Part 11
பாகம் 11
வர்ஷினியின் காதலை நிமல் ஏற்றுக்கொண்டு விட்டான் என்பது ராஜாவுக்கு ஆச்சரியமாயிருந்தது. அது குறித்து அவன் சந்தோஷமடைந்தான் என்றாலும், உண்மையை நினைத்து பயந்தான். அதைப் பற்றி நிமிலிடம் பேசி தெளிவடைய விரும்பினான். நிமல் அவனை நோக்கி வருவதைப் பார்த்தான்.
"நான் உன்கிட்ட பேசணும்" என்றான் ராஜா"
"நானும் உன்கிட்ட பேசணும்" என்றான் நிமல்.
"நான் கேள்விப்பட்டது உண்மையா?" என்றான் ராஜா.
"நீ என்ன கேள்விபட்ட?"
"வர்ஷினிகிட்ட அவளுடைய காதலை ஏத்துக்குறதா சொல்லிட்டியாமே?"
அவன் என்ன பேச விரும்புகிறான் என்பது புரிந்தது நிமலுக்கு. ஏனென்றால், அவனுக்கு மட்டும் தானே அவனுடைய வாழ்க்கையில் நடந்தது என்ன என்று தெரியும்.
"என்னால அவளை மறக்க முடியல. நான் எவ்வளவு முயற்சி பண்ணியும், என்னால அவளை பத்தி நினைக்காம இருக்கவே முடியல. அவள மறக்கணும்ங்கிற எண்ணமே என்னை உயிரோடு கொல்லுது. நான் பைத்தியமாயிடுவேன் போல இருந்துது..."
"அதனால...?" என்றான் அமைதியாக ராஜா.
"அவ இல்லாம என்னால இருக்க முடியும்னு தோணல. ஒவ்வொரு நொடியும் நான் அவ மேல வச்சிருக்கிற காதல் அதிகமாயிகிட்டே தான் போகுது. அவ கூட இருக்கும் போது நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நான் முடியாதுன்னு சொன்னப்போ அவ எவ்வளவு உடைஞ்சி போனான்னு நான் கண்கூடா பார்த்தேன்"
அப்படி என்றால், நீ அவள் மீது கொண்டிருப்பது பரிதாபம் தானா? என்று ராஜா கேட்க நினைக்க, அவன் சொல்ல வருவதை உணர்ந்து அவனை கையமர்த்தினான் நிமல்.
"நான் அவ மேல வச்சிருக்கிறது வெறும் பரிதாபம் இல்ல. நான் அவளைப் பார்த்த முதல் நாளில் இருந்தே எங்க ரெண்டு பேருக்கும் இடையில ஏதோ ஒரு பிணைப்பு இருக்கிற மாதிரி ஒரு உணர்வு ஏற்பட்டது. எனக்கு அவ வேணும். என்னால அவ இல்லாம இருக்க முடியாது"
அவன் மனதில் ஒளித்து வைத்திருந்த உணர்வுகளை கொட்டி தீர்த்தான் நிமல்.
"குமணனோட மகளை முழு மனசோட காதலிக்க முடியும்னு நீ நினைக்கிறியா? இப்போ காதலிக்கிற ஜோர்ல முடியும்னு நீ சொல்லலாம். ஆனா, எதிர்காலத்தில் என்ன நடக்கும்னு யோசிச்சு பாரு. ஏன்னா, இது ஒரு பெண்னோட வாழ்க்கை பிரச்சனை. நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, குமணன் உனக்கு மாமனாராவாரு. அவரோட நல்ல உறவு முறையை ஏற்படுத்திக்க முடியும்னு நீ நினைக்கிறாயா? குமணனுக்கும், உனக்கும் இருக்கிற விரோதம் என்னென்னு நான் உனக்கு ஞாபகப்படுத்த வேண்டிய அவசியமில்ல. அவர் மேல இருக்கிற வெறுப்பையும், விரோதத்தையும் மறந்துட்டு உன்னால வர்ஷினி கூட நிம்மதியா, சந்தோஷமா வாழ முடியுமா? வர்ஷினியோட கண்ணீரை பார்த்து முடிவு பண்ணிட்டு, அதுக்கப்புறம் வருத்தப்படாதே."
ராஜா சொல்வதில் நியாயம் இருக்கிறது. குமணன் நிமலின் பெற்றோரை கொன்ற கொலைகாரன். அதற்கு தான், ராஜா இவ்வளவு தூரம் அவனை யோசிக்க வைக்கிறான்
"வர்ஷினி அவங்க அப்பாவை விட்டுட்டு என் கூட வர தயாரா இருக்கா. எனக்கு அதை விட வேற என்ன வேணும்?"
"அவ அந்த முடிவுல உறுதியா இருப்பான்னு நீ நம்புறியா?"
"அவ கண்ணுல நான் பாக்குற எதுவுமே பொய்யில்ல. அவ கண் கலங்கினா என் மனசு படாதபாடு படுது. ஆனா, சத்தியமா அது பரிதாபத்துனால இல்ல. எனக்கு எப்பவும் அவ கூடவே இருக்கணும்னு தோணுது. அவளை எப்பவுமே அழ விடாம பார்த்துக்கணும்னு தோனுது. அவளுக்கு எப்பவும் நான் பக்கத்துணையா இருக்கணும்னு தோணுது"
"சரி... ஆனா, வர்ஷினியை பத்தி நீ யோசிச்சு பார்த்தியா? அவங்க அப்பா மேல உனக்கு இருக்கிற வெறுப்பு எப்படிப்பட்டதுன்னு தெரிஞ்சா, அவ வருத்தப்பட மாட்டாளா?"
அதைக்கேட்டு மென்று முழுங்கினான் நிமல்.
"அதை பத்தி அவளுக்கு இப்போதைக்கு தெரிய வேண்டாம்னு நினைக்கிறேன்"
"அவளுக்கு ஏற்கனவே தெரியும்"
"முழுசா தெரியாது. நாங்க இரண்டு பேரும் வியாபார ரீதியான எதிரிங்கன்னு அவ நினைச்சுகிட்டு இருக்கா. அவளுக்கு உண்மை தெரியும் போது, என்னை புரிஞ்சுக்குவான்னு நம்புறேன்."
"நீ தெரிஞ்சிக்க வேண்டிய, ரொம்ப முக்கியமான விஷயம் ஒன்னு இருக்கு"
"என்ன அது?"
"குமணன், வர்ஷினியை பலிகடாவாக்கி, காமேஸ்வரன் கூட ஒரு பெரிய டீலை பிளான் பண்ணிகிட்டு இருக்காரு. அவளை அந்த பொறுக்கி கார்த்திக்குக்கு கல்யாணம் பண்ணி வைக்க அவர் முடிவு பண்ணிட்டார். குமணன் எப்படிப்பட்ட தந்திரசாலின்னு நமக்கு தெரியும். அவர் ஒரு விஷயத்தை முடிக்கணும் நினைச்சா, அதை எப்பாடுபட்டாவது முடிச்சே தீருவார். நம்ம வேற ஒரு விஷயத்தையும் மறக்கக்கூடாது. காமேஸ்வரன் கூட அவர் கை கோர்தா, அவருடைய பலம் ரெண்டு மடங்காகும். நீ எப்பவும், எதுக்காகவும் தயாரா இருக்கணும். ஏன்னா, குமணனுடைய அடுத்த மூவ் என்னென்ன யாராலும் கணிக்க முடியாது"
"நான் எல்லாத்துக்கும் தயாரா தான் இருக்கேன். வர்ஷினிக்காக நான் யாரையும் எதிர்க்க தயார்."
"ஆர் யூ ஷ்யூர்?"
"டேம் ஷ்யூர்"
"ப்ளீஸ் நிமல், அவங்க அப்பாவை விட்டுட்டு, நீ தான் முக்கியம்னு வர்ற அந்த பெண்ணை, எப்பவும் எதுக்காகவும் வருத்தப்படாத வச்சிடாத"
"என்னை பத்தி உனக்கு தெரியாதா?"
"எனக்கு தெரியும். அதனால தான், நான் உன் கூட நிக்கிறேன். நீ அவ்வளவு சீக்கிரம் எந்த முடிவையும் எடுக்க மாட்டேன்னு எனக்கு தெரியும். அப்படி ஒரு முடிவை எடுக்கிறதா இருந்தா, அதுக்கு முன்னாடி எல்லாத்தையும் ஆலோசிச்சி தான் எடுப்ப. நீ சந்தோஷமா இருக்கணும். எனக்கு அது தான் வேணும்."
எடுத்த முடிவில் நிமல் தீர்க்கமாய் இருப்பது ராஜாவுக்குப் புரிந்தது. பொழுதுபோக்கிற்காக பெண்களின் பின்னால் அலைந்து நேரத்தை விரயமாக்குபவன் அல்ல நிமல். வர்ஷினியிடமிருந்து விலகிச் செல்ல முடியாமல் அவன் எவ்வளவு தவித்தான் என்பதையும் பார்த்திருந்தான் ராஜா. அதனால், நிமல் ஆலோசித்த பின்பே முடிவெடுத்திருப்பான் என்று நம்பினான்.
"சரி... என்ன நடந்தாலும், நான் உன் கூட இருப்பேன்" என்று உறுதியாளிதான் ராஜா.
"எனக்கு தெரியும்" என்று அவனை அணைத்துக் கொண்டான் நிமல்.
குமணன் இல்லம்
மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டார் கல்பனா. மூடப்பட்ட ஒரு அறைக்குள், ஒரு பெண்ணின் மீது எரிந்து விழுந்தார்.
"நீ இவ்வளவு உதவகரையா இருப்பேன்னு, நான் நினைச்சு கூட பாக்கல. உன்னால எதையும் யூகிக்க முடியாதா? முழுநேரமும் கம்ப்யூட்டருக்கு முன்னாடி உட்கார்ந்து இருக்கிறதுக்கு என்ன பிரயோஜனம் இருக்கு? வாயை திறந்து சொல்லு மீனா"
"நீங்க இல்லாதப்போ உங்களுக்கு பதிலா நான் எப்படி மேடம் முடிவெடுக்கிறது? அது பணம் சம்பந்தப்பட்ட விஷயமாச்சே... நீங்க ரொம்ப கம்மியான அமௌன்ட் தான் இன்வெஸ்ட் பண்ணி இருக்கீங்க. அதுல நம்மளால எப்படி அதிக லாபம் பார்க்க முடியும்? நிறைய லாபம் சம்பாதிக்கணும்னா, ஷேர் மார்க்கெட்டில் நிறைய இன்வெஸ்ட் பண்ணியாகணும். சில சமயம், நம்ம ஊகம் தப்பா போறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு. நான் நீங்க சொன்னத தானே மேடம் செஞ்சேன்...?"
அவள் கூறுவது சரிதான் என்பது கல்பனாவிற்கு தெரியும். அவர் தான் தவறான யூகத்தை கொண்டு, ஷேர் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்தார்.
தான் விரும்பிய படி செலவு செய்ய, கல்பனாவை அனுமதிக்கவில்லை குமணன். இவ்வளவு பணம் சம்பாதித்த பின்னும் கூட, கல்பனாவிடம் வழங்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு கேட்டார் குமணன். அவரைப் பொறுத்தவரை அனைத்தும் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். சரியான காரணம் இருந்தாலே ஒழிய, அவர் கல்பனாவிற்கு பணம் கொடுப்பதில்லை. கல்பனாவின் விருப்பப்படி, வேண்டிய இடத்திற்கு செல்ல அனுமதி அளித்த அவர், பணம் செலவழிக்க மட்டும் சுதந்திரம் அளிக்கவில்லை. தனது நகைகளை விற்று, ஷேர் மார்க்கெட்டில் ஒரு டிமேட் அக்கவுண்ட் ஆரம்பித்து, குமணனுக்கு தெரியாமல் பணம் சம்பாதிக்கலாம் என்று நினைத்தார் கல்பனா. ஏனென்றால், அவருடைய க்ளபில் இருக்கும் மற்ற பெண்களிடம் அலட்டிக்கொள்ள அவருக்கு நிறைய பணம் தேவைப்பட்டது.
அவருடைய ஷேர் மார்க்கெட்டை கவனித்துக் கொண்டிருக்கும் மீனா, கல்பனாவின் தோழியின் மகள். அவருடைய டிமேட் அக்கவுண்ட் கூட, மீனாவின் பெயரில் தான் இருந்தது. ஏனென்றால், அவர் எக்காரணத்தைக் கொண்டும் குமணனிடம் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.
"மேடம், நீங்க என்னைத் தப்பா எடுத்துக்கலனா, நான் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லலாமா?" என்றாள் மீனா.
"சொல்லு"
"ஒரு குறிப்பிட்ட அமௌன்ட் நீங்க இன்வெஸ்ட் பண்ணலேன்னா, நம்மளுடைய இந்த பிசினஸை நம்மளால தொடர முடியாது. ஏதாவது செஞ்சி இந்த விஷயத்தை மேனேஜ் பண்ண பாருங்க. இல்லனா, நாம இந்த அக்கவுண்டை க்ளோஸ் பண்றதைத் தவிர வேற வழி இல்ல"
கல்பனாவிற்கு உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும். ஒவ்வொரு ரூபாய்க்கும் குமணனிடம் பிச்சை எடுக்க அவர் விரும்பவில்லை. ஆம், தன் கணவனிடம் பணம் கேட்பதை அவர் அப்படித்தான் நினைத்தார். குமணனுக்கு தெரியாமல் ஒரு பெரிய தொகையை அவர் எப்படி திரட்டுவது? இருந்த பழைய நகைகளை ஏற்கனவே விற்றாகிவிட்டது. இதற்கு சீக்கிரமே ஏதாவது ஒரு வழி கண்டு பிடித்தாக வேண்டும்.
ஃபவுண்டர்ஸ் டே
மேடைக்கு சற்று தூரத்தில், சுதாவுடன் அமர்ந்திருந்தாள் வர்ஷினி. அவளுடைய கண்கள் நிலையாக இல்லை. யாரையோ ஆர்வமாய் எதிர்பார்த்து அந்த அரங்கத்தை சுற்றி சல்லடை போட்டு சலித்து கொண்டிருந்தது.
அப்பொழுது சுதாவிற்கு, பிரகாஷிடம் இருந்து அழிப்பு வந்தது. பேசிக் கொண்டே இடது பக்கம் திரும்பினாள் சுதா. அங்கு நமது நண்பர்கள் நின்று கொண்டிருந்ததை பார்த்து அவள் புன்னகைத்தாள். அவள் தன்னைப் பார்த்துவிட்டதால் அழைப்பை துண்டித்தான் பிரகாஷ்.
அவர்களுக்கு எதிர் திசையில் நிமலை வர்ஷினி தேடிக் கொண்டிருந்ததை பார்த்து, அவள் முகத்தை பிடித்து நிமல் இருந்த பக்கமாக திருப்பி, நிமலை பார்க்க வைத்தாள் சுதா. உதடுகளை மடித்து தன் சிரிப்பை அடக்கிக் கொண்டான் நிமல். அவனைப் பார்த்து இதமாய் புன்னகைத்தாள் வர்ஷினி.
அவர்களை சுற்றி இருந்த அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டதை பார்த்து வருத்தமாய் போனது வர்ஷினிக்கு. அவளுக்கு பக்கத்தில் நிமலுக்கு இருக்கை கிடைத்திருந்தால் அவர்கள் குறைந்தது மூன்று மணி நேரம் ஒன்றாக அமர்ந்து இருந்திருக்கலாம். இப்பொழுது அப்படி நடக்க வாய்ப்பே இல்லையே... என்ன செய்வது என்று தீவிரமாக யோசித்தாள். அவளுக்கு ஒரு யுக்தி கிடைத்தது.
"சுதா உனக்கு பிரகாஷ் கூட இருக்கணும்னு ஆசை இல்லையா?"
"அஃப் கோர்ஸ், இருக்கு. பட் இங்க எந்த சேரும் காலி இல்லயே..."
"நான் என்னுடைய சேரை பிரகாஷுக்கு கொடுக்கட்டுமா?"
"அப்போ நீ என்ன செய்வ?"
"என்னைப் பத்தி பிரச்சனை இல்ல. நான் நிமல் பக்கத்துல நின்னுக்குறேன்."
சரி என்று புன்னகையுடன் தலையசைத்தாள் சுதா. வர்ஷினியின் பித்து அதிகரித்துக் கொண்டே போகிறது. இது, எங்கு போய் முடியப் போகிறதோ தெரியவில்லை... என்று நினைத்துக்கொண்டாள் சுதா.
அங்கிருந்து எழுந்து, நிமலை நோக்கி சென்றாள் வர்ஷினி. அவள் தங்களை நோக்கி வருவதை கவனித்தான் நிமல்.
"பிரகாஷ், உங்கள சுதா அங்க கூப்பிடுறா"
"ஓ..." என்று அவன் அவனுடைய நண்பர்களை பார்க்க, அவர்கள் *போ* என்று தலையசைத்தார்கள்.
சுதாவை நோக்கி சென்றான் பிரகாஷ். நிமிலின் அருகில் நின்று கொண்டாள் வர்ஷினி. அவர்களுக்கு அருகில் சில மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டும், ஆடிக் கொண்டும் இருந்தார்கள். அவர்களில் ஒருவன், ஆடிக்கொண்டே வர்ஷினியின் மீது மோத பார்க்க, அவனை பிடித்து தள்ளிவிட்டு, வர்ஷினியின் கையைப் மென்மையாய் பிடித்து இழுத்து, அவனுக்கும், ராஜாவிற்கும் இடையில் அவளை பாதுகாப்பாய் நிறுத்திக் கொண்டான் நிமல். அதைப் பார்த்து, அவளுடைய மனம் பெருமையில் துள்ளி குதித்தது. பாவம், இது போன்றவற்றை எல்லாம் அவள் பார்த்ததில்லை அல்லவா...?
மேடையில் நடந்து கொண்டிருந்த நடன நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தாலும், வர்ஷினியின் ஆழமான பார்வை தன் மீது பதிந்து இருந்ததை உணர்ந்தான் நிமல். காணாததை கண்டதைப் போல், ஏன் இந்த பெண் அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்குப் புரியவில்லை.
மெல்ல அவளை நோக்கி சாய்ந்து,
"ஏன் என்னையே பார்த்துகிட்டு இருக்க?" என்றான் அவளை சங்கடத்திற்கு உள்ளாக்கி.
"நாளைக்கு சண்டே. காலேஜ் லீவு. நான் உங்களைஅடுத்த 24 மணி நேரம் பார்க்க முடியாது இல்ல? அதான் பாக்குறேன்" என்றாள், சமாளித்துக் கொண்டு.
"உனக்கு டான்ஸ் பிடிக்காதா?"
"ரொம்ப பிடிக்குமே..."
"அப்போ, டான்ஸை பாக்காம, ஏன் என்னை பார்க்குற?"
"எனக்கு டான்ஸ் பிடிக்கும். ஆனா, உங்கள விட அதிகமா ஒன்னும் பிடிக்காது."
அவன் ஆச்சரியத்துடன் அவளை பார்க்க, அவள் அழகாய் புன்னகைத்தாள்.
"நீ இப்படியே என்னை பார்த்துக்கிட்டு இருந்தா, உனக்கு சீக்கிரமா போர் அடிச்சிடும்" என்றான்.
"நமக்கு இன்ட்ரஸ்ட் இல்லாத விஷயத்துல தான் நமக்கு போரடிக்கும். அப்படிப் பார்க்கப் போனா, உங்க விஷயத்துல எனக்கு போரடிக்க வாய்ப்பே இல்ல. நமக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் கூட, நான் இப்படித் தான் உங்களை பார்த்துக்கிட்டு இருப்பேன்"
"என்னை இப்படியே பாத்துக்கிட்டு இருந்தா, நமக்கு யாரு சாப்பாடு செஞ்சு போடுவா?" என்றான் சிரித்தபடி.
அதைக்கேட்டு களுக் என்று சிரித்தாள் வர்ஷினி.
"நீங்க கிச்சனுக்குள்ள வராம இருகுறது நல்லது" என்றாள் புன்னகையுடன்.
"நம்ம ரெண்டு பேருக்கும் கொஞ்ச நாளா தான் பழக்கம். ஆனா, நீ பேசுறத பாத்தா, ரொம்ப நாள் பழகின மாதிரி பேசுற"
"எனக்கும் உங்களைப் பார்க்கும் போது அப்படித்தான் தோணுது... "
"நாளைக்கு என்ன செய்வ?" என்றான் புன்னகை மாறாமல்.
"நாளைக்கு சண்டே. ரிஷி வீட்ல இருப்பான். அவனுக்கு ப்ராஜெக்டில, இல்லனா அப்சர்வேஷன்ல ஹெல்ப் பண்ண சொல்லி கேட்பான். என்னோட சண்டேசை அவன் தான் எடுத்துக்குவான்."
"நான் நாளைக்கு உன்னை சினிமாவுக்கு கூட்டிட்டு போலாம்னு நினைச்சேன்"
"சாரி, நிமல்... என்னால அது நிச்சயமா முடியாது. எங்க வீட்ல என்னை, காலை கூட வெளியில் எடுத்து வைக்க விட மாட்டாங்க."
அதைக் கேட்டு சட்டென்று சீரியஸ் ஆனான் நிமல்.
"எனக்காக உங்க வீட்டை விட்டு வருவேன்னு சொன்ன... சினிமாவுக்காக கூட வீட்டை விட்டு வெளிய வர முடியாதுன்னா, நீ எப்படி என்கிட்ட வருவ?"
"சினிமாவுக்காக வெளியில வர்றது வேற விஷயம். ஏன்னா, சினிமா முடிஞ்சதும் நான் மறுபடி வீட்டுக்கு போயாகணும். வீட்டை விட்டு வெளியே வர்றது வேற விஷயம். ஏன்னா, நான் மறுபடி அங்க போக வேண்டிய அவசியம் இருக்காது. உங்க கூட இருந்துடுவேன்ல... "
இந்த பதிலை அவளிடமிருந்து அவன் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், அவன் தான், அவள் எப்பொழுது வேண்டுமானாலும் அவளுடைய அப்பாவிற்காக மனம் மாறலாம் என்று நினைத்திருந்தானே... அப்படி என்றால், உண்மையாகவே அவள் வீட்டை விட்டு வெளியே வர தயாராக தான் இருக்கிறாளா?
"உங்க ஃபோன் நம்பரை எனக்கு கொடுக்க மாட்டீங்களா?"
"மனப்பாடம் பண்ணிக்கிறியா?"
"இந்த சத்தத்துல, என்னால அது முடியும்னு தோணல"
தன்னுடைய கையை அவனை நோக்கி நீட்டினாள், அவன் தன்னுடைய கைப்பேசி என்னை அவளுடையை உள்ளங்கையில் எழுதுவான் என்று எதிர்பார்த்து. ஆனால், தன்னுடைய பேனாவை அவளிடம் கொடுத்தான் நிமல். அவனுடைய கைபேசி எண்ணை எழுதிக் கொண்டு அதை மறுபடி அவனிடம் கொடுத்தாள்.
"இந்தப் பென் நல்லா எழுதுது" என்றாள்.
"உனக்கு பிடிச்சிருந்தா, நீயே வச்சுக்கோ"
"அய்யய்யோ எனக்கு வேண்டாம்பா"
"ஏன்?"
"யாராவது பென் கிஃப்டா கொடுத்தா, அவங்க பிரிஞ்சிடுவாங்களாம்"
"நீ இதையெல்லாம் கூட நம்புவியா?"
"இல்ல... நம்ப மாட்டேன்... ஆனா, உங்க விஷயத்துல நான் ரிஸ்க் எடுக்க விரும்பல. ஏதாவது ஒரு காரணத்துக்காக நம்ம பிரிஞ்சிட்டா என்ன செய்றது?" என்றாள் சோகமாக.
நிமல் பதட்டமடைந்தான். இந்தப் பெண், அவன் நினைத்தது போல் இல்லை போலிருக்கிறதே... அவள் மிகவும் உள்ளார்ந்த உணர்வோடு இருக்கிறாள்.
"நீ எப்பவுமே இப்படித்தானா?"
"எப்படி?"
"எல்லாத்தையும் ரொம்ப ஓபனா பேசுவியா?"
"மாட்டேன்... நான் யார்கிட்டயும் பேசவே மாட்டேன்... உங்ககிட்ட மட்டும் பேசிக்கிட்டே இருக்கணும்னு தோணுது... வாழ்நாள் முழுக்க"
நொடிக்கு நொடி, அவனை பதட்டமடைய செய்து கொண்டே இருந்தாள் வர்ஷினி. ஆனால், இதெல்லாம் காதலில் சகஜம் தானே... காதலிப்பவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாகத் தான் இருக்கும் என்பதில்லை. ஆனால்... வர்ஷினியின் வார்த்தைகள் உண்மையாக இருந்தால்...? அதை இவன் எப்படி ஈடுசெய்ய போகிறான்? செய்ய முடியுமா அவனால்?
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro