Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

எங்கே போனாய் என்னை விட்டு?

வீட்டின் கதவை படாரெனத் திறந்த ரக்ஷவன், நேரே அவனின் அறைக்குச் சென்று கதவை தாளிட்டுக் கொண்டான். அவன் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத அவன் அன்னையோ, சற்று தாமதமாகவே வீட்டினுள் நுழைந்தாள். அவள் வீட்டினுள் நுழையும்போதே தன் சுவாசத்தில் வெளிபட்ட பெருமூச்சினை அடக்கிட முடியாமல், நொந்துபோன நிலையில்தான் வந்தாள். வந்த வேகத்திலேயே தேவயாசினி, "இது சரிபட்டு வராது," மகனின் அடைக்கபட்ட அறையை பார்த்தபடியே முணங்கியவள், தன் கையில் வைத்திருந்த அழைபேசியை உயிர்பித்து, மித்ராவிற்கு அழைப்பு விடுத்துத் தன் காதில் வைக்க.. சில நொடிகள் கடந்த நிலையில் மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டது.

"ஹலோ, மித்ரா.. அம்மா இருக்காங்களா மா? அவங்க ஃப்போன் ரீச் ஆக மாட்டுது" வரும் வழி முழுக்க பார்கவிக்கு அழைப்பு விடுக்க முயற்சித்துக்கொண்டே வந்திருந்தவள், இப்போது அவள் மகளுக்கே அழைப்பு விடுத்தாள்.

"அப்பாவும் அம்மாவும் பக்கத்து ஊருக்கு போய்ருக்காங்க, தேவா ம்மா; நைட் தான் வருவாங்கலாம். அங்க சிக்னல் கெடைக்காது. எதுக்கு ம்மா?" மித்ராவின் திடீர் கேள்வியால் சொல்லலாமா வேண்டாமா என ஒரு நொடி தயங்கியவள், "இல்ல மா, நம்ம வீட்டுக்கு இன்னைக்கு கெஸ்ட் வாராங்க.. அதா, கொஞ்சம் ஹெல்ப்க்கு கூப்டலாமேன்னு பாத்தேன்" சொல்ல நினைத்ததை மாற்றி கூறினாள், தேவயாசினி.

"நம்ம வீட்டுக்கு கெஸ்ட்டா! யாரு ம்மா அது?"

"ஊருல இருந்து அண்ணன் பசங்க வாராங்க மா. மொத தடவ வாராங்கல்ல, அதா ஒரு விருந்து வைக்கலாம்ன்னு பாத்தேன்"

"சரி, ம்மா. நானும் மயூவும் வாறோம் ஹெல்ப் பண்ண"

"ஹான், சரி மா. வாங்க"அழைப்பை துண்டித்தவள், ஒரு அடிதான் முன்னே வைத்திருப்பாள்... தலை கிர்ர்ரெனச் சுற்றக் கிளம்பியது அவளுக்கு. கண்களை மூடிய நிலையில் ஒற்றை கையால் தலையை தாங்கியவள், சுவற்றை பிடித்தபடி அப்படியே நின்றுவிட... அவள் கண்ணுக்குள் ஒருசில காட்சிகள் மின்னல் வேகத்தில் வந்தவந்து மறைந்தது. அவைகளில் எவையுமே தெளிவில்லாதக் காட்சிகளாகவே இருந்த நிலையில், இறுதியாகக் கண்ட ஏதோ ஒன்றால் பட்டெனப் பிரிந்தது அவள் விழிகள். பயத்தில், சீரற்றுத் துடிக்கத் தொடங்கியது அவள் இதயம். இப்படியே விட்டிருந்தால், படபடப்பால் மயங்கி விழுந்திருப்பாள் என்னும் நிலையில் இருக்கையில் அவளின் நிலையை சீராக்கியது, மித்ரா மற்றும் மயூரியின் குரல்கள்.

"என்ன ம்மா? திடீர்ன்னு நம்ம வீட்டுக்கு கெஸ்ட்லாம் வாராங்கலாம்! என் சகோதரன் பொறந்தநாளுக்கா?" நக்கலடித்தபடி மயூரி வீட்டினுள் நுழைய, அவளை நோக்கித் திரும்பிய தேவயாசினி, கண்ணுக்குள் தோன்றிய காட்சிகளையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு, இப்போது, நிதானமாகியிருந்தாள்.

"ஹஹா, அவங்களுக்கு நம்ம ரக்ஷவ் பொறந்தநாள் பத்தி தெரியுமானே எனக்கு தெரியல, மயூ. இப்போ அவங்க ரெண்டு பேரும் என்னை பாக்க தான் வாராங்கலாம்"

"ஒஹ், அப்போனா அவங்களையும் சேத்து வச்சு இன்னைக்கு ரக்ஷவ்க்கு பர்த்-டே பார்ட்டி வச்சுறுவோம்."

"அவன் இப்போ இருக்குற நெலமைல.. ....." வார்த்தையை இழுத்துக்கொண்டே மகனின் அறையை நோக்கி ஓரப்பார்வை பார்த்தவள், "பார்ட்டின்னு போய் நின்னா, எத எடுத்து அடிப்பான்னே தெரியாது" நொந்தபடி பதில் கொடுத்தாள்.

"ஏன் ம்மா? நைட் தானே எல்லாம் பேசி சரி பண்ணுனோம். மறுபடியும் மல ஏறிட்டானா அவன்?"

"ஹ்ம்ம்.. அத விடு, அது ஒரு பெரிய கத.. மறுபடியும் இன்னைக்கே சரி பண்ணி ஆகனும் அவன. இல்லைனா இன்னும் எத்தன வருஷம் இப்டியே இருப்பான்னு தெரியாது. நீ வேண்ணா போய் பேசி பாறேன், மயூ"

"இந்தா போறேன். அவன நான் கவனிச்சுக்குறேன் தேவா ம்மா. நீங்க போய் கெஸ்ட்ட வெல்கம் பண்ணுற வேலைய கவனிங்க" என்று சொல்லும்போதே தன் நண்பனின் அடைக்கபட்ட அறையை நோக்கி பாதி நடந்திருந்தாள், மயூரி. அவள் அங்கு ரக்ஷவின் அறை கதவில் தாளம் போடத் தொடங்கியதை பார்த்துச் சிரித்துவிட்டு, சமையல் வேலையை கவனிக்கக் கிளம்பினார்கள், தேவயாசினியும் மித்ராவும்.

✨✨✨


"ஆமா தீரா! இது ஆதிலோகத்த சேந்த மாயம் தான்!" தங்களின் ரட்சகனை அழைத்துவர வேண்டுமென அவன் அன்னை போராடிக் கொண்டிருக்கும் அதே கோவிலின் உள்ளே தான் நின்றுக் கொண்டிருக்கிறார்கள் அபியும் தீராவும். அபியின் கைகள் அங்குள்ள சுவர்கள் ஒவ்வொன்றின் மீதும் பதிந்து, அங்குள்ள மாயங்களின் வலிமையை ஆராய்ந்துக் கொண்டிருந்தது; எங்கிருந்து இவைகள் தொடங்குகின்றன என்னும் தொடக்கப்புள்ளியை கண்டறிவதற்காக. ஆனால், பத்து நிமிடங்களாக அப்புள்ளி மட்டும் கிடைத்தபாடில்லை

"ஆமா, மாமா. ஆனா, எந்த வழியும் இருக்குற மாதிரியே தெரியலையே."

"அதான் நானும் பாக்குறேன். ஆனா மாயம் ரொம்ப ஸ்ட்ராங்கா தான் இருக்கு. .... சரி, இதபத்தி நம்ம ஆதிலோகத்துக்கு போனதும் மகாராணிட்ட கேப்போம். இப்போ வா அந்த கியூட் ரட்சகன கவனிப்போம்." யாரும் கவனிக்காத நேரம் பார்த்து, அபி, ஒரு மாயவாயிலை திறக்க.. இருவரும் அதனுள் சென்று மறைந்த நொடியில் அந்த வாயிலும் மறைந்துப் போனது.

✨✨✨


"ம்ச். மயூ, அமைதியா போய்ரு..." மயூரியின் தொடர் தாளத்தால் எரிச்சலடைந்திருந்த ரக்ஷவன் கடுப்புடன் கத்த, "எதா இருந்தாலும் கதவ தெறந்துட்டு பேசு டா டேய். எவ்ளோ நேரமா நானும் தட்டுறதாம். கை வலிக்கீ" பதிலுக்கு, ராகமாகக் கத்தினாள், மயூரி.

"வலிச்சா விட்டுட்டு போக வேண்டியது தானே?"

"நீ கதவ தெற மொதல்ல.. ஏன் பார்ட்டி வேணாம்ன்னு சொல்ற?"

"நாளைக்கு ஆன்வல் எக்ஸாம். படிக்கனும் போ"

"ம்ம்.... அப்போ கதவ தெற, நானும் வாறேன் படிக்க," மீண்டும் விடாமல் அவள் தாளம் போடத் தொடங்கிட, 'என்னவோ பண்ணி தொல போ' என தோழியை டீலில் விட்டவன், மௌனமாக அமர்ந்தபடி தூரத்தில் தெரியும் மலை சிகரங்களை வெறிக்கத் தொடங்கினான். திடீரென அவன் மனம் பலவாறாகக் குழப்பிக் கொண்டுருக்கிறது. அதன் காரணமாகவே வேறு எதையும் சிந்திக்க எண்ணாமல் அமைதியை நாடுகிறான் இவன்.

கோவிலுக்கு செல்லாமல் பாதி வழியில் திரும்பி வந்துக் கொண்டிருகையிலேயே அவன் மனம் தன்னிலையை மறந்து குழப்பத்திற்குள் செல்லத் தொடங்கிவிட்டது. என்ன குழப்பம் என்றுதான் அவனுக்கு புரியவில்லை. ஏதோ ஒன்றினை இழந்துவிட்டது போல் ஒரு சோகம். யாரோ தனக்காக காத்திருப்பது போல் ஒரு எண்ணம். கோவிலுக்கு செல்லும் பாதையை விடுத்து எதிர் திசையில் நடக்கத் தொடங்கிய நேரத்தில் வழிமாறி செல்வது போன்ற ஒரு உணர்வு. மீண்டும் அன்னையின் வழியிலேயே செல்லலாம் என மனம் அழைத்தாலும் அவன் பிடிவாதம், இப்படி அவனை அறைக்குள் அமரச் செய்துவிட்டது.

மயூரி இன்னுமும் தாளம் போட்டுக்கொண்டே இருக்க.. அவள் தாளத்திற்கு பக்கவாத்தியம் வாசிப்பது போல் கேட்டது காலிங்-பெல் சத்தம். அந்த ஒலியால் ரக்ஷவின் எண்ணங்கள் சட்டென நிஜத்திற்கு வர, "இரு, இரு.. உன் மச்சானுங்க வந்துட்டாங்க. கதவ ஒடைக்க அவங்களையும் ஹெல்ப்க்கு கூட்டிட்டு வாரேன்" நண்பனின் அறை கதவுக்குள் கத்திவிட்டு, மயூரி, வாயிற்கதவை நோக்கி நடக்க, "மச்சானா?" விஷயம் அறியாத ரக்ஷவனோ, தனக்குத்தானே கேட்டுக்கொண்டபடி தன் அறை கதவை நோக்கி நடந்தான்.

வாயிலில், மயூரி வரும் முன்பாகவே காலிங்-பெல் சத்தம் கேட்டு கிச்சனிலிருந்து வந்திருந்த மித்ரா, கதவைத் திறக்க.. வெளியில் நின்றுக் கொண்டிருந்தார்கள் நம் அடாவடி சகோதரர்கள். அதேநேரம், தன் சகோதரியின் அருகில் வந்து நின்ற மயூரி, வாயிலில் நிற்கும் இரு வாலிபர்களை நோக்கி யார் வேண்டும் என பார்வையாலேயே கேட்க, "தேவயாசினி இருக்காங்களா?" ஒருமுறை வீட்டு எண்ணை பார்த்துவிட்டு, யோசனையுடன் கேட்டான், ஹர்ஷன். அத்தையும் அத்தை மகனும் இருக்கவேண்டிய வீட்டில், இது யார் இரு பெண்கள் என்னும் குழப்பம் தான் அவனுக்கு.

"ம்ம். உள்ள வாங்க," மித்ரா அவர்களை உள்ளே அழைக்க, "ம்மா, உங்க கெஸ்ட் தான் வந்துருக்காங்க" குரல் கொடுத்தபடியே கிச்சனுக்கு நடந்தாள், மயூரி. குழப்பமாக வீட்டினுள் நுழைந்தார்கள், சகோதரன்கள் இருவரும்.

"டேய்! அத்தைக்கு பொண்ணு இல்லன்னு அம்மா சொன்னாங்க?" திட்டம்போட்டு வலது காலை எடுத்துவைத்து வீட்டினுள் நுழைந்த அர்ஜுன், சாதாரணமாக நுழைந்துவிட்டத் தன் அண்ணனை தொடர்ந்துச் சென்று அவன் காதில் கிசுகிசுக்க, அவன் கையில் நறுக்கென கிள்ளி வைத்தான் ஹர்ஷன்.

"ஸ்ஸ் ஆஹ்" அர்ஜுன் தன் கையை தேய்கும்போதே மித்ரா திரும்பிப்பார்க்க... ஒன்றுமில்லை என மழுப்பலாகச் சிரித்தபடி, ஹர்ஷன், தலையசைத்ததை தொடர்ந்து அவர்களை சோஃபாவில் அமரச் சொல்லியவள், கிச்சனுக்குள் சென்றாள். சகோதரன்கள் இருவரின் பார்வையும் சோஃபாவிற்கு நேராக இருக்கும் அறையின் வாயிலில் நின்றபடி தங்களையே குறுகுறுவென பாத்துக் கொண்டிருப்பவனை நோக்கியது.

"டேய், அண்ணா! பெரிய பொண்ணு உனக்கு... சின்ன பொண்ணு எனக்கு. அப்றம்.... இவன் தான் அம்மா சொன்ன அந்த பையன்னு நெனைக்குறேன், இவன புடிச்சுட்டுப் போய் அம்மாட்ட விட்டுட்டு, நாம இங்க செட்டில் ஆகீறலாம். என்ன? டீல் ஓகே வா?" பார்வையை, தங்கள் அத்தை-மகன் மீதிருந்து விலக்காமலே அர்ஜுன் திட்டம் போட, "சாவடி வாங்க போற நீ.. வாய மூடிட்டு கம்முன்னு இரு" முகத்தில் சிரிப்புடனே ஹர்ஷன், தம்பியிடம் சீற... அதேநேரம், "ஹர்ஷா!!" கிச்சனிலிருந்து வெளிவந்தாள், தேவயாசினி. அத்தையை கண்டதும் எழுந்த ஹர்ஷன், "அத்த," முகத்தில் மகிழ்வுடன் கையில் வைத்திருந்த பழங்களை அவளிடம் கொடுக்கப்போன சமயம், வெடுக்கென அதை பறித்த அர்ஜுன், "இந்தாங்க அத்த" என தேவயாசினியிடம் கொடுத்தான்.

அதை வாங்கியபடி புன்னகைத்த தேவயாசினி, தம்பியை முறைக்கும் ஹர்ஷாவை பார்த்து, "சரி, விடு டா ஹர்ஷா, தம்பி தானே," என்றவள், தன் மகனை அழைத்து அவர்களை ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்து வைத்தாள்.

✨✨✨


அபியும் தீராவும் மாயவாயில் வழியாக தங்கள் வீட்டினுள் நுழைந்து ஒருநொடி கூட தாண்டியிருக்காது, அவர்களை காணாமல் இவ்வளவு நேரமும் பரபரப்பில் இப்படியும் அப்படியுமாக நடந்துக் கொண்டிருந்த இளவரசிகள் இருவரும், படபடக்கத் தொடங்கினார்கள் .

"அண்ணா! அண்ணா- தீரா.. அந்த இளவரசன் வந்தான்-" 

"ஆமா, நாங்க பாத்தோம், அங்க எல்லைல"

"எல்லை கவசம் உடைய போகுது'ண்ணா. அங்க தான் நின்னான் அவன்..

"ம்ம். ரட்சகன காப்பாத்த அவன தடுக்கணும் மொதல்ல."

தங்கைகளை கண்ணால் கண்டதுமே, ஆளுக்கு ஒரு அடியை போடவே நினைத்திருந்த அபி, "அண்ணா நாங்க சொல்லுறத கேளு'ண்ணா" என இரு பக்கமும் நின்று பதறும் இவர்களை பார்த்ததும் அந்த முடிவை கைவிட்டான்.

"சரி, சரி... கேக்குறேன். மொதல்ல கொஞ்சம் மூச்சு விடுங்க. பொறுமையா சொல்லுங்க, யார பாத்தீங்க?"

"அண்ணா, தீரா சொன்னால! ரட்சகன் பொறந்த அன்னைக்கு நிழல்தேச இளவரசன் தொரத்தீட்டு வந்தான், அப்போ நாங்க தா இந்த ஊருக்கு எல்லை கவசம் போட்டோம்ன்னு. அத பாக்க தான் போனோம். அப்போ, அவன் அந்த கவசத்தையே பாத்துட்டு அந்த பக்கமா நின்னுட்டு இருந்தான்." ரக்ஷா தங்கள் விளக்கத்தை தொடங்க, "நாங்க அவன் பாக்கவும் டக்குன்னு போய்ட்டான். அந்த கவசம் இன்னைக்கு மிட்-நைட் ஒடஞ்சுரும்'ண்ணா. ஆனா அவன் வேற யாரையாச்சும் கூட்டிட்டு வந்துட்டா இப்போவே கூட ஒடச்சுருவான்." மாயா முடித்துவைத்தாள்.

தங்கைகள் கூறியதை பொறுமையாக கேட்ட அபி, ஜன்னல் வழியாக, ரட்சகனின் வீட்டு வாயிலை நோக்கியபடி, "நேரம் ஆக ஆக நாம இன்னும் கவனமா இருக்கணும்", என்றான், எச்சரிக்கையுடன். 

✨✨✨


அத்தையின் கைகளால், மதியம் தடபுடலான விருந்து பரிமாறப்பட்டது மருமகன்கள் இருவருக்கும். தன் கையாலேயே அவர்களுக்கு தேவயாசினி ஊட்டியும் விட.. அன்னை மீது கோபத்தில் இருந்த ரக்ஷவனோ, இங்கு,  போறாமையில் புகைந்துக் கொண்டிருந்தான். அதை கவனித்த அவன் அன்னையோ மகனை வெறுப்பேற்றுவதற்காகவே, தன் மருமகனுடன் சிறு வயதில் விளையாடிய நினைவுகளையெல்லாம் கதைகதையாக சொல்லத் தொடங்கினாள். அத்துடன், தன் நண்பனை உருட்டி மிரட்டி, இன்று, பிறந்தநாள் விழா கொண்டாட ஒப்புக்கொள்ள வைத்துவிட்டாள் மயூ. 

அதன்படி இப்போது, இந்த மாலை வேலையில், விழாவுக்கான அலங்காரங்கள் மயூரியின் மேற்பார்வையில் ஆர்பாட்டத்துடன் நடந்துக் கொண்டிருக்க... அவளின் திட்டத்தில் மிகுந்த ஆர்வம் காட்டியது அர்ஜுன் தான். காரணம் என்னவென்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.  

இதையெல்லாம் பார்க்க அழகாக தான் இருந்தது தேவயாசினிக்கு. நீண்டகாலம் கடந்த நிலையில் தன் பிள்ளைகளை காணும் வாய்ப்பு கிடைத்திருந்தும் முழுமையாக மகிழ முடியவில்லை அவளால்.  இன்னும் எவ்வளவு காலம்- சரியாக சொல்லப்போனால் எவ்வளவு நேரம் நீடிக்கும் இந்த மகிழ்ச்சி என்றே அவளால் சொல்ல முடியவில்லை. ஒருவேளை, நேற்று மாலையில் சங்கரி சொன்னது போலவே இவளின் ஆயுள் நீளமானதாக இருந்தால்?

இதையெல்லாம் யோசித்துக்கொண்டே எதையோ எடுப்பதற்காக கிச்சனுக்கு வந்தவள், தன்னை மறந்து யோசனையுடன் நின்றுக் கொண்டிருக்க.. மீண்டும் அதேபோலான தலை சுற்றல்.. அதேபோலான காட்சிபடங்கள், அவள் கண்ணுக்குள். 

விழிகளை திறக்கவும் முடியவில்லை அவளால்.. அவள் காணும் ஒவ்வொன்றும் கோரமான காட்சிகள் என்பதுபோல் அவள் விழிகள் இரண்டும் இறுக்கமாக மூடியிருந்தது. அதேநேரம், அவள் கைவழியே பாய்ந்துவந்த தங்கநிற ஒளி-- மாய ஒளி!! தேவயாசினியின் கைகளின் வழியே மாய ஒளி கசிந்துக் கொண்டிருக்க.. எதேச்சையாக அவள் கையானது, ரக்ஷவனுக்கு பிரியமான ஸ்ட்ரா-வைத்த-பால்-குடிக்கும்-குவளையின் மேல் பதிந்த நொடியில் அந்த ஒளியானது அதனுள் ஊடுருவத் தொடங்கியது.  

"அ-அத்த, தண்ணி" இம்முறை அவளை நிதானமாக்கியது, அவள் மருமகன் அர்ஜுனின் குரல். நல்லவேளையாக அவன் எதையும் கவனிக்கவில்லை. தான் பிடித்திருந்த குவளையை கையில் எடுத்து தண்ணீரை அள்ளப்போனவள், அது ஸ்ட்ரா-வைத்த டம்ளர் என்பதை கவனித்து, அதை வைத்துவிட்டு வேறு டம்ளரை கையில் எடுத்தாள்.

"ஜூஸ் குடிக்கிறியா, அர்ஜுன்?"

"ஹான், சரி அத்த. எல்லாருக்கும் ஊத்துங்க. நான் கொண்டு போறேன்." ஆறு குவளைகளில் ஜூஸை எடுத்துக்கொண்டு வர, அப்போதே ரக்ஷவனின் பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகள் தயாராக இருந்தது.  

"எப்ப டா அத்த வீட்டுக்கு சர்வரான?" கையில் ஜூஸ் ட்ரேயுடன் வரும் தம்பியை பார்த்த ஹர்ஷன் நக்கலடிக்க, "ஐயா எங்க இருக்கேனோ அங்க ஐயா தான் நம்ம வீட்டு பிள்ளை" கெத்தாக பதில் கொடுத்தான், அர்ஜுன்.  

அடுத்த ஒரு மணி நேரம், பிறந்தநாள் பிள்ளையை தயார் செய்வதிலேயே நேரம் ஓடிவிட.. சரியாக ஐந்தரை மணிக்கு ரக்ஷவனை பிடித்து இழுத்துவந்து அவனுக்கான கேக் முன்னால் நிற்க வைத்தார்கள். விரைவாகவே தன் உறவுகளுடன் ஒட்டிக்கொண்ட ரக்ஷவனும் உற்சாகமாகவே இருந்தான் அந்த விழா முழுவதும். நன்றாக கேக் அடித்து விளையாடிக் கொள்ளும் பிள்ளைகளை பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்த தேவயாசினி, திடீரென உணர்ந்த புதுவித உணர்வால் தன் விழியை அகல விரிக்க.. இத்தனை காலமும் இருந்த பயத்தை காட்டிலும் இரு மடங்கு பயம் தெரிந்தது அவள் கண்களில். 

நீண்ட மூச்சை இழுத்துவிட்டவள், அமைதியாக சென்று சோஃபாவில் அமர்ந்துக்கொண்டு, "ரக்ஷவ்" ஒரு குரல் கொடுக்க, விளையாடிக் கொண்டிருந்த அனைவரின் பார்வையும் முதுகை காட்டி அமர்ந்திருப்பவளை நோக்கியது. "உன் கிட்ட கொஞ்சம் பேசனும்... இங்க வா." அமைதியான குரலில் அவள் மகனை அழைக்க.. குழப்பத்துடன் வந்து அன்னையின் அருகில் அமர்ந்த ரக்ஷவன், என்ன என்பதைபோல் அவளை ஏறிட்டான். மற்ற நால்வரும்கூட குழப்பமாக அவர்களின் அருகில் வந்து நின்றார்கள். 

"ரக்ஷவ்... அம்மா சொல்றத கேளு." மகனின் இரு கைகளையும் அவள் மென்மையாக பிடித்துக்கொண்டு, "நீ இன்னைக்கு அந்த கோவிலுக்கு போயே ஆகணும். ஒரே ஒரு-" கிட்டதட்ட கெஞ்சிடும் குரலுடன் அவள் மகனிடம் பேச.. ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாத ரக்ஷவனோ வெடுக்கென அவள் கையை உதறினான். 

"ஏன் மா இப்டி என்ன இம்சிக்குற.. எனக்கு அங்க போக புடிக்கலன்னு எத்தன தடவ சொல்லுறது.. திரும்ப திரும்ப அதயே சொல்லி என்னை கடுப்பேத்தாத ம்மா" இவ்வளவு நேரம் இருந்த மகிழ்வான சூழல் சட்டென மாறியதில் ஒருவரையொருவர் அமைதியாக பார்த்துக்கொண்டார்கள். அதேநேரம், இருள்வானில் தோன்றத் தொடங்கியது முழுமதி. உலக மக்களின் கணக்குபடி அன்றைய நாள் தொடங்கிய 12:00 மணி முதல் ரக்ஷவணின் பதினாறாம் வயது தொடங்கி இருந்தது. ஆனால் மாயத்தின் கணக்குபடி பதினாறு ஆண்டுகளுக்கு முன் முழுமதி தோன்றிய இதேநேரம் தான், அவனின் பிறந்தநேரம், இந்த நொடி முதலே அவனின் பதினாறு வயது தொடங்கியது.

"ரக்ஷவ், பிளீஸ் டா" மகனின் தோளில் கை வைத்தபடி அவள் கெஞ்சலுடன் பார்க்க, அதை பார்த்த மற்ற அனைவருக்குமே பேரதிர்ச்சி. 

"அத்..த!"

"ம்மா, என்ன ம்மா ஆகுது உனக்கு?" ஹர்ஷாவின் அதிர்ச்சி குரலை கேட்ட நொடியில் சட்டென தன் அன்னையின் கையை பிடித்த ரக்ஷவன் அதிர்ச்சியில் கத்திவிட்டான். தேவயாசினியின் கைகளில் ஒளிரத் தொடங்கிய தங்கநிற ஒளி, இப்போது, அவளின் உடல் முழுவதிலும் பரவி, அவளை காற்றில் கரைக்கத் தொடங்கியது. 

"ரக்ஷவ்- ரக்ஷவ், என்ன பாரு"

"ம்மா இது- இதெல்லாம் என்ன ம்மா? என்ன ம்மா ஆகுது உனக்கு" அவன் கண்களில், நொடியில் நீர் நிரம்பியது. 

"எனக்கு இதுக்கு மேல நேரமில்லா டா. நா சொல்றத ஒரே ஒரு தடவ கேளு டா."

"மாமா அவங்களுக்கு என்ன ஆகுது?" மதியம் முதலாகவே இதே வீட்டினுள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருந்த தீராவும் அபியும் கூட இக்காட்சியை கண்டு உறைந்துபோய் நின்றிருக்க, "தீரா, அவங்க இயற்கையோட கலந்துட்டு இருக்காங்க. ஆதிலோகத்துல் நடக்குற மரணத்துக்கு சமம் இப்போ இங்க நடக்குறது." தீராவின் மெல்லிய குரலுக்கு அதே போலான குரலில் பதில் கொடுத்தான், அபிஜித். அதிர்ச்சியுடன்.

"ஆனா பூமில எப்டி மாமா?"

"தெரியல"

"ம்மா.. ம்மா நான் போறேன், ம்மா. கோவிலுக்கு போறேன் ம்மா. இப்போ உனக்கு என்னாச்சுன்னு சொல்லு ம்மா" அன்னையின் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டு அழுகையில் கரைந்தான், ரக்ஷவன்.

"அழ கூடாது டா. அம்மா இல்லன்னு எப்பவுமே நெனைக்கக் கூடாது. அம்மா எப்பவுமே உன் கூடவே தான் இருப்பேன். தெரியும் தானே உனக்கு"

"என்ன ம்மா ஏதேதோ சொல்ற. என்ன விட்டு எங்கேயும் போகாத ம்மா. இங்கேயே இரு." தங்கநிறத் துகள்களாக மெல்லமெல்ல காற்றில் கரையும் அன்னையை காணக்காண அவன் கண்ணீர் அதிகரித்தது. 

"மித்ரா. தம்பிய பாத்துக்கோங்க மா. மயூ," மகள்களை கை நீட்டி அழைத்தவள், மருமகன்களையும் அருகில் அழைக்க..  இளையவர்கள் எவருக்குமே பேச்சு வரவில்லை. நடப்பவை எல்லாமே கனவில் நடப்பதுபோல் இருந்திட, தேவயாசினியின் அழைப்புக்கு அதிர்ச்சியில் உறைந்த நிலையிலேயே அவளருகில் மண்டியிட்டு அமர்ந்தார்கள். 

அனைவரையும் ஒருமுறை பார்த்தவள், "உங்க அம்மாக்கு சொல்லலாம்ன்னு தான் நெனச்சேன். ஆனா, வேணாம் மா," மித்ரா மற்றும் மயூரியிடம் தொடங்கியவள், "அண்ணிகிட்ட எல்லாத்தையும் நேத்தே சொல்லிட்டேன் ஹர்ஷா. வெள்ளி கிழமை ரக்ஷவ்க்கு எக்ஸாம் முடிஞ்சுரும். அப்றம் ஊருக்கு கூட்டிட்டு போய்ருங்க. பார்கவி அம்மாட்ட, நான் அவசர வேலையா ஊருக்கு கெளம்பீட்டேன்னு சொல்லிருங்க. வேற எதுவும் வேணாம்" மருமகன்களிடம் முடித்துவிட்டு மீண்டும் மித்ராவை பார்க்க, கண்ணீருடன் தலையசைத்தாள், மித்ரா.  

"ரக்ஷவ், நீ சாதாரண பையன் இல்ல டா" கண்ணீர் வழியும் மகனின் கன்னத்தை வருடியவள், பார்வையை மற்றவர்கள் புறம் திருப்பினாள். "இவனுக்கு ஒரு பெரிய பொறுப்பு இருக்கு. அத சமாளிக்க இவன் ரெடியாகனும். அதுக்கு நீ கோவிலுக்கு போகணும், ரக்ஷவ். கூட்டிட்டு போவீங்கல்ல?" மகனையும் மற்றவர்களையும் மாற்றி மாற்றி பார்த்தபடியே அவள் கேட்க, "ம்ம்" ஒற்றுமையாக தலையசைத்தார்கள் மற்ற நால்வரும்.  

"அவன் கூடவே இருக்கனும் நீங்க எல்லாரும்." வாக்கு வேண்டி அவள் கையினை ஏந்த, மற்ற நால்வரும் அவள் கையோடு கை கோர்த்த நொடி, "ம்மா..  ம்மா, ஏன் ம்மா முன்னாடியே சொல்லல. நான் போய்ருப்பேன்ல் முன்னாடி. நீயும் என் கூடவே இருந்துருப்பல்ல" ரக்ஷவன் மட்டும் அழுகையில் கரைந்தான்.

"இல்ல, ரக்ஷவ். எப்டியா இருந்தாலும் இன்னைக்கு இப்டி தான் நடக்கும். நீ- உன்ன நீயே கொற சொல்லிக்காத. அதேமாறி, மறந்துறாத.. அம்மா எப்பவுமே உன் கூடவே தான் இருப்பேன். இன்னைக்கு எப்டி நீ சந்தோஷமா இருந்தியோ அதேமாறி தான் எல்லா வருஷமும் சந்தோஷமா இருக்கணும்."

அன்னையின் சொல்லுக்கு அவன் விடையளிக்கும் முன்பே அவள் மொத்தமாக காற்றில் கரைந்துவிட, ரட்சகனை சூழ்ந்திருந்த முழு கவசமும் அதே நொடியில் உடைந்தது.

✨✨✨

நிழல் தேசம்,

"இளவரசர் ஷேனா.. நம்மை அழிக்கப் பிறந்த சக்தி மறைந்திருக்கும் இடத்தினை கண்டறிந்து விட்டேன்" நிழல்தேசத்து ராஜ அரியாசனம் இருக்கும் அரங்கத்தின் மையத்தில் நின்றிருந்த இருளரசன், திடீரென உணர்ந்த உணர்வால் கண்களில் பேராசையுடன் பின்னால் திரும்ப, அவர் முன்பாக, தன் உணர்வுகளை மறந்த நிலையில் நின்றிருந்தான் நிழல்தேசத்தின் இளவரசன், ஷேனா.

"உடனடியாக சமாராவை அழைத்துக்கொண்டு இவ்விடம் புறப்பட்டுச்செல்." இருளரசன் ஒரு சொடுக்கிட, அவர் கை வழியே பாய்ந்த விசையால் ஒரு மாயவாயில் திறந்தது.

"அந்த எல்லை கவசம் பலவீனமாகியிருக்கும். சமாரா, நீ தான் அதை தகர்க்க வேண்டும்" தன் மாமா சொல்லிய கட்டளைக்கு, சமாரா தலையசைக்க, அந்த மாயவாயிலை நோக்கி நடந்தவர்களின் நடை, இருளரசனின் செருமல் சத்தத்தால் தடைபட்டது.

"ஹம்- மற்றொன்றினையும் நினைவிலிருத்திக்கொள், இளவரசர் ஷேனா.. அந்த சக்தி, எனக்கு உயிருடன் வேண்டும்"

"ம்ம்.. நிச்சயம், தந்தையே. மரண வேதனையை கொடுப்பினும் அவனுக்கு மரணத்தை நிச்சயம் கொடுத்திட மாட்டேன். இது உங்களுக்கு நானளிக்கும் வாக்கு" பின்னால் திரும்பாமலே பதில் கொடுத்தவன், தன் முரட்டு நடையுடன் அவ்விடத்திலிருந்து நீங்கினான். அதேநேரம், "நீங்க- நீங்கலாம் இங்கேயே இருங்க. நான்.... ஒரு எடத்துக்குப் போயிட்டு வாறேன்" அழுது வடிந்த முகத்துடன், வாயிலை நோக்கி ரக்ஷவ் நடக்க, "தனியா எங்க போற?" ஹர்ஷா பதட்டத்துடன் எழுந்தான். ஆனால், அவன் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. "அண்ணா, நீ இங்கேயே இரு. நா போறேன் அவன் கூட" என்றபடியே பின்னால் திரும்பிக்கூட பார்க்காமல் நடக்கும் ரக்ஷவை பின்தொடர்ந்து விரைந்தான், அர்ஜுன். 

❣️ ✨ சாகச பயணம் சலைக்காமல் வரும் ✨ ❣️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro