தமிழ் எக்ஸாம்!
"அண்ணா, நீ ரெஸ்ட் எடுக்கலாம்ல? எதுக்கு அண்ணா அலைச்சல்?"
"அதெல்லாம் ஒன்னும் இல்ல. நாம போலாம்"
இன்னும் முழுமையாக குணமாகாத தன் சகோதரனை நோக்கி இளைய இளவரசி கவலையுடன் கேட்டதற்கு, தன் சொல்லில் எவ்வித உணர்வும் இல்லாமல் பதில் கொடுத்த அபி, அமைதியாக முன்னால் நடந்தான்.
அவனின் செயலை கண்டு ஒருவரை ஒருவர் வேதனையுடன் பார்த்துக்கொண்ட சகோதரிகள் இருவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. தங்கள் சகோதரன் மயக்கத்திலிருந்து எழுந்தது முதல் முகத்தில் கலையற்று சொல்லில் உயிர்ப்பற்று வேறு யாரோ போல் தான் இருக்கிறான். இவர்களின் அரவிந்தன் மாமாவும் 'அபியின் ஆத்ம-சக்தி மீண்டும் வலு பெறுவதற்கு குறைந்தது இரண்டு வாரமாவது ஆகும் என கணித்திருந்தது எல்லாம் சரியாக தான் இருந்திருக்கிறது. ஆனால் எப்படியோ இவன் முன்பாகவே எழுந்துவிட்டாலும் அவனின் ஆத்ம சக்தி இன்னும் குணமாகவில்லை' என சொல்லியிருந்தார்.
இப்போது, தீரா சொல்லிவிட்டு சென்ற செயலை முடிப்பதற்காக நுவழி பாட்டியின் வீட்டுக்கு இளவரசிகள் புறப்பட... தானும் உடன் வருவதாக சொல்லி அவர்களுடன் புறப்பட்டு விட்டான் அபி.
ரக்ஷாவிற்கு பதிலளித்துவிட்டு ஒருசில அடிகள் நடந்தவன், அவ்விருவரும் தன்னை தொடராததை கண்டு தன் நடையை நிறுத்தி, "என்ன? வரலையா?" பின்னோக்கி இருவரையும் பார்க்க, "ம்ம் வாறோம், அண்ணா" அவனுடன் சேர்ந்தே நடந்தவர்கள், இரண்டு நிமிடத்தில் நுவழி பாட்டியின் வீட்டை அடைந்து விட்டார்கள்.
"வாருங்கள் இளவரசி-"கதவை திறந்த நொடியில் இளவரசிகளின் முகங்களை கண்டு மகிழ்ந்த நுவழி பாட்டியின் கண்கள், அபியை கண்ட நொடியில் அவனை மட்டும் நோக்கிக் குறுகியது.
"உங்கள் அண்ணன் ஏன் இப்படி இருக்கிறான்?"
"அதுவா பாட்டி, ரட்சகனோட கவசம் நீங்குனப்போ நாங்க அங்க போயிருந்தோம்ல, அப்போ நிழல் தேசத்த சேந்தவங்க இவனோட ஆத்ம-சக்திய எடுத்துக்குட்டாங்க. அதனால தான் இப்டி" மாயா பதில் கொடுக்க, "சரி, உள்ளே வாருங்கள்" அம்மூவரும் வீட்டினுள்ளே வருவதற்கு வழி கொடுத்து நின்ற நுவழி பாட்டி, அபியின் மீது வைத்திருந்த தன் பார்வையை திருப்பியிருந்தாலும் அவனையே தான் கவனித்துக் கொண்டிருந்தார்.
வீட்டின் உள்ளே வந்துவிட்ட மூவரும் கூடத்தில் இருக்கும் மேஜையில் சென்று அமர்ந்துக்கொண்டதும் அவர்கள் குடிப்பதற்காக பழசாரை பிழிந்து எடுத்து வந்த பாட்டி, "ரட்சகனின் வாள் குறித்த குழப்பம் இன்னும் உங்கள் மனதை விட்டு அகலவில்லை போலவே, இளவரசி!" அவர்கள் வந்த காரணம் ரட்சகன் குறித்ததாக தான் இருக்கும் என் யூகித்து மெல்ல பேச்சை தொடங்கிட, தன் பழசாறு குவளையை மேஜையில் வைத்தபடி வந்த காரியத்தை ஆரம்பித்தாள், மாயா.
"பாட்டி, ஒருத்தவங்களோட ஆத்ம-வாள் அவங்களோட ஆத்ம நிறத்த தவிற வேற நிறத்துல மின்னுமா?"
"அதற்கு வாய்ப்பில்லையே, இளவரசி. வாளின் நிறம் வேண்டுமானால் எண்ணங்களுக்கும் குணத்திற்கும் ஏற்ப மாறுபடலாம், ஆனால் அதன் பிரகாசம் ஆத்ம ஒளியன்றி வேறு நிறத்துக்கு மாறாது."
"ஆனா ரட்சகனோட வாள் மின்னுச்சே! அதுவும் தங்க நிறத்துல!!"
"தங்க நிறமா?" அவ்வளவு நேரம் புன்னகைத்திருந்த பாட்டியின் முகம், கேட்கக் கூடாத ஏதோ ஒன்றினை கேட்டது போல் கல்லாக உரைந்தது.
"ஆமா, பாட்டி. தங்க நிறத்துல கூட ஆத்மநிறம் இருக்கா என்ன?" பாட்டியின் முக மாறுதல்களை கவனித்தபடியே ரக்ஷா கேட்க, "இருக்கிறது, இளவரசிகளே.. இருளின் நேரடி படைப்புகளுக்கு மட்டுமே இருக்கிறது தங்க நிற ஆத்ம-ஒளி" நீண்ட பெருமூச்சுக்குப் பின் சில மௌன நொடிகள் கடந்தே வந்தது நுவழி பாட்டியின் பதில்.
"இருளோட நேரடி படைப்பா?" தனக்கு கொடுக்கப்பட்ட பழசாரை கூட குடிக்காமல் இவ்வளவு நேரம் அமைதியாக அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த அபி, பார்வையை எங்கோ வைத்தபடி கேட்க, "ஒளியை அழிக்க இருளால் உருவாக்கப்பட்ட சக்தியும் அந்த சக்தி பிறக்கும் வரையில் அதனை காக்கவென உருவாக்கபட்ட சக்தியும் தான்." அவன் கண்களை கவனித்தபடியே பதில் கொடுத்தார், பாட்டி.
"ஆனா... ரட்சகன் ஒளியோட மகனாச்சே! மறுபிறப்பு எடுத்தாலும் ஆத்மநிறம் மாறாதில்லையா, பாட்டி?"
"ஆத்மநிறம் மாறாது தான், இளவரசி" மாயாவின் கேள்வியால் அபியின் மீதிருந்தத் தன் பார்வையை அவள் புறம் திருப்பியவர், "ஆனால், ஒருவரின் ஆத்மசக்தியை மற்றவர் முழுதாக பெற்றுக்கொண்டால் அது மாற்றம் கொள்ளும்" என சொல்லிக்கொண்டே அருகில் இருக்கும் சிறிய அறைக்குள் நுழைந்தவர், எவரும் தன்னை கவனிக்கவில்லை என்பதை உறுதிபடுத்திய பின்பு மேல்நோக்கித் தன் ஒரு கையை நீட்ட.. பாட்டியின் கைகள் மரக்கிளையாய் மாறி மேலே சென்று பரணில் பத்திரமாகத் துணி சுற்றப்பட்டு இருக்கும் ஒரு மூட்டையை எடுத்தது.
வேண்டியது கைக்குக் கிடைத்ததும் தன் கையை பழைய நிலைக்கு மாற்றிக்கொண்டவர், "இதை படித்தால் உங்களுக்கே புரியும், இளவரசிகளே" அந்த துணிப்பந்தினுள் இருந்து கையடக்கப் புத்தகம் ஒன்றினை வெளியே எடுத்து அதை தூசி தட்டிக்கொண்டே அறையிலிருந்து வெளியே கொண்டு வந்தார்.
"இது ஒரு மாயோள் புத்தகம் தானே!"
" நீங்க உருவாக்குனதா?" இரு இளவரசிகளும் ஆர்வமாக எழுந்து நின்றுவிட, "இல்லை, இளவரசிகளே!" அவர்களை மீண்டும் அமரச் செய்தவர், "அதனை உருவாக்கிடும் விதிமுறைகளை மட்டுமே நான் அறிவேன், மாயோளை நான் உருவாக்கியதில்லை இதுவரையில். இது எனக்கு ஒருவர் கொடுத்தது. மாயோளுக்கு தெரியும், எதை எப்போது யாரின் கண்களில் காண்பிக்க வேண்டுமென" புன்னகைத்தபடி அந்த கையடக்க புத்தகத்தை மேஜையின் மையத்தில் வைத்தவர், "உங்கள் கேள்விக்கான விடை இதில் கிடைக்குமென நம்புகிறேன்." என்றுவிட்ட இளவரசிகள் தங்கள் கைபட அதை திறப்பதற்காக காத்திருந்தார் அவர்.
மாயா, தன் கேள்வியை மனதினுள் கேட்டுக்கொண்டே அந்த புத்தகத்தின் முதல் பக்கத்தை விரிக்க.. அதில், இரண்டு நிழல் உருவங்கள் மட்டுமே தெரிந்தது. ஒரு தங்க நிற நிழல்.. இன்னொன்று வெள்ளை நிற நிழல். அடுத்த பக்கத்தை அவள் திருப்பிட... அதே இரு நிழல்கள் தான்; ஆனால், சிவப்பு-நீலம் கொண்ட பல நிழல் உருவங்களை கொண்ட ஒரு போர்களத்தின் மத்தியில். அடுத்த பக்கம், தரையில் மண்டியிட்டுக் கிடந்த தங்கநிற நிழல், தன் முன்னால் நிமிர்ந்த தேகத்துடன் நின்றிருக்கும் அந்த வெள்ளை நிற நிழலுக்குத் தன் ஆத்ம ஒளியை தானாகவே தாரை வார்த்துக் கொடுப்பதுபோல் அமைந்திருந்தது அந்த காட்சி. அடுத்த பக்கம்.. அவ்வளவு தான், அடுத்த பக்கத்தில் வெறுமையே. எனில், மாயோள் காண்பிக்க நினைத்த காட்சிகள் அவ்வளவுதான்.
மூவரும் நிமிர்ந்து பாட்டியை பார்க்க, "இருளின் வாரிசு அவன் ஆத்ம-சக்தியை ரட்சகனுக்குக் கொடுத்திருக்கிறான்" அவர்களின் சந்தேககத்தை மெய்யென எடுத்துக் கூறினார் அவர்.
"ஆனா ஏன்? நம்ம சரித்திரத்துல அவங்க ரெண்டுபேரும் ஒருத்தர ஒருத்தர் எதிர்த்து போரிட்டாங்கன்னு தானே இருக்கு?"
"சரித்திரத்தில் கவனம் தேவை, இளவரசி. அனைத்து சரித்திரங்களும் தெளிவாக மெய்யை காண்பிப்பதில்லை. சிலவற்றை இலைமறைகாயாகத் தான் காண்பிக்கும்." ரக்ஷாவின் குழப்பத்துக்கு நுவழி பாட்டி விளக்கம் கொடுத்தாலும் அவர்களின் நிலை இன்னும் மாறாமலே இருக்க, "சந்தேககம் வேண்டாம், இது மெய் தான். மாயோள் என்றும் பொய்யுரைப்பதில்லை." புன்னகையுடன் அந்த புத்தகத்தை மூடினார், நுவழி பாட்டி.
✨✨✨
~ அவன் கை தன் பிடியிலிருந்து நழுவிவிடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டு பூஞ்சோலை வழியாக நடந்துக் கொண்டிருந்தவள், 'அதை' கண்ட நொடியில் அவன் கையையெல்லாம் கண்டுகொள்ளாமல் வேகமாக ஓடினாள் அதை நோக்கி. செதுக்கிச் செய்தது போல் இருக்கும் ஒரு உருண்டையான பாறை அது.
"இங்கு வா... இங்கு வா.." பாறையின் பக்கவாட்டில் அமர்ந்தவள் அதில் தன் தலையை சாய்த்துக்கொண்டு இரண்டு கைகளாலும் அதை கட்டி அனைத்தபடி அவனையும் தன் அருகே அழைக்க.. பாதியளவே அணைக்க முடிந்தது அவளால். அவள் செய்கையை கண்டு புன்னகைத்தான் அவன்.
"என்ன செய்கிறாய் நீ?"
"வா.. நீயும் வந்து கேள்.. வா வா" அவள் ஆர்வமாக அழைப்பதை பார்த்து அவளுக்கு மறுபக்கமாக சென்று அமர்ந்தவன், அவள் செய்வது போலவே அந்த பாறையின் மேல் தலையை வைத்துக்கொண்டு இரண்டு கைகளையும் அதில் பதிக்க.. அதில் என்ன உணர்ந்தானோ! அவன் முகம் மாறியது.. புன்னகை கரைந்தது.. கண்கள் கலங்கியது... கையானது, அருகில் இருப்பவளின் கையை தேடி ஊர்ந்து சென்று அதை இறுக்கமாக பற்றிக் கொண்டது. அடுத்த நொடி, இருவரின் கண்களும் சங்கமித்த நேரத்தில் அவன் கண்ணீரும் தொட்டது அந்த பாறையை. அதை கண்டு அவள் கண்களோ வேதனையுடன் புன்னகைத்தது.
"இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் இந்த பிரிவு ?"
"பதில் இல்லை என்னிடம்."
"என்னை விட அதிக வலி உனக்கு தானே!" அவள் சொல்லால் தோன்றிய தன் உணர்வை மறைக்க படக்கென எழுந்துக் கொண்டவன், "வா, நம் பாதையை தொடரலாம்" என அவளை அழைக்க.. கொஞ்சமும் நகரவில்லை அவள். அவன் சொல்லுக்கு மறுப்பாக தலையை மட்டும் அசைத்தாள்.
"நான் இங்கு இருக்க விரும்புகிறேன்" பாறையை கட்டிப் பிடித்தபடி அவள் சொல்ல , சில நொடி அமைதிக்குபின், "சரி... கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு புறப்படலாம்" தன்னை நோக்கி நிமிராமல் பாறையில் தலை சாய்த்திருந்தவளை பார்த்து சொல்லிவிட்டு மெதுவாக நடந்து சென்று ஒரு மரத்தடியில் அமர்ந்து அதில் சாய்ந்தபடி கண் மூடினான். ~
✨✨✨
"எங்க போனா அவ..." ஒருவனிடம் பல்ப் வாங்கிவிட்ட கடுப்புடன், ரக்ஷவன் இருக்கும் தேர்வறையை சுற்றி நடந்தபடியே சற்றுமுன் தன் கண்ணில் சிக்கிய அந்த மனித வௌவாளை தேடிக் கொண்டிருந்தவள், "என்ன தீரா? எக்ஸாம் ஹாலுக்கு போல?" என்ற குரல் கேட்கும் வரையில் ஒன்றை மறந்திருந்தாள். கேட்டில் வைத்து ஒருவன் தன்னை அழைத்த நொடி முதலாக பிறர் பார்வையிலிருந்து தன்னை மறைத்து வைத்திருக்கும் மாயத்தை தன்னிலிருந்து நீக்கியிருந்தாள் என்பதை.
தன் வகுப்பாசிரியர் குரல் கேட்டு படக்கென பின்னால் திரும்பியவள், "அ- அது ஸார்.. ஹால்... போனேன்.. மாறி போய்ட்டேன்.. அதான் நம்பர் செக் பண்ண வந்தேன்" மனதில் உதித்ததை சொல்லி சமாளித்து விட்டாள்.
"சரி, பாத்துட்டு கெளம்பு" என சொல்லிவிட்டு அவர் அங்கேயே நிற்க, "போன தடவ ஸ்கூல் படிச்ச மாறி அட்மிஷன் போடாம சும்மா வந்துட்டு போறேன்னு சொன்னா கேட்டானுங்களா அவனுங்க.. இப்போ பாரு, டெய்லி அட்டென்டன்ஸ் குடுக்கணும்.. எக்ஸாம் எழுதனும்.. எல்லாம் அவனால வந்தது" நோட்டீஸ் போர்ட் முன் சென்று போஸ் கொடுத்தபடி நின்றிருந்தவள், மனதில் யாரை நினைத்துக்கொண்டு முணுமுணுத்துக் கொண்டாளோ, "எவ்ளோ நேரம்." மீண்டும் கேட்டத் தன் வகுப்பாசிரியரின் குரலால் அந்த எண்ணங்களை அப்படியே விட்டுவிட்டு, "தோ பாத்துட்டேன் ஸார்" என முடிந்தளவு வேகமாக அவர் பார்வையிலிருந்து தப்பிடுவதற்காக ஒரு வகுப்பறைக்குள் நுழைந்துக்கொண்டாள்.
ரக்ஷவும் இவளும் ஒரே வகுப்பில் இருப்பதால் எப்படியும் அவன் இருக்கும் அதே தேர்வறையில் தான் இவளுக்கும் இடம் இருக்கும் என ஒரு குருட்டு நம்பிக்கையில் அவளின் தேர்வு எண்ணை கூட சரியாக கவனிக்காமல் அவன் இருக்கும் அதே அறைக்குள் வந்துவிட்டவள், காலியாக இருக்கும் ஒரு இடத்தில் சென்று அமர்ந்துகொண்டு உள்ளிருக்கும் முக்கியமானவர்களை நோட்டமிடத் தொடங்கினாள்.
'இவன் இங்க தான் இருக்கான்' வாசலில் இருக்கும் முதல் பென்ச்சில் உள்ள ரக்ஷவை கண்டவள் அப்படியே பார்வையை சுழற்ற... 'இவளும் இங்க தான் இருக்கா..' மயூவையும் பார்த்துவிட்டு எதேர்சையாக அவள் அமர்ந்திருக்கும் பென்ச்சின் மறுபக்கம் இருப்பவனையும் பார்க்க.. சரியாக அவனும் இவளை நோக்கி லேசாக புன்னகைத்தான். 'அட!! நம்ம குச்சி டப்பா!' மனதில் நினைத்தபடியே பதிலுக்கு புன்னகைத்தவள், 'எல்லாரும் இங்க தான் இருக்காங்க, ஆனா அந்த வௌவாள மட்டும் காணோமே' என குழம்பியபடியே தன் முன்னால் இருக்கும் ஓ.எம்.ஆர் ஷீட்டில் கலர் அடிக்கத் தொடங்கினாள் அவள்.
அவளின் விடைதாளின் முகப்புப் பக்கம் நிறப்பப்பட்டு நிமிடங்கள் கடந்திருந்தது, ஆனால் மறுபக்கத்திற்கு செல்லும் முடிவில் இல்லை அவள். சமாராவை தேடிடும் தீராவின் பார்வையானது ஜன்னல், கதவு, வெளியே இருக்கும் மரங்கள் பக்கத்து வகுப்பறை-கட்டிடம் என அனைத்தையும் அளந்துக் கொண்டிருந்த சமயம் அவளை மெல்லியதாக அடைந்தது அந்த சத்தம்.
"ஸ்க் ஸ்க்" முதலில் அந்த சத்தத்தை சரியாக கவனிக்காதவள் டேபிளுக்குக் கீழே சுற்றி முற்றி தேட.. மீண்டும் கேட்டது அதே சத்தம். கூடுதலாக இரண்டு வார்த்தைகளுடன்.
"ஓய், இங்க" இம்முறை கச்சிதமாக அந்த சத்தம் வரும் திசையை கணித்துவிட்டவள் படக்கென தனக்கு பக்கவாட்டில் திரும்ப.. அவன் தான் மீண்டும் புன்னகைத்தான்.
"என்ன?" மொனமாக அவள் வாயை மட்டும் அசைக்க, "ஆன்சர் தெரியலையா?" அவளின் முறையையே பிடித்துக்கொண்டு கேட்டான் அவனும்.
"ஏன்? சொல்லி தர போறியா?"
"உன் கொஸ்டீன் பேப்பர குடு" ஹால் சூப்பர் வைசரின் பார்வை அப்பக்கமாக திரும்பிய நேரம் பார்த்து லபக்கென அவள் பக்கம் இருந்த வினாத்தாளை தூக்கிக்கொண்டான் அவன்.
'அட! இவன் சமூக சேவகன் போலவே!' மனதினுள் சிரித்துக்கொண்டே அவன் என்ன செய்கிறான் என பார்க்க.. தன்னுடைய விடைதாளை அனாதையாக விட்டுவிட்ட அவளுடைய வினாத்தாளில் தான் தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தான் அவன். என்ன எழுதுகிறான் என எட்டிப் பார்ப்பவளுக்கு எதுவும் தெரியாதது போல் மறைத்து வைத்து எழுதிக் கொண்டிருந்தான் அவன். தீராவால் இப்போது பார்க்க முடிந்தது, பாவமாகக் கிடக்கும் அவனின் விடைதாளை தான்.
'யோக தமிழ் மாறன்.. ப்பாஹ்.. பேரு பயங்கரமா இருக்கே' ஒருவழியாக அவனின் பெயரை மட்டும் அவள் கண்டுபிடித்துவிட்ட அந்த ஒரு நிமிடத்திலேயே அனைத்து இரண்டு மதிப்பெண் வினாக்களுக்கும் ஒரு வரியில் பதிலை எழுதி அதை மீண்டும் அவளிடமே கொடுத்தான் அந்த யோக தமிழ் மாறன்.
'பரவா இல்லையே.. நயன்த் படிச்சாலும் எய்ட்த் சிலபஸ்ஸ மறக்காம இருக்கானே.. நாமெல்லாம் இன்னைக்கு எக்ஸாம்க்கு படிச்சத மூளைல இருந்து டெலீட் பண்ணா தான் அடுத்த பாடத்த அப்லோடே பண்ண முடியும்!' என உள்ளுக்குள் வியந்துக்கொண்டே அந்த விடைகளை பார்த்துக் கொண்டிருக்க.. அதன் இறுதியில், குச்சி டப்பா கொண்டு வந்ததுக்கு தாங்க்ஸ் என எழுதி ஒரு ஸ்மைலி போட்டிருப்பதை கண்டதும் டக்கென புன்னகைத்தவள் 'அப்படி என்னதான் வச்சுருக்கான் அந்த குச்சி டப்பால?' என ஒரு ஆர்வத்தில் தேடினாள் அந்த நீல நிற பென்சில் பாக்ஸை. பாவம், அவள் கண்ணில் சிக்கவில்லை அது. பத்திரமாக டேபிள் டிராவிற்குள் ஒளித்து வைத்துவிட்டான் அவனின் குச்சி டப்பாவை.
"ரைட்டு" மெல்லமாக தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள் தன் சூழலின் மீதே மொத்த கவனத்தையும் வைத்தபடி அவன் எழுதிக்கொடுத்த பதில்களை மட்டும் வினாதாளில் காப்பியடித்துக் கொண்டிருந்த நேரம், மீண்டும் அதே மாற்றம் அவள் இருக்கும் அந்த சூழலில்.
'ஆர்ஹ்... மறுபடியுமா' கண்களை சுழற்றியபடி ரக்ஷவை நோக்கி தன் பார்வையை திருப்ப.. குழப்பத்தில் குறுகியது அவள் நெற்றி. அவள் இப்போது சூழலில் உணர்வது மாயத்தின் வெளிப்பாட்டை தான். ஆனால், அது ரட்சகனிடம் இருந்து வெளிவரவில்லையே!
அதை உணர்ந்தநொடி எதை பற்றியும் சிந்திக்காமல் படக்கென எழுந்து நின்றவள் தன்னை நோக்கித் திரும்பிய அனைத்து பார்வைகளையும் வசியம் செய்து அவரவர் வேலையை கவனிக்கும்படி செய்துவிட்டு வேகமாக அந்த தேர்வறையை விட்டு வெளியேறிவிட்டாள்.
✨✨✨
~கண்களை மூடி மரத்தில் சாய்ந்து ஓரிரு நிமிடங்கள் தான் கடந்திருக்கும் .. தன் மடியில் உணர்ந்த உணர்வால் இமை பிரித்து கீழ் நோக்கினான் அவன். பாவமாக கெஞ்சிடும் கண்களுடன் அவன் முகத்தைப் பார்த்தபடி மடியில் தலை வைத்திருந்தாள் அவனின் அழகி.
"உன்னையும் வேதனைக்கு ஆளாக்கிவிட்டேனா?
"இல்லை" புன்னகையுடன் பதில் கொடுக்க, அவன் கையை பிடித்துக்கொண்டு கண்களை சில நொடிகள் பார்த்தவள், "ஓய்வெடு" என்றாள் அமைதியாக.
அவன் மறுப்பாக தலையசைக்க, "ஏன்?" மீண்டும் பாவமாக பார்த்தாள் அவனின் அழகி. "நீ ஓய்வெடு" அவள் பிடித்திருக்கும் தன் கையை உறுவி அவளை அணைத்தபடி மறுகையால் அவள் தலை கோதியவன், "நான் என் அழகியின் ஓய்வெடுக்கும் அழகை ரசிக்கப் போகிறேன்" என அவள் விழியை நோக்கிப் புன்னகைக்க.. சட்டென சிவப்பேறிய முகத்துடன் அவன் மடியிலேயே கண்களை மூடிக்கொண்டாள், அவனின் அழகி.~
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro