Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

46 ஆர்த்தியின் கோணம்

46 ஆர்த்தியின் கோணம்

தியாவின் பள்ளி சேர்க்கை முடிந்தது. அவளுக்கு புதிய பள்ளி மிகவும் பிடித்து விட்டது. அது அவளுடைய பெற்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. பள்ளியை விட்டு திரும்பும் வழியிலேயே தியாவின் பள்ளிக்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தார்கள். எல்லா பொருள்களையும் இரண்டு இரண்டாக வாங்கிக் கொண்டாள் தியா, மமதிக்கும் சேர்த்து.

"மமதி எப்போ மா ஸ்கூலுக்கு வருவா?" என்றாள் தியா.

"அவ ஸ்கூலுக்கு வர டைம் ஆகும். அவ கம்ப்ளீட்டா க்யூர் ஆகணும் இல்ல? அதுக்கப்புறம் தான் அவ ஸ்கூலுக்கு வருவா"

"நம்ம எங்கம்மா போறோம்?" என்றாள் தியா.

அப்பொழுது தான் தாங்கள் வீட்டுக்கு செல்லும் வழியில் செல்லாமல், வேறு வழியில் பயணித்துக் கொண்டிருந்ததை கவனித்தாள் ஆர்த்தி.

"யாழ், நம்ம தான் ஷாப்பிங்கை முடிச்சிட்டோமே... அப்புறம், இப்போ நம்ம வேற எங்க  போய்கிட்டு இருக்கோம்?"

"ஹாஸ்பிடலுக்கு போறோம்"

"ஆனா எதுக்கு? இன்னைக்கு ஓபி ஐ  தான் மகா பாத்துக்குறேன்னு சொல்லிட்டானே..."

"ஆமாம், அவன் தான் பார்க்கப் போறான்"

"அப்படின்னா, நம்ம மமதியை பார்க்க போறோமா?"

அவளுக்கு பதில் சொல்லாமல் புன்னகைத்தான் யாழினியன்.

"அதுக்காகவா போறோம்?"

ஆமாம் என்று தலையசைத்தான் யாழினியன்.

"மமதி எப்ப பா வீட்டுக்கு வருவா?" என்றாள் தியா.

"இன்னும் ரெண்டு மூணு நாள்ல வந்துடுவா"

"நெஜமாவா?" என்றாள் தியா குதூகலமாக.

"அவ வீட்டுக்கு வந்ததுக்கு பிறகு அவளை தொந்தரவு செய்யக்கூடாது" என்றாள் ஆரத்தி.

தியா எதுவும் கூறுவதற்கு முன்,

"அவ தொந்தரவு செய்ய மாட்டா. அவ ரொம்ப நல்ல பொண்ணு. எல்லாத்தையும் நல்லா புரிஞ்சுக்கிறவ. நான் சொல்றது சரி தானே தியா?" என்றான் யாழினியன்.

ஆமாம் என்று பெருமை பொங்க தலையசைத்தாள் தியா.

மருத்துவமனையின் வாசலில் அவர்கள் இருவரையும் இறக்கிவிட்டு, காரை பார்க் செய்ய சென்றான் யாழினியன். உள்ளே சென்ற அம்மாவும், மகளும் நிலவனை கண்டார்கள். நிலவனிடம் ஓடிச் சென்ற தியாவை தூக்கிக் கொண்டான் நிலவன்.

"இன்னைக்கு உனக்கு ஓபி இல்லையா?" என்றாள் ஆர்த்தி.

"இல்ல, இன்னைக்கு எனக்கு ரவுண்ட்ஸ் மட்டும் தான்..." என்றான் நிலவன்.

"அப்படின்னா நீங்க எல்லாருக்கும் ஊசி போட போறீங்களா?" என்றாள் தியா.

"அப்படி சொல்ல முடியாது... ஆனா, அப்படித் தான்" என்ற அவனை குழப்பத்துடன் பார்த்தாள் தியா.

ஆர்த்தியும் நிலவனும் அவளைப் பார்த்து சிரித்தார்கள்.

"வலிக்காம ஊசி போடுங்க சித்தப்பா" என்றாள் தியா அவன் முகவாய் கட்டை பிடித்துக் கொண்டு கெஞ்சலாய்.

"நிச்சயமா... நான் ஊசி போட்டா வலிக்கவே வலிக்காது. உனக்கு சந்தேகமா இருந்தா, நீ மமதியை கேட்டு பாரு"

"சரி, நான் அவளை கேட்கிறேன்"

"அப்படின்னா என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?"

"இல்ல, ஏன்னா ஊசி போட்டா வலிக்கும்னு எனக்கு தெரியும்..." என்றாள் தியா.

அசடு வழிந்தபடி நிலவன் தலையை சொறிய, அவனைப் பார்த்து வாய் விட்டு சிரித்தாள் ஆர்த்தி.

"குழந்தைங்க எல்லாம் இவ்வளவு புத்திசாலியா இருந்தா, நம்ம என்ன தான் செய்யறது?" என்றான் நிலவன் பரிதாபமாய்.

அப்பொழுது அவர்களிடம் வந்தான் யாழினியன்.

"நிலவா, தியாவை உன் கூட கூட்டிக்கிட்டு போ. நாங்க இப்ப வரோம்..."

"ஓகே, வாடா செல்லம் போகலாம்..." மமதி இருக்கும் அரையை நோக்கி அவளை அழைத்துக் கொண்டு சென்றான் நிலவன்.

"நீ என் கூட வா" என்ற யாழினியனை,

"என்னை எங்க கூட்டிகிட்டு போற?" என்றாள் ஆர்த்தி.

"நீ ஒருத்தரை பாக்கணும்"

"ஒருத்தரையா? யாரை?"

"அதை நீயே தெரிஞ்சிக்குவ"

புனிதா அசைவிற்று படுத்து கிடந்த அறைக்குள் அவர்கள் இருவரும் நுழைந்தார்கள்.

"யார் இவங்க?" என்றாள் ஆர்த்தி.

"நீ தான் கெஸ் பண்ணேன் பாக்கலாம்..."

அவள் எப்படி கூற முடியும்? அவளுக்கு அவரைப் பற்றி எதுவும் தெரியாதே...

"இல்ல, என்னால கெஸ் பண்ண முடியல..." 

"புனிதா..." என்ற அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் ஆர்த்தி.

"சினேகாவோட அம்மா..."

"அவங்களுக்கு என்ன ஆச்சு?"

"கோமா..."

"என்னது? கோமாவா? எப்போதிலிருந்து?"

"பன்னெண்டு வருஷமா..."

நம்ப முடியாமல் அவரை ஏறிட்டாள் ஆர்த்தி.

"பன்னெண்டு வருஷமாவா? சினேகா அவங்களை லண்டன்ல இருந்து கூட்டிகிட்டு வந்திருந்தாளா?"

"இல்ல... அவங்க இங்க ஒரு கவர்ன்மெண்ட் ஹாஸ்பிடல்ல தான் இருந்தாங்க"

"ஆனா எப்படி?"

"அது ஒரு போலீஸ் கேஸ். ஆனா, சினேகா மட்டும் ஒரு கம்பவுண்டர் மூலமா அவங்க அம்மா மேல ஒரு கண்ணு வச்சுக்கிட்டு தான் இருந்திருக்கா"

"அப்படியா?"

"ம்ம்ம்"

"ஆனா அவங்களைப் பத்தி உனக்கு எப்படி தெரிஞ்சது?"

"அது எனக்கு தற்செயலா தான் தெரிய வந்துச்சு. நம்ம வீட்டை விட்டு கிளம்பினதுக்கு பிறகு, சினேகா நேரா அவங்க அம்மாவை பார்க்க ஆஸ்பத்திரிக்கு தான் போயிருக்கா. அப்ப தான் சஞ்சய் அவளை பாத்திருக்கான். அவளை நீன்னு நெனச்சுக்கிட்டான். சஞ்சய் நம்ம ஃபிரண்டுன்னு தெரிஞ்சதுக்கு பிறகு, அங்கிருந்து சினேகா ஓடிப் போயிட்டா. சஞ்சய் எனக்கு ஃபோன் பண்ணி உன்னை பத்தி கேட்டான். அப்போ தான் எனக்கு புனிதாவை பத்தி தெரிஞ்சது..."

"என்ன பொம்பள அவ... "

"ஆமாம். இப்போ புனிதா நம்ம கஸ்டடி..." என்று ஒரு வில்லனை போல் சிரித்த யாழினியனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் ஆர்த்தி.

"நீ இவங்களை என்ன பண்ண போற?" என்றாள்.

"சினேகா ஜெயில்ல இருக்கா... அவங்க அம்மா நம்ம கிட்ட இருக்கிற விஷயத்தை நான் அவ கிட்ட சொல்லப் போறேன்"

" ஏன்? "

"என்ன ஆர்த்தி  இப்படி கேக்குற? உன்னை ஏழு வருஷமா அடைச்சு வச்சிருந்தா. அவளுக்கு அந்த வலி எப்படி இருக்கும்னு காட்ட வேண்டாமா?"

"ஆனா, அவ செஞ்ச தப்புக்கு அவங்க அம்மா என்ன செய்வாங்க? அவ செஞ்ச அதையே நீயும் செஞ்சா உனக்கும் அவளுக்கும் என்ன வித்தியாசம்? அவ என்னை டார்ச்சர் பண்ணது உண்மை தான். ஆனா இப்போ, அவ தான் தண்டனையை அனுபவிச்சுக்கிட்டு ஜெயில்ல இருக்கிறாளே... அவ செஞ்ச தப்புக்காக, அவங்க அம்மாவை தண்டிக்கிறது கொஞ்சம் கூட நியாயம் இல்ல" என்று தவிப்புடன் கூறினாள் ஆர்த்தி.

அழகிய புன்னகையை உதிர்த்தான் யாழினியன். இது தான் ஆர்த்தி...! எவ்வளவு தான் தன்னை ஆரத்தியாய் காட்டிக் கொள்ள சினேகா முயன்றாலும், ஆர்த்தியிடம் இருக்கும் இந்த நல்ல மனம், அவளை நிச்சயம் சினேகாவிடம் இருந்து வேறுபடுத்தி காட்டிவிடும் அல்லவா...! அன்பாய் அவள் கன்னம் தொட்டான் யாழினியன்.

"நீ இப்படி தான் சொல்லுவேன்னு எனக்கு தெரியும் ஆர்த்தி. அவங்க அம்மாவை நீ தண்டிக்க வேண்டாம்னு நினைச்சா, அவங்களை நீ என்ன செய்யப் போற?"

"நீ என்ன சொல்றன்னு எனக்கு புரியல" என்றாள் குழப்பமாக.

"வெங்கட்ரராகவன் அங்கிள், இவங்களை பார்த்தா என்ன செய்வாரு? இவங்களை உன்னோட அம்மாவா நீ ஏத்துக்குவியா?"

அதைக் கேட்ட ஆர்த்தி அதிர்ச்சி அடைந்தாள். யாழினியன் என்ன கேட்கிறான்? அம்மாவா? அப்படி என்றால், அவளது அப்பா, புனிதாவை தன் மனைவியாக ஏற்றுக் கொள்வார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறானா யாழினியன்?

அவளது முக மாற்றத்தை கவனித்த யாழினியன், அவள் மனதில் இருப்பதை புரிந்து கொண்டான்.

"புனிதாவை பத்தி உன் மனசுல என்ன இருக்குன்னு இப்ப தான் நீ சொன்ன. அப்படின்னா, உங்க அப்பாவும் அப்படித் தானே யோசிப்பாரு? அவங்க ரொம்ப பாவப்பட்ட ஜென்மம்... வாழ்க்கைல எந்த நல்லதையுமே பாக்காதவங்க... சினேகா உட்பட. அவங்க இங்க இருக்கிற விஷயத்தை, வெங்கட்ராகவன் அங்கிள்கிட்ட நம்ம ரொம்ப நாளைக்கு மறைச்சு வைக்க முடியாது. அவருக்கு அவங்க இங்க இருக்கிற விஷயம் தெரிஞ்சா, அவங்களுக்கு ஏதாவது செய்யணும்னு அவர் நினைக்கலாம்... அதனால தான்..."

அவனது பேச்சை துண்டித்த ஆர்த்தி,

"அவங்களை நான் எங்க அம்மாவா ஏத்துக்கணும்னு என் மனசை நீ தயார் பண்றியா?" என்றாள்.

வாயடைத்துப் போனான் யாழினியன்.

"இல்லடா, நான் வந்து..."

"இது எங்க அப்பாவுடைய வாழ்க்கை... அவர் என்ன முடிவு வேணும்னாலும் எடுக்கலாம். எந்த முடிவா இருந்தாலும் அதை பத்தி எனக்கு கவலை இல்ல. புனிதா மேல எனக்கு எந்த வன்மமும் இல்ல அப்படிங்கிறதுக்காக, என்னால அவங்களை என் அம்மாவா ஏத்துக்க முடியாது. ஏன்னா, பெத்த பொண்ணு எவ்வளவு தான் கெட்டவளா இருந்தாலும், ஒரு அம்மாவால, அவங்க மகளை வெறுக்க முடியாது. புனிதாவும் அதைத் தான் செய்வாங்க. அது நிச்சயம் எனக்கும் எங்க அப்பாவுக்கும் நடுவுல பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஏன்னா, இந்த உலகத்திலேயே நான் மன்னிக்கவே  முடியாதுன்னு நினைக்கிற ஒருத்தி சினேகா  மட்டும் தான். அப்பா புனிதாவுக்கு ஆதரவா இருக்கணும்னு நினைச்சா, எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. அவர் அதை தாராளமா செய்யட்டும். ஒருவேளை அவரோட அந்த பாசம், சினேகா வரைக்கும் நீண்டா, அவர் தன்னுடைய இன்னொரு மகளை நிச்சயம் இழப்பாரு. எங்க ரெண்டு பேர்ல யாரு வேணும்னு முடிவு செய்ய வேண்டியது அவர் தான், ஆர்த்தியா இல்ல சினேகாவா..."

"இல்ல ஆர்த்தி... "

"சாரி யாழ்... இது தான் என்னோட முடிவான முடிவு. நான் சினேகாவை மன்னிக்க மாட்டேன்... புனிதாவையும் என்னோட அம்மாவா ஏத்துக்க மாட்டேன். எங்க அப்பாவுடைய முடிவுலையும் நிச்சயம் தலையிட மாட்டேன். என்னோட இந்த முடிவை மாத்த நீ ( என்பதை அழுத்தி) முயற்சிக்கக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன். அதை செஞ்சு, நீ என்னை காயப்படுத்த மாட்டேன்னு நான் நம்புறேன்..."

மேலும் அதைப் பற்றி விவாதிக்க விரும்பாமல், அந்த அறையை விட்டு அகன்றாள் ஆர்த்தி.

ஆர்த்தி கூறுவதில் தவறு ஏதும் இல்லை. யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒரு சூழ்நிலையில் அவள் வாழ்ந்திருக்கிறாள். இதில் வெங்கட்ரராகவனின் நிலைப்பாடு என்னவாக இருக்கப் போகிறது...? இந்த பிரச்சனை எப்படி முடிய போகிறது? என்று எண்ணி பெருமூச்சு விட்டான் யாழினியன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro