Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

20. என் வாழ்வின் ஆயுட்குறிப்பே

        கைபேசி அழைப்பில் மூழ்கியிருந்த தபனனுக்கு சமையலறையிலிருந்து வந்த  கருகின வாடையின் மூலமே கிளறி பாதியில் விட்டு வந்த சேமியாஉப்புமா நினைவுக்கு வந்தது. அழைப்பை துண்டித்து ஓடிச் சென்றான் சமையலறைக்கு. கருகிய வாணலி தீப்பற்றி எரியத் தொடங்கியிருந்தது.  பதட்டத்தில் செய்வதறியாது நின்றவன் பின் சற்று இயல்புக்கு திரும்ப முதலில் சமையல்எரிவாயு சிலிண்டரை அணைத்தான்.  கீழே கடந்த கால்மிதியடியை எடுத்து குழாய்நீரில் நனைத்தான். அதை வைத்து தீயை  அணைத்து நீண்ட நிம்மதி பெருமூச்சுவிட்டப்படி வரவேற்பறைக்கு வந்து சாய்விருக்கையில் அமர்ந்தான்.

           மனைவி வெண்மதியோ மகப்பேறுக்கு தாய்இல்லம்  சென்று முழுதாய் இரண்டுநாட்கள் முடியவில்லை. இருந்த இரு வாணலிகளை  காலி செய்துவிட்டான் சமையல் செய்கிறேன் என்று. வயிறு வேறு பசியால் சிறுகுடலை பெருங்குடல் தின்ன, மனைவி செய்து வைத்து சென்ற திண்பண்டங்களை எடுத்து கொறிக்கத் தொடங்கினான்.

      சென்றமுறை ஊருக்கு சென்ற போது அன்னை கொடுத்தனுப்பிய அடி கனமான இரும்பு வாணலி  மேலே கான்கீரிட் பரணில்   இருப்பது நினைவு வந்தது. நாளை செய்முறை பயிற்சிக்கு தேவைப்படும் என நினைத்து அதை எடுக்க நாற்காலி இழுத்து போட்டு ஏறினான்.

        வாணலி ஒரு பெரிய அட்டைபெட்டியில் வைத்து கட்டப்பட்டிருந்தது அதை நகர்த்த முயல அதனருகே இருந்த புத்தகங்கள் அடங்கிய சிறு அட்டைப்பெட்டி அவனது கைத்தட்டி கீழே விழுந்தது.

        காலையிலிருந்து செய்கின்ற அனைத்து வேலைகளும் சொதப்பிவிட்ட எரிச்சலுடன் கீழே இறங்கியவன் சிதறிக்கிடந்த புத்தகங்களை தரையில் அடுக்கி வைத்தான். அதில் இளம்சிவப்பு நிற அட்டைத்துடன் இருந்த நாட்குறிபபு பார்வையில் விழுந்தது. அவனுக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கம் கிடையாது என்பதை விட அதை எழுதுவதை  காரணமின்றி வெறுப்பவன். இது தன் மனைவியுடையது என அறிந்தவன் எப்படி மேலே சென்றது என யோசிக்கலானான்.

          இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆயுதபூஜையன்று வீட்டை சுத்தம் செய்தப்போது,  தனது பழையப்புத்தங்களை  அட்டைப்பெட்டியில அடைத்து மேலே வைத்தது நினைவுக்கு வந்தது. அடுத்து வந்த நாட்களில் வெண்மதி வாடிய முகத்துடன் எதையோ தேடியதும், இவன் என்னவென விசாரிக்க தனக்கு பயந்து  ஒன்றுமில்லை எனக் கூறியதும் நினைவு வர அதை புத்தகங்களின் மேல் வைத்தான்.

       மனைவியானாலும் அவளறியாது திறந்து படிப்பது அநாகரிகம் எனக் கருதி வைத்த ஒருமனது, அவள் என்ன எழுதியுள்ளாள் என  அறியும் சிறுஆவல் ஏற்பட, செய்த வேலையை பாதியில் நிறுத்திவிட்டு, நாட்குறிப்புடன் மெத்தையில் அமர்ந்தான்.

       அட்டையை பிரித்ததும் முதல் பக்கம் அவனது ஓவியம் தன்னவளால் வரையப்பட்டிருந்தது. அவளது அறிவியல் பயிற்சி புத்தகத்தில்  தான் தானே சிறுவயதில் வரைந்து கொடுப்பேன்.. இப்போது இத்துணை உயிரோட்டமாக ஓவியம் வரையந்துள்ளாள் என நினைத்து வியந்து போனான்.

       மறுபக்கம் ஒரு சிறுமி சிறுவனுக்கு   முத்தமிடும் படம் வரையப்பட்டு அதன் கீழே

   தத்தி நடைபயின்ற காலத்தில் பற்றிய நின்கரம்
தள்ளாடும் முதுமையிலும் வேண்டுமடா... என்றிருந்தது.

அடுத்தப்பக்கத்தில் சிறுவன் சிறுமிக்கு பாடம் சொல்லித்தரும் படம். அதன்கீழே,

மதிய உணவாய் சாம்பார் சாதம்
மதிமுகம் கண்டே என்
மனமறிந்து உன் உணவை அன்னையாய்
மாறி ஊட்டிய தருணங்கள்..

தமிழ் இலக்கணமும் கணித சமன்பாடுகள் மூளையில் ஏற மறுக்க...
தலைகொட்டி எனக்கு பாடம் கற்று தந்த ஆசானான தந்தையும் நீயே..

நண்பனாய் உன்னுடன் மிதிவண்டியில் ஊரை சுற்றிய  நாட்கள்..
போக்கிரியாய் அடிதடியில் எனக்காக இறங்கிய காலங்கள்...

பெண்மை மலர்ந்தபோது என்னை அரவணைந்த நேசம்..
மேற்படிப்புக்காக நகரம் நீ செல்ல நரகமான என் வாழ்நாட்கள்..

கன்னிப்பருவத்தில் திரையில் தோன்றுபவன் கனவு நாயகனாய் தோழிகளுக்கு
கனவிலும் நனவிலும்  நாயகன் நீ மட்டும் தான் எனக்கு...

காதலியுடன் வந்து நீ நிற்க கழுவில் ஏற்றப்பட்ட என்காதல்
கருகலைந்த துயரமாய் வதைக்க
கலங்கி நொறுங்கியது என் இதயம்

என கவிதை என்றப்பெயரில் ஒவ்வொரு பக்கமும் கிறுக்கியிருந்தாள் அவனது மனைவியும், மாமன் மகளுமான வெண்மதி. நான் அவளுள் இத்தனை தாக்கங்களை ஏற்படுத்தி இருந்தேனா . நான் வரைவதை ரசிக்க வரையத் தெரியாது என என்னிடம் பொய் சொல்லியிருக்கிறாளா என நினைக்கையிலே சந்தோச வலியை உணர்ந்தான். கனத்த மனதுடனே அடுத்தப்பக்கம் திருப்பினான்.

       ஏதேதோ கிறுக்கிய கிறுக்கியால் இப்போது எதுவும் எழுத தோன்றவில்லை. இருந்தாலும் எனது தனுவின் நினைவுகளை எழுத கரம் துடிக்கிறது.

    இருவீட்டாரின் சம்மத்துடன் தபனன்- ஆதிரா திருமணம் நிச்சியக்கப்பட்டது. திருமணப்பத்திரிக்கையில்  அவனது தாய்மாமனான எனது தந்தைக்கு முதல் மரியாதை.. அத்தையோ எனக்கு (தனுவுக்கு)பிடித்த நீலவண்ணத்தில் பட்டுப்புடவை எடுத்து தந்தாள். உயிருள்ள   சடலமாய் சுற்றி திரிந்தேன். திருமணநாளும் வந்தது. இனக்கலப்புதிருமணம்..  பெண்ணின் தாய்க்கு சிறு சம்மதமின்மை மத்தியில் சடங்கு செய்வதில் ஏற்பட்ட  சிறு தவறு உறவுகளால் ஊதி பூதாகரமாக மாற்றப்பட, இருவீட்டாரின் மனஸ்தாபத்தில் வந்து நின்றது.

       திருமணத்தை நிறுத்தினர் பெண்வீட்டார்... நீயோ துடித்து கதறிட, உன் காதலியோ அவளது பெற்றோர் சொல்லுக்கு கட்டுபட்டு உன்னை நிராகரித்து சென்றாள். அவளை பின்தொடர்ந்து சென்ற உன்னை அத்தை தடுத்து நிறுத்த, அவரை மீறி செல்ல துணிந்த நீ, அறைக்கு சென்று தூக்கிலிட முயன்ற அத்தையின் செய்கையில் நின்றாய். அவரை காப்பாற்றி கதறிய உன்னிடம்  என்னை கட்டிக்கொள் என அவர் மொழிந்த நிமிடம்.. நான் செத்து பிழைத்தேனடா...

      உன் காதலின் தோல்வி கவலையா இல்லை என் காதலின் வெற்றி மகிழ்ச்சியா என வகை பிரிக்கமுடியாத உணர்வுகளின் பிழம்பில் வெளியான விழிநீர் கன்னம் தாண்டியது.

      என் முகம் கூட காண பிடிக்காது எனக்கு மாங்கல்யம் சூட்டினாய்., அடுத்து வந்த சடங்குகளில் கலங்காது ஒதுங்கி சென்றாய்.  கையில் பால்சொம்புடன் அறைக்குள்  நுழைந்த நான் அலங்கரித்த மெத்தையை கலைத்து கத்திய உன்னை கண்டு நடுங்கி சொம்பை கீழே போட்டு நிற்க, என்னிடம் ஒருவார்த்தை கூட பேசாது அதே மெத்தையின் ஓரத்தில் முதுகை காட்டி உறங்கினாய். உறங்கிய உன்னை பார்த்தவாறு அன்றைய இரவை கழித்தேன்.

     ஒருவாரத்தில் நகரத்திற்கு தனிக்குடித்தனம் வர, தனித்தீவில் மாட்டிய உணர்வு எனக்கு. சாப்பிட்டியா என்ற ஒரு வார்த்தை கூட நீ கேட்கமாட்டாய்.. சாப்பிட வா என நான் அழைத்தால் மட்டும் எதுவும் பேசாது உணவுமேசைமுன் அமர்ந்து குனிந்த தலை நிமிராது உண்டு முடிப்பாய்.

        நீ ஏதாவது கேட்பாய் அல்லது திட்டவாவது என்னிடம் பேசுவாய் என சமையலில் உப்பு போடாது சமைத்த நாட்கள் அதிகம். ஆனால் அப்போதும் எதுவும் பேசாது சாப்பிட்டு முடித்து சென்றுவிடுவாய்.   

..     தலைவலி என்றால் கூட ஒரு காஃபி வேண்டும் என என்னிடம் கேட்டதில்லை.. சமையலறை வந்து பாத்திரம் உருட்டுவதில் குறிப்பறிந்தே கலக்கி தருவேன். இருவரின் பெற்றோர் யாராவது வந்தால் மட்டுமே பேசும் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே எனக்கு ஆறுதல்.

         ஒருமுறை உனது மடிக்கணினியை நான்  பயன்படுத்த, தவறுதலாய் உன்காதலியின் புகைப்படங்கள் அழிந்துவிட கோபத்தில் அறைந்து என்னை திட்டியதே என் மீதான உன் உரிமையை நிலைநாட்டிய முதல்நிகழ்வு.

     வாழ்க்கைச்சக்கரம் உருண்டோட இரண்டு மாதங்கள் கழிந்த நிலையில், தலைகலைந்து, முகம்வியர்த்து கண்கள் சிவந்திருக்க போதையில் தள்ளாடி வந்த நீ என்னிடம் கேட்டது. உன் மடியில் சிறிதுநேரம் தலை வைத்து துயில் கொள்ளட்டுமா என்று.. நானும் உன்னை ஏந்திக்கொள்ள, தாயாய்  என்னை நினைத்து உன் சோகம் சொன்னாய்.

      உன் காதலிக்கு விடிந்தால் திருமணம் என்று. வயிற்றில் முகம் புதைத்து இடைவளைத்து  அழுது  என்னிடை நனைத்தவன், அழுகையின் முடிவில் தாரமாய்  ஏற்று என்னுள் கலந்தாய். அதில் சிறிதும் காதல் இல்லை என உணர்ந்தாலும் உன் மனங்காயங்களுக்கு மருந்தாய் என்னை முழு மனதோடுதான் அளித்தேன்.

      அடுத்த வந்த நாட்களில் உன்னின் உடற்தேவைக்காக மட்டும் என்னை நாடுவாய்...  கூடலில் மயங்கிய நேரம்  சிலசமயங்களில் கிறக்கமாய் உன் காதலி பெயர் சொல்லி  என்னை அழைப்பாய்.. வலிதான் சகித்துக் கொண்டேன் காதலின் வலி உணர்ந்த காரணத்தால்.. அனைத்து வலிகளும் மறந்தது என் மணி வயிற்றில் உன் உயிர்த்துளி வளர்வது அறிந்து.

        மருத்துவர் கருவுற்றிருக்கிறேன் என சொன்ன வினாடி முதல் தான்  நீ என்னிடம் இயல்பாக பேச ஆரம்பித்தாய். கைபேசி அழைப்பின் மூலம் சாப்பிட்டாயா என்ற விசாரிப்புகளும் தொடங்கியது. ஆனந்தத்தில் திக்கு முக்காடி போனேன்... மசக்கையில் துவழ  உன்பிள்ளை வளர ஊரான்பிள்ளையான எனக்கு ஊட்டிவிட்ட அதிசயங்களும் அப்போது தான் நிகழ்ந்தன. காமத்துடன் மட்டுமே அணைத்த கைகள் இப்போது அன்புடன் அணைக்க தொடங்கியது.  மகிழ்ச்சி வானில் சிறகின்றி பறந்தேன்.

     நாளை மகன்(ள்) பிறந்தால் அவனு(ளு)க்காக என்னிடம் பேசுவாய்.. அவன்(ள்) அழுகையில் சிணுங்கினாலே என்னிடம் சண்டையிடுவாய்.. மழலையின் வளர்ச்சியூடே உன்பாசம் என் மீதும் சற்று திரும்பும். அனைத்தையும் காலம  மாற்றும்.. என் மரணம் நிகழும் முன் ஒருமுறை உன்காதல் நானென உணர்ந்து நீ உரைக்க வேண்டும்... அது நடக்கும் என்ற நம்பிக்கையில் வாழும்.

உன்னவள் என எழுதியது கோடிட்டு அழிக்கப்பட்டு என்னவனின் தாலி சுமப்பவள் என முடிக்கப்பட்டிருந்தது.  இதயத்தை அணுஅணுவாய் பிரித்தெடுக்கும் வலி.. வெடித்து அழுதான் காதலி பிரிந்து சென்ற தருணத்தை விட.

     எனது கோபங்கள், வெறுப்புகள், ஒதுக்கல்கள், ஆண்கர்வம் என அனைத்தையும் பொறுத்து  குறையா காதலுடன் ஒருத்தி எனக்காக வாழ்ந்துள்ளாளா... இது இன்றைய நாட்களில் சாத்தியமா... அவளுடைய காதலுக்கு நான் தகுதியுள்ளவனா... உயிரில் வைத்து  தன்னை நேசித்தவளை அணுஅணுவாய் சாகடித்துள்ளேன்... என அவனது மனசாட்சியே சாட்டையடி கொடுக்க, அந்த நாட்குறிப்பை தன்னவளாய் நினைத்து முதல்முறை காதலுடன்  முத்தமிட்டான். பெண்ணவள்  நினைவுகளிலேயே மூழ்கியவன் தனது கைபேசி அழைக்க சுயம் உணர்ந்து வரவேற்பறை வந்தான்.

      அவனது மாமா தான் அழைத்திருந்தார். "மாப்ளே... தாயிக்கு வலி கண்டுட்டது.. ஆஸ்பித்திரி தூக்கிட்டு போறோம்... சடுதியா வந்திடுங்க..." என்றவர் அழைப்பை துண்டிக்க, பரபரத்து போனான்

       ஆடை மாற்றிக் கொண்டே, "அம்மாவும் பிள்ளையும் ரெண்டுநாள் என்னை  விட்டு பிரிஞ்சி இருக்கமாட்டாங்களா... லூசுங்க என்ன பண்ணி தொலைச்சாங்களோ... இன்னும் இருபது நாளு இருக்கே டெலிவரி டேட்க்கு..." என உளறியவாறு தயாராகி  தனது மகிழுவுந்து இருக்குமிடம் வந்தான்.

    ஐந்து மணிநேரங்கள் பயண தூரத்தை மூன்றரை மணிரேத்தில் கடந்து  மருத்துவமனை வந்தடைந்தான்.

     "தம்பி! மூணுநேரமா வலி விட்டுவிட்டு வந்திட்டிருக்கு... ஒருமணிநேரம் முன்னாடி தான் டாக்டர் ஊசி போட்டாங்க... கொஞ்ச நேரம் முன்னாடிதான் வலி அதிகமாகி பிரசவரூம்க்கு தூக்கிட்டு போயிருக்காங்க..." தனதன்னை சொல்லியதை கேட்டவன், பிரசவவார்டு அறைக்கதவை ஓங்கி தட்டினான்.

     செவிலியர் வந்து பாதி திறக்க, அவரை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான். அங்கிருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அவனை  திட்ட, வலியில் துடித்துக் காெண்டிருந்த வெண்மதி, "மே...டம்! ஒரு... நிமிசம்..." என  திக்கித் திணறி அனுமதி கேட்டவள் தபனன்னை  தன்னருகே அழைத்தாள்.

      அவளது கரம் பற்றியவன் விழிநீர் அவளது கன்னம் விழுந்தது. "மாமா..." என அழைக்க, "தனுன்னு கூப்பிடு மா..." என்றவனின் மா அழைப்பில் இருந்த அன்பை புரிந்தவள் விசும்பலுடன்  இமைக்காது  அவனை பார்த்தாள்.

     "என்னே மன்னிச்சிடு டி... இப்போதான் என்னோட காதல் எதுன்னு எனக்கே புரிஞ்சது... நீதான்டி... நீ மட்டும்தான் என் காதல்... ஐலவ் யூ டி..." என அவளது நெற்றியில் இதழ்பதிக்க, அதில் காதலை உணர்ந்து மரணவலியிலும் இதழ்கள் விரித்தாள். அடுத்தநொடி அவளின் உயிர்க் கத்தலை தொடர்ந்து அவர்களின் உயிர் வீறிட்ட அழுகையுடன் மருத்துவரின் கைகளில் குருதிக்குளியலுடன் தலைகீழாக தொங்கியது.

     "குட்டி தனு..." என மருத்துவர் சொல்லுவது காதில் விழ, தன் காதலையும் மகவையும் கண்டவாறு மயங்கினாள் மடந்தையவள்.

   உன் காதல் நானறிய உதவியது நீ எழுதிய நாட்குறிப்பு..
என்காதலை  அணுஅணுவாய் செதுக்கி  நானெழுத நீதான் என் ஆயுட்குறிப்பு...

  

     

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro