Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

துரத்திடும் நினைவுகள்

இரவு உணவுக்கு பின், மொட்டை மாடியின் சுவற்றில் சாய்ந்தபடி கால்களை நீட்டிக்கொண்டு சங்கரி அமர்ந்திருக்க.. அவளின் இரு புதல்வன்களும், அன்னையின் மடிமீது தலை வைத்துக்கொண்டு இரு திசையிலும் கால் நீட்டிப் படுத்திருந்தார்கள்.

"ம்மா.." வானை பார்த்துக்கொண்டே, யோசனையுடன் அர்ஜுன் அழைக்க, "ம்ம்?" மகனை நோக்கினாள், சங்கரி.

"அப்டினா, எனக்கு ஒரு அத்த இருக்காங்களா?"

"ம்ம்.. ஆமா டா."

"அத்தைக்கு பொண்ணுங்க இருக்கா?" அவன் வானை நோக்கியபடியே கேட்க, மகனை ஒரு பார்வை பார்த்தவள், "ஒரே ஒரு மகன் மட்டும் தான்டா" எச்சரிக்கை செய்யும் குரலில் பதிலளித்தாள் அவள்.

"ச்ச.. பொண்ணு இருந்தா கல்யாணம் பண்ணி, அத்தையவும் சேத்து நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்கலாம்" தன் திட்டம் பொய்யாகிப் போன வேதனையில் அவன் நொந்துக்கொள்ள, "அடிங்கு.. வயசுக்கு ஏத்த பேச்சா டா பேசுற" மகனின் முதுகிலேயே ஓங்கி ஒரு அடியை வைத்தாள், சங்கரி. அதைகண்டு களாரெனே சிரித்தான், ஹர்ஷன்.

"ஹிஹிஹி.. எந்த விதத்துல அவங்க நமக்கு சொந்தம் ம்மா?" அர்ஜுனும் லேசாக சிரித்தபடி கேட்க, "அப்பாவோட தங்கச்சி?" அன்னையை முந்திக்கொண்டு, முழுதாக தெளிவில்லாமல் பதிலளித்தான், ஹர்ஷன்.

"ஆமா டா ஹர்ஷா.. உனக்கு நியாபகம் இருக்கா?"

"ம்ம்.. கொஞ்ச கொஞ்சம் ம்மா.. ....... கடைசியா நம்மக்கூட இருந்தப்போ அவங்க ப்ரக்னென்ட்டா இருந்தாங்கள்ல?" அத்தையுடன் பேசி விளையாடிய அந்த நினைவுகளில் ஒருசிலவை ஹர்ஷனின் நினைவுகளில் தலைதூக்க முயன்றது.

"ஆமா டா.. நம்ம அஜ்ஜுக்கும் தேவா பையன் ரக்ஷவனுக்கும் நாலு மாசம் தா வித்தியாசம்"

"ஹ்ம்ம்.. அவனாச்சும் பொண்ணா இருந்துருக்கலாம்" அன்னையின் சொல்லுக்கு, போலியான விரக்தியுடன் பெருமூச்சு விட்டான், அர்ஜுன்.

"ம்ம்? இருக்கலாம் இருக்கலாம்.. உங்கண்ணன் உன்ன பொண்ணா இருந்துருக்கலாம்குறான்.. நீ, அவன பொண்ணா இருக்கலாம்குற.. ஏன்டா இப்டி இருக்கீங்க?" இரு மகன்களையும் ஒரு விசித்ர பார்வையில் அவள் பார்க்க, "ம்மா.. அதெல்லாம் ஒரு தனி ஜாலி ம்மா. உனக்கு புரியாது.." சங்கரியின் மடியிலிருந்து குதூகலமாக எழுந்துவிட்டான், அர்ஜுன்.

"மண்டைலயே நாலு போடு போட்டா சரியா வரும் உனக்கு" மகனை முறைத்ததில் அவன் பல்லை காட்டிக்கொண்டே அன்னையின் தோளில் சாய்ந்து அமர்ந்துக்கொள்ள, "அத்த ஏன் ம்மா நம்மள விட்டு போனாங்க?" ஹர்ஷனின் குரல் சோகத்தில் ஒலித்தது. மகனின் கேள்வியால் சங்கரியின் முகமும் வேதனையில் தத்தளித்தது. எப்படி விளக்கிடுவாள் அந்த சம்பவத்தை. அதுவும், மாயங்களின் ஈடுபாடு உள்ள அந்த சம்பவத்தை என்னவென்று விளக்கி புரிய வைப்பாள்?

இப்போது வரையில், இவ்விருவருக்கும் தேவயாசினி என ஒரு அத்தை இருப்பதையும் அவள் தங்களை பிரிந்து வெகு தூரத்தில் இருப்பதையும் மட்டுமே சொல்லியிருக்கிறாள், சங்கரி. அதற்கு மேல் சொல்லிடுவதற்கு சங்கரியின் மனம் ஒப்பவில்லை. விரக்தியுடன் பெருமூச்சு விட்டவள், மகனுக்கு விடையளிக்கத் தொடங்கினாள்.

"அவளா போகல டா.. நம்ம வீட்டுல உள்ளவங்க தா அவ போக காரணம்."

"ஏன் ம்மா?"

"ஹ்ம்ம்.. நீங்க சின்ன புள்ளைங்க டா.. அதெல்லாம் உங்களுக்கு புரியாது"

"நீ சொல்லு ம்மா. சொன்னா தானே புரியுதா இல்லையான்னு தெரியும்" இளைய மகனின் சொல்லுக்கு விளக்கம் கொடுக்க வேண்டுமென ஒரு மனம் நினைத்தாலும் இன்னொருபுறம் பெரும் தயக்கம் அவளுக்கு. அந்த தயக்கத்தை உணர்ந்துக் கொண்டார்கள், சகோதரன்கள் இருவரும்.

"ம்ச்.. சரி புரியாமலே இருக்கட்டும் ம்மா, இப்போ அத்தைக்கு ரொம்ப முடியலன்னு சொன்னா கூடவா நம்ம வீட்டுக்கு கூப்ட மாட்டாங்க? அவ்ளோ கோபமா தாத்தாக்கும் பாட்டிக்கும்?"

"இல்ல டா ஹர்ஷா... அது கோபம் கெடையாது. ஆனா, வீட்டுக்குள்ள வர விட மாட்டாங்க டா."

"ஏன் ம்மா? அப்டி என்ன பிரச்சன?"

"இப்போ தானே சொன்னேன், உங்க ரெண்டு பேருக்கும் அந்த பிரச்சன புரியாதுன்னு"

"அட போ ம்மா" இதற்குமேல் கேள்வி கேட்க பொறுமை இல்லாமல் சலித்துக்கொண்டு கண்களை மூடி படுத்துக் கொண்டான், ஹர்ஷன்.

அர்ஜுன் தோளிலும் ஹர்ஷன் மடியிலும் என சங்கரியின் நொடிகள் மௌனமாகவே கடந்துக் கொண்டிருக்க, "அத்தைய நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதுக்கு இப்போ என்ன ம்மா செய்யலாம்?" சில நொடிகளிலேயே அந்த மௌனத்தை கலைத்தான், ஹர்ஷன். 

"ம்மா.. நானும் அண்ணனும் அத்த வீட்டுக்கு போறோம் ம்மா.. அண்ணன் தா வண்டிக்கு லைசன்ஸ் வாங்கீட்டான்ல." அர்ஜுன் துள்ளிக்கொண்டு எழ, அவன் கூறிய யோசனை நன்றாக இருந்ததால் கண்கள் மின்ன அன்னையை நோக்கினான், ஹர்ஷன்.

"டேய்! தனியா எப்டி டா அவ்ளோ தூரம் போவீங்க?"

"ம்மா, நாங்க பிரேவ் பாய்ஸ்.. அதெல்லாம் தனியா போய் இந்தியாவையே சுத்தீட்டு வந்துருவோம். இந்தா இருக்குற தேனிக்கு போக தெரியாதா எங்களுக்கு?" சட்டையை தூக்கிவிட்டு அர்ஜுன் கூற, "ஆமா, ம்மா. நானும் லைசன்ஸ் வாங்குன அன்னைல இருந்து கேட்டுட்டு இருக்கேன், லாங் ட்ரைவ் போனும்ன்னு. ப்ளீஸ் ம்மா.. இப்போ அத்த வீட்டுக்கு போய் அவங்களுக்கு உடம்பு சரி ஆகுற வரையும் கூடவே இருந்துட்டு வாறோம் ம்மா" ஹர்ஷனும் தம்பியுடன் இணைந்துக் கொண்ட அந்த வேலையில், "என் குடும்பம் மொத்தமா மாடில ஒக்காந்து என்ன பண்ணுறீங்க?" எதார்த்தமாக மாடியில் பிரவேசித்தார், அவர்களின் குடும்ப தலைவர். செல்வகுமார்.

"அப்பா, நாங்க தேவா அத்தைய பாக்க தேனி போறோம் நாளைக்கு"

"ஆமா. அண்ணனுக்கும் எனக்கும் லீவ் ஸ்டார்ட் ஆகி ஒரு வாரம் ஆக போகுது. சோ, நாங்க லீவ் முடியுற வரைக்கும் வெகேஷன் போறோம்." தீர்மானமாக தந்தையை நோக்கினார்கள், சகோதரன்கள் இருவரும். அவரோ, அதிர்ச்சியுடன் மனைவியை நோக்க... பதிலளிக்க முடியாமல், இங்கேயும் அங்கேயுமாக பார்வையை சுழற்றினாள், சங்கரி.

✨✨✨


~ அவன் நிற்கும் இடத்தை சுற்றிலும் கருங்கும்மென இருள். ஆனால், மினுமினுக்கும் பல வண்ணங்கள் அவனை சூழ்ந்திருந்தது. அதன் அழகில் வியந்து அவைகளை பார்த்துக் கொண்டிருந்தான், அவன். 

மின்மினி போன்ற பட்டாம்பூச்சிகள்... நட்சத்திரம் போல் ஜொலிக்கும் இலைகளை கொண்ட மரங்கள்... அதன் கிளைகளுக்கு இடையிடையே அழகாக எட்டிப்பார்க்கும் ஏதேதோ மிருகங்களின் குட்டிக் குட்டி கண்கள்... அவன் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் கலகலவென குலுங்கிச் சிரிக்கும் புல்வெளி... அவைகளின் சிரிப்பொலியை கேட்டு, புள்ளிமான் குட்டியைபோல் உற்சாகத்தில் துள்ளிக் கொண்டிருந்தான் அங்கே. திடீரென அனைத்தும் மாயமானது.. காரிருள் சூழ்ந்தது.. ஏதேதோ அமானுஷ்யங்கள் அவனை துரத்துவதுபோல் ஒரு பிரம்மை.

பிரம்மை போல்தான் முதலில் தோன்றியது. ஆனால், நொடிகள் நகர நகர அவனை சுற்றி இருந்த இடமெல்லாம் மயான பூமியாய் மாறியது. அவனை சுற்றி எங்கிலும் சவங்கள்! அவைகளில் இருந்த ஆன்மாக்கள் யாவும் கோரமாக அலரியபடியே உடலை விட்டுப் பிரிந்து மேல்நோக்கிச் செல்ல.. மேலே செல்லும் அணைத்து ஆன்மாக்களும் எல்லையில்லாத அந்த அகோர கதவினுள் சென்று மறைந்துக் கொண்டிருந்தது. 

எச்சிலை கூட்டி விழுங்கியபடி அந்த கதவினை நோக்கி அவன் நிமிர.. அதன் வழியே, குருதி படிந்த ஒரு வலிய கரம், அவன் கழுத்தை பிடிக்கச் சீறிக்கொண்டு வந்தது. ~

பயத்தில் பட்டென விழி திறந்தான், ரக்ஷவன். அவன் கண்களை விரித்த வேகத்தில், தோழனின் முகத்தில் தண்ணீரை ஊற்றி அவனை எழுப்ப வந்த மயூரிதான் பயந்துப்போய், நெஞ்சில் கை வைத்தபடி இரண்டடி பின்னே நகர்ந்தாள். அவள் வைத்திருந்த தண்ணீர் குவளை, அவள் மேலேயே கொட்டியதுதான் மிச்சம்.

"தேவா ம்மா! இவன எழுப்புறது கஷ்டம், முடியாது, நடக்காதுன்னுலாம் பெருசா சொன்னீங்க? இப்டி, எழுப்புறதுக்கு முன்னாடியே எந்திருச்சு ஒக்காந்துட்டு என்னைய பயம்புருத்தீட்டு இருக்கான் உங்க மகன்!!" தேவயாசினியிடம் மயூரி குற்றம் சாட.. தன்னை சுற்றி உள்ளவர்களை கவனிக்கும் நிலையில் இல்லாத ரக்ஷவன், அரண்ட விழியுடன் அன்னையை நோக்கி நிமிர்ந்தான். தாயும், தன் மகனின் முகத்தில் உள்ள மாறுதலை கணித்து, ஏதோ கனவு கண்டிருக்கிறான் என்பதை யூகித்துவிட்டாள்.

"ம்மா.."

"என்ன டா?"

"எனக்கு என்ன ம்மா ஆச்சு? ஏன் எல்லாரும் என்னை சுத்தி நிக்குறீங்க?" அந்த கனவின் பிடியிலிருந்து இன்னும் மீளாதவன், தனக்கு ஏதோ ஆகி, மயங்கி விழுந்து விட்டோமோ? அதனால்தான் அனைவரும் பயத்தில் தன்னை சூழ்ந்து நிற்கிறார்களோ என நினைக்கத் தொடங்கியிருந்த நேரத்தில், "ஹாப்பி பர்த்-டே ரக்ஷவ்." கலகலவென சிரித்துக்கொண்டே அவனை மெத்தையிலிருந்து இழுத்துத் தரையில் நிறுத்தினார்கள், மித்ராவும் மயூரியும்.

இருவரின் முகமும் புது மலர்களாய் மலர்ந்திருக்க.. அவ்விருவரையும் கண்டு திருதிருவென விழித்தவன், ஓரிரு நொடிகள் கடந்த பின்னரே தன்னை சுற்றிலும் பலூன்கள் பறப்பதை உணர்ந்து முகம் வாடினான்.

"இப்போ எதுக்கு இதெல்லாம் செஞ்சீங்க? நா, பர்த்-டே'லாம் கொண்டாட மாட்டேன்னு உங்களுக்கு தெரியும்ல" அவர்களின் மகிழ்ச்சியில் ஒரு பற்றுதல் இல்லாமல், வாடிய குரலில் அவன் பேச.

"தெரியும் டா.. அதனால-"

"தெறிஞ்சுட்டே ஏன் இப்டி செஞ்சீங்க?" அவனுக்கு விளக்கம் கொடுக்க முன்வந்த மித்ராவை இடைமறித்துக் கத்தியவனின் விழியில், கண்ணீர் லேசாகக் கசியத் தொடங்கியது. மகனின் நிலையை கண்டு அவன் தாயின் மனமும் துடித்தது.

"ரக்ஷவ், எல்லா வருஷமும் நீ உன் அப்பாவ நெனச்சுட்டே உன் சந்தோஷத்த விட்டுர்ற.. அப்பாவ நெனைக்க வேணாம்ன்னு சொல்லல நான். அதுக்குன்னு உன்ன அப்டியே விட்டுறுவோம்ன்னும் நெனைக்காத. நீ, உன்னோட பொறந்தநாள் அன்னைக்குன்னு இப்டி அழுமூஞ்சியா இருக்குறது உன் அப்பாவுக்கு புடிக்குமா சொல்லு? அவங்களும் நீ சந்தோஷமா இருக்குறததானே பாக்க நெனைப்பாங்க?"

"மித்ரா க்கா.. எனக்கு எந்த சந்தோஷமும் வேணாம். இதெல்லாம் எனக்கு பண்ணனும்ன்னு எந்த எண்ணமும் இல்லவே இல்ல" தன் கையை அறையெங்கிலும் இருந்த அலங்காரங்களை நோக்கி சுட்டிக் காட்டியவன், "எனக்கு பர்த்-டே'வே வேணாம்.. அத நெனச்சாலே-.. .. .. பயமா இருக்கு." அவன் குரல் உடைந்தது. அதைகண்டு அவன் தோழிக்கு மனம் பொறுக்கவில்லை.

"என்ன பயம் உனக்கு? ஹான்? நீ பொறந்தப்போ ஒரு தப்பு நடந்துப் போச்சுன்னு எல்லா வருஷமும் அதே மாதிரி நடக்கும்ன்னு நெனச்சு பயந்துட்டு இருக்கியா நீ? இதெல்லாம் சின்னபுள்ளத் தனமா இல்ல உனக்கே?"

"உனக்கு சொன்னா புரியாது, மயூ. என்னை விட்டுருங்க. எனக்கு- ... ... எனக்கு இதெல்லாம் வேணாம். ஒரு விஷ்ஷோட நிறுத்திக்கோங்களேன் எல்லாரும்"

"அந்த அளவுக்கு உனக்கு என்ன டா பிரச்சன? சொன்ன தானே எங்களுக்கும் புரியும்."

"அய்யோ! நான் என்னன்னு சொல்ல?" தலைமுடியை இருக்கமாகப் பற்றிக்கொண்டு கத்தியவன், இயலாமையுடன் தன் கட்டிலில் அமர்ந்தான். "என் அப்பாவோட ஃப்போட்டோ கூட பாக்க முடியாத அன்-லக்கி நான்.. .. அப்பா எப்டி பேசுவாங்க? என்னை என்னன்னு கூப்டுவாங்க? என்கூட இருந்துருந்தா.. .. என்ன-.. என்னென்ன மாதிரிலாம் வளத்துருப்பாங்க? .... ... இப்டி எதுவுமே என்னால யோசிச்சுப் பாக்க முடில. அப்பாவ பத்தி எது கேட்டாலும் நா- நா அழுவேன்னு.. அம்மா கூட எதுவும் சொல்ல மாட்டேங்குறாங்க. அட்லீஸ்ட்- அட்லீஸ்ட் என் அப்பாவோட எறந்த நாளையாச்சும் நியாபகம் வச்சு, அவங்கள உணர ட்ரை பண்ணிக்குறேனே?"  கண்ணீரும் வலியுமாக மெத்தையில் அமர்ந்திருக்கும் அவனை, வேதனையுடன் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் மற்ற மூவரும்.    


❣️ ✨ சாகச பயணம் சலைக்காமல் வரும் ✨ ❣️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro