பகுதி - 4
அசந்தாப்புள அள்ளிபுட்டானே
அடிமனதில் அண்டிபுட்டானே
மிளகாய்பூ போல என்னுள்
அழகாப் பூ பூக்கவிட்டானே
வெட்கத்துல விக்க வச்சானே
வெட்கத்துல சிக்க வச்சானே
பசப்புறனே மழுப்புறனே
சொதப்புறனே.....
அழங்காரி அலட்டிகிட்டானே
அளுங்காம அள்ளிவிட்டானே
அடிக்கிறனே தினந்தினமும் நடிக்கிறனே
தலையை ஆட்டிக் கொண்டே வெட்கம் என்னும் பெயரில் ஏதோ செய்து கொண்டிருந்தவளை ஆஆ என்று வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான் தீபு.
"வளர்ந்துக் கெட்டவளே! என்ன பண்ணுற?" என்று கண்களை உருட்டி கேட்டவனிடம்
"வெட்கப் படுறேன் " என்று சுதா கொடுத்த முக பாவனையில் நல்ல வேளை இவனுக்கு ஹார்ட் அட்டாக் வரவில்லை.
"நீ என்ன கருமம் வேணா பண்ணு இதை மட்டும் பண்ணாத! எனக்கு வாந்தி வாந்தியா வருது.
வேக் !" என்றவனை முறைத்தவள்
அவனை அடிக்க துரத்த சரியாக அம்மாவின் மேல் மோதிக் கொண்டாள்.
பிரதோஷம் மற்றும் சிவராத்திரி என்பதால் காலையிலேயே பூஜை அறையில் இருந்தவர் இப்போது தான் எழுந்து வெளியே வர இவள் இருந்த கோலத்தைக் கண்டு முறைக்க ஆரம்பித்தவரின் பார்வையில் வாயை மூடிக் கொண்டவள் ஓரே ஓட்டமாக அறைக்குள் புகுந்து கொண்டாள்.
இன்னைக்கு சிவராத்திரி காலையிலேயே கோவிலுக்கு போகணும்னு சொன்னேன்ல சுதா , பல்லு கூட வெளக்காம அவன் கூட என்ன ஆட்டம்?
அறிவே இல்லையா? பொண்ணா அடக்க ஒடுக்கமா நடந்துக்கோ என்று கத்தியவர் இன்னும் பல நன்மொழிகளைக் கூறிக் கொண்டு
சமையலறையினுள் நுழைந்து விட
மெத்தையில் தொப்பென்று விழுந்தவளோ " இன்னைக்கு என்ன சாப்பிடலாம் ?" என யோசித்துக் கொண்டிருந்தாள்.
காலை டிபன் மட்டும் செய்து முடித்து வெளியே வந்தவர் சுதாவை அழைக்க அவளோ அப்போது தான் பல் துலக்கவே பாத்ரூமிற்குள் நுழைந்தாள்.
பல முறை அழைத்தும் சத்தம் வராது போக அறைக்குள் சென்றவர் அவர் பல் துலக்கிக் கொண்டே ஆடிக் கொண்டிருப்பதைக் கண்டு கடுப்பாகி "உன்னை வந்து கவனிச்சுக்கிறேன் " என்று கூறி கோவிலுக்கு கிளம்பிவிட்டார்.
சிறு வயது முதலே பார்வதிக்கு சிவன் என்றால் அலாதிபிரியம்.
சிவா என்று ஆரம்பித்த காரணத்தினாலே சிவராமனுடனான திருமணத்திற்கு சம்மதித்திருந்தார்.
இங்கு குளித்து முடித்து வெளியே வந்தவளோ பாரு பாரு என்று கத்திக் கொண்டிருக்க அவர் தான் கோவிலுக்கு சென்று விட்டாரே!
"சொல்லு டா அம்மு" என்று வந்த தந்தையைக் கட்டிக் கொண்டவள்
"அப்பா ஆம்லெட் வேணும் " என்று காதில் ரகசியமாக கூற
"அய்யோ உன் அம்மா வந்தா என்னை கொன்னு போட்டுருவா" என்று பார்வதிக்காக பயந்தவர் நாளைக்கு செஞ்சி தரேன் என்று கூற அவளோ இப்போதே வேண்டும் என அடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டாள்.
"அம்மு இன்னைக்கு பிரதோஷம் அதுவுமில்லாம சிவராத்திரி வேற..உன் அம்மா விரதம் இருப்பா இன்னைக்கு முட்டை செஞ்சா எப்படி டா ?" என்றவரை கொஞ்சி , கெஞ்சி சமாதானம் செய்தவள் சமையில் மேடையில் ஏறி அமர்ந்துக் கொள்ள
மனைவி வருவதற்குள் ஆம்லெட் செய்து கொடுத்து அனைத்தையும் சுத்தம் செய்துவிடலாம் என்று திட்டம் தீட்டியவரோ கையும் களவுமாக மாட்டிக் கொண்டார்.
என்றும் நடந்து செல்பவர் வருவதற்கு லேட் ஆகும் என தந்தையும் , மகளும் திட்டம் தீட்டியிருக்க அவர் வந்ததோ யுவாவுடன் பைக்கில்.
பைக் சத்தம் பக்கத்து வீட்டில் தான் கேட்கிறது என அலட்சியமாக நினைத்த சிவராமன் ஆம்லெட்டை சுதா கைகளில் திணிக்க அதில் பெப்பர் தூவி அதன் நறுமணத்தை முகர்ந்த மறுநொடி வாயில் எச்சில் ஊற உடனே வாயைத் திறந்து உள்ளே வைக்க எத்தணித்தவள்
" சுதா" என்ற கர்ஜிக்கும் குரல் கேட்டு கைகள் நடுங்க தட்டு தானாக தரையை தழுவியது.
"இன்னைக்கு நான் விரதம் இருப்பேனு தெரிஞ்சும் என்ன பண்ணுறீங்க இரண்டு பேரும்" என்று கத்தியவர் சுதாவை முறைக்க அவளோ சிவராமனைப் பாவமாக பார்த்தாள்.
"அங்கே என்ன பார்வை சுதா? நீ தான் ஏதாவது பண்ணி அவரை செய்ய சொல்லியிருப்ப? கோவிலுக்கு கூப்பிட்டேன் வரல, சீக்கிரம் குளினு சொன்னேன் அப்போவும் பாட்டு கேட்டுட்டு ஆடிட்டு இருக்க சரி போனா போதுனு விட்டா இப்போ ஆம்லெட் தான் வேணும்னு அடம்பிடிச்சு அதை சாப்பிடுற? என்ன பழக்கம் இது? இன்னைக்கு நான்வெஜ் எதுவும் சாப்பிடகூடாதுனு தெரியாதா?" இன்னும் கோபம் கொஞ்சம் கூட குறையாமல் அவர் கத்திக் கொண்டிருக்க
"முட்டை நான்வெஜ்ல இருந்து தூக்கிட்டாங்கனு உங்க அருமை மனைவி கிட்ட சொல்லுங்கப்பா" என்று மெதுவாக கூறியவளோ கீழே குனிந்து கைகளை பிசைய ஆரம்பித்துவிட்டாள்.
சத்தமாக கூறி அதற்கும் அவரிடம் யார் திட்டு வாங்குவது!!!!
"இதையெல்லாம் இரண்டு பேரும் சுத்தம் செய்துட்டு தான் வெளியே வரணும்" என்றவர் பூஜை அறைக்குள் நுழைந்துவிட
எட்டிப் பார்த்தவரோ இன்னுமொரு ஆம்லெட்டை போட்டு மகளை சாப்பிட வைத்த பின்பே சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.
"லவ் யூ பா " என்றவளோ உடனடியாக குளிக்க சென்றாள்
அம்மாவுக்காக.
கண்கள் மூடி அமர்ந்திருந்தவரின் கண்கள் மட்டுமல்லாது மனம் முழுவதும் நிறைந்திருந்தான் யுவா.
அவனைப் பற்றி நினைத்ததும்
புன்னகை இதழ்களில் பரவ
கோபத்தால் சிவந்த முகம் சாந்தமாகியது.
கோவிலுக்கு சென்றவர் பிரசாதம் எடுப்பதற்குள் அர்ச்சகர் உள்ளே சென்று விட "இந்தாங்க ஆன்டி " என்று புன்னகை முகமாக நீட்டியவன் வேறு யாருமில்லை நம் யுவாவே தான்.
அவரும் புன்னகையுடன் எடுத்து வைத்துக் கொள்ள "நீங்க சிவராமன் அங்கிளோட வொய்ப் தானே ?" என்றவனை ஆச்சர்யமாக பார்த்தவர் இப்போது கூர்ந்து கவனித்ததும் உடனே அடையாளம் கண்டுகொண்டார்.
"யுவா?" என்று நிறுத்த
"யுவராஜ்" என்றவனோ தலையை சரித்து சிரிக்க அதில் அவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
அவரின் பார்வை தானாக அவனை எடை போட ஆரம்பித்தது.
மெருன் நிற சர்ட் மற்றும் சந்தன நிற பேன்ட் , கைகளில் டைட்டான் வாட்ச், அலையலையாய் கேசம், சிறு திருநீர் கீற்று ,மாநிறத்தில் லட்சணமாக தான் இருந்தான்.
" எவ்ளோ மார்க் ஆன்டி " என்றவனோ கண்ணடித்துச் சிரிக்க மனதினுள்ளே தன் தலையில் கொட்டிக் கொண்டவரோ சமாளிக்கும் விதமாக சிரிக்க
"பாஸ் ஆயிட்டேன் தானே!" என்று அவன் மறுபடியும் அதே கேள்வியைக் கேட்க "அதெல்லாம்...
ராஜா மாதிரி இருக்கப்பா " என்றவரோ பிரகாரத்தைச் சுற்ற ஆரம்பித்தார்.
தரிசனம் முடித்து பார்வதி ஒரு ஓரத்தில் அமர அவனும் அவர் அருகிலே அமர்ந்துக் கொண்டான்.
"அப்புறம் வீட்டுல எல்லாரும் சௌக்கியமா?" என்று பேச ஆரம்பித்தவர் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்ப எத்தணிக்க
நானே உங்களை ட்ராப் பண்ணுறேன் என்றவன் அவரை இறக்கிவிட்டு உள்ளே வராமல் இன்னொரு நாள் வருகிறேன் என்று கூறிச் சென்று விட்டான்.
யோசனையில் உலன்றவர் கண்களைத் திறந்ததும் கண்டது எதிரே தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருக்கும் கணவன் மற்றும் மகளைத் தான்.
"இனிமேல் ஆம்லெட் போட்டுத் தர மாட்டேன்" என்று சிவராமன் கூறிக் கொண்டே தோப்புக் கரணம் போட
" இனிமேல் நீ விரதம் இருக்கப்போ ஆம்லெட் கேட்க மாட்டேன்" எனக் கூறிக் கொண்டே சுதா தோப்புக் கரணம் போட்டாள்.
இருவரின் செயலில் சத்தமாக சிரித்தவர் சுதாவை அணைத்துக் கொள்ள " அப்பாடா " என்றவளோ
"அப்பா மதியத்துக்கு இரண்டு ஆம்லெட் டிபன் பாக்ஸில் வெச்சுருக்கீங்க போல, தேங்கஸ்" என்று கூறி சுதா சிட்டாக பறந்துவிட்டாள்.
"சுதாப்பா " என்று முறைத்த பார்வதியிடமிருந்து தப்பிக்க சிவராமன் இன்னும் சில தோப்புகரணங்கள் போட வேண்டியதாகிற்று.
நாள் முழுவதும் தன் கதிர்களால் சுட்டெரித்த கதிரவன் மக்களின் மீது பாவம் பார்த்து மேற்கில் மறையும் மாலை வேளை அது...
கவுண்டம்பாளையத்தில் உள்ள ஹேப்பி காபி ஷாப்பில் தான் சிவராமன் மற்றும் கிருஷ்ணா தம்பதியினர் அமர்ந்திருந்தனர்.
" எனக்கு ஒரு ஹேப்பி காபி, ஒரு வாழைப் பூ வடை " என்ற சிவராமனைத் தொடர்ந்து பார்வதியும் அதே கூற
கிருஷ்ணா மற்றும் ராதா தம்பதியினரும் அதையே ஆர்டர் செய்தனர்.
"இங்கே பாருங்க கிருஷ்ணா அண்ணா, எனக்கு என்னவோ யுவா தான் சுதாக்கு ரைட் சாய்ஸ்னு தோணுது. எங்க எல்லாருக்கும் சம்மதம் நீங்க மட்டும் ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறீங்க? என்ற பார்வதியிடம் என்ன கூறி அவர் மனதை மாற்றுவது எனத் தெரியாமல் கிருஷ்ணா முழித்துக் கொண்டிருந்தார்.
சிவராமன் மற்றும் பார்வதி யுவா தான் என்று முடிவெடுத்துவிட இதை அறிந்த ராதாவும் அதையே பிடித்துக் கொண்டார். பாவம், கிருஷ்ணா தான் இவர்களை சமாளிக்கவும் முடியாமல் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவும் முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தார்.
"யுவா வேற மாதிரி சிவா சார்...
நான் சொல்லுறதை ஏன் நீங்க புரிஞ்சுக்க மாட்டிங்கிறீங்க?" என்றவரைத் தடுத்தவர்
"எப்படியும் யுவாக்கு ஒரு பொண்ணைப் பார்க்க தான் போறீங்க அது ஏன் நம்ம சுதாவா இருக்கக் கூடாது? கிருஷ்ணா சார் நானும் யுவாவைப் போல தான் இருந்தேன் ஆனால் இப்போ மாறிட்டேன்ல...
யுவாவும் மாறிடுவான் !நம்ம சுதா அவனை மாத்திடுவா எனக்கு நம்பிக்கை இருக்கு அப்படித் தானே பாரு மா " என்றவர் மனையாளைப் பார்க்க
அவரும் ஆம் என்பதாய் தலையசைத்தார்.
இரண்டு மணி நேரப் போராட்டத்திற்கு பின் கிருஷ்ணாவிடம் சம்மதம் வாங்கி மனநிறைவுடன் சிவராமன் தம்பதியினர் கிளம்ப
கிருஷ்ணா தான் இன்னும் மனநிறைவு கிடைக்காமல் கோவிலைத் தஞ்சமடைந்தார்.
"நீங்க பயப்பட அவசியமே இல்லனு தோணுது, ஏன் இந்தளவு பயம் "
என்ற ராதாவை நோக்கி ஒரு பார்வை வீசியவர் எதுவும் பேசாமல் இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்க " கிருஷ் அப்பா " என்ற சுதாவோ ஓடிவந்து அவரருகில் வந்து அமர்ந்துக் கொண்டாள்.
"சுதா மா எப்படி இருக்க டா?" என்றவர் பாசமாக அவள் தலையை வருட "சூப்பரா இருக்கேன் அப்பா " என்றவளோ "ஹாய் ராதாம்மா எப்படி இருக்கீங்க? மானு எங்கே ? அவ நல்லாருக்காளா ? எங்கே இந்த பக்கம்? " என்று விடாது கேள்விக் கணைகளைத் தொடுத்துக் கொண்டிருக்க
"ஒவ்வொன்னா கேளு டா மூச்சு முட்டுது " என்றவரைக் கண்டு அசடு வழிந்தவள் தன் அனைத்துப் பற்களையும் காட்ட , செல்லமாக அவள் தலையில் கொட்டிய ராதாவோ அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்க ஆரம்பித்தார்.
"என்ன டா இந்த பக்கம்? நீ கோவிலுக்குலாம் வரமாட்டியே " என்ற கிருஷ்ணாவிடம் காலையில் நடந்த சம்பவங்களைக் கூறியவள்
"எனக்கு ஒருமாதிரி ஆயிடுச்சு கிருஷ்ப்பா! மதியம் ஆம்லெட் சாப்பிட கூட தோணல...அம்மா எங்களுக்காக தானே விரதம்லாம் இருக்காங்க நான் வேணும்னே பண்ணுறது தப்பு தானே! அதான் இப்படி திடீர்னு கோவில் விசிட் " என்று கண்ணடித்து சிரித்தவளைக் கண்டு இருவருக்கும் சிரிப்புடன்
"சிவா வளர்ப்பு " என்று தான் மனதில் தோன்றியது.
என்னவோ பெண் பிள்ளைகள் உருவ ஒற்றுமையிலிருந்து குண ஒற்றுமைகள் வரை தந்தையின் நகல்களாகவே மாறிவிடுகின்றனர்.
"ஆணுக்கு பெண் அடங்கிக் போகணும் இதைப் பத்தி என்ன டா நினைக்கிற " என்ற திடீர் ராதாவின் கேள்வியில் சுதா புருவமுடிச்சுடன் கூர்ந்து நோக்க, கிருஷ்ணாவோ படபடத்த மனதுடன் அவளின் பதிலுக்காக காத்திருக்கத் தொடங்கினார்.
"ஆணுக்கு பெண் சமம் அப்படிங்கிற வார்த்தையை நான் அறவே வெறுக்கிறேன் ராதாம்மா...
எந்த விதத்திலும் ஆணுக்கு பெண் சமமில்லை தான்!
பிரசவம் என்ற ஒன்றைப் பத்தி நல்லாவே தெரியும் அது கொடுக்கிற வலியை ஆணால் தாங்கிக்க முடியாது தான் ஆனால் அதுக்காக அவங்க சமம்னு சொல்ல முடியாது,
ஆண்களைப் போல் எல்லா செயல்களையும் பெண்களால் செய்ய முடியாது.
அதீத அன்பை யாரு காட்டுனாலும் அவங்களுக்கு அடங்கிப் போகலாம் இது அம்மா எனக்கு சொன்னது நானும் அதன்படி தான் நடக்கிறேன் , நடப்பேன் " என்றவள் அடுத்து கூற வருவதற்குள் அவளைக் கட்டிக் கொண்டவர் அவள் நெற்றியில் முத்தமிட்டு "தேங்க்ஸ் டா " என்று கூற அவரின் இந்த செயல் வித்தியாசமாக தோன்றினாலும் அவரின் முக மலரச்சியைக் கண்டு எதுவும் கேட்காமல் விடைபெற்றுக் கொண்டாள்.
"ஆண் என்ற திமிரைக் காட்டினால் வெறுத்து ஒதுக்கவும் தயங்க மாட்டேன் " என்ற வரிகளைக் கேட்கத் தவறியவர்கள் அதை அவள் வாயாலேயே கேட்க நேரிடும் போது ???
ப்ரியமுடன்
தனு❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro