விடை! வழி! தேடல்!
ரட்சக ராஜ்ய இளவரசிகளால் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பாக திரிபுரா நகரத்தின் எல்லையில் எழுப்பபட்ட அந்த மாயக் கவசத்தின்மேல் வந்து மோதியது, சமாராவின் மாயத் தாக்குதல்கள். இத்தனை காலமும் இருள்ராஜ்ய இளவரசனை அந்த நகரத்தினுள்ளே அனுமதிக்காமல் திடமாக நின்றிருந்த அக்கவசம், இன்று தன் இறுதிப் பிடியில் நின்றிருந்ததால் அவளின் ஒரு தாக்குதலுக்கே ஆட்டம் கண்டிட.. தன் சக்தியின் வேகத்தால் மெல்ல மெல்ல வலுவினை இழந்து நிர்மூலமாகும் அக்கவசத்தை ரசித்த நிலையில் நின்றிருந்தவளின் பின்னால் உணர்வற்ற முகத்துடன் நின்றிருந்தான், ஷேனா.
சமாராவின் கைகள் இரண்டும், வழுவிழந்த அக்கவசத்தை நோக்கியே குவிந்திருக்க.. அவள் கைகளின் வழியே பாய்ந்துவரும் கறுநிறக் கதிர்கள், இறுதிப்பிடியில் இருந்த இளவரசிகளின் சக்தியை முற்றிலுமாக உடைத்தெறிந்த நொடியில் அவள் இதழோரம் தோன்றியது பேராசையின் வெற்றிப் புன்னகை. கண்களை மூடி அந்நிகழ்வினை ரசித்தபடி, உடைக்கப்பட்ட எல்லை கவசத்தை தாண்டி திரிபுரா நகரத்தினுள் அடியெடுத்து வைத்தாள், சமாரா.
"ஷேனா," கைகள் இரண்டையும் விரித்த நிலையில், மூடியிருக்கும் தன் கண்களை அவள் திறக்க... அடர்ந்த இருளின் நிறத்தில் மிளிர்ந்த அவள் விழிகளுக்குள் பேராசையின் தேடல் அலைமோதியது. "இந்த திசை தான். இங்கதான் உன் சக்திகளுக்கு ஈடான அதீத சக்தியோட விசைய உணர்றேன் நான்" மீண்டும் அவள் கண்களை மூடி அந்த சக்தியின் விசையை உள்வாங்கி ரசிக்கத் தொடங்கிட.. கண்களை மூடிய நிலையில், ரட்சகனின் சக்தியை அபகறிக்கும் பேராசையின் உணர்ச்சி மிகுதியில் இருந்த அவள் முகத்தில் ஒரு தீடிர் குழப்பம். சட்டென இமைதிறந்தவள் எதிர்திசையில் தன் தலையை திருப்பினாள்.
"ஆனா, ஷேனா.. எதிர்திசையிலயும் அதேமாதிரியான ஒரு சக்தி இருக்குற மாதிரி தெரியுது."
"என்ன உளர்ற, சமாரா"
"நான், ஒன்னும் உளறல," அருகிலிருக்கும் ஒரு மறைவான புதரை நோக்கியபடி பல்லை கடித்தவள், "அதோட, சில அர்ப்பமான சக்திகளும் இங்க இருக்கு" என்றபடியே தன் கைகளை சுழற்றி அந்த புதரை தாக்கினாள். அவளின் தாக்குதல் அந்த மறைவிடத்தை அடைந்திடும் முன்பாகவே அபியின் மாயவாயிலால் அங்கிருந்து தப்பியிருந்தார்கள் இளவரசிகள்.
"அவங்களுக்குத் தெரிஞ்சுருச்சு, சமாரா.." அருகிலிருக்கும் அறிவிப்பு பலகையில் ஓங்கிக் குத்தியபடி, "தெளிவா சொல்லு.. அவன் எங்க இருக்கான். அவங்களுக்கு முன்னாடி நாம போகனும்." சமாராவை நோக்கினான்.
"ரெண்டு திசைலயும் ஒரே மாதிரியான சக்திகள் இருக்கு, ஷேனா! என்னால தெளிவா உணர முடியுது. நாம பிரிஞ்சு போகலாம்"
"அதுக்கு நேரமில்ல, சமாரா. ஏற்கனவே அவங்க நம்மள பாத்துட்டாங்க" எங்கோ பார்த்தபடி கடுகடுத்தவன், "அவங்க ஏதோ சதி செய்யுறாங்க" தனக்குத்தானே சொல்லிக்கொண்டபடி, நொடியும் தாமதிக்காமல் அருகிலிருக்கும் மரத்தின் மேல் ஏறி அதன் உச்சியை அடைந்தான். "அவன் இந்த திசையில தான் இருக்கான், சமாரா" உச்சியிலிருந்து கத்தியபடியே கீழே குதித்தவன், "இந்த திசைக்கு மாயவாயில தெற. இந்த திசையில உள்ள சக்திய மட்டும் இனிமே கவனி" அவளுக்கு ஆணையிட, "இன்னைக்கு அவன் என் வேட்டை" ஏளன புன்னகையுடன் ஒரு கருநிற மாய வாயிலை திறந்தாள், சமாரா.
✨✨✨
தன் வீட்டிலிருந்து புறப்பட்ட ரக்ஷவன், கோயில் இருக்கும் பாதையில்தான் நேராக நடந்துக் கொண்டிருந்தான். "டேய் ரக்ஷவ், நில்லு டா... எங்க போற நீ பாட்டுக்கு? நில்லு ரக்ஷவ். அட்லீஸ்ட் சொல்லிட்டாச்சும் போ டா டேய்," கத்திக்கொண்டே அவனைப் பின்தொடர்ந்து வரும் அர்ஜுனின் குரல், ரக்ஷவிற்குக் கேட்காமலெல்லாம் இல்லை. என்ன பதில் சொல்வது என்பது புரியாமல் தான் மனம் இழுக்கும் போக்கில் நடந்துக் கொண்டிருக்கிறான். கோவிலுக்குதான் போகவேண்டும் என்பது அவனுக்குத் தெரியும். ஆனால், உள்ளே சென்றதும் என்ன செய்ய? எங்கே போக? அது அவனுக்கே தெரியாமல் இருக்கையில் என்னவென்று பதில் கொடுப்பான்.
ரக்ஷவ் வேகமாக முன்னால் நடக்க.. கிட்டதட்ட பத்து-பதினைந்து அடிகளுக்கு அப்பால் வந்து கொண்டிருந்தான், அர்ஜுன். என்ன மாயமோ, ஓடி வந்தாலும் ரக்ஷவை நெருங்க முடியவில்லை அர்ஜுனால்.
ஒரு கட்டத்தில் கோவில் வாயிலும் ரக்ஷவின் காலடிக்கு வந்துவிட, அவன் நடையும் நின்றுவிட, 'ஹப்பாட! நின்னுட்டான்' என அர்ஜுன் மூச்சுவாங்கும் முன்னே வந்தது அவனுக்கான அதிர்ச்சி.
"டேய் ரக்ஷவ், கோவில் பூட்டி- ஹேய்! யார்ரா நீங்கலாம்?" பூட்டிய கதவில் முட்டிக்கொண்டு நிற்பதுபோல் நின்றவனை நோக்கிக் குரல் கொடுக்க முனைந்தவனுக்கு ஒரு அடி முன்னால், பளிச்சென மின்னிக்கொண்டு தோன்றிய இருள் புகைமூட்டத்தின் நடுவிலிருந்து வெளிவந்த இரு உருவங்களை கண்டு அர்ஜுன் வெடவெடத்து நிற்க... "ஷேனா, அவன் அங்க இருக்கான்" பின்னால் நின்று அதிர்ச்சிக் குரல் கொடுத்தவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தாலும், இப்போது, சமாராவின் மொத்த கவனமும் அதீத சக்தி கொண்ட ரட்சகனின் மீது தான் இருந்தது.
ஷேனாவும் சமாராவும் கோவில் வாயிலை தாண்டிச் செல்லும் ரட்சகனை நோக்கி நடக்க, "ஹேய், அவனுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை?" ஒரு வேகத்தில் சென்ற அர்ஜுன், ஷேனாவின் தோளை பிடித்தான். பதிலுக்கு, சிலிர்த்துக்கொண்டு ஷேனா வெடுக்கெனத் தன்னை மீட்டுக்கொண்டதில் அவனுக்கு இரண்டடித் தள்ளிச்சென்று விழுந்தான், அர்ஜுன்.
"ஹேய்! எந்த பிரச்சனையா இருந்தாலும் இப்போ வேண்டாம். இப்போ அவன எதுவும் செய்யாதீங்க, அவன்-" வெற்றுச் சாலையில் கீழே விழுந்திருந்தவன், ஷேனா இரண்டடி நகர்ந்த சமயம் எழுந்து நின்று அவனை நோக்கி குரல் கொடுத்த நொடி, "அப்போ நாளைக்கு எதுனாலும் செய்யலாமா?" திடீரெனத் தனக்கு பின்னால் கேட்டக் குரலால் படக்கென பின்னால் திரும்ப... அவனுக்கு ஒரு அடி பின்னால் மின்னிக்கொண்டிருந்த இரு நீல நிற கதவுகள் வழியாக இரண்டிரண்டு பேர் வெளிவந்ததை தொடர்ந்து, காற்றில் கரைந்து மறைந்தது அந்த கதவு.
மாயவாயிலில் இருந்து வெளிவந்த வேகத்தில் இளவரசிகள் இருவரும் தங்களின் சக்தியால் மாயக்கயிறு ஒன்றினை உருவாக்கி இருள்தேச இளவரசனின் கைகளையும் கால்களையும் கட்டி இழுக்க, இவர்களை இவ்வளவு விரைவாக எதிர்பார்த்திறாத ஷேனா, தடுமாறிக் கீழே விழுந்ததில் சமாராவின் பார்வை இவர்களை நோக்கித் திரும்பியது. "விருந்தாளிங்க இவ்வளவு சீக்கிரமா வந்துட்டீங்க!" புதிதாக வந்த நால்வரை நோக்கிய சமாரா, தன் கை நகங்களின் கூர்மையை காண்பித்து ஏளனமாக சிரித்தாள்.
திடுகிட்ட அர்ஜுன், தன் அருகில் நிற்பவளை நோக்கித் திரும்பி, "யாரு நீங்கலாம்? யாரா இருந்தாலும் சரி, என்னை தாண்டி தான் நீங்க ரக்ஷவ் கிட்ட போக முடியும்" அவளை தடுப்பது போல் தன் கைகள் இரண்டையும் நீட்டிக்கொண்டு தீராவின் முன்னால் நின்றான், அர்ஜுன்.
"அப்டியா?" அவனை மேலும் கீழும் பார்த்தவள், "மாமா இவனுக்கு எதுவும் பாதுகாப்பு குடுக்கணுமா?" அர்ஜுனை தாண்டிக்கொண்டு செல்லும் தன் அபி மாமாவை எட்டிப் பார்த்தபடி கேட்க, "ஆமா, நீ அவன் கூடவே இரு, இவங்கள நாங்க பாத்துக்குறோம்" காற்றில் கைநீட்டி தன் வாளினை வரவழைத்தபடி முன்னோக்கி நடந்தான் அபி. அக்காட்சியை கண்டு எச்சிலை விழுங்கியபடி மீண்டும் தீராவை நோக்கித் திரும்பினான், அர்ஜுன்.
"நி-நீங்கலாம்.. பேயா?"
"ச்ச பாவம் புள்ள பேயரஞ்ச மாதிரி ஆகிட்டான்," ஷேனாவை கட்டி இழுத்தபடி வந்த ரக்ஷா, அவனை தன் சகோதரன் கவனித்துக்கொல்லவும், தீராவிடம் வந்திருக்க, ரக்ஷவை நோக்கி நகர்த்த சமாராவை, மாயா, தன் ராஜ பதக்கத்தின் ஒளியை கொண்டு அடக்குவதை கவனித்து அங்கு ஓடினாள்.
"பயப்படாதீங்க தம்பி. நாங்க பேய்லாம் கெடையாது" தீராவின் சொல்லை தொடர்ந்து அவனின் பார்வை இளவரசிகளுடன் மல்லுக்கு நிற்கும் சமாராவின் மீது பதிய, வினோத ஒலியுடன் அலறியவள், கொடூரமான வௌவாளின் ரூபத்திற்கு மாறியதை கண்டு தீராவே சற்று அதிர்ந்துதான் போனாள். இந்நிலையில், அர்ஜுனின் கண்கள் அதிர்ச்சியின் எல்லைவரை விரிந்தது.
"அவள வேணும்னா நீ பேயா நெனச்சுக்கோ." இதுவரையில் இப்படி கொடிய ரூபத்திற்கு மாறிடும் எவரையும் பார்த்திராத தீரா, "நாங்கலாம் அப்டி-" தன் அதிர்ச்சியை மறைத்தபடியே அவனை சமாளிக்க முனைந்த நொடியில் வந்தது அவளுக்கான அடுத்த அதிர்ச்சி. இவள் இங்கு அர்ஜுனுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்த நொடியில் அங்கு இளவரசிகளின் ராஜபதக்க ஒளியின் வீரியத்தை தாங்க முடியாத சமாரா அலறுவதை கண்டு ஷேனா, நொடிப்பொழுதில் தன் இடத்தை அவளுடன் மாற்றிக்கொண்டான்.
தன் பதக்க ஒளியை கொண்டு ஷேனா, இளவரசிகளை எதிர்க்கத் தொடங்கி நேரம் அபியை அடைந்திருந்த சமாரா, அவன் கையிலிருந்த வாளை தன் நீண்ட இறக்கைகளால் தட்டிவிட்டு அவன் கழுத்தை பிடித்துத் தூக்கி மரத்தோடு வைத்து அழுத்தத் தொடங்கிவிட்டாள். அதை கண்ட தீராவின் சொல் அடங்கியது. சமாராவின் தாக்குதல் முறை வினோதமானதாக இருந்ததால் அபிக்கும் சட்டென அடுத்த நகர்வை முடிவெடுக்க முடியாமல் சிக்கிக்கொண்டிருக்க... இளவரசிகளும் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்ததால் அடுத்தநொடியே பரபரப்பாகினாள், அவள்.
"ஹே இங்க பாரு." அர்ஜுனின் கவனத்தை தன்னை நோக்கி இழுத்த தீரா, "நாங்க உங்களுக்கு ஹெல்ப் பண்ண தான் வந்துருக்கோம். நீ ஒடனே ரக்ஷவ் கூட போய் இரு. இத கைல வச்சுக்கோ" சாம்பல் போன்ற பொடி இருக்கும் பொட்டளத்தை அவன் கையில் கொடுத்தாள். "ஒருவேல இவங்க உள்ள வந்துட்டா, யோசிக்காம இத அவங்க மேல போடு.. சீக்கிரம் போ" செய்ய வேண்டியதை விளக்கமாகச் சொல்லி, அவனை பத்திரமாக கோவில் வாயிலின்புறம் அனுப்பியவாறே அபியிடம் விரைந்தாள், தீரா.
ஷேனாவும் சமாராவும் அர்ஜுனை கவனிக்கும் நிலையில் இல்லாததால் நேராக கோவில் கேட்டை அடைந்துவிட்ட அர்ஜூன், அதில் ஒரு பெரிய பூட்டு தொங்கவிடப்பட்டு இருப்பதை கண்டு அப்படியே நின்றுவிட்டான். 'சாவி இல்லாம எப்டி உள்ள போனான் இவன்?' பத்தடி உயரத்தில் இருந்த இரும்பு வாயிலை பார்த்து மலைத்துப் போய் நின்றவன், உள்ளே இருக்கும் கோபுரத்தின் வாயில் திறந்து இருப்பதியா பார்த்து சற்று குழப்பத்தில் இறந்தாலும், 'சரி, நம்ம பாக்காத உயரமா? நம்ம திறமைய காட்டுவோம்' தீரா கொடுத்த பொடியை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, சட்டை ஸ்லீவை மடக்கி விட்டபடி, ஏதோ இறுதித் தீர்ப்பு செல்லப் போகிறவன் போல் முன்னேறிச் சென்று தன் குரங்கு சேட்டையை காட்ட ஆரம்பித்தான். சுவரேறிக் குதிப்பதுபோல் அந்தப் பத்து அடி கேட்டில் ஏறி கோவிலுக்குள் குதித்த அர்ஜுன், பின்னால் திரும்பி வாயிலுக்கு வெளியே நடப்பதை பார்த்துக்கொண்டே ரக்ஷவன் சென்ற கோபுரத்தின் உள்ளே வேகமாக நுழைந்தான்.
❣️ சாகச பயணம் சளைக்காமல் வரும்❣️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro