10 மலரவனின் ஒப்புதல்
9 மலரவனின் ஒப்புதல்
அழுது கொண்டிருந்த மின்னல்கொடியை எப்படி சமாதானப்படுத்துவது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார் மணிமாறன். அப்பொழுது அவர்களின் அறைக்குள் நுழைந்தான் மலரவன். தன் சேலை முந்தானையால் கண்ணீரை துடைத்துக் கொண்ட மின்னல்கொடி, அவனைப் பார்க்க திராணியில்லாமல் தலை தாழ்த்திக் கொண்டார்.
"எப்படி இருக்கீங்க மா?" அவரது கரத்தை பற்றினான்.
ஒன்றும் கூறாமல் அவன் முகத்தை ஏறிட்டார் மின்னல்கொடி. அவர் எதுவும் கூறத் தேவையில்லை. அவரது தோய்ந்த முகமே கூறியது அவர் இப்பொழுது என்ன நிலையில் இருக்கிறார் என்று. அவரது தோள்களை மலரவன் ஆதரவாய் சுற்றி வளைத்துக் கொண்டது தான் தாமதம், அவனது தோளில் சாய்ந்து, வெடித்து அழுதார் மின்னல்கொடி.
"கடைசி தடவை நான் சிவகாமியை பார்த்தப்போ, என்கிட்ட அவ எவ்வளவு நம்பிக்கையோட பேசினா தெரியுமா? ஏற்கனவே நம்பிக்கை இழந்து நிக்குற அவளுடைய நம்பிக்கையை மறுபடியும் நான் எப்படி உடைப்பேன்?"
" நான் ஒரு முடிவு பண்ணி இருக்கேன் மா"
பெருமூச்சு விட்டார் மின்னல்கொடி.
அவருக்கு தெரியும், அவன் என்ன கூறப்போகிறான் என்று. அவன் லண்டனுக்கு திரும்பிச் செல்ல முடிவு செய்திருப்பான். அவனுக்குத் தான் இப்பொழுது இந்தியாவில் எந்த வேலையும் இல்லையே...! மகிழன் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்று கூறி விட்டான். அதன் பிறகு அவனுக்கு அங்கு என்ன வேலை இருக்கிறது? லண்டனுக்கு திரும்பிச் சென்று, தான் விட்டு வந்த வேலைகளை தொடர முடிவு செய்து இருப்பான்.
"நீ லண்டனுக்கு திரும்பி போயிடலாம்னு முடிவு செஞ்சிட்டியா? இன்னும் கொஞ்ச நாள் எங்க கூட இருக்கக் கூடாதா? நீ தானே எங்களுக்கு இருக்கிற ஒரே ஆறுதல்? நீ இருந்தா எங்களுக்கு கொஞ்சம் தெம்பா இருக்குமே..." என்று கெஞ்சாத குறையாய் கூறினார் மின்னல்கொடி.
"நான் லண்டனுக்கு திரும்பி போறதை பத்தி பேசல மா" என்றவுடன் மின்னல்கொடியின் முகத்தில் நிம்மதி தெரிந்தது.
"அப்பாடா, நல்லதா போச்சு. சரி, நீ என்ன சொல்ல வந்த சொல்லு"
"நான்... நான் பூங்குழலியை கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்றான், அவரது அதிர்ச்சி நிறைந்த கண்களை சந்தித்த படி.
மணிமாறனின் நிலையும் மின்னல்கொடியின் நிலையில் தான் இருந்தது. அவர்களிடம் விரைந்து வந்த அவர், மலரவனின் அடுத்த பக்கத்தில் அமர்ந்து கொண்டார். மின்னல்கொடியோ நம்ப முடியாமல் அவனையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார்.
"நீ... என்ன சொன்ன மலரா?" அவன் கூறியதை நம்ப முடியாமல், கேள்வி எழுப்பினார் மணிமாறன்.
"பூங்குழலியை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன், பா" என்றான் திடமாய்.
"நீ நிச்சயமா தான் சொல்றியா?" மீண்டும் வினவினார் மணிமாறன்.
அவன் ஏதும் பதில் கூறுவதற்கு முன், மின்னல்கொடி முந்தி கொண்டார்.
"அவன் நிச்சயமா முடிவு பண்ணாம எதுவுமே பேச மாட்டான். உங்களுக்கு அவனைப் பத்தி தெரியாதா? அவசர அடியில எந்த முடிவையும் எடுக்கிறவன் இல்ல அவன். நான் சொல்றது சரி தானே மலரா?" என்றார் மின்னல்கொடி தவிப்புடன்.
அவரது கரத்தை இறுக பற்றிய மலரவன், ஆம் என்று தலையசைத்தான்.
"மலரா நீ ரொம்ப கிரேட் டா" அவன் முதுகை தட்டிக் கொடுத்தார் மணிமாறன்.
"ரொம்ப தேங்க்ஸ் மலரா" அவனை சந்தோஷ கண்ணீருடன் ஆற தழுவிக்கொண்டார் மின்னல்கொடி.
"நீங்க எனக்கு தேங்க்ஸ் சொல்ல வேண்டாம் மா"
"சொல்லணும்... வாழ்நாள் முழுக்க நாங்க சந்தோஷமா உனக்கு தேங்க்ஸ் சொல்லுவோம்" அவனது நெற்றியில் முத்தமிட்டார்.
"முதல்ல பூங்குழலிக்கு சம்மந்தமான்னு கேளுங்க"
மின்னல்கொடியும் மணிமாறனும் ஒருவரை ஒருவர் பதற்றத்துடன் பார்த்துக் கொண்டார்கள். இப்பொழுது அவர்கள் என்ன கூறுவார்கள்? மகிழினனுக்கு அவளை பிடிக்கவில்லை, ஆனால் மலரவன் திருமணம் செய்து கொள்வான் என்றா?
"வாங்க நம்ம அவங்க வீட்டுக்கு போகலாம். சிவகாமி கிட்டயும் பூங்குழலி கிட்டயும் நான் பேசி சம்மதம் வாங்குறேன்" என்றார் மின்னல்கொடி.
"உங்களால முடியுமா?" என்றான் மலரவன்.
"முயற்சி பண்ணி பாக்குறேன்"
மணிமாறனும் மின்னல்கொடியும் தில்லைராஜன் இல்லம் புறப்பட்டு சென்றார்கள்.
தில்லைராஜன் இல்லம்.
அவர்களைப் பார்த்து புன்னகை புரிந்த வடிவுக்கரசி,
"வணக்கம். வாங்க" என்றார்.
வலிய புன்னகையை வரவழைத்துக்கொண்டார் சிவகாமி.
"நாங்க பூங்குழலியோட கல்யாணத்தை பேசி முடிக்கலாம்னு வந்திருக்கோம்"
நம்ப முடியாமல் வடிவுக்கரசியை பார்த்தார் சிவகாமி. மகிழனுக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறியதாக அவர் கூறவில்லையா? ஒருவேளை, இவர்கள் அவனை திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள செய்து விட்டார்களோ?
"மகிழன்..." என்று சிவகாமி ஏதோ கூற ஆரம்பிக்க,
அவரை கையமர்த்தினார் மணிமாறன்.
"நாங்க பூங்குழலியை மகிழனுக்கு கேட்டு வரல. மலரவனுக்கு கேட்டு வந்திருக்கோம்"
"மலரவனுக்கா?" திகைத்து நின்றார் சிவகாமி.
"பெரிய தம்பிக்கா?" தான் கேட்டது சரிதானா என்பதை தெளிவு படுத்திக் கொள்ள கேட்டார் வடிவுக்கரசி.
"மகிழனுக்காக நாங்க உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறோம். அவன் குழலியை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டான். அவனை நினைச்சாலே எங்களுக்கு வெக்கமாவும் வேதனையாவும் இருக்கு. அதனால தான் அவளை மலரவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைக்கிறோம்"
"மலரவன் அவளை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டாரா?" என்றார் வடிவுக்கரசி.
"ஆமாம், ஒத்துக்கிட்டான்"
"ஆனா, நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க விரும்பல" என்றாள் அவர்களது பேச்சை கேட்டுக் கொண்டிருந்த பூங்குழலி.
"அப்படி சொல்லாத குழலி" கெஞ்சினார் சிவகாமி.
"அம்மா ப்ளீஸ், எனக்கு கல்யாணமே வேண்டாம் என்னை விட்டுடுங்க"
அவள் அங்கிருந்து செல்ல முற்பட,
"நில்லு குழலி" என்றார் மின்னல்கொடி.
அவர் பக்கம் திரும்பாமல் அப்படியே நின்றாள் பூங்குழலி.
"உன்னோட கோபம் நியாயமானது. ஆனா தயவுசெய்து கோவத்துல எந்த முடிவும் எடுக்காத. நீ எங்க வீட்டுக்கு மருமகளா வரணும்னு நாங்க ஆசைப்படுறோம்"
"நானும் கூட உங்களை மாதிரி நல்லவங்களுக்கு மருமகளாக வரணும்னு தான் விருப்பப்பட்டேன். அதனால தான், மகிழனை கல்யாணம் பண்ணிக்கோன்னு எங்க அப்பா சொன்ன போது, அந்த கல்யாணத்துக்கு நான் சம்மதம் சொன்னேன். ஆனா இப்போ, என்னை அவமானப்படுத்தின ஒருத்தன் இருக்கிற குடும்பத்தோட ஒரு பகுதியா இருக்க நான் விரும்பல"
மணிமாறனும் மின்னல்கொடியும் அதிர்ச்சி அடைந்தார்கள். மகிழன் அவளை அவமானப்படுத்தியது பற்றி பூங்குழலிக்கு எப்படி தெரிந்தது? ஒருவேளை மகிழினே தனது முடிவை அவளிடம் கூறிவிட்டானோ? அவர்களது மனதை பயம் பீடித்தது.
"அவகிட்ட நான் தான் சொன்னேன்" என்றார் வடிவுக்கரசி.
*நீங்களா?* என்பது போல் அவர்கள் அவரை ஏறிட்டார்கள்.
"இன்னைக்கு காலையில, நீங்க இங்க விட்டுட்டு போன உங்க பர்ஸை கொடுக்க நான் உங்க வீட்டுக்கு வந்திருந்தேன். அதிர்ஷ்டவசமாவோ, இல்ல துரதிஷ்டவசமாவோ, மகிழன் பேசுனத எல்லாம் நான் கேட்டேன்"
செய்வதறியாமல் தவித்தார் மின்னல்கொடி. கடவுளே இது என்ன கொடுமை? மகிழன் மனதில் பூங்குழலியை பற்றி இருக்கும் எண்ணத்தை இவர்களுக்கு தெரியாமலேயே மறைத்து விடலாம் என்று அல்லவா அவர்கள் எண்ணி இருந்தார்கள்...! இப்பொழுது அவளை எப்படி சமாதானம் செய்வது? ஆனால் செய்து தான் ஆக வேண்டும். தில்லைராஜனுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றியாக வேண்டும். திருமணமே வேண்டாம் என்று கூறி வந்த மலரவனும், திருமணம் செய்து கொள்கிறேன் என்று முன்வந்திருக்கிறான். பூங்குழலியின் *சரி* என்ற ஒற்றை வார்த்தையில் தான் அவர்களது அனைத்து நிம்மதியும் அடங்கி இருக்கிறது.
"மகிழன் செஞ்ச தப்புக்காக, நீ நல்லா இருக்கணும்னு நினைக்கிற எங்க எல்லாரையும் நீ அவாய்ட் பண்றது எந்த விதத்துல நியாயம்?" என்றார் மின்னல்கொடி.
"நான் சந்தோஷமா தான் இருக்கேன். எனக்கு நானே சந்தோஷத்தை ஏற்படுத்திக்குவேன்... எனக்கு அதுவே போதும். நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்"
தன் அறையை நோக்கி நடந்தாள் பூங்குழலி.
அமைதியாய் நின்றிருந்தார் சிவகாமி.
"அவகிட்ட நான் பேசுறேன்" என்றார் வடிவுக்கரசி.
"ரொம்ப தேங்க்ஸ்ங்க" என்றார் மின்னல்கொடி கண்களில் நன்றியை தேக்கி.
"ஆனா அவளை ஒத்துக்க வைக்க முடியும்னு என்னால நிச்சயமா சொல்ல முடியல. உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு. அதுக்காக தான் இந்த முயற்சியை நான் செய்றேன்னு சொல்றேன்"
"இந்த கல்யாணம் நடந்தாலும் நடக்கலனாலும், நாங்க அப்படியே தான் இருப்போம். நமக்கு இடையில் இருக்கிற எதுவும் மாறப் போறது இல்ல" என்றார் மணிமாறன்.
என்ன கூறுவது என்று தெரியாமல் நின்றார் சிவகாமி.
"தயவுசெய்து பூங்குழலிக்கு எடுத்து சொல்லி புரிய வைங்க" என்றார் மணிமாறன்.
அவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றார்கள்.
அன்பு இல்லம்
தன் பெற்றோரின் வருகைக்காக காத்திருந்தாள் மலரவன். பூங்குழலி மற்றும் சிவகாமியின் முடிவு என்னவாக இருக்கும் என்று அவனுக்கு புரியவில்லை. மாப்பிள்ளை மாறிப் போனதற்கான காரணத்தை அவர்கள் கேட்பார்கள். உண்மை காரணத்தை தெரிந்து கொள்ள முயல்வார்கள். அதற்கு, அவனது பெற்றோரின் பதில் என்னவாக இருக்கும்? யோசித்தபடி அமர்ந்திருந்தான் மலரவன்.
அப்பொழுது அழைப்பு மணியின் ஓசை கேட்டது. தண்டபாணி கதவை திறந்தார். குமரேசன் குடும்பத்தினரை பார்த்த மலரவனுக்கு எரிச்சல் ஏற்பட்டது. அந்த இடத்தை விட்டு உடனடியாக அகன்று செல்ல நினைத்தான். ஆனால் அது அவ்வளவு நாகரிகமாக இருக்காது. மலரவனை தன்னந்தனியாக பார்த்த அவர்களது முகங்கள் பளிச்சிட்டது.
"ஹலோ மலர்" என்றார் குமரேசன் புன்னகையுடன்.
இறுக்கமான தலையசைப்பை பதிலுக்கு தந்தான் மலரவன்.
"எப்படி இருக்க?"
"நல்லா இருக்கேன் அம்மாவும் அப்பாவும் வெளியில் போயிருக்காங்க. அவங்க வர லேட் ஆகும்"
"அதனால ஒன்னும் பிரச்சனை இல்ல. உன்னை பார்த்ததுல எங்களுக்கு சந்தோஷம். உண்மைய சொல்லப் போனா, உன்னை சந்திக்கிற சந்தர்ப்பத்தை தான் நானும் எதிர் பார்த்துக்கிட்டிருந்தேன்" என்றார் ஆர்வத்துடன்.
"எதுக்காக?" என்றான் எந்த உணர்ச்சியும் இன்றி மலரவன்.
"உன்கிட்ட பேச தான்"
"முன்ன பின்ன தெரியாத யார்கிட்டயும் பேசறதை நான் விரும்புறதில்ல"
"பேசாமலேயே இருந்தா, நீங்க எப்படி மத்தவங்களை பத்தி தெரிஞ்சுக்க முடியும்?" அவர்களது பேச்சுக்கிடையில் மூக்கை நுழைத்தாள் கீர்த்தி.
"நான் யாரைப் பத்தி தெரிஞ்சுக்க நினைக்கிறேனோ, அவங்க கிட்ட மட்டும் தான் பேசுவேன்" என்றான் அதே உணர்ச்சியற்ற முகத்தோடு.
அவர்களிடம் பேசவோ, அவர்களை பற்றி தெரிந்து கொள்ளவோ அவன் விரும்பவில்லை என்பதை வெட்ட வெளிச்சமாய் கூறினான் மலரவன்.
"நீங்க ஏன் இவ்வளவு இறுக்கமாக இருக்கீங்க?" என்றாள் கீர்த்தி சோகமாய்.
அவள் கூறியதை காதில் வாங்கிக் கொள்ளாமல்,
"அம்மா அப்பா வர லேட் ஆகும். உங்களுக்கு அவங்களை பார்க்கணும்னா, இருந்து பாத்துட்டு போங்க. எக்ஸ்கியூஸ் மீ" அவன் அங்கிருந்து ஓரடி எடுத்து வைக்க,
"ஒரு நிமிஷம்... " என்றார் சுஜாதா.
கல் போன்ற முகத்துடன் அவரை ஏறிட்டான் மலரவன்.
"வீட்டுக்கு வந்த விருந்தாளிங்க கிட்ட எப்படி பேசணும்னு உனக்கு தெரியாதா?"
"நானா உங்களை கூப்பிட்டேன்? எந்த விதத்துல நீங்க என்னோட விருந்தாளி?"
"இது உங்க வீடு... நாங்க இங்க வந்திருக்கோம்... அப்படின்னா நாங்க யாரு?"
"எனக்கு தெரியாது. நான் இதுக்கு முன்னாடி உங்களை பார்த்ததே இல்ல... "
"அப்படின்னா இப்போ எங்களை பத்தி தெரிஞ்சிக்கோ. நீ கீர்த்தியை கல்யாணம் பண்ணிக்கணும் நாங்க விரும்புறோம். அவளுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு"
எரிச்சலில் மண்டை காய்ந்தது மலரவனுக்கு.
"உங்களுக்கு சொன்னா புரியாதா? உங்க கிட்ட பேசக்கூட எனக்கு பிடிக்கலைன்னு சொல்றேன். நீங்க கல்யாணத்தை பத்தி பேசுறீங்க... என்ன ரகம் நீங்க?"
"என்னை உங்களுக்கு பிடிக்கலையா?" என்றாள் கீர்த்தி.
பதில் ஏதும் கூறாமல் தன் அறையை நோக்கி நடந்தான் மலரவன், குமரேசன் கூப்பிடுவதை பொருட்படுத்தாமல்.
" மலர்.. ஒரு நிமிஷம்... நான் சொல்றதை கேளு..."
குமரேசன் அழைத்தபடி இருந்தார். ஆனால் மலரவன் நிற்கவில்லை.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro