Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

காரணம் புரியா பாதை

தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டு மெல்லிய ஒளியுடன் மிளிர்ந்துக் கொண்டிருந்த அந்த சிறிய சிறையினுள் சுயநினைவினை இழந்துத் தரையில் கிடந்தாள் சமாரா. அவளிருக்கும் சிறையின் இரும்பு வாயிலை சுற்றி ஏதோ ஒரு மாவினைக் கொண்டு அரைவட்டம் வரையப்பட்டிருக்க.. அதனை அழிக்க முயன்றுத் தோற்றுப் போனதன் அடையாளமாக, சிறை வாயிலை நோக்கித் தன் கைகளை நீட்டியபடி மயங்கிக் கிடந்த சமாராவின் உள்ளங்கைகளில், அந்த மாவின் வெள்ளை துகள்கள் ஒட்டியிருந்தது. இரவின் போராட்டங்கள் அவளின் சக்திகளை மொத்தமாக உறிஞ்சிவிட்டிருந்தது. அதன் காரணமாகவே அவளுக்கு இந்த நிலை.

நேற்றைய நள்ளிரவில் பூமியின் நட்ட நடு காட்டுக்குள் வைத்து தீராவால் தூவப்பட்ட மாயப்பொடியினால் அடுத்த நொடியே ரட்சக ராஜ்ய காவல் ஸ்தூபியின் சிறைக்குள் அவள் இடம்பெயர்க்கப் பட்டிருக்க.. எதிர்பாரா நேரத்தில் நிகழ்ந்திருந்த அந்த திடீர் மாற்றத்தை அசைபோடவே அவளுக்கு சற்று அவகாசம் தேவைப்பட்டிருந்தது.

ஒருநொடி நடுக்காட்டில் சண்டை களத்தின் மத்தியில் இருந்தவள் அடுத்தநொடி, மங்கிய மஞ்சள் ஒளியை கக்கும் நான்கு சுவற்றுக்குள் வந்து அடைபட்டு நிற்க... ஓரிரு நொடிகள் கழித்தே அவளுக்கு புறிபட்டது, இது தனக்கு சம்பந்தம் இல்லாத இடம் என்பது.. நிதர்சனம் விளங்கிய அடுத்தநொடி அவள் செய்தது, அந்த சிறையை விட்டு தப்பிக்கும் முயற்சியே. ஆனால் ரட்சகராஜ்யத்தின் மந்திரச் சிறை அதற்கு வழி கொடுக்குமா என்ன? அந்த இரும்புக் கம்பியை போட்டு அவள் என்னதான் வெறித்தனமாக ஆட்டினாலும் இம்மியளவும் அசைந்துக் கொடுக்கவில்லை அந்த மாயச்சிறை. எரிச்சலில் அவள் கோரமாக அலற... சில நொடிகள்தான் அவள் அலறல் நீடித்திருக்கும், அவள் முன் ஒரு நிழலாடியதை கண்டு சட்டென அமைதி கொண்டது அவள் குரல்.

அருகில் மற்றொரு ஜீவன் நிற்பதை கவனித்த சமாரா, "யார் நீ" அந்நபரை நோக்கி நிமிர, "சொன்னாலும் நினைவுகொள்ளும் நிலையில் நீ இல்லை. நம் பந்தத்தின் துவக்கம் மிக நீண்டது." தன் தளர்ந்த குரலில் சொல்லியபடியே, கையில் சிவப்பு நிறத்தில் சிறு பொதியுடன் அவள் முன் நின்றிருந்தது நுவழி பாட்டி தான்.

"பந்தமா? முட்டாள் கிழவி... ரட்சகராஜ்யத்துடன் பந்தம் வைத்துக்கொள்ள எனக்கென்ன அவசியம்? எம் மூதாதையர் கூட நினைத்திருக்க மாட்டார் இப்படியொரு சிந்தனையை... இதில் நம்மிருவருக்கும் இடையே நீண்டதொரு பந்தமா!" அவள் ஏளனமாக சிரித்தபடியே நுவழி பாட்டியை பார்க்க.. எவ்வித சலிப்பையும் முகத்தில் காட்டாமல், "சொன்னது சரியாகிவிட்டது.. எதையும் நினைவுகொள்ளும் நிலையில் நீ இல்லை. எனவே அமைதியாக காத்திரு.. உன்னை தேடி உனது மெய் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை" அமைதியான குரலில் சொல்லிக்கொண்டே கையில் இருக்கும் சிவப்பு பொதியை கவிழ்த்தி அதனுள் இருக்கும் மாயப்பொடியினைக் கொண்டு அந்தச் சிறை வாயிலை சுற்றி அறைவட்டம் போட்டு முடித்த நுவழி பாட்டி, "இந்த மாய கட்டைத் தாண்டி உன் மாயம் செயல்படாது.. இனி இங்கிருந்து உன்னால் யாரையும் அழைக்க முடியாது." என அவளை நோக்கி நிமிர்ந்தவர், "சொல்வது விளங்குமென நம்புகிறேன்.." என ஒரு ஆழ்ந்த பார்வையுடன் அவளை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர... பாட்டியின் தலை மறைந்ததும் சமாராவின் பார்வை அந்த வெள்ளை மாவினை நோக்கி நகர்ந்தது.

நுவழி பாட்டி என்ன சொன்னார்? எதை குறிப்பிட்டார்? இதில் சமாராவிற்கு என்ன புரிந்தது? முதலில் அவளுக்கு ஏதாவது புரிந்ததா? எதற்கும் விடையில்லை இங்கே.. ஆனால், சமாராவின் பார்வை அந்த மாய வளையத்தை விட்டு நகராமலே சில நொடிகள் இருக்க.. இந்த மாயப்பொடிதான் இப்போதைக்கு என் முதல் எதிரி என்பது போல் அதனை அழிக்கும் முயற்சியுடன் அவள் தன் சிறையின் இரும்புக் கம்பிகளின் வழியாக ஒற்றை கையை  நீட்டி அந்த மாயப்பொடியை தொட்ட நொடி, மின்சாரம் பாய்ந்ததை போல் சிறையின் பக்கவாட்டுச் சுவற்றில் வீசியெறியப்பட்டாள். 

இதை முன்பே எதிர்பார்த்தது போல் எவ்வித தடுமாற்றமும் இல்லாமல் மீண்டும் எழுந்தவள், மறுபடியும் நேராக சிறை வாயிலுக்கே சென்று அதேபோல் சிறை கம்பிகளின் வழியே அந்த மந்திரக்கட்டை அழிக்க முயற்சிக்க.. மீண்டும் அதே பதிலடிதான், நுவழி பாட்டியின் மந்திரக்கட்டிடம் இருந்து. 

இருந்தும், விடுவேனா என மீண்டும் எழுந்து வந்தவள் அக்கட்டினை அழிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு, இப்போது, ரட்சகராஜ்ய விடியல்கீற்றால் சற்று வீரியம் அதிகரித்திருந்த அந்த மாயப்பொடியின் ஆற்றலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தன் மொத்த சக்திகளையும் இழந்து மயங்கிக் கிடக்கிறாள்.  

✨✨✨

மணி ஒன்பதரை இருக்கும், பரபரப்பான அந்த காலை  நேரத்தில் தன் பள்ளிச் சீருடையில் அவசர அவசரமாக பள்ளி வாயிலினுள் நுழைந்தாள் தீரா. ஷேனா தன் சகோதரன்களின் பிடியில் இருக்கிறான், சமாரா ரட்சகராஜ்ய சிறையில் இருக்கிறாள்... அந்த தைரியத்துடனே, நள்ளிரவில் வீடு திரும்பியதும் ரட்சகன் நிம்மதியாக உறங்குவதை உறுதிபடுத்திக் கொண்டபடி வெறும் ஒரு மணி நேரம் தான் தூங்கியிருப்பாள் தீரா, ஆனால் விழித்துப் பார்க்கையில் ஏழு மணி நேரம் கடந்திருந்தது. காலை புலர்ந்துத் தன் ரட்சகன் பள்ளிக்கு கிளம்பியே விட்டான் என ஹர்ஷன் மற்றும் மித்ரா சொன்னதும் வேக வேகமாக கிளம்பியவள், பள்ளிக்குப் பக்கத்து தெருவில் இருக்கும் குறுக்குப் பாதைக்கு மாயவாயில் திறந்து விரைந்து வந்துவிட்டாள் பள்ளிக்கு. 

ரட்சகனின் ஆத்மசக்திகள் வெளிப்படுவதன் வேகம் நாளுக்கு நாள் வேகமெடுக்கிறது.. இதற்கு முன்பு இருந்த பதட்டத்தைவிட தீராவுக்கு இப்போதுதான் பதட்டம் அதிகரித்திருக்கிறது. அவன் எங்கே எப்போது தன் கட்டுபாட்டை மீறப் போகிறானோ என ஒரு பீதியுடனேயே தான் கடக்கிறது தீராவின் நிமிடங்கள் ஒவ்வொன்றும். 

 இப்போது தன் வேக நடையுடன் பள்ளி வாயிலினுள் நுழைந்தவள், ரட்சகன் எங்கேனும் தென்படுகிறானா என பார்வையால் அலசிக்கொண்டே முன்னே நடக்க.. அவள் எதிர்பார்த்தவன் அன்றி இப்போது வேறு ஒருவன் மீது பதிந்தது அவளின் கவனம். நேற்று தேர்வறையில் சந்தித்த அந்த குச்சி டப்பாவின் உரிமையாளன் தான்... அவன் சகோதரனுடன் சேர்ந்து நின்று ஏதோ தீவிர பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தான்.

காரணமில்லாமல் நேரங்கெட்ட நேரத்தில் அவ்விருவரையும் கண்டு ஆர்வம் கொண்ட மனதினை, என்ன செய்தால் தகும் என தன்னைத்தானே வசைபாடிக் கொண்டாலும் அவளின் ஆர்வம் அந்த சகோதரன்களின் முன்பாக அவளை இழுத்து வந்து நிறுத்திவிட... "ஹாய்.. நீங்களும் இங்க தான் படிக்கிறீங்களா?" இருவரில் மூத்தவன் முதுகுக்கு பின்னால் நின்றிருந்தவள் ஒரே மாதிரியான தங்களின் சீருடையை கவனித்துக் கேட்டாள்.

திடீரென கேட்ட குரலால் படக்கென அவள் புறமாக திரும்பிய சகோதரன்கள், கூட்டத்தில் திருடும்போது காவலன் கையில் சிக்கிய திருடன் போல் கொட்டக்கொட்ட விழிக்க... 'என்னாச்சு இவனுங்களுக்கு.. ஒரே ஸ்கூலான்னு தானே கேட்டோம்' மனதில் நினைத்துக்கொண்டே அவர்களின் திருட்டு முழியைத் தன் குழப்ப விழிகளால் காண... நீண்ட நொடிகளுக்கு பின் "ஆமா.. ட்வல்த்.. பயோ" என்னும் பதில் வந்தது அவனிடமிருந்து.

"ஓஹ்.. சரி.. உங்க தம்பி பேரு தெரியும்.. உங்க பேர நேத்து நீங்க சொல்லவே இல்லையே?" தமிழ்மாறனின் அண்ணனை தீரா கேள்வி கேட்க, "சாஹித்" ஒரு வரியில் பதிலளித்தவன், தன் தம்பியின் முகத்தையும் தன் முன் இருப்பவளின் முகத்தையும் மாற்றி மாற்றி பார்க்கத் தொடங்கினான்.

அவர்களின் இந்த வினோத பார்வைகள் ஏன் என்னும் காரணம் புரியாமல், அண்ணனை போலவே செய்யும் அந்த தம்பியையும் அவன் சகோதரனையும் பார்த்து இப்போது தீராவும் விழிக்கத் தொடங்கிட, ஓரிரு நோடிகள் மூவரும் மூவரின் முகங்களையும் நன்றாக வேடிக்கை பார்த்து முடித்தபின், "சரி....எக்ஸாம் போகல?" தமிழை நோக்கி கேட்ட தீரா, தான் வந்த காரியத்தை நினைவு கொண்டவளாய் அங்கிருந்து நழுவிட வாய்ப்பு தேடத் தொடங்கிவிட்டாள்.

"ம்ம் போனும்.." என்ற தமிழின் பார்வை இன்னுமும் அதேபோல் தான் இருந்தது. அவனின் அந்த திறுதிறு பார்வையின் அர்த்தம் புரியவில்லை என்றாலும் அதன் விளக்கத்தை தேடிட நேரமில்லாத தீரா, "சரி, அப்போ நான் மொதல்ல கெலம்புறேன்.. நீங்க ஹால் பாத்துட்டு வாங்க.." புன்னகைத்துவிட்டு அங்கிருந்து நகர முனைந்தவள், ஏதோ நினைவு கொண்டவளாக மீண்டும் தமிழை நோக்கித் திரும்பி, "அம்.. இன்னைக்கி உங்க குச்சி டப்பா மறக்கலையே?" கிண்டலாக புன்னகைக்க.. அப்போதாவது சிரிப்பானா என பார்த்தால்... இல்லை. இன்னும் மாறாத அதே பார்வையுடன், தன் கையில் வைத்திருக்கும் பொக்கிஷ பெட்டியான அந்த  குச்சி டப்பாவை அவள் கண்கள் பார்க்கும்படிக்கு இன்னும் இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.

அந்த செய்கைக்கு அர்த்தம் புரியாமலே, "சரி, ஆல் தி பெஸ்ட்" லேசாக புன்னகைத்துவிட்டு தன் ரட்சகன் இருக்க வேண்டிய அறையை நோக்கி விரைந்தாள், தீரா.

✨✨✨

- தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro