32 உருகும் இதயம்
32 உருகும் இதயம்
அஸ்வின் அவளுக்காக அர்ப்பணித்த பாடல் மூலமாக அபிநயா மிகவும் கலவரப்பட்டு போயிருந்தாள். அந்தப் பாடல், அவள் காதுகளில் ஒலிக்கவில்லை, இதயத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது...! அதிலிருந்த ஒருவரி, அவளுக்கு பயத்தை உண்டாக்கியது.
"ஒன்றாய் கூடும், ஒன்றாய் பாடும், பொன்னாள் இங்கு என்னாளோ...?"
அவளுடன் நெருக்கமாக இருக்கும் சந்தர்ப்பத்தை, நேற்று இரவு அவள் ஏற்கனவே அஸ்வினுக்கு வழங்கிவிட்டாள். மறுபடியும் அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவளுக்கு அவசியமாகிறது. தன் பதட்டத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல், அமைதியாக சென்று கட்டிலில் படுத்துக்கொண்டாள். நேற்றிரவு தூங்கியது போல் தூங்காமல், இன்று அவள் மலங்க மலங்க விழித்திருந்தாள். அவளுக்கு மட்டும் தான் தெரியும், அவன் அணைப்பில் இருக்கும் அந்த காட்சியை நினைத்து பார்க்கும் போதெல்லாம், அவளுக்கு எப்படி வியர்த்துக் கொட்டியது என்று. ஒருவேளை அவன் அவளை ஏடாகூடமாக தொட்டிருப்பானோ...? முத்தமிட்டிருப்பானோ...? இருக்கலாம்... அவன் தான் நேற்று அவளை எந்த தயக்கமும் இல்லாமல் முத்தமிட்டானே. அப்படி இருக்கும் பொழுது, அவன் ஏன் அதை அவள் தூங்கும் போது செய்ய மாட்டான்? ஆனால், அவனுக்கு நேரடியாகவே முத்தமிடும் தைரியம் இருக்கும் பொழுது, அவள் தூங்கும் போது அவன் ஏன் அதை செய்யப்போகிறான்...? அவள் மனதில் பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்தது.
அவள் மெதுவாக, ஓரக்கண்ணால் அவனை பார்த்தாள். அவன் இன்னும் தூங்காமல் இருக்கவே, அவளுக்கு வயிற்றில் புளியை கரைத்தது. அவள் மன நிலையை புரிந்து கொண்டு, அஸ்வின் கண்களை மூடிக் கொண்டான். எப்படி இருந்தாலும், இன்னும் சில நேரத்தில் அவள் கட்டிலில் புரள ஆரம்பிக்க தானே போகிறாள்... ஆனால், அவ்வளவு சுலபமாக, அபிநயா தூங்கிவிடவில்லை. அவள் கண்கள் மெல்ல சொருக ஆரம்பித்தது. அப்பொழுது அவள் வயிற்றின் மேல், அஸ்வினின் கை விழுந்தது. திடுக்கிட்டு பார்த்தவள், அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை புரிந்து கொண்டாள்.
அந்த மிகக்குறைந்த இரவு விளக்கின் வெளிச்சத்தில் கூட அவன் முகம் ஒளிர்ந்தது. அஸ்வின் உண்மையிலேயே தூங்கிக் கொண்டு தான் இருக்கிறானா என்பதை தெரிந்துகொள்ள, வேண்டுமென்றே இருமினாள். அஸ்வின் முகத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை. அவளுக்குத் தெரியும், அவள் இருமினால் அஸ்வின் நிச்சயமாக சும்மாயிருக்க மாட்டான். அவளுக்கு தண்ணீர் கொடுக்க எழுந்து விடுவான். அவள் வயிற்றின் மீது இருந்த அவன் கையை தழுவிக்கொண்டாள். மெல்ல அவன் அருகில் நெருங்கி, அவன் மூக்கை முத்தமிட்டாள்.
சட்டென்று அவள் கண்கள் குளமாயின. அவளுக்கு அஸ்வின் மீது காதல் ஏற்பட்டு விட்டது என்பதில் அவளுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவள் மூளை சொல்வதை கேட்க, அவளது பாவபட்ட இதயம் தயாராக இல்லை. இதில் அவளுடைய தவறு என்ன இருக்கிறது? அவளுடைய கணவன் இந்த அளவிற்கு ரசிக்கத்தக்க வகையில் இருந்தால், அவள் எப்படித் தான் பொறுமை காக்க முடியும்? எதைப் பற்றியும் யோசிக்காமல், அவனை நோக்கி திரும்பி, அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, அவன் மார்பில் முகம் புதைத்தாள். சந்தேகமில்லாமல் அவள் அன்று நிம்மதியாக உறங்கினாள்.
நடு இரவில் அஸ்வினின் தூக்கம் தடைப்பட்டது. அபிநயா தன்னை அணைத்துக்கொண்டு உறங்குவதை பார்த்து புன்னகை புரிந்தான். அவள் எப்போதும் அப்படித் தானே உறங்குவாள்...? அப்படி இருக்க அவனுக்கு ஏன் அவள் மீது சந்தேகம் வரப்போகிறது? அவன் அவளை ஆரத் தழுவிக் கொண்டு தூங்கி போனான்.
மறுநாள் காலை
அஸ்வினின் உறக்கம் கலைந்தாலும், அவன் இன்னும் கட்டிலைவிட்டு இறங்கவில்லை. முழுவதும் தயாரான நிலையில் அறைக்குள் நுழைந்தாள் அபிநயா. அவளைப் பார்த்து டக்கென்று எழுந்து அமர்ந்தான் அஸ்வின், அவள் எங்கு செல்கிறாள் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில். அவன் அவளை தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று தெரிந்த போதும், அவனிடம் ஏதும் சொல்ல வேண்டுமென்று எண்ணவில்லை அவள். அவள் அங்கிருந்து செல்ல எத்தனித்த போது, அஸ்வின் கதவை சாத்தி, அதன் மீது சாய்ந்து கொண்டு நின்றான், அவளுக்கு வழிவிடாமல்.
"என் வைஃப் எங்க போறான்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" என்றான்.
"நாங்க கோயிலுக்கு போறோம்"
"என்னை தனியா விட்டுட்டா?"
"ஆமாம்..."
"ஏன் பொண்டாட்டி...?" அதை கேட்டு கண்களை சுழற்றினாள் அபிநயா.
"ஏன்னா, உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லன்னு எனக்கு தெரியும்"
"எனக்கு எது பிடிக்கும், பிடிக்காதுன்னு தெரிஞ்சு நடந்துக்கிற மாதிரி தெரியுது...?"
"ஆமாம்... அது எனக்கு சாதகமாக இருந்தா மட்டும்..."
"ஒரு விஷயம் சொல்றேன் கேளு. என் பொண்டாட்டி கூட போறதா இருந்தா நான் எங்க வேணாலும் போவேன். அது எனக்கு பிடிக்குதா பிடிக்கலையாங்குறது விஷயமே இல்ல"
"கோவில்ல கூட என்னை நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா?"
"ஓகே ஃபைன். உனக்கு நான் ஒரு மணி நேரம் டைம் தரேன். அதுக்குள்ள வந்துடணும். இல்லனா நான் அங்க வந்துடுவேன்..."
தன் கண்களை சுழற்றி விட்டு,
"இப்ப நான் போலாமா?" என்றாள்.
கதவிலிருந்து நகர்ந்து கொண்டு அவளுக்கு வழி விட்டு நின்றான். அவள் வரவேற்பு அறையை நோக்கி நடக்க, அஸ்வின் அவளை பின் தொடர்ந்தான்.
"தம்பி, உங்களுக்கு டிஃபன் எடுத்து வச்சிருக்கேன். நீங்க சாப்பிடுங்க. நாங்க சீக்கிரம் வந்துடறோம்." என்றார் பத்மா.
"நான் சாப்பிட்டுகிறேன்மா. நீங்க எப்படி போறீங்க? நான் டிரைவரை வரச்சொல்லட்டுமா?"
"பரவால்ல தம்பி... கோவில், பக்கத்துல தான்."
"அப்பா என்ன செய்றார்?" என்றான்.
"இப்ப தான் டிபன் ஊட்டிவிட்டேன். அவர் தூங்கிடுவார்"
"சரி, நான் குளிச்சிட்டு வந்து சாப்பிடுறேன்" என்றான்.
"எங்க கூட நீங்களும் வந்தா நல்லா இருக்கும். ஆனா, உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லன்னு அபி சொன்னா." என்றார் மங்கை.
அபிநயா புன்முறுவல் பூப்பதை பார்த்தான் அஸ்வின்.
"அவ சொன்னது சரி தான். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்ல... ஆனா, அபி மேல இருக்கு. அவள் எதையாவது நம்பினா, நான் நிச்சயம் அதை மதிப்பேன். நீங்க என்னை கூப்பிடிருந்தா, நான் நிச்சயம் வந்திருப்பேன்."
அவனுடைய பதிலால் தான் உணர்ச்சிவசப்பட்டுவிட்டதை மறைக்க படாத பாடு பட்டாள் அபிநயா.
"நீங்க சொல்றத கேட்க மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்களை பத்தி சீக்கிரமே அவ முழுசா புரிஞ்சுக்குவா." என்றார் மங்கை.
"பரவாயில்ல அத்தை. நான் அடுத்த தடவை உங்களோட நிச்சயம் வரேன்"
"சரிங்க தம்பி, நாங்க போயிட்டு வரோம்"
சரி என்று அஸ்வின் தலையசைக்க, அவர்கள் கிளம்பிச் சென்றார்கள். அஸ்வின், ராமநாதன் அறைக்கு சென்று அவர் எப்படி இருக்கிறார் என்று தெரிந்து கொள்ள விரும்பினான். அங்கு, அவர் தூங்காமல் விழித்திருப்பதை பார்த்தான்.
"அப்பா, நீங்க இன்னும் தூங்கலயா?"
இல்லை என்று தலையசைத்தார் ராமநாதன்.
"நான் குளிச்சிட்டு வந்துடுறேன்"
ராமநாதன் மறுபடியும் தலையசைத்தார்.
தங்கள் அறைக்குச் சென்று, குளித்துவிட்டு, தனக்காக பத்மா வைத்துவிட்டு சென்றிருந்த பூரி, உருளைக்கிழங்கை சாப்பிட்டான். அப்போது அவனுக்கு மனோஜிடம் இருந்து அழைப்பு வந்தது.
"சொல்லுடா, டார்ச்சர்..." என்றான்.
"என்னது..? நான் டார்ச்சரா?"
"பின்ன என்ன? என் பொண்டாட்டி கூட என்னை நிம்மதியா இருக்க விடுறியா?"
"என்னமோ நாங்க உன்னை உன் பொண்டாட்டி கூட இருக்க விடாத மாதிரி சீன் போடாத... நீ உன் மாமியார் வீட்டுக்கு போயி ரெண்டு நாளாச்சு. ஞாபகம் இருக்கா...?"
"ஜஸ்ட் டூ டேஸ்..."
"அது ஜஸ்ட் டூ டேஸ் இல்ல... அஸ்வினுடைய டூ டேம் டேஸ்..."
களுக்கென்று சிரித்தான் அஸ்வின்.
"நீ ரொம்ப மாறிட்ட, மச்சி. கல்யாணத்துக்கு அப்புறம் டைம் வேஸ்ட் பண்றத பத்தி கவலைப்பட மாட்டேங்கிற... நீ அஸ்வின் இல்ல... மிஸ்டர். அபிநயா... "
"என்னது...? மிஸ்டர் அபிநயாவா?" என்று கலகலவென சிரித்தான் அஸ்வின்.
"அவங்க மிஸஸ். அஸ்வின்னா, நீ, மிஸ்டர் அபிநயா தானே?"
"நீ புது ஃபார்முலாவை உருவாக்கிட்ட... நாட் பேட்... நீ தாரளமா கல்யாணம் பண்ணிக்கலாம்..."
"சான்சே இல்ல... எனக்கு ரொம்ப முக்கியமான ஒரு வேலை இருக்கு. எங்க அஸ்வினை அவன் பொண்டாட்டியோட மயக்கத்திலிருந்து மீட்குறது தான் எனக்கு முக்கியமான வேலை. இல்லனா, அஸ்வின் பில்டர்ஸ் கம்பெனி தள்ளாட்டம் போடும்."
"அப்போ, இந்த ஜென்மம் ஃபுல்லா நீ பிரம்மச்சாரி தான்..." சிரித்தான் அஸ்வின்.
"நீ என்னை சபிக்கிறாயா...?"
"போதும், உளறலை நிறுத்து. என்ன விஷயம் சொல்லு?"
"உனக்கு அனுப்பி இருக்கிற மெயிலை செக் பண்ணிட்டு, உன்னுடைய டெசிஷனை சொல்லு."
"சரி சொல்றேன்"
"ஹேவ் ய நைஸ் டே"
"பை"
அழைப்பைத் துண்டித்து விட்டு, தன் அறைக்கு செல்ல எத்தனித்த போது, ராமநாதனின் நினைவு வரவே, அவர் தூங்கிவிட்டாரா, இல்லையா, என்று பார்க்க அவர் அறையை நோக்கி சென்றான் அஸ்வின்.
அங்கு ராமநாதன் மூச்சுவிட திணறிக் கொண்டிருப்பதை பார்த்து, அவரை நோக்கி பாய்ந்தோடினான்.
"உங்களுக்கு என்ன பண்ணுது பா?" என்றபடி அவர் நெஞ்சை தடவிக்கொடுத்தான்.
அவருக்கு என்ன ஆகிறது என்று அஸ்வினுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் மூச்சு விட சிரமப் படுகிறார் என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது. அவரை எழுப்பி அமர வைத்தது தான் தாமதம், ராமநாதன் வாயிலெடுத்தார்.
கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற அவசரத்தில், அவருக்கு உணவை ஊட்டி விட்டு, கொஞ்சம் கூட நேரம் கொடுக்காமல், அவரை உடனடியாக படுக்க வைத்து விட்டிருக்கிறார் பத்மா. அதனால் தான், உணவு செரிக்காமல் அவர் வாயிலெடுத்து விட்டார். நல்ல வேலை, சரியான நேரத்திற்கு அவன் அங்கு வந்து சேர்ந்து விட்டான். படுத்துக் கொண்டே அவர் வாயிலெடுத்திருந்தால், அவருக்கு அது ஆபத்தாய் முடிந்திருக்கும்.
இன்னும் கூட ராமநாதனால் சீராக மூச்சு விடமுடியவில்லை. அவர் அணிந்திருந்த உடை பாழாகிவிட்டிருந்தது. அவர் அணிந்திருந்த சட்டையை கழட்டி ஓரமாக வைத்துவிட்டு, அவரை மெல்ல தூக்கி சக்கர நாற்காலியில் அமர வைத்தான் அஸ்வின். ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து வந்து, ஒரு துணியால் அவர் முகத்தை துடைத்துவிட்டான். கட்டிலில் இருந்த மெத்தைவிரிப்பை எடுத்து அவர் சட்டையுடன் வைத்துவிட்டு, அங்கிருந்த அலமாரியில் வேறு ஒரு விரிப்பு இருக்கிறதா என்று தேடிப் பார்த்தான். அங்கு இன்னொன்று இருந்தது. அதை கட்டில் மேல் விரித்துவிட்டு, ராமநாதனை எழுப்ப முயன்றான்.
பாதி இயக்கம் நின்று போயிருந்த அவருடைய வலது கையால் இராமநாதன் அஸ்வினின் கையை பற்றிக் கொண்டு, அவனை அதை செய்ய விடாமல் தடுத்தார். அவரைக் கேள்விக்குறியுடன் பார்த்தான் அஸ்வின்.
"நீங்க இன்னும் கொஞ்ச நேரம் உட்கார நினைக்கிறீங்களா?"
அவர் இல்லை என்று தலையசைத்தார். அஸ்வினின் கையைப் பற்றி தன் கன்னத்தில் வைத்துக் கொண்டார். அவர் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார் என்பது அவனுக்குப் புரிந்தது. அவர் அவனிடம் ஏதோ சொல்ல முயன்றார். அஸ்வின் அவர் முன் முழங்காலிட்டு அமர்ந்தான். அவர் என்ன சொல்ல நினைக்கிறார் என்பதை புரிந்து கொள்ள அவனுக்கு ஒன்றும் கடினமாக இல்லை.
"நீங்க எனக்கு தேங்க்ஸ் சொல்ல வேண்டாம். நான் உங்களை அப்பான்னு கூப்பிடுறது வெறும் உதட்டளவில் இல்ல. அபியோட அப்பா, எனக்கும் அப்பா தான். என் அப்பாவுக்கு நான் இதெல்லாம் செய்ய மாட்டேனா?"
ராமநாதனின் கண்ணில் இருந்து ஒரு துளி நீர் வழிந்தது. மேலும் சில விம்மல்களை கேட்டபோது அஸ்வினுக்கு குழப்பமானது. பின்னால் திரும்பி பார்த்த பொழுது, அங்கு அபிநயாவுடன், மங்கையும், பத்மாவும் கலங்கிய கண்களுடன் நின்றிருந்தார்கள்.
"நான்... வந்து..." என்று தடுமாறினான் அஸ்வின்.
அவன் சற்றும் எதிர்பாராத வண்ணம், பத்மா விரைந்து சென்று, அவன் கையை பற்றிக்கொண்டார்.
"என்னை மன்னிச்சிடுங்க தம்பி. ஆரம்பத்தில் உங்களை பத்தி நான் தப்பா நினைச்சேன். உங்கள பத்தி அப்படி நெனச்சதுக்காக என்னை மன்னிச்சிடுங்க" என்று விம்மினார்.
அஸ்வின் தர்ம சங்கடமாக உணர்ந்தான்.
"அம்மா, ப்ளீஸ் அழாதீங்க" என்றான்.
"இல்ல தம்பி... நாங்க உங்கள தப்பா எடை போட்டுட்டோம். நீங்களும் உங்க தம்பி மாதிரியே இருப்பீங்கன்னு நினைச்சோம். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, நீங்க செஞ்சதை செய்ய, யாராயிருந்தாலும் தயங்குவாங்க. கடவுள் உங்களை சந்தோஷமா வைக்கட்டும் தம்பி" என்றார் உணர்ச்சிப் பெருக்குடன் பத்மா.
அஸ்வினுக்கு தெரியும், அவனுக்கு பிடித்த இரு கண்கள், கண்ணீரை சிந்தியபடி, அவனையே பார்த்துக் கொண்டிருக்கின்றன என்று. மேலும் தன் மனைவியை அழ வைக்க விரும்பாமல் அங்கிருந்து சென்றான் அஸ்வின். அவன் அங்கிருந்து செல்லும் வரை, அவனையே பின்தொடர்ந்தன அபிநயாவின் கண்கள். ஆனால், அஸ்வின் அவளை திரும்பிப் பார்க்கவில்லை. அவள் அழுவதை பார்க்க அவனுக்கு பிடிக்கவில்லை.
"கடவுளே... ஏதாவது அதிசயத்தை நிகழ்த்தி, எங்களை எப்பொழுதும் ஒன்றாகவே வைத்திருங்கள்" என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டாள் அபிநயா.
அவளுடைய வேண்டுதல், கடவுளின் காதுகளை எட்டி விட்டது என்பது அவளுக்கு தெரியாது. ஆம்... அவள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்கான ஆயத்தங்கள் துவங்கிவிட்டன... அஸ்வினின் இரும்பு வளையத்திலிருந்து தப்பிவிட்டான் தருண்...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro