Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

6

வனிதாவின் பார்வையில் (தொடர்ச்சி).

கெஸ்ட் ஹவுஸில் இருந்து வெளியில் வந்த பின் ராஜா என்னிடம் கேட்டான்.

" எங்க போகப் கோற. வீட்டுக்கா இல்லை வேற எங்கயுமா?" இப்போது வீட்டுக்கு சென்றாள் நான் மாட்டிக்கொள்வேன். ஸ்பெஷல் கிளாஸ் இவ்வளவு சீக்கிரமாக முடிந்து விட்டதா என்ற கேள்வி வரும். நான் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றேன்.

" சரி வண்டியில ஏறு" என்றான். அவனுக்கு என் தயக்கம் புரிந்திருக்க வேண்டும். அவனது பைக் மின்னல் வேகத்தில் கடற்கரை சாலையில் பறந்தது. என் மேல் உள்ள கோபத்தை பைக்கிடம் காட்டுகிறாராம். எனக்கு இந்த நிலையிலும் சிரிப்பு சிரிப்பாக வந்தது. ராஜாவின் வேகத்தில் கீழே விழுந்துவிடாமல் இருக்க என் கை தானாகவே அவனது தோளை பாதுகாப்புக்காக பற்றிக்கொண்டது.

பைக்கை அவன் ஒரு வீட்டின் முன் நிறுத்தினான். அது ஒரு பன்னை வீடு. பணக்காரர்கள் தங்களின் லீலைகளை புரிய கட்டி வைத்திருக்கும் குட்டி சுவர்க்கம், ராஜாவின் நோக்கம் எனக்கு என்னவென்று புரியவில்லை. ஆனால் அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் நான் கேள்வி எதுவும் கேட்காமல் அவன் பின்னாலேயே சென்றேன். வீட்டினுள் சென்றதும் அதன் பிரம்மான்டத்தை பார்த்து அப்படியே பிரமித்துப் போனேன்.

உயர் ரக சோபாக்கள், டீவி, சவுன்ட் சிஸ்டம் என்று ஹால் பார்க்க மிக அழகாக இருந்தது. மேலே கூரையில் இருந்த சான்டிலியர்கள் எல்லாம் என் ஒரு மாத சம்பளத்தை கொடுத்தும் வாங்க முடியாது என்று தோன்றியது. நான் பிரமிப்பாக வீட்டை வாய் பிளந்து பார்ப்பதை கண்டவன் முகத்தில் குறு நகை தவழ்ந்தது.

" ஹ்க்க்ம். என்ன வீடு பிடிச்சிருக்கா" என்று கேட்க நான் அமைதியாக நின்றேன். என் சங்கடம் புரிந்தவன் என்னை அதிகம் கஷ்டப்பட வைக்காமல் அவனே தொடர்ந்து பேசினான்.

" இது மினிஸ்டர் கதிர்வேலு ஐயாவோட வீடு. வீட்டோட சாவி எப்போமே என்கிட்டதான் இருக்கும். அவரு அப்பப்போ வருவாறு. இன்னைக்கு நடந்தத பத்தி இப்போ எதுவுமே பேசிக்க வேணாம். நீ முதல்ல ரெஸ்ட் எடு" என்றான். முதல் முறை என்னிடம் பேசிய போது நீங்க, வாங்க என்று பேசியவனின் பேச்சு இப்போது நீ, வா, போ என்றானது. இது எனக்கு சிறிது கலகத்தை கொடுத்தாலும் உள்ளுக்குள் சந்தோசமாகவும் இருக்காமல் இல்லை. கிட்சன் சென்றவன் காபி போட்டுக் கொண்டு வந்து கப்பை என்னிடம் நீட்டினான். அதை நான் வாங்கி பருகத்தயங்கினேன். என்னை பார்த்து ஒரு புன்முறுவல் செய்த பின் அவன் ஒரு மிடறு எனது கப்பில் இருந்த காபியை குடித்துவிட்டு என்னிடம் கொடுத்தான். நான் அவனை முறைத்துவிட்டு காபியை வாங்கினேன்.

" நான் ஒன்னும் நீங்க மயக்க மருந்து போட்டிருப்பீங்கன்னு காபிய வாங்காம இருக்கல்ல. நீங்க யாரு? உங்களுக்கு எப்படி எங்க ஆபீஸ்ல நடந்த விசயம் தெரியும்? இது எதுவுமே சொல்லாம உங்க பாட்டுக்கு எல்லாமே பண்றீங்க. அந்த கோபம்தான்" என்றேன். நான் பேசிவிட்டேன். சொற்கலை சேர்த்து கோர்வையாக அவனிடம் பேசிவிட்டேன். அவன் முகத்தில் புன்னகை மட்டும் மாறவில்லை.

" நான் தான் அன்னைகே சொன்னேனே வனிதா எனக்கு உன்ன ரொம்ப பிடிகும்னு. நமக்கு பிடிச்ச பொண்ணு என்ன பண்றா ஏது பண்றானு தெரிஞ்சிக்காம இருக்க நான் என்ன முட்டாளா? எனக்கு அந்த மேனேஜர முன்னாடியே தெரியும். அவன் கொஞ்சம் சபல புத்திக்காரன். ஆனா இவ்வளவு சீக்கிரம் அவன் புத்திய காட்டுவான்னு நினைக்கல்ல. நல்ல வேலை உங்க ஆபீஸ்ல எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் மூலமா அங்க என்ன நடக்குதுன்னு சொல்ல சொன்னேன். அவரும் அப்பப்போ சொல்வாரு. அப்படித்தான் அங்க நடந்த எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டேன்.

அப்புறம் நீ கேட்ட அடுத்த கேள்வி, நான் யாரு? என் பேரு உனக்கு தெரியும். நான் மினிஸ்டர் கதிர்வேலு அய்யாகிட்ட வேலை பார்க்குறேன். என் கீழ நாலு கேன்டீன் கான்ட்ராக்ட் இருக்கு. அதுல ஒன்னுதான் உங்க காலேஜ்ல இருக்குற கேன்டீன். ஒரு குடும்பம் நடத்துற அளவுக்கு வருமாணம் இருக்கு. அம்மா, அப்பா, சொந்தம்னு யாருமே இல்ல. எனக்கு எல்லாமே கதிர்வேலு ஐயாதான். நீ என்ன கல்யாணம் கட்டிக்கிட்டா எனக்கு குடும்பம் வந்திடும். உன் சம்மதத்துக்குதான் காத்துக்கிட்டு இருக்கேன். இன்னைக்கு உன்ன காப்பாத்தினேன் என்பதற்காக நீ எனக்கு சம்மதம் சொல்லனும்னு இல்ல. இது வேற, உன்மேல இருக்குற காதல் வேற. நீ என்ன காதலிக்கலைன்னு சொன்னாலும் உனக்கு தெரியாமலே உனக்கு பாதுகாப்பா நான் இருப்பேன். அதுதான் என் காதலுக்கு நான் செலுத்துற மரியாதை" என்றான்.

அடப்பாவி இவனையா நாம் காதலை கவித்துவமாக சொல்லத்தெரியாத முட்டாள் என்று நினைத்தோம். இதைவிட ஒருவனின் காதலை ஆழமாக எப்படி ஒரு பெண்ணுக்கு சொல்ல முடியும். நான் பதில் எதுவுமே கூறவில்லை. காபியை குடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தேன். அவன் இவ்வளவு பேசியும் நான் அமைதியாக இருப்பதை பார்த்து அவனுக்கு கோபம் வந்திருக்க வேண்டும். அவன் டீவியை ஆன் செய்தான். அதில் எனக்கு பிடித்த டி ராஜேந்தரின் " என் ஆசை மைதிலி" படம் ஓடியது. எனக்கு டீ ராஜேந்தரை பிடிக்க காரணம் ஒன்று உள்ளது. அது மிகவும் வேடிக்கையாக இருக்கும்.

எங்கள் வீட்டில் டி ராஜேந்தரின் படங்களுக்கு மட்டும்தான் அனுமதி. அவர்தான் கதாநாயகிகளை தொடாமல், பெண்களுடன் கண்ணியமாக நடந்து கொள்வாராம். இது என் தந்தையாரின் எண்ணம். அவர் பெண்களுடன் கண்ணியமாக நடப்பது பற்றி பேசுவதை கேட்கும் போது சாத்தான் வேதம் ஓதுவது போல இருந்தது. எங்கள் வீட்டில் பாக்கியராஜின் படங்கள் பார்ப்பதானது, நீலப்படம் பார்ப்பதற்கு இணையான குற்றமாகும்.

இப்படித்தான் எனக்கும் டைரக்டர் டிஆர் கும் இடையிலான பந்தம். என் ஆசை மைதிலியே பாடல் வந்ததும் நான் ஆர்வமாக டீவியை பார்க்க ஆரம்பித்தேன். ராஜாவுக்கு புரிந்திருக்க வேண்டும். எனக்கு அந்த பாடல் மிகவும் பிடிக்கும் என்று. அவன் டீவியின் வால்யூமை அதிகரித்து வைத்தான்.

பகல் நேரம் ஆனது. வீட்டில் நான் ஸ்பெஷல் கிளாஸ் இருப்பதாக கூறினேனே அன்றி அது பாதி நாளா அல்லது முழு நாளா என்று கூறவில்லை. இப்போது இருக்கும் மனநிலைக்கு வீட்டிற்கு சென்று கொஞ்சம் ஓய்வெடுத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

" நான் வீட்டுக்கு போகனும்" என்றேன். அவனுக் எனது கோரிக்கையை மறுக்கவில்லை. என்னை அவனது பைக்கில் ஏற்றிக் கொண்டு நான் வழமையாக காலேஜ் முடிந்ததும் ஏறும் பஸ் ஸ்டாண்டில் விட்டான். இந்த தடவை அவன் பைக்கிடம் கோபத்தை காட்டவில்லை. மிகவும் அமைதியாக அவனது பைக் சாலையில் சென்றது. ஸ்பீட் ப்ரேக்கரில் கூட அவன் மிக மெதுவாக வண்டியை செலுத்தினான். நான் அவனை தப்பாக நினைத்துவிட கூடாதாம். அவனின் செய்கை என்னை சிரிப்பு மூட்டியது. இப்படியுமா ஒரு நல்லவன் இருப்பான். அவனை இங்கேயே இருக்கமாக அணைத்துக்கொள்ள மனது துடித்தது. இருந்தாலும் என் மனதை அதட்டி அதற்கு கடிவாளம் இட்டேன்.

" வீட்டுக்கு கவனமா போ. ஏதும் அவசரம்னா இந்த நம்பரக்கு கால் பண்ணு" என்று அவனது வீட்டு நம்பரை கொடுத்தான். காரணம் அந்தக் காலத்தில் செல்போன் கிடையாது.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro