7
முகங்கள்
சென்னையின் மிகப்பெரிய மேலாண்மைக் கல்லூரிகளில் "Wisdom institute of management "ம் ஒன்று. சில வருடங்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது என்றாலும், குறுகிய காலத்திலேயே அதீத வளர்ச்சி கண்ட அக்கல்லூரி, தற்போது இந்தியாவின் தலைசிறந்த ஐம்பது தொழில் மேலாண்மைக் கல்லூரிகள் பட்டியலில் இடம் பிடித்துவிட்டது.
மஹிமாவுக்காக ராஜகோபால் தேர்ந்தெடுத்தது அந்தக் கல்லூரி தான். தன் மகளுக்கு அனைத்தும் சிறந்ததாகவே அமையவேண்டும் என மெனக்கெடுபவர், கல்லூரியை மட்டும் விடுவாரா என்ன? தனது நிறுவன மேலாளர்கள் அனைவரையும் கருத்துக் கேட்டு, ஆராய்ந்து, ஆயிரம் கல்லூரிகளை சலித்தெடுத்து, அதில் சிறந்ததென இதைத் தேர்ந்தெடுத்தார். மஹிமாவும் கேட்டதுமே சம்மதம் தெரிவித்துவிட்டாள்.
கல்லூரியும் மஹிமாவின் மதிப்பெண்களைக் கண்டவும் அவளைக் கைநீட்டி அழைத்துக்கொண்டது. ஏற்பாடுகள் எல்லாம் முடிந்து, முதல்நாள் கல்லூரிக்குச் செல்லவும் தயாராகி வந்தாயிற்று.
தன் மகள் வருங்காலத்தை நோக்கி எட்டுவைத்துச் செல்ல, அவள் கேட்டின் உள்ளே செல்லும்வரை பார்த்துவிட்டு, திருப்தியுடன் நகர்ந்தார் அவர்.
மஹிமா கல்லூரியை சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே மெதுவாக நடந்து சென்றாள். முந்தைய நாளே அவளைத் தொடர்புகொண்டு 'administration block' வந்து தனது வகுப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தனர் நிர்வாகத்தினர். அதை நினைவில் கொண்டு அவள் அந்தக் கட்டிடத்தைத் தேடிக்கொண்டு நெருங்க, அங்கே தெரிந்தது...
பல ஆண்டுகள் பரிச்சயமான முகம்... நாள்தோறும் பார்த்துப் பார்த்துப் பழகிய முகம்.
ஆம். விஷ்வாவேதான்!
மஹிமாவுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை.
யாரும் கவனிக்கிறார்களா என்றுகூடத் திரும்பிப் பார்க்காமல், ஓடிச்சென்று அவனிடம் நின்றாள் அவள். முகத்தில் ஆச்சரியம், மகிழ்ச்சி, பரபரப்பு. அனைத்தையும் விட குழப்பமும் கேள்விகளும்.
"விஷ்வா....எப்படி விஷ்வா?"
குறும்பாகச் சிரித்தான் அவன்.
"மறந்துட்டியா? நீதான ஃபோன் பண்ணி இந்த காலேஜ்ல சேரப் போறேன்னு சொன்ன"
"ஆமா... ஆனா அப்பக்கூட நீயும் வர்ரேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லலையே"
"அட, எனக்கும் தெரியாது... நீ சொன்னதை அண்ணன் கிட்ட சொன்னேன். அவர் நேத்து வந்து எனக்கும் இங்கயே சீட் வாங்கிட்டேன்னு சொல்றார்... ஹூம்.. என்னத்த பண்ண!"
"ஹே....ரொம்ப தான் அலுத்துக்கற... எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா?"
உண்மையிலேயே அவள் முகம் ஆனந்தத்தில் மின்னியது. அதை அவனும் கவனிக்கத் தவறவில்லை. சிரிப்புடன் ஆமோதித்தான் அவன்.
"சந்தோஷம்தான் எனக்கும். திக்கற்ற காட்டில ஒரு துணை கிடைச்சுதே.. இங்கயும் உன்னைப் பார்த்து எழுதியே பாஸாகிடலாம்!"
சிரித்துக் கொண்டே இருவரும் உள்ளே சென்று தங்கள் சேர்க்கையை உறுதி செய்து பாடநூல்கள் மற்றும் பாட அட்டவணைகளை வாங்கிக் கொண்டனர். இருவருக்கும் ஒரே நேர அட்டவணை.
"முதல் க்ளாஸே World Economy. சீக்கிரம் வா விஷ்வா.. க்ளாஸ் நம்பர் 204. அப்டினா ரெண்டு மாடி ஏறணும்.."
"வா போலாம்"
அவர்கள் வகுப்பைத் தேடி நகர்கையில் அவர்களோடு மேலும் சிலர் சேர்ந்துகொண்டனர். அவர்களும் அதே வகுப்பு. ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொண்டே நடந்து வகுப்பிற்கு வந்தனர். 'ரஞ்சனா, ஆதீஷ், ப்ரதிபா,சித்ரா,மதன்' என மனதிற்குள் அவர்கள் பெயரை மனப்பாடம் செய்துகொண்டாள் மஹி.
வகுப்பை அடைந்ததும் அவள் பின்பக்க இருக்கைகளை நோக்கிச் செல்ல, விஷ்வா அவளைக் கைப்பிடித்துத் தடுத்து, இரண்டாவது பெஞ்சில் அமர வைத்தான். இருவரும் அமர்கையில், அவர்களுக்குப் பின்னால் இருந்தவர்கள் ஏதோ குசுகுசுவெனப் பேசிக்கொள்வதும் தங்களுக்குள் சிரித்துக்கொள்வதும் கேட்டது.
"விஷ்வா.."
"என்ன?"
"இல்ல.. ஏதோ கிசுகிசுன்னு பேசறாங்க எல்லாரும். இதுவும் ஸ்கூல் மாதிரி தான் போல. ஒன்னா உட்கார்ந்தா ஏதும் சொல்லப் போறாங்க."
"அப்டியா?"
அப்போதுதான் தங்களுக்குப் பின்னால் திரும்பிப் பார்த்தான் விஷ்வா. வகுப்பறையின் இருக்கைகள் ஆண்களுக்கு ஒரு வரிசை, பெண்களுக்கு ஒரு வரிசை என்றிருந்தது. இவனோ பெண்களோடு அமர்ந்திருந்தான். அசடு வழியச் சிரித்துக் கொண்டே அவன் எழுந்து செல்ல, இவளும் சோகமாய்ப் புன்னகைத்தாள்.
பத்தாம் வகுப்பு வரை விஷ்வா, மஹிமா, ஜோஷி மூவரும் சேர்ந்தேதான் அமர்ந்திருப்பர். அவர்களுக்கென்றே அந்த முதல் பெஞ்ச் எழுதி வைக்கப்பட்டிருந்தது. படித்தாலும் படிக்காவிட்டாலும் எப்போதும் center of attention ஆக இருக்கவேண்டும் என்பது விஷ்வாவின் எண்ணம். முன்வரிசையில் அமர்ந்துகொண்டு ஆசிரியர்களுடன் சம்பாஷிப்பது அவனது விருப்பமான பொழுதுபோக்கு. மஹிமாவிற்கோ, அழைத்ததும் ஓடிச்சென்று கரும்பலகையில் கணக்குகள் போட்டுப் பாராட்டு வாங்க முதல்வரிசை தேவைப்பட்டது. ஜோஷிக்கோ வகுப்பு முடிந்ததும் வீட்டுக்கு ஓட முதல்வரிசை ஓர சீட் உதவியாக இருந்தது.
இன்று தனியாக முதல் வரிசையில் அமர்ந்திருந்தபோது ஜோஷியின், வேணியின் நினைப்பு வந்தது இருவருக்குமே.
அடிக்கடி இருவரும் ஒருவரையொருவர் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்துக் கொள்ள முடிந்ததால் கொஞ்சம் சமாதானமானாள் அவள். வகுப்புகள் முதல்நாள் பெரிதாக இருக்கவில்லை. அறிமுகப் படலம்தான் நடந்தது பெரும்பாலும்.
அன்றைய தினம் இனிதே முடிந்தது. ரஞ்சனா, பிரகாஷ், ஆதிஷ் அனைவரும் விஷ்வாவின் தோழர்களாய் ஆகிப்போனார்கள். மஹிமா அனைவரிடமும் பட்டும் படாமல் பேசினாள். ஆசிரியர்கள் அனைவரும் இயல்பாகப் பேசினர்.
மஹிமாவுக்கு அந்நாள் பிடித்திருந்தது. அதிலும் எதிர்பாராத சந்தோஷமாக விஷ்வாவும் தன்னுடன் சேர்ந்திருந்தது பிடித்திருந்தது.
மாலை ஐந்து மணிக்கு நண்பர்களிடம் விடைபெற்று கல்லூரி வாசலுக்கு வந்தனர் மஹிமாவும் விஷ்வாவும்.
மஹிமாவுக்காக அவள் அப்பா காரில் காத்திருந்தார். அவரைக் கண்டதும் வேகமாக ஓடி வந்தாள் அவள்.
"எப்பப்பா வந்தீங்க? ரொம்ப நேரம் ஆயிடுச்சா?"
"இல்லம்மா... இப்போ தான் வந்தேன். Office roomக்கு ஃபோன் பண்ணிக் கேட்டுட்டுதான் வந்தேன். காலேஜ் எப்படி இருந்தது?"
"அப்பா, நீங்க நம்ப மாட்டீங்க! என்கூட யாரு வந்தா தெரியுமா?"
அதற்குள் விஷ்வாவே அங்கு வந்தான்.
"ஹாய் அங்கிள். நல்லா இருக்கீங்களா?"
"அடே... விஷ்வா! நீயும் இங்கதான் சேர்ந்திருக்கயா?"
"ம்ம்.. ஆமா அங்க்கிள்"
புன்னகையுடன் சொன்ன விஷ்வாவைப் பார்த்து பதிலுக்குப் புன்னகைத்தார் அவரும்.
"வீட்டில எல்லாரும் எப்படி இருக்காங்க?"
"ம்.. ஃபைன் அங்க்கிள்."
"நீயும் வா விஷ்வா. கார்லயே போலாம்" மஹிமா உரிமையோடு அவனை அழைத்துக்கொண்டு காரில் ஏறி அமர்ந்தாள். ஏதும் கூறாமல் அவனும் ஏறிக் கொண்டான். ராஜகோபால் தலையசைத்ததும் ஓட்டுனர் காரை ஸ்டார்ட் செய்தார்.
"எப்படி விஷ்வா இந்த காலேஜ் வந்த?"
தன் சீட்டிலிருந்து தலையைத் திருப்பி விஷ்வாவைப் பார்த்து வினவினார் ராஜகோபால்.
விஷ்வா தோளைக் குலுக்கினான்.
"என்ன படிக்கறதுன்னு அண்ணா கிட்ட கேட்டேன், அவர்தான் பிஸினஸ் மேனேஜ்மெண்ட் படிக்க அட்வைஸ் பண்ணார். நாலைஞ்சு காலேஜ்ல அப்ளை பண்ணோம் அங்க்கிள். இங்கதான் உடனேயே கிடைச்சுது"
"ஹ்ம்.. காலேஜ் பிடிச்சிருக்கா? ப்ளேஸ்மெண்ட் பத்தியெல்லாம் விசாரிச்சியா?"
"அப்பா.. ஃப்ரீயா விடுங்க அவனை! அவனைப் பாத்துக்க அவங்கண்ணா இருக்கார், எனக்கு நீங்க இருக்கற மாதிரி! அப்டிதானே விஷ்வா?"
அவன் சிரித்தான்.
அவனது வீட்டருகே அவனை இறக்கிவிட்டு கார் நகர, வெளியே தலைநீட்டி, சிரிப்புடன் கையசைத்தாள் மஹிமா. அவளுக்குக் கையசைத்துவிட்டு வீட்டிற்குள் வந்தான் அவன்.
மனதில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள்... முகத்திலும் பலவித உணர்ச்சிகள்...
பிரதானமாக சிரிப்பு...
மற்றுமொறு இனங்கான முடியா மகிழ்ச்சி.
விஷ்வா... நினச்சதை சாதிச்சுட்ட!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro