✨திருடியே மேரி மீ மேரி மீ-3✨
சென்னையில் விஐபிகள் வசிக்கும் மிகப் பிரபலமான பகுதியில் அமைந்திருந்த அந்த மாளிகைக்கு நந்தவனம் என்று பெயரிடப்பட்டிருந்தது.
ஐந்து அடுக்குகளில் அமைக்கப்பட்டு இருந்த அந்த கட்டிடத்தின் வடிவமைப்பு அரண்மனையை ஒத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
அழகு ஆடம்பரம் பழமை என்று எல்லாம் நிறைந்து கட்டி இருந்த வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் பணத்தின் செழிப்பு தெரிந்தது.
அப்படிப்பட்ட அந்த நந்தவனமாளிகையில் விசேஷம் போல, கலைநயமிக்க அலங்காரத்துடன் மேலும் ஜெகஜோதியாக ஜொலித்துக் கொண்டிருந்தது.
வீட்டின் மூத்த தலைமுறை போல் இருந்த தாயம்மாள் ஒவ்வொருவரையும் ஏவி ஏவி வேலை வாங்கிக் கொண்டிருந்தார்.
"சந்தானம் மாலையெல்லாம் வாங்கி வச்சாச்சா?"
அவனோ "இல்லம்மா" என்று தலையை சொரிந்தான்.
"என்ன பொறுப்பில்லாம இருக்கீங்க... நாளைக்கு விநாயகர் பூஜை இருக்குல்ல அதுக்கு மாலை எல்லாம் வேண்டாமா? அந்த பூ கடைக்காரன் கிட்ட அப்பவே போன் பண்ணி சொல்லிட்டேன் நம்ம டிரைவர அனுப்பி வாங்கிட்டு வர சொல்லிடு"என்று தாயம்மாள் கட்டளை விட,"சரிங்க அம்மா இப்பவே போய் சொல்லிடுறேன்" என்று ஓடாத குறையாக சென்றான் அவன்.
அடுத்து சமையல்காரியான மீனாட்சியை அழைத்தவர் மறுநாள் காலை வந்து இறங்க போகும் தங்களது உறவினர்களுக்கு என்னெல்லாம் சமைக்க வேண்டும் என்றும் எப்படி எல்லாம் உபசரிக்க வேண்டும் என்றும் பாடம் எடுக்க ஆரம்பிக்க, அதைக் கடமையே என கேட்டு தலையாட்டிக்கொண்டிருந்த மீனாட்சியை பார்க்க பாவமாக தான் இருந்தது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கூப்பிட்டு கூப்பிட்டு சொன்னதையே மீண்டும் மீண்டும் சொன்னால் அவரும் என்ன செய்வார்.
"அம்மா போதும் போதும் எதுக்கு வயசுக்கு மீறி வேலை பாக்குறீங்க? நல்லா ஓய்வெடுங்க நீங்க.. அது போதும்"என்று சொல்லிக் கொண்டே ஹாலில் இருந்த சோபாவில் வந்து அமர்ந்தார் கோபாலகிருஷ்ணன் தாயம்மாளின் மூத்த மகன்.
"டேய் படவா எனக்கு என்னடா வயசு ஆகிட்டு முன்ன விட இப்பதான் எனக்கு நல்லா எனர்ஜி ஏறி உடம்பு நல்லா இருக்கு.. அதோட என்னோட மூத்த பேரன் கல்யாணம் இத அசத்தெல்லா நடத்த வேண்டாமா?"என்று தாயம்மாள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சொல்லியபோது கோபாலகிருஷ்ணன் சிரித்துக் கொண்டே, "அம்மா உங்க பேரன் இன்னும் ஒரு வாரத்துல கல்யாணத்த வச்சிக்கிட்டு ஊருக்கு இன்னும் வரல அவனுக்கு மொதல்ல போன போட்டு கூப்பிடுங்க அதுக்கப்புறம் மத்த ஏற்பாடு எல்லாம் பண்ணலாம்"என்று கிண்டல் அடிக்க,
"போடா நீ கூப்பிட்டு தான் என் பேரன்ன நான் கூப்பிடுவேனா இன்னைக்கு காலைல எழுந்ததுமே அவனுக்கு தான் போன் பண்ணினேன் நாளைக்கு காலைல இங்க வந்து விடுவேன்னு சொல்லிட்டான்.."
"நான் போன் பண்ணி எடுக்காதவன் நீங்க போன் பண்ணி கூப்பிட்டதும் வர்றேன்னு சொல்லிட்டானா? இங்க வரட்டும் நான் பார்த்துக்கிறேன்" என்று மகனை திட்டிக்கொண்டே மாமியாருக்கும் கணவருக்கும் காபி கொண்டு வந்தார் யசோதா.
"என்னடி என்கிட்ட தானே என் பேரன் பேசுனான் அதுக்கு என்னமோ அவன் தப்பு பண்ண மாதிரி பேசுற?"என்ற தாயம்மாள் மருமகள் யசோதாவிடம் சண்டைக்கு வர,
"ஐயோ அப்படியெல்லாம் இல்ல அத்தை நேத்துல இருந்து அவனுக்கு நான் போன் ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன் ரிங் போகுது எடுக்கவே மாட்டுக்கான் நீங்க வேற அவன் உங்க கிட்ட பேசினான் னு சொன்னீங்க இல்ல அதான் சட்டுனு கோவம் வந்துட்டு தெரியாம அப்படி சொல்லிட்டேன்"என்று யசோதா ஜகா வாங்கினார்.
தாய்க்கும் மனைவிக்கும் இடையில் வாயை திறக்க முடியாமல் காபியில் கவனமாக இருந்த கோபாலகிருஷ்ணன், சென்னையில் மிகப் பெரிய தொழிலதிபர். அவர்களின் ஜேகே குரூப் ஆப் கம்பெனி மாநில அளவில் புகழ்பெற்றது. அதை இப்பொழுது கவனித்துக் கொண்டிருப்பது என்னவோ அவரின் மூத்த மகன் யாதவ் ஜிதேந்திரன் தான். அவன் தற்பொழுது உலக அளவில் தங்களது தொழிலை விரிவுபடுத்த முயன்று கொண்டிருப்பதால் ஒவ்வொரு நாடாக சுற்றிக் கொண்டிருக்கிறான்.
அவனுக்கு தான் இப்பொழுது திருமண வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.
மணப்பெண் வேறு யாரும் அல்ல அவர்களின் நெருங்கிய பிசினஸ் பார்ட்னர் இந்திர ராஜனின் ஒரே மகள் சொப்னா அமெரிக்காவில் படிப்பை முடித்துவிட்டு அவள் தாயகத்திற்கு வந்து நான்கு மாதங்கள் தான் ஆயிற்று. ஆனாலும் இது அவர்களின் சிறுவயதிலேயே முடிவான திருமணம் என்பதால் தள்ளி போடாமல் சீக்கிரம் வைக்க முடிவு செய்திருந்தனர் இரு வீட்டினரும்..
"டாடி நான் டுடே காலேஜுக்கு லீவு போடவா? அண்ணாக்கு நெக்ஸ்ட் வீக் மேரேஜ் தானே நான் நெறைய கொஞ்சம் ஷாப்பிங் போக வேண்டி இருக்கு நாளைக்கு கெஸ்ட் எல்லாம் வேற வராங்க அதுக்கப்புறம் என்னால எங்கேயும் போக முடியாது" என்று செல்லம் கொஞ்சுவாறே தந்தையின் அருகே வந்து அமர்ந்தாள் அனன்யா நந்தவனத்தின் இளவரசி கோபாலகிருஷ்ணனின் இளைய மகள்.
தாயம்மாள் கோபத்துடன்," வீட்டு பொண்ணுங்க கண்ட இடத்துல எல்லாம் சுத்திட்டு இருக்க கூடாது எந்த பொருள் வேணாலும் என்கிட்ட சொல்லு நான் யாரையாவது அனுப்பி வாங்கிட்டு வர சொல்றேன்"
"பாட்டி ப்ளீஸ் நான் தான் போய் எனக்கு பிடிச்சத வாங்கணும். மத்தவங்க வாங்கிட்டு வந்தா எனக்கு பிடிக்காது. என் டேஸ்டுக்கு ஏத்த மாதிரி நானே ஷாப்பிங் பண்ணிக்கிறேனே?"
"முடியவே முடியாது நீ காலேஜுக்கு கட் அடிக்க தான் ஷாப்பிங் போக பிளான் பண்றேன்னு எனக்கு நல்லா தெரியும்.. மரியாதையா காலேஜுக்கு கிளம்பி போ.."என்று யமுனா தன் குறைக்கு மகளை திட்ட ஆரம்பிக்க,
தாயம்மாள் மருமகளை முறைத்துக் கொண்டே, "ஒரு பிரச்சனையும் இல்ல நீ போயிட்டு வாடா ஷாப்பிங் கூட நம்ம சந்தானம் மகளையும் கூட்டிட்டு போ டிரைவரை அழைச்சுக்கிட்டு பத்திரமா போயிட்டு பத்திரமா வரணும்"என்று அனுமதி கொடுக்க,
"தேங்க்யூ சோ மச் பாட்டி..யு ஆர் தி பெஸ்ட் இன் தி வேர்ல்ட்" என்று தாயம்மாளை அணைத்து கொண்ட அனன்யா, தாய் யமுனாவை பார்த்து கண்ணடிக்க அவரும் கட்டைவிரலை உயர்த்தி காட்டி சக்சஸ் என்பது போல் செய்தியை செய்தார்.
எப்பொழுதுமே தாயம்மாள் மருமகள் யமுனாவிற்கு எதிராகவே எல்லா விஷயத்தையும் செய்வதால், தாய் மகள் இருவரும் அதை அடிக்கடி உபயோகித்துக் கொள்வார்கள்.
கோபாலகிருஷ்ணன் இதை கவனித்தாலும் கண்டும் காணாமலும் விட்டுவிடுவார். இன்றும் மனைவி மற்றும் மகளின் செய்கையை கவனித்தாலும் அதை கண்டு கொள்ளாமல், "அனு குட்டி அண்ணா நாளைக்கு காலைல வர்றதா சொல்லி இருக்கான் அதனால உன் திங்ஸ் ஏதாவது அவனோட ரூமில் இருந்தா அதை இன்னைக்கு நைட்டே கிளியர் பண்ணிடு.. இல்லனா நாளைக்கு அந்த பொருள் அங்க இருக்காது உடைஞ்சிடும் இல்ல காணாமல் போயிடும் "என்று எச்சரித்தார்.
எப்பொழுதுமே தங்கள் பொருளை விட உடன் பிறந்தவர்கள் பொருள் என்றால் அனைவருக்கும் ஒரு படி மேலாகவே ஆர்வமும் பிடித்தமும் அதிகம் தான். அது போல தான் அனன்யாவிற்கு அவளின் அண்ணனின் அறை என்றால் மிகவும் பிடிக்கும். பார்த்து பார்த்து செதுக்கியது போல் இருக்கும் அந்த அறை அவளின் அறையை விட விசாலமானது அழகானது அதுவும் அவனது லைப்ரரி அமைப்புடன் இருக்கும் ஸ்டடி ரூம் அவளுக்கு ரொம்பவே பிடிக்கும். அவனின் விருப்பப்படி அறையிலேயே இருக்கும் ஃபிஷ் டேங்க், சுவற்றில் மாட்ட பட்டிருந்த விலை உயர்ந்த ஓவியங்கள் ஷோகேஸில் வைக்கப்பட்டிருந்த கலைநயமிக்க பொருட்கள் என்று எல்லாமே ரசித்து ரசித்து யாதவ் ஜிதேந்திரனால் உருவாக்கப்பட்டவை..
"அண்ணா நீ கலா ரசிகன்" என்று வாய் விட்டு பாராட்டினாலும் தங்கையை கூட தனது அறைக்குள்ளே ரொம்ப நேரம் இருக்க அனுமதிக்க மாட்டான் அந்த கல்நெஞ்சக்காரன்.
அவன் எப்பொழுதாவது ஊருக்கு செல்லும் சமயத்தில் அவனது அறையை தனது ஆசைத் தீர உபயோகித்துக் கொள்வாள் அனன்யா.
தாயம்மாள் முதலில் அதை எதிர்த்தாலும் அனன்யா மிகவும் கெஞ்சி கேட்டதால் பாவமே என்று அனுமதித்திருந்தார்.
இதோ நாளை அவளின் அண்ணன் வந்துவிட்டால் அவ்வளவுதான் இனி அந்த அறை அவளுக்கு கிடைக்காது.
"ம்ம் சரி டாடி இன்னைக்கு எல்லாத்தையும் அண்ணன் ரூம்ல இருந்து கிளியர் பண்ணி பழைய மாதிரி ரூம்ம செட் பண்ணிடுறேன்"என்று அனன்யா சோகமே உருவாக சொல்ல,
"அனுகுட்டி உனக்கு வேணும்னா அதே செட்டப்ல உன்னோட ரூம மாத்திக்கலாம்ல்ல" என்று யோசனை சொன்னார் கோபாலகிருஷ்ணன்.
"நோ டாடி எனக்கும் இந்த யோசனை வந்துச்சு தான் இருந்தாலும் என்னோட ரூம் லென்த்துக்கு அவ்வளவு பொருளை எல்லாம் செட் பண்ண முடியாது"என்று சோகமாக சொல்லியபோது அவருக்கும் கொஞ்சம் பாவமாகத்தான் இருந்தது.
"சரி சரி இப்போ என்ன உனக்கு அண்ணன் ரூம் மாதிரி செட்டப்ல ஒரு ரூம் வேணும் அவ்வளவு தானே? அதுக்கு நான் ஏற்பாடு பண்றேன்"என்று தாயம்மாள் வாக்களிக்க,
"அவ்வ் சோ ஸ்வீட் பாட்டி நீங்க ...ஐ லவ் யூ சோ மச்"என்று தாயம்மாவை இறுக்கமாக அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள் அனன்யா.
"சரி சரி போதும் போதும் போ போய் ஷாப்பிங் கிளம்பற வழிய பாரு" பேத்தியின் கொஞ்சலில் தன்னை மீறிய புன்னகையுடன் தாயம்மாள் சொல்ல,
"ஓகே பாட்டி "என்று சிட்டாக பறந்து இருந்தாள் அனு.
யமுனா செல்லும் மகளை பார்த்துக்கொண்டே,"நல்லா வளர்ந்துட்டால்ல.. இப்பதான் எல் கே ஜி படிச்ச மாதிரி இருந்துச்சு அதுக்குள்ள காலேஜ் பர்ஸ்ட் இயர் படிக்கிறா.. காலம் எவ்வளவு ஃபாஸ்ட்டா ஓடுது"என்று வாய் விட்டு சொல்லிவிட்டு பெருமூச்சு விட,
"ஏய் புள்ளைய கண்ணு வைக்காத டி போய் காலைல சமையல் வேலை எல்லாம் முடிஞ்சிட்டானு பாரு போ"என்று மருமகளை அங்கிருந்து துரத்தினார் தாயம்மாள்.
அதேநேரம் தேத்துவார் குப்பத்தில், தனது குடிசையில் சமைத்துக் கொண்டிருந்தாள் சீதா. சோறு வடித்து பருப்பு குழம்பு வெண்டைக்காய் கூட்டுடன் அப்பளத்தை பொரித்து காற்று போகாத அளவு தூக்குவாளியில் போட்டு வைத்தாள். அவர்கள் இருப்பது கடற்கரை பகுதி அங்கு மீன்பிடித் தொழில் அதிகம் என்பதால் பெரும்பாலும் அவர்கள் வீட்டில் மீன் குழம்பு தான்... என்றாவது ஒரு நாள் தான் வேறு ஏதாவது குழம்பு வைப்பாள்.
இன்றும் தனக்கு தேவையான அளவு சாப்பிட்டுவிட்டு தந்தைக்கும் வைத்தவள்,
பின்பு நண்பர்களை பார்க்க செல்ல தயாராக, அப்பொழுது தான் வீட்டுக்கு வந்த முத்துசாமி மகளை பார்த்ததும், "உன்ன பார்த்த அப்புறம் தான் ஞாபம் வருது. உன்ன நம்ம தர்மாஸ்பத்திரியில பார்த்ததா என் தோஸ்து மணிகண்டன் ஒரு வாரம் முன்ன சொன்னானே சொகமா இருக்க தானே?" என்று கேட்டவாறு உள்ளே வந்தவர் தான் கேட்ட கேள்விக்கு பதிலை எதிர்பார்க்காமல், "ரொம்ப பசியா இருக்கு புள்ள நாஸ்தா ரெடி பண்ணிட்டியா?"என்று அடுத்த கேள்விக்கு தாவ,
"எல்லாம் ரெடியா இருக்கு ஒத்தையில ஒக்காந்து நல்லா கொட்டிக்கோ "என்ற சீதா வேகமாக வெளியே சென்று விட்டாள்.
பின்னே ஒரு வாரம் முன்பாகவே, இதே கேள்வியை கேட்டிருந்தால் கூட தந்தைக்கு தன் மேல் பாசம் அதிகம் என்று நினைத்திருப்பாளா என்னவோ?! ஆனால் கேட்டதே தாமதமாக... அதுவும் கேட்ட கேள்விக்கு அவள் பதில் சொல்லும் முன்னே அடுத்த கேள்விக்கு தாவினால் அவளும் என்ன தான் நினைப்பாள்? ரொம்ப பாசம் தான் என்று மனதிற்குள் தன் நைனாவை கரித்துக் கொட்டினாள் அவள்.
எப்பொழுதும் தனது குழுவினரை சந்திக்கும் அந்த மீன் பஜார் பகுதிக்கு அவள் வந்த பொழுது அங்கு நால்வர் மட்டுமே இருந்தனர்.
"மத்தவங்க எல்லாம் மெர்சல் ஆகிட்டாங்க சீட்டு ..நம்ம பிக்ஸ் பண்ண அந்த ஸ்பாட் ரொம்ப பெரிய இடம் வேற அதனால எல்லாரும் ஜகா வாங்கிட்டானுங்க" என்று கருப்பு பாகுபலி ஆன பூபதி பாவமாக சொல்ல,
"ஒரு ப்ராப்ளமும் இல்ல.. சொல்லப்போனா நமக்கு லாபம் தான். பங்கு எல்லாருக்கும் கூட வருமே.." என்று அவனை சமாதானப்படுத்தியவள், மீதம் இருந்த மூவரிடமும் "உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்ல தானே இல்ல அப்பாடிகா நீங்களும் அல்வா கொடுத்திருவீங்களா? எதா இருந்தாலும் இப்பவே சாலிடா சொல்லிடுங்க.."என்று கேட்டாள்.
"எக்கோ எப்பவுமே உன் மேல எனக்கு உன்ன விட நம்பிக்கை ரொம்ப ஜாஸ்தி நீ ஒரு விஷயத்தை நம்பி இந்த ப்ராஜெக்ட் குள்ள இறங்குறேனா கண்டிப்பா இந்த பிரச்சனையும் எங்களுக்கு வர விட மாட்ட"என்று குட்டி புலி சீதா மீது நம்பிக்கையுடன் பேச,
குட்டி யானை ரவியும் அவரின் தங்கை திருட்டு சாவி கிரிஜாவும் இருவருமே அதேபோல தங்கள் பின் வாங்க மாட்டோம் என்று சொல்லிவிட,
ஒரு பெருமூச்சுடன் சீதா, "நம்ம ப்ராஜெக்ட் ஆரம்பிக்க இன்னும் கம்மியான நாளு தான் இருக்கு அதுக்குள்ள நம்ம எப்படியாவது..." என்று தான் இதுவரை சேகரித்த தகவல்களை சொன்னாள்.
அவர்களின் திட்டம் நிறைவேறுமா?
தொடரும்...
கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் நான் ❤️😊🙏🏻
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro