Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

6

நண்பர்களுடன் இருந்துவிட்டு நேரம் கழித்து வீட்டுக்கு வருவது புதிதில்லை என்றாலும், இரவு பத்து மணி வரை வெளியே இருந்ததில்லை இதுவரை.

அதிலும் சாலையில் ஒருவருமே இல்லாதிருக்க, தெரு விளக்குகளும் கூட அணைந்திருக்க, அந்த அசாத்திய சூழல் அவளை அச்சுறுத்தி உள்ளுக்குள் பரவிக்கிடந்த பயத்தை உசுப்பிவிட, சுற்றுமுற்றும் பார்த்தவாறு சற்று மெதுவாகவே வண்டியை ஓரங்கட்டி நிறுத்தினாள் கீர்த்தி.

காற்று அமானுஷ்ய சத்தத்துடன் கடந்து செல்வதுபோல் இருந்தது. எங்கேயோ ஏதோ ஒரு நாய் வேறு அசமயமாக ஊளையிட்டது. கீர்த்திக்கு நெற்றியில் வியர்வை முத்துக்கள் முளைத்தன. மூச்சுக்கள் விட்டுத் தன்னை சமன்படுத்திக்கொள்ள முயன்றாள் அவள்.

அப்போது யாரோ வருவதுபோல தூரத்தில் ஏதோ அரவம் கேட்க, பயத்தில் சப்தநாடியும் ஒடுங்கிப் போனது அவளுக்கு.

உதட்டுக்குள் கர்த்தரை ஜெபித்துக்கொண்டே வண்டியின் கிக்-ஸ்டார்ட்டரை அவசர அவசரமாக உதைத்து உயிர்ப்பிக்க முயன்றாள். திரும்பிப் பார்க்காமல் வேகமாக உதைத்து உதைத்து ஓய்ந்தவள் சோர்வாக வண்டிமீதே சாய்ந்தபோது மீண்டும் ஏதோ அரவம் கேட்க, கிட்டத்தட்ட அழுதுவிடும் நிலைக்கு வந்துவிட்டாள் கீர்த்தி.

சங்கிலியில் இருந்த சிலுவையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு சாலையோரம் பின்னோக்கி இரண்டடி எடுத்து வைத்தாள் அவள். சட்டென்று வலதுபுறத் திருப்பத்திலிருந்து ஒரு செல்ஃபோனின் டார்ச் வெளிச்சம் வந்து அவள் கண்களைக் கூசச்செய்தது.

"கீர்த்தி?"

பழகிய குரலால் பெருவெள்ளமாய் நிம்மதி மனதினில் பெருக்கெடுக்க, அது பெருமூச்சாக வெளிவர, அவளையும் அறியாமல் ஒரு வேகத்தில் அவனை இறுக்க அணைத்துக்கொண்டாள் அவள். அவனுமே அதை எதிர்பார்க்காமல் திகைத்தது அவனது உடல்மொழியில் தெரிந்தது.

நடப்பதை உணர்ந்து அதிர்ந்து அதே வேகத்தில் தன்னை விடுவித்துக்கொண்டவள், முகத்தை அவசரமாகத் துடைத்துக்கொண்டாள்.

"சாரி.. இல்ல, தேங்க்ஸ்.. அது.., வந்து.. நான்.."

"என்ன ஆச்சு?"

"ப்ச், வண்டியில பெட்ரோல் தீர்ந்து, நடு ரோட்டுல திடீர்னு நின்னு போயிடுச்சு. தெருவும் லைட் இல்லாம ரொம்ப இருட்டா இருந்துச்சு. அப்போ யாரோ பின்னால வர்ற மாதிரி இருக்கவும் பயந்துட்டேன்."

"பார்ரா.. உன் வீரமெல்லாம் வாயோட மட்டும்தான்? நிஜத்துல புல்தடுக்கி பயில்வானா நீ?"

அவள் முறைத்தாள்.
"இங்க பாரு, இதை வெளிய யார்கிட்டயாச்சும் சொன்னா, அப்பறம் உன் அகால மரணத்துக்கு நான் பொறுப்பில்ல, பாத்துக்க!"

அவன் வாய்விட்டுச் சிரித்தான்.
"சொல்ல மாட்டேன். இப்ப வண்டியை காப்பாத்தலாம், வா!"

அவனும் நான்கைந்து முறை உதைத்துப் பார்த்தான். வண்டி எழும்பவில்லை.

"ஹூம்.. ரிசர்வுல கூட பெட்ரோல் இல்ல. தள்ளிட்டே தான் போகணும் போல.. ஆமா, நீ இங்க என்ன பண்ற இந்த நேரத்துல?" ஸ்டாண்டை எடுத்துவிட்டு வண்டியைத் தள்ளியவாறே மாறன் கேட்டான்.

"ஃப்ரெண்ட்சோட வெளிய போயிருந்தேன். நீ?"

"இந்தத் தெருவுல தான் எங்க ஓனர் வீடு. பத்து மணிக்கு நான்தான் கடையை பூட்டி சாவியை ஓனர்கிட்ட குடுத்துட்டு வரணும்."

"ஓ... என்ன வேலை, என்ன கம்பெனி?"

"கம்பெனி இல்ல, கம்ப்யூட்டர் சர்வீஸ். நாலு வருஷ இன்ஜினியரிங் டிகிரிக்கு, மாச சம்பளமா நாலாயிரம் கிடைக்குது. அதிகம்ல?"

அவன் சிரித்தான், அவளுக்கு சிரிப்பு வரவில்லை.

"ஆமா... ஏன் இப்படி? என்ன நடந்தது? நீ.. நல்லா, வசதியா தானே இருந்த? என்ன ஆச்சு உனக்கு?"

சிலகணங்கள் மவுனம் நிலவியது. தூரத்தில் தெருநாய் ஒன்று குரைத்தது. ஏதோவொரு ஜன்னல் பட்டென அடித்து சாத்தப்பட்டது. எங்கேயோ சாலையில் செல்லும் லாரியில் ஹாரன் சத்தம் சன்னமாகக் கேட்டது. கீர்த்தியின் கால் கொலுசுகள் கிலுகிலுத்தன மெல்லமாய். மாறனின் பெருமூச்சு காற்றைத் தாண்டி சப்தித்தது.

"அம்மாவும் அப்பாவும் திடீர்னு இறந்ததால, வில் எதுவும் எழுதல. நாங்க ரெண்டு பேரும் சின்ன பசங்கன்றதால மத்த பார்ட்னர்ஸே கம்பெனியை அவங்களுக்குள்ள பிரிச்சிக்கிட்டாங்க. சொந்தக்காரங்களும் சும்மா இல்ல.. ஏமாத்தி பொய்ப் பத்திரம் காட்டி சொத்துக்களை எல்லாம் எடுத்துக்கிட்டாங்க. வீட்டைக் கூட விட்டு வைக்கல. மாமா வீட்டுல அகதிங்க மாதிரி தங்கியிருக்க பிடிக்கல; அதான், சென்னைக்கு வந்துட்டோம். எங்கிட்ட இருந்த காசுல ரெண்டு வருஷம் ஓட்ட முடிஞ்சது. பேங்க்ல இருந்த பணமும் இப்ப காலி. மகதியோட சேவிங்ஸை தொட எனக்கு மனசு இல்ல. அது அவளுக்காக அப்பா சேர்த்து வெச்சது. ஸோ, கொஞ்ச நாளைக்கு இங்க இப்டி இருந்துட்டு, எப்படியாச்சும் நல்ல வேலை கிடைச்சதும், நல்ல நிலமைக்கு வந்ததும், மகதியை நல்ல வீட்டுக்கு அழைச்சிட்டுப் போயிருவேன்."

"ஹ்ம்ம்"

மீண்டும் கனத்த மவுனம் வந்து இடைவெளியை நிரப்பியது. இம்முறை மற்ற சத்தங்கள் ஏதும் காதை எட்டவில்லை அவளுக்கு, அவனது ஆழமான மூச்சுக்களைத் தவிர.

"இது ஒண்ணும் மோசமில்ல. வேலைல பெருசா சிரமமில்ல. வாங்குற சம்பளத்துல மாசத்தை ஓட்டிட முடியுது. என்ன.. படிச்ச படிப்புக்கேத்த வேலைய செய்ய முடியலைன்னு லேசா வருத்தம். காலேஜ்ல ரொம்ப கான்ஃபிடண்ட்டா, திமிரா இருந்தேன்.. இந்த உலகத்தையே என் ஒருத்தனால மாத்திட முடியும்னு. ஆனா முகத்துல அறைஞ்ச மாதிரி வாழ்க்கை அப்படியே தலைகீழா மாறிடுச்சு."

என்ன சொல்வதெனத் தெரியாததால் பேசவில்லை அவள். குடியிருப்புக்கு வந்து வண்டியை நிறுத்திவிட்டு இருவரும் படியேறத் தொடங்கினர்.

"நீ சொன்னியே.. நான்தான் உலகத்தோட மையப்புள்ளின்னு ஈகோவோட இருந்த எனக்கு, வாழ்க்கை செருப்பால அடிச்சமாதிரி புரிய வெச்சிடுச்சு."

வேதனையோடு அவனைப் பார்த்தாள் அவள்.
"நான் நிஜமா அப்டி மீன் பண்ணல... ஏதோ கோவத்துல--"

"சேச்சே.. பரவால்ல. ஹ்ம்ம்.. காலேஜ்ல நாம வேற டைம்ல மீட் பண்ணியிருக்கலாம். ஏனோ நாம நல்ல ஃப்ரெண்ட்ஸா இருந்திருப்போம்னு தோணுது எனக்கு. ப்ச்.. விதி. எனிவே, குட்நைட் கீர்த்தி."

நான்காம் தளம் வந்துவிடவும் அவன் விலகிச்செல்ல எத்தனிக்க, கீர்த்தி மெதுவாக செருமினாள்.
"இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகல..
ஃப்ரெண்ட்ஸ்?"

அவன் நின்றான்.

"என்ன திடீர்னு?? என்மேல பரிதாபப்படறியா கீர்த்தி? எனக்கு அது பிடிக்காது. நீ மட்டும் தான் என்னை பழைய மாறனா நடத்துன; என்மேல கோபப்பட்ட; திட்டுன; சண்டை போட்ட; என்னை மறுபடி நார்மலா உணர வெச்சிருக்க. இப்ப நீயும் பரிதாபமா பார்த்தா, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்."

"உன்மேல பரிதாபம் காட்டாம உன் ஃப்ரெண்டா இருக்க முடியாதா என்னால? ராத்திரியில தனியா நின்னபோது உதவி செய்யுற யாரை வேணா நான் ஃப்ரெண்டா ஏத்துக்குவேன். உன்னைக்கூட."

கடைசி வார்த்தையை நக்கல் தொனியில் ஆயாசமாக அவள் முடிக்க, அவன் மெலிதாகப் புன்னகைத்தான்.

"உன் வழியில நான் குறுக்கால வருவனே, பரவால்லயா?"

அவளுக்கு சிரிப்பு வந்தாலும், உதட்டில் கைவைத்து மறைத்தாள்.
"ப்ச்.. அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்.. ஸோ, ஃப்ரெண்ட்ஸ்?"

"ஃப்ரெண்ட்ஸ்"

கைகுலுக்கிவிட்டு மாறன் செல்ல, மாறாத புன்னகையோடு வீடுவந்தாள் அவள்.

***

"அண்ணாவும் நீங்களும் பேச ஆரம்பிச்சாச்சா!? என்னால நம்பவே முடியல!!"
தன் வீட்டின் மர சோபாவில் அமர்ந்தபடி உற்சாகக் கூக்குரலிட்ட மகதியை சிரிப்புடன் பார்த்தாள் கீர்த்தி.

"உங்கண்ணன் ரொம்பக் கெஞ்சினான்.. அதான், போனாப் போகுதுன்னு மன்னிச்சிட்டேன்"

மகதி புன்னகை மாறாமல், "ரொம்ப தேங்க்ஸ் கீர்த்தி... என்னடா ஒரு சின்ன சண்டைக்காக ரெண்டுபேரும் பேசாம இருக்கீங்களேன்னு நான் எவ்ளோ நாளா ஃபீல் பண்ணேன் தெரியுமா?" என்றிட, கீர்த்தியின் சிரிப்புக் கரைந்தது.

எழுந்து வந்து மகதியை அணைத்துக்கொண்டவள், "என்னை உன் ஃப்ரெண்டாவோ, அக்காவாவோ, இல்லை வெறும் பக்கத்து வீட்டுப் பொண்ணாவோ... எப்படி வேணாலும் நினைச்சுக்க. ஆனா, என்மேல உனக்கு எந்த வருத்தம் இருந்தாலும், தயங்காம வந்து உடனே சொல்லு மகதி. என்னால ஒருநாளும் நீ கவலைப்படவோ கஷ்டப்படவோ கூடாதும்மா" என்றாள் கண்ணீர்மல்க.

"சேச்சே.. இத்தனை வருஷத்துல எனக்குக் கிடைச்ச பெஸ்ட் ஃப்ரெண்டு நீங்கதான் கீர்த்தி. உங்ககிட்ட என்ன வருத்தம்? ஆனா... ஒரேயொரு சின்ன ரிக்வெஸ்ட்... உங்களை நீ, வா, போன்னு கூப்பிடலாமா? இப்ப ரொம்ப ஃபார்மலா பேசற மாதிரி இருக்கு.. அதான்.. உங்களுக்குப் பிடிக்கலைன்னா--"

"உனக்கு எப்படிப் பிடிச்சிருக்கோ அப்படிக் கூப்பிடு! கீர்த்தின்னு பேரை சொல்லிக்கூட கூப்பிடு! நான் கோவிச்சுக்க மாட்டேன்."

"மகதி!!" என வாசலில் மாறனின் குரல் கேட்க, எழுந்து கையசைத்துவிட்டு அண்ணனிடம் அவள் செல்ல, ஆதுரமாக அவளைப் பார்த்தபடி பின்னால் வந்தாள் கீர்த்தியும்.

கீர்த்தியைப் பார்த்தவன் புன்னகைக்க, அவளும் பதிலுக்குப் புன்னகைத்து வைத்தாள், கொஞ்சம் இறுக்கத்துடனே. மனதோரம் இன்னும் கொஞ்சம் கசப்பு இருக்கத்தான் செய்தது. அவனும் அது புரிந்ததுபோல தலையசைத்துவிட்டு மகதியை அழைத்துச்செல்ல, கீர்த்தி சோர்வாகக் கதவை மூடிவிட்டு வந்தாள்.

***

கைபேசியில் பாடல்களை ஓடவிட்டு கட்டிலில் ஒரு புத்தகத்துடன் படுத்துக்கொண்டு சென்றமுறை வாசித்து விட்டுச்சென்ற வரியைத் தேடித் தோற்றுப்போய் மீண்டும் அத்தியாயத்தின் ஆரம்பத்திலிருந்து வாசிக்கத் தொடங்கிய பொழுதில், அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது.

ஞாயிறு மதியம் என்பதால் அதை அவளும் எதிர்பார்த்திருந்தாள்.

"சொல்லுங்கம்மா, எப்டி இருக்கீங்க? அப்பா என்ன பண்றார்?"

"நாங்க நல்லாதான் இருக்கறோம்.. நீதான் அங்க என்ன பண்றன்னே தெரியறதில்ல.. நேரத்துக்கு சாப்பிடறியா? ஒழுங்கா சர்ச்சுக்குப் போறியா?"

"போறேன்மா.. எப்பவாச்சும் சர்ச்சை மிஸ் பண்ணியிருக்கேனா நான்?"

"ஹூம்.. கண்ணுக்கெட்டாத தூரத்துல இருக்கறயாச்சே நீ.. எனக்கென்ன தெரியும்? இன்னும் எத்தனை நாளைக்குதான் இப்படியோ! ஏசப்பா.."

"அட, போன வாரம் தானே வீட்டுக்கு வந்திருந்தேன்? அதுக்குள்ள என்னம்மா இப்டி புலம்பறீங்க?"

"சரி, மறக்காம அடுத்த மாசம் வந்துரு, ராஜிக்கு கல்யாணம்."

"மறக்க மாட்டேன். சரி, ஃபோனை வைக்கவா?"

"ம்ம், பார்த்து பத்திரமா இரு. தினமும் ஜெபம் பண்ணிட்டு தூங்கு. சண்டே மறக்காம சர்ச்சுக்குப் போ."

புன்னகைத்தபடி கைபேசியை அணைத்து வைத்துவிட்டு, சோம்பல் முறித்தபடி எழுந்து வெளியே வந்தாள் அவள். எதிர்வீடு சத்தங்களின்றி அமைதியாக இருந்தது. தோளைக் குலுக்கிவிட்டு மீண்டும் வீட்டுக்குள் வந்துவிட்டாள் அவள்.

உணவருந்திவிட்டு, ஒரு ஆங்கிலத் திரைப்படம் பார்த்து அன்றைய மாலையைக் கழித்தவள், பின் கொஞ்ச நேரம் வீட்டை துப்புரவு செய்தாள். சமையலறைப் பாத்திரங்களை ஒழுங்குபடுத்தி வைத்தாள். இரவானதும் மீண்டும் மடிக்கணினியில் இன்னொரு இந்திப் படத்தை ஓடவிட்டு அதைப் பார்த்தபடியே உறங்கியும் போனாள்.

நடு இரவில், மூன்றரை மணிக்கு அவளது வீட்டுக் கதவு படபடவெனத் தட்டப்பட்டது.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro