6. ராணாவின் அம்மா!
ரட்சக மஹா சாம்ராஜ்யம்
சூரியனில்லா ஆதிலோகத்தின் சூரியனாக திகழும் வைரமாளிகையின் உச்சத்தில் இருக்கும் அந்த மாபெரும் வைரம், தன் ஒளியை குறைத்து, இரவு வந்ததை உணர்த்தி வெகுநேரம் கடந்துவிட்டது.
புதிதாக பிறந்த தன் தங்கைகளை ரசித்து ரசித்து மகிழ்ந்த அபிஜித், இப்போதே உறக்கத்தை தழுவியிருந்தான்.. அவன் அத்தை ரோஹினியின் இரு மகள்களான ராகவி மற்றும் சங்கவி, அபியுடன்தான் உறங்குவோம் என தங்கள் அன்னையிடம் அடம்பிடித்து இப்போது அபியின் இரு பக்கமும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். மூன்று பிள்ளைகளும் நிம்மதியாக தூங்குவதை பார்த்துவிட்டு மெல்லிய புன்னகையுடன் தனதறைக்கு வந்தார் சத்யஜித்.
அங்கே, புதிதாக பிறந்துள்ள தன் இரு சேட்டைக்காரிகளிடம், தனியாக போராடிக்கொண்டிருந்தார் சத்யபாமா. என்னதான் தட்டிக்கொடுத்து தூங்க வைத்தாலும், இரட்டையர்கள் தங்கள் முட்டை கண்களை திறந்து வைத்துக்கொண்டு, அன்னையைக் கூட கவனிக்காமல், கை கால்களை ஆட்டி அவர்களுக்குள்ளேயே ஏதேதோ சமிங்ஞைகளை மௌனமாக பரிமாறிக்கொண்டு சிரித்துக்கொள்கிறார்கள். இருவரையும் தூங்கவைக்கும் போராட்டத்துடன் சேர்த்து இந்த அழகு விளையாட்டையும் அவர் பாத்தபடியே இருக்க... சரியாக அப்போது தான் உள்ளே நுழைந்தார் சத்யஜித்.
"பாமா... தூங்கவில்லையா நீ??"
"ஹ்ம்ம்.. எங்கே??... இந்த இரு சேட்டைக்காரிகளும் இன்னும் தூங்கவில்லையே", என கட்டிலில் இருந்த இருவரையும் காட்ட, "ஹாஹா.. என் மகள்கள் தூங்கிடுவார்கள்.. நீ சோர்வாக இருப்பாய்.. நீ தூங்கு... நான் பார்த்துக்கொள்கிறேன் இவர்கள் இருவரையும்" குழந்தைகளை நடுவில் விட்டு மறுபக்கமாக அவர் சாய்ந்து அமர்ந்து கொண்டு குழந்தைக்கு தட்டிக்கொடுக்கத் தொடங்கினார்.
ஒரு நிமிடம் கடந்திருக்கும், குழந்தைகளுக்கு தட்டிக்கொடுக்கும் கணவரின் கைமேல் கரம் பதித்தார் சத்யபாமா. என்னவென்று சத்யஜித் நிமிர்ந்து பார்க்க, "வேதாவை பற்றிய யோசனையா??", என்றவளின் பார்வை கூர்மையாக அவர் மீது பதிந்திருந்தது. வெறுமையாக பெருமூச்சு விட்டவர், "தூங்கு பாமா...", பதிலை ஒரே வார்த்தையாக சொல்லி, பார்வையை தன் மகள்கள் புறமாக திருப்பிக்கொண்டார்.
✨✨✨
"அம்மா... ", இவ்வளவு நேரமும் அழுகையில் கரைந்தவன் இப்போதுதான் வாயைத் திறந்தான்.
"சொல் ஷேனா", தன் மடியில் தலை சாய்த்திருக்கும் மகனுக்கு தட்டிக் கொடுத்துக்கொண்டே ஷிவேதனா சொல்ல, "கதை சொல்லுங்கள்...", என தலையை மட்டும் நிமிர்த்தி அவள் முகம் பார்த்தான் ஷேனா.
"அட... உனக்கு கதை கேட்க அவ்வளவு ஆர்வமா ஷேனா??.. சரி, இனி உனக்காக கதை புத்தகங்கள் தயாரிக்கும் வேலையில் இறங்கிட வேண்டியதுதான்...", கேலியாக ஷிவேதனா சொல்ல.. "ஹம்... அதையெல்லாம் பிறகு தயாரிக்கலாம் அம்மா.. முதலில் எனக்கு இப்போது கதை சொல்லுங்கள்" என சினுங்கினான் அவன்.
"ஹாஹாஹா... சரி உனக்கு எம்மாதிரியான கதை வேண்டும்??.."
"ஹான்ன்ன்ன்... காலையில் சொன்னீர்களே.. இருள் தோல்வியுற்ற கதை.. அதை சொல்லுங்கள்...", என அவன் ஆர்வமாக கேட்க.., அதில் மகிழ்ச்சி அடைந்தாலும் அவள் முகத்தில் வெறுமையே. "சொல்லுங்கள் அம்மா.... கதை சொல்லுங்கள்... எனக்கு கதை வேண்டும்", என சினுங்கியவாரு அவளின் கையைப் பிடித்து ஆட்டிக்கொண்டே ஷேனா அடம்பிடிக்க, "சரி.. சரி, சொல்கிறேன்.", மகனின் பிடிவாதத்தைக் கண்டு மெல்லச் சிரித்தவர், எந்த கதையைச் சொல்லலாம் என யோசித்துக் கொண்டிருந்த நேரம், சட்டென அவர் மனதில் தோன்றியது ஒன்று.
"ஷேனா.. உனக்கு இப்போது, நம் ஆதிலோகத்தில் எவர் பார்வையிலும் சிக்காமல் மறைந்திருக்கும் ஒரு பிரம்மாண்ட மாளிகையின் கதையை சொல்கிறேன், கேள்.", தன் மடியிலிருக்கும் மகனை வாகாக படுக்கவைத்தபடி அவள் சொல்லிட, "எவர் கண்ணிலுமே சிக்காத மாளிகையா!?", ஆர்வமாக கேட்டான் ஷேனா.
பார்வையை, மகனை நோக்கி நகர்த்தியவர், "கண்களை மூடிக்கொண்டே கதையை கேள் ஷேனா", என சொல்லி அவன் விழிகளை மூடச்செய்த பின் கதையை தொடங்கினார்.
"அந்த மாளிகை, ஆதிலோகத்தின் முதல் மாளிகை என்பார்கள். ஆதிலோகினி, நம் ஆதிலோகத்தை உருவாக்கிய சமயமே அந்த மாளிகையையும் உருவாக்கியிருந்தாராம். ஆனால், அது நம் லோகத்தைச் சேர்ந்ததல்ல.. அது, பாதாள லோகத்தை சேர்ந்தது. ரட்சகன் பாதாளலோகத்தில் வாழ்ந்த காலங்களில் அது அவனுக்கு மிகவும் பிரியமான ஒரு இடமாம். அதனால் தன் தம்பிக்காக அந்த மாளிகையை அப்படியே இங்கு உருவாக்கிவிட்டார் ஆதிலோகினி."
"வ்வ்வாஹ்ஹ்!, அது எங்கே இருக்குமென உங்களுக்கு தெரியுமா அம்மா?", கண்களை மூடிக்கொண்டே ஷேனா வினவ..., "இல்லை, ஷேனா. எனக்கு மட்டுமல்ல.. முழு ஆதிலோகத்திலும் அந்த இடம் யாருக்குமே தெரியாது", மகனுக்கு பதில் கொடுத்தார் ஷிவேதனா. "எனில், அது எப்படி இருக்குமெனக் கூட யாருக்கும் தெரியாதா அம்மா?", பட்டென இமை பிரித்தவன், முகத்தை தொங்கவிட்ட நிலையில் கேட்க.. அவன் முகத்தைப் பார்த்து லேசாக சிரித்தபடி அவன் சிகையை வருடிக் கொடுத்தவர், "அதை நிச்சயமாக நான் உனக்காக வர்ணிக்கிறேன் ஷேனா.. ஆனால் அவையெல்லாம் வெறும் வர்ணனைகளாக மட்டும்தான் எல்லோரும் கேள்விபட்டது. உண்மையாக நிஜத்தில் அந்த மாளிகை எப்படியிருக்கும் என்பது யாருக்கும் தெரியாது.", என சொல்லும்போதே தூக்கம் சொக்கும் விழிகளுடன் விழித்திருக்கும் மகனை பார்த்தாள் அவள். "சரி சொல்லுங்கள் அம்மா.. அந்த மாளிகை எப்படி இருக்கும்?", சமத்து பிள்ளையாக மீண்டும் கண்களை மூடிக்கொண்டு அன்னை மடியில் அவன் படுத்துக்கொள்ள, "சரி சொல்கிறேன், கேள்.", மகனைப் பார்த்து புன்னகைத்தபடி, மீண்டும் கூறத் தொடங்கினார் ஷிவேதனா.
"அந்த மாளிகை, வெளியிலிருந்து பார்ப்பதற்கு முழுவதும் வெள்ளை பளிங்கு கற்களால் ஆனாது. வெள்ளை முத்துக்கலால் அலங்கரிக்கபட்டிருக்கும் அதன் பிரம்மாண்ட கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றால், வரிசையாக இருபுறமும் பெரிய பெரிய தூண்கள்.. அவை அனைத்திலுமே நீல ரத்தினங்கள் கண்ணைக் கூசச்செய்யும் ஒளியுடன் ஜொலித்துக் கொண்டிருக்கும்.. வேர் இல்லாத மலர்க்கொடிகள் அந்த தூண்களில் சுற்றிப் படர்ந்து, மயக்கும் வாசம் கொண்ட வண்ண வண்ண மலர்களை மலரச் செய்திருக்கும்... வழவழப்பான கண்ணாடி போன்ற பளிங்கு தரையில் அந்த தூண்களின் வசீகரமான தோற்றம் பிரதிபலிக்கும்... தரையின் மையத்தில் தங்கநிற பட்டு கம்பளம் நேராக இருக்கும் அரியாசனம் வரையில் சென்றிருக்கும்.. அந்த அரியாசனத்தில், மற்ற நீல ரத்தினங்களையெல்லாம் மிஞ்சும் அளவு ஒளியில், அடர் நீல நிற கண்ணாடியைக் கொண்டு செய்தது போல் ஒரு வாள்.. கம்பீரமாக மின்னிக்கொண்டிருக்கும். அது, நம் ரட்சகனுடைய வாள். அவன் ஆதிலோகத்திற்கு வரும் முன்பாக அந்த மாளிகைக்குச் சென்று தன்னுடைய வாளை எடுத்துக்கொண்டுதான் இங்கு வருவான். "
"எனில் ரட்சகனுக்கு அந்த மாளிகை இருக்குமிடம் தெரியுமா??", கண்கள் ஆர்வத்தில் மின்ன.. படக்கென எழுந்து அமர்ந்தான் ஷேனா. "ஆம் ஷேனா.. அது அவனுடைய மாளிகை.. அவன் மாளிகை அவனுக்கு தெரியாமலா இருக்கும்?", என்றபடி அவனை பிடித்து மீண்டும் படுக்க வைத்துவிட்டு, அவனுக்கு தட்டிக் கொடுத்துக் கொண்டே மிக மிக மெல்லமாக குரலில் கதையை தொடர்ந்தார் ஷிவேதனா.. அப்போது தானே இவன் உறங்குவான்.
"அது ரட்சகனுடைய வாளை மட்டும் வைத்திருக்கும் மாளிகையல்ல.. அவனை பற்றிய முழு ரகசியங்களையும் வைத்திருக்கும் மாளிகை. அதனால் தான் அது எவர் பார்வைக்கும் தெரியாமல் மறைந்து கொண்டிருக்கிறது.. என்று நம் ரட்சகன் ஆதிலோகத்திற்கு வருகிறானோ அன்று நம் அனைவரையுமே அவன் அங்கு அழைத்துச் செல்வான்.. அப்போது அந்த முழு பிரம்மாண்டத்தையும் நாம் கண்கூடாக பார்க்-", வார்த்தைக்கு வார்த்தை 'ம்ம்' கூறிக்கொண்டிருந்த மகனின் குரல் ஒரு கட்டத்திற்கு மேல் ஓய்ந்துவிடவும் தன் கதையை நிறுத்திக்கொண்ட ஷிவேதனா, மடியில் இருந்த மகனை மெத்தையில் படுக்கவைத்து அவனுக்கு போர்த்திவிட்டப்பின் அவனருகிலேயே தானும் படுத்துக்கொண்டார்.
இவை அனைத்தையும் வாயிலில் இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான் ராணா. எப்போது ஷிவேதனாவை ஷேனா அழைத்து வந்தானோ அப்போதே ராணாவும் பின்னேயே வந்துவிட்டான். உறங்கும் ஷேனாவின் தலையை அவன் அன்னை மென்மையாக கோதிவிட.. அவர் அருகிலேயே படுத்து உறங்குபவனை வாயிலில் நின்றுகொண்டே பார்த்திருந்த ராணா, குடுகுடுவென அங்கிருந்து ஓடினான்.
ஓடி வந்தவன் நேராக வந்து நின்றது, இதற்கு முன்பாக ஷிவேதனாவை அழைத்து வந்த அதே அறைக்குத் தான். வேகவேகமாக அந்த அறையின் மையத்தில் இருந்த நீருக்குள் இறங்கியவன், அதனுள் மூழ்கி மூழ்கி எதையோ தேட.. இறுதியில் கழுத்து வரை முழ்கியிருந்தவனது கைக்கு அவன் தேடியது சிக்கிவிட்டது போலும்... நேராக, மையத்தில் இருக்கும் மேடையில் உள்ள மெத்தையை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
அவன் நடக்க நடக்க கழுத்து வரையில் இருந்த தண்ணீர் மெல்ல கீழிறங்கி நெஞ்சு வரையில்... இடை வரையில் வர, அவன் கரத்தில் இருந்ததோ ஒரு மண்டை ஓடு. இன்னும் இன்னும் மேலே ஏறி அவன் மெத்தைக்கு வந்த நொடி, ஒரு முழு மனித எலும்புக்கூடு அவன் கையில் இருந்தது.
சரியாக நிற்கக்கூட செய்யாத அந்த எலும்பை எப்படியோ கட்டிலில் நிமிர்த்தி அமர வைத்துவிட்டு அதனருகிலேயே அமர்ந்து கொண்டவன், "அம்மா...", என்று அந்த எழும்புகூடின் கையை பிடித்து ஆட்டிட, அவன் கண்ணில் அத்தனை ஏக்கம்.
பிறந்தது முதல் மட்டுமல்ல... அதற்கு முன்பிலிருந்தே தாய் என்றால் என்னவென்று தெரியாதவன் ஆயிற்றே. இருளரசனின் செயற்கை மகனாகிய இவன், தாயின் கருவறை சுகத்தைக் கூட அனுபவிக்காதவன் ஆயிற்றே. அதன் தாக்கம்தான் இப்போது எலும்பாக இவன் முன்னே இருக்கும் இவள்.... ராணாவினால் அம்மா என அழைக்கப்பட்டு, நீர்நிலை போல் காட்சியளிக்கும் இந்த அமில அகழியினுள், சுயநினைவின்றி உயிரை விட்ட பல தாய்களுள் ஒருத்தி.
"அம்மா...", மனதை உருக்கிடும் குரலில் அந்த எலும்பினை அழைத்த ராணா..., "அம்மா... கதை சொல்லுங்கள் அம்மா... எனக்கு கதை வேண்டும்., கதை சொல்லுங்கள்", என சொல்லியபடியே அந்த எலும்பின் மடியில் படுத்துக்கொண்டு அதன் கரத்தை பிடித்து, குச்சி குச்சியாக இருக்கும் அதன் விரல்களை தன் தலைமுடிக்குள் சொருகிக்கொண்டு அப்படியே உறங்கிவிட்டான்.
நீண்ட நேரம் செல்ல... ராணா, முழு உறக்கத்தின் பிடியினுள் சென்றிருந்த சமயம்... அவன் தலைமுடியில் சொருகப்பட்டிருந்த எழும்புகூடின் அந்த விரல்கள், மெல்ல மெல்ல அசையத் தொடங்கி அவன் தலையை வாஞ்சையுடன் வருடத் தொடங்கியது. ராணாவின் இதழ் தூக்கத்திலேயே நிம்மதி புன்னகையை சிந்தியது
✨✨✨
சத்யஜித், நேரம் கடப்பதையெல்லாம் ஆராயாமல் தன் மகள்களுக்குத் தட்டிக்கொடுத்துக்கொண்டே இருக்க.. சில மணித்துளிகளிலேயே தங்கள் ராஜ ஆலோசனைகளை ஓரங்கட்டிவிட்டு தூக்கத்தின் பிடிக்குள் சென்றுவிட்டார்கள் குழந்தைகள் இருவரும். முகத்தில் புன்னகையோடு அவர் மனைவியை பார்க்க நிமிர.. குழந்தைகளுக்கு முன்பே தூங்கியிருந்தார் சத்யபாமா.
சில நொடிகள் மௌனமாக கடக்க, சற்றுமுன் தோன்றத் தொடங்கிய பழைய நினைவுகள் எல்லாம் மீண்டும் எழத் தொடங்கியது சத்யஜித்தின் நினைவினுள். அதனை மறக்க, தூங்கியிருக்கும் மகள்களின் முகத்தையே உற்று கவனிக்கத் தொடங்கினார் அவர். அப்படியே தன் தங்கை ஷிவேதனாவின் முகம் தான் இருவருக்கும்.
குடும்பத்தை, ராஜ்யத்தை துறந்து சென்றவளை மீண்டும் நினைக்கவே கூடாதென இத்தனை நாளும் தன் மனதை கட்டுப்படுத்தி இருந்தாலும், இன்று குழந்தைகளின் முகத்தை பார்க்கப் பார்க்க, தங்கையின் முகம்தான் நினைவில் எழுகிறது. மூச்சை இழுத்துவிட்டவர், மெத்தையை விட்டு இறங்கி மாடத்திற்குச் சென்றார். தங்கையின் நினைவுகளே அவரை ஆக்கிரமித்திருந்தது. அதிலும், இறுதியாக அவளைப் பார்த்த அந்த நாள்தான் கண்முன் வந்து வந்து நிழலாடியது. ஒரே நொடியில் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு சென்றுவிட்டாள்.
மகள்களைப் பார்த்தால்தான் இந்த நிலமை என இங்கு வந்து நின்றால் இங்கும் அதே நிலை தான். இப்போது மாடத்திலும் நிற்க முடியாமல், பெருமூச்சோடு மீண்டும் அறையினுள்ளேயே வர.. அவர் பார்வையில் பதிந்தது மேஜையின் மேல் இருந்த அந்த பொருள். அடர்-சிவப்பு நிற ரத்தின கல் பதிக்கப்பட்டிருந்த ஒரு தங்க சங்கிலி.
அதை கையிலெடுத்து பார்த்தவருக்கு, தன் தங்கையின் காலை கெட்டியாக பிடித்துக்கொண்டு தன் மகன் அழுத கசப்பான காட்சிகள் கண்முன் தோன்ற.. இறுகிய முகத்துடன் அந்த சங்கிலியையே பார்த்துக் கொண்டிருந்த நேரம் அறைக்குள்ளிருந்த குழந்தை சிணுங்கியது. பட்டென அதை அப்படியே போட்டுவிட்டு குழந்தையிடம் சென்றுவிட்டார் சத்யஜித்..
அதேநேரம் இருள் மாளிகையில், மகனருகில் படுத்தநிலையில், தன் கழுத்திலிருந்த சங்கிலியை கையில் வைத்துக்கொண்டு, உணர்வில்லாமல் அதையே பார்த்துக்கொண்டிருந்தார் ஷிவேதனா. சத்யஜித் பார்த்த அதேபோலான சங்கிலதான் அது. அதைப் பார்த்தவள் கண்ணில் ஏகப்பட்ட வலிகள் தெரிந்தாலும் அதனூடே ஒரு இனம்காணாத ஆனந்தமும் தெரிந்தது. தன் உறவுகளை நினைவுகூறும் போக்கிஷமல்லவா தன் மருமகன் கைப்பட செய்துகொடுத்த இந்த உறவுசங்கிலி..
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro