நிலா -14
"உன் அப்பாவுக்கு ஒன்னும் ஆகலை" என மரத்தின் வாயிலில் இருந்து வந்த மாயனின் குரல் கேட்டு திரும்பியவள், நான்கே எட்டில் அவனை நெருங்கி விட்டாள்.
"உண்மையாவா?!! எங்க அப்பா நல்லா இருக்காரா? அவரை நான் பார்க்கணும். ப்ளீஸ் என்னை அவர் கிட்ட கூட்டிட்டுப் போ.."
எனக் கெஞ்சினாள் அவள்.
'அவர் தான் உன் அப்பாவே இல்லையே..' என மனதிற்குள் நினைத்தவன், "தாராளமா கூட்டிட்டு போரேன். ஆனா.." என தன் ஆள்காட்டி விரலால் நெற்றியை வருடிய படி நிறுத்தினான்.
"ஆனா என்ன?!"
"பதிலுக்கு நீ என்ன செய்வ?"
"நீ என்ன சொன்னாலும் செய்றேன். அவரை நான் பார்க்கணும். அவர் நல்லா இருக்காரு தானே?"
"நல்லா இருப்பாரு. நீ குடுத்த வாக்கை மீறாமல் இருந்தா." என கூறியவனை அவள் புரியாமல் பார்த்து,
"நான் என்ன வாக்குக் குடுத்தேன்?!" எனக் கேட்க
"இப்போ தானே நீ சொன்ன. நான் என்ன சொன்னாலும் செய்றனு.."
எரிச்சலுடன் தன் கண்களை மேல் நோக்கி சுழற்றியவள், அவனைப் பார்க்க விருப்பமின்றி, வேறெங்கோ வெறித்த படி, "உனக்கு என்ன தான் வேணும்?" என்றாள் கடுகடுத்தக் குரலில்.
"அச்சோ. இந்த குளிர்லயும் உனக்கு ஏன் இவ்வளவு வேர்க்குது." என அவளின் கோபத்தை பொருட்படுத்தாமல் இளக்காரமாய் கூறியவனை எரிக்கும் பார்வைப் பார்த்தவளிடம்,
"சரி சரி சொல்றேன். வை டென்ஷன்?! நான் சொல்றதை மட்டும் செய். முக்கியமா கேள்வி கேட்கக் கூடாது.." எனக் கூறிவிட்டு நடக்க ஆரம்பித்தான்.
மூவரும் குடிலை அடைந்தவுடன், முதலில் உள்ளே நுழைந்து வெளியேறிய மாயனின் கையில் சிவப்பு துணிப்போல் ஒன்று இருக்க, அதை மறைத்தப் படி மீண்டும் அவர்களை அழைத்துக் கொண்டு நடக்கத்
தொடங்கினான்.
"எங்க போறோம்?" என நிலாக் கேட்டதற்கு,
"சிலரைப் பார்க்க வேண்டி இருக்கு." என்றான்.
"யாரை?" என நிலா மீண்டும் வினவ,
"சொல்றேன்.." என்றான்.
அவனும் பிஜிலியும் இரண்டடிமுன்னே செல்ல, தன் கைகளை பின்னிய படி தன் விதியை அர்ச்சனை செய்துக் கொண்டே அவர்களைப் பின் தொடர்ந்தாள் நிலா.
"நம்ப விழாவுக்கா போறோம்?" எனப் பிஜிலி நிலாவின் காதில் விழாத வண்ணம் மாயனிடம் கேட்க,
"ஆமாம்" என்றான் மாயன்.
"இவங்களை கூட்டிக்கிட்டா?"
"ஆமாம்"
"என்ன சொல்ற அண்ணா!!? இவங்க யாருனு யாராவது கண்டுப் பிடிச்சிட்டா?!"
"ஆனா, இவளை தான் யாரும் பார்த்ததில்லையே. அப்புறம் எப்படி அடையாளம் கண்டுப் பிடிக்க முடியும்?"
"இப்படிப் புதுசா ஒரு ஆள் நம்பக் கூட இருக்குறதை பார்த்து, அரசருக்கு நம்ப மேல சந்தேகம் வந்து இது யாருனு கேட்டா, நம்ப என்ன பதில் சொல்றது"
"பார்த்துக்கலாம்" என சாதாரணமாய் கூறிய மாயனை திகைப்புடன் பார்த்தவன்,
"அண்ணா. நீ ஏதோ யோசனை வச்சிற்கனு, தெரியுது. ரொம்ப நடிக்காத.." எனக்கூற, உடனே பிஜிலியின் கழுத்தைச் சுற்றி வளையம் போல் தன் கையைப் போட்டு இருக்கினான்.
"என் தம்பி டா நீ. எப்படி டா கண்டுப் பிடிச்ச?" எனக் வினவியவாரே, பிஜிலியின் கழுத்தைச் சுற்றியிருக்கும் தன் கையிலிருந்த ஒரு துண்டினுள் வைரம் போல் இருந்த ஒரு கல்லை அவன் கண் முன்னே காண்பித்தான்.
"மாயக் கல்லா?!!!!!" என வியந்தவனிடம் ஆமாம் என அவன் தலையசைக்க,
"எப்படி ண்ணா கிடைச்சது??" என்றான் வியப்பு மாறா முகத்துடன்.
"கொல்லி மலையிலிருந்து திரும்புற வழியில கிடைச்சது."
"கலக்குற ண்ணா நீ. வேற என்ன என்ன எடுத்துட்டு வந்த?"
"நேரமில்லாததால வேற எதுவும் தேடலை டா. இதுவும் வந்த வழியில இருந்ததால தான் எடுத்துட்டு வந்தேன்.."
என இருவரும் குசுகுசுவென சத்தமில்லாமல் பேசிக்கொண்டு வர, நிலா எவ்வளவு முயற்ச்சித்தாலும் அது அவளின் செவிகளுக்கு எட்டவேயில்லை.
போகும் வழியில் ஒரு குடிலுக்குள் சென்றவன் உள்ளே இருந்து எடுத்து வந்த ஓர் உடையை நிலாவின் கைகளில் திணித்து போட்டுக்கொள்ள சொன்னான்.
அவன் சொன்னப் படியே ஒரு கேள்வியும் கேட்காமல், இரண்டே நிமிடத்தில் மாற்றிய உடையோடு வந்தவளிடம்,
"இங்க இருந்து ஆள் நடமாட்டம் அதிகமாகிடும்.." எனக் கூறிக்கொண்டே அவள் மணிக்கட்டில் அந்த கல்லிருந்த துண்டைக் கட்டத்தொடங்கினான் மாயன்.
கட்டியவுடன் பிஜிலி வாயைப் பிளந்துப் பார்க்க, அதற்கான காரணம் புரியாமல் திரு திருவென முழித்தவளுக்கு, அதன் பிறகு மாயன் கூறிய செய்தியைக் கேட்டதும் இதயமே ஒரு நொடி நின்றுத் துடித்தது.
"எ..என்ன..!!? நா.. நான் யார் கண்ணுக்கும் தெரிய மாட்டேனா?" என அதிர்ந்தவளிடம் ஷ்ஷ் என அமைதியாய் இருக்கும் படி சைகை செய்தான் மாயன்.
"ஆ..ஆமா.. நீ வெறும் மறைஞ்சி தான் இருப்ப. ஆனா உன்னை எங்களால தொட முடியும். நீ பேசுறதும் ரொம்ப நல்லாவே கேட்கும். அதனால வாயைத் திறக்காத. யார் மேலயும் இடிச்சிடாத" என்றான் மெல்லிய குரலில்.
"அப்போ நான் இப்படியேதான் இருக்கணுமா?" என கிசுகிசுத்தவளைப் பார்த்து, அவன் சிரிக்க, அவளோ அனலைக் கக்கிக் கொண்டு இருந்தாள்.
"சரி..சரி.. நான் சொல்லும்போது, நான் உன் கைல கட்டிற்க துண்ட கழட்டு. பழைய மாதிரி எல்லார் கண்ணுக்கும் தெரிய ஆரம்பிச்சுடுவ." என்றவன் மீண்டும்,"ஆனா நான் சொல்லும் போது மட்டும் தான்" என சற்றே குரலில் அழுத்தத்தை அதிகரித்துக் கூறினான்.
'நம்ப தான் இவனுக்கு தெரிய மாட்டோமே. அப்படியே எஸ்கேப் ஆயிடலாமா!? ' என அவள் நினைத்து முடிப்பதற்குள்,
"தப்பிக்கலாம்னு நினைச்சிடாத. அது உனக்கும் நல்லதில்ல. உன் அப்பாவுக்கும் நல்லதில்ல" என அவன் கூறவும் எரிச்சலுடன் அவனைப் பின் தொடர்ந்தாள்.
வழியில் மாயனைக் காணும் மக்கள் சிறு சலசலப்புடனும் மரியாதைக் கலந்த பார்வையோடும் அவனைக் கடந்து செல்வதை நிலாக் கவனிக்கத் தவறவில்லை.
ஒருவழியாய் அந்த கடல் போன்ற அரண்மனையை அவர்கள் நெருங்கியிருந்தார்கள். ஓரமாய் இருந்த ஒர் மரத்தை நோக்கிச் சென்றவன் பிஜிலியிடம் ஏதோ கூறியப்பின் அவர்களையும் தனியாய் விட்டுவிட்டு எங்கோச் சென்று விட்டான். அதுக் கூடத் தெரியாத நிலாவோ அந்தக் கோட்டையின் மண்ணிலிருந்து, விண்ணைத்தொடும் அதன் உயரத்தை 'பா' என வாயில் ஈ போகாதக் குறையாய், பார்த்துக் கொண்டிருந்தாள்.
மக்கள் அவர்களைக் கடந்தும் நடந்தும் செல்வதால் "ஸ்ஸ்" "ஸ்ஸ்...." என பிஜிலி நிலா எங்கிருக்கிறாள் எனத் தெரியாமல், நாலாப் புறமும் நிலாவின் குரலுக்காக இஸ்துக் கொண்டிருந்தான். அது காதில் விழுந்தாலும் அதை உணராத வண்ணம், அவளோ அந்தக் கோட்டையின் அழகில் பிரமித்துப் போய் தன்னை மறந்திருந்தாள்.
"ஏய் நிலா எங்க இருக்க?" என அவனோ தவித்துக்கொண்டு இருக்க,
"நிலாஆஆஆஆ" என மெல்லிய குரலில் அவன் கத்தியவுடன் தன்னிலை அடைந்தவள்,
"ஹாங்.. இங்க தான் இருக்கேன்" என தன்னிருப்பை உணர்த்த வேண்டி அவன் தலையில் ஒரு கொட்டு கொட்டினாள்.
அதைத் தேய்த்துக் கொண்டே "சரி சரி இங்கயே நில்லு எங்கேயும் போயிடாத" என்றான் பிஜிலி.
சிறிது நேரம் கழித்து நிலா அணிந்திருந்த உடையைப் போலே ஒருவள் உடையணிந்து அவர்களை நெருங்கியவள் "ஐரா" என பிஜிலியை நோக்கி தன்னை அறிமுகம் செய்யும் வண்ணம் கூறினாள்.
'அது நயந்தாரா நடிச்ச படமாச்சே.. அத எதுக்கு இவ சொல்றா.!? ' என நிலா யோசித்துக் கொண்டு இருக்கும் போதே, பிஜிலி இவளை அழைக்க, தான் இருக்கிறேன் என்று தெரியப்படுத்துவதற்காக மீண்டும் ஒரு கொட்டு கொட்டினாள்.
"ஆஆஆ.. லூசு.. உன் கைல இருக்கக் கட்டை அவிழு" என அவன் சொன்னவுடன்,
"அதெல்லாம் முடியாது. மாயன் சொன்னாதான் கழட்டுவேன்" என சிறுக்குழந்தைப் போல் பிடிவாதாமாய் அவள் குரல் வந்த திசையை விசித்திரமாய் பார்த்தாள் ஐரா.
"அவரு தான் சொல்ல சொன்னாரு. கட்டை கழட்டிட்டு இந்தப் பொண்ணுக் கூடப் போ"
"அவன் என்கிட்ட என்ன சொன்னான்?!!"
"என்ன சொன்னான்!!?" என அதையே பிஜிலிக் கேட்க,
"அவன் சொன்னதை மட்டும் தான் செய்யச் சொன்னான்.. சோ உன்னை மாதிரி குட்டி குஸ்கான் பேச்சை எல்லாம் நான் கேட்க மாட்டேன்." என அவன் தலையில் கொட்டப் போனவளின் கையை சமயம் பார்த்து சரியாய் பிடித்தவன், தன் கணிப்பு தவறாமல் கச்சிதமாய் அதில் கட்டி இருந்த துண்டை அவிழ்த்தான்.
"இப்போ மாட்டினியா" என அவன் கூறியவுடன் ஈஈஈ என அசடு சிரிப்பு சிரித்தாள்.
அவளின் உருவம் தெரிந்ததும் "நிலா?" என ஐராக் கேட்க,
"ஆமாம்" என தலையசைத்தாள்.
"சீக்கிரம் என் கூட வாங்க. நேரமாகுது." எனச் சுற்றி முற்றி பார்த்துக் கொண்டே கூறினாள் அவள்.
"அவங்க கூடயே போ சரியா?!.. அவங்களே உன்னைக் கூட்டிட்டு வந்து மறுபடியும் எங்க கிட்ட விட்டுடுவாங்க" என்றவன் "வரும்போது மறுபடியும் இந்த துண்டைக் கட்டிக்கோ" என அவளது கையில் அதைத் திணித்தான்.
ஐராவுடன் பேசிக்கொண்டே விழா நடக்கும் இடத்திற்குச் சென்றாள் நிலா. ஐரா தன்னைப் போலவே நிலாவையும் முகத்தை மறைக்கச் சொல்ல, அவளும் அதுப்போலவே மறைத்துக் கொண்டாள். அது கோட்டையில் வேளை செய்யும் பணிப்பெண்களின் உடை என்பதையும் பேச்சு வழக்கில் தெரிந்துக் கொண்டாள் அவள். அனைத்துப் பணிப்பெண்களும் அவர்களைப் போலவே முகத்தை மறைத்திருந்தனர். தன் சுற்றியுள்ள விஷயங்கள் அனைத்தும் புதிதென்றாலும், அதை உள்வாங்கவோ, வியக்கவோ அவள் மனம் இடம் கொடுக்காமல் எங்கோ அலை பாய்ந்துக் கொண்டிருந்தது.
விழா நடந்துக்கொண்டிருந்த இடத்தில், இருவரும் பணிப்பெண்களோடு பணிப்பெண்ணாக நின்றுக் கொண்டனர்.
அந்த பிரமாண்டமான மேடையில், நடுவே சகல ராஜகலையோடு நடுத்தர வயது மனிதர் ஒருவர் அமர்ந்திருந்தார்.
"அவரு தான் அரசர்" என ஜராக் கூறவும், தன்னிலை அடைந்தவள், அப்போதே ஐரா கூறும் நபரை கவனித்தால்.
ஏனோ நிலாவின் மனதில் ஒரு சொல்ல முடியாத உணர்வு. பயமா? பதற்றமா? இல்லை அதையும் தாண்டியா? என அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏனோ அவருக்கும் தனக்கும் ஓர் நெருங்கிய உறவிருப்பது போல் தோன்றியது அவளிற்கு.
இதயம் துடிக்க மறந்து ஒரு நிமிடம் உறைந்தும் போனது. அவரைப் பார்க்க பார்க்க அவளுக்குள் விவரிக்க முடியாத அளவிற்கு காரணம் தெரியாத வெறுப்பு ஏற்பட்டது.
"அரசரா?!!" என நிலா அவர் மேலிருந்து தன் பார்வையை அகற்றாமல் கேட்டாள்.
"ஆமாம். அவர் தான் அரசர். ஆனா நியாயப்படி ஒரு ராஜ வாரிசு தான் மதியுலகை ஆள வேண்டும்." என்றாள் ஐரா.
"ராஜ வாரிசா அப்படினா, இவர் ராஜ வம்சத்துல பிறந்தவர் இல்லையா?" என அவள் வினவ,
"அட ராஜக் குடும்பத்துல பிறக்குறவங்க ராஜ வாரிசு இல்லை. எங்களைப் போல சாதாரண மனிதரா இல்லாம, ரொம்ப சக்தி வாய்ந்தவங்களா இருப்பாங்க. உதாரணத்துக்கு இங்க இருக்குற மொத்த மக்களோட மந்திர சக்தியும் அவங்க ஒரே ஆள் கிட்ட அடங்கியிருக்கும். நாங்க வணங்குற தெய்வம் குடுத்த குழந்தையாவே அவங்களை கருதுவோம். ராஜ வாரிசுனா யாருக்கு எப்ப வேணாலும் பிறப்பாங்க. ஆனா அவங்க பிறக்குறது ரொம்ப ரொம்ப அறிது. இனி பிறக்கலாம், இல்லை பிறக்காமலயும் போகலாம்."
"ராஜக் குடும்பத்துல பிறக்குறவங்களை தான ராஜ வாரிசுனு சொல்வாங்க. அப்ப இவங்களுக்கு ஏன் இந்த பேர்?"
"அதாவது ராஜ வாரிசா பிறக்குறவங்களுக்கு மட்டும் தான் அந்த சிம்மாசனத்துல அமரவும், எங்களை ஆளவும் தகுதி இருக்குனு நாங்க நினைக்கிறோம். ஏனா எங்க எல்லாரை விடயும் சக்தி வாய்ந்தவங்க அவங்க தானே? அதனால தான் அவங்களுக்கு ராஜ வாரிசுனு பேரு." என ஐரா கூறியவுடன், புரிந்தும் புரியாமலும் தலையாட்டியவளைப் பார்த்தவள்
"உனக்கு புரியுற மாதிரி சொல்றேன்." என்றாள் "இப்ப கிரகங்களை எடுத்துப்போம். அதுல மொத்தம் எட்டு கிரகங்கள் இருக்கு. அப்புறம் அதுக்கு தனியா தனியா ஒரு ஒரு பெயரும் இருக்கு. இதை எல்லாம் சேத்து பொதுவா நம்ப கிரகங்கள்னு சொல்லுவோம். சரியா?"
"ஆமா"
"அதே மாதிரி தான் ராஜ வாரிசு என்கிற பெயரும். இதுல இரண்டு வகை இருக்காங்க.
அதுல முதல் வகை கனல் வாரிசு. இரண்டாவது வகை திரவி வாரிசு."
"பெயருக்கேத்த மாதிரி அவங்களோட சக்திகள் மாறுபடுமா?"
"ஆமா. இரண்டு வகைக்கும் ஒரு சிறப்பான சக்தி இருக்கும். இங்க வாழ்ற மக்கள் இயற்கையான, நெருப்பையும் நீரையும் தான் வணங்குறாங்க. ராஜ வாரிசா பிறக்குறவங்களுக்கும், நீர் அல்லது நெருப்பு இரண்டுல ஒன்னுதான் தான் தனித்துவ சக்தியா இருக்கும். நீரை தனித்துவ சக்தியா பெற்றவங்களை தான் திரவ வாரிசுனு சொல்லுவோம். நெருப்பை தனித்துவ சக்தியா பெற்றவங்களைதான் கனல் வாரிசுனு சொல்லுவோம். அதனால தான் அவங்களை தாங்கள் வணங்குற தெய்வம் குடுத்த குழந்தையாவே கருதுராங்க. ராஜ வாரிசை சேர்ந்தவங்களால இந்த உலகத்தை ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்."
"இவங்களுக்கு அழிவே கிடையாதா?"
"முடியும். சாதாரண மனிதர்களால முடியாது. ஒரு ராஜ வாரிசோட முடிவு இன்னொரு ராஜ வாரிசுக்கிட்ட தான் இருக்கு."
"இவர் ராஜ வாரிசு இல்லைங்குற பட்சத்தில இவர் ஏன் இப்ப அரசரா இருக்காரு?"
"இவர் ராஜ வாரிசு இல்லை தான். ஆனா எங்களுக்கு அரசராக்க இங்க எந்த ராஜ வாரிசும் இல்லைங்குறதால, ஒரு சாதாரண மனிதரே இந்த உலகை ஆள வேண்டிய சூழ்நிலை."
"இதுக்கு முன்னாடி பிறந்த ராஜ வாரிசுகள் கண்டிப்பா இருப்பாங்க தானே?"
"இல்லை. இதுவரைக்கும் இங்க பிறந்தது இரண்டே ராஜ வாரிசு தான். அதுவும் ஒரே நேரத்துல. அவங்களுக்கு பிறகு ராஜ வாரிசா இங்க யாரும் பிறக்கலை"
"அப்ப அவங்க ஆளலாம் இல்லையா?"
"ஆனா அவங்க இப்ப உயிரோட இல்லை."
"ஒரு ராஜ வாரிசா பிறந்தவங்களை அழிக்க முடியாதுனு நீ தானே சொன்ன. அப்புறம் எப்படி அவங்க இறந்தாங்க?!"
"ஆமா அழிக்க முடியாது தான். ஆனா ஒரு ராஜ வாரிசை இன்னொரு ராஜ வாரிசால அழிக்க முடியும் இல்லையா?"
"அப்படினா அவங்களே ஒருத்தரை ஒருத்தர் அழிச்சிக்கிட்டாங்ளா?!"
"நான் கேள்வி பட்ட வரைக்கும் அது தான் உண்மை."
"ஆனா ஏன்?"
"அரச பதவிக்கு இரண்டு பேருக்கும் போட்டி வந்துருக்கலாம். அந்த சிம்மாசனத்துக்கு ஆசைப்பட்டு ஒருத்தரை ஒருத்தர் அவங்களே மாய்ச்சிருக்கலாம்."
"அப்போ இனி ஒரு ராஜ வாரிசு பிறந்தா தான், இந்த அரசர் கிட்ட இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்குமா?!"
"ஹ்ம்மா ஆமா. ஆனா அவங்க எப்போ பிறப்பாங்க. பிறப்பாங்களா மாட்டாங்களானு யாருக்கும் தெரியாது." என்றவுடன் நிலாவின் முகம் இறுகிவிட்டது.
அவள் தொடர்வாள்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro