Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

16

நகரும் நதிகள்

'எங்கே தவறு செய்தோம்?'

யோசித்து யோசித்து மண்டை வெடிப்பது போலிருந்தது அவளுக்கு.

'என்ன பேசினோம்? ஏன் அவன் கோபப்பட்டான்? எதற்காக கொஞ்சமும் தயக்கமின்றி அத்தகைய வார்த்தைகளை நம்மீது கொட்டினான்? இது அவனது முன்கோபமா? இல்லை நிஜ சொரூபமா? இதுதான் அவனா? நாம்தான் கவனிக்கவில்லையா?

பேருந்தில் எப்படியோ ஏறி வீட்டு நிறுத்தத்தில் இறங்கும் வரை எல்லாம் அவளுக்கு இயந்திரத்தனமாக நடந்தது. காட்சிகள் எதுவுமே மூளையில் பதியாமல் மங்கலாகவே இருந்தன. வீட்டை நெருங்க நெருங்க, அவளது உணர்ச்சிகள் பீறிட்டு எழுந்தன. தான் உயிருக்குயிராக நம்பிய, நேசித்த ஒருவன், தன்னை ஒரு கணத்தில் தூக்கியெறிந்ததை அவளால் தாங்க முடியவில்லை.

பங்கஜம் அம்மாளுக்கு பதிலளிக்காமல் வேகமாய்ச் சென்று கட்டிலில் விழுந்தாள் அவள்.

அழுகையோடு அவள் மனதும் கரைவதுபோல் இருந்தது. பங்கஜம் அம்மாள் அவளருகில் ஆதரவாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

என்னாச்சு என்று அவர் கேட்க, அவள் நா வரையில் வந்த பதில்,

"துரோகம்"

ஏதும் பேசாமல் அவள் அழுதுகொண்டே இருந்தது பங்கஜம் அம்மாளைக் கவலையில் ஆழ்த்தியது.

அவள் அப்பாவுக்குத் தெரிந்தால் அவரும் வருத்தப்படுவார். முடிந்தவரை அவளது அழுகைக்கான காரணத்தை அகற்ற, அழிக்க முயன்றிடுவார். ஆம், தன் மகளை இப்படிக் கரைய வைத்ததன் காரணம் அறிந்தால்...

ஆனால் இவள் என்னவென்று சொல்லவேண்டுமே!

மஹிமா கொஞ்ச நேரம் அழுது கொண்டிருந்தாள். திடீரென்று எழுந்து சென்று அலமாரியில் இருந்து தன் கதைநோட்டை எடுத்தாள். அதை நூறுதுகளாகக் கிழித்து எறிந்தாள்.

'இல்லை... காதல் இதில் இருப்பதுபோல் இல்லை!!  இனிமைகளும் இன்பங்களும் மட்டும் இருக்குமென்பது பச்சைப் பொய்!! அத்தனையும் வேஷம்! காதல் பொய், காட்சிகள் பொய், அவ்வளவும் பொய்!!'

அழுது அழுது கண்ணீர் தீர்ந்துபோனது அவளுக்கு.

கொஞ்சம் ஆசுவாசமானாள் மஹிமா. அவளால் இப்போது கொஞ்சம் தெளிவாக சிந்திக்க முடிந்தது.

'நாம் என் நம் வாழ்க்கையை, நம் மனதை வேறொருவன் கையில் தந்துவிட்டு அவன் அதை உடைக்காமல் வைத்திருப்பான் என நம்பினோம்? நமக்கு விலைமதிப்பற்றதாகத் தெரியும் நமது காதல், மதிப்பு, மரியாதை எல்லாம் அவனுக்குத் துச்சமாகத் தெரிந்ததா?
தேவையில்லை மஹிமா. இதுபோலெல்லாம் காதல் தேவையில்லை. இந்த toxic relationship நமக்குத் தேவையில்லை. '

முடிவெடுத்தவளாய் எழுந்து வந்து பங்கஜம் அருகில் அமர்ந்தாள். அவர் இன்னும் கரிசனமாகப் பார்த்தார்.

"என்ன ஆச்சு பாப்பா? எனக்குப் பயந்து பயந்து வருது.. சொல்லும்மா.."

கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டே அவரிடம் பேசினாள்.
"ஏம்மா.. நான் ஒண்ணு சொன்னாக் கேப்பீங்களா?"

"என்னடா?"

"அப்பாகிட்ட இங்க நடந்தது எதையும் சொல்லாதீங்க"

"என்ன பாப்பா சொல்ற?? ஏன் அப்பாட்ட சொல்ல வேணாம்?"

"நான் ஏதோ மூட் ஆஃப்ல இருந்தேன்... அவ்ளோதான் மா. இத நீங்க அப்பாகிட்ட சொன்னா அவரு ஏதேதோ நினைச்சுகிட்டு ஃபீல் பண்ணுவாரு.. அதான், சொல்ல வேணாம்."

"மூட் ஆஃபா? அதுக்கா இப்டி காலேஜ்ல இருந்து ஓடி வந்து படுத்துக்கிட்டு அழுத?"

அவர் மீண்டும் நடந்ததை ஞாபகப்படுத்த, கண்ணீர் மறுபடியும் எட்டிப் பார்த்தது.

"அது... காலேஜ்ல கொஞ்சம் டென்ஷன். அங்க இருந்தா இன்னும் அதிகம்தான் ஆகும்... அதான், கிளம்பி வந்துட்டேன்."

அவர் நம்பிவிட்டார். தலையில் அடித்துக்கொண்டு சிரித்தார் அவளைப் பார்த்து.

"நல்ல பொண்ணு தான் போ... நான் ரொம்ப பயந்துட்டேன், என்னவோ ஏதோன்னு!"

சோகமாகப் புன்னகைத்தாள் அவள்.

"சரி... அய்யா கிட்ட சொல்லல. போதுமா? நீ ஃப்ரெஷ் ஆகிட்டு வா. டிபன் எடுத்து வைக்கறேன். முகத்தைக் கழுவு நல்லா!"

"ஹ்ம். தேங்க்ஸ் மா"

நினைவுகளைத் தலைமுழுக குளியலறை நோக்கிச் சென்றாள் அவள்.

-------------

விஷ்வா.

அவள் விட்டுச் சென்ற குளிர்பானக் கோப்பையைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் அவன்.

'அவசரப்பட்டுவிட்டோமோ?'

உடனே அவன் புத்திக்குள் கோபக் குரலொன்று கேட்டது,
'உன்னைப் பொறுப்பில்லாதவன்னு சொன்னாளே? அவளுக்காகவா யோசிக்கற?'

'என்ன இருந்தாலும் அவள் என் மஹிமா இல்லையா? அவளிடம் எதற்குக் கோபம்? எல்லாரும் சொல்லும்போது வராத கோபம் அவளிடம் மட்டும் ஏன்?'

'மற்றவர்கள் உன்னைப் புரிந்துகொள்ளா விட்டால் பரவாயில்லை. நீ காதலிக்கும் பெண்ணும் கூட அப்படிப் பேசலாமா?'

விஷ்வா வகுப்பிற்கு வந்தபோது அங்கு மஹிமா இல்லை. எங்கே போனாளென யாருக்கும் தெரியவில்லை. கொஞ்சம் துணுக்குற்றான் அவன். அவளை அழைக்கலாம் என்று அலைபேசியை எடுக்கையில் பேராசிரியர் வந்துவிட, அதை பாக்கெட்டில் வைத்துவிட்டு வகுப்பில் நிலைகொள்ளாமல் அமர்ந்திருந்தான்.

வகுப்பு முடிந்ததும் எழுந்து வந்து அவசர அவசரமாக அவளுக்கு அழைத்தான் அவன்.

மூன்று ரிங்... நான்கு ரிங்... இணைப்புத் துண்டிக்கப்படும் ஓசை.

மீண்டும் மீண்டும் அவளுக்கு அழைக்க முயன்று தோற்றான் அவன்.

அவன் மனக்குரல் மீண்டும் ஒலித்தது குரோதமாய்.
'இன்னும் எவ்வளவு தூரம் இறங்கிப் போவாய் விஷ்வா?'

அதை சட்டை செய்யாமல், வாட்ஸ்ஸாப்பில் குறுஞ்செய்திகள் அனுப்பிப் பார்த்தான். கெஞ்சல், கொஞ்சல், மன்னிப்பு... ம்ஹூம். அவள் கையில் கைபேசி இல்லை போலும் என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு கல்லூரியை விட்டு வீட்டிற்கு கிளம்பினான்.

வீட்டை அடைந்தபோது அம்மா வாசலில் நின்றிருந்தார்.

"வாடா நல்லவனே... ரெண்டு வாரத்துல அண்ணாவுக்கு கல்யாணம்டா. இன்னும் நம்ம ட்ரெஸ், நகை எதுவும் எடுக்கப் போகல.. உங்க அண்ணன்கிட்ட கேட்டா தம்பிகிட்ட கேட்டு அவன் ஃப்ரீயா இருக்கும்போது போலாங்கறான். நீ எப்ப ஃப்ரீயாகறது, நம்ம எப்ப ஷாப்பிங் போகறது? எப்ப தான்டா வேளை வரும் தொரைக்கு?"
அவன் நிலை புரியாமல், அவனது அம்மா அன்னபூரணி பொரிந்து தள்ளினார்.

வழக்கம்போல் ஏதும் பேசாமல் தன் அறைக்குச் சென்றான் அவன். கை மீண்டும் தானாகவே கைபேசியில் அவளை அழைக்கத் தொடங்கியது. மஹிமா இல்லாமல் மூச்சுகூட கனமாக இருந்தது. அவளிடம் கொஞ்சம் பேசினால் தேவலாம் போலிருந்தது. ஏக்கமாக அலைபேசியைக் காதில் வைத்துக் காத்திருந்தான்.

இப்போது ஸ்விட்ச் ஆஃப் என்றது கணினிக் குரல்.

எரிச்சலில் அதை படுக்கை மீது எறிந்துவிட்டு, தலையைக் கைகளில் பிடித்துக்கொண்டு நின்றான். என்ன செய்வதெனப் புரியவில்லை. புத்தக மேசையில் மஹிமா வாங்கித்தந்த வாழ்த்து அட்டைகளைப் பார்த்தவன் கோபமாக அவற்றைக் கிழித்து வீசி, புத்தகங்களையும் கீழே தள்ளி விட்டான்.

சத்தமாகக் கத்தித் தன் கோபத்தை வெளியேற்ற முயற்சிக்க, அப்போது சட்டெனக் கதவை திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பினான் அவன்.

சர்வேஸ்வரன் நின்றுகொண்டிருந்தார். கண்களில் கரிசனம்.

அவரைப் பார்த்ததும் அவன் திகைக்க, அவரோ அமைதியாக உள்ளே வந்து கதவை மூடிவிட்டு அவனிடம் வந்தார். அவன் தோளில் கைவைத்தார்.

"என்ன நடக்குது விஷ்வா?"

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro