✨திருடியே மேரி மேரி மீ -1✨
வாசகர்களுக்கான முக்கியமான குறிப்பு: தயவு பண்ணி லாஜிக் பாக்குற யாரும் இந்த ஸ்டோரியை படிக்க வேணாம்... ஜஸ்ட் ஒரு இமேஜினேஷன் ஸ்டோரி.. கற்பனையா மட்டும் தான் இது இருக்க போகுது இதுல போய் லாஜிக் பாக்காதீங்க ஒன்லி மேஜிக் மட்டும் பாருங்க... அப்புறம் ரொம்ப நாள் கழிச்சு நான் எழுதி முடித்து இருக்குற ஸ்டோரி ..குறைகள் இருந்தால் மன்னிக்கவும் 🙏🏻🙄
*உ*
" டேய் டுமாங்கோலிஆளுக்கு ஆயிரம் ரூபா பங்கு போடலாம்னு சொல்லிட்டு இங்குட்டு வந்து பிளேட்ட மாத்தி என்னடா என்கிட்ட ஐநூறு ரூபா கொடுக்க? என்கிட்டயே லவ்ட்ட பாக்குறியா?"என்று அந்தக் கூட்டத்தில் கோபத்துடன் ஒருத்தி கத்திக் கொண்டிருக்க,
கூட்டத்தில் இருந்து மற்றவர்கள் அவளை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தனர். பின்னே அவள் கையில் பளபளப்பாக இருந்த கத்தி எந்த நிமிடம் அந்த குட்டிப் புலியை கிழிக்குமோ என்று பயம் அவர்களுக்கும் இருக்கும் தானே!
"எக்கி எப்ப பார்த்தாலும் பொருள பொருள வெளியே எடுக்காத உள்ளாக்க வை.. எசக்கு பொசக்கா அவன் மேல கீச்சுப்புட்டா என்னாகுறது"என்று கூட்டத்தில் சற்று உயரமாக இருந்த அந்த நெட்டையன் நெப்போலியன் குரல் கொடுக்க,
அவனைப் பார்த்து நன்றாக முறைத்தவள்,
"போனது எந்துட்டு தானே? அப்ப நல்லாத்தான் வக்கனையா பேசுவ.. உந்துட்டு போன உனக்கு தெரியும் பே.. நான் என்ன டைம் பாஸுக்கா சண்டை போட்டுட்டு இருக்கேன் இந்த கம்மனாட்டி ஒழுங்கா என் கையில பைசா கொடுத்து இருந்தா எப்பவோ எடத்த காலி பண்ணிட்டு போயிட்டே இருப்பேனே என் வென்று"என்று அவள் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த குட்டிப்புலியை முறைக்க,
குட்டி புலி பயத்துடன், "அக்கா உங்காசு 500 ரூபா தானே? கணக்குப்படி தானே தந்தேன்?"
"டேய் டேய் என் கோபத்தை கெளராத? நீ என்கிட்ட ஆயிரம் ரூபா தானே டீலு பேசினே.. இப்ப அப்படியே அப்பாடிக்கா பேசுற.. என்னை ஏமாத்த பாக்குறியா? என்ன பத்தி உனக்கு தெரியும் தானே?"
"எக்கோ நீ.. வேற உன்ன போய் ஏமாத்த முடியுமா? நீ பலே ஆள் ஆச்சே... உன் காசு 500 ரூபா உன் தோஸ்து அதான் அந்த கருப்பு பாகுபலி உன்கிட்ட சொல்லிக்கிறேன்னு லவ்ட்டினு போயிட்டான்"என்றதும் சற்று கோபம் தணிந்தவள்,
"எவன்ட கொடுத்தாலும் என்கிட்ட சொல்லணும் டா .. இல்லா காட்டி பெஜாரா போயிடும் பாத்துக்கோ..இப்போ போய் அவன் கிட்ட கேட்பேன். அவன் இல்லன்னு மட்டும் சொல்லிட்டா நீ இன்னைக்கு கைமா தான் நவுலு"என்று தன் கையில் இருந்த கட்டியை மடக்கி தன் பாக்கெட்டில் வைத்தாள் சீதா.
கூட்டத்தில் நின்றவர்களும் இனி பிரச்சினை இல்லை என்பதால் ஒவ்வொருவராக கலைந்துபோக ஆரம்பிக்க,
குட்டி புலியோ நிம்மதி பெருமூச்சுடன் "எம்மாடியோவ் கொஞ்ச நேரத்துல அசந்தா காட்டி உயிர் போயிருக்கும்... இதுக்கெல்லாம் காரணம் அந்த கிறுக்கு புடிச்சவன் தான்..அந்த பரதேசி பாகுபலி மட்டும் என் கைல கிடைச்சான் அவனை பீஸ் பீஸா வெட்டிடுவேன் " என்று மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து கொஞ்சம் சத்தமாக பேசிவிட,
திரும்பி நடக்க ஆரம்பித்த சீதா,
"அடிங்கொய்யால என் முன்னாடியே என் தோஸ்த கொன்னுடுவியா? உன் நெஞ்சில தில்லு இருந்தா இன்னொரு தாட்டிகா சொல்லுடா பாப்போம்"என்று மீண்டும் அவள் பாக்கெட்டில் கையை விட,
"ஐயையோ எக்கோவ் நீ இன்னும் போலையா? சும்... சும்மா தமாசுக்கு சொன்னேன் கா மன்னிச்சுக்கோஓஓஓ"என்று கத்திக்கொண்டே குட்டி புலி பயத்தில் அங்கிருந்து ஓட ஆரம்பித்து இருந்தான்.
"அந்த பயம் இருக்கட்டும்" என்று ஓடிக்கொண்டிருந்தவனின் காதுகளில் விழுமாறு சத்தமாக சொன்ன சீதாவிற்கு அந்த கருப்பு பாகுபலி ஆனா பூபதி என்றால் தனி பாசம்... பின்னே அவன் அவளின் உயிர் தோழன் ஆயிற்றே..
சென்னையின் கடற்கரை பகுதியை ஒட்டி அமைந்துள்ளது தேத்துவார் குப்பம். இங்குதான் சீதா பிறந்து வளர்ந்தது எல்லாமே. இருக்கும் ஒரே ரத்த சொந்தம் அவளது தந்தை முத்துசாமி மட்டுமே. தாய் அவள் பிறக்கும் பொழுதே போதிய மருத்துவ வசதி இன்றி இறந்துவிட, அவளின் தந்தை வழி பாட்டி தான் அவளை வளர்த்தெடுத்தார்.
தேத்துவார் குப்பம் மக்களின் பெரும்பாலான தொழிலே மீன்பிடித்தல் தான். முத்துச்சாமியும் மீனவர் என்பதால் அவர் பாதி நாட்கள் கடலிலும் மீதி நாட்கள் போதையிலும் நாட்களை கழித்தார். ஆரம்பத்தில் மனைவி பிரிந்த துக்கம் என்று குடிக்க ஆரம்பித்தவர் நாளாக நாளாக கடலுக்குப் போகாமல் போதையிலேயே கிடந்தார். அதனால் தான் என்னவோ சீதாவிற்கு சிறு வயதில் இருந்தே தந்தையின் மீது அளவு கடந்த வெறுப்பு. சீதாவின் 15 ஆம் வயதில் அவளை வளர்த்த அவளின் பாட்டியும் இறந்து விட, கண்டிக்க ஆள் இன்றி பத்தாம் வகுப்புடன் படிப்பை விட்டவள், நண்பர்களுடன் சுற்ற ஆரம்பித்தாள்.
முத்துச்சாமி கடலுக்கு போகாமல் போதையில் பாதி நாள் கிடப்பதால் வருமானம் இன்றி படித்து என்ன பயன்? என்ற நினைப்புதான் அவளுக்கு...
பாட்டி வேலாயி இருந்தவரை, சந்தையில் மீனை விற்று கால் வயிற்று கஞ்சியாவது ஊற்றி கொண்டிருந்தார். அதுவும் இல்லாததால் குப்பத்து பசங்களுடன் சிறு சிறு திருட்டு தொழில்களில் ஈடுபடுவாள். திருட்டு என்றால் இல்லாதவர்கள் இருப்பவர்களிடமிருந்து எடுத்துக் கொள்வது என்பது சீதாவின் கருத்து.
சீதா ஐந்து அடி உயரம், மாநிறம் கொஞ்சமே கொஞ்சம் குண்டான கருவிழிகள் பார்ப்பதற்கு அழகாக தான் இருப்பாள் ஆனால் அவள் பேச ஆரம்பித்தால் எதிரில் இருப்பவர்கள் துண்டை காணோம் துணியை காணும் என்று ஓட ஆரம்பித்து விடுவார்கள். அவளின் ஒரே நண்பன் கருப்பு பாகுபலி என்று அனைவராலும் பெயர் வைக்கப்பட்டிருந்த பூபதி. அவளின் குடிசைக்கு பக்கத்து குடிசை தான் அவனும். அங்கு தான் அவன் தனது அம்மா மட்டும் இரண்டு தங்கைகளுடன் இருக்கிறான்.அவனின் அம்மா ஒரு பணக்காரரின் வப்பாட்டி என்பதால் அவர்களுக்கு சாப்பாட்டிற்கு என்று குறை ஒன்றும் வந்ததில்லை. ஆனால் பூபதிக்கு அவனில் தந்தையென்றால் பிடிக்காது. தந்தை தரும் பணத்தையும் சேர்த்து தான்... என்பது நண்பனை நன்றாக புரிந்து கொண்ட சீதாவின் எண்ணம்.
சீதாவிற்கு பெண் தோழிகள் பலர் இருந்தாலும் அவள் இவ்வளவு பாதுகாப்பாக அந்த திருட்டு தொழிலில் ஈடுபடுவதற்கு முக்கிய காரணம் அவளின் நண்பன்..
அவளின் பாதுகாவலன்... தோழன்... நலன் விரும்பி... அவள் என்ன சொன்னாலும் கேட்பவன் என்று பல பரிமாணங்களில் அவளுடன் இருப்பவன்.
சில நேரங்களில் திருடியதற்காக போலீஸ் இடம் மாட்ட நேர்வது கூட உண்டு. அப்பொழுதெல்லாம் அவளுக்கு பதிலாக அவனே விசாரணைக்குச் செல்வான். அத்தோடு முத்துசாமி குடித்துவிட்டு சீதாவை அடிப்பது கூட உண்டு. அப்பொழுதும் அவனே பல நேரங்களில் சீதாவை காப்பாற்றி இருக்கிறான்.
அவனுக்கு தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள ரொம்பவும் பிடிக்கும். அதனாலேயே திருடிய பணத்தில் பாதியை ஜிம்மிற்கு செலவழிப்பான். அதன் பலனாக அவனின் உடல் பலப்படி கட்டுக்களுடன் இருக்க, அவனின் உருவத்தை வைத்து குப்பத்திலிருந்தவர்கள் அவனுக்கு கருப்பு பாகுபலி என்று பெயரிட்டனர்.
சீட்டர் சீதா, கருப்பு பாகுபலி (பூபதி),குட்டி புலி, சீக்கு சீனு, ப்ளக்கு பாண்டி, குட்டி யானை ரவி, திருட்டு சாவி கிரிஜா, நெட்டை நெப்போலியன், பீட்டர் பிரீத்தா என்னும் ஒன்பது பேர் திருடுவதற்காக அளவெடுத்தது போல் ஒரே குழுவில் சேர்ந்திருந்தனர்.
நேற்றைய திருட்டின் போது கிடைத்த ரூபாயை பங்கு பிரிக்கும் பொழுது, குட்டி புலி சீதாவிற்கு வெறும் 500 மட்டுமே கொடுத்ததால் தான் இன்று இவ்வளவு பெரிய பஞ்சாயத்து.
சீதா குட்டி புலி இடம் சண்டை போட்டுவிட்டு பூபதி எங்கே இருக்கிறான்? என்று தேடி சென்றாள்.
அவர்கள் எப்பொழுதும் செல்லும் இடத்தில் எல்லாம் அவனை தேடிப் பார்த்தவள், அவன் எங்கும் இல்லாததால் கடைசியாக கடற்கரை பகுதியில் இருந்த அந்த பாழடைந்த ஒற்றைக்கால் மண்டபத்திற்கு சென்றாள்.
அங்கு பேய் இருப்பதாக குப்பத்திற்குள் நம்பப்படுவதால் பெரும்பாலும் அதன் அருகில் யாரும் செல்வதில்லை.
சீதா நினைத்தது போலவே பூபதி அங்கு தான் இருந்தான்.
ஆனால் அவனது கையில் மதுபாட்டில் இருந்தது.
"டேய் பூவு இங்கிட்டு என்னடா பண்ற? உன்னை எங்கெல்லாம் தேடுறது.. அந்த குட்டி புலி இருக்கான்ல அவன் இன்னைக்கு..." என்று பேசிக்கொண்டே வந்தவளின் பேச்சு பூபதியின் கையில் இருந்த மது பாட்டிலை பார்த்ததும் நின்று விட்டது.
பூபதி அவளை கண்கள் முழுவதும் போதையுடன் நிமிர்ந்து பார்க்க, சீதா கண்கள் முழுவதும் ரௌத்திரத்துடன் அவன் முன்பு பத்ரகாளி ஆக நின்று கொண்டிருந்தாள்.
"நீ எதுக்கு இங்க வந்த? இங்கிருந்து போயிடு நான் அப்புறமா உன் கிட்ட பேசுறேன்" என்றவன் மீண்டும் தனது கையில் இருந்த மதுபாட்டிலை வாயில் சரிக்க,
"எம்புட்டு நாலுடா இந்த பழக்கம்? நீயும் இதுக்கு அடிமையாகி அழிஞ்சு போக போறியா?"என்று கொதிப்புடன் சீதா கேட்க,
"ப்ச்ச் கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா இருக்கவுடு சீத்தா, நான் அழிஞ்சு போனா இப்ப என்ன ஆகப்போகுது? என்னால யாருக்கு என்ன பயன் ?"என்றவனின் பேச்சில் விரக்தி வெதும்பி இருக்க,
கண்களை அழுத்தி மூடி திறந்த சீதா அவன் அருகே முட்டி போட்டு அமர்ந்தாள்.
"என்னா பிரச்சனையா இருந்தாலும் சரி இந்த கருமம் புடிச்ச பழக்கம் உனக்கு வேண்டாம் விட்டுடு பூவு"என்று சீதா பொறுமையை இழுத்துப் பிடித்தவாறு பேச,
" முடியாது... என்னால முடியவே முடியாது இப்போதைக்கு இது மட்டும் தான் எனக்கு மருந்து.. இங்கிருந்து போயிடு" என்று பூபதி சொல்லவும் சீதா மடக்கு கத்தியை விரிக்கவும் சரியாக இருந்தது.
"இப்போ என்ன? என்ன கொல்லப் போறியா சீத்தா?" என்று பூபதி கேட்ட கேள்விக்கு இல்லை என்பது போல் தலையசைத்தவள் அடுத்த நொடி தனது மணிக்கட்டினை தனது கத்தியினால் வெட்டி இருந்தாள்.
கண் முன்னே நடந்ததை கிரகிக்க முடியாமல் திணறிய பூபதி,
சீதா மயங்கி கீழே சரியவும் தான் நடந்தது புரிய
"சீத்தாஆஆஆஆஆஆ" என்று அலறினான்.
தொடரும்...
இந்த ஸ்டோரி ரொம்ப ஷார்ட் ஸ்டோரி தான்... 15 எபிசோட்ஸ் தான்... சோ இத முடிச்சிட்டு தீரா காதல் திமிரா முடிக்கிறேன். 🙏🏻
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro