நிலா -19
"என்ன..!? அந்த மாயனிற்கு எப்படி தெரிந்தது?" என கோபத்தின் உச்சியில் எதிரிருப்பவரின் உடல் நடுங்க கத்தினான் கொம்பன்.
"நம் ராஜ்ஜியத்தில் பணிபுரியும் ஒருவன் தான் அரசே அவனுக்குத் தகவல் அளித்திருக்கிறான்."
"எங்கு நாம் அவளின் அண்ணனையோ, தம்பியையோ எதாவது செய்துவிடுவோம் என்ற பயத்தில் நாம் சொன்னதற்கெல்லாம் தலையாட்டிய அவனின் தங்கையைப் போல் அவன் ஒன்றும் முட்டாள் இல்லையே. நம்மை வேவுப் பார்க்க நம் ராஜ்ஜியத்திலேயே ஆள் வைத்திருக்கிறானா? சபாஷ். நம் கூட்டத்தில் ஒளிந்திருக்கும் அந்த கருப்பு ஆட்டை என் கால் அடியில் கொண்டு வந்துப் போடுங்கள்." என தன் முன் நின்ற வீரர்களிடம் ஆணையிட்டான் கொம்பன்.
.
.
"ரொம்ப நன்றி வீர்." என அந்த புதியவனிடம் சினேகமாய் கைக் குழுக்கினான் மாயன்.
"இருக்கட்டும். நீங்கள் எனக்குச் செய்யாத உதவியா?"
"இருந்தாலும் மாசா அந்தக் கொம்பன் கிட்ட பேசின விஷயத்தை நீ சரியான சமயத்துல என்கிட்ட சொல்லாம போயிருந்தா, இதுவரை செஞ்சதெல்லாம் வீணாய் போயிருக்கும்."
"அவச் சின்ன பொண்ணு. உங்களுக்கு எதுவும் ஆகிடக் கூடாதுன்னு பயத்துலயும், நிலா மேல உள்ள வெறுப்புலையும் இப்படி பண்ணிட்டா. அவளை கவனமா பார்த்துக்கோங்க." என்றான் வீர்.
"நான் பார்த்துக்குறேன்."
"அப்போ சரி. நான் கிளம்புறேன். தாமதமாகிட்டா யாருக்காவது என்மேல சந்தேகம் வந்துடும்." எனத் தன் குதிரையில் ஏறி விடைப்பெற்றான் அவன். தனக்காக கோட்டையில் காத்திருக்கும் ஆபத்துத் தெரியாமல்.
குடிலுக்குள் நுழைந்தவன் ஈலாவிடம் நடந்தவற்றை விவரித்து விட்டு நிலாவைப் பற்றி கேட்க, தெரியாது என்பதே பதிலாய் வந்தது.
வெளியே வந்தவன் சுற்றி முற்றி பார்த்து ஆற்றின் அருகில் அவள் அமர்ந்திருப்பதைக் கண்டதும் அங்கேச் சென்றான்.
மாயன் அவளை அழைப்பதுக் கூடத் தெரியாமல் அந்த உறைந்த ஆற்றில் தெரியும் தன் பிம்பத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் அவள்.
அவளருகில் சம்மனமிட்டு அவன் அமருவது, ஆற்றில் பிம்பமாய் தெரிந்தவுடனே அவன் வந்ததை உணர்ந்தவள் தன் முகத்தை வேறு புறமாய் திருப்பிக் கொண்டாள்.
"நிலா" என மிருதுவாய் அவன் அழைத்தவுடன், அவள் கண்கள் குளமென மாறியதை உணர்ந்தவன், "நான் ஏதோ கோபத்துல உன்னை அப்படி பேசிட்டேன். அதுக்காக என் மேல கோபமா இருந்தா.." என்றவனை பாதியில் வெட்டியவள், "எனக்கு உன் மேல கோவம் இல்லை மாயன். கோவப் படுற உரிமையும் இல்லை. கோவமெல்லாம் என்மேல தான். நான் இவ்வளவு ஏமாளியா இருக்குறதால தானே இவ்வளவு பிரச்சினையும்." என அவள் மெல்லிய குரலில் கூற,
"அப்படி எல்லாம் இல்லை" என்றான் அவன்.
"நீ ஒருதடவை கேட்ட நியாபகம் இருக்கா? உனக்கு ஏன் தாராவைத் தவிர பெஸ்ட் பிரண்ட்ஸே இல்லைனு?"
"இருக்கு. ஆனா அது எதுக்கு இப்ப?.." என்றான்.
"சொல்றேன்... என் அப்பா.." என நிறுத்திவிட்டு "நேத்து வரைக்கும் அப்படி தான் நினைச்சேன். ஆனா அது உண்மை இல்லை." என்றவளின் தொண்டை அடைக்க, தன் கீழுதட்டை அழுந்த கடித்துவிட்டு அழுகையை கட்டுப்படுத்திய படி மீண்டும் தொடர்ந்தாள் "அவர் எப்போமே பணம் மட்டும் தான் வாழ்கைல சந்தோஷம்னு நினைப்பாரு... அவரு எனக்கு எந்த குறையும் வைக்கலை. பாசத்தை தவிர. அதுவும் தப்பு அவர் மேல இல்லை. அவர் மேல திணிக்கப்பட்டக் கருத்து மேல தான். பணம் இருந்தா என்ன எந்த குறையும் இல்லாம சந்தோஷமா வச்சிக்கலாம்னு இராத்திரி பகலா மாடா உழைப்பாரு. நிஜம் அது இல்லை மாயன். என்கூட இருக்க வேண்டிய நேரத்துல அவர் என்னோட இல்லை. பணம் சந்தோஷத்தை தராது. தனிமைல எனக்கு துணையா நிக்காது. நான் அழுதா என் கண்ணீரை துடைச்சு விடாது. நான் விழுந்தா என்னை தூக்கி விடாது. நான் வழி மாறிப் போனா எனக்கு சரியான வழியைக் காட்டாது. எல்லாத்துக்கும் மேல அன்பையோ பாசத்தையோ அது தராது. சந்தோஷம்னா என்ன மாயன்? நினைச்சதை சாப்பிடுறது, பிடிச்ச டிரெஸ்ஸை போடுறது, நினைச்சதை வாங்குறது. இது எதுவுமே இல்லை. உண்மையான சந்தோஷத்தை பணத்தால என்னைக்கும் தரமுடியாது. இந்த எதார்த்தத்தை என் அப்பாவுக்கு பல முறை உணர்த்த முயற்சி பண்ணி தோத்து தான் போயிருக்கேன். யாராவது என்கூட அன்பா பேசமாட்டாங்களானு பல நாள் ஏங்கியிருக்கேன். அதனாலயோ என்னமோ, யாராவது பாசமா இரண்டு வார்த்தை பேசினாக் கூட நாய்க் குட்டி மாதிரி அவங்க காலையே சுத்தி சுத்தி வருவேன். அவங்க என்னச் சொன்னாலும் செய்வேன். அதனாலயே என்னை பல பேர் யூஸ் அன்ட் த்ரோவா தான் பார்ப்பாங்க. தாரா தான் என்னைத் திட்டுவா ஏன் இப்படி ஏமாளியா இருக்கனு. ஒரு கட்டத்துக்கு மேல யாராவது உண்மையா பாசமா இருந்தாக் கூட எனக்கு சந்தேகம் தான் படத் தோணுச்சு. என்னைப்பாத்து எல்லாரும் கைக்காட்டி சிரிக்கிற மாதிரித் தோனும். நான் ஒன்னும் ஏமாளி இல்லைனு எல்லார் கிட்டயும் போய் கத்தனும் போல இருக்கும். அப்படி எல்லார் கிட்டயும் போய் நான் சொல்லிட்டு இருந்தா, என்னை விட பெரிய முட்டாள் யாருமேக் கிடையாது. அதனாலையே நான் எல்லாரைவிட்டும் ஒதுங்கியே இருந்தேன். நான் யாரையும் அவ்வளவு ஈசியா என் பிரண்ட் லிஸ்ட்ல சேர்த்துட மாட்டேன். தனியா இருந்து இருந்து, அதை வெறுக்கவும் முடியாம, ஒதுக்கவும் முடியாம அதே எனக்கு பழகிப் போச்சு. என் மண்டைலக் கொட்டி, ஏன் இப்படி இருக்க..? அப்படி இருக்கனு என் தப்பைச் சுட்டிக்காட்ட என்னைச் சுத்தி யாரும் இல்லாததாலயோ என்னமோ, நான் என்ன தான் முயற்சிப் பண்ணாலும், என் கேரக்டர என்னால சேன்ஜ் பண்ணிக்கவே முடியல.. " என்றுவிட்டு பெருமூச்சொன்றை வெளியிட்டாள்.
'இனிமே உனக்கு எல்லாமுமாவும் நான் இருப்பேன்' எனச் சொல்ல நினைத்தவன், அதைச் சொல்லாமல் சூழ்நிலையை மாற்ற வேண்டி, "உன் சோகக் கதையை வேற யாருக்கிட்டயாவது சொல்லிடாத.." எனக் கூற, அவனை முறைத்தவள்,
"சொன்னா?"
"நீ லூசுனு கண்டுப்புடிச்சிடுவாங்க." என்றவுடன்,
"யூஊ..." என்று சிணுங்கியவள், "ஐ.. ஐ ஜஸ்ட் ஹேட் யூ மாயன்." என்றுவிட்டு விருட்டென எழுந்துச் சென்றுவிட்டாள்.
அவள் போகும் திசையையே பார்த்தவன், சாயவா வேண்டாமா? என நூலிழையில் ஊசலாடிக் கொண்டு இருக்கும் தன் இதயத்திற்கு சம்மதம் தெரிவித்தான்.
"ஓஹ்ஹ்.. கதை அப்படியாப் போகுதோ?" என மாசாவின் குரல் தீடீரென வரவும் சிறிது திடுக்கிட்டவன், தன்னை சமன் செய்துக் கொண்டு தன் முகத்தை வெடுக்கென திருப்பிக்கொண்டான்.
"நீ இத்தனை நாளா அவளை காப்பாத்துறதுக்கு நம்ப அப்பா கிட்ட செய்த சத்தியம் தான் காரணம்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். ஆனா இப்பதான்" என அவள் முடிப்பதற்குள் குறுக்கிட்டு, "மன்னிக்கணும். அவர் நம்ப அப்பா இல்லை என் அப்பா." என்றான்.
அவளின் கண்கள் சட்டென கலங்கி விட "என்ன சொன்ன ண்ணா.. மறுபடியும் ஒரு தடவைச் சொல்லு?" என்று அவள் கேட்டதிற்கு அவனிடம் இருந்து மௌனம் மட்டுமே பதிலாய் வர, "ஒத்துக்குறேன். அவர் உனக்கும் இனியன் அண்ணாக்கும் மட்டும் தான் அப்பா. ஆனா ஒரு நிமிஷம்.. ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாரு. எனக்கு விவரம் தெரியாத வயசுலேயே என் அப்பாவையும் அம்மாவையும் அந்த அரசனால இழந்துட்டு, பிஜிலியைக் கைக்குழந்தையா வச்சிக்கிட்டு பசிச்சு அழுற அவனை என்னப் பண்ணி சமாதானம் படுத்துறதுனுக் கூடத் தெரியாம நடு வீதியில நின்னப்போ என்னை உன் கூட கூட்டிட்டு வந்த. அன்னைல இருந்து உன் அப்பா தான் என் அப்பா. உனக்கு அண்ணன்னா எனக்கும் அண்ணன்னு நீ தானே ண்ணா சொல்லி வளர்த்த? இ.. இன்னைக்கு இப்படி பிரிச்சுப் பேசிட்டல?! உன் மேல இருந்த பாசத்தாலதானே அந்த அரசன் சொன்னதை செஞ்சேன். செய்யலைனா உன்னை எதாவது பண்ணிடுவேனு என்னை மிரட்டுனாண்ணா. அதனால தான் அவன் குடுத்ததை கஷாயத்துல கலந்துக் குடுத்தேன். சத்தியமா அது நிலா உயிரையே எடுக்குற அளவுக்கு விஷம் நிரஞ்சதுனு எனக்குத் தெரியாதுண்ணா." என வாய்விட்டு அழுதவளை செய்வதறியாது பார்த்தான்.
"ஹே கருவி.. இப்ப எதுக்கு இப்படி அழுகுற?" என்க, அவளோ அவனை அதிசயமாய் பார்த்தவள்,
"என்ன சொன்ன?" என்க
"கருவின்னு சொன்னேன். கருவி" என மாயன் அவளைச் செல்லமாய் அழைக்கும் பெயரை வைத்து கேலிச் செய்தான்.
"என்னை அப்படிக் கூப்பிடாதனு எத்தனை தடவைச் சொல்றேன்." என அவன் தோளில் சரமாரியாக அடி வைத்தாள்.
"அப்படி தான் சொல்லுவேன். கருவி.. கருவி.. கருவி.." எனக் கத்திக் கொண்டே அவன் ஓட, அவனைத் துரத்திக்கொண்டே ஓடினாள் மாசா.
.
.
நாள்: 2
அந்த நிசப்தமான இரவை களைக்கும் விதத்தில் மாயன் கையில் உணவை வைத்துக் கொண்டு நிலாவுடன் போராடிக்கொண்டு இருந்தான். அவளோ சிறுப்பிள்ளைப் போல் அங்கே இங்கே என்று போக்குக் காட்டிக் கொண்டு இருந்தாள்.
அப்போது அவனின் தோலில் உள்ளங்கையளவுக் கொண்ட இலையொன்று விழுந்தது. நிலாவை விட்டு விட்டு 'தனக்கு யார் செய்தி அனுப்பியது' என நினைத்துக்கொண்டே அதை தன் இடப்புற மார்பில் வைத்து அழுத்தினான்.
"வீர் அண்ணா தங்களுக்குத் தகவல் கொடுத்த விஷயம் எப்படியோ அரசருக்குத் தெரிந்துவிட்டது. தாங்கள் எப்படியாவது கோட்டைக்கு வந்து என் தமயனைக் காப்பாற்றுங்கள். எனக்கு மிகவும் பயமாக உள்ளது." என வீரின் தங்கையான, ஐராவின் குரல் அவனின் மனதில் கேசட் போட்ட டேப் ரெக்கார்டர் போல் கேட்டவுடன், அவன் முகத்தில் சற்றே கலவர ரேகை படர்ந்தது.
மதியுலகில் செய்தி அனுப்பும் முறை இதுவே.
ஒரு நபர் தான் யாருக்கு செய்தி அனுப்ப வேண்டும் என எண்ணுகிறாரோ, அவர் அவ்வுலகின் எந்த மரத்தின் இலையை வேணாலும் பயன்படுத்தி தன் நெஞ்சில் வைத்து எதேனும் மனதில் நினைத்தால் அது அப்படியே அந்த இலையினுல் எழுத்தாக இல்லாமல், குரலாகவே பதிவாகி விடும். பின் யாரின் பெயரைச் சொல்லி அதைப் பறக்க விடுகிறாரோ, அவர் அவ்வுலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களிடம் சரியாய் சென்றடைந்துவிடும். ஒருவேலை வேறு யாரெனும் தன் நெஞ்சில் வைத்து அச்செய்தியை கேட்க எண்ணினால், அவர்களால் அது முடியாது. உரியவரால் மட்டுமே அச்செய்தியைக் கேட்க முடியும் என்பதால் இது மிகவும் பாதுக்காப்பானதும் கூட.
'இப்பொழுது என்ன செய்வது எனத் தன் பின்னந்தலையை வருடியவன், யாரின் கேள்விக்கும் பதிலளிக்காமல் கோட்டையை நோக்கி விரைந்தான்.
அவள் தொடர்வாள்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro