Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

உளவாலி மகன்கள்

நீலகிரி மாவட்டம்


அந்தி பொழுதில் மலையடி சேரும் அந்தச் செங்கீற்றுக் கதிரவன், இன்று ஏனோ அதி விரைவாய் மேற்கு நோக்கி பயணித்திருக்க.. அதற்குள் பொழுது முடிந்ததா? என கேட்காதக் குறையாக, பறவைகள் தத்தம் கூடுகளை சென்றடையும் அந்தத் தருணத்தில், பவுர்ணமிக்கு இன்னும் ஒருநாள் அவகாசம் இருக்கையிலும் ஏனோ இன்றைய இரவுப் பொழுதின் நிலவு, 

பௌர்ணமியின் நிலவு போல பிரகாசமாகவே தெரிகிறது.

இத்தகைய ரம்மியக் காட்சிகள் அவளை சுற்றி இருந்தாலும், இவையனைத்தையும் ரசிக்கும் நிலையில் இல்லாத அவளின் மனம், பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வை எண்ணி அன்றைய தினம் முழுவதும் பதைபதைத்துக் கொண்டிருந்தது. 'மகாராணி! இன்னைக்கு ஏன் அவளோட நெனப்பாவே இருக்கு எனக்கு? அவளுக்கு ஏதாவது பிரச்சனையா? அப்டி இருந்தா என்கிட்ட சொல்லிருவாளே. அவகிட்ட பேசி ஒரு வாரத்துக்கு மேல ஆச்சு. எப்டியாச்சும் இன்னைக்கு பேசிறனும்' தேவயாசினியை எண்ணி குழம்பிய தன் மனதை 'இரவு 

பேசலாம்' என சமாதானம் செய்திருந்தாள், சங்கரி.

அந்த மாலை பொழுது வேகமாகவே கடந்துவிட்டது. இரு தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் அறைக்குள்ளேயே இருந்தவள், இன்றுதான் கொஞ்சம் வெளியில் நடமாடிக் கொண்டிருக்கிறாள். இப்போது, வீட்டில் உள்ள அனைவரும் அவரவர் வேலையில் மும்முரமாக இருக்க.. இரவு உணவினை தயார் செய்துக் கொண்டிருந்தவள், விரைவாகவே சமைத்து முடித்துவிட்டு, யாரும் தன்னை கண்காணிக்கவில்லை என்பதையும் உறுதி செய்துக்கொண்டு, தனது அலைபேசியை எடுத்துக்கொண்டு மொட்டைமாடிக்கு விரைந்தாள். ஆனால், அவளறியாமலே அவளை கண்காணித்தது அவளின் மூத்த மகன் ஹர்ஷவர்தனனின் கண்கள்.
அவள் மொட்டைமாடி படியில் பதுங்கிப் பதுங்கி செல்வதை கண்டு சந்தேகப்பட்ட அவனின் கண்கள், இப்படி இந்த இரவு வேளையில் பதுங்கி செல்ல அவசியம் என்ன வந்தது? என்பது புரியாமல், அதன் காரணத்தை 

 அறிந்துக்கொள்ள அவளை பின்தொடர்ந்தான்.

இவ்விருவரையும் சேர்த்துவைத்து கவனித்தான், அந்த வீட்டின் கடைக்குட்டி செல்லப்பிள்ளையான, செல்வகுமார்-சங்கரியின் இளைய மகன், அர்ஜுன். "இப்போ என்னத்துக்கு இந்த நேரத்துல ரெண்டு பேரும் சி.ஐ.டி கேம் விளையாடுறாங்க? ம்ம்??.. நம்மள விட்டுட்டு விளையாடுறது தப்பாச்சே." தன் உளவு பார்வையை கூர்மை ஆக்கிக்கொண்டே மாடியில் நடப்பதை காண அந்த இரு உருவங்களையும் பின்தொடர்ந்து, பூனை நடையிட்டு 

சென்றான், அர்ஜுன்.

✨✨✨



மணி இரவு எட்டை கடந்துக் கொண்டிருந்தது.. ரக்ஷவன் தனிமையில் இருப்பானே என தேவயாசினி வேக வேகமாக வீட்டை நோக்கி நடந்துக் கொண்டிருந்த அந்த மௌனமான பொழுதை திடீரென களைப்பதுபோல் ஒலித்தது, அவளின் கை-பையிலிருந்த அலைபேசி. ஏற்கனவே பலவித சிந்தனைகளின் பிடியில் சிக்கிக் கொண்டிருந்தவளின் இதயம், திடீரெனக் கேட்ட சத்தத்தால் ஒருநொடி நின்றுத் துடித்தது. சட்டென தன் நடைக்குத் தடை போட்டவள், இந்த நேரத்தில் யார் அழைப்பது என சிறு குழப்பதுடனே தன் அலைபேசியை எடுக்க.. அதில் ஒளிரிய அண்ணி என்ற எழுத்தை கண்டதுமே ஒரு நிம்மதி பெருமூச்சுடன் நிதானமாகினாள்.

அருகில் இருந்த ஒரு மரத்தின் அடியில் சென்று நின்றபடி அழைப்பை ஏற்றுக் காதில்தான் வைத்தாள், அடுத்த நொடியில் அவள் காதை சரமாரியாகத் 

தாக்கியது, சங்கரியின் நல விசாரிப்புகள்.

'ஹலோ! ஹலோ, தேவா... நல்லாருக்கியா மா? தம்பிக்கு ஒன்னும் பிரச்சன 

இல்லையே? ரெண்டுபேரும் நல்லா இருக்கீங்கல்ல?'

'அண்ணி! நல்லா இருக்கோம். எந்த பிரச்சனையும் இல்ல. நீங்க ஏன் அண்ணி இவ்வளவு பதருறீங்க?'


'ஹான்? .. .. .. ஒன்னுல்ல மா, தேவா. அது- சும்மா தா... பேசி ரொம்பநாள் ஆச்சேன்னு தா கூப்புட்டேன்.'

'ஒஹ்! ஆமா, அண்ணி. நானும் இன்னைக்கு அதே தா நெனசுட்டு இருந்தேன். பேசி ரொம்ப நாள் ஆச்சுல்ல? இன்னைக்கு வீட்டுக்கு போய்ட்டு உங்கள்ட்ட பேசனும்னு தா இருந்தேன். நீங்களே கூப்புட்டீங்க. ... .. நீங்க எப்டி இருக்கீங்க அண்ணி? பசங்க... விட்டுல உள்ள எல்லாரும் நல்லா இருக்காங்க தானே?'


'ஹான், எல்லாரும் நல்லாவே இருக்காங்க மா... .. ..' சங்கரியின் குரல், மேலும் எதையோ கூறத் தயங்குவதை மறுமுனையில் நிலவிய விசித்திர மௌனத்தால் உணர்ந்துக்கொண்ட தேவயாசினி, 'அண்ணி, நீங்களே கூப்புட்டுருக்கீங்க... ஏதும் பிரச்சன இல்லையே? அங்க எல்லாம் ஓகே தானே?' தேவா, மென்மையான குரலில் கேட்க.. அக்கணம், அவள் மனதில் நிலைத்திருந்தது, நாளைய தினத்தை குறித்த பயமே. அன்று, தான் கனவில் கண்டதாக நினைத்துக் கொண்டிருந்த சம்பவம், ரக்ஷவன் பிறந்த அன்று நிஜமாகிய அந்த சம்பவம், ஷிவேதனா குறிப்பிட்ட ரட்சகனின் கவசங்கள், அவன் பிறப்பில் உருவாகி அவனது பதினான்காம் பிறந்தநாளில் உடையும் என்னும் செய்திதான் இப்போது அவளின் மனதை போட்டு அரித்துக் கொண்டிருக்கிறது. அதனால், தன் குடும்பத்தினர் மூலம் மகனுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திடுமோ என்னும் கலக்கமும் இணைந்தே இப்போது தேவயாசினியை பதறச் செய்துக் கொண்டிருக்கிறது.

'ஒன்னுல்ல, தேவா... ரெண்டு நாளாவே மனசு சரியில்ல. இன்னைக்கி காலைல இருந்தே, ரக்ஷவ் பொறந்த அன்னைக்கு நடந்த சம்பவம்தான் மனசுல வந்து வந்து போகுது. நாளைக்கு வேற அவன் பொறந்த நாள்ல, அதா... உனக்கும் அவனுக்கும் ஏதோ பிரச்சினையா இருக்குமோன்னு தோனுச்சு.' சற்று தயங்கியவாரே கூறிட, 'அதுலாம் எதுவும் இல்ல, அண்ணி. நான் நல்லா தா இருக்கேன். ரக்ஷவும் நல்லா இருக்கான். ஆனா, நாளைக்கு-' என வார்த்தையை பாதியிலேயே இடைநிறுதினாள், தேவயாசினி.


'நாளைக்கு? நாளைக்கு என்ன மா?' அவள் வார்த்தைகள் பாதியிலேயே நின்றதால், சங்கரி சற்று பதட்டத்துடனே கேட்க... அதற்கு, மறுமுனையில் இருந்து வந்ததோ, சீரற்ற பெருமூச்சுகள் மற்றும் விம்மல்களின் சத்தமே.

'தேவா என்ன மா- அழறியா நீ!! என்னாச்சு தேவா? சொல்லு, நாளைக்குன்னு ஏன் நிறுத்துன? நாளைக்கு என்ன பிரச்சன?'


'அண்ணி- அது.. .. .. ..' அவளின் விம்மலகள் தொடர, 'அழாத மா. அண்ணி இருக்கேன்ல, எதுவா இருந்தாலும் தைரியமா என்கிட்ட சொல்லு. எந்த பிரச்சன வந்தாலும் பாத்துக்கலாம். உன் அண்ணனும் உனக்கு தா சப்போர்ட். தெரியும்ல?" மறுமுனையில், கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த தேவயாசினியை தேற்ற முயற்சித்தாள், சங்கரி. தன் அண்ணியின் தேற்றல்கலால் மெல்ல தன் அழுகையை விழுங்கிவிட்டு, 'அண்ணி....' வரவழைக்கப்பட்ட தைரியத்துடன், தழுதழுத்த குரலில் அழைத்தாள், அவள்.

'என்னம்மா ஆச்சு? சொல்லு, எந்த பிரச்சனைனாலும் பாத்துக்கலாம்'


'அண்ணி, நீங்க சொன்ன அதே நாள் பத்தி தா நானும் யோசிச்சிட்டு இருக்கேன். நானே ஆசபட்டாலும் இனி- இனி என்னால- ரக்ஷவ பாத்துக்க முடியாது, அண்ணி. .... ... நாளைக்கே வந்து அவன அழச்சிட்டு போய்ருங்க. பிளீஸ்- பிளீஸ், அண்ணி. அவன உங்கக்கூட வச்சுக்க முடியலனாலும், எங்கேயாச்சும் பத்தரமா வச்சு பாத்துக்கோங்க,' தன் வார்த்தையை தொடர்ந்துக் கதறி அழத் தொடங்கினாள், தேவயாசினி. அவளின் வார்த்தைகளால் உறைந்து நின்றாள், சங்கரி.

'ஏய்- என்ன இது- ஏன் இப்டிலாம் பேசுற நீ? உன் பையன நீ பாத்துக்குறதுல யாருக்கு என்ன பிரச்சன? ஏன் இப்டிலாம் பேசுற நீ?' தேவயாசினியின் சொல்லில் தலையும் புரியாமல் வாலும் புரியாமல், என்ன சொல்வதென்றே தெரியாத சங்கரி, திக்கித் தினறினாள். சில நொடிகளுக்கு எந்த பேச்சும் அந்த அலைபேசியின் வழியாக பறிமாறப்படவில்லை, தேவயானிசியின் அழுகை மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது.


'தேவா, ஏன்மா? என்னாச்சு உனக்கு, ஏன் இப்டிலாம் பேசுற? தெளிவா சொன்னாதானே எதாச்சும் வழி பண்ண முடியும். சொல்லு என்ன பிரச்சன? நம்ம வீட்டுல உள்ள யாராச்சும் உன்னையும் தம்பியவும் பாத்துட்டாங்களா?" கன்னத்தில் வழியும் நீரை துடைத்தபடியே சங்கரி கேட்க, "இல்ல'ண்ணி.... நா- நா உங்கட்ட இருந்து ஒரு விஷயத்த மறச்சுட்டேன்.' அவள் சிறு இடைவெளி விட, மறுபக்கம் அமைதியே நிலவியது. சங்கரியின் மனதில் பற்பல எண்ணங்கள் நொடிக்கணக்கில் வந்து குவிந்தது.

'நம்ம ரக்ஷவ் பொறக்குறதுக்கு முந்துனநாள் ராத்திரி, நான் தோட்டத்துல இருந்தப்போ ஒரு கனவு வந்துச்சுன்னு சொன்னேன்ல.... ஞாபகம் இருக்கா?' தேவா, தான் கூற வந்ததை கேள்வியாக கேட்க, சங்கரிக்கு அடுத்த வார்த்தைகள் தேவையாக இருக்கவில்லை, சரியாக கணித்துவிட்டாள் அவளின் பயம் என்னவாக இருக்கும் என்பதை.


தன் சகோதரியான ஷிவேதனா, அன்று, ரட்சகனுக்காக உருவாக்கிய கவச சக்திகள் நாளைய பொழுதில் உடையப்போகிறது என்பது தேவாவிற்குத் தெரிந்துள்ளது என்பதை புரிந்துக்கொண்டாள், சங்கரி. இவ்வளவுநாள் இதுபற்றி இருவரும் பேசிக்கொள்ளவில்லை. எனவே, அதுதான் தேவாவின் பயமாக இருக்கக்கூடும் என அவள் கணித்திருக்க... ஆனால், அதுமட்டுமே அவளின் பயமாக இருக்கவில்லை.

'நியாபகம் இருக்கு தேவா, வாக்கிங் போய்ட்டு இருக்கைலயே எப்டியோ தூங்கிட்டேன்னு சொன்னியே, அதானே?'


'ஆமா, அண்ணி. ஆனா, அது என்ன கனவுங்குறத நா உங்ககிட்ட சொல்ல. உண்மைலயே, அது கனவே இல்ல' எனத் தொடங்கி, அன்று ஷிவேதனாவை சந்தித்த சமயத்தில் நடந்த நிகழ்வினை தொடக்கம் முதலாகக் கூற ஆரம்பித்தாள். நடந்தது என்னவோ நிஜத்தில் தான். ஆனால், ரட்சகனின் கவசமாய் ஷிவேதனாவின் ஒட்டுமொத்த சக்திகளும் தேவயாசினியின் உடலினுள் சென்ற நொடியில் அவள் மயங்கி இருக்க.. மீண்டும் எழுந்த சமயம் அவள் உறக்கத்தில் இருந்து எழுந்ததாகதான் நினைத்துக் கொண்டாள். அதன் காரணமாகவே நடந்தது அனைத்தும் கனவென அவளே தீர்மானித்துக் கொண்டாள்.

இப்போது, அன்று நடந்தவைகளை தேவயாசினி முழுவதுமாக சொல்லி முடித்த நொடியில் சங்கரிக்கு தூக்கிவாரி போட்டது. தன் சகோதரி, ரட்சகனுக்கு கவசத்தை மட்டும் உருவாக்கிடவில்லை; அதனுடன் சேர்த்து வேறு ஒருவரின், சரியாகச் சொல்லப்போனால் அவளது மகனின் உயிருடன் கலந்திருந்த மாய சக்தியை பிரித்தெடுத்து தேவாவின் கருவுக்குள் உள்ள சிசுவினுள் செலுத்தியிருக்கிறாள். இதன் விபரீதம் அறிந்தும் எப்படி அவளால் அப்படி செய்ய முடிந்தது என சங்கரியின் மனம் அவளது உடன்பிறப்பை எண்ணி அதிர்ச்சியடைந்திருந்தது. இந்த செயலால் ரட்சகனுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை, ஆனால், எவ்வித மாய சக்திகளுக்கும் பழக்கப்படாத தேவாவின் உடலுக்குள் அவன் இருக்கையில் அந்த மாயம் செலுத்தப்பட்டிருப்பதால், அந்த சக்திகள் வழுவிழக்கும் நொடி, அதாவது சரியாக பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்பு, தேவாவின் உயிருக்கு முடிவாக வந்து நிற்க்கும் அந்த சக்தி.


'அண்ணி, அத அன்னைக்கு நான் கனவுன்னு தான் நெனச்சுருந்தேன். ஆனா, அது உண்ம தான். தம்பி பொறந்தப்போ ஹாஸ்பிட்டல்ல- அன்னைக்கு அங்கருந்து நான் போறதுக்கு முன்னாடி- அவரு குரல் எனக்கு மட்டும் கேட்டுச்சு. அந்த பொண்ணு சொன்ன அதே எடத்துக்கு தம்பிய தூக்கிட்டு போகச்சொல்லி அவரு குரல் கேட்டுச்சு, அண்ணி! ரக்ஷவால தான் நம்ம பூமிக்கும் ஏதோ இன்னொரு உலகத்துக்கும் வரப்போற அழிவ தடுக்க முடியும்ன்னு அந்த பொண்ணு சொன்னாங்க. அதுக்கு, அவன இங்கருக்குற ஒரு கோவிலுக்கு கூட்டிட்டு போக சொன்னாங்க. ஆனா அவன், கோவில்னாலே மூஞ்சில் அடிச்சமாறி போய்றான். பதினாலு வருஷத்துல அந்த கவசமும் போய்ருமாம். அவன கொல்ல நெனைக்குறவங்க இவன தேடி வந்துருவாங்க. எனக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியல அண்ணி. அப்பறம்- என்னாலையும்- என் உயிரும் அந்த கவசத்தோட சேந்தே போய்ரும்' தேவாவின் வார்த்தைகள் ஓய்ந்தகணம் அந்த அலைபேசியின் தொடர்பில் மயான அமைதி மட்டுமே நிலவியது. குறைந்தது மூன்று நிமிடத்திற்காவது நீண்டிருக்கும் அவ்வமைதி.

சங்கரிக்கு முன்பே தெரியும் நிகழ்ந்தவை அனைத்தும் நிஜமென. ஆனால், அவர்களுக்குள் என்ன பேச்சுவார்த்தை நடந்தது என்பதை இப்போது தேவா சொல்லியே தெரிந்துக் கொண்டாள். மேலும் முக்கியமாக, அனைத்து பின்விளைவுகளும் தேவாவிற்கு முன்பே தெரிந்திருக்கிறது. அத்துடன், நாளைய தினம் தான் ரட்சகனின் பதினான்காம் பிறந்தநாள். அனைத்தும் தலைகீழாய் மாறப்போகும் தினம். ஆனால், இன்னும் ஏன் ரட்சகனின் சக்திகள் வெளிபடவில்லை என்பதுதான் அவளுக்கு புரியவில்லை.
அனைத்தையும் கூறி முடித்த தேவயாசினி, தன் அழுகையை அடக்கும்பொருட்டு, வாயை மூடி சத்தமில்லாமல் தினறிக்கொண்டிருந்தாள். சங்கரியோ சொல்ல வார்த்தைகளின்றி தவித்திருந்தார். அவருக்கு தெரியும், எவ்வித மாய சக்திகளும் இல்லாத ஒருவரின் சரீரத்தில் மாயங்கள் நுழைந்தால் அதன் விளைவு என்ன என்பது. மறுக்க முடியாத இந்த உண்மையால் அவர் கண்ணிலும் கண்ணீர் கொட்டத் தொடங்கிவிட்டது.


'தேவா, உன் உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சும் நீ சம்மதிச்சியா?' சங்கரியின் கேள்விக்கு மறுபுறமிருந்து பதில் ஏதும் வரவில்லை, அடக்கபட்ட அழுகையில் விம்மல் ஓசை மட்டுமே கேட்டது.

'நீ.. நீ ஏதும் பயப்புடாத மா.. அதெல்லாம் உனக்கு ஒன்னும் ஆகாது.. நீ- நீ நல்லபடியா- நூறுவருஷம் நல்லபடியா ரக்ஷவ் கூட இருப்ப. நா- நாளைக்கு வரேன் மா.. நீ பயப்புடாத. நா இல்லனாலும் உன் அண்ணன் கண்டிப்பா வந்துருவாரு. தைரியமா இரு. நீ எதுவும் மனச போட்டு கொழப்பிக்காத, சரியா? தம்பியும் கண்டிப்பா கோவிலுக்கு வந்துருவான்" அவளை ஆறுதல் படுத்தினாலும் சங்கரியின் மனம் சுக்குநூறாய் உடைத்து போய் இருந்தது. அவள் அறிவாள் இந்த ஆறுதல் வார்த்தைகள் அனைத்தும் போலிதான் என்பதை. விதியை கூட வென்றிடலாம் போலும்; ஆனால், மாயத்தை வெல்ல எவரால் முடியும்?


'சரி, அண்ணி. நீங்க சொல்லுறதெல்லாம் நடக்கனும்ன்னு நா வேண்டிக்குறேன்" தன் கண்களை துடைத்துக் கொண்டவள், 'சரி, அண்ணி.. நா அப்பறமா பேசுறேன். அவன் வீட்டுல தனியா இருப்பான்.' சங்கரியிடம் விடைபெற்று அழைப்பை துண்டித்தவள், தன் முகத்தை சரிசெய்துகொண்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

தன் அழைபேசியை துண்டித்த சங்கரியின் மனம், தன்னிலையை இழந்திருக்க.. அவள் அப்படியே உடைந்து போய் அங்கேயே அமர்ந்து அழத்தொடங்கினாள். இதை, மொட்டை மாடியில் வெவ்வேறு இடங்களில் மறைந்த நிலையில் பார்த்துக் கொண்டிருந்த இரு உருவங்களும் ஏனென்று தெரியாமல் கண்ணின் ஓரம் கசிந்த நீரை துடைத்துக் கொண்டு அவளையே பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தது.


அந்த இரு உருவங்களுக்கும் சங்கரியின் முழு உரையாடலும் தெளிவாகவே கேட்டது. அதிலும் "தேவா" என்ற உச்சரிப்பு மிகத்தெளிவாகவே கேட்டது. இந்த பெயரை எங்கோ கேள்விப்பட்டிருக்கிறோமே... என்று இருவருமே யோசித்துக் கொண்டிருக்க... சங்கரியின் அடக்கப்பட்ட அழுகுரல் அவ்விருவரையுமே அதிகம் சிந்திக்க விடவில்லை.

❣️ ✨ சாகச பயணம் சளைக்காமல் வரும் ✨❣️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro