Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நிலா -21

அன்று எந்த நம்பிக்கையில் அந்த அறிமுகமில்லா ஆளை நம்பி, அக்குழந்தையை அவரிடம் விட்டுவிட்டு வந்தான் என்பது, இன்றும் அவனை வியக்க வைக்க மறக்கவில்லை.

அன்று தான் அவன் தன் தந்தையைப் பார்த்த கடைசி நாளும் கூட, அவன் மீண்டும் மதியுலகிற்கு திரும்பும் போது கேட்ட முதல் செய்தி, தன் தந்தையும், அன்னையும் இறந்துவிட்ட செய்தி. கூடவே மிளிரா அத்தையின் இறப்புச் செய்தியும் தான்.

ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளுக்கு விடைத் தேடும் வயதும் பக்குவமும் அவனிற்கு அப்போது இல்லை.

அதுவும் அவர் இறப்பிற்குக் காரணம் அவன்‌ தந்தையின் நெருங்கிய தோழியான மிளிரா அத்தை தான்‌ என்றுக் கேள்விப்படும் போது, அதைத் துளியும் அவனால் நம்ப முடியவில்லை.

மிளரா அத்தை அவன்‌ தந்தைக்கு மட்டுமல்ல, அவனுக்கும் மிக நெருங்கியத் தோழி தான். அவள் பேசுவதே இன்னிசைப் போல தான் இருக்கும். அவன் பார்த்த பெண்களிலேயே யார் அழகானப் பெண் என்றுக் கேட்டாள், யோசிக்காமல் அவன் சொல்வது அவள் பெயரைத் தான். முகமளவு அழகைத் தாண்டி மனதளவில் இன்னும் அழகானவள். அவன் செய்யும் சேட்டைகளுக்கு அவனுக்காகப் பறிந்துப் பேசி அவன் தந்தையிடம் வாங்கிக் கட்டிக் கொள்வாள். அது மட்டுமல்ல, தன்னோடு சேர்ந்துக் கொண்டு சேட்டையும் செய்பவள். அவளை அறியாதவர்கள் என்று அவ்வுலகில் யாரும் இருக்க மாட்டார்கள்.

தன் தந்தைக்கும் அவளுக்கும் இடையில் நடந்த பிரச்சனையில் இருவரும் ஒருவரை ஒருவர் மாய்த்துக் கொண்டனராம். அங்கிருந்த பலரும் அரசல் புரசலாக இதைத் தான் பேசிக் கொண்டு இருந்தனர். அதைக் கேட்டவுடன் என்ன பிதற்றல் இது? என்று தான் அவனிற்கு முதலில் தோன்றியது.

"அந்தக் குழந்தையை எங்கே விட்டு வந்தாய்?" என்ற அவன் தமயனின் குரல் அவனை நிகழ்வுக்கு கொண்டு வந்தது.

"ஏன் அதை நீ கேட்கிறாய்?"

"அக்குழந்தையை இங்கே கொண்டு வந்து விடு. அதைக் காப்பாற்ற நினைக்காதே..!"

"என்ன பிதற்றுகிறாய்?"

"இங்கேப் பார் மாயா.. நான் சொல்வதைக் கேள்.. அந்தக் குழந்தையை கொண்டு வந்து விடு.." என்றவுடன் பயம் கொண்ட மாயன், எங்கு தன் தந்தையிடம் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ என்ற பயத்தில்,

"அது முடியாது" என உறுதியாய்க் கூற,

"ஏன் முடியாது?"

"ஏனென்றால் அந்தக் குழந்தையை..." எனத் தடுமாற, அதைப் பார்த்தவன்,

"அந்தக் குழந்தையை உன்னால் காப்பாற்ற முடியவில்லையா..?!" எனச் சற்றே பதற்றமாய் கேட்க, இல்லை என்றுச் சொன்னால் அக்குழந்தை எங்கிருக்கிறது என்று அறிந்துக் கொள்ளாமல் அவன் விட மாட்டான் என நினைத்த மாயன்,

"ஆ.. ஆமா.." என்க,

"முட்டாள்.. முட்டாள்.. இப்படிச் செய்து விட்டாயே" எனக் கோபத்தில் கத்தியவன், அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் அங்கிருந்துச் சென்று விட்டான்.

ஒருவேளை மாயன் அங்கிருந்துச் சென்றப் பிறகு, நடந்த உண்மையை இனியன் கூறியிருந்தால், இன்று தான் செய்யப்போகும் விஷயத்தை அன்றே செய்திருப்பானோ என்னமோ..
.
.
மாயனைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் தோன்றி மாயனோடு மறைய, தன் முதல் புதல்வனை பின் வாசல் வழியாய் அனுப்பியவர் அவன் சென்று விட்டானா எனப் பார்க்க தவறி விட்டார்.

அச்சமயம், நால்வர் உள்ளே நுழைந்து ஆழனைச் சுற்றி வளைக்க,‌ அவர்களுக்கு பின்னே இளம் வயது வாலிபனாக உள்ளே நுழைந்தான் கொம்பன்.

"குழந்தை எங்கே?" எனத் தன் வாளின் முனையை ஆழனின் கழுத்தில் வைத்து அழுத்தினான்.

"சொல்ல மாட்டேன்"

"சொல்வதைத் தவிர உனக்கு வேறு வழி இல்லை"

"என் உயிரேப் போனாலும் நான் அதை உன்னிடம் சொல்ல மாட்டேன்."

"கவலை வேண்டாம். நீ உண்மையைச் சொல்லும் வரை உன் உயிர் உன் உடலை விட்டு நீங்காது."

"நீங்கினாலும் எனக்கு கவலை இல்லை." என்றவுடன் கொம்பனின் கோபம் தலைக்கேற,

"ஆனால் உன்னை அவ்வளவு சுலபமாய் விட்டு விட மாட்டேன். இவ்வுலகில் உள்ள அனைத்து சித்திரவதைகளையும் நீ அனுபவிப்பாய்." என்றுப் பல்லிடுக்கில் கூறியவன், காவலர்களிடம் அவரை அழைத்துப் போக உத்தரவிட, அவரைத் தர தர வென்று இழுத்துச் சென்றனர்.

இதை அனைத்தையும் பின் வாசலின் கதவிடுக்கில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தான் இனியன்.

சிறுவனான அவனிற்கு பாதி புரிந்தும் புரியாமலும் இருக்க, விடிந்ததும் வந்த தன் தந்தையின் இறப்புச் செய்தியை அவன் உண்மையென நம்பி விட்டாலும், அதற்கு காரணம் மிளிரா அத்தை இல்லை என்பது  மட்டும் அவனிற்குப் புரிந்தது. ஆனால் அவர்களின் உரையாடலை வைத்து அக்குழந்தையைக் காப்பாற்றியதால் தான்‌ தன் தந்தை இறந்துப் போனார் என நினைத்தவனிற்கு அளவுக்கடங்கா கோபமும், வெறுப்பும் ஏற்படவே, தன் தம்பியிடம் அந்தக் குழந்தையைப் பற்றிக் கேட்டான். ஆனால் அதில் அவனிற்கு பலன் தோல்வியே என்றாலும், அக்குழந்தை உயிரோடு இல்லை என்று தெரிந்தப் பிறகு அவன் கோபம் கொஞ்சம் தனியத்தான் செய்தது என்றாலும், அதன் மேல் இருந்த வெறுப்புப் போகவில்லை. காலப்போக்கில் அக்குழந்தையின் உயிர் தன் கையால் போகவில்லை என்ற ஆற்றாமையும் வெறுப்பும் சேர்ந்து அவன் அடி மனதில், ஆழமாய் வேரூன்றி விஸ்வரூபம் எடுத்தது.

அதற்கு உரமாய் இருந்தது கொம்பன் தான்.
அந்தக் குழந்தை இன்னும் இறக்கவில்லை என்றும், அது இப்பொழுது எங்கிருக்கிறது என்றும் அவனிடம் கூறி அக்குழந்தையை கொல்ல பகடைக்காயாய் அவனை உபயோகப் படுத்தினான்.

மாயனிற்கு இது தெரிய வரவே எப்பொழுதாவது சென்று அப்பெண் குழந்தையின் பாதுகாப்பை உறுதிச் செய்துவிட்டு வருவது இனியும் உபயோகப்படாது என்றும் குழந்தை பருவத்திலிருந்து பெண்ணான அவளைப் பாதுகாக்க, பூமியில் முழு நேரம் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அதுவும் அவளிருக்கும் இடத்தில் இருக்க வேண்டியது அவசியம் என்றும் உணர்ந்தான்.

அக்குழந்தை வேறு யாரும் இல்லை. இருபத்தி இரண்டு வருடம் முன்பு குழ்நதையாய் அறிமுகமில்லா நபரிடம் அவன் விட்டு வந்த பெண் குழந்தை இப்பொழுது அந்த இருள் நிறைந்த பாதையில் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் எதுவும் அறியாமல் வளர்ந்தக் குழந்தையாய் அவனோடு நடந்துக் கொண்டிருக்கும் நிலா தான்.

அவள் தொடர்வாள்..

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro