சுயநினைவுடன் அவன் சக்திகள்...
ரட்சகனின் தாக்குதலால் காயமடைந்து மயங்கிய சமாரா, எப்படி அந்த கருநிற மாயவாயிலை திறந்தாள் என்பது அவனுக்குத் தெரியாது.. அவள்தான் திறந்தாளா என்பது கூட தெரியாது. இருந்தும் அவளை தூக்கிக்கொண்டு, எங்கு சென்று முடியும் என தெரியாத அந்த மாயவாயிலினுள் நேராக நடந்த ஷேனா, இறுதியாக வந்திருந்தது அதே இடம் தான்... ஒரு நாள் முழுக்க அவன் மயங்கிக் கிடந்து ஜுரத்துடன் போராடிய இடம்.
ஒரு மரத்தில் கீழே அவளை கிடத்தியவனுக்கு அடுத்து என்ன செய்யவென விளங்கவில்லை... நிமிர்ந்து நின்று யோசனையுடன் பரபரத்தவன் சிந்தைக்கு எந்த யோசனையும் எட்டவில்லை. எப்படி எட்டும்? அவனுக்காக யோசிக்க வேண்டியவள்.. அதாவது, அவனை வசியக்கட்டில் வைத்திருப்பவள் தான் இப்போது தெளிவாக சிந்திக்கும் நிலையில் இல்லையே! பிறகு இவன் சிந்தை எப்படி செயல்படும்?
சமாராவை பொறுத்த வரையில் அவளுக்கு ஏற்பட்டிருப்பது அவ்வளவு பெரிய காயமெல்லாம் கிடையாது, இத்தகைய காயம் வேறு எவரேனும் ஒருவரால் ஏற்பட்டிருந்தால். ஆனால் இதுவோ ரட்சகன் தன் தூய மாயத்தினால் தந்த காயமாதலால் தன் சக்திகளை இழந்து அரைகுறை சுயநினைவுடன் மயங்கிக் கிடக்கிறாள்.
காரியத்தில் சுயநலம் இருப்பினும் தன் ஜுரத்திற்காக வனதேசம் சென்று மூலிகை எடுத்து வந்தவளுக்காக ஏதேனும் செய்யவேண்டும் என்று மட்டும்தான் உள்மனதுக்குள் குரல் கேட்டது ஷேனாவிற்கு... இருந்தும் என்ன செய்ய? அவனால் தான் மாயவாயிலை திறக்க முடியாதே!
தன் இயலாமையை நினைத்து எரிச்சலுடன் இங்குமங்கும் நடந்தவன் தன் கையால் ஒரு மரத்தில் குத்தி எரிச்சலை அடக்க முயற்சித்த நேரம், "ரா... --... ரா. உன்... ச..தி" சமாரா ஏதோ முணங்கிடுவதை கண்டு அவளருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்தவன் செவியை அவளை நோக்கி வைத்தபடி சற்று குனிய... "ரா.....ணா.... ... வேண்டும்.. உன்.... உன் சக்தி... வேண்டும்..." அவளின் இமைகுள் உருளும் கண்மணிகள் அந்த இமையை தகர்க்க முயற்சிப்பதை ஷேனாவால் தெளிவாக பார்க்க முடிந்தது.
நீண்ட காலம் கடந்து கேட்டாலும் புதிதாக தோன்றாத அந்த பெயரால் ஷேனாவின் புருவங்கள் குறுகிய அதே நேரத்தில் அவனை கட்டுப்படுத்தும் வசியமானது வீரியம் கொண்டதன் அடையாளமாக கண்களின் கருமை அடர்ந்து ஜொலித்த அதே நேரத்தில் அவன் கை வழியே பாய்ந்த வெள்ளி நிற ஒளி சமாராவின் காயங்களுக்குள் நுழைந்தது .
ஷேனாவின் கை வழியே வரும் சக்திகள் அவளுக்குள் செல்ல செல்ல நெருப்பினால் ஏற்பட்ட அவளின் காயங்கள் மெல்லமாக குணமடையத் தொடங்கிட... அவள் கைகள் மெல்ல முன்னேறி ஷேனாவின் மணிக்கட்டை பிடித்தது. தன் தோலுக்குள் அவள் நகங்கள் இறங்குவதை அவன் கண்கள் கண்டாலும் எவ்வித உணர்வும் இல்லாமல் அமைதியாக அதை பார்த்தபடி அமர்ந்திருந்தான் அவன்.
✨✨✨
இரவு எட்டு மணி இருக்கும்.. காயம் பட்டிருக்கும் மயூவை மட்டும் வீட்டில் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு ரக்ஷவன் வீட்டில் கூடி இருந்தார்கள் மற்ற அனைவரும். மாலை நடந்த கலவரத்தில், பார்கவி அம்மாவை சமாளிப்பது தான் பெரும்பாடாக போய்விட்டது. எப்படியும் தங்களை எதிர்பார்த்துக்கொண்டு தன் தாய் வாசலிலேயே தான் இருப்பாள் என்பதை யூகித்திருந்த மித்ரா, ரக்ஷவுடன் வந்து கொண்டிருந்த ரவி மற்றும் வீர் இருவரையும் சற்று நேரம் கடந்து வர சொல்லிவிட்டு முதலில் தன் தங்கையுடன் வீட்டிற்கு சென்றாள். வரும் வழியில் ஒரு மரத்தில் தீ பிடித்து எறிந்ததாகவும் அது மயூரியின் மேல் விழுந்து விட்டதாகவும் கதை கட்டிய மித்ராவும் ஹர்ஷனும், வண்டியில் இடம் இல்லாததால் ரக்ஷவன் பின்னால் நடந்து வந்து கொண்டிருப்பதாக சொல்லி பார்கவி அம்மாவை சமாளித்திருக்க.. மகளின் நிலையை கண்டு அதிகம் யோசிக்காமல் மயூரியை கவனிக்க சென்றுவிட்டார் அவரும். மகளின் அழுகையை சமாதானப்படுத்தி அவள் காயங்களுக்கு மருந்து போடவே நேரம் சரியாக இருக்க.. ரக்ஷவை படிக்க வைக்க போகிறேன் என சாக்கு சொல்லிவிட்டு இங்கு வந்துவிட்டாள் மித்ரா.
அவனின் அறைக்குள் உறக்கத்தில் இருக்கும் தன் உடன்பிறவா சகோதரனை பார்த்துக்கொண்டே நீண்ட நேரம் அமர்ந்திருந்த மித்ரா சற்றுமுன்பாக தீரா வந்து சொல்லிவிட்டு சென்றதை சிந்தித்து கொண்டிருந்தாள். அவள் மட்டுமல்ல.. அதே அறைக்குள் இருக்கும் பால்கனியில் அமர்ந்திருந்த ஹர்ஷன் மற்றும் அர்ஜுனுக்கும் கூட அதே எண்ணங்கள் தான்.
ரட்சகனின் பொறுப்புகள் கடமைகளுடன் சேர்த்து அவனின் சக்திகள் மற்றும் சென்ற ஜென்மத்தில் அவனது வழக்கை.. அவன் கொடுத்த வாக்கு என இவர்களின் குழப்பங்களுக்கு தீர்வாகவேண்டிய அத்தனை விஷயங்களையும் சுருக்கமாக சொல்லிவிட்டு சென்றிருந்தாள். நிதர்சனங்களை அசைபோட தான் இவர்களுக்கு நீண்ட நேரம் தேவைப்பட்டது.
அவர்கள் மூவருக்கும் கதை சொல்லிவிட்டு ரக்ஷவன் அறையிலிருந்து வெளியே வந்து கதவை சாத்திவிட்ட தீரா, ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்தபடி ஷேனாவிடம் இருந்து தான் பிடுங்கி வைத்திருக்கும் அந்த தங்க நிற வாளையே இன்னுமும் திருப்பிப் பார்த்துக் கொண்டிருக்கும் ரவியை கவனித்துக்கொண்டே, "இன்னும் எவ்வளவு நேரம் தான் அந்த வாளையே குறுகுறுன்னு பாத்துட்டு இருக்க போறீங்க பிரதர்?" ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு வீரின் அருகில் அமர்ந்தாள்.
"அது சாதாரன வாள் இல்ல.. உன் உலகத்த சேந்ததும் இல்ல.." ரவியின் கையில் இருக்கும் வாளை பார்த்தபடி தீராவிடம் சொன்ன வீர், "அதுல நம்ம கோவன்களோட சின்னம் இருக்கு.. கைல வாங்கி பாரு" என தீராவை திரும்பிப் பார்க்க.. நெற்றி சுருங்க எழுந்து ரவியின் அருகில் சென்றவள், "ஆமா.." அதிர்ச்சியுடன் சேர்ந்து குழப்பமாகினாள்.
"ஆனா அது எப்டி அவன் கைக்கு போயிருக்கும்? உங்கள்ள யாருமே ஆதிலோகம் வந்ததே கிடையாதே!"
"அப்டின்னு யாரு சொன்னா?" ரவி நிமிர்ந்து அவளை பார்க்க, "வந்துருக்கீங்களா?" மேலும் அதிர்ந்தாள் அவள்.
"அவனுங்க மூனு பேரு மட்டும் தா.." ரவி அவளுக்கு பதில் கொடுத்த அதே நேரத்தில், "சரியா சொல்லனும்னா... நீ கொழந்தையா இருக்கைல எங்க கிட்ட வந்த அதே நாள் தான் அவனுங்களும் அங்க வந்தது" அந்த பதிலை இன்னும் தெளிவாக்கினான், வீர்.
"அது எப்டி அவனுங்களாள முடியும்? இங்கருந்து ஆதிலோகம் போறதுக்கான ஒரே வழி மாயவாயில் தான்... அத தெறக்கனும்னாலும் ஆதிலோகம் எப்டி இருக்கும்ன்னு அவனுங்க மனசுல நெனச்சுருந்தா தான் முடியும். கண்ணுலயே பாக்காத எடத்த நெனைக்க முடியாதே!"
"அதெல்லாம் எங்களுக்கு தெரியல... நாங்க காட்டுல இருந்த வரைக்கும் நீ ஓப்பன் பன்ற மாறியே அங்க ஒரு டோர் இருந்துச்சு.. எப்போமே அதே இடத்துல இருந்துச்சு... அது வழியா தா அவனுங்க அங்க போய்ட்டு போய்ட்டு வந்தானுங்க." வீர் சொன்னதை கேட்டு விழித்துக்கொண்டு சில நொடிகள் சிந்தித்தவள், "யாருக்கு தெரியும்.. அது நானே பன்னதா கூட இருக்கலாம்.. சரியா நான் வந்த நாள்ன்னு வேற சொல்றீங்க... இருக்கும்" தோளை குலுக்கியபடி தனக்குத்தானே பதில் கொடுப்பதுபோல் சொல்லிகொண்டவள், "சரி.. அவனுங்க அங்க வந்ததுக்கும் இந்த வாளுக்கும் சம்பந்தம் இருக்குமா?" ரவியின் கையில் இருக்கும் வாளை பார்த்தாள்.
"அவனுங்க அங்க ஒரு பையன ட்ரைன் பன்னாங்க.. டெய்லி அங்க போனதே அதுக்காக தான். அவனுக்கு ஒரு வாள பரிசா குடுக்கனும்ன்னு சொல்லிட்டு இருப்பானுங்க.. அதுக்குள்ள நாங்க அரண்மனைக்கு திரும்பீட்டோம்..... அடுத்து போர் வந்துருச்சு... ஒருவேள அவனுங்க சொன்ன மாறியே அந்த பையனுக்கு அந்த பரிச குடுத்துருந்தாங்கன்னா.." ரவி பாதியில் நிறுத்த, "எங்க கணக்குப்படி இப்போ நமக்கு பிரச்சனையா வந்து நிக்கிறவன் தான் அந்த பையனா இருக்கணும்" ரவியின் சொல்லை முடித்து வைத்தான், வீர்.
"டேய்.. என்ன டா சொல்ல வர்றீங்க நீங்க? அது கண்டிப்பா இவனா இருக்க வாய்ப்பில்ல டா.."
"ஆனா அவனுங்க சொன்ன அந்த பையனும் நிழல்தேசத்த சேந்தவன் தான். அவனுங்க அந்த பையனோட பேரு சொன்னதில்லை.. சொல்லிருந்தா இப்போ நமக்கு தெரிஞ்சிருக்கும்.. இது அவனா இல்லையான்னு"
வீரின் சொல்லை கேட்டு மௌனமாக யோசித்தவள் மனம் அப்படி ஒரு விஷயத்தை ஏற்க மறுத்தது. "அது யாராச்சும் அதே தேசத்த சேந்த சாதாரன பையனா இருக்கும் டா.. இவன் நிழல்தேச இளவரசன்.." தன் உடன்பிறவா சகோதரன்கள் சொல்ல வருவதை மறுக்க சாக்கு சொன்னவள், "அதோட, அவனுங்ககிட்ட டிரெய்னிங் எடுத்து வந்த ஒருத்தன் ஒரு பொறந்த கொழந்தைய கொல்ல வர்ற அளவுக்கு இருப்பான்னு எனக்கு தோனல" கடந்த கால நினைவுகளை நினைத்து பல்லை கடித்துக்கொண்டு சொல்ல, ' எங்க சந்தேகமும் அதுதான்' என சொல்வது போல் அமைதியாக தலையாட்டினார்கள் இருவரும்.
"அவன் திருடி இருக்கலாம் இல்லையா?" சில மௌன நொடிகள் கடந்த நிலையில் ஒரு யூகத்தை தீரா முன்வைக்க, "வாய்ப்பில்ல" சட்டென மறுத்தான், ரவி.
"எப்டி சொல்ற?"
"கோவன்களோட சக்தி அதுக்கு அனுமதிக்காது. யாருக்காக குடுத்தாங்களோ அவங்களோட பேச்ச தான் கேக்கும். அவங்கள தவிற வேற யாராலையும் அதோட சக்திய உபயோகிக்க முடியாது.. ஆனா இன்னைக்கி கிரிஷ்ஷோட நெருப்பு சக்திய அவன் யூஸ் பண்ணான். தெளிவா தெரிஞ்சுது"
"என்ன சொல்ற நீ? அவன் இந்த வாள வச்சு ரக்ஷவோட பவர்ஸ தடுக்க தானே செஞ்சான்?"
"அது நீ வந்ததுக்கு அப்பறம்.. அதுக்கு முன்னாடி நெறைய நடந்துச்சு.. ஷேனா யூஸ் பண்ண அந்த நெருப்பு தான் ரக்ஷாவோட பவர்ஸ இன்னைக்கி ட்ரிகர் பண்ணாதே" வீர் சொன்னதை கேட்டு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொண்டவள், நம்பமுடியாத பார்வையில் அவர்கள் இருவரையும் பார்த்தாலும் முந்தைய நாள் முதல் முறையாக ரட்சகனின் சக்தி வெளிவந்ததும் இதேபோல் ஷேனா உபயோகப்படுத்திய சக்தியால் தான் என்பது அவள் மூளைக்குள் மணியடித்தது.
"ஹ்ம்ம்... என்னத்த ட்ரிகர் பண்ணி என்ன பிரயோஜனம்? அவன் தானா வந்து தன்னோட சுயநினைவோட அந்த பவர்ஸலாம் கன்ட்ரோல் பண்னா தானே எனக்கு நல்லது... இவனுக்கு என்னடான்னா இவன் ஆத்ம-வாள் தான் இவன புடிச்சு கண்ட்ரோல் பண்ணுது." ஒருபக்கம் சந்தோஷம் என்றாலும் இன்னொருபக்கம் தன் கஷ்டத்தை சொல்லி அவள் புலம்புவதை பார்த்து அவள் சகோதரன்கள் இருவரும் குறும்பாக சிரிக்க, "உன் புலம்பலுக்கு ஒரு விடிவு காலம் வந்துருச்சுன்னு சொல்ல கஷ்ட்டமா தான் இருக்கு... இருந்ததாலும்... அவன் இன்னைக்கு ஏர்(air) பவர்ஸ யூஸ் பண்ணைல முழு சுயநினைவோட தான் இருந்தான்." எங்கேயோ பார்த்துக்கொண்டு சொன்னான் வீர்.
"என்ன டா சொல்ற?" தீரா சட்டென அவனை நோக்கி திரும்ப, "ஆமா. பிகினர்ங்குறதால கொஞ்சமா தடுமாறுனான்.. ஆனா ஸ்பீடா பிக் பண்ணிகிறான்.. தெரமசாலி தான்" ரக்ஷவனுக்கு பாராட்டு சான்றிதழ் கொடுத்தான் ரவி.
"டேய்.. என்ன டா என்னென்னமோ சொல்றீங்க.. என்ன டா நடந்துச்சு? தெளிவா சொல்லித் தொலைங்க." கொஞ்சநேரம் அவனை தனியாக விட்ட நேரத்தில் என்னென்ன நடந்திருக்கிறது என்பது புரியாமல் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்தபடி எழுந்தே விட்டவள், கொஞ்சம் சத்தமாகவே கத்திவிட, சரியாக அதேநேரம் ரக்ஷவின் அறை கதவை திறந்துகொண்டு வெளியே வந்த மித்ரா, "எங்களுக்கும் சேத்து சொல்லுவீங்களா?" என அவர்கள் மூவரையும் பார்க்க, "இல்ல.. ஏதும் மறைக்க வேண்டிய ரகசியமா?" அவளை தொடர்ந்து வந்து நின்றான், ஹர்ஷன்.
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro