Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

15.


இரண்டு நாட்களாய் திவ்யாவிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லை. அவன் அழைத்தாலும் பதில் இல்லை. ஒரு பக்கம் அவள் மேல் கடுப்பாகவும் இன்னொரு பக்கம் திவ்யாவுக்கு என்னதான் நடந்திருக்கும் என பதற்றமாகவும் இருந்தது வருணுக்கு. 

இருப்புக் கொள்ளாமல் அலுவலக அறையில் இங்கும் அங்குமாய் நடந்தவன், சுஜி என்ற பெயர் நினைவுக்கு வர, திவ்யா அவனிடம் பகிர்ந்திருந்த சில விடயங்களை வைத்து முகநூலில் சுஜியை தேடினான். அரை மணி நேரத் தேடுதலிலேயே அவளை கண்டு பிடித்து அவளுக்கு தன்னை அறிமுகம் செய்து திவ்யாவை பற்றியும் விசாரித்து Message  அனுப்பி வைத்தான். 

இவன் அவசரம் தெரியாமல் மூன்று மணி நேரம் கழித்து நிதானமாய் பதில் வந்தது சுஜியிடம் இருந்து. வருண் பற்றி திவ்யா மூலம் நிறையவே அறிந்திருந்தாள் சுஜி.  பெண் பார்க்க வருவதாய் திவ்யா ஊருக்கு வந்தது அவளுக்கு தெரியும். திருமணத்தில் பெரிய நாட்டம் இல்லாதவளை வருண் வற்புறுத்தி அனுப்பி வைத்ததும் அவளுக்கு தெரியும். ஆனால் அவள் வருணிடம் பேசாமல் இருப்பதற்கு காரணம் அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. 

தான் திவ்யாவாடம் பேசுவதாய் சொல்லிவிட்டு வருணின் மொபைல் நம்பரையும் வாங்கியவள் அடுத்த சில நிமிடங்களிலேயே வருணுக்கு அழைத்தாள். 

என்னாச்சு, ஏன் உங்க கூட பேசாம இருக்கானு எதுவும் சொல்ல மாட்றா.  But பெருசா problem எதுவும் இருக்குற மாதிரி தெரியல. அவ நாளைக்கி early Morning Trainல சென்னை கெளம்புறதா சொன்னா. 

ம்ம் Okay சுஜி. ரெண்டு நாளா அவ போன் ஆன்சர் பண்ணவே இல்ல.  அதான் Safe ஆ இருக்காளா இல்லையானு பயந்துட்டேன். உங்கள Disturb பண்ணி இருந்தா Sorry.

அப்படிலாம் எதுவும் இல்ல வருண். திவ்யா எனக்கும் Friend தான். 

போனை வைத்ததும் அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டவன், அதன் பின்னர் தான் வேலைகளை கவனிக்கத் தொடங்கினான். எப்படியும் இரண்டு நாட்களில் அவளே வந்து விடுவாள். அப்போதே பேசிக் கொள்ளலாம் என தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டான். ஆனாலும் அவள் நினைவு அடிக்கடி மனதை ஏதோ செய்தது. 

மாலை ஆபிஸ் விட்டு கிளம்பியவன் அவ்வப்போது திவ்யாவுடன் போகும் கடற்கரைக்குப் போய் தனியே அமர்ந்திருந்தான். அவள் வந்ததிலிருந்து அவளுடன் மட்டுமே வந்து பழகிய இடத்தில் தனியே இருக்க இப்போது என்னவோ போலிருந்தது. அரைமணி நேரம் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை.

அங்கிருந்து வீட்டுக்குப் போய் கட்டிலில் குப்புற விழுந்து எவ்வளவு நேரம் இருந்தானோ, இரவு சாப்பிட வரவில்லை என்று ரோஹினி போன் செய்து திட்டியதில் அங்கே கிளம்பிப் போனான். 

அவள் வீட்டை அடைந்ததும் ரோஹினியின் கேள்விகளுக்கு ஆர்வமின்றி பதில் சொல்லிக் கொண்டே சாப்பிட்டு முடித்து எழுந்தவன், கையில் போனுடன் மினியை கண்டதும், "ச்சே, இது எப்டி தோணாம போச்சு! " என்று படு உற்சாகமாய் அவளை தூக்கிய படி வராண்டாவுக்கு வந்தவன், "அம்மு, திவி கூட பேசலாமா " என்றதும் குழந்தையும் ஆர்வமாய் தலை ஆட்டியது. 

வீடியோ கால் போட்டு மினியிடம் கொடுக்க, அவன் எதிர்பார்த்தது போலவே திவ்யாவும் அழைப்பை ஏற்றாள். மினியிடம் இருந்து உடனே போனை கேட்டால் அழுது ஆர்ப்பாட்டம் செய்து விடுவாள் என்று சில நிமிடங்கள் அவளை பேச விட்டவன், " அம்முமா, கொஞ்சம் கொடு, மாமா பேசிட்டு தரேன் " என்று போனை கையில் எடுத்தவன், திவி " என்றதுமே  அதுவரை இருந்த சகஜ நிலை மாரி திவ்யாவின் முகம் வாடியது. 

ஒரு சங்கடமான மௌனம். என்னதான் இவளுக்கு பிரச்சினை என்று கோபமாய் வந்தாலும், எதையும் பெரிதாய் காட்டிக் கொள்ளாமல் எப்போது வருகிறாள் என்று மட்டும் கேட்டுவிட்டு போனை வைத்து விட்டான். பேசிவிட்டு தருவதாய் சொன்னவன் கட் செய்ததும் மினி ஓவென்று அழத் தொடங்க, ரோஹினி வந்து வெளியே எட்டிப்  பார்த்தாள். ரெண்டுக்கும் அப்படி என்னதான் திவி பைத்தியமோ என்று வருணுக்கு கேட்கவே புலம்பி விட்டு மினியை தூக்கிக் கொண்டு போனாள் ரோஹினி.  

எரிச்சலாய் காரை எடுத்துக் கொண்டு மீண்டும் வீட்டுக்கே வந்து விட்டான். 

அடுத்த நாள் தவிப்பு, கோபம், எரிச்சல் என உணர்வுகளின் கலவையாய் நகர எப்போது விடியும் என்று காத்திருந்து  திங்கட் கிழமை காலை வழக்கத்தை விட முன்னதாகவே தயாராகி வர, அலுவலக அறையில் நுழையும் போதே கிட்டியது திவ்யாவின் தரிசனம்.  

வருணை கண்டதும் பதற்றமாய் திவ்யா எழுந்து நின்றாள். கடந்த மூன்று நாட்களாய் அவனை பாடாய்ப் படுத்தியதில் கடுப்பாய் வந்தாலும் எதுவும் பேசாமல் தன் இருக்கைக்குப் போனான். அங்கே என்ன நடந்திருந்தாலும் தன்னிடமிருந்து ஒதுங்க எந்த காரணமும் இல்லையே.  காரணம் இல்லாவிட்டால் ஏன் இப்படி வாட்டி எடுத்து விட்டாள்? இருக்கும் மனநிலையில் கூப்பிட்டு திட்டி விட்டு  அவள் அழுதால் அவனே சமாதானம் செய்ய வேண்டும். வழக்கமாய் நடப்பது அது தானே! 

வேலை விடயங்களை பேசியதோடு சரி.  அதற்கு மேலே ஒரு வார்த்தை கூட அவன் எதுவும் சொல்லவில்லை. இதிலும் பேசும்போது அவள் அவனுடைய கண்களைப் பார்ப்பதையே தவிர்த்தாள். 

சாப்பிடும் போதும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அவனுக்குத் தெரியாமல் அவளும், அவள் கவனிக்காத நேரத்தில் அவனும் பார்த்துக் கொண்டதோடு சரி. அன்றைய நாள் அப்படியே கழிந்தது.  வேலை முடித்து வழக்கம் போல இருவரும் கிளம்பி அவள் ஹாஸ்டல் அருகில் காரை நிறுத்த, "Good night " சொல்லிவிட்டு இறங்கிப் போனாள், அதுவும் மிகுந்த சிரமத்தில். என்னதான் நடந்தது இவளுக்கு!  ஏன் இந்த ஒதுக்கம்! எது எப்படியோ எதுவுமே செய்யாமல் உயிரை எடுக்க இவளால் மட்டுமே முடியும்.

திவ்யா பார்வையில் இருந்து மறையும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் மறைந்ததும் பெருமூச்சு விட்ட படி காரை கிளப்பினான்.

அடுத்த நாற்பத்தைந்தாவது நிமிடம், உர்ரென்று அமர்ந்திருந்த வருணை கன்னத்தில் கை வைத்த படி  பொறுமையாய் பார்த்துக் கொண்டிருந்தான் அகில். ஆராய்ச்சிப் பார்வையோடே சிவா அகில் அருகில் அமர்ந்தான். அகிலை மெதுவாய் தட்டி " எதாச்சும் சொன்னானா? " என்றதும், உதட்டை பிதுக்கி, கைகளால் இல்லை என சைகை செய்தவன் மீண்டும் வருணை பார்க்க, "டேய் இப்ப நீ எதுக்கு அவன முழுங்குற மாதிரி பாத்துட்டு இருக்க " என்றதும் "இப்ப எதுக்கு என்ன கேள்வி கேக்குற? அவன் கிட்ட கேளு, என்ன ப்ராப்ளம்னு " 

"டேய் வருண் என்னதான்டா ஆச்சு? யேன் இப்படி இருக்க? "வருண்அருகிலே அமர்ந்து அவன் தோளில் அழுத்தினான் சிவா.

"இந்த திவி ... இவ ஏன் இப்படி பண்றா? அவ என்கிட்ட சரியா பேசி மூனு நாள் ஆச்சு தெரியுமா? " என்றதும் மற்ற இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். 

"ரொம்ப முத்திடிச்சி " வாய்க்குள்ளே முணுமுணுத்துக் கொண்டான் அகில்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro