நிலா -29
பல விதத்தில் எடுத்துக்கூறி அவளுக்கு புரிய வைக்க முயற்சித்தாலும் அவளின் குழம்பிய மனநிலையை அவனால் முழுதாக தெளிவடைய செய்ய முடியவில்லை.
நொந்துப் போன மாயன் நெடு நேரம் நிலாவோடு தன்னால் இருக்க முடியாது என்பதை உணர்ந்து தன் புரவியில் தன் குடிலை வந்தடைந்தவனின் மனம் தன்னவளின் இந்த மனநிலையைக் கண்டு உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்தது.
திடீரென யாரோ அறிமுகமில்லாத ஒருவரை தந்தையென்று ஏற்றுக்கொள்வது கடினம் என்றாலும் அவரே தன் அம்மாவின் இறப்பிற்கும் காரணம் என்ற உண்மையை திடமான மனம் கொண்டவர்களாலே தாங்கிக்கொள்ள முடியாது. அப்படியிருக்கையில் சின்ன விஷயத்திற்கு கூட இலகுவாய் உடைந்து விடும் மனமுள்ள நிலாவால் மட்டும் எப்படி முடியும்?
அதுவும் திடீரென ராஜ வாரிசு என்ற மிகப்பெரிய பொறுப்பும், நம்பியவனின் ஏமாற்றமும் அவளை நிலைக்குலையசெய்ததை அவன் நன்கு அறிவான்.
சின்ன பூச்சிக்கே அலறுபவளை அந்த அடர்ந்த, காட்டில் கொடிய மிருகங்களுக்கு நடுவே துணையின்றி விட்டு விட்டு வர, அவன் மனம் பட்ட பாடை அவன் மட்டுமே அறிவான். தான் அவளிற்கு செய்த துரோகத்திற்கு அவள் முன் நிற்க கூட தனக்கு தகுதியில்லை என நினைத்தவனிற்கு இப்பொழுது அவள் தன்னை வெறுத்தாலும் தான் அவளுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று புரிந்தது. ஆனால் நிலா உயிருடன் இருக்கும் விஷயம் கொம்பனிற்கு தெரிந்து விடக்கூடாது என சூழ்நிலை கைதியாக, கொம்பன் தன்னை கண்காணித்துக்கொண்டு தான் இருப்பான் என்று உணர்ந்தவனால் அவளுடன் முழுநேரம் இருக்க முடியாமல் போனது.
வந்ததில் இருந்து யோசனையிலேயே தன் குடிலில் அடைந்துக் கடந்தவனின் கவனத்தை நிகழ்விற்கு கொண்டுவந்தான் சுமோ. (இந்த கேரக்டரை கண்டிப்பா மறந்துருப்பிங்க🙈)
உள்ளே நுழைந்தவன், மாயன் கன்னத்தில் இருந்த வெட்டையும் உதட்டின் ஓரம் காய்ந்திருந்த இரத்தத்தையும் கண்டு பதறியவன், "மாயா என்ன ஆச்சு? என்ன இது காயம்?" எனக் கேட்க,
"அதைத் தான் நானும் ரொம்ப நேரமா கேட்டுக்குட்டு இருக்கேன். எனக்கே சொல்லலை. இதுல உனக்கு வேற கேட்டோன சொல்லிடப் போதா?" என அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்த பிஜிலி கேட்க,
"அதெல்லாம் அவன் சொல்லுவான் உன் வேலையைப் பாரு.." என்றவன் மாயனின் எதிரில் சம்மனமிட்டு அமரந்தபடி "நீ நிலாவை தானே பார்க்க போன.. பிரச்சினை ஒன்னும் வந்துடலையே..?!" எனக் கேட்டதிற்கு பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட படி சுமோவை ஓர் பார்வை பார்த்தவன் தன் முகத்தை வேறுப் பக்கம் திருப்பிக் கொண்டான்.
"மாயா.. என்ன ஆச்சு? இப்படி உம்முனு உக்காந்திருந்தா என்ன அர்த்தம்?" எனக் கூறியவன் அவனின் கண்களில் மெல்லிய திரையாய் கண்ணீர் படர்ந்திருப்பதைக் கண்டு "உன் கண்ணீருக்கு காரணம் வேணும்னா நிலாவா இருக்கலாம். ஆனா உன் காயத்திற்கு காரணம் நிலாவா இருக்கும்னு எனக்குத் தோணலை.."
"ஏன்?"
"என் தங்கச்சியே ஒரு அப்பாவி அவள் இப்படி அடாவடித்தனம் எல்லாம் பண்ணிருக்க மாட்டா."
"உன் அப்பாவி தங்கச்சி தந்த முதல் காதல் பரிசு தான் இது.." எனக் கூறியவனை பிஜிலி ஓர் பார்வை பார்த்துவிட்டு மீண்டும் தன் பணியை தொடங்க, சுமோவோ கோலிக் குண்டைவிட கண்களை பெரிதாய் விரித்தவன், தன்னை சமன்படுத்திக் கொண்டு, "நீ எதாவது செய்திருப்ப.
அதனால இருக்கும்.. மத்தபடி அவ காரணமில்லாம இப்படி பண்ண மாட்டா."
"ஹ்ம்ம்.. உண்மை தான்." என்றவன் சிறிது இடைவெளி விட்டு, "அவ ரொம்ப உடைஞ்சு போய்ருக்கா டா. அவளை பழையபடி மாத்துறது முடியுமானு எனக்கு தெரியலை. ஆனா ஒன்னு தெரியும் அவளால இவ்வளவு விஷயத்தை ஒரே நேரத்துல ஏத்துக்க முடியாதுனு.. தெரிஞ்சிருந்தும் ஒரு விதத்துல அவளுடைய இந்த நிலைமைக்கு நானும் ஒருக் காரணம்னு நினைக்கும் போது தான்" அடுத்து வார்த்தைகள் வர மறுத்து கண்களில் நீர் கோர்த்துக் கொண்டு தொண்டை அடைத்தது.
"மாயா.. உன் சூழ்நிலை அப்படி. உன் இடத்துல யாரா இருந்தாலும் அப்படித் தான் செய்திருப்பாங்க. அவளுக்கும் கொஞ்சம் நேரம் தேவைப்படும் இதை எல்லாம் ஏத்துக்குறதுக்கு. அந்த நேரத்தை நீ அவளுக்கு கொடுக்க வேண்டியது அவசியம். நீ கவலைப் படாத. அவ சரி ஆகிடுவா.."
"என்னால முடிஞ்சத பேசியிருக்கேன். எனக்கு என்னமோ பயமா இருக்குடா. அவளை இந்த நிலைமையில என்னால பார்க்க முடியல. அங்க தனியா என்ன பண்றாலோ தெரியலை.."
"எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான். ஹான்.. அப்புறம் அவங்க கிட்ட சொல்லிட்டியா? இப்போ நிலா இருக்குற நிலைமையில் அவளை அங்க அனுப்ப முடியாதுனு?!" என்றவுடன் சட்டென நினைவிற்கு வந்தவனாய்,
"இல்லை டா.. நல்ல வேலை நியாபகப் படுத்துன.. நான் போய் செய்தி அனுப்பிட்டு வந்துடுறேன்" என்றவன் எழுந்து நின்று,
"ஆமா அப்பா எங்கே?" என்று வினவ,
"அவங்க ஈலாவோட வெளியில போய்ருக்காங்க." என்றான்.
"நான்தான் அவங்களை எங்கேயும் போக வேண்டாம்னு சொன்னேன்ல.. அப்புறம் ஏன்டா?"
"பயம் வேண்டாம் மாயா. ஈலாவோட தானே போயிருக்கார். அவள் பத்திரமா பார்த்துப்பா" என்பதை காதில் வாங்கிக்கொண்டே கோபமாய் வெளியேறினான்.
மறைவிடத்திற்கு சென்றவன், ஓர் கையளவு இலையை எடுத்து, தன் நெஞ்சில் வைத்து, "நமது திட்டத்தில் சின்ன மாற்றம். நிலா இருக்கும் மனநிலையில் அவளை இப்பொழுது அங்கு அனுப்ப இயலாது. அவள் நிலைமையைப் புரிந்துக்கொண்டு தன் சக்திகளுக்கு இன்னும் பழக்கப்படவில்லை. எனவே நான் நேரம் வரும் போது தகவல் அனுப்புகிறேன். தாங்கள் அங்கு எந்த சந்தேகமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்." என்று மனதில் நினைத்து அதை பறக்கவிடும் முன், அவனது உதடுகள் ஓர் பெயரை உச்சரித்தன.
அது யார் பெயர்?
சிறிது நேரம் அதே இடத்தில் காத்திருந்தவனின் எதிர்பார்பை விணடிக்காமல் அவன் தோளின் வந்து விழுந்தது ஓர் இலை. அதை தாமதிக்காமல் தன் நெஞ்சில் வைத்தவனது மனதில் ஒருக் குரல் ஒளித்தது.
"இங்கிருக்கும் நிலைமையும் இப்பொழுது சரியில்லை. நிலாவிற்கு தேவையான நேரத்தை நாம் அவளிற்கு கொடுப்பதே நலம். அவள் எதிர்த்து போராட வேண்டிய விஷயம் அவ்வளவு எளிதானதல்ல. நம் திட்டம் நிறைவேறவேண்டுமானால் அவள் மனம் திடமாய் இருக்க வேண்டியதும் அவசியம். அதேச் சமயம் நம்மிடம் நேரமும் குறைவாகவே உள்ளது. பார்த்துக்கொள் மாயா.. எதுவாயினும் நள்ளிரவில் தகவல் அனுப்பு" என்ற செயதியின் குரலுக்கு சொந்தமானவர் யார் என்று தெரியாவிட்டாலும் அது ஓர் பெண்மணியின் குரல் என்பது மட்டும் தெரிகிறது.
குடிலுக்குள் நுழைவதற்கு முன் ஈலாவின் குடிலின் மேல் தன் பார்வையை ஓட விட்டவன், "அப்பா இன்னும் வரலையா..?!" என்றவனது குரலில் இருந்த சோகத்தை சுமோ கண்டுக்கொண்டான்.
"இன்னும் வரலையே.. நீ நிலாவ பார்க்க போயிருந்தப்போ உன்னை பத்தியே பேசிக்கிட்டு இருந்தார் தெரியுமா? நீ எப்போ வருவ.. ஏன் இவ்வளவு தாமதம்னு ஒரே கேள்வி மேல கேள்வி" எனக் கண்கள் மின்னக் கூற, கையை தலைக்கு முட்டுக் கொடுத்து படுத்திருந்ததவனின் பார்வையில் இருந்த தீர்க்கமும், உதட்டின் ஓரம் ஒட்டியிருந்த சிரிப்பும் கூறிற்று சுமோவின் வார்த்தைகளை அவன் நம்பவில்லை என்று.
"நிஜமா தான் சொல்றேன் மாயா.. நீ ஏன் இப்படி பார்க்குற?" என்றவனின் வார்த்தைகளில் திடம் இல்லை.
"எப்படி பார்க்குறேன்?"
"நம்பாத மாதிரி.."
"அப்போ நம்புற மாதிரி சொல்லு. நான் வேற மாதிரி பாக்குறேன்."
"அப்போ நீ நான் சொன்னதை நம்பலையா?"
"அட என்னடா நீ.. பார்த்தது ஒரு குத்தமா? பார்வைல என்ன நம்புற பார்வை நம்பாத பார்வைனு" எனக் கூறியவன், இரு கை விரல்களையும் இணைத்து தலைக்கு கீழ் வைத்து, விட்டத்தை பார்த்து படுத்துக்கொண்டான்.
அவனது தந்தைக்கு இன்னும் தன் மேல் இருக்கும் கோபம் துளியும் விலகவில்லை என்பதை நன்கு அறிந்திருந்தான் அவன்.
மிளிராவை தோழி என்பதை விட தங்கை என்னும் இடத்தில் வைத்து உயிராய் நேசித்தவரால் அவரின் இறப்பு தன் கண் முன் நிகழ்ந்ததை தாங்கிக் கொள்ள முடியவில்லை. பிறகு மிளிராவின் வாரிசான நிலாவை பார்த்துக்கொள்ளும் கடைமையை தவறிவிட்டதாக எண்ணி நொந்திருந்தார். அது முழுவதும் மாயனின் மேல் கோபமாய் திரும்பி நின்றது. சிறு வயதில் இருந்து யாரின் அருகாமைக்கு ஏங்கியிருந்தானோ இன்று அவர்கண் முன் இருந்தும் மனதால் தள்ளியே நிறுத்தி வைக்கப்பட்டான். அவரின் கோபத்திற்கு வேறு காரணமும் உண்டு. நிலாவை பார்க்க வேண்டும் என்று அவர் வைத்த கோரிக்கைக்கு ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டான். முன்னால் ராஜ வாரிசான அவரை நாட்டு மக்கள் யாரெனும் கண்டு விட்டால் அது கொம்பனுக்குஆபத்தாக முடியும் என்பதால் கொம்பன் ஆழன் உயிருடன் இருப்பதை மிக இரகசியமாக வைத்திருக்க மாயனுக்கு கட்டளையிட்டிருந்தான். மேலும் நிலா உயிருடன் இருப்பதும் அந்த கொம்பனுக்கு தெரிந்து விடக் கூடாது என்பதும் கூட ஓர் காரணம்.
யோசனையின் பிடியில் அன்றைய இரவு நகர்ந்தது. விடிந்தும் விடியாமல் இருக்க, மாயனின் பயணம் தொடங்கிவிட்டது தன்னவளை நோக்கி.
அந்த அடர்ந்த காட்டில் சூரிய ஒளி நுழைய தடையாய் இருந்தன நான்கு திசைகளிலும் பரந்து விரிந்திருந்த மரங்கள். இரவெல்லாம் துளியும் உறங்காமல் தேவையான தேவையற்றதையெல்லாம் யோசித்து யோசித்து விடியும் நேரத்தில் துருவாவின் மேல் ஒய்யாரமாய் படுத்திருந்தவளின் விழிகள் அவளை மீறி சொருகத் தொடங்கியது.
துருவா இருந்தாலும் சிறு சத்தம் கேட்டாள் கூட அரண்டு விழிப்பவளை தன் மொழியில் சமாதானம் செய்துக்கொண்டிருந்தது துருவா.
இப்பொழுதும் அவள் கண்ணயரப் போகும் நேரத்தில் ஏதோ அரவல்கள் அவள் செவிகளுள் நுழைய பதறி எழுந்தவனின் முன் பாவமாய் நின்றிருந்தான் மாயன்.
'ஹையோ மறுபடியும் வந்துட்டானா!!' என்பதுப் போல் பார்த்து விட்டு மீண்டும் துருவாவுக்குள் புதைந்துக் கொண்டாள்.
அவளின் வீங்கிய இமைப் பட்டையும் சிவந்த விழிகளும், அவள் அழுததற்கும் இரவெல்லாம் தூங்காமல் இருந்ததற்கும் சாட்சிக் கூறியது.
பேதையவளின் மனதில் இத்தனை குழப்பத்திற்கான அவசியமென்ன? தான் நேற்று அவ்வளவு எடுத்துக் கூறியும் தெளிவில்லா அவள் முகத்தில் தான் எப்படி அவளின் பழைய சிரிப்பைக்கொண்டு வரப் போகிறேன்?! எனத் தெரியாமல் கலங்கி நின்றான் மாயன்.
அவள் தொடர்வாள்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro