Part 56
பாகம் 56
பள்ளியிலிருந்து வீடு திரும்பிய ரிஷி, இனியவர்களின் இருப்பிடத்தில் நிறைய பேர் இருப்பதை பார்த்து அசந்து போனான். அவனை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான் நிமல். அவனுக்கு எல்லோரையும் மிகவும் பிடித்திருந்தது முக்கியமாக ஆகாஷை. அவனுக்கு வீடியோ கேம்ஸ் விளையாட தெரிந்திருந்தது தான் காரணம். அவனும் ஆகாஷும் சேர்ந்து கொண்டது, நிமலே எதிர்பாராத ஒன்று. அவர்கள் இருவரும், இனி ஒன்றாக இருப்பார்கள் என்ற எண்ணம் நிமலுக்கு நிம்மதியை தந்தது.
இந்த கூட்டுக்குடும்ப முறை ரிஷிக்கு புதிதாய் இருந்தது. அவனுக்கு அது மிகவும் பிடித்தும் இருந்தது. இப்படிப்பட்ட அனுபவம், இதற்கு முன் அவனுக்கு கிடைத்ததில்லை. அவன் வீட்டில், அவனும் வர்ஷினியும் மட்டும் தான். ஆனால், வர்ஷினி எப்போதும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாள். இது போல கேலி கிண்டல் எல்லாம் வர்ஷினிக்கு துளியும் வராது. ஆனால் இங்கோ, சிரித்து சிரித்து அவன் வயிறு புண்ணாகி போனது. ஓயாமல் சிரித்துக் கொண்டிருக்கும் தன் தம்பியை பார்த்து சந்தோஷம் அடைந்தாள் வர்ஷினி. சொல்லப் போனால், இப்படி சிரிப்பது அவளுக்கும் இது தான் முதல் முறை.
கட்டிலில் அமர்ந்தபடி அவள் எதையோ மிக தீவிரமாய் சிந்தித்துக் கொண்டு இருப்பதை கவனித்தான் நிமல். அவன் கூப்பிட்டது கூட அவள் காதில் விழவில்லை. அவள் அருகில் வந்து அவள் தோளில் தட்டினான்.
"அவ்வளவு சீரியஸா எதை பத்தி யோசிச்சுகிட்டு இருக்க, நான் கூப்பிட்டதை கூட கவனிக்காம...?"
"ரிஷியைப் பத்தி தான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன்"
"என்ன விஷயம்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" என்றபடி அவள் அருகில் அமர்ந்தான்.
"அவன் இங்க ரொம்ப சந்தோஷமா என்ஜாய் பண்ணிக்கிட்டு இருக்கான்..."
"ஆமா... அதனால?"
"இங்கிருந்து திரும்பிப் போகும் போது அவன் ரொம்ப வருத்தப்படுவான்"
ஆமாம் என்று தலையசைத்தான் நிமல்.
"உங்களுக்கு தெரியுமா, நாங்க எப்பவும் யார் கூடவும் பேசினதே இல்ல. எங்களை யார் கூடவும் பழக விட மாட்டாங்க. ஆனா, இங்க அவன் ரொம்ப சந்தோஷமா இருக்கான். இங்கிருந்து போகும் போது நிச்சயம் அழுவான்" என்றாள் வருத்தமாக.
"நாளைக்கு நடக்கப் போறதைப் பத்தி நெனச்சி இப்பவே வருத்தப்படாத. ரெண்டு நாளைக்கு முன்னாடி, ரிஷி இங்க வருவான்னு நம்ம நினைச்சுப் பார்க்கவே இல்ல. இந்த நிமிஷம் மட்டும் தான் நிஜம். அதை சந்தோஷமா ஏத்துக்கோ. ரிஷி அதைத் தான் செஞ்சுகிட்டு இருக்கான். அவன் ரொம்ப புத்திசாலி பையன். அவன் எல்லாத்தையும் சமாளிச்சு வருவான். நீ உன்னை ஸ்டிரஸ் பண்ணிக்காத. அவனுக்கு சூழ்நிலையை சமாளிக்க ஹெல்ப் பண்ணு. அதைச் செய்யாம, எதிர்காலத்தை நெனச்சு, நிகழ் காலத்தை வீணாக்காதே"
சரி என்று தலையசைத்தாள் வர்ஷினி.
"அமைதியா படுத்து தூங்கு" என்றான்.
"தூங்குறதா...? நீங்க சுத்த போர்..." என்றாள் கிண்டலாக.
தன் புருவத்தை உயர்த்தி, களுக்கென்று சிரித்தான் நிமல்.
"நெஜமாவா?"
"பின்ன என்னவாம்? இந்த ஆம்பளைங்களே இப்படித் தான்... வேண்டாம்னு சொல்லும் போது சுத்தி சுத்தி வர வேண்டியது... அதுக்கப்புறம் கண்டுக்காம போக வேண்டியது..."
சற்றே நிறுத்தியவள்,
"உங்களுக்கு தெரியுமா...? எந்த ஒரு தயக்கமும் இல்லாம உங்க கூட இருக்கணும்னு நான் எவ்வளவு எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன்னு...?"
"எனக்கு தெரியும்... நான் போற இடமெல்லாம் உன்னோட கண்ணு, விடாம என்னை ஃபாலோ பண்ணிக்கிட்டே இருந்தது..."
"நீங்க அதை கவனிச்சீங்களா?"
"ஆமாம். ஆனா, உனக்கு தான் என் மேல கருணையே இல்ல..."
"நான் உங்க காயத்தை நினைச்சி பயந்தேன். பயத்தோட எப்படி உங்க பக்கத்துல வர்றதாம்?"
"அப்படினா, இப்போ எதுக்காக காத்திருக்கியாம்?" என்று தன் கையை விரித்தான்.
புன்னகையுடன் அவனை அணைத்துக் கொண்டாள் வர்ஷினி. அவன் நெஞ்சில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள்.
"எவ்வளவு நேரத்துக்கு இப்படியே இருக்கப் போற?"
"வாழ்நாள் முழுக்க..."
என்றவளை சினேகத்துடன் பார்த்தான் நிமல்.
மறுநாள் காலை
அனைவரும் உணவு மேசையில் கூடினார்கள். ரிஷியின் முகம் தொங்கிப் போய் இருந்ததை கவனித்தான் நிமல். அவனை கவனிக்கச் சொல்லி, வர்ஷினிக்கு சைகை செய்தான்.
"என்ன ஆச்சி ரிஷி?" என்றாள் வர்ஷினி.
ஒன்றுமில்லை என்று தலையசைத்தான் ரிஷி.
"ஏன் டல்லா இருக்கே?" என்றான் நிமல்.
"எனக்கு ஸ்கூலுக்கு போக மூட் இல்ல"
"ஏன்?"
"ஏன்னா, எல்லாரும் சுதா அக்கா வீட்டுக்கு போறாங்கல்ல...?" என்றான் சோகமாக.
நிமல், பிரகாஷை பார்க்க அவன் ஆம் என்று தலையசைத்தான்.
"ஓஹோ" என்றான் நிமல்.
"ஆமாம், நிம்மு. நாங்க எல்லாரும் அங்க போறோம். சாயங்காலம் தான் வருவோம்... வர்ஷினி அண்ணியையையும் கூட்டிகிட்டு போக போறோம்" என்றான் ஆகாஷ்.
நிமல் வர்ஷினியை பார்க்க, அவள் ஆமாம் என்று தலையசைத்தாள்.
"ஆமாம் நிமல், பிரகாஷையும் சுதாவையும் அங்க விடப் போறோம். அவங்க ரெண்டு பேரும் அங்க கொஞ்ச நாள் இருக்கப் போறாங்க. இன்னைக்கு அங்க ஒரு பூஜை இருக்கு. அவங்க அம்மா எங்க எல்லாரையும் அதுக்கு வர சொல்லி இருக்காங்க. சாயங்காலம் அதை முடிச்சுட்டு நாங்க திரும்பி வருவோம்." என்றார் தாட்சாயணி.
"நீயும் எங்க கூட வா, நிம்மு" என்றார் பார்வதி.
"நீங்களும் போறீங்களா?" என்றான் நிமல் பார்வதியிடம்.
"ஆமாம். பின்ன போக வேண்டாமா? சுதாவுடைய அம்மா என்னையும் தானே வர சொல்லியிருக்காங்க..."
"அப்போ நான் வீட்ல தனியா என்ன செய்யறது?"
"தனியாவா...? நீ தான் தனிமை விரும்பியாச்சே. உனக்கு தனியாக இருக்கிறது தான் ரொம்ப பிடிக்குமே... இல்லன்னு சொல்லு..."
"இல்ல"
பார்வதி ஏதோ சொல்லப் போக அப்பொழுது விஸ்வநாதன் உள்ளே நுழைந்தார்.
"நீங்க வந்துட்டீங்களா...!" என்றார் குதுகலத்துடன்.
"எப்படி இருக்க, நிம்மு?" என்றார் விஸ்வநாதன்.
"நான் நல்லா இருக்கேன் பா. கான்ஃபரன்ஸ் எப்படி நடந்தது?"
"பிரமாதமா நடந்தது" என்று தயங்கியபடி நிறுத்தினார்.
"ஏதாவது பிரச்சனையா, பா?"
"எனக்கு ஸ்ட்ராங்கா ஒரு காபி வேணும். தலை வலிக்குது"
"இதோ கொண்டுவறேன்" என்று சமையலறையை நோக்கி விரைந்தார் பார்வதி.
நிமலின் அருகில் வந்து அமர்ந்தார் விஸ்வநாதன்.
"குமணனை காணோமாம்" என்றார் மெல்லிய குரலில்.
அதைப் பற்றி ஏதும் அறியாதவன் போல அவரை அதிர்ச்சியுடன் பார்த்தான் நிமல்.
"அவர் கான்ஃபரன்ஸ்ல்ல கலந்துக்கல. அவர் எங்கே போனார்னு யாருக்குமே தெரியல. அவருடைய ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆயிருக்காம்."
"உங்களுக்கு எப்படி தெரியும் பா?"
"அவரைப் பத்தி விசாரிக்குறதுக்காக, ஃபிளேவர் சோப்பு கம்பெனி முதலாளி, திரிவேதிக்கு ஃபோன் பண்ணாரு காமேஸ்வரன். ஏன்னா, குமணனுடைய ஃபோன் ரீச் ஆகலயாம். குமணன், ஃபிளைட்ல போர்ட் பண்ணி இருக்காரு... கோயம்புத்தூருக்கு வந்து சேர்ந்திருக்காரு... ஆனா, கான்ஃபரன்ஸ்க்கு வரல."
"ஓ..."
"நீ ஜாக்கிரதையா இருக்கணும்"
"எதுக்குப்பா?"
"அவர் ஏதோ பெருசா பிளான் பண்றாருன்னு எனக்கு பயமாயிருக்கு. அவர் எங்கேயோ ஒளிஞ்சிகிட்டு உன்னை டார்கெட் பண்றாரோன்னு நான் சந்தேகப்படுறேன்"
ஒன்றும் கூறாமல் அமைதியாய் இருந்தான் நிமல்.
"அவர் உன் மேல பயங்கர கோவத்துல இருக்காரு. உன்னையும் வர்ஷினியையும் கொல்ல ட்ரை பண்ணாரு. அது தான் எனக்கு பதட்டமா இருக்கு"
அவர் கூறுவது சரி என்பது போல் தலை அசைத்தான் நிமல்.
"அவர் ஒரு விஷப்பாம்பு. பணத்தால அவர் எதையும் செய்வார்" என்ற விஸ்வநாதனின் வார்த்தை நிமலின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.
ஊட்டி
தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டான பணத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் குமணன். அவருடைய நாக்கு வற்றி உலர்ந்து வாயில் ஒட்டிக்கொண்டிருந்தது. பசியில் அவருக்கு கண்கள் சரியாக தெரியவில்லை. தலை சுற்றுவது போல் இருந்தது. மிகவும் பலவீனமாய் உணர்ந்தார். பசியில் வயிற்றை இறுக்கிப் பிடித்துக் கொண்டு, தரையில் படுத்திருந்த கல்பனாவை, ஏதும் செய்ய இயலாதவராய் பார்த்தார் அவர். வாழ்க்கையில் இதுவரை அறிந்திராத பக்கத்தை அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். பசி... இதுவரை அவர்கள் பட்டினி கிடந்ததே இல்லையே... அதுவும் இவ்வளவு நீண்ட நெடிய பட்டினியை அவர்கள் சந்தித்ததில்லை. தங்களை இப்படியெல்லாம் ஈவு இரக்கமின்றி தண்டிக்கும் அந்த மனிதன் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார் குமணன். இவ்வளவு தூரம், தங்கள் மீது தனது குரூரத்தை காட்ட அவனுக்கு என்ன காரணம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும் மேலோங்கியது.
ஒன்று மட்டும் நிச்சயம், அந்த மனிதன் அவர் கண்முன் தோன்றும் போது, தான் செய்த பாவம் தன்னை எப்படி சுற்றி அடிக்கிறது என்பதை அவர் உணர்வார். ஊழ்வினை என்பது, விடாது துரத்தும், கண்ணுக்கு தெரியாத கொடுவாள் என்பதை அவர் புரிந்து கொள்வார்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro