நிலா -32
நிலாவுக்கான ஒரு வார கால அவகாசத்தில் இன்றே கடைசி நாள். மாயனிடமிருந்து அக்கோட்டையைப் பற்றியும் கொம்பனைப் பற்றியும் கற்றுத் தேர்ந்திருந்தாள் அவள். கோட்டையில் அவளின் மாய சக்தியை பயன்படுத்தாமல் இருக்க, பல கலைகளையும் மாயன் பயிற்சி அளித்திருந்தான். நிலாவிடம் இருந்த தயக்கம் விலகி, அவளுக்கான புது சவாலை உற்சாகமாய் எதிர்பார்த்து இருக்க, மாயனோ அவளிற்கு எதிர்மறையாய் இருந்தான்.
இன்றோடு அவளைக் காண்பதே அரிதாகிவிடும். அவளோடு தான் இருப்பது இன்றே கடைசி நாள் என்றும் இனி அவளை தினமும் காண முடியாது என்பதாலும் சோகத்தின் மறு உருவாய் மாறியிருந்தான் அவன்.
தொங்கிய முகத்துடன் வழக்கமாய் அவளிருக்கும் இடத்திற்கு சென்றான்.
அவளோ துருவாவோடு பலத்த வாக்குவாதம் நடத்திக்கொண்டிருந்தாள்.
இடையை தாண்டிய அவளின், அலை அலையாய் புரளும் கூந்தலை இருக்கிப் பிடித்து அவள் ஜடைப் போட்டிருந்தாலும் அவள் அறியா வண்ணம் அவள் முகத்தில் சில முடிக் கற்றை தன்னை விடுவித்துக் கொண்டு ஓய்வெடுத்தப்படி இருந்தன. அவள் பிறை நெற்றி பூக்களால் செய்யப்பட்ட வளையத்தை கிரிடம் போல் ஏந்தியிருக்க, அவளின் கூர் நாசியோ கோபத்தால் சிவந்திருந்தது. ஓராயிரம் மதிகள் ஒன்று கூடியிருந்ததுப் போல் ஜொலித்த அவளை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டு இருந்தான் அவன். வழக்கமாய் உள்ள அவள் தான் என்றாலும், ஏனோ இன்று பேரழகியாய் தோற்றம் தந்தாள் அவனிற்கு. பார்ப்பவரின் மனதைப் பொருத்தல்லவா பார்வையும் இருக்கும்?
தன் வருகையை அவளிற்கு உணர்த்துவதற்காக தன் முகத்தை விரைப்பாய் வைத்துக்கொண்டு தொண்டையை செறுமியவன், "இரண்டு பேரும் இங்க என்ன பண்ணிட்டு இருக்கிங்க?" என்றான், அவள் தன்னைக் கண்டவுடன்.
"நான் துருவாக்கு அட்வைஸ் பண்ணிட்டு இருக்கேன். ஆனா இவன் என் பேச்சைக் கேட்கவே மாட்டிங்குறான்." என்றவளை அவன் முறைக்க, மானகீசமாய் தன் தலையில் குட்டிக் கொண்டவள், மீண்டும், "ஒரு ப்லோவில் வந்துவிட்டது மன்னிக்கவும். நான் என்ன கூறவந்தேனென்றால்.. ஹான்ன்.. நான் இவனுக்கு வெகுநேரமாய் அறிவுரை செய்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் இவனோ என் பேச்சைக் கேட்க மறுக்கிறான். நான் எவ்வளவு தான் எடுத்துக் கூறுவது?" என்றாள் வார்த்தைகளை மென்று முழுங்கி.
கோட்டையில் தூய தமிழ் தான் பேச வேண்டும் என்பதால் இந்த ஒரு வாரத்தில் மாயன் நிலாவிற்கு விதித்த முதல் கட்டளை இது. இரண்டாவது கட்டளை அவள் தன் சக்திகளை அடிக்கடி பயன்படுத்தக்கூடாது என்பது. காரணம் கோட்டையில் பணியாளர்களுக்கு மாய மந்திரம் தடை செய்யப்பட்ட ஒன்று என்பதே ஆகும். அங்குள்ள விதிமுறைகளை அவளுக்கு பழக்கப்படுத்த வேண்டி அவளையும் இந்த ஒரு வாரமாய் அதுப்படியே நடக்கப் பழக்கப்படுத்திக்கொண்டிருந்தான்.
"அவன் கேட்க மறுக்கும் அளவிற்கு அப்படி என்ன அறிவுரை கூறினீர்கள் என் மனதைக் ஆட்சிப்புரியும் எனது அரசியே?!" என புருவங்களை உயர்த்தி கேட்டவனது வார்த்தைகளில் விக்கித்துப் போய் நின்றாள் அவள். கடந்த ஒரு வாரமாய் அவளை அடிக்கடி விக்கித்து நிற்க வைத்துவிட்டான் அவன். அவள் மனம் திடமாய் இருந்தாலும் அவனது வார்த்தைகள் அவளை தடுமாறச் செய்தது. அந்த தடுமாற்றத்தை அவன் இரசிக்கிறான் என்று அவள் உணர்ந்தும் அவளது இதழ்கள் பதில் பேச மறுத்தன.
"அ..அது.." என வார்த்தைகள் தந்தியடிக்க நின்றவளை விட்டு இம்மியும் நகராத அவனது பார்வை அவளை இன்னுமே தடுமாறச் செய்தது.
"அது..?" எனக் கேள்வி எழுப்பியவனை பார்க்காமல் தன் முகத்தைத் திருப்பி பெருமூச்சொன்றை இழுத்து விட்டவள்,
"அ..அது ஒன்றுமில்லை." என சகஜமாய் தன்னைக் காட்டிக்கொள்ள முயற்சித்து தோற்றுப் போனாள்.
அவளை மேலும் திணரடிக்க விரும்பாதவன், அவளருகில் சென்று அவள் கையை தன்கைமேல் ஏந்தியவன், அவள் இதயத் துடிப்பை உணரவே, அவளின் உள்ளங்கைகளுக்குள் ஒன்றைத் திணித்து விட்டு சட்டென விலகி நின்றான்.
அதைப் பார்த்தவள் "எதுக்கு இது?" என்று வினவியவளின் கை, ஒரு சாவித்தொங்கும் சங்கிலியை ஏந்தியிருந்தது.
"இது அப்பாவுடையது உன் கிட்ட குடுக்கச் சொன்னார்." என்றவுடன் அதைச் சுற்றிமுற்றிப் பார்த்தவள், அதன் கூர் முனையை அழுத்த, அதன் கீழ் பக்கத்திலிருந்து சிறிய கத்தியொன்று எட்டிப்பார்த்தது.
"என்ன இது?" எனக் கேட்டப்படி எட்டிப்பார்த்த கத்தியை முழுவதுமாய் நிமிர்த்தி, அதைத் தடவியவுடன் அதைச் சுற்றி நீல நிறத்தில் ஒளியொன்று மின்னி மறைய, அது ஒரு வாலாகவே மாறியிருந்தது.
அதைத் தன் கையில் ஏந்திய மாயன் "இதை ஐந்து விதமாய் பயன் படுத்தலாம். இது உனக்கு தேவையான நேரத்துல தேவையானதா மாறிடும்." என்றவன் கண்களை மூடி அதைக் காற்றில் சுழற்ற, இப்பொழுது அதைச் சுற்றி நெருப்பு ஜுவாலை தோன்றி மறைய அந்த வால் நெருப்புக் கனலாய் தகதகவென்று எரிந்தது.
"இதை கனல் வால்னு சொல்லுவாங்க. எதிரிகளை எரிக்கும் தன்மை இதுக்கு இருக்கு." என்றவனின் கைகளில் இருந்த வாலைப்பிரமிப்பாய் பார்த்துக்கொண்டு இருந்தாள் நிலா.
மீண்டும் அவ்வாலை அவன் சுழற்ற அதை பச்சை நிற ஒளிக்கதிர் சுற்றி மறைய, அந்த வாலின் உருவம் மாறியிருந்தது.
"இதுக்கு உருக்கி என்றுப் பெயர். இதால் தாக்குப்படுபவர்கள் நொடிப்பொழுதில் உருகிப் போவார்கள்" என்றவன் அவனருகில் இருந்த பெரிய பாறையில் வெறும் அதன் நுனியை வைக்க, அதுவோ கண் இமைக்கும் நேரத்தில் தரையோடு தரையாய் உருகிப் போனது.
மீண்டும் சுழற்றினான். இம்முறை வெள்ளை நிறமென, வால் மினுக்கி வெறும் முழங்கை அளவு மாறியிருந்தது. இன்னும் சொல்லப் போனால் அது பார்ப்பதற்கு வால் போல் இல்லை. ஓர் வெள்ளை நிற இறகும் அதன் வலப் புறத்தில் மணிப்போல் ஒன்றும் தொங்கியது.
"இது பறக்கும் தன்மைக் கொண்டது. இது தாக்கும் நபர் இதில் தொங்கும் குண்டு மணியில் அடைக்கப்படுவார்கள். இதை இறகினு சொல்லவாங்க."
அடுத்த சுழற்றலில் அது ஊதா வர்ணம் கலந்த வாலாய் மாறி இருந்தது.
"இது நீலி. நீயிருக்கும் இடத்திலிருந்துக்கொண்டே பத்தடித்தொலைவில் உள்ள எதிரியை இதைவைத்துக் கொண்டு தாக்க முடியும். எவ்வளவு வேண்டுமானாலும் இது நீளும்." என்றவன் சற்றுத் தொலைவில் இருந்த மரத்தின் பழத்தை நோக்கி வாலை நீட்டியவனின் கையில் அதன் கைப்பிடி இருக்க, அதன் கூர் முனை உயர்ந்து அவன் கையசைப்பிற்கு ஏற்றார்போல் அப்பழத்தை அம்மரத்திலிருந்து வெட்டியது.
கடைசியாய் சுழற்றினான். இம்முறை வந்த வால் கசாப்புக் கடையில் பயன்படுத்தும் வால் போல் இருந்தது.
"இதுதான் வலி. வலி என்றால் வலிமை என்பது பொருள். நூறு யானைகளையும் வெட்டி வீழ்த்தும் அளவிற்கு இதற்கு வலிமை உண்டு. அதே நேரத்தில் எதிரியின் தாக்குதலில் இருந்து தப்பிக்க இதை கவசமாகவும் பயன் படுத்தலாம்." என்றவன் அவ்வாலை உதர, அது ஒரு கேடயமாய் மாறியது. மீண்டும் அதை உலுக்கினான். அது ஒரு சின்ன சாவியாய் பழைய நிலைக்கே மாறி விட்டது.
நிலாவோ வாயில் ஈ போகாதக் குறையாய் நிற்க, அதைக் கண்டவன் அவள் முன் சுடக்கிட்டு, "புரிஞ்சுதா?" என்க, தலையை நான்குப் புறமும் வேகமாய் உருட்டினாள்.
"உண்மையா புரிஞ்சிதா? இல்லை மறுபடியும் சொல்லவா?" என்றவனிடமிருந்து வேகமாய் அந்த சங்கிலியைப் பறித்தவள் தன் கழுத்தில் மாட்டிக்கொண்டாள்.
"இல்லை வேண்டாம் எனக்கு புரிஞ்சுது" என்றவளை அவன் சந்தேகமாய் பார்க்க,
"அதான் புரிஞ்சுதுனு சொல்றேன்ல.." என்றவள்,
"இங்க இருந்து கோட்டைக்கு எப்படிப் போகப் போறோம்?" என்க, "இப்படித்தான்.." என அவர்களின் முன்னிருந்த ஒருக் குட்டையைக் காண்பித்தான் அவன்.
"இதுவழியாவா? எப்படி? எதாவது இரகசிய வழி உள்ள வச்சிற்கியா?"
"இல்லை.. இனிமே தான் உருவாக்கணும்."
"நீயா போய் உருவாக்கப் போற?"
"ஹும்ஹும்." எனத் தலையை மறுப்பாய் அசைத்தவன், "நீதான் போய் உருவாக்கணும்." என, உடனே நாலடிப் பின் வாங்கியவள்,
"என்ன நானா?! அய்யயோ.. எனக்கு தண்ணினாலே அலர்ஜி" என்றவளை மேலிருந்து கீழ் பார்த்தான்.
"யாரு உனக்கா? அருவில ஆட்டம் போடும் போதும் மட்டும் உனக்கு அது தண்ணினு மறந்துடுச்சோ!?" என்றவன் அவளை நெருங்க,
"அது வேற இது வேற.. இப்போ நீ.. நீ எதுக்கு கிட்ட வர.. நான் தான் போக. மாட்டேன்னு சொல்லிட்டேன்ல.." என பின்னால் நகர்ந்துக் கொண்டே கேட்டவளை இன்னும் நெருங்கியவன், "ஆனா உன் விதி நீ போகனும்னு இருந்தா யாரால காப்பாத்த முடியும்" என்றவன், ஏற்கனவே குட்டையின் விழும்பில் நின்றுக்கொண்டிருந்தவளை பிடித்து ஒரேத் தள்ளாய் தள்ள, பின்னே சாய்ந்தவளின் கரங்கள் பிடிப்புக்கு மாயனின் கையை இறுகப் பற்றி இழுக்க, அவனும் நிலைத்தடுமாறியதில் இருவரும் சேர்ந்து தொப்பென்று தண்ணிரில் விழுந்தார்கள்.
கோட்டையில்..
சற்று முன்பு தனது வலதுக் கையான சீரன் வந்து சொன்னச் செய்தியைக் கேட்டு ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தான் கொம்பன்.
"சிறைக் காவலாளிக்கு உடல் நிலை மோசமாக உள்ளதா? வேண்டுமானால் ஒன்று செய்யுங்கள். எல்லோரும் உடம்புக்கு முடியவில்லை என்று ஓய்வெடுக்க சென்றுவிடுங்களேன்." எனக் கர்ஜித்தவனின் முன் கைக்கட்டி நின்ற சீரன்,
"மன்னிக்க வேண்டும் அரசே. அவருக்கு வயதாகி விட்ட நிலையில் ஏற்கனவே அவரின் உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. இன்று மேலும் மோசமாகிவிட்டது. அவரை இன்னும் நம்பி நம்மால் அவ்வளவுப் பெரியப் பொறுப்பை அவரிடம் விட்டு வைக்க இயலாது." என்றான்.
"பின்பு வேறு யாரிடம் இந்த பொறுப்பைக் கொடுப்பது? இது ராஜ இரகசியம் சம்பந்தப்பட்ட விஷயமல்லவா? அந்தப் பொறுப்பை ஏற்பவருக்கு ராஜ இரகசியம் தெரிந்து விடுமே."
"இல்லையென்றால் ஏற்கனவே ராஜ இரகசியம் தெரிந்த ஒரு நபரைத் தான் சிறைக் காவலாளியாக்க வேண்டும்." என்றவனின் மனதில் நாகாவின் முகம் வந்துப் போனாலும், அரணர் பதவியைக் கேட்கும் அவனிற்கு சிறைக் ஹஜ் காப்பாளர் பதவியைத் தந்தால் எப்படி ஏற்றுக்கொள்வான்? என நினைத்தவர் ஒரு முடிவுக்கு வந்தார்.
"அதை நான் பார்த்துக்கொள்கிறேன். ஹ்ம்ம்.. இப்போது நீ செல்லலாம்" எனத் தன் முன் நிற்கும் சீரனுக்கு விடைக் கொடுத்தார்.
இரவு எப்பொழுதும் தன் குடிலுக்கு சென்று விடும் மாயன் அன்று செல்லவில்லை. அன்று முழுவதும் நிலாவை விட்டு இம்மியும் அவன் நகரவில்லை. நிலவில்லாமல் அவ்வுலகின் வானம் இருளடித்து இருந்தாலும் அவனின் நிலா உறக்கத்திலும் ஜொலிப்பதாகவே தோன்றியது அவனிற்கு.
நாளை விடியல், ஒவ்வோருவரின் வாழ்விலும் ஒவ்வொரு மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. நிலாவின் வாழ்வில் அந்த மாற்றத்தின் அளவு சற்றுப் பெரியது தான். இருந்தும் அந்த மாற்றம் நல்லதாகவே அமைய வேண்டும் என மனதால் வேண்டிக்கொண்டான் மாயன்.
அவள் தொடர்வாள்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro