✨திருடியே! மேரி மீ மேரி மீ-11✨
அத்தியாயம் 11:
யாதவ் வெகு நாள் கழித்து அன்று நல்ல உறக்கத்தில் இருந்தான். பொதுவாக அவன் ஒரு நாளில் மிஞ்சி போனால் மூன்று மணி நேரங்கள் தூங்குவதே அரிது தான்.. அவனுக்கு க்ரோனிக் இன்சோம்னியா(chronic insomnia) என்ற மன அழுத்தம் காரணமாக உண்டாகும் தூக்கமின்மை பிரச்சனை இருந்தது.
அதனால் அவனால் இரவில் சரியாக உறங்க முடியாது. அப்படியே தூங்கினாலும் மூன்று மணி நேரத்திற்கு அதிகமாக தூங்க முடியாது. அதற்காக ட்ரீட்மென்ட் எடுத்து மாத்திரை மருந்துகளை உட்கொண்டாலும் அது ஓரிரு வாரங்களுக்கு மட்டுமே அதன் பலனைத் தந்தது. அதனால்அந்த முயற்சியை கைவிட்டவன், நாள் போக்கில் தனது தூக்கமின்மை சார்ந்த பிரச்சனையை தனது வேலையில் கவனத்தை செலுத்தி ஒதுக்கி விட்டான்.
ஆனால் நேற்று ஏனோ அதிசயமாக அவனுக்கு நல்ல தூக்கம் வர, இரவு ஒரு மணிக்கு போல் தூங்க ஆரம்பித்தவன், இதோ ஆறு மணி வரையும் தூங்கி கொண்டிருக்கிறான். அவனுக்கு பெரும்பாலும் கனவுகள் என்பது வராது. அவன் தூங்குவதே மிஞ்சிப் போனால் இரண்டு மணி நேரங்களோ மூன்று மணி நேரங்களோ.. இதில் எங்கிருந்து கனவுகள் வர... ஆனால் இன்று அவனுக்கு ஒரு வித்தியாசமான கனவு வர அதில் ஊஞ்சலில் ஆடியவாறு ஒரு இளம் பெண் இருக்க,
அந்த ஊஞ்சல் கயிறு கட்டி இருந்த மரத்தின் கிளைகளின் மேலேயே வேடன் போன்ற தோற்றம் கொண்ட ஒருவன் கிளைகளுக்கு நடுவே முகத்தை மறைத்துக் கொண்டு கீழே ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்த அந்த பெண்ணை ரசனையாக பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனது கண்களில் அவ்வளவு ரசனை! எதுவரை என்றால்..அந்த பெண் காதில் போட்டு இருந்த பெரிய ஜிமிக்கி, அவள் உதட்டிற்கு நுனியில் இருந்த மச்சம் .. ஊஞ்சலை உந்தி விளையாடும் பொழுது அவள் காலோடு கதை பேசிய கொலுசு,கையில் சிணுங்கிய வளையல்கள் தலையில் சூடி இருந்த கனகாம்பரம் பூ, அவள் நெற்றியில் அரை வட்ட நிலவாக ஜொலித்த பொட்டு முதற்கொண்டு அவன் ரசிக்க, ஏனோ கனவில் பார்த்த பெண்ணின் முகம் மட்டும் யாதவ் கண்களுக்கு ரொம்பவே மங்கலாக தான் தெரிந்தது...
இப்பொழுது அப்பெண்ணை அணு அணுவாக ரசித்துக் கொண்டிருந்த அந்த வேடன் மரத்திலிருந்து கீழே குதிக்க, அவளோ என்னவோ ஏதோ வென்று நினைத்து பயத்தில் ஊஞ்சலில் இருந்து கீழே குதித்து இருந்தாள்.
ஆனால் அந்த வேடன் உருவில் இருந்தவன், கீழே விழுந்த வேகத்தில் மயக்கமாக இருப்பது போல் நடிக்க, முதலில் பயந்த அப்பெண்ணோ, அவன் அருகே சென்று அவனை எழுப்ப முயன்று தோற்று அவனின் கன்னத்தைக் கிள்ள, அவ்வளவு நேரம் நடித்துக் கொண்டிருந்தவன் அவளின் கைகளைப் பிடித்து தன்னருகே இழுத்திருந்தான்.
ஆனால் அந்த அழகான பெண்ணோ,"டேய் பேமானி விடுடா என்னய.. அட்டு வேல பாக்குற நீ.. இவ்ளோ நேரம் நடிச்சுகின்னு இருந்தியா? மவனே என்ன இப்ப விடல பேஜாராயிடுவ.."என்று அவனின் நெஞ்சில் தன் கைகளால் குத்த ,
அதனால் ஏற்பட்ட வலியினால் யாதவ் தூக்கம் கலைந்து கண் விழித்திருந்தான்.
சீதா தான் அவன் மீது அமர்ந்து அவன் நெஞ்சில் குத்திக் கொண்டிருந்தாள்.
"ஸ்ஆஆ ஹேய் ஸ்டாப் இட்... என்ன பண்ற நீ? நீ எப்படி என்னோட ரூம்குள்ள வந்த? எதுக்கு என்ன போட்டு அடிச்சிட்டு இருக்க.. ஆர் யூ அவுட் ஆஃப் யுவர் மைண்ட்"என்று யாதவ் கோபத்தில் கத்த,
"ஃபர்ஸ்டு கண்ண நல்லா தொறந்து பாரு சாரே..நீ என்னைய புடிச்சு வச்சிக்கின்னு என்ன சொல்றியா?"
யாதவ் அப்பொழுதுதான் கவனித்தான் அவன் தான் அவளை இழுத்து பிடித்திருந்தான்.
எல்லாம் அவன் கண்ட கனவின் விளைவு என்று புரிய, தனது இரும்பு பிடியில் இருந்த அவளை விடுவித்தவன்,
"நீ என் ரூம்ல என்ன பண்ற?"என்று முறைத்துக் கொண்டே கேட்க,
"உன்னான்ட ரூம்ல வழுக்கு பார இருக்குன்னு கேள்விப்பட்டேன் சாரே.. அதான் வலுக்குதானு எட்டி பாத்துன்னு போலாம்னு வந்தேன்.."
"என்ன கிண்டலா?"என்று யாதவ் கேட்க,
" இல்ல சுண்டலு" என்று சீதா சொல்ல,
"அடுத்த பத்தாயிரம் ரூபா... இழக்க தயார் ஆயிட்ட போலயே? ஸ்வீட் ஹார்ட்"என்று யாதவ் (வில்லத்தனமாக) சிரிக்க,
'ச்சே.. ஆனா ஊனா நமக்கு கொடுக்க வேண்டிய டப்ப காரணம் காட்டி பயமுறுத்துட்டே இருக்கானே இந்த ரோபோட் மண்டையன்..'என்று மனதிற்குள் நினைத்து கடுப்பான சீதா,
"பாட்டி உன்னான்ட கொடுக்க சொல்லி டீ குடுத்து விட்டாங்க... அத்த குடுக்க தான் உள்ளாற வந்தேன்.. வந்து பார்த்தா தூக்கத்துல பினாத்திட்டு இருந்த என்னன்னு பாக்க பக்கத்துல வந்தா என்ன உம்மேல இழுத்து போட்டுனு..இப்ப என்னையவே பிடிச்சு.. எனக்கு தர வேண்டிய டப்பு வச்சு மிரட்டுற?" என்று மூச்சு விடாமல் பேசியவள்,
பின் பாவமான குரலில்,
"சாரே எனக்கும் மனசு இருக்கு அதுல குட்டியா ஹார்டினு இருக்கு அந்நாண்ட கொஞ்சம் பீலிங்ஷு இருகீது.. அத்த ஹர்ட்டு பண்ணாத" என்று அவள் உணர்ச்சி வசமாக டயலாக் பேச,
சீதா அத்தனை உணர்ச்சிகரமாக பேசியதும், யாதவ் கூட 'தன்மேல் தான் தவறோ?' என்று நினைத்தவன்,
"சரி சரி விடு என் மேல தான் தப்பு.. தயவு பண்ணி மூச்சு விடாம பேசாத போ.. இந்த தடவ நான் சொன்ன மாதிரி பத்தாயிரம் ரூபா டிடெக்ட் பண்ண மாட்டேன் போதுமா?"என்று சொல்ல,
"போதும் போதும் அத்துவே போதும்" என்ற சீதா, "பாட்டி குடுத்த டீய குடி"என்று டேபிளின் மேல் இருந்த டீ கப்பை எடுத்து அவனிடம் கொடுக்க,"நான் இன்னும் ஃபிரஷ் பண்ணல அதோட எனக்கு டீ சுட சுட இருந்தா தான் பிடிக்கும் இது லேசா ஆறிப்போயிருக்கு.. சூடு பண்ணி எடுத்துட்டு வரியா?"
" என்ன சாரே.. உட்டா உன்னாண்ட வீட்டுக்கு.. என்ன முழு நேர வேலைக்காரியா ஆகிடுவ போல.. சொல்லப்போனால் இது என்னான்ட வேலையே இல்ல.. பாட்டி கொடுக்க சொன்னாங்கன்னு கொண்டு வந்தேன்.. உன்கிட்ட குடுத்துட்டேன் அம்புட்டு தான்.. உனக்கு வேணும்னா நீ போய் சூடு பண்ணி கேளு" என்று மீண்டும் முருங்கை மரம் ஏறிய சீதாவை,
யாதவ் முறைக்கவும்,
"சரி சரி போறேன் போறேன்.." என்றவள்,
'ஆனா ஊனா மொறச்சே பயமுறுத்துறான்டா ரோபோட்டு தல' என்று புலம்பி கொண்டே கீழே செல்ல திரும்பியவள்,
பின் ஞாபகம் வந்தவளாக மீண்டும் அவனிடம் வந்து,"கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு நான் ஒரு குட்டி தப்பு பண்ட்டேன்.. மனசுல வச்சுக்காத சாரே" என்று விட்டு ஓடி விட்டாள்.
அவள் என்ன சொல்கிறாள் என்று புரியாமல் அவள் பின்னையே கீழே வந்த யாதவ்வை அவள் கவனிக்கவில்லை.
இங்கு மீண்டும் சமையலறைக்கு வந்த சீதா, தன் கையில் கொண்டு வந்திருந்த டீயை தானே குடித்துவிட்டு, 'வெதுவெதுன்னு சூடா தானே இருக்கு.. இதவிட சூடு வேணுமா?'என்று யோசித்தவள், இன்னொரு கப்பில் அடுப்பில் சூடாக இருந்த டீயை ஊற்றி விட்டு, அதையும் சூடாக இருக்கிறதா? என்று ஒரு வாய் குடித்து பார்த்தவள், சரியாக இருந்ததும், சரி இதையே அவனிடம் கொடுப்போம் என்று நினைக்க
தோட்டத்து பக்கம் ஒரே சிரிப்பு சத்தமாக கேட்டது.
சமையலறையின் ஜன்னல் பக்கம் இருந்து பார்த்தால் தோட்டம் தெரியும்..
சீதா சமையலறையின் ஜன்னல் பக்கம் எட்டி பார்க்க, அங்கு யாதவ் நின்று கொண்டிருந்தான். கூடவே அவனின் தந்தை கோபாலகிருஷ்ணன் தாய் யசோதா, அவனின் தங்கை அனன்யா, பிரகாஷ் என்று அனைவரும் இருக்க கலாட்டாவாக பேசிக் கொண்டிருந்தது போல் இருந்தது.
எதுக்கு எல்லாம் விழுந்து விழுந்து சிரிச்சிட்டு கிடக்கு என்று புரியாமல் பார்த்தவள், அப்பொழுது தான் கவனித்தால் யாதவ் அவள் முகத்தில் செய்து விட்டு வந்த வேலையை கழுவாமல் வெளியே வந்திருப்பதை,
'அடேய் மொகத்த கழுவாம எதுக்குடா கீழ வந்து தொலைஞ்ச..'என்று சீதா அவசரமாக அங்கே செல்ல,
இங்கு தோட்டத்திலோ,
"யசோ உன் பையன் எப்படி இருக்கான்னு பாரேன்? இத பாக்க தான் உன்ன அவசரமா கூப்பிட்டேன்.."என்று கோபாலகிருஷ்ணன் அப்பொழுதுதான் அவரின் கூப்பிட்ட குரல் கேட்டு அங்கே வந்திருந்த தன் மனைவியிடம் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் வெடித்த சிரிப்புடன் தன் அருகில் புரியாமல் விழித்துக் கொண்டிருந்த மகனை சுட்டிக்காட்ட ,
யசோதாவும், "யாது கண்ணா சின்ன வயசுல கூட நீ இவ்ளோ அம்சமா இல்லடா இப்பதான் அழகா இருக்க.. என் கண்ணே பட்டுடும் போல"என்று தன் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு சொல்ல,
யாதவ் அங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல், "எதுக்கு என்ன இப்போ நிக்க வச்சு.. ஏதோ மெண்டல் மாதிரி கக்க புக்கானு பேசி சிரிச்சுட்டு இருக்கீங்க.."என்று எரிச்சலாக கேட்டான்.
அப்போது அங்கு வந்திருந்த அனன்யா பிரகாஷ் இருவரும், யாதவ்வின் முகத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்க,
தன் முகத்தில் தான் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று புரிந்து கொண்டவன், தன் கைகளால் கன்னத்தை உரசி பார்க்க, ஏதோ கருப்பு கருப்பாக ஒட்டியது.
அது என்னவென்று புரியாமல் யோசித்த யாதவ் பிரகாஷ் கையில் இருந்த மொபைலை வாங்கி ஃப்ரன்ட் கேமராவை ஆன் செய்து பார்க்க,
அம்மன் படத்தில் வரும் சண்டா போல் நெற்றியில் கருப்பு நிறத்தில் பெரிய வட்ட வடிவ பொட்டு அதேபோல் கன்னத்திலும் தாடையிலும் கரும்புள்ளிச் செம்புலி குத்தியது போல் ஆங்காங்கே புள்ளி வைத்திருக்க... அவன் முகமே அலங்கோலமாய் காட்சியளித்தது.
யாதவ் மற்ற விடயங்களில் எப்படியோ ஆனால் சிறுவயதில் இருந்து தன்னை எப்பொழுதும் அழகாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ள ஆசைப்படுவான்.
அவனுக்குள் தன் அழகைப் பற்றி சிறு பெருமை கூட இருந்தது.
ஆனால் இன்று தன் அழகான முகத்திற்கு நேர்ந்த கொடூரத்தை பார்த்தவனுக்கு இது யார் செய்த வேலை என்று புரிய
படு பயங்கர கோபத்தில் "சீத்தாஆஆஆஆஆஆஆஆ"என்று அருகில் இருந்தவர்களின் காது சவ்வு கிழிய கத்தவும், சமையலறையில் இருந்து சீதா அங்கு ஓடி வரவும் சரியாக இருந்தது.
ஓடி வந்த வேகத்தில் மூச்சிரைக்க அவன் முன் நின்ற சீதா, நெஞ்சை பிடித்துக் கொண்டு
"ஏனுங்க மாமா கூப்பிட்டீங்களா?" என்று பயம் போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.
அவள் அப்படி கேட்ட பாணியில் சுற்றி இருந்தவர்களின் சிரிப்பு இன்னும் அதிகமானது.
யாதவ் கூட சொல்ல வந்த விஷயத்தை மறந்து
"மாமாவா?"என்று புரியாமல் விழிக்க,"பாட்டி தான் கூப்ட்ட சொன்னாங்க.. உங்கிளுக்கு இஷ்டம் இல்லிங்கனா கூப்டலிங்க மாமா" என்று சீதா முன்னெச்சரிக்கையாக சொல்லவும்,
"டேய் மருமக கரெக்டா தானே கூப்பிடுது" என்று கோபாலகிருஷ்ணன் அவளுக்கு பரிந்து பேசவும், யமுனாவும் அதற்கு ஆமாம் சாமி போட, சீதா உதடுகளை மடித்து சிரிப்பை கட்டுப்படுத்தினாள்.
"ஆஆ வாட் எவர் எப்டியோ கூப்பிட்டுக்கோ.. நொவ் இட்ஸ் நாட் எ ப்ராப்ளம் இப்ப இதுக்கு பதில் சொல்லு?"
என்று தன் முகத்தை அவளிடம் சுட்டிக்காட்டி,
"என் ஃபேஸ்ஸ இப்படி ஆக்குனது நீதான?"என்று கண்களில் நெருப்புடன் அவன் கேட்க,
சீதா அவனைப் பாவமாக பார்த்து,"இல்லிங்க மாமா தூங்கும்போது நீங்க அழகா... அம்சமா ... ரெக்க மட்டும் இல்லாத ஆம்பள ஏஞ்சலுமாரி இருந்தீங்களா... என்னாண்ட கண்ணே பட்டுனு போல இருந்துச்சு.. அதான் திருஷ்டி பொட்டு வச்சுவுட்டேன்"
"எம்மா உங்க ஊர்ல திருஷ்டி பொட்டு ஃபேஸ் ஃபுல்லா தான் வச்சு விடுவாய்ங்களா?"என்று கேட்டது... அவ்வளவு நேரம் யாதவ்வின் முகத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த பிரகாஷ் தான்.
"பின்ன கொஞ்சம் அழகா இருக்குனா ஒத்த பொட்டு.. அழகே உருவமா இருந்தா.. நான் என்னத்த பண்ணட்டும்.. அதான் கஞ்சத்தனம் பாக்காம நெறைய வச்சுபுட்டேன்"என்று சீதா சொல்லவும்,
"என் ரூம்க்கு வரும்போதே பிளாக் கலர் மைய தூக்கிட்டு தான் வந்தியா? அப்போ முன்னாடியே இப்படி செய்யணும்னு பிளான்ல தான் இருந்திருக்க நீ?"என்று கேட்ட யாதவ்வை முறைத்த சீதா,
"உங்களாண்ட ரூம்ல இருந்த கண்ணாடி முன்ன இருந்த டேபிள்ல தான் இது இருந்துச்சு.. நான் ஒன்னும் கொண்டு வரல"என்றாள் வெடுக்கென்று.
"வாட் என் ரூம்லயா? நானா கண்ணுக்கு மை போட்டுட்டு இருக்கேன் ?"என்று யாதவ் கத்த,
"யாருக்கு தெரியும் போட்டாலும் போடுவடா..."என்று வாய்க்குள்ளேயே முனங்கினாள் சீதா.
"எதுவா இருந்தாலும் சத்தமா சொல்லு... வாய்க்குள்ளேயே முணங்காத..."என்று யாதவ் கோபமாக பேசிக் கொண்டிருக்க குறுக்கே வந்தாள் அனன்யா..
"ஆஆ அண்ணா நான் சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே... அந்த ஐடெக் காஜல் என்னோடது.. நீங்க ஃபிஸ்னஸ் ட்ரிப் போயிருந்தப்போ கொஞ்ச நாள் வரும் உங்க ரூம்ல தான் ஸ்டே பண்ணேன்.. அப்போ மிஸ் ஆயிடுச்சு"என்றாள் பாவமாக.
"பாத்தீங்களா மாமாய் என்ன போய் அனாவசியமா சந்தேகப்பட்டுட்டீங்களே.. அழகா இருந்தீங்கன்னு திருஷ்டி பொட்டு வச்சது ஒரு குத்தமா? இந்தா திட்டு திட்டுறீங்களே.. நானே பாவம்" என்று சொல்லி சீதா போலியாக கண்ணை கசக்க,
யாதவ் தலையில் கை வைத்தான். அவனால் சுத்தமாக முடியவில்லை. அவனை யாரும் இந்த அளவுக்கு டென்ஷன் ஆக்கியதில்லை அவன் தான் தன் எதிரில் இருப்பவர்களை டென்ஷன் ஆக்குவான்.
மகனின் நிலையை பார்த்து கோபாலகிருஷ்ணனுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. எத்தனை நாள் தன்னை பாடா படுத்தியிருக்கிறான்... கொஞ்சம் அவனும் அனுபவிக்கட்டுமே என்றே நினைத்தார்.
மற்றவர்களும் அவன் நிலையை நினைத்து சிரிப்புடன் நின்றனர். அப்போது வசுந்தராவுடன் அங்கே வந்த தாயம்மாள் அவர்கள் கூட்டமாக இருப்பதை பார்த்து, என்ன பிரச்சனை? என்று கேட்க, அனன்யா அவருக்கு நடந்த எல்லாவற்றையும் கூறினாள்.
"பாவம் என் பேரன்.. யாரு அவன கேலி பண்ணாதீங்க.. அவன் குழந்தை மாதிரி"என்று தாயம்மாள் பேரனுக்கு பரிந்து பேச,'ஆஹா ரோபோவுக்கு சப்போர்ட் பண்ண ஆள் வந்துட்டு.. எஸ்கேப் ஆயிடு சீத்து..'என்று மனதிற்குள் நினைத்த சீதா மெதுவாக பின்வாங்க,
அவள் பின்னே செல்வதைக் கவனித்த தாயம்மாள்"அம்மாடி சீதா எங்க போற?"என்று கேட்டு விட,
'பாத்துட்டாங்களா?'
"ஹிஹிஹி... அது அவரு டீ சூடு பண்ணி கேட்டாரு அதான் சூடு பண்ண போறேன் பாட்டி.."என்று சீதா சமாளிக்க,
அவளைப் பார்த்த முறைத்த யாதவ்"பாட்டி இவதான் என் முகத்தில் கரிய பூசுனது.. என்னன்னு கேளுங்க"என்று மாட்டி விட,"இங்க பாருமா உன் வீட்ல எப்டி இருந்தியோ... நீங்க அப்படி எல்லாம் இருக்க கூடாது.. மரியாதையா போய் என் பேரன் முகத்தை கிளீனா தொடச்சி விடு.."என்று சீதாவிடம் கட்டளையாக சொல்லிவிட,
யாதவ் வெற்றி சிரிப்பு சிரித்தான்.
ஆனால் தாயம்மாள் காரணமாகத்தான் அதை சொன்னார் என்பதை அவன் கவனிக்க மறக்கவில்லை.
'ச்ச... இவ்ளோ நேரம் நல்லா கலாய்ச்சிட்டு இருந்தேன் எல்லாம் வேஸ்ட்டு.. நான்தான் அவுட்டு போ'என்று எரிச்சலான சீதா
வேறு வழி இல்லாமல் அவர் சொன்னது போலையே உர்ரென்ற முகத்துடன் யாதவ்வின் முகத்தை துடைத்து விட... அதை பார்த்த மற்றவர்களுக்கு ஏனோ நிம்மதியாக இருந்தது.
யாதவ் ஊசி போடுவதற்கு கூட பெண் மருத்துவரையோ செவிலியரையோ அனுமதிக்க மாட்டான். அந்த அளவிற்கு அவனுக்கு பெண்ணின் தொடுகை எரிச்சலை விளைவிக்கும்.
வளர் இளம் பருவத்தின் ஆரம்பத்தில் தான் யாதவ்விற்கு இந்த பிரச்சனை தொடங்கியது. அவன் அம்மாவையோ தங்கையோ தவிர மற்ற பெண்கள் அனைவரிடமிருந்தும் அவன் பத்தடி தள்ளி நிற்க ஆரம்பித்தான்.
இருபாலரும் படிக்கும் பள்ளியில் இருந்து ஆண்கள் மட்டும் பள்ளிக்கு மாறினான். இதற்காக மருத்துவரை அணுகும் பொழுது, அவனுக்கு
"கைனோஃபோபியா"என்னும் பெண்களை வெறுக்கும் வியாதி இருப்பதாக சொல்லி சிகிச்சை அளிக்க முயன்றார்கள் ஆனால் யாதவ்வின் தாத்தா வீர நரசிம்மன் அதை முற்றிலும் மறுத்தவர் அவனை தன்னுடனே தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு அழைத்து சென்று விட்டார். அதன் பிறகு சில வருடங்கள் அங்கேயே வளர்ந்தவன் மீண்டும் வரும்பொழுதும் அதே நிலையில் தான் இருந்தான்.
கோபாலகிருஷ்ணனுக்கு அவனை நினைத்து பெரிய வருத்தம். பிஸ்னஸில் இறங்கிய பின் மகன் கொடி கட்டி பறந்தாலும் பெண்கள் என்றாலே ஒரு மைல் தூரம் தள்ளி நிற்பவனை நினைத்து வருத்தமடாமல் இருந்தால்தான் ஆச்சரியம்... அத்தோடு அவருக்கு இன்னொரு சந்தேகமும் இருந்தது. ஒருவேளை தன் மகன் ஓரினச்சேர்க்கையாளராக இருப்பானோ என்று... சரி எப்படி இருந்தாலும் அவன் தன் மகனே என்று நினைத்தவர் அதை வெளிப்படையாக ஒரு நாள் கேட்கவும் செய்துவிட்டார்.
அதற்கு யாதவ் அவரை மேலேயும் கீழேயும் பார்த்தவன்,"எதுக்கு உங்களுக்கு இந்த சந்தேகம் டாட்... நான் கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன்... அது ஆணா பெண்ணானு பார்க்காதீங்க... அதான் கவர்மெண்ட்டே அத லீகல் ஆக்கிடுச்சே"என்று கோபாலகிருஷ்ணன் தலையில் பெரிய குண்டை தூக்கி போட, அதை அவர் தாயம்மாவிடம் சொல்ல, உடனேயே அவனுக்கு பெண்பார்க்கும் வேலையே ஆரம்பித்து விட்டார் அவர்.
அப்படி இருக்கும் பொழுது தான் கோபாலகிருஷ்ணனின் நண்பனும் அவர்களின் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் ஷேர் ஹோல்டராகவும் இருந்த இந்திரராஜனின் மகளான சொப்னாவை அவசரமாக யாதவ்விற்கு பேசி முடித்தது.
சம்மதிக்க மாட்டேன் என்று வீட்டிற்கு வராமல் இருந்தவன் பின் தாயம்மாவின் உண்ணாவிரதத்தாலும், கோபாலகிருஷ்ணன், யசோதா இருவரும் இது சிறுவயதிலேயே பேசி முடித்த சம்மதம் என்று போராடியதாலும் வேறு வழிஇன்றி திருமணத்திற்கு சம்மதித்து வைத்தான்.
ஆனால் அதுவும் சொப்னாவின் விஷயம் தெரிந்த பின் நின்றுவிட திடீர் மழையில் முளைத்த காளான் போல் சீதா இந்த வீட்டிற்கு மருமகளாகி விட்டாள். இருந்தும் பேரனுக்கு பழைய வியாதி இருக்கிறதா? என்ற சந்தேகத்தால் தான் தாயம்மாள் சீதாவை யாதவ் முகத்தை துடைக்க சொன்னார்.
ஆனால் அவர் நினைத்தது போல் அல்லாமல் யாதவ் சீதாவிடம் எந்த ஒரு வெறுப்பையும் அருவருப்பையும் முகத்தில் காட்டவில்லை.
அதில் நிம்மதியானவர், மற்றவர்களை உள்ளே கிளப்பினார்..
"சரி எல்லாரும் உள்ள போங்க.. நம்ம பத்து மணிக்கு மேல தஞ்சாவூருக்கு கிளம்பனும்.. எல்லாரும் அவங்க பொருள எல்லாத்தையும் எடுத்து வச்சுக்கோங்க.. கடைசி நேரத்துல அதக் காணோம் இதக் காணோம்னு தேடாதீங்க"எனவும் ஒவ்வொருவராக உள்ளே செல்ல,
'சரி நம்மளும் போவோம்' என்று உள்ளே செல்லப் போன சீதாவின் கைகளை பிடித்து இழுத்தான் யாதவ். சீதா அவனைப் பார்த்து உக்கிரமாக முறைக்க, "எனக்கு நீ இன்னும் டீ தரல்லையே?"என்றதும்,
"தர முடியாது"என்று சீதா சொல்ல,
"பாட்டி..." என்று யாதவ் அவளின் பின்னே பார்த்து கூப்பிட்டதும்
"அவங்கள கூப்டாத இப்பவே கொண்டு வாரேன்.." என்றாள் சீதா அவசரமாக..
"குட் ஸ்வீட் ஹார்ட்..என் ரூமுக்கு கொண்டு வந்துடு"என்று சிரிப்புடன் சொல்லிவிட்டு அவன் சென்று விட, 'என்ன ஒரு வில்லத்தனம்'என்று நினைத்தவள்,"யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும் டா ரோபோட்டு"என்று வாய்விட்டு சொல்ல, தூரத்தில் எங்கேயோ,"வரும் ஆனா வராது..."என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
சீதா டீயை சூடு பண்ணி எடுத்துக் கொண்டு அவன் அறைக்கு சென்று கொடுக்க, அவனோ குடித்து பார்த்துவிட்டு, "சுகர் அதிகமா இருக்கு.."என்றான்.
'இவன் அலப்பறை தாங்கல'என்று நினைத்தவள், "எல்லாம் சரியா தான் இருக்கும் குடிங்க" என்றாள் உறுதியான குரலில்.
"எப்படி சொல்ற?"என்று அவன் கேட்க,
அவளோ,"நான் தான் உன்னான்ட கொண்டு வர்றதுக்கு முன்ன குடிச்சி பார்த்தேனே சாரே ..சூடு சுகர் எல்லாம் கரெக்டா இருந்துச்சே..."
அவள் சொன்னதை கேட்டதும் குடித்து கொண்டிருந்த டீயை கொப்பளித்து விட்டான் யாதவ்.
பதறியபடி அருகே வந்த சீதா "என்னாச்சு சாரே?" என்று கேட்க,
"இன்னும் என்ன ஆகணும்னு நீ நினைக்கிற? இப்படி நீ எச்சி பண்ண காஃபிய நான் குடிச்சா இதுக்கு என்ன பேர்ன்னு தெரியுமா?"
சீதா இல்லை என்பது போல் அப்பாவியாக தலையாட்ட,"இட்ஸ் கால்ட் இன்டேரக்ட் கிஸ்"
சீதா அவன் சொன்னது புரியாமல்"புரியல சாரே ..என்ன கிஸ் அது இதுன்னு சொல்ற?"என்று கேட்க,
அவள் அருகில் நெருங்கி வந்த யாதவ்,
"உன்னோட உதடு பட்ட காஃபிய என்னோட உதடு டச் பண்ணிட்டு சோ இதுக்கு பேரு தான் இன்டேரக்ட் கிஸ்.. உதடும் உதடும் டைரக்ட்டா டச் பண்ணுச்சுன்னா..
அது ...பேரு.."என்று அவளின் உதடுகளை மட்டுமே பார்த்தவாறு சொல்ல வந்ததைச் சொல்லாமல் தன் ஒற்றை விரலால் அவளின் இதழ்களை வருட முயல..
அவன் செயலை உணர்ந்து பட்டென்று அவனிடமிருந்து விலகிய சீதா,
"..ச்சீ..ச்சீ.. புரிஞ்சு போச்சீ... நீ விளக்கமாறு வச்சு வெளக்க வேணாம் சாரே... அத்த கொடு நான் கீழ ஊத்தினு வேற கப்ல ஊத்தி கொண்டாரேன்" என்று அவன் கையில் இருந்த டீ கப்பை அவள் வாங்க முயல, அவனோ தர மறுத்து விட்டு முழுவதையும் குடித்து விட்டே அவளிடம் கொடுத்தான்.
சீதா முறைத்துக்கொண்டே அதை வாங்கிக்கொண்டு சென்றாள்.
காலை பத்து மணிக்கு தஞ்சாவூருக்கு கிளம்பலாம் என்று இருந்தவர்கள், வீட்டை விட்டு கிளம்பும் பொழுது மணி பதினொன்றை தாண்டி இருந்தது.
சீதாவிற்கு போதுமான உடைகள் இல்லாததால், செல்லும் வழியில் யாதவ் அவனுக்கு மிகவும் தெரிந்த கடையில் வாங்கி குவித்திருந்தான். எந்த அளவிற்கு என்றால்...
கடையில் இருந்த எல்லாரும் ஒரு மாதிரியாக பார்க்க சீதா தான் போதும் போதும் என்று சொல்ல வேண்டியதாய் போயிற்று.
இப்படியாக அவர்கள் தஞ்சாவூருக்கு அருகே இருந்த சோமத்தூர் ஊருக்கு போய் சேரும் பொழுது நன்றாக இருட்டி விட்டது.
அந்த ஊரில் வீர நரசிம்மன் என்றால் தெரியாதோர் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு ஊருக்காக பார்த்து பார்த்து செய்திருந்தார் அவர். மருத்துவமனை முதல் பள்ளிக்கூடங்கள் கல்லூரி வரை கட்டுவதற்கு உதவி செய்திருந்தார்.
அவ்வூரில் யாதவ் தாத்தாவான வீர நரசிம்மருக்கு தனியாக நினைவு மண்டபமே கட்டி இருந்தார்கள் ஊர் மக்கள். அந்தஅளவிற்கு செல்வாக்கு பெற்று இருந்தது அவர்களின் குடும்பம்.
அங்கு அவர்களுக்கு சொந்தமான பாரம்பரியமான வீடு ஒன்று இருந்தது. அங்கே அவர்கள் வருவதாக முன்கூட்டியே சொல்லி இருந்ததால் வீட்டை சுத்தம் செய்து சமைத்து வைத்திருந்தனர் அந்த வீட்டில் பல காலமாக வேலை செய்த விசுவாசிகள்.
தாயம்மாள் அவர்களுக்கு ரொம்ப தெரிந்த கிராம மக்களுக்கும் சீதாவை தங்கள் வீட்டு மருமகள் என்று அறிமுகப்படுத்தி வைக்க, அனைவருமே அவளை சின்னம்மா என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அவள் சென்னையில் இருக்கும் பொழுது அந்த வீட்டில் வேலை செய்த சந்தானம்,மீனாட்சி மட்டுமே சின்னம்மா என்று அழைத்திருக்க இங்கு அனைவருமே சின்னம்மா சின்னம்மா என்று அழைத்ததும் அவளுக்கு பார்த்து பார்த்து கவனித்தது எல்லாம்
சீதாவிற்கு ரொம்பவே புதுமையாக இருந்தது. அதே சமயம் தன் மனம் இந்த பணக்கார வாழ்வில் மயங்கி திளைத்திடுமோ என்ற பயமும் அவளுக்கு எழுந்தது.
நேற்று போலவே இன்றும் சீதாவை அனன்யாவுடன் தங்கிக் கொள்ள சொல்லிவிட, அதில் அவளுக்கும் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை.
மறுநாள் அவர்களின் குலதெய்வம் கோவிலுக்கு சென்றார்கள்.
அது ஊரிக்கு வடக்கு புறமாக அமைந்திருந்த தென்னந்தோப்பிற்கு அருகில் இருந்தது. மிகவும் அமைதியான சூழலில் .. தெய்வ கடாட்சம் ஆக அமைந்திருந்தது அந்த அம்மன் கோவில்.
கோவிலின் இடப்புறமாக இருந்த பெரிய அரசமரம் முன்னே பிள்ளையாரை கும்பிட்டுவிட்டு உள்ளே சென்றவர்கள். கோயிலை சுற்றி கும்பிட்டுவிட்டு அர்ச்சனை செய்தவர்கள் கோவிலின் பின்னே இருந்த மணிமண்டபத்தில் தியானத்தில் இருந்த சுவாமிஜி இடம் கணக்கு கேட்டனர்.
முகம் முழுவதும் சந்தனத்தை பூசி கண்களை மூடி தியான நிலையில் அமர்ந்திருந்தவர், சட்டென்று கண்களை திறந்து,"பேரனுக்கு நல்லபடியா கல்யாணம் ஆயிடுச்சு போல"என்று கேட்க,
"சாமி எப்டி எப்டியோ நெனச்சு ஏற்பாடு பண்ண கல்யாணம் திடீர்னு திசை திரும்பி வேற மாதிரி இது நல்ல திசையா இருக்கணும்னு ஆசைப்படுறேன் அதுக்கு நீங்கதான் ஒரு வழி சொல்லணும் சாமி"என்று குடும்பத்தில் பெரியவராக இருந்த தாயம்மாள் கேட்க,
சீதாவை ஒரு நொடி பார்த்தவர், பின் யாதவ்வை பார்க்க, அவனோ ஒன்றுமறியாத பச்ச பிள்ளையாய் நின்றான்.
"கவலைப்படாத தாயி! உன் புருஷன் விட்டு போன புண்ணியம் உன்னை என்னைக்கும் சோடை ஆக்காது... உன் வம்சம் காலத்துக்கும் நெலச்சி இருக்கும்.. உன் பேரன் நிலச்சு நிக்க வைப்பான்.."என்று சொல்ல,
"அப்போ எந்த பிரச்சனையும் இல்ல தானே சாமி.. பேர் பொருத்தம் ஜாதகம் எதுவுமே பார்க்காம நடந்த கல்யாணம் .. சேர்ந்து வாழ போற பிள்ளைகளுக்கு எந்த பிரச்சனையும் வராதே?"
"என்ன தாயி சொல்ற? மனப்பொருத்தம் இருக்கும்போது எந்த பொருத்தம் தேவ.. இது ஈசன் போட்ட முடிச்சு .. எந்த காலத்திலேயும் எப்பவுமே விட்டுப் போகாத முடிச்சு.. கவலைப்படாதே நல்லதே நடக்கும்"என்று சொல்லிவிட
தாயம்மாள் நிம்மதி ஆனார்.
"ஆனா ஒருத்தருக்கு தெரிஞ்ச உண்மை இன்னொருத்தருக்கு தெரிஞ்சா பந்தங்களுக்கு இடைல பிரச்சனைகள் வரலாம் அதனால அதுக்கு பரிகாரமா தம்பதிகள் ரெண்டு பேரும் 1008 நெய் தீபங்கள் அவங்க கையால அம்மனுக்கு ஏத்தணும்"என்று சொல்ல, தாயம்மாள் தன் பேரனை பார்த்துவிட்டு "அப்படியே பண்ணிடலாம் சாமி"என்று விட்டார்.
அடுத்தது ஒவ்வொருவருக்காக திருநீறு பூசி விட, பிரகாஷ் முறை வரும் பொழுது,"உன் ஊன கண்ணில் இருந்து வெளியே வந்து உலகை பார்.. உண்மை புரியும்.. ஆனால் உண்மை புரிவதற்குள் உன்னை விட்டு விலகி இருக்கும் உன் உடமை தயாராய் இரு.."என்று சொல்ல, அவன் புரியாமல் நகர்ந்து விட்டான்.
சீதா முறை வரும்பொழுது,"விழிப்பாய் இரு சிறப்பாய் வாழ்வாய்.. நீ சில நாழிகை கண் மூடினால் பல நாழிகை துன்பப்படுவாய்"என்று சொல்ல,
"எனக்குலாம் தூக்கம் தான் முக்கியம் சாமி என்னால முழிச்சிட்டுலாம் இருக்க முடியாது"என்ற சீதாவைப் பார்த்து மௌனமாய் சிரித்தார் அவர்.
கடைசியாக யாதவ் வர, அவனுக்கு திருநீறு பூசி விட்டவர் "நெஞ்சகத்தில் இருக்கும் மெய்யெனும் தீபத்தை நீ ஏற்றாவிடின் துடிப்பு இருக்கின்றதே உன் இருதயத்திற்கு தெரியாமல் போய்விடும்.. மர்மம் விலக நாட்கள் பல இல்லை"என்று பூடகமாக சொல்ல, யாதவ் அவரைப் பார்த்து சிரித்து விட்டு நகர்ந்தான்.
அதன் பிறகு கோவிலில் பொங்கல் வைத்து படையல் வைத்தவர்கள், மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்து விட, இரவு உணவிற்குப் பின் யாரும் கவனிக்காத நேரம் சீதா யாதவ்வை சந்திக்க அவன் அறைக்கு சென்றாள்.
அந்த பெரிய மரக்கட்டிலில் கால்களை நீட்டி அமர்ந்திருந்தபடி புத்தகம் படித்துக் கொண்டிருந்த யாதவ், "என்ன இந்த பக்கம் காத்து வீசுது"என்று கதவை கூட தட்டாமல் அப்போதுதான் உள்ளே வந்திருந்த சீதாவை கேலி செய்தான். ஏனென்றால் அவள் நேற்றிலிருந்து அவனிடம் ஒழுங்காக பேசவில்லை ஏன் வம்பு கூட இழுக்கவில்லை.
ஆனால் இன்று அவளே அவனை தேடி வந்ததும் ஏதோ காரணம் இருக்கும் என்று நினைத்தவன்,
அவள் தயங்கி நிற்பதை பார்த்ததும் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு,
"ம்ம் என்ன சொல்ல வந்தியோ அத சொல்லு..?" என்றான்.
"அது அது... வந்து.."
"அதான் வந்துட்டியே சொல்லு.."என்று யாதவ் சொன்னதும் அவனை முறைத்தவள், பின் அவனை பாவமாக பார்த்து,
"அது நம்ம நாளைக்கு நைட்டு 1008 வெளக்கு ஏத்தி பரிகாரம் பண்ணனுமாம்..ஆனா..."
"என்ன ஆனா?"
"அது நம்மளாண்ட களிமண்ணுல பண்ற விளக்கு எல்லாம் தர மாட்டாங்கலாம் சாரே.. நம்ம தான் லெமன ரெண்டா வெட்டி ஜூஸ் பிழிஞ்சு கஷ்டப்பட்டு வெளக்கு பண்ணனுமாம்.."
"அதுக்கு என்ன இப்போ?"
" விளையாடுறியா சாரே.. ஒன்னா ரெண்டா மொத்தம் ஆயிரத்து எட்டு லெமனு வெட்டினா.. என்னான்ட பிஞ்சு கை என்னாவும்.."
"இதுக்கு தான் சுத்தி வளச்சி மூக்க தொட்டியா? யூ டோன்ட் வொரி விளக்கு ஃபுல்லா நம்மளே பண்ண போறது இல்ல அதுக்குன்னு இந்த ஊர்ல நிறைய ஆளுங்க இருக்காங்க.. அவங்க தான் பண்ணுவாங்க.. நம்ம அதுக்கு நெய் ஊத்தி தீபம் மட்டும் ஏத்தணும்"என்று யாதவ் விளக்கமாக சொன்னதும் தான் நிம்மதியாக மூச்சு விட்ட சீதா,"அப்புறம் இன்னொரு விஷயம்.."
"ம்ம் சொல்லு..."
"அத்து பூவு போன் பண்ணுச்சு அவனான்ட தங்கச்சிக்கு கல்யாணம் முடிவாயிடுச்சாம்... இந்த மாச கடைசில கல்யாணம்.. நான் போவுணும்"
"ம்ம் குட் ஃபங்ஷனுக்கு நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாமே.."என்று யாதவ் சொல்ல,
"இந்த பாரு சாரே கல்யாணத்துக்கு என்னோட நைனாவும் வரும்..ஏ நைனாக்கு நமக்கு கல்யாணம் ஆனது தெரியாது.. தெரிஞ்சா அம்புட்டு தான் வெட்டருவா தூக்கிக்கினு வந்துடும் .. அதனால நானே தனியா போயிட்டு வரேன்"
"வரட்டுமே என்கிட்ட தான் கன் இருக்கே... ஐ கேன் மேனேஜ் இட் ...சோ என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் நானும் வரேன்" என்று யாதவ் தன் முடிவில் உறுதியாக இருக்க,
'கழட்டி விடலாம்னு பாத்தா விடமாட்டான் போலயே'
"சொன்னா கேக்க மாட்டேங்கற அங்கெல்லாம் உன்னாண்ட ஸ்டேட்டஸ்க்கு ஒத்து வராதே சாரே.. அது குப்பம் ஃபுல்லா கப்பு பேடு ஸ்மெலு கலீஜூ "என்று ஏதேதோ சொல்லி அவனை கழற்றி விட பார்க்க,
"இட்ஸ் மை பிராப்ளம் யூ டோன்ட் ஹவ் டு ஒரி அபௌட் இட்.. டேட் மட்டும் எப்போனு சொல்லு.. போகலாம்" என்று விட்டான்.
இதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியாமல், தலையாட்டி வைத்த சீதா, அந்த அறையை விட்டு வெளியே செல்ல திரும்பிய நேரம்,
"ஒரு நிமிஷம்.. உன்கிட்ட கேட்கணும்னு நினைச்சேன்.. இதுக்கு முன்ன நீ யாரையாவது லவ் பண்ணி இருக்கியா?"என்று சற்று இறுக்கமான குரலில் யாதவ் கேட்க,
ஸ்லோ மோஷனில் அவனைப் பார்த்து திரும்பிய சீதா, அவன் அருகே வந்து அவனின் கண்களை பார்த்தவள், "ஆமா.. லவ் பண்ணி இருக்கேன் சாரே.. சுப்புனா என்னான்ட உசுரு ..அவனுக்கும் நான்தான் உசுரே.. கண்டிப்பா அவன பாக்கவாது நான் பூவு தங்கச்சி கல்யாணத்துக்கு போய் ஆவணும்" என்று விட்டு சென்றுவிட, யாதவ்வின் கண்களில் அடிபட்ட பார்வை இருந்தது.
தொடரும்...
ஸ்ரீ ❤️
உங்கள் ஆதரவுக்கு நன்றி... கமெண்ட்ஸ் பண்ணிடுங்க...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro