலுக்கு வரும்போது, பெருங்கூட்டம் ஒன்று மருத்துவமனை வாயிலை அடைத்துக் கொண்டு நிற்க, சற்றே எரிச்சலுடன் செக்யூரிட்டியை அழைத்தாள் அவள்.

"என்ன நடக்குது அங்கே?"

"மேடம், நம்ம ஹாஸ்பிடல்ல நடிகர் நிவீஷ் அட்மிட் ஆயிருக்காருல்ல? அவரைப் பார்க்க டைரக்டர் சந்தோஷ்ராஜா வந்திருக்கார்"

அந்தப் பெயரைக் கேட்டதும் சட்டென வியந்தாள் அவள்.

அவரது படங்கள் எல்லாம் தான் கல்லூரியில் படித்தபோது பார்த்தது...

"டேய்... அந்த ஹீரோவோட கேரக்டரை எப்படி செதுக்கியிருக்காங்க பாரேன்..."

"அவனை மாதிரியே நானும் வந்து ப்ரொபோஸ் பண்ணட்டுமா?"

எண்ணங்களைத் தலையசைத்துக் கலைத்துவிட்டு, "சரி, எனக்கு ஒரு சின்ன வழி மட்டும் பண்ணிக் கொடுங்க..நான் போய்டறேன்" என்றாள் அவள்.

அவளை வினோதமாகப் பார்த்துவிட்டு, அவள் சொன்னதைச் செய்தார் அந்த செக்யூரிட்டி.

____________________________

சங்கர் அவனருகில் ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு, ஜன்னலைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

உள்ளே வந்த சந்தோஷ்ராஜா லேசாக செரும, அப்போதுதான் அவரைக் கவனித்த சங்கர் வேகமாக எழுந்து வந்து, "வாங்க சார்..இப்பதான் சர்ஜரி முடிஞ்சது. இன்னும் சாருக்கு மயக்கம் தெளியலை" என்றவாறு அவரை அழைத்துச் சென்று அமர வைத்தார். அவரெதிரில் பணிவாக நின்றார்.

"ம்...கொஞ்சம்கூட கவனமே இல்லையா அவனுக்கு? உயிர் போயிருந்தா திரும்ப வருமா? அட்லீஸ்ட், பத்து நிமிஷம் முன்னவே கிளம்பி இருக்கலாம்ல? எல்லாரும் கோடம்பாக்கத்தில் வீடு வச்சிருந்தா, இவன் மட்டும் பீச் ஹவுஸ் தான் வேணும்னு அங்க போய் இருக்கான். டைமுக்குக் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருந்தான்? நீயாவது நேரத்துக்கு கிளம்பச் சொல்லக்கூடாதா? நேரத்தை விட உயிர் முக்கியம்... மக்களுக்கு ரோல்மாடலா இருக்க வேண்டியவனே இப்டிப் பண்ணா எப்படி? இப்ப பாரு, நியூஸ் சானல்ல இருந்து விவாதமேடை வரை அவனைப் பத்திதான் பேச்சு... ஏன் தான் நல்ல இமேஜை நீங்களே இப்படிக் கெடுத்துக்கறீங்களோ!"

அவர் ஆற்றாமையில் பொறிந்து தள்ள, சங்கர் தலை கவிழ்ந்து நின்றிருந்தார்.

"சரி, எப்போ டிஸ்சார்ஜ்?"

"நாளைக்கு காலைல டாக்டர் வந்து செக்கப் பண்ணிட்டு, அப்றமா டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க சார்"

"ம். நல்லா கவனிச்சுக்கறாங்களா?"

"ம்.. நல்லாவே பாத்துக்கறாங்க சார். நல்ல கேர். இந்த ஹாஸ்பிடல்ல டீன்கூட இவரோட ரசிகர்தான்."

"பரவால்லயே!"

சிறிதுநேரம் சங்கரோட பேசிக் கொண்டிருந்தார் இயக்குநர். ஐந்தரை மணியளவில் அவன் கண் விழித்தான்.

"Congratulations, People's star! Now you've seen the best and the worst of a day!"

"ஹாஹா... வாங்க சார்.. எப்போ வந்தீங்க? "

"நான் வர்றது இருக்கட்டும்.. நீ எப்போ வர்ற, வெளியே?"

"நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்கனு நினைக்கறேன் .. Then, I'll be out of this hellhole."

"என்னய்யா...நல்லா கவனிக்கறாங்கன்னு சொன்ன? நிவீஷுக்கு பிடிக்கலை போலத் தெரியுதே?" என அவர் சங்கரைப் பார்த்துக் கேட்க, சங்கர் லேசாக சிரித்தவாறு,

"அது... ஒரு டாக்டர் மட்டும்..." என இழுத்தார்.

"என்ன, அன்புத் தொல்லையா? Fan torture எல்லாம் பாக்காம எப்டி superstar ஆக முடியும்? இதுக்கா சலிச்சுக்கற?"
நகைப்பாகக் கேட்டார் சந்தோஷ்ராஜா.

"ஏன் சார் நீங்க வேற... அவங்களுக்கு இவர் யாருன்னே தெரியல..."

நிவீஷின் கோபப்பார்வை அவரைத் தாக்க, வாக்கியத்தை முடிக்காமல் மௌனமானார் சங்கர்.

"என்னது? யாருன்னே தெரியலயா? அதுவும் மக்கள் நாயகன் நிவீஷை?!"
சந்தோஷ்ராஜா அவ்வளவு அதிர்ச்சியடைவதை அவர்கள் முதல்முறையாகப் பார்த்தனர்.

நிவீஷின் முகம் கோபத்தில் சிவந்தது. ஆனால் தான் இப்போது நலமாக இருப்பதற்குக் காரணம் அவள்தான் என உணர்ந்ததும் கோபம் சற்றே தணிந்து ஆற்றாமை எழுந்தது.

"உன்னைத் தெரியாம ஒருத்தர் தமிழ்நாட்டில, அதுவும் நம்ம சென்னைல... எனக்கு ஆச்சரியமா இருக்கு நிவீஷ்.. ஏன் அவங்களுக்கு உன்னைத் தெரியலையாம்? உன்னைத் தெரியலைன்னா, அப்ப என்னோட படமும் அவங்க பாக்கறதில்லைனு அர்த்தமா? இந்த அதிர்ச்சி பெருசா இருக்கே எனக்கு!!"

"அதெல்லாம் எனக்கும் தெரியாது சார்... சினிமா பாக்குற பழக்கமே இல்லைபோல..."

"ம்... இருக்கும்... இல்லைனா ஏதோ ரிவர்ஸ் சைக்காலஜியா இருக்கும்.. like, attracting someone by repelling them. எதுக்கும் நீ கவனமா இரு."

நிவீஷின் மனதுக்கு ஏதோ புரிந்ததுபோல் இருந்தது.

'அவள் என்னை ஈர்ப்பதற்காக நடிக்கிறாளா? அத்தனையும் வேஷமா? நான் திரும்பிப் பார்க்கவேண்டும் என்பதற்காக என்னிடம் முறைக்கிறாளா?'

"சரி, அவங்களைப் பத்தி எனக்கு என்ன... நான் வரேன்.. நீயும் சீக்கிரம் வந்து சேரு.. ஒழுங்கா இனிமே சீட் பெல்ட்டைப் போட்டு வண்டில உட்காரு. இந்த ரேசிங், அது இதுன்னு போறதை கொஞ்ச நாளைக்கு நிறுத்தி வை."

அவன் தோளை லேசாக அழுத்தி, தன் கரிசனத்தைத் தெரிவித்துவிட்டு, சந்தோஷ்ராஜா விடைபெற்றார்.

அவர் கிளம்பிப் போன பின்பு நிவீஷ் ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்தான். அவர் விட்டுச்சென்ற தனது விருதுகளை கொஞ்ச நேரம் தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்தான்.

பின் தன் கைபேசியை எடுத்தவன் ஏதோ மும்முரமாக அதை இயக்கினான். தனது விருதுகளுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டவன், பரபரவென ஏதோ தட்டச்சு செய்தான் கைபேசித் திரையில்.

சங்கர் ஏதும் பேசாமல் அவனருகில் அமர்ந்திருந்தார். அவருக்குத் தெரியும், தனது சமூக வலைத்தள ரசிகர்களுக்காக அவன் எடுக்கும் சிரத்தையைப் பற்றி.

டீன் மேத்தா ஒருமுறை வந்து அவனைப் பார்த்துவிட்டுச் சென்றார். கவனமாக ப்ரகதியைப் பற்றிப் பேசாமல் தவிர்த்தனர் இருவருமே. சங்கர் நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்தார்.

ஏழு மணிக்கு அவனுக்கு உணவு வந்தது. அவனுக்கு உணவைப் புகட்ட ஒரு செவிலியர் பெண் வந்திருந்தாள். அவனைத் தெரிந்திருந்ததால் ஒரு உற்சாகம் தெரிந்தது அவளது அசைவுகளில். அதில் லேசாகக் கர்வமானான் அவன். ஆனால் அதுவும் ப்ரகதியை நினைவுபடுத்த, கர்வ சிரிப்பு மறைந்து எரிச்சல்தான் ஏறியது முகத்தில்.

தானே சாப்பிட்டுக் கொள்வதாகச் சொல்லி, அச்செவிலியரை அனுப்பிவிட்டான். அப்பெண் சோகமாக விடைபெற்றுச் செல்ல, சங்கர் தலையசைத்துவிட்டுக் கதவடைத்தார்.

அமைதியாக உணவருந்திவிட்டு மீண்டும் தன் ஸ்மார்ஃபோனில் மூழ்கினான் அவன். சங்கரும் உணவருந்திவிட்டு, அவரது பணிகளில் லயித்தார்.

அன்றைய இரவு வேறு சிக்கல்களின்றிக் கழிந்தது, அடுத்தநாள் நடக்கப்போகும் புயலுக்கு முன் அமைதியாக...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro