Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

8

அடுத்த சில நாட்கள் வெகுவேகமாகக் கழிந்தன. மகதிக்குக் காய்ச்சல் விட்டிருந்தது. ஆனாலும் இன்னும் சோர்ந்துதான் இருந்தாள். மாறன் முழுநேரமும் எங்கேயும் போகாமல் மகதியைக் கண்ணில் வைத்துப் பார்த்துக்கொண்டான். கீர்த்தி பெரும்பான்மையான நேரத்தை மகதியோடு பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் செலவிட்டாள், அவ்வப்போது கிடைக்கும் மாறனின் காபிக்காக ரகசியமாக ஏங்கியவாறு.

அன்று சனிக்கிழமை என்பதால் சற்றே நேரங்கழித்து எழுந்தவள், காலை உணவை முடித்துக்கொண்டு மகதியிடம் சென்றாள். மாறனும் மகதியும் சோபாவில் அமர்ந்து ஏதோ திரைப்படம் பார்த்துக்கொண்டிருக்க, அவள் வந்ததும் இருவருமே திரும்பிப் புன்னகைத்தனர். மகதி எழுந்து ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டாள்.
"அது நின்னுபோயிடுச்சு கீர்த்தி. வலியும் போயிடுச்சு!"

அனிச்சையாகவே அவள் நெற்றியில் முத்தமிட்டவள், "சூப்பர். தலைக்கு குளிச்சிடு, உடம்பு சூடு குறையும்" என்றுவிட்டு அவளுடன் உள்ளே வந்தாள்.

மாறனிடம் திரும்பியவள், "சீர் வைக்கிற சம்பிரதாயத்துல எல்லாம் நம்பிக்கை இருக்கா..?" என வினவ, அவன் தோளைக் குலுக்கினான்.

"எங்க அம்மாவுக்கு தான் சடங்கு சம்பிரதாயம் பத்தியெல்லாம் தெரியும். எனக்கு எதுவும் தெரியாது"

"சரி.. சாமி கும்பிடற பழக்கம்..?"

"முன்ன இருந்தது. இப்ப இல்ல"

ஏனெனக் கேட்கவில்லை கீர்த்தி. மகதியைத் திரும்பிப் பார்த்தவள் மீண்டும், "நான் வேணா மகதியை மட்டும் வெளிய எங்கயாச்சும் அழைச்சுட்டு போகட்டா? அவ மனசுக்கு இப்ப பாஸிட்டிவிட்டி நிறைய தேவைப்படும்" என்றாள்.

மகதியும் ஏக்கமாய் அவனைப் பார்க்க, மாறன் தலையசைத்தான். "நானுமே வர்றேன். பக்கத்துல இருக்கற பார்க்குக்கும், அப்படியே மார்க்கெட்டுக்கும் போயிட்டு வந்துடலாம்"

"ஹைய்யா!!"

மகதி உற்சாகமாகக் கத்திக்கொண்டே அவளது அறைக்குச் செல்ல, அவளை வாஞ்சையாகப் பார்த்துவிட்டு மாறனிடம் திரும்பினாள் அவள்.

"ஒரு வாரம் வேலைக்கு மட்டம் போட்டுட்டியே.. மறுபடி சேர்த்துக்குவாங்களா?"

மாறன் தோளைக் குலுக்கினான்.
"வேலைய விட்டுத் தூக்கிட்டாங்க"

கீர்த்தி அதிர்ந்தாள். ஏதோ சொல்லத் தொடங்கியவளிடம் கதவைக் கண்ணால் காட்டி மெல்லமாகப் பேசுமாறு சைகை காட்டினான் மாறன்.

அவளும் கிசுகிசுக் குரலில், "என்ன சொல்ற!? இப்ப காசுக்கு என்ன பண்ணுவ மாறா? மகதிக்கு இனிமேல்தான் நல்ல சத்தான ஆகாரமா வாங்கித் தரணும். சாப்பாடுமே அளவு அதிகமாக தேவைப்படுமே... வேற வேலை தேடிட்டியா இல்லையா?" என அடுக்க, அவன் பெருமூச்செரிந்தான்.

"மகதிக்காக சம்பாரிக்கணும்ன்ற ஒரே காரணத்துக்காக தான் அந்த வேலைல இருந்தேன். இப்ப அவளைப் பார்த்துக்கவே லீவு கிடைக்கலைன்னா எப்படி அந்த வேலைல இருக்கறது? பாத்துக்கலாம்.. இந்த மாசத்துக்கு சாப்பிட கைவசம் காசு இருக்கு. நான் சாப்பிடாம இருந்தா அவளுக்கு வேண்டியதை வாங்கிக்கலாம் தானே?"

கீர்த்தி கண்கலங்கி அவனைப் பார்த்தாள். அதற்குள் மகதி வெளியே வர, கண்ணாலேயே அவளை அமைதியாக இருக்கும்படி எச்சரித்துவிட்டு, உற்சாகமான சிரிப்புடன் மகதியிடம் சென்றான் அவன்.

***

நான்கு நாட்கள் கடந்திருந்தன. மகதி மீண்டும் பள்ளிக்கூடம் செல்லத் தொடங்கியிருந்தாள். கீர்த்தி வழக்கம்போல அலுவலகம் சென்று வந்தாள். மாறன் சென்னையின் அடித்தட்டுக் கம்பெனிகளில் வேலை தேடிக் கொண்டிருந்தான் இராப்பகலாக.

அன்று புதன்கிழமை. கடைசி நேர்காணலும் நேரவிரயமாக முடிய, சோர்வாக மாலை நான்கு மணியளவில் மாறன் வீடு திரும்பியபோது, அவர்கள் வீட்டுக் கதவு திறந்து கிடந்தது, உள்ளே அரவமின்றி.

'வந்ததும் உள்பக்கம் பூட்டிக்க சொன்னனே.. மறந்துட்டாளா மகதி?'

வீட்டினுள் நுழைந்தவன் சந்தேகமாகத் தேட, மகதியோ தென்படவில்லை எங்கும்.

"மகதி!! மகதி!!"

வீடே அதிரும்படி கத்திக்கொண்டு பரபரப்பாக அவன் வந்து கீர்த்தியின் வாசல் அழைப்பு மணியை அடிக்க, புரியாத பார்வையுடன் வந்து கதவைத் திறந்தாள் அவள்.

அவளது நெற்றியிலும் கூந்தலிலும் வெண்ணிறத்தில் மாவுத் துகள்கள் அப்பியிருக்க, கைகளிலும் பிசுபிசுப்பாக ஏதோ இருந்ததைக் கண்டான் மாறன்.

"என்ன வேணும்?"

அவளை மட்டும் அங்கே கண்டவன் திகைத்த முகத்தோடு, "மகதி..? மகதி எங்கே?" என்றான் பயந்த தொனியில்.

கீர்த்தி அப்பாவித்தனமாகத் தலையாட்டினாள் இல்லையென.

"இங்க வரலியே.."

ஒருகணத்தில் அவன் முகம் பயத்தில் வெளிறிப்போய் கண்ணெல்லாம் கலங்கிவிட்டது. குரலும் நடுக்கமாகி, "கீர்த்தி... மகதிய வீட்ல காணோம்.. எங்க போனானு தெரியல.. இப்ப என்ன பண்ணுவேன் நான்..?" எனக் கேட்டான் நாத்தழுதழுக்க.

கிட்டத்தட்ட அழுதுவிடும் நிலைக்கு வந்திருந்தவனை அதிசயமாகப் பார்த்து ஒருநொடி நின்றாள் கீர்த்தி.

மறுகணம் அவன் கரத்தை வலியப் பிடித்து வீட்டினுள் இழுக்க, சற்றே திகைத்து உள்ளே வந்தவன் சமையலறைத் திரைச்சீலையின் பின்னால் நின்று சிரித்துக்கொண்டிருந்த மகதியைக் கண்டதும் மீண்டும் அதிர்ந்தான்.

கீர்த்தி மன்னிப்பு வேண்டும் பார்வையுடன் அவனை ஏறிட்டாள்.

"சும்மா விளையாடலாம்னு மகதி சொன்னா... ஐடியா நல்லா இருந்துச்சு, ஆனா நீ இப்படி அழுமூஞ்சியா இருப்பனு நாங்க நினைக்கல!"

அவளுக்கு பதில் சொல்லாமல் ஓடிச்சென்று மகதியை அணைத்துக்கொண்டு பெருமூச்சு விட்டான் அவன். கீர்த்தி வேகமாகச் சென்று ஒரு டம்ளரில் தண்ணீர் கொண்டுவந்து தந்தாள் அவனுக்கு. மகதியும் சிரிப்பை விடுத்து மன்னிப்பாக அவனைப் பார்த்தாள்.

"சாரிண்ணா.. சும்மாதான் செஞ்சேன். நீ இப்டி பயப்படுவன்னு தெரியாது.."

"எப்படி பயப்படாம இருப்பேன்? வீட்டைத் திறந்துபோட்டுட்டு நீ பாட்டுக்கு காணாம போயிட்டா, நான் என்ன பண்ணுவேன்னு நினைச்ச?"

இன்னும் தெளியாத ஈரக்குரலிலேயே அவன் கேட்க, கீர்த்திக்கு ஏனோ அவனை அருகில்சென்று ஆறுதல்படுத்த வேண்டும்போல இருந்தது. தனக்குள் திகைத்துப்போனாள் அவள்.

எண்ணங்களைப் புறந்தள்ளி லேசாக செருமியவள், "ம்க்கும், மாறன்.. நீ அழுது முடிச்சிட்டன்னா கொஞ்சம் மகதியை விடறியா? கேக் செய்யலாம்னு மாவை கலக்க ஆரம்பிச்சு, இப்ப பாதி வேலைல நிக்குது. மகதி வந்துதான் மீதிய செய்யணும்" என்றிட, மாறன் மகதியை விடுவித்துவிட்டுக் கலங்கியிருந்த கண்களைத் துடைத்துக்கொண்டான்.

"கேக்கா..? என்ன விசேஷம்?"

"விசேஷம்னா தான் கேக் செய்யணுமா என்ன? பேக்கரில எல்லாம் தினமும் செய்யறதில்ல??"

அவன் பொய்யாக முறைக்க, அவள் தோளைக் குலுக்கினாள்.
"வீட்ல கேக் மிக்ஸ் இருந்துச்சு. மகதியும் கேட்டா. சரின்னு களத்துல இறங்கிட்டேன்" என்றவாறு மகதியை அழைத்துக்கொண்டு கிச்சனுக்குள் நடந்தாள் அவள்.

"எனி ஹெல்ப்?"

"டேஸ்ட் பாக்கறதுக்கு தான் ஒரு சோதனை சுண்டெலி தேவைப்படுது.."
கண்ணடித்து அவள் சொல்ல, மாறன் விழிகளை விரித்து நாடகத்தனமாக "ஆளை விடுங்க சாமி!" என்க, மகதியும் கீர்த்தியும் வாய்விட்டுச் சிரித்தனர்.

ஆனாலும் இறுதியில் சாக்லேட் கேக்கை குளிரூட்டியிலிருந்து எடுத்துத் துண்டுகள் போட்டபோது, மாறனிடம்தான் முதல் துண்டை நீட்டினர் இருவரும்.

ஸ்பூனால் ஒரு விள்ளல் கேக்கை வெட்டியெடுத்து நாவில் வைத்தான் அவன். மகதியும் கீர்த்தியும் ஆர்வமாக அவனையே பார்த்திருக்க, மாறன் சலனமின்றி மென்று விழுங்கினான். மகதி பொறுமையிழந்து கத்தினாள்.

".. எப்படி இருக்குன்னு சொல்லுண்ணா!!"

கீர்த்தியை நிமிர்ந்து பார்த்தான் அவன்.

"உன்னைக் கட்டிக்கப் போறவன் ரொம்ப லக்கி."

கீர்த்தி சற்றே திகைக்க, மகதி ஆச்சரியமாக சிரித்தாள். மாறன் அதிகமாகப் பேசிவிட்டோமோ என்பதுபோல சந்தேகமாக கீர்த்தியைப் பார்த்துப் புருவம்தூக்க, அவள் விரைவாக அதிர்ச்சியை மறைத்து, அலட்சியமாகத் தோளைக் குலுக்கினாள்.

"நான்தான் சமைச்சுப் போடணும்னு சட்டமிருக்கா என்ன!? மூட் இருந்தா சமைப்பேன், அவ்ளோதான். வர்றவனையும் ஒழுங்கா சமையல் கத்துக்கிட்டு வரச் சொல்லிடுவேன்."

மகதி வெடித்துச் சிரிக்க, மாறன் தலையசைத்துவிட்டு மவுனமான், கேக்கை உண்பதற்கு மட்டும் வாயைத் திறந்தவண்ணம்.

***

வெள்ளிகிழமை காலையில் பரபரப்பாக அலுவலகம் செல்லக் கிளம்பிக்கொண்டிருந்தபோது, கதவு தட்டப்படும் ஓசை கேட்க, யாரென யூகித்தவண்ணம் கதவைத் திறந்தாள் கீர்த்தி. எதிர்பார்த்ததுபோல மாறன் நின்றிருந்தான். லேசாக சிரித்தவள், "இப்ப என்ன வேணும்?" எனக் கிண்டலாக வினவ, மாறனின் முகம் சுண்டிப்போனது.

அதைக் கவனித்தவளும் வேகமாய், "ஹேய்.. சும்மா.. விளையாட்டுக்கு தான் கேட்டேன்.. நான் வேற எதையும் மீன் பண்ணல, தப்பா நினைச்சுக்காத ப்ளீஸ்.." என சமாளிக்க, அவன் இறுக்கமாகப் புன்னகைத்தவாறு, "உள்ள வரலாமா?" என்றான்.

"ஸ்யூர்.. கம் இன்"

முன்னறையில் அவனை அமரச்செய்துவிட்டு, ஏதேனும் பலகாரம் எடுத்துவரலாமென கிச்சனுக்கு செல்ல முயன்றவளை அவன் குரல் தடுத்தது.

"எனக்கு எதுவும் வேணாம்.. உன்கிட்ட பேச தான் நான் வந்தேன்... ஒரு சின்ன.. ஹெல்ப்.. மட்டும்.."

உதவியெனக் கேட்பதற்கு அவன் படும் சிரமம் அப்பட்டமாக அவன் முகத்திலேயே தெரிந்தது.

"இ..இல்ல.. வேலை தேடப் போனா.. திரும்பி எப்ப வருவேன்னே தெரிய மாட்டேங்குது... வயசுக்கு வந்துட்ட பொண்ணை.. தனியா வீட்டுல விட்டுட்டு... போக முடியல... அதான்.. உனக்கு பெருசா சிரமம் இல்லன்னா.. கொஞ்சம், சாயங்காலம் மட்டும் அவளைப் பாத்துக்க முடியுமா? நீ வேலை விட்டு வந்து வீட்டுல ரெஸ்ட் எடுக்கற டைம்ல உன்னைக் கேட்கறது கஷ்டமா தான் இருக்கு.. ஆனா வேற யாரையும் கேட்க முடியாத சூழ்நிலை... மகதிக்கும் உன்கூட இருக்கறது பிடிக்குது. ஸோ, எனக்காக.. ஈவ்னிங்ல மகதிகூட இருக்க முடியுமா ப்ளீஸ்..? பதிலுக்கு நீ என்ன ஹெல்ப் கேட்டாலும் நான் செய்யறேன் கீர்த்தி.. ப்ளீஸ்..?"

தயக்கமாக விழியுயர்த்தி அவளது பதிலுக்காகக் காத்திருப்பதுபோலப் பார்த்தான் அவன். கீர்த்தியின் முகம் சிலகணங்கள் சலனமற்றிருந்தது.

ஆனால் மறுகணமே வெளிச்சமான புன்னகை ஒன்று முகத்தில் பிறக்க, கண்களால் ஆமோதித்தாள் அவள்.

"மாறா, மகதியை நான் பாத்துக்கறேன்.. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. நீ கவலைப்படாத"

அதே புன்னகை அவனுக்கும் தொற்றிக்கொள்ள, மலர்ந்த விழிகளால் அவனை நன்றிபொங்க ஏறிட்டான் அவன். அதன் வசீகரத்தில் ஒருகணம் தன்னிலை மறந்தவள், அவன் ஏதோ பேசவும் மீண்டும் சுதாரித்து சுயநிலைக்கு வந்தாள்.

".. ரொம்ப தேங்க்ஸ்! நானும் மகதியும் இந்த ஹெல்ப்பை மறக்கவே மாட்டோம்.."

"சேச்சே.. அதெல்லாம் பரவால்ல. ஃபில்டர் காபி மட்டும் எனக்கு தவறாம சப்ளை பண்ணிடு, போதும்!"

அவன் சிரிக்க, அவளும் புன்னகைத்தபடி அனுப்பிவைத்தாள் அவனை.

திடீரென அவன்மீது தனக்கென்ன புதிய ஆர்வம் என ஆராய்ந்தவாறே அலுவலகத்துக்குக் கிளம்பினாள் கீர்த்தி.

***

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro