Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நிலா- 34

"டிங்ங்ங்...!" ஒருப் பெரிய சத்தம் அவள் தலையில் விழுவதுப் போல் இருக்க, அலறியடித்துக்கொண்டு எழுந்தவளுக்கு விழிகள் விரிய மறுத்தன. இரவெல்லாம் தூங்காமல் இப்பொழுது தான் சிறிது நேரத்திற்கு முன்பு கண்ணயர்ந்தாள். அதற்குள் அவளை எழுப்பிய இந்த பெரியச்சத்தத்தின் மேல் அவளிற்கு ஏகக் கோபம் வரவே, கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்தவளுக்கு தான் எங்கிருக்கிறோம் என்று பிடிப்படவே ஒரு சில நிமிடங்கள் பிடித்தன.

அந்த கதிரவன் தன் பணிகளைத் தொடரும் முன்னே அந்த பணிப்பெண்கள் தங்களது பணிகளைத் தொடங்கிவிட்டனர்.

கூட்டத்தோடு கூட்டமாய் அன்றைய நாளைத் தொடங்கியவளுக்கு அங்குள்ள அனைத்துமே புதிதாகவும் கடினமாகவும் தான் தெரிந்தன.

அதுவும் அங்குள்ள காலை உணவை அவளால் வாயில் கூட வைக்க முடியவில்லை. அவ்விடமே நரகமாகவேத் தோன்றியது அவளிற்கு.

மசூராவைக் கண்டவுடனே அவளது மூச்சு வந்தது. பிறகு சிறிது நேரம் அவருடன் அரட்டையும், அவளின் தம்பியுடன் சேட்டையும் செய்தவாறு நேரத்தைக் கழித்தவள், மாலையில் வெளியில் தலைக் காட்ட எண்ண, எதேர்ச்சையாய் அவளதுக் கண்கள் ஐராவைக் கண்டன. நிலாவை அடையாளம் தெரியாததால் அவளைக் கடந்து சென்றவளின் முன் குறுக்காய் கை நீட்டி தடுத்தவளை புரியாமல் பார்த்தாள் அவள்.

ஐரா அவளைக் கடந்து செல்ல முற்பட, மீண்டும் அவளைத் தடுத்து நிறுத்தினாள் நிலா. "யார் பெண்ணே நீ? ஏன் என் வழியை மறிக்கிறாய்?" எனப் புருவங்களை உயர்த்தி கேட்டவளை அவள் சொல்லச் சொல்ல கேட்காமல், அவளை இழுத்துக்கொண்டு மசூராவின் அறைக்குள் சென்றாள் நிலா.

"அட யார் நீ? எதற்காக என்னை இங்கே அழைத்துக்கொண்டு வருகிறாய்? இது அரசியின் அறையாயிற்றே. என்னை வம்பில் மாட்டி விடப் பார்க்காதே. என்னை விடு நான் செல்ல வேண்டும். யாராவது இங்கு நம்மைப் பார்த்துவிட்டாள் பெரிய பிரச்சினையாகிவிடும்." எனப் படபடத்தவளை அமைதியாய் இருக்கும் படி சைகைச் செய்தவள், தன் கண்களை மூடி ஒரு சொடக்கிட்டு மீண்டும் கண்களைத் திறந்தால்.

இமைக்கும் நேரத்தில் நிலாவின் உருவமாய் மாறியவளைக் கண்டு ஐராவின் கண்களும் இதழ்களும் பெரிதாய் விரிய, அவளைக் இறுக்கக் கட்டிக்கொண்டவள், சில நிமிடங்களுக்குப் பிறகே விடுவித்தாள்.

"எப்படி இருக்க நீ? மாயன் அண்ணா எப்படி இருக்காங்க? இங்க எப்படி வந்த? உன்னை யாராவது இங்கப் பார்த்தா என்ன ஆகும்?" எனக் கேள்வி மேல் கேள்வியாய் அடுக்கியவளிள் தோல்களைப் பிடித்து அங்கிருந்த படுக்கையின் மேல் அமர வைத்தவள் "பொருமை.. பொருமை.. கொஞ்சமாவது மூச்சு விட்டுக்கோ." என்றுவிட்டு ஒவ்வொன்றாய் முதலிலிருந்து விளக்கினாள்.

"நீ இறந்துட்டதா வந்த செய்தியைக் கேட்டு எப்படி உடைஞ்சு போய்ட்டேன் தெரியுமா?" எனக் கண் கலங்கியவளின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளியவள், "இங்கப் பாரு. நான் நல்லா உன் முன்னாடி தானே உக்காந்திருக்கேன்? எனக்குத் தான் ஒன்னும் ஆகலையே? அப்புறம் என்ன? நான் சூப்பரா இருக்கேன்."

"மாயன் அண்ணா நல்லா இருக்காங்களா?" என்றவுடன் அவளின் சிரிப்பு லேசாய் மாற, இருந்தும், "அவனும் சூப்பரா இருக்கான்.." என்றாள் அசட்டுச் சிரிப்புடன்.

"உன் அண்ணா இப்போ எப்படி இருக்காங்க? அவங்களுக்கு உடம்பு சரியாகிடுச்சா?" என்றவர்களின் பேச்சு நீண்டது நீண்டது இரவு படுக்கும் வரை.

நாட்கள் இப்படியே நகர்ந்தன. நிலாவின் முகத்தில் முன்பிருந்த பொலிவு குறைந்துக்கொண்டே வந்தது. உடல் மெலிந்து முகத்தில் வாட்டம் அதிகரித்தது. அதற்கு கொம்பனை அவளால் நெருங்கக் கூட முடியவில்லை என்பதும் ஒரு காரணம் தான் என்றாலும் மாயனும் அதற்குப் பெரிய  காரணம் தான்.

அவள் வந்ததற்கு கொம்பனை ஒரு முறைக் கூட அவளால் பார்க்க முடியவில்லை. அவனைச் சுற்றியிருக்கும் பாதுகாப்பை எல்லாம் தாண்டி இதில் எங்கு அவளால் அவனை நெருங்க முடியும்?

இருந்தும் மசூராவின் அரவணைப்பும் மஹீந்தனின் அன்பும் மட்டுமே அவளது மனப் பாரத்தைக் கொஞ்சம் குறைத்தது. சித்தி என்றாலே வில்லி தான் என அவள் பார்த்தவற்றிலிருந்தும் கேட்டவற்றிலிருந்தும் அவள் மனதில் பதிந்திருந்த கருத்து முழுவதுமாய் மாறியிருந்தது மசூராவாள்.

தன் மேல் அவர் காட்டும் அளவில்லா பாசத்துக்கான காரணத்தை கேட்க நினைத்தவளுக்கு கேட்காமலேயே பதிலையும் அவரேச் சொன்னார்.

ஆரம்பத்திலிருந்தே கொம்பனின் குணத்தை பற்றியும் மிளிராவைப் பற்றியும் அறிந்தவர் அவர். பெண்‌ பிள்ளைகளென்றால் கொள்ளைப் பிரியம் கொண்டவருக்கு ஏனோ பெண் பிள்ளையைப் பெறும் பாக்கியம் இல்லாமல் போனது. நிலாவைப் பற்றி மாயன் மூலம் அறிந்தவர் தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் மாயனிற்கு செய்து வந்தார். கொம்பனின் அநியாயங்களையும் அக்கிரமங்க‌ங்களையும் தடுக்க நிலா ஒருத்தியாலே மட்டும் தான் முடியும் என நம்பியவர் இத்தனை ஆண்டு காலமாய் அவளின் வருகைக்காகவே காத்திருந்தார். அவளைப் பாராமலே அவளின் மேல் அளவுக்கடந்த அன்பையும் வளர்த்துக்கொண்டார்.

இதையனைத்தையும் நிலாவோடு கோட்டுக்கொண்டிருந்த மஹீந்தன் ஒருக் கண்ணுக்கு தூங்கியும் எழுந்து விட்டு, இன்னும் அது முடியாமல் இருப்பதைக் கண்டவன், "அடடா..! இன்னும் தங்களின் சோகக் கதை முடியவில்லையா?" என சோம்பல் முறித்தப் படிக் கேட்டவனை, இருவரும் கலங்கிய கண்களோடு பார்க்க,

"விரைவில் மதியுலகிற்கு தண்ணீர் பஞ்சம் வரவிருக்கிறதென்று கதிரவன் எனக்கு செய்தி அனுப்பிவிட்டார். எனவே விழி நீரை வழிந்து விடாமல் பத்திரமாய் தேக்கி வைத்துக் கொள்ளுங்கள். நான் வேண்டுமென்றால் எதாவது பாத்திரம் எடுத்து வரவா?" எனக் கேளியாய் கேட்டவனின் தலையில் ஒருக் கொட்டு கொட்டிவிட்டு அவ்வறையிலிருந்து வெளிவந்த நிலா புயலாய் தன்னைக் கடந்து செல்லும் கொம்பனைக் கண்டு சுவரோடு சுவராய் ஒட்டி நின்றாள்.

வழக்கமாய் அவனைச் சுற்றி இருக்கும் பத்து பதினைந்து காவலர்கள் இன்று இல்லாமல், அவன் மட்டும் தனித்துச் செல்வது நிலாவிற்கு ஏதோ தவறாய் இருப்பதை உணர்த்தியது.

தன் உருவத்தை மறையச் செய்தவள் தன்னை யாராவது கண்காணிக்கிறார்களா என்பதை உறுதிப் படித்துக்கொண்டு அவனைப் பின் தொடர்ந்தாள்.

அவனது நடைக்கு அவளால் ஈடுக்கொடுக்க முடியாமல் பத்தடிப் பின் வாங்கி நடந்தாள் அவள். அவன் முகத்தில் இருக்கும் பதட்டமும், தரை அதிர அவன் நடக்கும் வேகமும் எதற்காக என அவளிற்குப் புரியவில்லை.
எங்கே என்றேத் தெரியாமல் ஒரு பத்து நிமிடமாய் அவனைப் பின் தொடர்ந்தவளின் கால்கள் நின்றன, அவன் ஒரு அறைக்குள் நுழைந்தவுடன். இத்தனை நாட்களில் யார் யார் அறை எது எது வென்று அவள் கவனிக்காமல் இல்லை. இப்பொழுது கொம்பன் நுழைந்தது அவனது தந்தையின் அறை. உள்ளே நுழையாமல் வாசலிலேயே நின்றுக் கொண்டவளுக்கு எந்த பேச்சு சத்தமும் கேட்கவில்லை. மெல்ல தன் தலையை எட்டிப் பார்த்தாள். கொம்பன் அவனது தந்தை கேளவனுக்கு எதிரே கால் மேல் கால் போட்டு கம்பீரமாய் அமர்ந்திருக்க, கேளவனோ மிரண்டுப் போய் அமர்ந்திருந்தார்.

"நான் என்ன செய்யட்டும் தந்தையே?!" என திடிரென்று ஆரம்பித்தான் கொம்பன்.

"எதைப் பற்றி என்னிடம் கேட்கிறாய்?" என புரியாமல் கேட்ட கேளவனைப் பார்த்து ஒரு ஏளனச் சிரிப்பொன்றை உதிர்த்த கொம்பன்,

"என்னோடு இருந்துக்கொண்டு எனக்கு எதிராய் செயல்படுகிறவர்களின் முடிவு என்னவென்று தமக்கு தெரியுமல்லவா?"

"ஆம்"

"பிறகு, எனக்கு எதிராய் செயல்பட 'நினைப்பவரை' நான் என்ன செய்யட்டும் தந்தையே?" என்றவனின் 'நினைப்பவரை' என்னும் வார்த்தையில் அழுத்தம் கூடியிருந்தது.

"நீ யாரைப் பற்றி பேசுகிறாய் கொம்பா?"

"ஏன் உமக்குத் தெரியவில்லையா நான் யாரைப் பற்றி பேசுகிறேன் என்று"

"எதையும் தெளிவாகச் சொல்லும் பழக்கமுடையவனாயிற்றே நீ. இப்பொழுது மட்டும் ஏன் சுற்றி வளைக்கிறாய்?"

"சரி நேராக விஷயத்திற்கு வருகிறேன். என் அருமைத் தமையனைப் பற்றி தான் சொல்கிறேன். எப்படி எப்படி.. 'அவனின் ஆணவத்தை அடிவேரோடு பிடுங்க எனக்குத்தெரியும்'  " எனக் கனீரென்ற அவனதுக் குரல் அந்த அறை முழுவதும் எதிரொலித்தது.

"கோபம் வந்தால் மதிக் கெட்டு விடும் என உனக்குத் தெரியாதா கொம்பா? அவன் ஏதோ அன்று கோபத்தில் வார்த்தையை விட்டுவிட்டான்."

"அவன் விட்ட வார்த்தைக்காக விரைவிலேயே அவன் உயிரையும் விடப் போகிறான் என்று சொல்லுங்கள் அவனிடம்."

"கொம்பா தவறு செய்கிறாய் நீ. அவன் உன் தமையன்."

"இத்தனை ஆண்டுகாலமாய் நான் செய்வது தவறென்று சொல்லாத தங்களுக்கு இன்று மட்டும் ஞானொதயம் பிறந்து விட்டதா?"

"உன் தவறுகள் இன்று எல்லை மீறுகின்றன கொம்பா."

"என்னை எதிர்ப்பதும் எதிர்க்க நினைப்பதும் மரண வாயிலில் தலையை வைப்பதற்கு சமம். அது யாராக இருந்தாலும் அந்த வாயிலிலிருந்து மீள முடியாது."

"இதற்கு நான் ஒருப்பொழுதும் அனுமதிக்க மாட்டேனடா"

"நான் இங்கு வந்தது வெறும் தகவல் அளிக்கத் தான். அனுமதி கேட்க இல்லை."

"நான் உயிரோடு இருக்கும் வரை இதை அனுமதிக்கவும் மாட்டேன். நடக்க விடவும் மாட்டேன்."

"அப்பொழுது தாங்கள் அவனுக்கு முன்பாய் உயிர் விட வேண்டும் என தங்களின் தலையில் எழுதியிருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்?" என்றவன், கண் இமைக்கும் நேரத்தில் தன் இடையில் சொருகியிருந்த வாலை உருவி, கேளவனின் தலையைத் துண்டித்திருந்தான்.

"வெகு நாட்களாய் உடல்நலம் சரியில்லாமலிருந்த அரசரின் தந்தையான கேளவன் இன்று மாலையில் உயிர் துறந்தார்." என உயிரற்ற அவரது உடம்பைப் பார்த்துக் கூறியவன், தன் வாலில் இருந்த இரத்தத்தை தன் மார்பில் பூசிக்கொண்டான்.

அதைக் கண்ட நிலாவின் கால்கள் தள்ளாட,
அவள் அருகிலிருந்த பூந்தொட்டி தெரியாமல், கீழே விழுந்து சிதறியது.

அதை நொடிப்பொழுதில் பழைய நிலைக்கு சரிசெய்தவள், கொம்பனின் "யார் அங்கே?" என்ற அதட்டலில் மிரண்டு விழித்தாள்.

வெளியே வந்து எட்டிப்பார்த்தவன், யாருமில்லாததைக் கண்டு பிரமையோ என்ற நினைப்பில் மீண்டும் உள்ளே சென்று விட, நிலாவின் கால்கள் திசையறியாமல் நடக்க, அவளது இதழ்களோ அவளைறியாமல்  தொடர்ச்சியாய் "மாயன்.. மாயன்.. மாயன்.." எனத் தொடர்ந்து உச்சரித்துக்கொண்டே இருந்தது.

நடையில் வேகம் கூட்டிக் கண்களில் கண்ணீர் வழிய மாயனைத் தேடிய அவளை, திடீரென தூணின் இடுக்கிலிருந்து  ஓர் கரம் பிடித்து இழுக்க, அதில் அந்த கரத்திர்கு சொந்தமானவரின் மேல் மோதி நின்றவளின் விழிகளிலோ, கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

அவள் தொடர்வாள்..

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro