Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி - 3

பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்
வாழ்கையின் ஒரு பாதி நான் எங்கு வசிப்பேன்
வாழ்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்

என்ற பாடலைப் பாடியவாறே சமையலறைக்குள் நுழைந்தவள் சமையல் மேடையில் ஏறி அமர்ந்துக் கொண்டு தன் தந்தையைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

"அம்முமா க்கு காபி ரெடி " என்று கூறியதும் கீழே குதித்தவள் அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டு "லவ் யூ பா " என்று கத்த ஆரம்பித்தாள்.

"உஸ்ஸ்  உன் அம்மா தூங்குறா" என்றவரைப் போலவே அவளும் "உஸ்ஸ் " என்றபடியே மேடையில் அமர்ந்துக் கொண்டு தந்தைக் கொடுத்த காபியை அருந்த ஆரம்பித்தாள்.

"ப்பா நீயே தினமும் சமையல் செஞ்சா என்ன?  ஆஹா என்ன சுவை என்ன சுவை " என்றவளைப் பார்த்து சிரித்தவர் தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்க ஆரம்பித்தார்.

கல்யாணம் ஆன பொழுதில் ஆரம்பித்த பழக்கம் இது.
ஆறு நாட்கள் மற்றவர்களுக்காக விடியற்காலையிலேயே எழுந்து வேலை செய்யும் பார்வதிக்கு  ஞாயிறு மட்டும் விடுமுறை.

காபி முதல் இரவு உணவு வரை சிவராமன் தான் செய்வார்.
ஏனோ இந்த ஒருநாள் உணவுக்காக தீபக்  மற்றும் சுதாவோடு,
பார்வதியும் ஆவலுடன் காத்திருப்பார்.

பார்வதி மற்றும் தீபக் உறங்கிக் கொண்டிருக்க நம் நாயகியோ ஒன்பது மணிக்கே எழுந்து தன் காலை அலாரத்துடன் சமையலறைக்குள் நுழைந்துவிட்டாள்.

ஒவ்வொரு நாளும் பாடல்களுடன் தான் அவளுக்கு விடியும்.
பாடல்களுக்கு அடிமை என்று கூறலாம்.
அதில் வரும் வரிகளை தன் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்ப்பது அவள் வழக்கம்.

"இன்னைக்கு என்ன பாட்டு ?" தேங்காயைத் துருவிக்கொண்டே கேட்டவரிடம் "மார்கழிப் பூவே " என்றவளோ பாட ஆரம்பிக்க
"காலங்காத்தால கழுதை கனைத்துடுத்து " என்று கூறி கண்களைக் கசக்கிக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தான் தீபக்.

"போடா பப்ளிமாஸ் " என்றவள் தந்தை சுட்டு வைத்த தோசையை எடுத்து சாப்பிட ஆரம்பிக்க

"சட்னி வெச்சு சாப்பிடு வளர்ந்து கெட்டவளே,வெறும் தோசையை சாப்பிட்டே எல்லாத்தையும் காலி பண்ணிருவ போல! அப்புறம் நாங்க சட்னியை மட்டும் தான் சாப்பிடணும்" என்றவன் சொன்னதோடு நில்லாமல் ஓடி சென்று தோசை சுட்டு வைத்த ஹாட் பாக்ஸை கையோடு எடுத்துக் கொண்டு வெளியே ஓடிவிட்டான்.

"டேய் பப்ளிமாஸ் " என்று பற்களை நறநறவென்று கடித்தவளோ "ப்பா " என்று சிணுங்க "நான் உனக்கு சூடா சுட்டுத் தரேன் டா " என்றவரோ நெய் ஊத்தி மொறுமொறுவென்று தோசை சுட ஆரம்பித்தார்.

"ஆஆஆ சூப்பர்" உச்சுக் கொட்டி சாப்பிட ஆரம்பித்தவளின் தலையில் கொட்டிய பார்வதி,  சட்னி, சாம்பார் வெச்சு சாப்பிடு டி! விக்கிக்க போகுது எனத் திட்ட

"இந்த பாருவுக்கு வேற வேலையே  இல்லை! போ பாரு " என்றவளோ முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

அவளைப் பார்த்து சிரித்தவர் "கோபம் வந்தாலும் உள்ளே தள்ளுறதை நிறுத்த மாட்டியே" என்று கூறியவாறே ஒரு தட்டில் தோசை மற்றும் சட்னி வைத்து அவளிடம் நீட்ட அவளோ ஆஆ என்று வாயைத் திறந்தாள்.

புன்னகைத்தவாறே அவளுக்கு ஊட்டிவிட ஆரம்பிக்க , அவர் கையை தன் புறம் இழுத்து தீபக்கும் ஆஆ வாங்கிக் கொண்டான்.

ஒருவரையொருவர் கலாய்த்தவாறே உண்டு முடிக்க , நான் தோட்டத்துக்கு போறேன் என்றவள் கீழே குதித்து ஓட "குரங்கு சேட்டை பண்ணாத டி " என்று கத்தியவரின் குரலெல்லாம் காற்றோடு  தான் கலந்தது.

தீபக்கும் அவனறைக்குள் நுழைந்துக் கொள்ள இப்போது தன் மனைவிக்கு ஊட்டுவது சிவராமனின் முறையானது.

"என்ன சுதாப்பா இது" என்று சிணுங்கியவரும் அவர் கொடுத்ததை வெட்கத்துடன் வாங்கிக் கொண்டார்.

"ஹே பட்டூஸ் " என்றுக் கத்திக் கொண்டே பின்புறம்  வந்தவள் தன்னை நோக்கி பறந்து வந்த புறாக்களை கைகளில் ஏந்திய படி

"பட்டூஸ் உங்களுக்கு ஒன்னு சொல்லவா? நான் வினு கிட்ட கட்டுன பெட்ல வின் பண்ணிட்டேன்.
வாங்க நம்ம போய் வினு கிட்ட சொல்லுவோம் " புறாக்களிடம் பேசியபடியே தோட்டத்திற்குள் நுழைந்தாள்.

"வினு நான் எல்லா சப்ஜெக்ட்லையும் பெயில் ஆகிட்டேனே!ஜாலியே ! நான் சொன்ன மாதிரியே இங்க இருக்க எல்லா செடிகளிலும் நாளைக்குள்ள பூ பூக்கணும் " என்று கூற அங்கு இருந்த குட்டி விநாயகரோ அவளைப் பாவமாக பார்த்தார்.(ச்ச ச்ச அவளுக்கு அப்படித் தோன்றியது)

சுற்றிலும் விதவிதமாக ரோஜா செடிகள் இருக்க அவற்றிற்கு நடுவே அவளுக்குப் பிடித்த வினு என்கிற விநாயகர் வீற்றிருந்தார்.

பல வண்ணங்களில் ரோஜா செடிகள் இருந்தாலும் அது மலராமல் சுதாவின் பொறுமையை சோதிக்க அவள் பெட் என்ற ஒன்றை கையில் ஏந்திக் கொண்டு அவள் வினுவின் முன் சென்று நின்றாள்.

"இங்கே பாரு வினு நான் மட்டும் எல்லா சப்ஜெக்ட்ஸ்லையும் பெயில் ஆகிட்டா அடுத்த நாளே இதுல பூ பூத்துடணும் ஓகே வா " என்றவள் பெட் கட்டியவரிடமே நான் பெயில் ஆகணும் விநாயகா என வேண்டிக் கொண்டாள்.

ஞாயிற்றுக்கிழமை என்றாலும் சீக்கிரமே எழுந்துவிடுவான் யுவராஜ்.
வாக்கிங் சென்று வருபவனுக்கு வீட்டினுள் நுழையும் போதே லெமன் டீ கைகளில் இருக்க வேண்டும்.
இல்லையென்றால் வீட்டில் இருப்பவர்களை ஒருவழி செய்துவிடுவான்.

யுவி வீட்டில் இருந்தாலே மானு தன் அறையை விட்டு வெளியே வரமாட்டாள்.
அப்படி வந்தாலும் அம்மாவுடன் சமையலறையில் ஐக்கியம் ஆகிவிடுவாள்.
யுவி தான் தண்ணீர் குடிக்க கூட சமையலறைக்குள் நுழைய மாட்டானே!

"ஆண்டவா இன்னைக்காச்சும் என் அண்ணா கிட்ட இருந்து திட்டு வாங்காம என் பக்கதுத்துலயே இருந்து என்னைக் காப்பாத்திடு! உனக்கு புண்ணியமா போகட்டும்" புலம்பியபடியே அறையை விட்டு வெளியே வந்த மானுவுக்கு  தரிசனம் கொடுத்ததே அவளின் ஆருயிர் அண்ணா தான்.

"சுத்தம்! உம்முனா மூஞ்சி முகத்துலயா நான் இன்னைக்கு முழிச்சேன்...கடவுளே உன்னை நான் என் பக்கத்துல தானே இருக்க சொன்னேன் ! இப்படி கவுத்திட்டியே" மனதில் நொந்தவாறே வலிய ஒரு புன்னகையை அவனை நோக்கி சிந்தி ஒரே ஓட்டமாய் சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.

சுதாவிற்கு ஜாலியாகவும் , மானுவுக்கு அண்ணாவிடம் திட்டு வாங்கி விடுவோமோ என்ற பதட்டத்துடனே அந்த நாளும் முடிய பல திருப்பங்களைத் தர அடுத்த நாள் அழகாக விடிந்தது.

"சிவா சார் உங்க சைடு ஏதாவது நல்ல பொண்ணா இருந்தா சொல்லுங்க...
இன்னும் மூனு மாசத்துல கல்யாணம் வேற பண்ணனும் இல்லைனா 29ல தான் பண்ண முடியும். என்னால முன்ன மாதிரி வேலை செய்ய முடியல சிவா சார்! சீக்கிரம் வாலண்டரி ரிட்டையர்மெண்ட் வாங்கிடலாம்னு நினைக்கிறேன்.
மானுவுக்கு முடிஞ்ச அளவு நகை , பணம் சேத்து வெச்சுட்டேன், யுவி அவன் வாழ்க்கையை அவனே பாத்துப்பான்  " என்று கூறியவரின் கைகளை ஆதரவா பற்றியவர்
"நான் பாக்குறேன் கிருஷ்ணா சார்" என்று கூறி புன்னகைக்க அவருக்கும்  அது இதழ்களில் தானாக வந்து ஒட்டிக் கொண்டது.

கிருஷ்ணாவை பொறுத்த வரை சிவராமனுடன் இருந்தாலே பாசிடிவ் எனர்ஜி தான்.
நெகடிவ்வாக என்றுமே பேச மாட்டார்.

பத்து வருடங்களாக ஒன்றாக பணி புரிந்தாலும் இருவர் சார் என்று தான் அழைத்துக் கொள்வர்.

"நம்ம சுதாக்கும் அலையன்ஸ் பாக்கலாம்னு இருக்கேன் கிருஷ்ணா சார் " என்று கூறிய சிவராமனை , கிருஷ்ணா அதிர்ச்சி கலந்த பார்வை பார்க்க
ஜோசியர் கூறியதை அப்படியே கூறியவர் முகம் தெளிவில்லாமல் இருந்தது.

"என்னாச்சு சிவா சார் " என்ற கிருஷ்ணாவிடம் " அவ சின்ன பொண்ணு சார், இன்னும் கொஞ்சம் கூட மெச்சூரிட்டி வரல ! இப்போ கல்யாணம்னு நினைக்கும் போதே மனசு திக்குனு இருக்கு...ஆனால் அவள் சமாளிச்சுப்பா, நல்ல மாப்பிள்ளை தான் கிடைப்பான் " என்று கூறி அடுத்த நொடியே புன்னகைக்க கிருஷ்ணாவின் முகமும் மலர்ந்தது.

"இதுதான் சிவா சார் " என்றவரோ
" நானும் எங்க சைடு நல்ல பையனா பாக்குறேன் " என்று கிருஷ்ணா கூற சரி எனக் கூறி தலையசைத்த சிவராமனோ சிறிது நேரம் பேசிவிட்டு தன் இருக்கைக்குச் சென்றார்.

மாலை வீடு திரும்பிய சிவராமன் ஒருவித யோசனையுடனே அமர்ந்திருக்க "என்னாச்சு " என்று கேட்ட பார்வதியிடம் காலையில் நடந்த அனைத்தையும் கூறினார்.

"ஏன் சுதாப்பா நம்ம  அவங்க வீட்டு கிரஹப்பிரவேசம் அன்னைக்குப் பார்த்தோமே அதுதானே கிருஷ்ணா அண்ணா பையன் " என்று கேட்ட தன் தர்மபத்தினியிடம் ஆமாம் என்று தலையசைத்தவரோ இப்போது கண்களை சுருக்கி அவரைப் பார்க்க தன் எண்ணவோட்டத்தை அதற்குள் கண்டுகொண்டாரே என்பது போல் நமட்டு சிரிப்பு சிரித்தார் பார்வதி.

"யுவராஜ் நல்ல பையன் தான்,  இப்போ அவங்க இருக்க வீடு கூட அவன் சம்பாத்தியத்துல கட்டுனது.
பொறுப்பான பையன் ஆனால் நம்ம அம்முக்கு சரியா வருவானானு தெரியலையே!" என்றவரின் தோள்மீது சாய்ந்துக் கொண்ட பார்வதி

" தெரியாத பிசாசுக்கு தெரிஞ்ச பேய் பெட்டர் சுதாப்பா" என்றவர்  சிரித்துக் கொண்டே " உங்க பொண்ணைத் தான் பேய்னு சொன்னேன்"   என்று கூறி சமையலறைக்குள் புகுந்து விட யுவராஜ் தான் பெட்டர் சாய்ஸோ என்ற எண்ணம் அவர் மனதிலும் வேரூன்ற ஆரம்பித்தது.

இதேதான் யுவராஜின் வீட்டிலும்
நடந்துக் கொண்டிருந்தது.
"நம்ம வீட்டு பங்ஷன்ல ஸ்கர்ட் அன்ட் டாப் போட்டுட்டு  தொணத்தொணனு பேசிட்டே இருந்தாளே ஒரு பொண்ணு அதுதானே சிவா அண்ணா பொண்ணு " என்று வினவிய ராதாவிடம் ஆம் என்று தலையசைத்தவரோ அவரின் மனதைப் படித்தவராக
"நம்ம யுவிக்கு சுதா வேணாம் ராதா"
என உடனே மறுத்துவிட்டார்.

"ஏன்ங்க " என்று முகம் வாடியவரின் அருகில் சென்று அமர்ந்தவரோ
"சுதா நல்ல கலகலப்பான பொண்ணு மா, கண்டிப்பா அவளோட பழக்கவழங்கள் நம்ம பையன் பழக்கவழக்கங்களோட செட் ஆகாது " என்றவர் கூறியதை மறுத்தவரோ "ஆப்போசிட் போல்ஸ் தானேங்க அட்ராக்ட் பண்ணும் " என்று கூறி விட விரக்தியாக புன்னகைத்தவரோ அவருக்கு புரிய வைக்கும் நோக்கில் வெளியே அழைத்துச் சென்றார்.

"இந்த வீட்டுக்கு என்ன கலர் பெயிண்ட் அடிச்சிருக்கோம் ராதா ?"  என்று கேட்டவரை யோசனையாகப் பார்த்த படி "மஞ்சள் " என்று கூற

"நம்ம மானு என்ன கலர் செலக்ட் பண்ணா?" என்று கிருஷ்ணா கேட்க
"அவ பிங்க் சொன்னா " என்றவர் இவர் ஏன் இப்போது இதைக் கேட்கிறார் என்ற கடுப்புடன் அவரைப் பார்த்தார்.

ராதாவின் முகமே அதைப் பிரதிபலிக்க அவரைப் பார்த்து சிரித்தவர் " நம்ம ஏன் மானு செலக்ட் பண்ணதை வீட்டுக்கு அடிக்கல ராதா மா " என்று கேட்க

"ஏன்னா அந்த கலர் யுவிக்கு பிடிக்கல! " என்று கூறியவரைப் பார்த்து இடவலமாக தலையசைத்தவர் " நீ இன்னும் உன் பையனைப் பத்தி புரிஞ்சுக்கல மா " என்றவருக்கோ ஆயாசமாக இருந்தது.

யாரின் குணநலன்கள் அவனுக்கு வந்தது என இன்றுவரை அவருக்குத் தெரியவில்லை.
சிறுவயதிலேயே கண்டித்திருக்கலாமோ!
என பலமுறை நினைத்ததுண்டு.
கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரம் செய்து என்ன பயன்!
இவர் கூறுவதையாவது கேட்கிறானே அதுவரை ஒரு அற்ப சந்தோஷம் தான் அவருக்கு.

" ஆணுக்கு பெண் அடங்கித்தான் போகணும்ங்கிற கேட்டகிரி மா உன் பையன்! அவனைப் பொறுத்தவரை பெண்கள் சமையல் மற்றும் வீட்டு வேலை செய்வாங்க கல்யாணம் ஆனதும் குடும்பத்தை கவனிச்சுட்டு குழந்தைகளைப் பாத்துப்பாங்க...
பிங்க் கலர் செலக்ட் செய்யாததுக்கு காரணம் இது அவன் வீடு , அவன் தலையீடு தான் அதிகம் இருக்கணும் , அவனுக்கு பிடிச்ச மாதிரி தான் இருக்கணும் அதுதான் அவன் எண்ணம் ஆனால் சுதா அப்படி இல்லை மா...
அவங்க வீட்டு இளவரசி அவ!
அவளைக் கேட்காம சிவா சார் எதுவுமே செய்ய மாட்டார்.
என்ன செய்தாலும் அவளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்.
ஒரு இளவரசி மகாராணியா தான் போகணுமே தவிர அடிமையா இல்ல டா " என்றவருக்கே மனது பாரமாக இருந்தது.
சுதாவை மருமகளாக்குவதில் அவருக்கும் ஆசை இருக்கத் தான் செய்தது ஆனால் மகனைப் பற்றி நன்கு அறிவாறே!

ஒரேடியாக அதற்கு முற்றுப்புள்ளி வைத்து அவர் சென்றுவிட ராதாவும் அவர் பின்னே சென்றுவிட்டார்.

இருவரும் அறியவில்லை இதையெல்லாம் ஒரு ஜுவன் கேட்டுவிட்டது,
தந்தை பேசிய அனைத்தும் அவன் சுயமரியாதையை தூண்டி விட்டு அந்த மகாராணியை அடிமை ஆக்கியே தீருவேன் என கங்கணம் கட்டிக் கொண்டது என!!!

ப்ரியமுடன்
தனு❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro