Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

12

மாடியில் வந்து தன்னந்தனியாக அழுது கொண்டிருந்தவளை, யாரோ படியேறி வரும் சத்தம் திகைக்கச் செய்ய, அவசரமாகக் கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்து திரும்பி நின்றாள் அவள்.

ஆனால் "கீர்த்தி..." என மாறனின் குரலில் அவளது பெயர் அழைக்கப்பட, நின்ற கண்ணீர் மீண்டும் ஊற்றெடுக்கத் தொடங்கியது.

திரும்பாமலேயே, "ஜாக்கிரதையா கிளம்பிப் போ. மகதியை நல்லாப் பாத்துக்கோ. அவ எது கேட்டாலும் மாட்டேன்னு சொல்லாம வாங்கிக் குடு. அவளுக்கு சாக்லேட் கேக் ரொம்பப் பிடிக்கும். அதுக்காக அடிக்கடி தரவேணாம்.. பல்லு வீணாப் போயிடும். நேர நேரத்துக்கு நல்லா சாப்பிடுங்க ரெண்டு பேரும். உடம்பைப் பாத்துக்கங்க" என அவள் அடுக்கிக்கொண்டே போக, அவன் தளர்வாக நடந்து வந்து அவள் பக்கத்தில் சுவரைப் பிடித்துக்கொண்டு நின்றான்.

அவளது சிவந்த கண்களைப் பார்த்தாலும், எதுவும் கேட்காமல் சிலகணங்கள் அவளையே பார்த்துக்கொண்டு நின்றான்.

அவளே அழுகை தீர்ந்து கொஞ்சம் சமனானதும் அவனிடம் திரும்பினாள்.

"டைமாச்சு.. கிளம்பலையா?"

"கிளம்பணும்."

"அப்பறம் என்ன--"

"ஆனா கிளம்பறதுக்கு முன்னால உனக்கு ஒண்ணு தரணும்."

தனது முதுகிற்குப் பின்னாலிருந்து எதையோ எடுத்தான் அவன்.

சின்னதாக அட்டைப்பெட்டி போன்று இருந்தது; செய்தித்தாளால் சுற்றப்பட்டிருந்தது.

"எ..என்னதிது?"

"அட, பிரிச்சுப் பாரேன்.."

அவனை சந்தேகமாகப் பார்த்தவாறே அதைப் பிரித்தாள் அவள். காக்கி நிற அட்டைப்பெட்டியைத் திறந்து அதன் உள்ளே இருந்ததைக் கையில் எடுத்தபோது, மெலிதாகத் திகைத்துப்போனாள் அவள்.

"காபி ஃபில்ட்டர்!?"

புத்தம்புதிய பித்தளை ஃபில்ட்டர் அது. மாறனின் வீட்டில் உள்ளதைப் போலவே. அவனது காபியின் சுவையான ரகசியம்.

ஆனால் இனி அவன் போட்டுத் தரும் காபிகள் கிடைக்காது எனச் சொல்வதுபோலத் தோன்றியது அவளுக்கு. வந்த சின்னப் புன்னகை வந்தவழியே மறையத் தொடங்கியது.

"அழகா இருக்கு, தேங்க்ஸ்"

அவனோ வசீகரமாகப் புன்னகைத்தான்.

"அதனோட மூடியை திறந்து பாரு"

அவ்வழகிய பித்தளை ஃபில்ட்டரின் மேற்பகுதியைத் திறந்தவள், உள்ளே சீட்டுப்போல சின்னதாக ஏதோ இருக்க, மிடறுவிழுங்கியவாறு எடுத்து அதைப் படித்தாள்.

'காபியோடு இனி தினமும் கொஞ்சம் காதலும் தரலாமா?'

அதிர்ச்சியாக வாய்பிளந்து அவனைப் பார்த்தாள் கீர்த்தி. கண்களில் ஆர்வம் மின்ன அவளையே பார்த்திருந்தான் அவன்.

அவளுக்குக் கண்கள் கலங்கின.

"மாறா.. நான்.. இது.. இதெல்லாம்..."

"ஹேய், ஹேய்.. ரிலாக்ஸ்! உடனே உன் பதிலை சொல்லணும்னு அவசியமே இல்ல. டைம் எடுத்து, யோசிச்சு, எப்ப தோணுதோ அப்ப சொன்னா போதும். எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு கீர்த்தி... மகதிக்கும்தான். உனக்கும் எங்களைப் பிடிச்சிருந்து, எங்களோட சின்ன கூட்டில சேர்ந்துக்க நீயும் வந்தா, உலகத்துல அதைவிட பெரிய சந்தோஷமே கிடையாது எனக்கு! நான் சொல்ல வந்ததை சொல்லிட்டேன்.. இனி உன் முறை. பைய் கீர்த்தி.."

அவள் தோளில் ஒருமுறை கைவைத்து அழுத்தம் கொடுத்துவிட்டு அவன் விலக, அவளோ வெடித்து அழுதுவிடும் நிலைக்குச் சென்றுவிட்டாள்.

"மாறா! நில்லு!!"

அவளது குரலின் அதீத தீவிரத்தில் அவன் கரிசனமாகத் திரும்ப, அவளோ கண்களில் நீர்வழிய நின்றாள். அந்த ஃபில்ட்டரை அவனிடம் நீட்டினாள்.

"இதை நீயே வெச்சிக்க!"

அவன் சற்றே அதிர்வுடன் பார்த்தான்.
"ஏன் கீர்த்தி?"

"எப்ப வந்தது இந்த லவ்? ஏன் வந்தது? எப்படி வந்தது? உனக்கு வேலை கிடைக்க உதவி பண்ணினதாலயா? மகதியை கவனிச்சுக்கிட்டதாலயா? நன்றியையும் காதலையும் போட்டுக் குழப்பிக்காத மாறா.."

மீண்டும் அழுகை தலைதூக்க, உதட்டைக் கடித்து அடக்கியவாறு அவனிடமிருந்து மறுபுறம் திரும்பிக்கொண்டாள் அவள்.

அவன் லேசாக சிரித்தான்.

"உனக்குத் தேங்க்ஸ் சொல்ல ஆயிரம் வழி இருக்கும்போது, எதுக்காக லவ்வை சொல்லப் போறேன் நான்?"

"பின்ன எதுக்காக இது?"

"உனக்காக.. எனக்காக.. காபிக்காக.. காதலுக்காக.."

"ப்ச்.."

அவள் நம்பாமல் உச்சுக்கொட்ட, அவள் தோளைப் பிடித்துத் தன்புறம் திருப்பினான் அவன்.

"உன் கையில இருக்கற லெட்டரை கொஞ்சம் பாரு"

பார்த்தாள்.

மீண்டும் அதே வார்த்தைகள். காதல் வழியும் அச்சில வார்த்தைகளே அவள் கண்களைக் குளமாக்கப் போதுமானதாய் இருந்திட,  "என்ன?" என்றாள் அவள் சற்று பொருமலாக.

"அட, அதை திருப்பிப் பாரு"

கடிதத்தைத் திருப்பிப் பார்க்கையில் ஃபில்ட்டர் வாங்கியபோது தந்த பில் காகிதம்தான் அதுவெனக் கண்டாள் அவள்.

"நானூறு ரூபா ஃபில்ட்டர். அதுக்கென்ன? நான் கேட்டதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?"

ஆயாசமாகக் கண்களை சுழற்றியவன், "அதை ஒழுங்காப் பாரு கீர்த்தி" என்றான் பொறுமையின்றி.

அவனை வினோதமாகப் பார்த்தவள் குனிந்து பற்றுச்சீட்டைப் படித்தாள். அதில் போட்டிருந்த தேதியைப் பார்த்தவள் மீண்டும் திகைத்தாள்.

மூன்று மாதங்களுக்கு முன்னால் வாங்கியதாகத் தேதியிட்டிருந்தது அந்தச் சீட்டில்.

குழப்பமும் திகைப்பும் மேலோங்க, புரியாமல் மாறனை நிமிர்ந்து பார்த்தாள் கீர்த்தி.

"இந்த டேட் ஞாபகமிருக்கா? முதல் முதலா நான் போட்ட காபியை குடிச்சிட்டு, தேவாமிர்தமா இருக்குன்னு சொன்ன நீ. அன்னிக்கு மகதியை உன் சொந்தப் பொண்ணு மாதிரி கவனிச்சுக்கிட்டு, அவளை மடியில சாய்ச்சுத் தூங்க வெச்சு தலையை கோதிவிட்டுட்டு இருந்த. மகதியையும் என்னையும் எங்கம்மா அப்படித்தான் தூங்க வைப்பாங்க, தெரியுமா? அன்னிக்கு உன்னைப் பார்த்தப்போ, எனக்குள்ள ஒரு சந்தோஷம், மாற்றம். அன்னிக்கு வாங்கினது இந்த ஃபில்ட்டர். அன்னிக்கு எழுதினது இந்த லெட்டர். அன்னிக்கு வந்தது இந்த லவ்."

கண்களில் நீர்மல்க அவன் பேச, யோசிக்கவே யோசிக்காமல் அவன் நெஞ்சில் சாய்ந்து அழுது தீர்த்தாள் கீர்த்தி. அவளை மெதுவாக விலக்கி அவள் கண்ணோடு கண்பார்த்தான் அவன்.

"கீர்த்தி... உன்னை திகட்டத் திகட்ட லவ் பண்ணனும், உன்கூட சந்தோஷமா வாழணும், மகதிக்கு ஒரு அம்மா கிடைச்சமாதிரி, எனக்கு நீ வொய்ஃபா கிடைக்கணும்.. என்னைக் கல்யாணம் பண்ணிட்டு தினம்தினம் என்கூட சண்டைபோட உனக்கு ஓகேவா?"

கீர்த்தி அழுகையினூடே சிரித்தாள்.

"சண்டை தான் போடணுமா தினமும்?"

"ஹும், நீங்க ஒத்துக்கிட்டா தினமும் வேற விஷயமும் செய்யலாம்..!"

சொல்லிவிட்டு அவன் கண்ணடிக்க, கன்னங்கள் சிவக்க அவன்மீதே சாய்ந்துகொண்டு வெட்கத்தில் சிரித்தாள் கீர்த்தி.

"அட, தினமும் நல்லா ஃபில்ட்டர் காபி போடலாம்னு சொல்ல வந்தேன் கீர்த்தி.."

அவன் மீண்டும் சிரிக்க, அவள் பொய்யாக முறைக்க, அவள் நெற்றியில் முத்தமிட்டவன் புருவத்தை உயர்த்தி மறுபடி, "என்ன? ஃபில்ட்டர் காபிக்காகவாச்சும் என்னைக் கட்டிக்கலாம்ல?" என்றிட, அவளும் சிரிப்போடு, "கட்டிக்கவா.. இப்படியா?" என்றவாறு அவனை இடையோடு கைகோர்த்து அணைத்துக்கொண்டு, சவாலாகப் புருவத்தை உயர்த்திட, அவன் பெருமூச்சு விட்டான் பேச்சின்றி.

"கீர்த்தி.. ஒருமுறை தவறிப்போய் ரெண்டாம் வாய்ப்பா வாழ்க்கை உன்னை எனக்குக் குடுத்திருக்கு. இனியொரு நிமிஷம் கூட உன்னை விட்டு இருக்க மாட்டேன் நான். ஐ லவ் யூ, ஐ லவ் யூ, ஐ லவ் யூ! ஆயிரம் தடவை கத்தி சொன்னாலும் பத்தாது... அத்தனை லவ் உன்மேல! எப்ப சொல்றயோ அப்ப கல்யாணம் பண்ணிக்க ரெடியா இருக்கேன். இனி நான் மொத்தமா உன் சொந்தம்!"

தன்னை முழுமையாக அவளுக்கெனத் தந்து அவள்முன் மண்டியிட, அவள் ஆச்சரியம் குறையாமல் நின்றாள்.

"கீர்த்தி... மகதிக்கு அம்மாவா, எனக்கொரு நல்ல ஃப்ரெண்டா, பார்ட்னரா, மனைவியா, எங்ககூட உன் வாழ்க்கையை பகிர்ந்துக்க சம்மதமா?" என்றபடி சட்டைப்பையிலிருந்து ஒரு மோதிரத்தை அவன் எடுத்து நீட்ட, கீர்த்தி வாயடைத்துப்போனாள். கண்களில் நீர்வழியத் தலையசைத்தவள், "சம்மதம்.. நூறு, ஆயிரம், லட்சம் தடவை சம்மதம்.." என்றிட, அவள் விரலில் அதை அணிவித்துவிட்டு எழுந்து அவளை அணைத்துக்கொண்டான் நெஞ்சோடு.

"அஞ்சு வருஷம் முன்னாடி என் மூஞ்சில தண்ணி ஊத்துனதுக்கு தேங்க்ஸ்!"

அவன் நெஞ்சோடு சிரித்தாள் அவள்.
"யூ ஆர் வெல்கம்!"

"ஹேய்.. என்ன நடக்குது இங்க?" என்றபடி மகதி படியேறி வர, கீர்த்தி பூரிப்புடன் தன் கையிலிருந்த மோதிரத்தைக் காட்டினாள் அவளிடம்.

மகதி வியப்புடன் மாறனிடம் திரும்பினாள்.

"இது அம்மாவோட மோதிரம் தானே?"

"ம்ம்.. நான் சரியாத்தானே தந்திருக்கேன்?"

ஆனந்தக் கண்ணீருடன் ஆமெனத் தலையசைத்தவள், இருவரையும் சேர்த்து அணைத்துக்கொண்டாள்.
"லவ் யூ அண்ணா.. லவ் யூ அண்ணி!"

"லவ் யூ மகதிக் குட்டி!" என இருவரும் ஒரே குரலாக கூறிட, இருவரின் இதழ்களிலும் குறுநகைகள் பிறந்தன பிரதிபலிப்புகளாய்.

கீர்த்தி மகதியின் தலையை அன்பாக வருடியபடி மாறனைப் பார்க்க, இருவரையும் திருப்தியான பார்வை பார்த்து, கண்களில் காதலால் பொங்கும் கண்ணீர்த்துளிகளுடன் தன் காதலியின் நெற்றியுடன் நெற்றி முட்டினான் அந்தக் காதலன்.

*********முற்றும்********



குறுநாவல்கள் வரிசையில் இரண்டாவது கதை!!! டக்குனு ஒரு வாரத்துல எழுதிட்டேனா..  எனக்கே ஆச்சரியமா இருக்கு!

கொஞ்சம் அழுவாச்சி சீன்கள் இருந்தாலும், மீதியெல்லாம் சூப்பர் க்யூட்டா தான் தோணுது. அதுவும் சுபம் போட்டு கதையை முடிச்சிருக்கேன்... ஒரு 'ஃபீல்-குட்' கதை மாதிரி இருக்குல்ல?

கதையைப் பற்றிய உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவிட்டுச் செல்லவும். நிறைகுறைகள் எதுவாயினும் தாராளமாக சொல்லலாம். நான் கோபித்துக்கொள்ள மாட்டேன்! உங்கள் நேர்மையான விமர்சனங்கள் தான் என்னையும் என் எழுத்துகளையும் வளர்க்கும். வருங்காலத்தில் நல்ல கதைகளை உங்களுக்குக் கிடைக்கச் செய்யும். எனவே, உங்களை இக்கதை எவ்வாறு உணர வைத்தது என வெளிப்படையாகத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

கதை பிடித்திருந்தால், வாக்களித்து, நண்பர்களிடமும் பகிரவும். நன்றி. தேர்வுகள் முடிந்த பின்னர் சந்திப்போம்.

மருத்துவப் புத்தகங்களைக் கையிலேயே தொடாமல் போக்குக் காட்டிக்கொண்டிருக்கும் உங்கள் அன்பு எழுத்தாளர்,
மது.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro