25 மூன்று முட்டாள்கள்
25 மூன்று முட்டாள்கள்
அபிநயாவுக்கு வயிற்றைக் கலக்கியது, அஸ்வினை பார்த்த போது. கடவுளே... இவர் எங்கிருந்து வந்தார்?
அவள் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட அஸ்வின், முதலில் எதுவும் புரியாமல் குழம்பினான். எதற்காக இவள் இப்படி புளுகி கொண்டிருக்கிறாள்? அவன் தன் கண்களை ஓட விட்டான். மரத்தின் பின்னால் இருந்த தருணின் நிழல், அவன் கண்ணில் பட்டது.
"ஓ... மேடம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறார்களா...?"
அவன் தொண்டையில் இருந்து வெளிவரத் துடித்த சிரிப்பை அடக்கிக் கொண்டான். எவ்வளவு அருமையான சந்தர்ப்பம் இது...! இப்பொழுது அவன் அவளருகில் சென்றால் அவள் என்ன செய்வாள்? அவளால் நிச்சயம் தப்பி ஓட முடியாது. ஏனென்றால் அங்கு தான் தருண் இருக்கிறானே...! அவன் முன், இவள் அமைதியாக இருந்து தானே ஆகவேண்டும்...?
அஸ்வின் அவளை நோக்கி முன்னேற தொடங்கிய பொழுது, அவள் கண்கள் அகல விரிந்தன. அவள் பின்னோக்கி நகரும் முன், வேக நடை போட்டு சென்று, அவள் இடையை சுற்றி வளைத்து, அவளைத் தடுமாற வைத்தான் அஸ்வின்.
தருண் நின்றிருந்த மரத்தின் பக்கம் தன் கண்களை திருப்பினாள் அபிநயா. அந்த கடங்காரன் இன்னும் அங்கே தான் நின்றிருந்தான். ஏதும் செய்ய முடியாமல் மென்று விழுங்கினாள் அவள்.
"பொண்ணுங்க பிபிசியை விட வேகமா, எல்லா செய்தியையும் பரப்புவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். அப்போ நான் அத நம்பல... ஆனா இப்ப நம்புறேன். அந்த மாதிரி விஷயத்தை எல்லாம் கூடவா எல்லார்கிட்டயும் ஷேர் பண்ணுவ? அந்த ஒன்னை தவிர மத்த விஷயத்தை பத்தி நீ அவங்ககிட்ட பெருமையா பேசலாம். முக்கியமா நேத்து ராத்திரி நமக்குள்ள நடந்ததை மட்டும் யார்கிட்டயும் சொல்லிடாத. உன்னோட ஃப்ரண்ட்ஸுங்க, உன்னை பார்த்து பொறாமை பட போறாங்க, இவ்வளவு திறமையான புருஷனான்னு...! அந்த ஸ்பெஷல் மூமென்ட்ஸ் எல்லாம் நமக்குள்ளேயே வச்சுக்கோ. சும்மா சொல்லக் கூடாது, நீ எல்லா விஷயத்துலயும் ரொம்ப போல்ட்...! கத்தியால குத்துறதா இருக்கட்டும், உன் புருஷனை காதலிக்குறதா இருக்கட்டும்...! நீ ரொம்ப போல்ட்..."
பல்லை கடித்துக் கொண்டு கோபமாக அவனைப் பார்த்தாள் அபிநயா.
அவள் கோபத்திற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காமல்,
"நான் என்ன அவ்வளவு ஹாண்ட்சமாவா இருக்கேன்? எல்லார்கிட்டயும் சொல்லி பெருமைப்பட்டுக்கிட்டு இருக்க...? நானும் சொல்லணும், நீயும் ரொம்ப அழகா இருக்க..."
தன் கன்னத்தை, அவள் கன்னத்துடன் உரசினான். தன் கண்களை இறுக மூடிக்கொண்டு, அஸ்வினின் சட்டையை கெட்டியாகப் பற்றிக் கொண்டாள். அவள் முகத்தை அழகாய் பற்றி, நெற்றியில் முத்தமிட்டான். அவளுக்கு மேலும் அதிர்ச்சியூட்டும் வண்ணம், அவளை தன் கையில் அள்ளிக்கொண்டு, அறையின் உள்ளே நுழைந்தான். அவளை கீழே இறக்கி விட்டு, கதவை சாற்றி திரையிட்டு மூடினான். அவனை கோபத்துடன் தள்ளிவிட்டாள் அபிநயா.
"என்ன தைரியம் இருந்தா நீங்க இப்படி எல்லாம் செய்வீங்க?"
"நான் அப்படி எதுவும் தப்பா செய்யலயே?"
"எதுக்கு என்கிட்ட ரொமான்டிக்கா நடந்துக்குறீங்க?"
"எத பத்தி சொல்ற? நேத்து ராத்திரி நமக்குள்ள நடந்ததை சொல்றியா? இல்ல, இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்ததை சொல்றியா?"
"நேத்து ராத்திரி நமக்குள்ள எதுவும் நடக்கல... அது உங்களுக்கும் தெரியும்"
"அட, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, நீ தானே உன் ஃபிரண்டு கிட்ட சொல்லிகிட்டு இருந்த..."
"நான் தருணை வெறுப்பேத்த பொய் சொன்னேன்..."
"தருணா...?" தனக்கு எதுவும் தெரியாதது போல் கேட்டான்.
"மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டு இருந்தான்..."
"அதனால...?"
"அவன் நேத்து என்னை கெட்டவளா காட்ட முயற்சி பன்னான்ல, அதுக்கு பதிலா அவனை வெறுப்பேத்த நினச்சேன்..."
"அப்படியா? அது எனக்கு எப்படி தெரியும்? முன்னாடியே என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல?"
"உங்களுக்கு எதுவும் தெரியாதுன்னா, ஏன் அப்படி நடந்துகிட்டீங்க, ஏதோ நமக்குள்ள உண்மையாவே எல்லாம் நடந்த மாதிரி?"
"நேத்து ராத்திரி தூக்கத்துல என்னை அறியாம நான் அதெல்லாம் செஞ்சிட்டேன்னு நினைச்சேன்... உனக்கும் அதெல்லாம் பிடிச்சதனால தான் பாராட்டித் தள்ளுறேன்னு நினைச்சேன்..."
அதை கேட்டு வாய் பிளந்தாள் அபிநயா.
"உங்கள பத்தி எனக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு. என்கிட்ட வந்திங்க, எனக்கு கெட்ட கோவம் வரும்"
அஸ்வினின் காதலைப் பற்றி தனக்கு தெரியும் என்ற அர்த்தத்தில் அவள் கூறினாள். ஆனால், அஸ்வின் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
"நானும் உன்னை பத்தி நல்லா தெரிஞ்சுகிட்டேன் நீ ரொம்ப குறும்புக்காரி..." அவள் மூக்கை செல்லமாக கிள்ளினான். அவன் கையைத் தட்டிவிட்டாள் அபிநயா.
"எதுக்காக உங்க அம்மா வீட்டுக்கு போக மாட்டேங்கிற?"
பதில் சொல்லாமல் அமைதி காத்தாள் அபிநயா.
"நான் வந்தா நீயும் என்கூட வருவ தானே?"
தன் தலையில் அடித்துக் கொண்டாள் அபிநயா.
"அவங்க உன்னை கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்தினதால தான் நீ அவங்க மேல கோவமா இருக்கேன்னு எனக்கு தெரியும். இப்போ தான் மாப்பிள்ளை மாறியாச்சே... நீயும் உன் மனச மாத்திக்கலாமே..."
"நான் உங்க அட்வைஸை கேட்டேனா?"
இல்லை என்று கிண்டலாக தலையசைத்தான் அஸ்வின்.
"என்னுடைய பர்சனல் விஷயத்துல நீங்க தலையிடாதீங்க"
"எவ்வளவு நாள் வரைக்கும்?" என்றான் சீரியசாக.
"நான் உங்களை என் புருஷனா ஏத்துக்கிற வரைக்கும்"
"தேங்க்ஸ்..."
"எதுக்கு?"
"என்னோட கோலை ஃபிக்ஸ் பண்ணதுக்கு. இனிமே நான் ஈஸியா என் கோலை ரீச் பண்ணிடுவேன்ல..."
"ஈஸியாவா? நிஜமாவா?" என்று கிண்டலாக சிரித்தாள்.
ஆமாம் என்று தலையசைத்தான் அஸ்வின்.
"பகல் கனவு காண்றதை நிறுத்துங்க" என்று அவள் பல்லை கடித்துக் கொண்டு கூறியதை கேட்டு புன்னகைத்தான் அஸ்வின்.
......
தருண் உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தான். அஸ்வின் அபிநயாவிடம் பேசிய விதத்தை பார்த்து அவன் குழம்பிப் போனான். அஸ்வின் இப்படி எல்லாம் ரொமான்டிக்காக பேசுவான் என்று அவன் கனவிலும் நினைத்ததில்லை. அவன் இப்படி நடந்து கொண்டால், அபிநயா அவன் வலையில் விழுந்து விடுவாள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஆனால், அவள் ஏற்கனவே அவன் வலையில் விழுந்து விட்டாள் போல தெரிகிறதே. அன்று மனோஜும், அருணும், அஸ்வின் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாக பேசிக்கொண்டதை அவன் காதால் கேட்டிருந்தான். அஸ்வின் வேறொரு பெண்ணை காதலிப்பது உண்மை என்றால், அவன் ஏன் அபிநயாவின் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறான்? அஸ்வின் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதை பற்றி அபிநயா பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை போல தெரிகிறதே. உண்மையிலேயே அவர்கள் சந்தோஷமாகத் தான் இருக்கிறார்களா? அபிநயா அஸ்வினை ஏற்றுக் கொண்டு விட்டாளா? அபிநயாவின் அழகில் மயங்கி அஸ்வின் அவனுடைய காதலை மறந்து விட்டானா? அஸ்வின் பணக்காரன் என்பதால் அவள் அவனுடைய பழைய காதலைப் பற்றிப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை போலிருக்கிறது. என்ன தான் நடக்கிறதோ தெரியவில்லையே.
அப்போது மனோஜ் ஒரு ஃபைலுடன் வருவதை பார்த்தான் தருண். மனோஜ் அஸ்வினின் அறையை நோக்கி சென்றான். அங்கு அபிநயா அமர்ந்திருப்பதை பார்த்து,
"குட்மார்னிங், அண்ணி" என்றான்.
அவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் தன் முகத்தை திருப்பிக் கொண்டாள் அவள். சட்டென்று அவள் மனதில் ஒரு எண்ணம் உதித்தது. அவள் முகம் பிரகாசமானது. அஸ்வினை பற்றி மனோஜிடம் கேட்டால் என்ன? அவனைப் பார்த்து சிரித்தாள். திடீரென அவனை பார்த்து அவள் சிரித்தவுடன், ஒன்றும் புரியாமல் நின்றான் மனோஜ். அவனும் பதிலுக்கு சிரித்தான். அபிநயா அவனிடம் பேச எத்தனித்த போது, அங்கு அஸ்வின் வந்தான்.
"என்ன விஷயம், மனோ?"
"இந்த ஃபைலில் உன்னோட சிக்னேச்சர் தேவைப்படுது. இன்னைக்கு நீ ஆஃபீசுக்கு வர மாட்டேன்னு தெரியும். அதான் நானே நேர்ல வந்தேன்."
"எஸ் "
அவனிடமிருந்து ஃபைலை பெற்றுக்கொண்டு, அதில் தன் கையொப்பமிட்டான் அஸ்வின்.
மனோஜ் கூறியதைக் கேட்டு மென்று விழுங்கினாள் அபிநயா. இன்று அஸ்வின் அலுவலகம் செல்ல போவதில்லையா? அடக்கடவுளே... அறையினுள் அஸ்வின்... அறைக்கு வெளியே தருண்... இப்போது அவள் என்ன செய்யப்போகிறாள்? அஸ்வினுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது தருண் எவ்வளவோ தேவலாம். அவள் தருணை சுலபமாக கையாண்டு விடுவாள். அதனால் அறையை விட்டு வெளியேறினாள் அபிநயா.
சிறிது நேரம் கழித்து, மனோஜ் அருணின் அறையை நோக்கி செல்வதை கவனித்தாள். அஸ்வினை பற்றி அவர்களிடம் கேட்க, இதை விட்டால் அவளுக்கு நல்ல சந்தர்ப்பம் அமையாது. அவர்கள் நிச்சயம் அவளிடம் உண்மையை கூறுவார்கள் என்று அவள் நம்பினாள். அவள் அருணின் அறைக்கு செல்ல நினைத்த பொழுது, மனோஜை, தருண் பின்தொடர்வதை அவள் பார்த்தாள். இவன் எதற்காக அங்கு செல்கிறான்? ஒருவேளை இவன் அஸ்வினின் காதல் விஷயத்தை பற்றி கேட்க போகிறானோ? ஆமாம், அஸ்வின் தன்னிடம் ரொமான்டிக்காக இருப்பதை பார்த்து, அவனும் குழம்பித் தான் போயிருப்பான். அபிநயா ஆர்வமானாள். தருண் அருணின் அறைக்குள் நுழையும் வரை காத்திருந்தாள். அருணின் அறையை நோக்கி சென்று, சத்தமின்றி வெளியே நின்றுகொண்டு அவர்கள் பேசுவதை கேட்கலானாள்.
தருண் வருவதை பார்த்து, மனோஜும் அருணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"இப்ப நீ எப்படி இருக்க என்றான்?" மனோஜ்.
"நல்லா இருக்கேன்... நான் உங்ககிட்ட ஒன்னு கேக்கணும்"
"என்ன?"
"எதுக்காக அஸ்வின் அபியை கல்யாணம் பண்ணிகிட்டான்?"
"ஏன்னு உனக்கு தெரியாது? எல்லாம் உன்னால தான். நீ தான் கல்யாணத்த பாதியில விட்டுட்டு ஓடி போயிட்டியே" என்றான் மனோஜ்.
"ஆமாம்... நீ உன் கேர்ள் ஃபிரண்டு கூட ஓடிப் போனா, நாங்க வேற என்ன செய்யறது?" அருண்.
"உனக்கு தெரியுமா, ஜனங்க உங்க பாட்டிய எவ்வளவு கேவலமா பேசினாங்கன்னு?" மனோஜ்.
"ஆனா, அஸ்வின் தான் வேற ஒரு பெண்ணை காதலிக்கிறானே...?" - தருண்.
மனோஜும், அருணும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டார்கள். இந்த விஷயம் தருணுக்கு எப்படி தெரிந்தது?
மனோஜ் ஏதோ சொல்ல வாயெடுக்கும் முன், அவன் தோளை பற்றி அழுத்தினான் அருண்.
"உனக்கு எப்படி தெரியும்?" என்றான்.
"நீங்க ரெண்டு பேரும் அதை பத்தி பேசிக்கிட்டிருந்ததை நான் கேட்டேன்."
அருண், மனோஜுக்கு சைகை செய்ய, புரிந்து கொண்டு விட்டேன் என்று மெலிதாய் தலையசைத்தான் மனோஜ்.
"அதைப் பத்தி மட்டும் நீ கேட்காதே. அது அப்படிப்பட்ட ஒரு காதல்... யாராலும் கற்பனை கூட பண்ணி பாக்க முடியாதது... தெய்வீகமானது..." என்றான் மனோஜ்.
"அப்புறம் எந்த கர்மத்துக்கு அவன் அபியை கல்யாணம் பண்ணிகிட்டான்?"
"நீ விட்டுட்டு போன, அதனால கல்யாணம் பண்ணிகிட்டான்." என்றான் மனோஜ்.
"குடும்ப கவுரவத்தை காப்பாத்த கல்யாணம் பண்ணிகிட்டான்" என்றான் அருண்.
"அஸ்வின் காதலிச்ச பொண்ணு யாரு?"
அருணும் மனோஜும் விழுந்து விழுந்து சிரித்து, அவனை வெறுப்பேற்றினார்கள்.
"எதுக்கு பைத்தியம் பிடிச்ச மாதிரி சிரிக்கிறீங்க?"
"அதெல்லாம் விடு. அதெல்லாம் முடிஞ்சு போச்சு. இப்ப அவன் ஒரு குடும்பஸ்தன். தன்னோட வாழ்க்கையே, மனைவியோட என்ஜாய் பண்ண அவன் தயாராயிட்டான்"
"அப்போ அவன் காதலிச்ச பெண்ணை பத்தி அவனுக்கு கொஞ்சம் கூட அக்கறை இல்லயா?"
"நிறைய இருக்கு..."
"அப்போ அபியோட நிலைமை?"
"நீ அதை பத்தி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல. அவங்க அஸ்வினுடைய ஓய்ஃப். அவன் அவங்களை பாத்துக்குவான்." என்றான் அருண்.
"ஆமாம். அஸ்வின் ரொம்ப சந்தோஷமா இருக்கான். நானும் பார்த்தேன்" என்றான் மனோஜ்.
"அபியை அவன் சந்தோஷமா வச்சுக்குவான்" அருண்.
"ஆமாம். அவன் மனைவியோட நேரம் செலவழிக்க தான் இன்னைக்கு அவன் ஆஃபீஸுக்கு கூட வரல." என்றான் மனோஜ்.
"நீங்க அந்த பொண்ண பாத்திருக்கீங்களா?" என்றான் தருண்.
"பார்த்திருக்கேன்... ரொம்ப அழகா இருப்பாங்க." மனோஜ்.
"அப்படியே அபி மாதிரி..." என்றான் அருண்.
"நல்ல கலர்..." மனோஜ்.
"அப்படியே அபி மாதிரி..." அருண்.
"ஆனா, அவனுக்கு பிடிச்ச பெண்ணோட வாழறதுக்கு அவனுக்கு எல்லா உரிமையும் இருக்கு இல்லயா?" தருண்.
"நீ சொல்றது சரி தான். அவனுக்கு அபியை ரொம்ப பிடிச்சிருக்கு. அவங்க கூட வாழ அவன் தயார் ஆயிட்டான்." அருண்.
"அஸ்வின் உங்க குடும்ப கவுரவம் கெட்டுப்போக எப்பவுமே விடமாட்டான். அத முதல்ல புரிஞ்சுக்கோ. நீ அவனை பத்தி என்ன நினைச்சுகிட்டு இருக்க? இந்த சமுதாயத்தில் அவனுக்கு இருக்கிற மரியாதை என்னன்னு தெரியுமா உனக்கு? அவனுடைய பர்சனல் லைஃபை, பர்சனலா வச்சுக்க முடியாத அளவுக்கு அவனுக்கு இந்த சமுதாயத்தில் ஒரு அந்தஸ்திருக்கு. இந்த இடத்துக்கு வர, அவன் ரொம்ப கடுமையா உழைச்சிருக்கான். அதை மறந்துடாத. அஸ்வின், அபியை பத்தி பேசுறதை இதோட நிறுத்து." என்று கூறி முடித்த மனோஜின் குரல் ஒரு எச்சரிக்கையாக ஒலித்தது.
அவர்கள் பேசுவதை அவ்வளவு நேரம் கேட்டுக்கொண்டிருந்த அபிநயா, அங்கிருந்து சென்றாள். தருண் கூறியது பொய்யல்ல. உண்மையிலேயே அஸ்வின் ஒரு பெண்ணை காதலித்திருக்கிறான். தன் குடும்ப கவுரவத்தை காப்பாற்ற, அந்த பெண்ணை விட்டுவிட்டு, தன்னை திருமணம் செய்து கொண்டிருக்கிறான். பாவம் அஸ்வின். திருமணம் செய்து கொண்டுவிட்டதோடு மட்டுமல்லாமல், இந்த திருமண பந்தத்தை மதிக்கவும் செய்கிறான். இப்பொழுது என்ன செய்வது? அபிநயாவுக்கு தலைசுற்றியது.
தாங்கள் பேசுவதை அபிநயா கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்று தெரியாமல், தருணை முட்டாளாக்கும் பொருட்டு, மனோஜும், அருணும் அடித்த லூட்டி, அவர்களையே முட்டாளாக்கி விட்டது.
தொடரும்....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro