7. உண்மையில் யாரிவன்?
பிற இடங்களில் வைரமாளிகையின் வைரம், தன் விடியல் கதிர்களைப் பரப்பத் தொடங்கியிருந்தது.. வழக்கம் போல நிழல்ராஜ்யத்தின் இருள்மாளிகை, இருளிலேயே தான் அதன் விடியலைத் தொடங்கியது. அந்த எலும்பின் மடியில் நிர்மலமான உறக்கத்தில் இருந்த ராணாவை அன்றையப் பொழுதைக் காண எழுப்பியது அவன் தந்தையின் கோபக்குரல் தான்.
"ராணா...", அறையெங்கிலும் எதிரொலிக்கும் குரலில் இருளரசன் கத்தியதில் திடுக்கிட்டு எழுந்த ராணா, தந்தையைப் பார்த்து திருதிருவென விழிக்க... கத்திக்கொண்டே அறைக்குள் வந்தவர், அந்த அமில நீரைத் தண்டுவதற்கு தன் சக்திகளை உபயோகித்தார். அந்த அகழியினுள் இருந்தே சில செயற்கை கற்களை மேலெழுப்பி அதன் மேலே ஏறி மகனின் அருகில் சென்றவர் அவன் தாடையை அழுத்திப்பிடித்து, அவனை தூக்கி கட்டிலில் நிற்க வைத்தார்.
"நேற்றைய பொழுதில் என்ன காரியம் செய்ய விழைந்தாய் நீ... உன்னை இவ்விடம் விட்டு அகலக் கூடாதென சொல்லியிருக்கிறேன் அல்லவா??", அவர் கோபத்தில் இருக்கும் உஷ்ணம், மகனின் தாடையை பிடித்திருக்கும் அழுத்தத்திலேயே வெளிப்பட.. அதன் வலியால், கலங்கிய கண்களுடன் முணங்கிக்கொண்டே தந்தையின் பிடியில் இருந்து விடுபடத் திமிறினான் ராணா.
"இன்னும் எத்தனை பெண்களை இந்த அகழிக்குள் பலி கொடுப்பாய் நீ?.. .. .... ஒவ்வொரு பலியிலும், அவர்கள் ஆற்றலுக்கு நிகராக உன் ஆற்றல் குறைகிறதடா.. உனக்கு விளங்குகிறதா இல்லையா??... அதிலும் நேற்றைய பொழுது.. ..", எப்போதும் பிறரை பயத்தில் வெளிரவைக்கும் இருளரசரின் முகம், அவர் சொல்லிடும் விஷயத்தின் விளைவை நினைத்து இப்போது வெளிரிப்போய் இருந்தது.., "நேற்று நீ யாரை பலியிட பார்த்திருக்கிறாய்... அவளை மட்டும் நீ பலியிட்டிருந்தால் அதற்கு நிகராக நீ உன் உயிரையே இழந்திருக்கக்கூடும் ராணா... ஒரு முறை சொன்னால் உனக்கு புரியாதா??", என்றவர் இப்போது அவன் தோள்களை அழுத்திக் கொண்டிருக்க.., வாயை மூடிக்கொண்டு இதழ்கள் சுருங்க அழுதவன் அவர் கையை உதறிவிட்டு மெத்தையின் மத்தியில் இருக்கும் அந்த எலும்புகூடை கட்டிக்கொண்டு, அழுகையினூடே தந்தையை அரண்ட விழிகளுடன் நோக்கினான்.
"சொல்.. இனி எங்கும் செல்லமாட்டாய் தானே?.. இங்கிருந்து வெளியேறக் கூடாது... மாட்டாய் தானே?...", அவன் கையை வெடுக்கென பிடித்து இழுத்து கேட்டதில் அவன் கையில் இருந்த எலும்பு கீழே விழுந்தது. "ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...", கண்ணீருடன் அவரை பார்த்து பொறுமி அழுதவன், அவர் கையை உதறித் தள்ளிவிட்டு குனிந்தமர்ந்து அந்த எலும்பை மீண்டும் கையில் தூக்கினான்.
என்னதான் சொன்னாலும் தன் மகன் வாயைத்திறந்து ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை என்னும் கோபம் இருளரசனின் உச்சத்தைத் தொட்டது. "என்னை பார் ராணா... இந்த ஜடங்களுடன் என்ன உறவு வேண்டியுள்ளது உனக்கு?", அவன் கையிலிருந்த எலும்பை வலுக்கட்டாயமாக பிடுங்கி தூர எறிய... பறந்து சென்று அமில அகழியைத் தாண்டி தரையில் விழுந்த அது, உடைந்ததுச் சிதறியது.
அதைக் கண்ட ராணா, பட்டென அழுகையை நிறுத்தினான். அவன் பார்வையில் எந்த உணர்வு இருந்ததென்றே சொல்லமுடியாத அளவுக்கு அவன் முகபாவனை இருக்க... தந்தையின் பிடியை ஒரே மூச்சில் தள்ளிவிட்டு, அமில நீருக்குள் இறங்கி தன் எலும்பு அன்னையை நோக்கி ஓடினான் அவன்.
சறுக்கிக்கொண்டு அந்த எலும்பினருகில் அமர்ந்தவன், எவ்வித உணர்வும் இல்லாமல் சில கணம் அப்படியே உறைந்திருக்க... அவன் கைகள் மெல்ல ஒவ்வொரு பாகமாக இணைக்கத் தொடங்கியது அந்த எலும்பை. அதைக்கண்ட இருளரசனின் கோபம் இன்னும் இன்னும் உச்ச நிலைக்குச் செல்ல.. தான் உருவாக்கி வைத்தப் பாதையின் மீதே ஏறி அவனிடம் சென்றவர், அவன் பின்னங்கழுத்தைப் பிடித்துத் தூக்கி நிற்க வைத்தார்.
"உனக்கு எவ்வளவு ஆணவம் இருந்தால் என்னையே அவமதிப்பாய்... கேட்பதற்கு பதிலளிக்க மாட்டாயா நீ??", அவன் முதுகிலேயே இரண்டு அடி போட, இம்முறை அவன் அழவில்லை... முகத்தில் நிறைந்த அழுத்தத்தால் அவன் விழிகள் இரண்டும் கறுமை படரத்தொடங்கியது. எப்போதும் பிறரை வசியம் செய்யும் அவனது இந்தச் செய்கை, இம்முறை, வசியம் செய்வதற்கு பதில் ஒருவித விசித்திர விசையை அவ்விடமெங்கிலும் பரப்பியது. அவ்விழியுடன் தந்தையை ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்துக் கொண்டே பின் நகர்ந்தான் ராணா.
மகனின் பிறப்பிலேயே அவன் ஆற்றல்கள், அவன் பிறப்பின் நோக்கம் என ராணா குறித்து சகலமும் அறிந்திருந்த இருளரசனுக்குக் கூட இப்போது நடப்பது என்னவென்று விளங்கவில்லை... ராணாவின் 'மறைவசியம்' என்னும் விபரீத ஆற்றலால் எதுவும் விபரீதமாக நடக்கும் முன் அவனைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்னும் நோக்கில் இருளரசன் வேகவேகமாக தன் மந்திரக் கோளை உபயோகித்து அவன் பின்னோக்கி நகர்வதைத் தடுக்க.. அவரின் கோளில் இருந்து வெளிப்பட்ட விசை, ராணாவை அடையும்முன் அவனின் நொடிநேர செயலால் இருளரசனையே திருப்பித் தாக்கியது. அதில் தடுமாறி தரையில் விழுந்தார் அவர்.
"ஆஹ்ஹ்ஹ்ஹ்...... ", அடித்தொண்டையில் இருந்து அறையே அதிரும் அளவிற்கு கத்தி கொண்டிருக்கும் தன் மகனை அரண்ட விழியில் நோக்கிக் கொண்டிருந்தவர் மீண்டும் எழக்கூட மறந்து விட... அசரீரி போல் அலரும் ராணாவின் விழியின் கறுமை, அவனது உடல் முழுவதும் உள்ள நரம்புகள் வழியே ஊடுறுவி, அவனைச் சுற்றிலும் கதிர்வீச்சு போல் பரவிடுவது தெளிவாகவே தெரிந்தது இருளரசரின் பார்வைக்கு. அந்த விசை, அறை முழுவதுமே பரவிட.. இன்னுமும் பயங்கரமாக அலறிக் கொண்டிருந்தான் ராணா.
'அவன் குரலில் கோபம் இருக்கிறதா?.. பயம் இருக்கிறதா?... வெறுப்பு?... இல்லை, இவை எதுவுமே ராணாவின் செய்கையில் இல்லை... பிறகு தன் மகனின் இந்நிலைக்கு காரணம் என்ன?...' இருளரசனின் பார்வை இந்தக் கேள்விகளைத் தாங்கி மகனை கூர்ந்து நோக்க... அவர் மனதில் தோன்றிய உணர்வுகளில் எதுவுமே இல்லை அவன் முகத்தில்.
இரு நொடிக்குள் அவ்விடமே ராணாவின் ஆழுமைக்கு கட்டுபட... மறுநொடியே நில-நடுக்கம் போல் ஆட்டம் கண்டது அந்த அறை. நடப்பது என்னவென்று இருளரசன் சுதாரிக்கும் முன், அந்த அமில அகழியினுள் இருக்கும் எலும்புகள் ஒவ்வொன்றாக எழுந்து இருளரசனை நோக்கி வேகமாக நடந்து வர... இதற்கு மேலும் இங்கிருந்தால் தன் உயிர் பிரியக்கூட நேரிடும் என விழுந்தடித்து அங்கிருந்து ஓடியே விட்டார் அவர்.
அறையின் வாயில் வரை இருளரசனை துரத்தி வந்த எலும்புகள், அவர் அங்கிருந்து தப்பியதும் ராணாவை நோக்கித் திரும்பிட.. இப்போது பழைய நிலைக்கே மாறியிருந்தவன், உடைந்துபோய் தரையில் கிடக்கும் அந்த எலும்பைத் தூக்கி மடியில் வைத்து அழத் தொடங்கினான். மற்ற எலும்புகள் அனைத்தும் ஒவ்வொன்றாக அவனை சூழ்ந்து, சமாதானமாக அவனுக்கு தோள் கொடுத்து நின்றது...
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro