7
வைகறையில் வாசல்மணி அடித்துத் தூக்கம் கலைக்க, எரிச்சலாக எழுந்து சென்று கதவைத் திறந்து கரகரக்கும் குரலில், "என்ன?" என எரிந்து விழ, எதிரே நின்ற மாறன் ஓரடி பின்வாங்கினான்.
தயக்கமாகக் கைகளைப் பிசைந்தபடி, "மகதி… மகதிக்கு.. வயித்தை வலிக்குதாமா.. ரூம்ல படுத்துக்கிட்டு ஒரே அழுகை… வயித்தை பிடிச்சிட்டு கத்துறா.. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல.." என்று திக்கித் திணறினான் அவன்.
ஓரளவு விஷயம் புரிந்து, அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவனைத் தாண்டிக்கொண்டு மகதியின் அறைக்கு விரைந்தாள் அவள்.
"மகதி! நான் கீர்த்தி வந்திருக்கேன், கதவைத் திறயேன் ப்ளீஸ்.."
அழுகை தோய்ந்த குரலில், "கீர்த்தி, நீ உள்ள வராத! அண்ணாவையும் விடாத! எனக்கு ரத்தம் ரத்தமா போகுது.." என பதில் வர, கீர்த்தி பாதி பூரிப்பும் பாதிக் கவலையுமாய்த் திரும்பி மாறனை ஏறிட்டாள்.
அருகில் அன்னை ஒருவர் இருந்து இதைப்பற்றியெல்லாம் சொல்லிக் கொடுத்து பயத்தைப் போக்க வேண்டிய நேரம்.. இப்போது யாருமின்றித் தனியாக பயந்து, பதற்றமாகி, ஏதேதோ நினைத்து அழுபவளிடம், யார் சென்று இதைப் பேசுவது?
மாறனின் முகமும் அதிர்ச்சி, கவலை, பதற்றம் எனப் பல்வேறு உணர்வுகள் காட்டியது.
"வா..வாட்? இரத்தமா?? நான் வேணா டாக்டரை கூட்டிட்டு வரவா?"
"ஷ்ஷ்.. அமைதியா இரு. நீ கொஞ்ச நேரம் வீட்டை விட்டு வெளிய இரு. நான் மகதிகிட்ட பேசிட்டு வந்து, நீ செய்ய வேண்டியதை சொல்றேன்."
அவன் மறுக்காமல் வெளியேற, மீண்டும் மகதியின் அறைக்கதவைத் தட்டினாள் அவள்.
"உங்க அண்ணா வெளிய போயிட்டான், கதவைத் திற மகதி.. நான் என்னன்னு பாக்கறேன்"
இருகணங்கள் கழித்துத் தாழ்ப்பாள் திறக்கும் ஓசை கேட்க, கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றாள் கீர்த்தி.
அறையின் ஒரு மூலையில் அமர்ந்து அழுதுகொண்டே இருந்தவளைப் பார்த்தபோது, கீர்த்திக்கும் கண் கலங்கியது.
"மகதி.. எதுக்குடா அழற..?"
அழுதுகொண்டே மெத்தையைக் கைகாட்டினாள் மகதி. அதில் திட்டுத்திட்டாக சிவப்புக் கறைகள் படிந்திருக்க, அவளது பயத்தின் காரணம் புரிந்து பரிவாக அவளைப் பார்த்தாள் கீர்த்தி.
மெதுவாக சென்று அவளருகே அமர, மகதியோ அவள்மீது உரசாமல் இருக்கத் தள்ளி அமர முயன்றாள். கீர்த்தி அவள் தோளைப் பிடித்துத் தடுத்தாள்.
"மகதிக்குட்டி.. நீ அசிங்கமோ அவமானமோ படறதுக்கு இதுல ஒண்ணுமே இல்லடா.. எல்லாப் பொண்ணுங்களுக்கும் ஒரு ஸ்டேஜ்ல நடக்குற சாதாரண மாற்றங்கள்தான் இதெல்லாம். மென்ஸஸ்னு இங்கிலீஷ்ல சொல்லுவாங்களே, அதுதான் இது. உன் ஸ்கூல்ல, உன்கூட படிக்கற பொண்ணுங்களுக்கு எல்லாமுமே இது வரும். உங்க ஸ்கூல்ல இதைப்பத்தி எதுவுமே சொல்லிக் குடுக்கலியா?"
இல்லையென அவள் தலையாட்டிட, நாட்டின் பள்ளிக்கல்வித் துறையை மனதார சபித்தவள், "பரவால்ல.. உனக்கு என்ன வேணும்னாலும் என்கிட்ட சொல்லு. என்ன சந்தேகம் இருந்தாலும் கேளு, எனக்குத் தெரிஞ்சவரை நான் பதில் சொல்றேன். நீ எதுக்காகவும் பயப்படக்கூடாது, ஓகேவா?" என ஆறுதல் கூறினாள் அவளுக்கு.
"போய் நல்லா குளிச்சிட்டு வா. ரத்தத்தை பார்த்து பயப்படாத. துணியை நினைச்சும் கவலைப்படாத. எல்லாமே நான் பாத்துக்கறேன், சரியா..? அழாம போடா.."
அவள் குளியலறைக்கு எழுந்து செல்ல, கீர்த்தி வேகமாக கரைபடிந்த மெத்தை விரிப்பை அகற்றி, கையில் சுருட்டி எடுத்துச்சென்று சுடுநீரில் ஊறவைத்தாள். வெளியே வந்தபோது மாறன் அவளையே எதிர்பார்ப்பாக ஏறிட, பெருமூச்சு விட்டவள், "உன் தங்கச்சி வயசுக்கு வந்துட்டா.. சொந்தக்காரங்களுக்கு சொல்லிடு" என்றுவிட்டு, தன் வீட்டுக்குள் சென்று அலமாரியில் வைத்திருந்த சுகாதாரப் பொருட்களை எடுத்துவந்தாள்.
"இது சானிட்டரி நாப்கின். மெடிக்கல் ஷாப்ல கிடைக்கும். XL size. போய் நாலு பாக்கெட் வாங்கிட்டு வா. கூடவே பாராசிட்டமால் டேப்லெட்டும் வாங்கிட்டு வா."
தலையசைத்துவிட்டு அவன் விரைந்து செல்ல, கீர்த்தி மீண்டும் மகதியிடம் சென்றாள்.
***
மாறன் கடையிலிருந்து திரும்பி வந்தபோது, சோர்வான மகதியை மடியில் சாய்த்துக்கொண்டு தலைகோதிக் கொண்டிருந்த கீர்த்தியை கண்கள் சந்தித்தன. அவள் ஏதோ சொல்ல, மகதி சிரிக்க, அதே சிரிப்பு அவளையும் தொற்றிக்கொள்ள, அதிகாலை வெளிச்சத்தில் அவளது அழகிய முகம் இன்னுமே அழகாகத் தெரிந்தது.
அவனைக் கண்டதும் கீர்த்தி நிமிர, அவனது மெய்மறந்த பார்வையை அவளும் பார்த்துவிட, சட்டென தலையைக் குனிந்துகொண்டான் அவன். கையில் இருந்த மருந்துப்பையை அவளிடம் நீட்டினான். மகதியை அலுங்காமல் தலையணையில் படுக்கச் செய்துவிட்டு எழுந்துவந்தாள் அவள். அவனிடம் பையை வாங்கிக்கொண்டு கதவடைத்துவிட, அவன் ஒன்றும் பேசாமல் சமையலறைக்கு காபி போடச் சென்றான்.
"மகதிக்கு எனக்குத் தெரிஞ்சதை எல்லாம் சொல்லிக்குடுத்தாச்சு, இருந்தாலும் சொந்தக்காரங்க யாராச்சும் சீக்கிரம் வந்தா பெட்டர். ஃபோன் பண்ணி சொல்லியாச்சா?"
சமையலறை வாசலில் அவள் குரல் கேட்க, காபியுடன் திரும்பினான் அவன்.
"எங்களுக்கு சொந்தம்னு சொல்லிக்க யாரும் கிடையாது கீர்த்தி. அப்பாவும் அம்மாவும் இறந்தப்போ, சொத்தை எல்லாம் ஏமாத்தி பிடுங்கிட்டுப் போனதோட சரி, அதுக்குப் பிறகு யாரும் எங்களைத் திரும்பிக்கூட பாக்கல. நல்லது கெட்டதுன்னு எது நடந்தாலும், எனக்கு அவ; அவளுக்கு நான்; அவ்ளோதான்."
அவள் கேட்காமலே நிறையப் பகிர்ந்துகொண்டவனை சற்றே வியப்பாகப் பார்த்தாள் அவள். மனதில் அவனுக்காக ஏக்கமும் கரிசனமும் தோன்ற, இதென்ன புதுப்பழக்கம் என அதன் காரணத்தைக் கண்டறிய முயன்றாள்.
அவளெதிரே நீட்டப்பட்ட காபிக் கோப்பை அவள் சிந்தனையைக் கலைத்தது. ஒற்றைப் புருவம் தூக்கி அவனைப் பார்த்தாள் அவள்.
"காலங்காத்தால என்னை எழுப்பிவிட்டு வேலை வாங்கினதுக்கு, கைம்மாறு காபிதானா?"
"ச..சாரி.. காபி வேணாமா? வேற என்ன வேணும்?"
"காபியை குடு, பரவால்ல. ஆனா கணக்குல இன்னும் மிச்சம் இருக்கு, ஞாபகம் வெச்சிக்க."
குறும்பாக அவள் சொல்ல, அவனும் லேசாக சிரிக்க, காபிக் கோப்பையை அவனிடமிருந்து வாங்கிக்கொண்டாள் அவள்.
ஒருவாய் அருந்தியதுமே நாவின் சுவை மொட்டுக்கள் ரம்மியமாக மலர, விழிப்பாவைகள் விரிய அதிசயமாய் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் அவள்.
"வாவ்… இன்ஸ்டண்ட் காபித் தூள்ல போட்ட காபியா இது?"
"ம்ஹூம். இன்ஸ்டண்ட் காபி நான் குடிக்கறதில்ல. இது நேத்து நைட் போட்டுவெச்ச சொட்டு டிகாஷன். எப்பவுமே காலைல காபி போடறதுக்கு கரெக்டா இருக்கும்."
"ப்பா! தேவாமிர்தமா இருக்கு இந்த காபி!! மறுபடி இன்ஸ்டண்ட் காபியை இனிமேல் என்னால குடிக்கவே முடியாது! ஸோ, இனிமேல் அடிக்கடி உன் காபி தேவைப்படும்."
"கணக்கு அப்போ நேராகிடுமா?"
காபிக் கோப்பைக்குள் புன்னகையை மறைத்தவாறே அவன் கேட்க, "கிட்டத்தட்ட.." என அதேபோல் பதிலளித்தாள் அவளும்.
.
அன்று அலுவலகத்தில் அமர்ந்திருந்த போதெல்லாம் மகதியின் முகம் கண்ணில் வந்துபோயிற்று அவளுக்கு. மாறன் எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்து அவளைக் கவனித்துக் கொள்வதாக சொல்லியிருந்தான். ஆயினும் அன்னையோ, சகோதரியோ, அவளது துன்பத்தை உணர்ந்துகொள்ளும்படி யாரேனும் ஒருவர் அவளுடன் இருந்திருக்கலாம் எனத் தோன்றியது.
வேலையில் மனம் செல்லாமல் வெகுசீக்கிரமே கிளம்பிவிட்டாள் வீட்டுக்கு. வந்ததும் தன் வீட்டிற்குச் செல்லாமல், மாறனின் கதவைத் தட்டினாள் மெல்லமாக. இரண்டு நொடிகள் கழித்துக் கதவு திறக்கப்பட, மாறனின் சோர்ந்த முகம் மறுபுறம் தெரிந்தது.
இவளைக் கண்டதும் சற்றே வியந்தவன், கைக்கடிகாரத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, "என்னதிது, ஆபிஸ் அஞ்சு மணிக்கே விட்டுட்டாங்களா?" என்க, அவனுக்கு பதிலளிக்காமல் உள்ளே நுழைந்து தான் வாங்கிவந்த பழரசக் கோப்பைகளை மேசைமீது எடுத்து வைத்தாள் அவள்.
"மகதிக்கு எப்படி இருக்கு? மதியம் சாப்பிட்டாளா?"
அவன் கதவை மூடிவிட்டு உள்ளே வந்தான்.
"ம்ம், சாதமும் ரசமும். காய்ச்சல் இன்னும் குறையல. இப்ப அரை மாத்திரை போட்டு தூங்கிட்டு இருக்கா. கொஞ்சம் அவளைப் பாத்துக்க முடியுமா, நான் வெளிய போயிட்டு ஆறு மணிக்கு வந்துடறேன்..?"
ஒரு காகிதக் கோப்பையை எடுத்துப் பழரசத்தை அருந்தியவாறே கேட்டான் அவன்.
மறுக்க ஏதும் காரணங்கள் இல்லாததால் கீர்த்தியும் ஒப்புக்கொண்டு மகதியின் அறைக்குச் சென்று அவளருகே ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்துகொண்டாள்.
ஆறரை மணியளவில் எழுந்தாள் மகதி. கீர்த்தி அவளருகே நின்று சிரிப்புடன் கையசைத்தாள்.
"இப்ப காய்ச்சல் எப்டி இருக்கு?"
"கொஞ்சம் பரவால்ல.. ஆனாலும் வயிறு வலி போகல கீர்த்தி. உனக்கும் இப்படித்தான் வலிக்குமா?"
கீர்த்தி பெருமூச்செரிந்தாள்.
"ம்ம். கொடுமையா இருக்கும். அதனோட 'மூட் ஸ்விங்ஸ்'னு ஒண்ணு வருமே, அதுதான் உச்சபட்ச கொடுமை. ஒரு நேரம் காரணமே இல்லாம அழுகை வரும்.. ஒருநேரம் எல்லார் மேலவும் ஆத்திரம் வரும்.. ஒருநேரம் உலகத்துமேல வெறுப்பு வரும்.. ஒருநேரம் நம்ம மேலயே கடுப்பா வரும்.. கோபம், அழுகை, எரிச்சல் எல்லாம் மாறிமாறி வந்து தாக்கும்.. உடம்பும் மனசும் பயங்கரமா சோர்ந்து போயிடும்."
மகதி மிரண்டு பார்க்க, அவள் கையைப் பற்றிக்கொண்டு, "அப்பவெல்லாம் ஒண்ணு மட்டும் ஞாபகம் வெச்சிக்கணும். 'எதுவும் கடந்து போகும்'. முடிஞ்சவரைக்கும் தனியா இருக்கறதை அவாய்ட் பண்ணிட்டு, ஃப்ரெண்ட்ஸ் கூடவோ, இல்ல மனசுக்குப் பிடிச்சவங்க கூடவோ டைம் ஸ்பெண்ட் பண்ணலாம். பசிச்சா நிறைய சாப்பிடலாம், தப்பில்ல. நாக்கு ருசி கேக்கும்.. இனிப்போ காரமோ.. எதாவது வேணும்னு தோணும்; அப்போவெல்லாம் தயங்காம, குற்றவுணர்ச்சி எதுவும் இல்லாம வேணுங்கறதை வாங்கி சாப்பிடலாம். தண்ணி நிறைய குடிக்கலாம். காமெடி சினிமா பாக்கலாம். மொத்தத்துல, உன்னை சந்தோஷமா வெச்சிக்கற செயல்களை செய்யலாம்" என விளக்கினாள் கீர்த்தி.
"சரி, இப்ப நாம என்ன பண்ணலாம்?"
"வெளிய சோபாவுல உங்கண்ணன் வெய்ட் பண்ணிட்டு இருக்கான், புது நெட்ஃப்ளிக்ஸ் படத்தோட! உனக்குப் பிடிக்கும்னு பீட்சாவும் வாங்கிட்டு வந்திருக்கான்… வா!"
"ஹைய்யா!" வலியிலும் முயன்று உற்சாகமாய்க் குரல்கொடுத்தவாறே அவள் எழுந்து வர, கீர்த்தியும் மலர்ந்த முகத்தோடு பின்தொடர்ந்தாள்.
பாதிப் படத்தின்போதே கீர்த்தியின் தோளில் சாய்ந்தவாறு மகதி தூங்கிவிட, மெதுவாக மாறனிடம் திரும்பினாள் அவள்.
"எங்க மம்மிக்கு ஃபோன் பண்ணி கேட்டேன், வயசுக்கு வந்த பொண்ணுக்கு என்னெல்லாம் பண்ணனும்னு. பச்சை முட்டை, நல்லெண்ணெய், கருப்பட்டினு ஏதேதோ சொன்னாங்க... நானும் கூகுள்ல, குவாரால எல்லாம் தேடி, ஒரு ஃபுட் சார்ட் ரெடி பண்ணிட்டேன். உனக்கு வாட்சாப்ல அனுப்பிடறேன். வேற எதாவது ஹெல்ப் வேணும்னாலும் கேளு."
உண்மையான நன்றியோடு கண்கள் பனிக்க அவளைப் பார்த்தான் அவன்.
"தேங்க்ஸ் கீர்த்தி.."
உரிமையாக அவனைத் தோளில் தட்டியவள், "மகதி எனக்கும் தங்கச்சி மாதிரித் தான்! அவளுக்கு செய்யறதுக்கு என்ன?" என்றிட, அவன் பார்வை விலகாமல் அவளையே பார்த்தான் வியப்போடு.
****
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro