நிலா -31
மயங்கி சரியாத குறைதான் மாயனிற்கு. என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை. மிளிராவின் சாயலில் இருக்கும் நிலாவை மாயனிற்கே பிடித்து போன போது, அவனின் தந்தையைப் பற்றி சொல்லவா வேண்டும்?
இருவரும் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது அவனுக்கு தெரியாது. தூரத்தில் இருந்து பார்த்தவனிற்கு ஒன்று மட்டும் புரிந்தது. அவரின் வார்த்தைகள் கண்டிப்பாய் அவளுள் சிறு தைரியத்தையாவது ஏற்படுத்தியிருக்கும்.
அதன் விளைவாகவே நேரம் ஓடுவது தெரியாமல் துருவாவின் மேல் சாய்ந்த வண்ணம் வானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள் நிலா.
என்ன பேசியிருப்பார்கள்? இவளிடம் எப்படி கேட்பது? இப்போது கேட்டால் சரியாக இருக்குமா? என்ற குழப்பத்தில் அவளின் மனதைப் படிக்க முயன்றுக் கொண்டிருந்தான் மாயன்.
"நிலா.." என மெதுவாக பேச்சை ஆரம்பித்தவனின் புறம் தன் முகத்தைத் திருப்பாமல் "ம்ம்..?" என்றாள்.
"அப்பா என்ன சொன்னாங்க?"
"அது எனக்கும் அங்கிள்கும் உள்ள சீக்ரெட் நான் சொல்ல மாட்டேன்." என்றவள்,
"ஆமாம்.. உன் ஃபேமிலி இங்க இருக்காங்க. அப்புறம் பூமியில் இருந்தவங்க யாரு?" என்றாள்.
"அது ஹரிஷ் ஃபேமிலி"
"என்ன?!! எனக்கு புரியலை.." என்றவளுக்கு தான் ஹரிஷின் இடத்தில் வந்தது முதல் ஆரம்பித்திலிருந்து விளக்கினான்.
எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றினதுப் போல் ஆனது மாயனின் கதை.
மகனை இழந்த பெற்றோரின் மனம் நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் நேரத்தில் இவன் ஹரிஷ் உருவில் உள்ளே நுழைந்துவிட்டான். இப்பொழுது அவர்களுக்கு உண்மை தெரிந்து விட்டால் அவர்களின் நெஞ்சம் என்ன பாடுப்படும். அதுவும் குறிப்பாக அந்த தென்றல். ஹரிஷின் மேல் அவள் வைத்திருந்த காதலை நிலாவே உணர்ந்திருக்கிறாள். இப்பொழுது அவளின் நிலை என்னவாக இருக்கும் என்றெல்லாம் நினைக்கும் போது நிலாவின் கோபம் மாயனின் மேல் திரும்பியது. ஆனால் இதையனைத்தும் கூட அவன் அவளிற்காக தான் செய்தான் என்று அவள் எங்கு உணரப் போகிறாள்.
"ஏன் மாயன் என் உணர்வோட தான் விளையாண்டிருக்க பரவாயில்லை. ஆனால் இப்படி ஒரு குடும்பத்தோட உணர்வுகளோட விளையாட உனக்கு எப்படி மனசு வந்துச்சு.
அவங்க எல்லாருக்குமே இறந்தவன் இறந்ததாவே இருந்திருப்பான் இல்லையா. அவனுக்கு உயிர் கொடுத்து இப்போ மறுபடியும் அவங்க குடும்பத்துக்கு உண்மை தெரிஞ்சா.. எவ்வளவு கஷ்டப் படுவாங்க!?" என்றவளின் குரலில் ஒரு வித வலி இருந்தது. மாயன் முழுவதுமாய் கெட்டவனாகிப் போனான் நிலாவிற்கு.
இதையும் தனக்கான தண்டனையாய் சிரிப்போடு ஏற்றுக்கொண்டான் மாயன். ஆனால் இதழ்களில் ஒட்டியிருந்த சிரிப்பு அவன் கண்களுக்கு எட்டவில்லை.
நாட்கள் இப்படியே ஓடின. நிலாவிடம் மாற்றம் தென்பட்டது. மூலையில் அமர்ந்து எதையோ வெறித்துக் கொண்டிருக்கும் நிலா மறைந்து துருவாவோடு காட்டையே வட்டமடித்திருந்தாள். அங்கு அவளுக்கு தெரியாத இடங்களின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டே வந்தது. முகத்தில் இருள் மறைந்து புதிய பொலிவு தோன்றியிருந்தது. தன் சக்திகளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாய் தன் கட்டுக்குள் வைக்க பழகியிருந்தாள். ஆனால் மாயனின் மீதான அவளின் அபிப்பிராயம் துளியளவும் மாறவில்லை. பேசுவாள். தேவையானவற்றிற்கு மட்டும். தன் சக்திகளை பெரும்பாலும் அவன் மேலே சோதித்து பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தாள். அவனை அந்தரத்தில் தொங்க விடுவது. பின்பு கீழே இறக்க தெரியாததுப் போல் பாசாங்கு செய்வது. அவனின் உருவத்தை மாற்றுவது. துருவாவை அவன் மேல் சீண்டி விடுவது என்று தன்னால் முடிந்த சிறுசிறு வகையில் அவனை இம்சை செய்துக்கொண்டிருந்தாள். இருப்பினும் அவளின் குறும்புகளை இரசிக்கத் தான் செய்தான் அவன்.
இதோ தன் கருநிற புரவியில் வந்து இறங்கியவனை உணராமல் துருவாவின் மேல் ஏறி நின்றுக்கொண்டு, கருங்கற்களை கைகளில் வைத்துக்கொண்டு எதிர் திசை மரத்தில் தொங்கும் பழத்தை அடிக்க முயன்றுக்கொண்டிருந்தாள் நிலா.
ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடியவே, எரிச்சலுடன் துருவாவின் மேலிருந்து கீழிரங்கப் போனவளின் பார்வை பழத்தின் மேலே இருந்தது. அவளைக் கண்டு புன்முறுவல் செய்தவன், அப்பழத்தை நோக்கி தன் கையை உயர்த்த, அது அவனது கைகளில் வந்து தஞ்சம் அடைந்தது.
திடீரென பழம் பறந்து தன் பின்னால் செல்வதைக் கண்டு திடுக்கிட்டவள், பின்னே திரும்பி பார்ப்பதற்கு முன், பழத்தை சுவைத்த வண்ணம் அவனே வந்து அவளின் முன்னால் நின்றான்.
"ஒரு பழத்தை பறிக்க எதுக்கு இத்தனை ஆர்ப்பாட்டம். கையை நீட்டினா வந்துறப் போகுது"
"நினைச்சதுலாம் சுலபமா கிடைச்சிட்டா நம்ப சோம்பேறி ஆகிடுவோம். அதனால தான் உழைச்சிஈஈசாப்பிடலாம்னு..." என கைகளை கட்டிக்கொண்டு இழுத்தவளின் தலையில் லேசாய் தட்டியவன்,
"உழைச்சி சாப்பிடலாம். ஆனா நீ சாப்பிடுறதுக்காகவே உழைக்கிறியே..!" என்றவனது மீது சிறுக்கற்களை எறிந்தாள்.
"எனக்கு டவுட்.. நான் ராஜா வாரிசு அதனால எனக்கு இந்த பவர்ஸ் எல்லாம் இருக்கு. அதே மாதிரி உங்க எல்லாருக்கும் இருக்கு. அப்புறம் என்னை மட்டும் ஏன் ரொம்ப அபூர்வமாவும் உங்களை சாதாரணமாகவும் சொல்றிங்க?"
"உனக்கு இருக்கும் சக்திகளும் எங்களுக்கு இருக்கிற சக்திகளும் ஒன்னு இல்லை நிலா. உனக்கு இயற்கையாவே மாய சக்தி இருக்கு.
எங்களுக்கு மாய சக்தியும் மந்திர சக்தியும் சேர்ந்து இருக்கு." என்றவன் அவளது குழப்பம் தெளியா முகத்தைக்கண்டு,
"மாய சக்தி என்றால் ஒருவருக்கு இயற்கையா அவங்க உடல்ல இருக்குறது. இப்போ என் பெற்றோரால எனக்கு மாய சக்தி இருக்கு. ஆனா அதை வச்சி நினைக்கிற எல்லாம் பண்ண முடியாது. அதுக்குனு குறிப்பிட்ட எல்லைகள் இருக்கு. சில விஷயங்கள் என்னால செய்ய முடியும்னா அந்த சில விஷயங்கள் மட்டும் தான் என்னால செய்ய முடியும். அதையும் தாண்டி நாங்க கத்துக்குறதுதான் மந்திர சக்தி.
மந்திரங்கள் கத்துக்கிட்டு அதை சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி நாங்க பயன்படுத்துவோம். மந்திர சக்தியும் மாய சக்தியும் சேர்ந்தாலும் கூட எங்க சக்தி உன்னுடைய சக்திக்கு முன்னாடி கூட நிற்க முடியாது. உனக்கு எதற்க்கும் மந்திரங்கள் தேவைப்படாது. இயற்கையாவே உன்கிட்ட எல்லா சக்திகளும் இருக்கு."
"ஆனா எனக்கும் ஏதாவது ஒரு மந்திரம் வேணும். மந்திரம் சொல்லி மேஜிக் பண்ணாத் தானே நல்லா இருக்கும்."
"அதெல்லாம் தேவையில்லை."
"இல்லை எனக்கு ஏதாவது மந்திரம் வேணும்."
"என்னமோ பண்ணு." என்று விட்டுவிட்டான்
"ஹூம்ம்ம்" என்று நெடு நேரம் யோசித்தவள்,
"யோசிச்சுட்டேன். 'ஜீ பூம்பா' எப்படி இருக்கு." என்றாள்.
தன் முகபாவனையை வேண்டா வெறுப்பாக வைத்துக்கொண்டு, "எப்படியும் சொந்தமானதா இருக்காது.. சுட்டது தானே.. அதுக்கு எதுக்கு இவ்வளவு பில்டப்." என்றான்.
அதைக் காதில் போட்டுக்கொள்ளாதவள், இப்பொழுது தன் கையில் கருங்கர்களை தரையில் வைத்து விட்டு, கண்களை மூடி, காற்றில் கையை அலையை விட்டு, "ஜீ பூம் பா" எனக்கூறி விரலில் ஏற்பட்ட மின்னலின் கீற்றை அதை நோக்கி பாயச்செய்தாள்.
கருங்கற்கள் கால்கள் முளைத்ததுப் போல் தங்களின் இடத்திலேயே உயிர்கொண்டு துள்ளிக் குதித்தன.
'பைத்தியம்..' என அவன் மனதில் நினைத்தது அதன் காதுகளில் விழுந்துவிட்டதா என்று தெரியவில்லை. அவனின் கால்களை சுற்றி சுற்றி வட்டமடித்து, அவனை நிற்க விடாமல் இம்சை செய்தது.
எரிச்சல் கொண்டவன், "நிலா பீ சீரியஸ். இதுங்கல கொஞ்சம் நிப்பாட்டுறியா? நான் வந்த வேலையை மறந்துட்டேன்" என அதட்டல் தொணியில் கூற, உடனே முகத்தை விரைப்பாக்கி, அவைகளை பழைய நிலைக்கு மாற்றி விட்டு, "இப்போ என் மந்திரத்தை வேற யாராவது சொன்னா.. அவங்களால என் மேஜிக்கை பண்ண முடியுமா?" என்றாள்.
"ஆமா பெரிய மந்திரம். உன் மாய சக்திக்கு நீயே சும்மா மந்திரம்னு ஒன்னு வச்சிக்கிட்டா அது உண்மையான மந்திரம் ஆகிடுமா?" என்றான்.
இன்னும் அவளது விளையாட்டுத்தனம் அவளை விட்டு நீங்காமல் இருக்கவே, அவளை கொஞ்சமாவது நிலைமைக்கு ஏற்ற விதத்தில் மாற்ற நினைத்தான். அதற்கு அவளிடம் உண்மையைச் சொன்னால் தகும் என்றே அவனுக்கு தோன்றியது.
ஆனால் அவனை எரிச்சல் படுத்தவே அவள் அத்தனையும் செய்கிறாள் என்று அவனிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
"இங்கப் பாரு நிலா.. நீ இப்படியே இருந்தா, எதையும் சாதிக்க முடியாது. அந்தக் கொம்பன் ஒன்னும் சாதாரண ஆள் கிடையாது."
"தெரியும்"
"தெரிஞ்சப் பிறகும் இப்படியே இருந்தா என்ன அர்த்தம்? அடுத்த கட்டத்துக்கு தேவையான முயற்சியை நீ பண்ண வேண்டாமா?"
"பண்ணிக்கிட்டுத் தானே இருக்கேன் மாயன். நான் ஒன்னும் குழந்தை இல்லை. எனக்கும் நிலைமை என்னனு தெரியும். எனக்கும் யார் கிட்ட எப்படி நடந்துக்கணும்னு லிமிட் தெரியும்.
அதுக்குனு எனக்குக் கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் இல்லைன்னு நீ நினைச்சா நான் என்ன பண்றது? நான் என் மனசால.. ஓரளவு தெளிவாத் தான் இருக்கேன்." என தட்டுத் தடுமாறி 'ஓரளவை' மட்டும் இழுத்துக் கூறினாள்.
"அப்புறம் இந்தக்காட்டுக்குள்ளேயே இருந்துகிட்டு அந்த கொம்பனை என்னால எப்படிப் பழி வாங்க முடியும்?"
அவள் இப்பொழுது தான் விஷயத்திற்கு வந்துள்ளதை உணர்ந்தவன், "நீ இங்கேயே இருக்கப் போறேனு யார் சொன்னா?"
"அப்போ?"
"நீ கோட்டைக்குப் போகப் போற."
"என்ன?" என தன் கண்கள் உருண்டு கீழே விழுந்து விடாதக் குறையாய் விரித்தாள்.
"என்ன 'என்ன' ?"
"ஐ மீன் எப்போ எ.. எப்படி?"
"அன்னைக்கு ஒரு நாள் கொம்பன் பிறந்த நாள் விழாவுக்கு எப்படிப் போனியோ அப்படி."
"மறைஞ்சா?"
"ச்சீ ச்சீ இல்லை.." என்றவன் அவளை ஓர் பாறையின் மீது அமர வைத்து தானும் எதிரில் அமர்ந்தான்.
"பின்னே? உடைமாற்றியா?"
"ம்ம் ஆனா உடையை மட்டும் மாற்ற போறதில்லை. உன் உருவத்தையும் தான்." என்றவுடன் அவளின் முகம் கருத்துவிட,
"உன்னைப் போல என்னால யாரையும் ஏமாற்ற முடியாது." என வெடுக்கென கூறினாள்.
"இங்கப் பாரு நீ ஒன்னும் நல்லவங்களை ஏமாற்றப் போறதில்லை சரியா?" என அவன் கூறியும் அவள் பதில் பேசாமல் இருக்க,
"எல்லாமே உன் கையில் தான் இருக்கு நிலா. நீ ஒத்துழைக்கலனா என்னால எதுவும் பண்ண முடியாது.." என்றவுடன் அவன் கண்களில் தன் கண்களை பொறுத்தியவள்,
"சரி நான் பண்றேன்." என்றாள். அவளின் குரலில் இருந்த உறுதியைக் கண்டு மார் நிமிர்த்தி பெருமிதமாய் சிரித்தான் அவன்.
"சரி உனக்கு ஒரு வாரம் தான் நேரம் இருக்கு. அதுக்குள்ள கோட்டையைப் பற்றி எல்லா விஷயங்களையும் நீ தெரிஞ்சிக்கணும். அந்த கொம்பனைப் பற்றியும் தான்" என்றவனை அவள் கேள்வியாய் நோக்க,
"கொம்பனுக்கு.. இப்போ ஒரு மனைவி இருக்கு. அதாவது உனக்கு சித்தி. அப்புறம் அவங்களுக்கு ஒரு பையனும் இருக்கான். உன்னை விட நாலு வயது இளையவன். விச் மீன்ஸ் அவன் உனக்குத் தம்பி."
"வாட்?!!" என கண்களைச் சுறுக்கி நம்ப முடியாதக் குரலில் கூறியவள், "செகண்ட் மேரேஜ்?.. எப்படி அவங்களால அது முடிஞ்சது.." கொம்பன் மீதான அவளது வெறுப்பின் அளவு அதிகரித்திருந்தது.
"அவன் மிளிரா அத்தையை உண்மையா காதலிச்சுருந்து இரண்டாவது கல்யாணம் பண்ணி இருந்தா நீ அதிர்ச்சி ஆகுறது நியாயம். அவனுக்குத் தான் காதலோட உண்மையான அர்த்தமே தெரியாதே." என்றவன், "சரி அதை விடு, நீ அவங்களுக்கு பணிப்பெண்ணா தான் போகப் போற.."
"நானா..?! அவங்களுக்கா..?! அது எப்படி சாத்தியம்?"
"சாத்தியம் தான். அவங்களும் நம்பப் பக்கம் தான்."
"அவங்க தான் கொம்பன் மனைவி ஆச்சே அப்புறம் எப்படி நமக்கு சப்போர்ட் பண்ணுவாங்க?"
"பண்ணுராங்களே.. இன் பாக்ட் உன்னை கோட்டைக்குள்ள நுழைய வைக்க இந்த ப்ளானையே அவங்க தான் போட்டாங்க."
"அவங்களை நம்பலாமா?"
"தாராளமா நம்பலாம்."
"சரி மேல சொல்லு"
"கொம்பன் அம்மா ரொம்ப காலம் முன்னாடியே இறந்துட்டாங்க. அவனுடைய பாதி தப்புக்கு தூண்டுதலா இருந்ததே அவன் அப்பா தான். அப்பாவா இருந்தாலும் இவனுக்கு அட்வைஸ் பண்ற காலமெல்லாம் மலையேறிப் போச்சு. பண்ணாலும் அவன் அதைக் காதுல கூட போட்டுக்க மாட்டான். அவனைப் பொறுத்த வரைக்கும் அவன் பண்றது தான் சரி. அவன் பண்றது மட்டும் தான் சரி. அவனை யாராவது தப்பு சொல்லிட்டா.. யாரு எவருனெல்லாம் பார்க்க மாட்டான். கதையை முடிச்சிடுவான்." என்றவன் மீண்டும் தொடர்ந்தான்.
"அப்புறம் அவனுக்கு ஒரு தம்பி இருக்கான். பேரு ஏகளவன் நாகா "
"அது என்ன நாகா?"
"ஏகளவன் என்பது தான் அவன் உண்மையான பெயர். ஒரு முனிவரிடம் நாகக் கலைகளைக் கத்துக்கிட்டதால வந்த துணைப் பெயர் தான் நாகா. இவனைத் தவிர இங்க யாரும் நாகக் கலைகளை கற்றுத் தேர்ந்தவர்கள் இல்லை."
"அது ஏன்? அவன் கத்துக்கிட்ட முனிவர் கிட்ட போய் கேட்டா சொல்லித் தரப் போறார்."
"அவன் தான் அவரிடம் கலையை கற்றுக்கிட்ட முதலும் கடைசி மாணவன்."
"ஏன்?"
"அவனுக்குக் கற்றுத் தந்த பிறகு அந்த முனிவர் எங்கேனு யாருக்கும் தெரியலை. அவர் உயிரோட இருக்காரானும் தெரியலை."
"நாகக் கலை என்ன அவ்வளவு சக்தி வாய்ந்த கலையா?"
"இல்லை இல்லை. அவனுடைய சக்தி நம்மை விட உயர்ந்தது இல்லைனாலும் வித்தியாசமானது. நாகக் கலையை கத்துகிட்டவங்களால நாகங்களோட சக்தியைப் பெற்று நாகமா மாற முடியும். அவனுக்கு அந்தக் கலை தெரியும்ங்கிறது பிரச்சினை இல்லை. அவனுக்கு மட்டும் தான் அந்தக் கலை தெரியும்ங்குறது தான் பிரச்சினை." என்றான்.
அதே நேரத்தில் கோட்டையில் தன் பாதத்தை இடியாய் தரையில் இறக்கி தரை அதிர தன் தந்தையின் அறைக்குள் புயலாய் நுழைந்தான் நாகா என்னும் ஏகளவன் நாகா.
அவனது முகம் கோபத்தில் சிவந்து மார் ரோமங்கள் சிலிர்த்து நின்றன. லேசாய் கொம்பனின் ஜாடை இருந்தது அவனிடம்.
"என்ன ஆனது நாகா? ஏனித்தனை கோபம்?" என உடம்புக்கு முடியாமல் படுக்கையில் படுத்திருந்த கொம்பனின் தந்தை கேளவன் தள்ளாடி எழுந்தபடி வினவினார்.
புறமுதுகைக் காட்டி நின்றிருந்தவன், "இத்தனை அகந்தையும் ஆணவமும் ஒரு மனிதனை இருக்கும் இடம் தெரியாமல் அழித்துவிடும் என்பதை தங்களின் தவப் புதல்வன் மறந்துவிட்டானோ தந்தையாரே? இல்லை எப்பொழுதும் அவன் காலடியில் கிடக்க நான் என்ன அவனது ஆயிரக் கணக்கான வேலையாட்களில் ஒருவன் என நினைத்துவிட்டானா?" என நரம்புகள் புடைக்க கைமுஷ்டியை மடக்கி அவன் எதிரிலிருந்த தூணில் ஒரு குத்து குத்தினான்.
"அவன் என்ன செய்துவிட்டான் என இப்படி குதிக்கிறாய். அவன் குணம் நாம் அறிந்ததுதானே.."
"என்ன செய்துவிட்டானா? தங்களுக்கு ஏற்கனவே உடம்பு சரியில்லாமல் இருப்பதால், தங்களின் அரணர் பதவியை எனக்கு கேட்டேன். அதற்கு இன்று அரணர் பதவியை கேட்டால் நாளை என் பதவியை கேட்பாய் அதையும் தந்து விட முடியுமா என்கிறான். இல்லை கேட்டால் தான் என்ன தவறு? அரசர் பதவியில் அவனுக்கிருக்கும் உரிமை அதே அளவு எனக்குமுண்டு. இருந்தும் என்றாவது தங்களிடம் அதைப்பற்றி கேட்டிருக்கிறேனா?
போனால் போகிறான் என் அண்ணன்தானே என அமைதியாக இருக்கிறேன். அதை அவனுக்காக பயந்து வாய் பொத்தி இருக்கிறேன் என்று நினைத்து விட்டானா?" என உறுமியவனின் குரல் அந்த அறையில் எதிரொலித்தது.
(அரணர் பதவியென்றால் அரசருக்கு அடுத்துள்ள பதவியாகும். கோட்டையின் பாதுகாப்பையும் அரசரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதே அவரின் வேலை. அரசருக்கு ஏதேனும் ஆபத்து நேர விருந்தால் சஊழா நாகம் முன்பே அதைக் காட்டி விடும். அதையறிந்து அரசரை எந்த ஆபத்தும் நெருங்கவிடாமல் பாதுகாப்பர். தற்போது அப்பதவியில் இருப்பது கொம்பனின் தந்தையான கேளவன் தான்)
"நான் அவனிடம் இதைப் பற்றி விசாரிக்கிறேன். நீ சற்று அமைதியாக இருப்பா."
"எனக்காக எவரும் பரிந்துரைக்க வேண்டாம். அவனின் ஆணவத்தை அடிவேரோடு புடுங்க எனக்குத்தெரியும்." எனத் தன் கைக் காப்பை ஏற்றி விட்டப்படி மின்னலென அவ்வறையில் இருந்து வெளியேறினான் நாகா.
தன் தம்பியின் கோபத்தைக் கண்டு சமாதான பேச்சு வார்த்தை நடத்த அவனைப் பின் தொடர்ந்து அங்கு வந்த கொம்பன் அவன் பேசிய அனைத்தையும் கேட்டு இரத்தம் கொதிக்க, அறையின் வாயிலில் தன்னை கவனிக்காமல் நாகா சென்ற திசையை சிவந்த கண்களோடு வெறித்துக்
கொண்டிருந்தான் கொம்பன்.
அவள் தொடர்வாள்..
_________________________
மறக்காமல் உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் போட்டுட்டுப்போங்க மக்களே..
போன அப்டேட்ல நீங்க கேட்டதை இந்த அப்டெட்ல காட்ட முடிஞ்சலவு முயற்சி செஞ்சிருக்கேன். எதாவது மிஸ் ஆகியிருந்தா கண்டிப்பா சொல்லுங்க..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro