Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நிலா -30

அவனைக் கண்டவுடன் மீண்டும் துருவாக்குள் புதைந்துக்கொண்டவளிடம் சென்றவன்,
"நிலா.." என்றழைத்தான்.

"என்ன?" கேட்டதில் வேகம் இருந்தது.

"தூங்கவே இல்லையா?"

எழுந்து தன் பார்வையை அவன் மேல் பதித்தவள், "தூங்கிட்டு இருக்கவளை எழுப்பி இந்த கேள்வியை யாராவது கேப்பாங்களா?" என்றாள் அவளின் வில் புருவங்களை உயர்த்தி.

"அது தூங்கிட்டு இருக்கிறவங்களுக்கு. தூங்குற மாதிரி நடிக்கிறவங்களுக்கு இல்லை."

"வாட்டெவர்..!" என எரிச்சலாய் விழிகளை மேல் நோக்கி சுழற்றியவள் பின் "நீ இங்க என்ன பண்ற?" என்றாள்.

"இது என்ன கேள்வி?"

"ஆன்சர் ப்ளீஸ்?" என்றாள் கைகளை குறுக்காய் பின்னியபடி.

"நான் வராம வேற யார் வருவா? தனியா நீ என்ன பண்ணுவ?!"

"என்னமோ பண்ணிட்டு போறேன் அதைப் பத்தி உனக்கென்ன அக்கறை?" என்ற அவளின் வார்த்தைகளில் கோபம் கொண்டவன்,

"நீ பிறந்து முழுசா ஒரு மணி நேரம் கூட இருந்திருக்காது நிலா. அப்பவே உன்னை என் கையில ஏந்தி உன்னை பத்திரமா பார்த்துப்பேன்னு என் அப்பா கிட்ட வாக்கு குடுத்திருக்கேன். அதுக்காகத்.." என்றவனது வார்த்தைகளை வேகமாய் வெட்டினாள்.

"ஓ எம் ஜி..! சபாஷ்.. அந்த கொம்பன் கிட்ட என்னை விட்டுட்டு வரும் போதும், இந்த காட்டுல நடுராத்திரி தனியா விட்டுட்டு போகும் போதும், என்ன பத்தின‌ உண்மையை என்கிட்டையே மறைக்கும் போதும், உன் இஷ்டத்துக்கு என்னை ஆட்டிப்படைக்கும் போதும் வராத அக்கறை.. இப்போஓஓ.. இந்த இடத்துல.. இந்த நிலா மேல.. தீடிஈஈர்னு வந்ததற்கான காரணம்.. இதன்னாஆ, மிஸ்டர்ர்.. மாயன்?" அவளின் வார்த்தைகள் வெளிவரும் விதம் மிக மென்மையாக இருந்தாலும் அதற்குள் இருந்த அழுத்தத்தையும் கோபத்தையும் அவனால் மட்டுமே உணர முடிந்தது.

அவன் பதில் கூற வாய் திறக்கும் நேரம் தடுத்தவள், "ஒருவேளை இதுக்குப் பேரு அக்கறைனு நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேனோ.. இதெல்லாம் வெறும் உங்க கடமைக்காக மட்டும்ம்ம் தானே நீங்க செய்றீங்க.." என கேள்வியையும் கேட்டு விடையையும் அவளே அளித்தாள்.

மாயனின் கோபம் தலைக்கேறியது. தான் அவள் மேல் வைத்த காதலை துளியும் உணராமல் வெறும் கடமைக்காக செய்கிறேன் என்று எப்படி அவளால் கூற முடிகிறது. வாக்கு கடமை என்ற வார்த்தையெல்லாம் அவன் அவளின் வீட்டில் ஹரிஷாய் நுழைந்த இரண்டு மூன்று நாட்களிலேயே அவளைக் காக்க நினைக்கும் தன் மனதிற்கு சப்பைக்கட்டாகிப்போனது.
அவனுள் ஏற்பட்ட அந்த சிறு சலனம் விஸ்வரூபம் எடுத்து அவனை மிரட்ட ஆரம்பித்த போதே அதை உணர்ந்தான் அவன். அதை மறைக்கவும் முடியாமல் வளர்க்கவும் முடியாமல் அவன் பட்ட பாடு அவனக்கு மட்டுமே தெரியும். ஆனால் இவளோ அவன் அவளிற்காகச் செய்ததை எல்லாம் கடமைக்காக என்கிறாள். கடமையாம் கடமை.. பெரிய பொல்லாத கடமை.

"இப்போ புரியுது.. எல்லாம் புரியுது.. நீங்க அன்னைக்கு என்கிட்ட சொன்னதெல்லாம் வெறும் பொய்.. எப்படி எப்படி‌ நீங்க என்னை காதலிக்கிறிங்களா?! அப்படி காதலிச்சிருந்தா என்னை அங்க எப்படி விட்டுட்டு வந்துருக்க முடியும்? அப்படியே விட்டுட்டு வந்தவரு சும்மா வராம காதல் வசனம் எல்லாம் வேற பேசுனிங்களே. அதான் ஏன்னு எனக்கு புரியல. அந்த சூழ்நிலையிலயும் நான் உங்களை தப்பா நினைச்சிட கூடாதுன்றதுக்காகவா? இல்லை அதுக்கு பின்னாடியும் எதாவது ப்ளான் வச்சிருந்திங்களா? நான் முன்னாடியே யோசிச்சுருந்திருக்கணும் என்னை காப்பாத்த வேண்டிய அவசியம் உங்களுக்கு என்னனு? நீங்க முதல் தடவை என்னை ஏமாத்தினப்போ கூட ஏதோ என் நல்லதுக்காக தான் எல்லாமே நீங்க செய்றிங்கனு நம்புனேன். ஆனா நீங்க என்னை காப்பாத்துனது என் மேல அக்கறை காட்டினது எல்லாமே வெறும்.. வெறும் உங்க அப்பாக்கு நீங்க குடுத்த வாக்குக்காக மட்டும் தான்‌ இல்லையா?!! நான் கூட நீங்க பேசுன காதல் வசனம்.. காட்டின பாசம், அக்கறை எல்லாம் உண்மைனு நினைச்சிட்டேன். அது எப்படி எல்லாரும் மறுபடியும் மறுபடியும் நான் முட்டாள்னு எனக்கே என்னை படம் போட்டு காமிக்கிறிங்க? என்னை முட்டாள் ஆக்கி வேடிக்கை பார்க்குறிங்க" என அந்த காடே அதிரும் படி உரும்பினாள். விளகியிருந்த மேகக் கூட்டங்களும் பயத்தில் இறுகி நின்றன. அவளின் முகம் சிவந்து கண்களில் விழுந்துவிடுவேன் என பயம் காட்டிய கண்ணீரை இழுத்து பிடித்திருந்ததில் இரத்தச்சிவப்பாகியிருந்தது.

'அது கடமைக்காக நான் செய்ததில்லை முட்டாள் பெண்ணே.. உன் மீது வைத்த உண்மையான காதலால்' என அந்த பேதையவளுக்கு தன் காதலை உணர்த்த நினைத்த அவனின் மனதை மிகச் சிரமப் பட்டு அடக்கினான் அவன். அவளிருக்கும் நிலைமையில் தன் உணர்வுகளையோ தன் நிலைமையையோ அவளிடம் அவன் திணிக்க விரும்பவில்லை. அதுவும் அவன் அவள் மீது வைத்த உண்மையான அன்பினாலும் நேசத்தினாலும் தான் என்பதை அவள் எப்படியும் உணரப் போவதில்லை.

"பதில் சொல்ல மாட்டிங்களா!? என் உணர்வுகளோட விளையாட உங்களுக்கு அத்தனை இஷ்டமா?? இல்லை என்னை முட்டாளாக்குறதுல அவ்வளவு இஷ்டமா? ஏன் என்னை நம்ப வச்சி நம்ப வச்சி என் நம்பிக்கையோட விளையாடுறிங்க?!! அதுல உங்களுக்கு என்ன தான் சந்தோஷம்?"
தான் என்னப் பேசுகிறோம் என்றுக்கூடத் தெரியாமல் பிதற்றிக்கொண்டிருந்தாள் அவள். சரி தவறு என்ற எல்லையை எல்லாம் தாண்டியிருந்தது அவள் மனம். மனதைப் படிக்கத் தெரிந்த மாயானால் கூட அவளின் மனதில் ஓடுவதை கணிக்க முடியவில்லை. அடுத்தவர் மனம் புண் படாமல் வார்த்தைகளை பார்த்து பார்த்து பயன்படுத்துபவள் இன்று வார்த்தைகளால் மாயனைக் குத்திக்கொண்டிருக்கிறாள். மனதளவில் மிக அதிகமாகவே உடைந்திருந்தாள். இதில் அடுத்தடுத்து பிரச்சனைகளும் குழப்பங்களும் சேரவே, அவளின் செயல்கள் அவளின் கட்டுக்குள் இல்லை. அவள் பழைய நிலாவாய் இல்லை. அவள் நிலாவாகவாவே இல்லை.

இதற்கு மேல் மாயன் அமைதியாய் இருந்தால் அவனின்‌ காதலுக்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.

'உனக்கு தாயாய் மாறி என் குழந்தை பருவத்தை தொலைத்தவன் நான். உன் கண்ணில் படாமல் உன் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்தவன் நான். உன்னை பாதுகாப்பதற்காகவே என் வாழ்க்கையை பற்றி யோசிக்க மறந்தவன்
நான். உன் மேல் சிறு கீரல் விழுந்தாலும் துடித்துப் போகிறவன் நான். என்ன சொன்ன? நான் உன்னை காப்பாதுனது உன் மேல அக்கறை வச்சது எல்லாம்.. எல்லாம் எங்க அப்பாக்கு குடுத்த வாக்குக்காக மட்டும்தானா? ஆமா டி.. என் அப்பாக்கு குடுத்த வாக்குக்காக தான் எல்லாமே பண்ணேன். ஆனா எனக்கே தெரியாம நீ எனக்குள்ள வந்துட்ட. அதை நான் உணர்ந்தப்போ என் அடி மனசுல சிம்மாசனம் போட்டு அமர்ந்துட்ட. உங்க அம்மா.. மிளிரா அத்தையை எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு தெரியுமா? எங்க அம்மாவை விட எனக்கு அவங்களை தான் பிடிக்கும். அவங்க சாயல்ல நீ இருக்குறதாலயோ என்னம்மோ எனக்கு காரணமே தெரியாம உன்னையும் ரொம்ப பிடிச்சது. பிடிப்பு எப்போ காதலா மாறுச்சுனு எனக்கே தெரியலை. அதை வளர்க்க கூடாதுன்னு நான் எவ்வளவு முயற்சி செய்தாலும் உன் வெகுளித்தனத்தையும் குழந்தைத்தனத்தையும் என்னால காதலிக்காம இருக்க முடியலை. நான் பண்ண முதல் தப்பு உன்னை காதலிச்சது. இரண்டாவது தப்பு அதை உன் கிட்ட சொன்னது. இல்லைனா நான் உன் மேல வச்ச அன்புக்கும் அக்கறைக்கும் இப்படி ஒரு காரணத்தை சொல்லிருக்க மாட்ட. என் காதலை நீ புரிஞ்சிக்கலைனாலும் பரவாயில்லை இப்படி கொச்சைப் படுத்தாத. அப்புறம் என்ன கேட்ட நான் ஏன் உன்னை கொம்பன் கிட்ட விடனும் தானே? நான் யாருக்காக வாக்கு குடுத்தேனோ அவருக்கே ஒரு ஆபத்து வரும்போது என்னால என் காதலை காப்பாத்திக்கிட்டு சுயநலமா யோசிக்க முடியலை. என் இடத்துல நீ இருந்தா என்ன பண்ணியிர்ப்பனுலாம் நான் கேட்க மாட்டேன். ஏன்னா எனக்கு தெரியும் நான் பண்ணது தப்பு தான். அது எவ்வளவு பெரிய தப்புனும் எனக்கு தெரியும். அந்த தப்புக்கு தண்டனையா என் காதல் எனக்கு கிடைக்காமலேயே இருக்கட்டும். என்னை நீ புரிஞ்சிக்காமலயே நீ கடைசி வரைக்கும் இருந்திடு. அதான் எனக்கு சரியான தண்டனை.' இவ்வனைத்தும் அந்நொடி  நிலாவிடம் அவனின் இதயம் கூற நினைத்த வார்த்தைகள், அவனின் இதழைத் தாண்டி வரவில்லை. தன்னையே பார்த்துக்கொண்டு நின்றிருந்த நிலாவின் கண்களை நோக்கியவனிர்கு என்னத்தெரிந்ததோ தெரியவில்லை தனக்கான தண்டனை கிடைத்துவிட்டது என்றெண்ணி அவ்விடத்தில் இருந்து தற்காலிகமாய் நகர்ந்தான்.

தான் இவ்வளவு பேசியும் பதில் கூறாமல் மௌனமாய் சென்றவனின் மௌனம் தன் வார்த்தைகளுக்கான சம்மதத்தை தெரிவித்ததாக உணர்ந்த நிலாவின் நிலை சொல்வதற்கில்லை.

அவளின் நடத்தையில் எந்த மாற்றமும் இல்லை. எதையோ தொலைத்து விட்டதுப் போலவே இருந்தாள் அவள். மாயனிற்கு தன் மேலே கோபம் வந்தது. வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருந்தால் இத்தனை பிரச்சினை வந்திருக்குமா என்று தன்னையே வசைப்பாடிக்கொண்டான்.

ஏனோ அவள் முன்னிருக்க தர்மசங்கடமாய் உணர்ந்தான் அவன். ஆதலால் மாலையிலேயே குடிலுக்கு திரும்பி விட்டான். அவளோ இவன் எப்போது தான் செல்வானோ என காத்துக்கொண்டு இருந்தது போல் இருந்தது அவனிற்கு.

குடிலுக்குள் நுழைந்தாள் அங்கோ பெரிய போரே நடந்துக்கொண்டிருந்தது. நிலாவின் நிலைமை சுமோவின் மூலமாய் ஆழனின் காதிற்கு சென்றுவிட்டதால் அவரோ அவளைப் பார்க்காமல் தான் உண்ணப் போவது இல்லை என போராட்டம் நடத்திக்கொண்டிருந்தார். ஈலா கையில் உணவை ஏந்தியப்படி இருக்க சுமோ சுசியா மாசா என மூவரும் சுற்றி நின்று சமாதானம் செய்துக்கொண்டிருக்க, பிஜிலி தனக்கும் இதுக்கும் சமந்தம் இல்லை என்பதுப் போல் ஈலாவின்‌ கையில் இருந்த உணவையே பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு  வெறித்துக் கொண்டிருந்தான்.

உள்ளே‌ நுழைந்த மாயனைக் கண்டவுடன் அவனின் அப்பா முகத்தைத் திருப்பிக்கொள்ள, "என்னதான் நடக்குது இங்க?" எனக் கேள்வியாய் மற்றவரை நோக்கினான் அவன்.

"அப்பா சாப்பிட மாட்டேனு அடம்பிடிக்கிறார் மாயா!" என்றாள் ஈலா.

"ஏன் ?"

"நிலாவை பார்க்கணும்னு சொல்றார்" என்றாள் மாசா.

அவரருகில் சென்றவன் அவர் முன் மண்டியிட்டு, "நான்‌ தான் தெளிவா எடுத்து சொன்னேன்னே அப்பா.. அவளை இப்போ பாக்குறது உங்களை விட அவளுக்குத்தான் ரொம்ப ஆபத்து. அந்த கொம்பன் நம்மை கண்காணிச்சிட்டு தான் இருப்பான். நானே பயந்து பயந்துத் தான்‌ அங்கே போறேன். யாருக்காவது நிலா உயிரோட இருக்குறது தெரிஞ்சிட்டா பிரச்சினை வரும் ப்பா."

"நான் உன் அப்பனடா. அதுக்கூட புரியாத அளவிற்கு நான் மடையன் அல்ல. அவள் தான் இப்பொழுது அவள் சக்திகளை பெற்று விட்டாளே. அந்த கொம்பனுக்கு இனி பயப்பட வேண்டிய அவசியமென்ன? அவள் நினைத்தால் இந்த உலகையே இமைக்கும் நேரத்தில் அழித்து விடலாம். பிறகு ஏன் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு. அவள் பூமியில் வளர்ந்தப் பெண். நம்மைப் போல் இருக்க மாட்டாள். அவள் அங்கு என்ன கஷ்டப் படுகிறாளோ தெரியவில்லை. ஒன்று நான் அவளைக் காண வேண்டும். இல்லை அவள் இங்கு வர வேண்டும். அவள் அன்னைக்கடுத்து அவளைத் தூக்கியவன் நான். நான் அவளைப் பார்க்க உன் அனுமதி கேட்க வேண்டுமா?"

"அப்படி இல்லை அப்பா. அவள் ராஜ வாரிசாகிட்டா தான். ஆனா இமைக்கிற நேரத்துல அந்த கொம்பனை அழிச்சு அவன் மரணத்தை நம்ப சுலபம் ஆக்கிட கூடாது இல்லையா? அவனைக் கொஞ்சம் கொஞ்சமா சோதிக்கணும் அதுக்கு நிலா உயிரோட இருக்கிர விஷயம் அவனுக்கு தெரியக்கூடாது. அவள் பூமியில் வளர்ந்த பெண்ணா இருந்தாலும் அவளுக்கு அங்க எந்த குறையும் இல்லை. அவ அங்க சந்தோஷமா இருக்கா. அவக் கூட உங்களை பார்க்கனும்னு ஆசைப்பட்டா தெரியுமா? நேரம் வரும் போது நான் கண்டிப்பா உங்க ரெண்டு பேரையும் சந்திக்க வைக்கிறேன் ப்பா. இந்த கண்ணாமூச்சி ஆட்டமெல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத் தான். நீங்க சாப்பிடுங்க.." என்று உண்மையும் பொய்யும் கலந்து அவரை சமாதானம் செய்ய முயற்சித்தான்.

"அவள் உண்மையாகவே மகிழ்ச்சியாய் இருக்கிறாளா மாயா?" என்ற அவரது நேர்‌ கேள்விக்கு அவனால் பதிலுரைக்க முடியவில்லை.

"சொல் மாயா.. எல்லாம் எனக்குத்தெரியும்!" என்றவுடன் அவனது கண்கள் தானாக சுமோவை நோக்க, அவனோ அவனது முறைப்பில் விழிப்பிதுங்கி நின்றான்.

"அவனை ஏன் முறைக்கிறாய்? என் கேள்விக்கு பதிலைக் கூறு."

"அ.. அது வந்து அப்பா.."

"பூசி முழுங்காதே. உண்மையைச் சொல்."

"அதான் சொன்னேனே அப்பா அவ சந்தோஷமாய்த்தான் இருக்கானு.."

"உனக்கு உண்மை சொல்ல விருப்பமில்லை எனில் என்னை விட்டுவிடு. நான் சாப்பிடுகிறேன் சாப்பிடாமல் போகிறேன் அதைப் பற்றி உனக்கு கவலை வேண்டாம்."

ஒரு பெருமூச்சை வெளியிட்டவன், "சரிப்பா நானே உங்களை நிலா இருக்குற இடத்திற்கு கூட்டிட்டுப் போறேன்." என்றான் தீர்க்கமாய்.

இரு உள்ளங்கள் வெவ்வேறு இடத்திலிருந்து தங்களின் இரவை தூங்கா இரவாக கழித்தன.

இங்கோ மாயன் நிலாவுக்கும் தன் தந்தைக்குமான முதல் சந்திப்பை எண்ணி தூங்காமல் விழித்திருந்தான்.

அங்கோ நிலாவுக்கோ இதயத்தின் ரணம் அவளை தூங்க விடாமல் இம்சை செய்தது.

மாயன் எதிர்ப்பார்த்திருந்த விடியலும், விடியாத தன் வாழ்க்கையில் இந்த விடியல் மட்டும் தான் ஒருக் கேடு என்று உச்சிக்கொட்டிய நிலாவையும் சட்டை செய்யாமல் தன் பணியை துவங்கியிருந்தது அந்த விடியல்.

அவள் தொடர்வாள்..
______________________________

கதை எப்படி போகுது மக்களே?

ரொம்ப சுலோவ்வா இல்லை போர் அடிக்கிதா? ரொம்ப இழுக்குற மாதிரி இருக்கா?

நிலா இவ்வளவு ரியாக்ட் பண்றது ஒகேயா இருக்கா இல்லை ஓவரா இருக்கா?

மாயன் நிலாகிட்ட தன் மனசுல இருக்குறதை சொல்லாமல் விடுறது சரியா?

நெகட்டிவ் கமெண்ட்ஸ் இருந்தா தயவுசெய்து
குடுத்துட்டு போங்க.. கதையை மெருகேற்ற அது ரொம்ப உதவியா இருக்கும் எனக்கு..

வேற எதாவது இருந்தாலும் கண்டிப்பா சொல்லிட்டு போங்க..

அப்புறம்.. நீங்க இல்லாம 30 வது பார்ட் வரைக்கும் வர வாய்ப்பே இல்லை.  உங்க ஒவ்வொருத்தருடைய சப்போர்ட்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி மக்களே 🍫🍫..

அடுத்த அப்டேட்ல சந்திக்கலாம் டாட்டா..
      ‌
                                             -ஹனா💙

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro