56. காத்யாயினியின் மரணம்.
ரட்சக ராஜ்யம்.
பலவித எண்ணங்களுடனும் குழப்பம் குடிகொண்ட முகத்துடனும் வைரமாளிகையின் பளிங்குப் படிகளின் வழியே மேலேறி நடந்துக் கொண்டிருந்தாள், தீரா. அவள் மனதில் இப்போது ஓடிக் கொண்டிருப்பதெல்லாம், காலையில் மகாராணியிடம் இருந்து தனக்கு வந்த ரகசிய செய்தி மட்டும்தான்.
~ நீ யாரிடமும் சொல்லிடாமல் இன்றைய இரா வேளையில் வைரமாளிகைக்கு வரவேண்டும். பிரபஞ்சத்தின் முக்கியமானதொரு பணியாற்ற நீதான் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளாய். என்னவென நேரில் சொல்கிறேன், வா. ~ என்றிருந்த அந்தச்செய்தி, எதை குறித்ததாக இருக்குமென பலவாறாக சிந்தித்துக் கொண்டே வைரமாளிகையின் உள் அறைக்குள் நுழைந்துவிட்டாள் அவள்.
அவள் முன்பாக நீலநிற ஒளிவட்டமாய் மகாராணி காட்சிகொடுக்க, "வணக்கம், மகாராணி. எப்பணிக்காய் என்னை அழைத்தீர்கள்? உத்தரவிடுங்கள், மகாராணி." அவள் பணிந்து நின்றதும், அவளை அழைத்தக் காரணத்தைக் கூறத் தொடங்கினார் அவர்.
"தீரா, ஆதிலோகத்திற்கும் பூவிலோகத்திற்கும் உள்ள இணைப்புப் பாலம் நீ. அதன் காரணமாகவே இந்த காரியத்திற்கு உன்னை தேர்ந்தெடுத்தேன்."
"என்னவெனச் சொல்லுங்கள், மகாராணி! என் கடமையை செய்வேன்."
"ம்ம். நாளைய இரவு, பூவிலோகத்திற்கு நிறைந்த பௌர்ணமி தினம். சிறப்பானதொரு தினம். நம் ஆதிலோகத்திற்கும் தான். நாளைய பௌர்ணமி-"
"ஆனால், ஆதிலோகத்தில் நாளையதினம் அமாவாசையாயிற்றே, மகாராணி!", தீரா, குழப்பத்துடன் கேட்க, மெல்லிய சிரிப்புடன் பதில் கொடுத்தார் மகாராணி.
"பௌர்ணமிதான், தீரா. ஒரேயொரு சூழலில் மட்டுமே தொன்றும் மாயமான பௌர்ணமி. நம் ரட்சகனின் பிறப்பை குறிக்கும் பௌர்ணமி."
"ரட்சகனின் பிறப்பா? எனில், இப்பொழுது நிகழ்ந்துக் கொண்டிருப்பது செந்நிலவு பௌர்ணமியா?" ஆச்சரியத்தில் விழிவிரித்தாள் அவள்.
"ஆம்! இளவரசிகளின் பதவியேற்பு விழாவிற்கு முந்தையதினம் தொடங்கி செந்நிலவு பௌர்ணமி தான் நிகழ்கிறது. மொத்தம் ஐந்து தினமும் அதேபோல் தான் நிலவு முழுமையாகக் காட்சிக் கொடுக்கும் நம் ஆதிலோகத்தில். இதுவே ரட்சகன் பிறப்பின் அறிகுறி. அதன் இறுதிநாள் தான் ரட்சகனின் பிறப்பு நிகழும். அந்த கணக்கின்படி நாளையதினம் பூவிலோகத்தில் பௌர்ணமி நிலவு உதிக்கு அந்நேரம் தான் அவன் பிறப்பு நிச்சயிக்கப் பட்டுள்ளது. நம் மக்கள் அனைவருக்கும் ரட்சகன் பிறப்பு குறித்த செய்தி, நாளை அவன் பிறந்த பின்னர் அறிவிக்கப்படும். ஆனால், அதற்கு முன்பே எதிரிகள் அவன் பிறப்பை கணித்து விட்டார்கள். பிறப்பு முதலே ஆபத்தில் சிக்கியுள்ளான் அவன். சிலரின் மாயங்கள் அவனுக்கு ரட்சையாக உள்ளது, இருப்பினும் அவனை நீ தான் காக்க வேண்டும். நீயே வழிநடத்த வேண்டும். அவன், அவனது சக்திகளை உணரும்வரை... அவன் பிறப்பின் நோக்கத்தை அறியும் வரை... ஆதிலோகம் வந்து அவன் மக்களை காக்கும்வரை நீயே அவனுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். அவன், அவனை முழுமையாக உணரும் வரையில் அவனது பாதுகாப்பினை உன் பொறுப்பில் கொடுக்கிறேன், தீரா. பூவிலோகத்திலிருந்து நம் ரட்சகனை பத்திரமாக இங்கு அழைத்து வா."
"நிச்சயம், மகாராணி. ஆனால், இத்தகைய முக்கியக் காரியத்திற்கு இளவரசிகளை அழைக்கலாம் அல்லவா? ஏன் நான்?"
"இல்லை. அவர்களின் கடமையே வேறு, தீரா. அதனால், நானாக சொல்லிடும் வரையில் இந்தத் தகவல் குறித்து எவரும் அறியக் கூடாது. நீ எதற்காக பூவிலோகம் செல்கிறாய் என்னும் சந்தேகமும் எவருக்கும் வர கூடாது, தேவை ஏற்படும்போதெல்லாம் உனக்கு உதவிட நானே சிலறை அனுப்பிடுகிறேன். இப்போது நீ செல்லலாம்."
"உத்தரவு, மகாராணி." அவள் பணிவுடன் பின்னோக்கித் திரும்பிய நொடி, "ஹாம். பிறகு, மாயங்கள்... அவசியமெனில் மட்டுமே அதை உபயோகிக்க வேண்டும். பூவிலோகம் மாயங்களுக்காகிய இடமல்ல", சென்றவளை தடுத்து மகாராணி எச்சறித்தார்.
"நிச்சயம் நினைவிலிருத்திக் கொள்கிறேன், மகாராணி. ஆனால், ரட்சகனை நான் எப்படி அடையாளம் காண?"
"அதற்கு உன் மாயங்கள்தான் உனக்கு வழிகாட்டும். பூமியில் நீ இருக்குமிடத்தின் அருகே அதீத மாயம் எங்கேனும் இருப்பின் அதை நோக்கி உன் சக்திகளே உன்னை அழைத்துச்செல்லும். ரட்சகன், மாயபுத்திரன்! ஐம்பூதங்களும் சூழ பிறப்பெடுப்பான். மேகம் மோதும் உச்சத்தில். நீர் சூழ்ந்த இடத்தினருகில். காற்றும் அனலும் கூடும் இடத்தில் என ஐம்பூதங்களும் சங்கமிக்கும் இடத்தில்தான் அவன் பிறபெடுப்பான். அதுவே அவனை கண்டறியும் அடையாளம்."
"உத்தரவு, மகாராணி. நீங்கள் கூறிய அடையாளங்களை கொண்டு எதிரிகளுக்கு முன் அவனை நான் கண்டறிவேன். நம் ரட்சகன் இனி என் பொறுப்பு" என்றவள், மகாராணியிடம் இருந்து விடைபெற்று வைரமாளிகையில் இருந்து புறப்பட்டு சென்றாள்.
✨✨✨
பூமியிலிருந்துத் தன் வேலை முடிந்ததும் மீண்டும் இருள்மாளிகையை அடைந்திருந்தாள் சமாரா. அவளது ஒரு திட்டம் நிறைவேறிய ஆனந்தத்துடன் அடுத்தத் திட்டத்தையும் செயல்படுத்தும் நோக்கில் நேராக ஷேனாவின் அறையை நோக்கி நடந்துக் கொண்டிருக்க... அவனறையை அடையும் முன்பே பரபரப்புடன் எதிரில் வந்துக் கொண்டிருந்தான் அவன். அதை கண்டவளுக்கு, தன் திட்டம் நினைத்ததைவிட வேகமாக செயல்படுகிறதே என உள்மனம் குதூகளிக்க... அவளை கடந்து ஷேனா நடந்த நொடி, "சற்றுப்பொறு, ஷேனா" அவசரமாகக் கைநீட்டி அவனை தடுத்தாள் சமாரா.
அன்னையை அறையில் காணவில்லை என்னும் பதட்டத்தில் வெளியே வந்தவன், எதிரில் நிற்பது யாரெனத் தெரிந்தே அவளை தாண்டிச் செல்ல முனைந்திருக்க, இப்போது அவள் தடுத்து நிறுத்தியதும் எரிச்சலடைந்தான்.
"என்ன?" அவள் முகம் காணாமல், பல்லை கடித்துக்கொண்டே முன்னேறி நடக்க முயல, "எங்கு செல்கிறாய் நீ?" மிகுந்த அக்கறையுடன் கேட்பதுபோல் கேட்டாள் அவள்.
"அது உனக்கு அவசியமல்ல. என் வழியிலிருந்து விலகிச்செல்." கடுகடுப்புடன் இருப்பினும், தன்னால் முடிந்த அளவிற்கு மென்மையாகவே கூறிவிட்டு அவன் நகர முனைய, "உன் அம்மாவை தேடிச் செல்கிறாய் எனில் நீ எங்கு செல்கிறாய் என்பது எனக்கு அவசியமே. என் விடை உனக்கும் அவசியமே" அவள் வார்த்தைகள், சட்டெனத் தடுத்தது அவன் நடையை.
"அம்மாவா? என் அம்மா இருக்குமிடம் அறிவாயா நீ?" பட்டென அவளை நோக்கித் திரும்பியவன் அவள் விழிகளை ஆவலுடன் நோக்க.. அவ்வளவுதான். இதைதானே எதிர்பார்த்திருந்தாள். தன் எண்ணம் கைகூடிய உற்சாக மிகுதியுடன், அவனை நிரந்தர வசியம் செய்திடும் நோக்கில் கறுமுத்தை அவள் தன் கையில் பிடிக்கையிலேயே பார்வையை வேறுபுறம் திருப்பியிருந்தான் ஷேனா. திட்டம் வீணாகியது.
"சொல், அம்மா இருக்குமிடம் அறிவாயா நீ?" யாரேனும் வருகிறார்களா என அவன் பார்வை, படபடப்புடன் இடமும் வலமும் மாறிக் கொண்டிருக்க... தன்னை கவனிக்கமாட்டேன் என்கிறானே என்னும் என கடுப்பில் இருந்தவள், அவன் குரலால் தெளிந்தாள்.
"அ- ஹ-ஹான். எனக்குத் தெரியும், ஷேனா. நீ உன் அம்மாவை காணாமல் கவலையில் இருப்பாய் என யூகித்துதான் இவ்விடம் வந்தேன்." என்ற அக்கறை வார்த்தையெல்லாம், தேவையானதாகத் தெரியவில்லை அவனுக்கு. தன் தாயைப்பற்றி எதையோ இவள் அறிவாள் என்று எண்ணிய ஒரே காரணத்திற்காகத்தான் இன்னுமும் இங்கு நின்றுக் கொண்டிருக்கிறான்.
"நான் அம்மாவை தேடுவது உனக்கு எப்டித் தெரியும்? என் அம்மா எங்கே இருக்கிறார்? தயவுசெய்து சொல். பதிலுக்கு என் சக்திகளை வேண்டுமானால் எடுத்துக்கொள். அதுதானே உனக்கு தேவை" அவன் பார்வை அவளின் கண்களைக் கண்டாலும், நொடிக்கு ஓரிடம் என சுற்றிக்கொண்டே தான் வந்தது. சமாராவால் அவன் பாவையை தன்மேல் நிறுத்திட முடியவில்லை.
"ம்ம். உன் அம்மா இருக்குமிடம் எனக்குத் தெரியும்" அவன் தன்னை காணவே மாட்டேன் என்கிறான் என்பதால், அவனை தன்னைநோக்கித் திரும்ப வைப்பதற்காகத் தன் குரலை சோகமாக மாற்றியவள், "இதை நீ அறிவாயா இல்லையா என்பதை நானறியேன். உன் அம்மா, ரட்சக மஹா சாம்ராஜ்யத்தை சேந்தவர்" என்னும்போத ஷேனாவின் அலைபாயும் விழிகள் அப்படியே உறைந்து நிற்க, "அவர்கள் சாயல் அரசாங்கத்தை சேர்ந்த ஒருவரை.. அதாவது, உன் தந்தையை திருமணம் செய்துக்கொண்டதால், அவரின் சக்திகளை ரட்சக ராஜ்யத்திற்கு எதிராப் பயன்படுத்தி, பெரிய ஆபத்தை உருவாக்கிடுவார் என நினைத்து பல ஆண்டுகளாக அவரை கொல்லவே முயற்சித்துக் கொண்டிருந்தார்களாம் அந்த ராஜ்யத்தை சேர்ந்தவர்கள். ஆனால், வாய்ப்புக் கிட்டவில்லை. இன்றுதான் அவர் வனதேசம் செல்வதாக மாமாவிடம் சொல்லிவிட்டுச் சென்றார். மீண்டும் வரவில்லை" என கூறியநொடி ஷேனாவின் பார்வை பயத்துடன் சமாராவின் விழியை நோக்க.... தன் விழியிலிருந்து அவன் விழிகளை மீண்டும் அகற்றிடாமல் இருப்பதற்காக, தான் கூறியவற்றை அப்படியே தொடர்ந்தபடி. தன் இடையில் கிடக்கும் கறுமுத்தை மெல்லமாக கைக்குக் கொண்டுவந்தாள் அவள்.
"ஆம், ஷேனா. உன் அம்மா மீண்டும் வரவில்லை. வந்தது, உன் அம்மாவின் மரணச் செய்தியே. அந்த ராஜ்யத்தின் இளவரசி உன் அம்மாவை கொன்றுவிட்டாள்" என சோகத்துடனே கூறினாள்.
அவளது கூற்றால், இடி விழுந்து போல் அதிர்ந்தவனுக்கு சிந்தையில் பதிந்த கடைசி செய்தி அதுதான்... நேரம் கடத்தாமல் தனது வெளவால் ரூபத்திற்கு மாறியிருந்த சமாரா, தன் கையில் மறைத்து வைத்திருந்த கறுமுத்தை பயன்படுத்தி அவனை நொடிப்பொழுதில் அவளது நிரந்தர வசியத்திற்குள் கொண்டு வந்துவிட்டாள்.
ஷேனாவின் விழிகள், ஆழந்தக் கருநிறத்தில் மிளிர்ந்தது. அதைக்கண்டு சமாராவின் இதழில் வெற்றிப் புன்னகை ஒன்று இழையோடியது.
✨✨✨
மாயவாயில் வழியாக சமாராவை அனுப்பி வைத்திருந்த இருளரசன், நேராக காத்யாயினி இருக்கும் அந்த அறைக்கு வந்திருந்தார்.
தன் சகோதரன் கூறிய கதையுடன் அந்த ஆறு சிலைகளையும் பொருத்திப் பார்த்துக் கொண்டிருந்த காத்யாயினி, "சகோதரா, என்னவாயிற்று? அனைத்தும் சரிதானே?" இருளரசன் அவ்வறையினுள் நுழைந்த கணமே அவள் பரபரக்க, "ஹ்ம்ம். சரிதான். என் திட்டப்படியே அனைத்தும் வெற்றிகரமாக தான் நிகழ்கிறது." என்றவாரே மெல்ல நடையுடன் காத்யாயினியை தாண்டி, சபை மையத்திலிருக்கும் சிலையிடம் நகர்ந்தார்.
"ஹாஹ்! மிக்க மகிழ்ச்சி சகோதரா. உங்கள் எண்ணம் அணைத்தும் விரைவில் ஈடேரிடும்" அண்ணனை நோக்கி உற்சாகத்துடன் கூற, "ஹான். நானறிவேன். அணைத்தும் ஈடேறத்தான் போகிறது. ஆனால்," என வார்த்தையை நிறுத்தும் சமயம் இருளரசனின் தோரணையில் தோன்றிய சிறு மாற்றத்தை கவனிக்கத் தவறினாள் காத்யாயினி.
"ஆனால்? ஆனால் என்ன, சகோதரா?"
"ஆனால்...." வார்த்தையை இழுத்துக்கொண்டே, தன் இடையிலிருந்து குறுவாள் ஒன்றை உருவியெடுத்து அதன் முனையை கூர்மை பார்த்தபடியே, விவேகநாசனின் சிலையினருகில் நின்றவர், "அதற்கு ஒரு பலி கொடுக்க வேண்டும் காத்யாயினி. அதான்... எப்படி பலியிடலாம் என சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்" தங்கையை நோக்கித் திரும்பினார்.
"பலிதானே சகோதரா, மனிதனா? மிருகமா? ஆணா? பெண்ணா?... எத்தனை? எத்தனை உயிர்கள் உங்களுக்கு வேண்டுமெனச் சொல்லுங்கள். நிமிடத்தில் தயார் செய்துவிடுகிறேன். எனக்கு வேண்டியவை அனைத்தும் உங்களின் வெற்றியே."
"ஹாஹாஹா. எனக்கான வெற்றியில் இவ்வளவு ஆனந்தமா, காத்யாயினி?" கத்தியை கீழிறக்கிவிட்டு தங்கையை நோக்கிக் கேட்க, "அட, என்ன சகோதரா! அது, நம் வெற்றியல்லவா?" பெருந்தன்மையுடன் பதிலவினா தொடுத்தாள் காத்யாயினி.
"ஹான், மெய்தான். இருவரின் பங்கும் இருப்பதால் அது நம் வெற்றிதான்" மீண்டும் சிலையை நோக்கித் திரும்பியவர், அதன் பாதத்தினருகில் அமர்ந்து, அந்தக் கத்தியை கொண்டே வெறும்தரையில் ஏதோ வரையத் தொடங்க, "சரி, சொல்லுங்கள் சகோதரா. எத்தகையவரை பலியிட வேண்டும். எந்த வயதுடையவர்? எப்படி வேண்டுமெனச் சொல்லுங்கள். உடனடியாக ஏற்பாடு செய்துவிட்டு வருகின்றேன்." அவள், ஆவலுடன் கேட்ட நொடியில், தான் வரைந்து கொண்டிருந்ததை முடித்துவிட்டு எழுந்தார் இருளரசன். அங்கே, விவேகநாசனின் பாதத்தின் முன், பஞ்சலோகத்தின் ஐந்து வளையமும் ஐந்து வண்ணங்களில் ஜொலிக்க... அதன் மத்தியில் மின்னியது தங்கநிற நட்சத்திரம்.
"ஹாஹா. நாம் விரும்பியவர்களையெல்லாம் பலியிடக் கூடாது, காத்யாயினி... அவன் கேட்ட அந்நபர். அந்த ஒற்றை நபரை மட்டும்தான் பலியிட வேண்டும். அவனுக்குப் பிடித்த அந்நபரை பலியிட்டுதான் அவனை மீண்டும் அழைக்க வேண்டும். அவன்மூலம் நம் தேவனின் விடுதலையும் நிச்சயம் ஈடேற வேண்டும்." காத்யாயினிக்கு பதில் கூறியவர், விவேகநாசன் சிலையை நோக்கித் திரும்பி, எதையோ முணங்கிகொண்டு ஏதேதோ பொடிகளை அந்த ஐந்து வளையங்கள் மீதும் தூவத் தொடங்கினார்.
"ஒற்றை நபரா? யார் சகோதரா?" என்ற நொடியில், தன் ஏற்பாடுகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு சகோதரியை நோக்கித் திரும்பியவர், "ஹான், சொல்கிறேன். ஆனால், அதற்குமுன்.... உன்னிடம் என் முழு திட்டத்தையும் கூறிடுகிறேன், கேள். இல்லையேல் என் மனம் தாங்காதம்மா, தங்கையே!" என்றவாறே அந்த மேடையின் முனையில் வந்து நிற்க, "சகோதரா! என்னக் கூறினீர்கள்? தங்கையா? நீங்கள் இப்படி என்னை அழைத்ததில்லையே! இதென்ன, புதிதாக.- ! ?" இப்போதுதான் தன் சகோதரனின் செய்கைகளை சரியாக கவனித்தாள் காத்யாயினி. அனைத்துமே புதுமையாக இருந்தது அவளுக்கு.
"இதுவரை அழைத்ததில்லையல்லவா, அதனால்தான்... இப்பொழுதாவது அழைத்துக்கொள்ளலாம் என அழைக்கிறேன்" என்றவரின் விழியில் வன்மை நிறம்பிவழிய, அதைக்கண்ட காத்யாயினி எச்சிலை விழுங்கிய நொடி, "சரி, நீ கேள்... என் முழு திட்டத்தை. சாமாராவின் முன்பாக நான் சொன்னது எனது பாதி திட்டமே... அதற்குமுன் உன்னிடம் சொன்னதும் உன்னை இங்கு அழைத்து வருவதற்காகத்தான். ஹாம்ம்ம்.. சரியாகச் சொல்லவேண்டுமானால், இவையெல்லாம் நான் அன்றே திட்டமிட்டதால் தான் சமாரா என் மருமகளாகவே மீண்டும் பிறந்தாள். ஹாஹா! அதுவும் என் திட்டப்படியே, ஒரு பரம பிசாசினியாக." என்ற நொடியில் இருளரசனின் சொல்லும் பார்வையும் வன்மத்தையும் பேராசையையும் பூசிக்கொள்ள, "என்ன?" காத்யாயினி, அதிர்ந்து நோக்கிய நொடியே அவளின் கழுத்தில் வந்துச் சொருகியது, இருளரசனின் குருவாள். அதிர்ச்சியில் அவள் விழிகள் உரைந்திருக்க... அப்படியே பின்நோக்கிச் சரிந்தாள் அவள்.
அதேநேரம், வசியத்திலிருக்கும் ஷேனாவை தன் மாமாவிடம் அழைத்து வந்துக் கொண்டிருந்த சமாரா, இருளரசனின் குரல்கேட்டு அதிர்ந்து வாயிலருகிலேயே நின்றுவிட... அவர் மேலும் என்ன சொல்கிறார் எனக் கேட்பதற்காக, அதே அதிர்ச்சியுடன் அங்கேயே மறைந்துக் கொண்டாள்.
மேடையிலிருந்து கீழிறங்கி வந்த இருளரசன், இறுதிமூச்சுடன் போராடும் தங்கையின் அருகில் சென்று, "நீ கவலை கொள்ளாதே, தங்கையே! என் திட்டத்தை முழுமையாகச் சொன்னப் பின்பே உன்னை வழியனுப்பி வைப்பேன். ஹான்... எங்கு விட்டேன்? ஆன்! என் மருமகள். ஹாஹா! உனக்கு நினைவிருக்கிறதா காத்யாயினி, உனக்குத் திருமண நிச்சயம் நிகழ்ந்த நாளில் என்ன நடந்ததென?" கேள்வியுடன் தங்கையை நோக்கிவர், அவள் துடிப்பதை கண்டு, "நினைவிருந்தாலும் உன்னால் சொல்ல முடியாதல்லவா! சரி, நானே சொல்கிறேன். அன்றுதான் அந்த நாள். ரட்சகராஜ்யத்தின் உதிரம் கொண்டு நிழல்தேசத்தில் ஷேனா பிறப்பெடுத்த நாள். அன்று தொடங்கியது என் திட்டத்தின் தொடக்கப்புள்ளி" என்றவர் அந்த ஆறு சிலைகளையும் நோக்கி நின்று, ஆழப்பெருமூச்சு விட்டார்.
"முதலில், நான் யார்? நீ யார்? இவற்றைக்கூட நீ அறியவில்லையே, தங்கையே! ஆனால், எனக்கு நினைவுள்ளது. ஆதிகாலத்தில் நிகழ்ந்த ஒவ்வொன்றும் என் நினைவில் உள்ளது. அந்த அந்த்காரன், அவன் சகோதரியின் சொல்கேட்டு என்னை அவமானப்படுத்தியது... அவன் மனைவியின் சகோதரனுக்காக என் மகனை அவமானப்படுத்தியது... அனைத்தும் என் நினைவில் இருக்கிறது." கை முஷ்ட்டியை இறுக்க மூடி, பல்லை கடித்துக்கொண்டே மேலும் தொடர்ந்தார்.
"ஆம், தங்கையே! நாம் அனைவரும் ஆதிகாலத்தில் வாழ்ந்தவர்கள் தான. இந்த நிழல்தேசம், ஆதிகாலம் நிகழ்ந்த இடமான பாதாள லோகத்தின் சிறு பகுதியே. இந்த இருள்மாளிகையில் தான் இருளின் வாரிசான அந்த்காரரூபன், பிறப்பெடுப்பதற்கு முன் காக்கப்பட்டு வந்தான். அவன் முதன் முதலில் ஒரு அரசனான இடம்... மக்களின் தலைவனாக பதவியேற்ற அரண்மனை... இவை எனக்கு நினைவிற்குவந்த நாள்முதல் அந்த காலம் மீண்டும் நிகழ்வதற்கும்... அவர்களை குடும்பத்துடன் பழி தீர்ப்பதற்கும் தான் காத்திருந்தேன். அதற்கும் என் தேவன்தான் வரவேண்டும். அவர் வருவதற்கு, ரட்சகன் பிறப்பெடுக்க வேண்டும் என்பதை அறிவேன். ஆனால், அவன் எப்பொழுது? எப்படி பிறப்பெடுப்பான் என்பதை அறியாமல் தவித்திருந்த சமயம்தான் மாயோள் புத்தகம் என் பார்வையில் சிக்கியது. ஆதிகாலத்தின் மொத்த சரித்திரமும் அதில் அடங்கும். அதில்தான் கிடைத்தது ரட்சகன் பிறப்பின் காரணங்கள். அவனது இறுதி நொடியில் அவன் காதலிக்கு கொடுத்த ஜென்ம வாக்கின்படி ஆதிகாலம் மீண்டும் நிகழ வேண்டும் என்பதே நியதி.
அதேபோல் ஒரு காதல்.. அதேபோல் ஒரு பகை.. அதேபோல் ஒரு போர்... அதேபோல் ஒரு அழிவு. ஆனால், இம்முறை வெல்வது நாமாக இருக்க வேண்டும்.
ஷேனாவின் பிறப்பை குறித்து என்று அறிந்தேனோ அன்று தீர்மானித்தேன்... அவன் சக்திகளை வைத்தே ரட்சகனை எதிர்க்க வேண்டுமென. ஷேனாவை நேரில் கண்ட நோடி, அவனது அளப்பரியா ஆற்றலை உணர்ந்தேன். அவன் சக்திகளை எடுத்துதான், சாபம்பெற்று பாதாளவாயிலில் நுழைந்த என் மகன் ராணாவை, காலாதேவன் வசமிருந்து மீட்டு, மீண்டும் படைத்தேன். அந்த்காரணின் யாகத்தில் தன் வாழ்வையே தியாகித்த என் மருமகளை, உன் மூலமாக மீண்டும் பிறக்கச் செய்தேன். அந்த ரட்சகன் உருவாக்கிய மாய உலகமான இந்த ஆதிலோகம், அதன் உள்-சமநிலையை இழக்க வேண்டுமென மும்மணிகளில் ஒன்றினை அதன் இருப்பிடம் விட்டு நீக்கினேன். ஹஹ்! அறிந்தோ அறியாமலோ என் மருமகளும் அதையேதான் செய்திருக்கிறாள். மும்மணிகளிள் ஒன்றான கறுமுத்தை எப்படியோ அவள் வசம் எடுத்துக்கொண்டாள். அத்துடன், அவன் உருவாக்கிய பஞ்சலோகத்தின் சமநிலையையும் அழித்தேன். இறுதியாக... அவனது பிரியமான இரு வளர்ப்புத் தாய்களை அழித்தேன். அதாவது. என் மனைவி, ஜ்வாலாங்கினி.... மற்றும், என் தங்கை,காத்யாயினி! இருவரையும் அழித்தேன்" நிம்மதிப் பெருமூச்சுடன், காத்யாயினியின் அருகே பாதியாக அமர்ந்தார்.
"இப்போது நான் சொல்லிய அனைத்தும் நிகழ்ந்தப்பின், செந்நிலவு பௌர்ணமியின் ஐந்தாம் நாள் ரட்சகன் பிறப்பான். அதுவே தூய ஆன்மாக்களின் கூற்று... இன்று, அனைத்தும் நிகழ்ந்துவிட்டது. அவன் பிறக்கவேண்டிய செம்மதி பௌர்ணமியும் தொடங்கிவிட்டது. இப்போது, உன் பலியை என் தேவனுக்குச் சமர்பித்துவிட்டால்... சரியாக நாளைய தினம் அவன் பிறப்பெடுப்பான். அவன் பிறப்பின்பின் ஆதிலோகத்திற்கு அவன் வரவளித்து ஈரேழு தினத்தில் எம் தேவனுக்கு விடுதலை கிட்டும். அவனாக வரவேண்டுமாயின், அவனது சக்தகளை முதலில் உணர வேண்டும். அப்படி அவன் உணர்ந்துவிட்டால், என்னை எதிர்க்கத் துணிந்துவிடுவான். அதனால், அவன் பிறந்த உடனேயே இங்கு அழைத்து வரப் போகிறேன். ஈரேழு தினத்தில் என் தேவன் விடுதலை ஆகியதும் அந்த ரட்சகனைக் கொல்லப் போகிறேன். ஹம்ம். ஆனால், இதில் வருத்தம் என்னவெனில் என் மனைவியாவது என்னைபோன்றே உண்மைகள் அனைத்தையும் நினைவில் வைத்திருந்து, சென்ற பிறவியை போன்றே என் செயலை தடுத்ததற்காக பலியானாள். ஆனால், நீ... ஹஹா! நீ பாவம், காத்யாயினி. உனக்கு எதுவும் நினைவும் இல்லை... நீ என்னை தடுக்கவும் இல்லை" நக்கலாகவே கூறிக் கொண்டிருந்தவர் முகம், சட்டென சினம் கொண்டது, "ஆனால், அனைத்தும் ஒருநாள் உன் நினைவிற்கு வந்து, நீயும் சென்ற பிறவியில் செய்தது போன்றே என்னைத் தடுத்தால்? அதற்குத்தான்.... நான் உன்னை முந்திகொண்டேன். சென்று வா.. தங்கையே!" காத்யாயினியின் கழுத்தில் பாதியாகக் குத்தியிருந்த குறுவாளை மொத்தமாக உள்ளிறக்கிச் சர்ரென உருவியெடுத்தவர், சுற்றிலும் படர்ந்துக் கிடக்கும் உதிரத்தை தன் சக்திகள் கொண்டு கீழிருக்கும் நான்கு சிலைகளையும் நோக்கி நகர்த்தி, அவர்களுக்குச் சமர்ப்பிக்கத் தொடங்கினார்.
வலதுபுறம் இரு சிலைகளுக்கும் சமர்பித்து முடித்தவர், இடதுபுறம் முதல் சிலைக்குச் சமர்பித்து இரண்டாம் சிலைக்குச் சமர்ப்பிக்க முனைந்த நொடி, அதிர்ந்த முகத்துடன் சமாரா உள் நுழைய... அதிர்ச்சியில் வெளிரியது இருளரசரின் முகம்.
இவளுக்கு எதுவும் தெரியக்கூடாது என்பதால்தான் இவளை மட்டும் தனியா பூமிக்கு அனுப்பினார். ஆனால், இவள் இப்படி திடீரென வந்து நிற்கவும், "ச.ச.மாரா!?" அவர் வாய் தந்தியடிக்க,,. மெல்ல அடிவைத்து முன்னோக்கி வந்தவள் தன் கரத்தை மேலுயர்த்தினாள்.
அவள் கரத்தில் கருநிற மின்னலொன்று மின்ன... இருளரசர் எச்சிலை கூட்டி விழுங்கிய கணம், காத்யாயினியின் கழுத்திலிருந்து வழிந்திருந்த உதிரம், சமாராவின் கையசைவில் அந்த நான்காவது சிலையை நோக்கி நகர்ந்தது.
இருளரசரின் பார்வை, அதிர்ச்சியில் விரிந்துத் தன் மருமகளை நோக்க, "அம்மா எப்பொழுதும் உங்களின் வெற்றியை தானே மாமா எதிர்பார்ப்பார். ஆனால், அம்மாவிற்கு இப்பொழுது நீங்கள் சொன்ன எதுவுமே நினைவிலில்லை. ஒருவேளை, அவருக்கு சென்ற பிறவியின் நினைவுகள் வருமாயின்... சென்ற பிறவியில் என் அம்மா உங்களை எதிர்த்தார் எனில்.... நிச்சயம் மீண்டும் அதையேதான் செய்வார் மாமா... நிச்சயம் உங்களை எதிர்ப்பார். அதற்கு என் மாமா இடம் கொடுக்கக் கூடாது" தன் செயலை முடித்து கரத்தை கீழிறக்கியவாறு மாமாவை நிமிர்ந்து நோக்கினாள் சமாரா.
"ஹாஹ்! நீ என் மருமகளாயிற்றே! ஹாஹா!! சரியாகச் சொன்னாயம்மா. உடல் வேராயினும் ஆத்மா ஒன்றாயிற்றே. முதல்முறை எப்படி சிந்திக்கப் பழகியதோ அதேபோல் தான் மீண்டும் மீண்டும் சிந்திக்கும். மீண்டும் அந்த ரட்சகன் இங்கு வந்துவிட்டால், அவனுக்கு வளர்ப்புத் தாயாகி என்னை எதிர்ப்பாள் இவள். அதற்குத்தான் இப்படிச் செய்தேனம்மா." முதலில் உற்சாகமாக சமாராவை அணைத்தவர், பின் தனக்கான நியாத்தை கூற, "அனைத்தையும் நானறிவேன், மாமா. நீங்கள் செய்தது சரிதான். வெற்றிக்காக இதுகூட செய்யாவிட்டால் எப்படி?" இருளரசனை நோக்கி அவள் புன்னகைக்கும்போதே அறையினுள் நுழைந்தான் ஷேனா.
அவனது சட்டென்ற வரவால் இருளரசன் பதறிட, "ஷேனா... மாமாவிடம் ஆசி பெற்றுக்கொள். நம் இருவருக்கும் விரைவில் திருமணம் நிகழ உள்ளது" சமாராவின் குரல் உரக்க ஒலித்த நொடி, சட்டென மண்டியிட்ட ஷேனா, இருளரசனின் பாதம் பணிந்தான்.
இருளரசன் ஆச்சரியத்தில் சமாராவை நோக்க, "உங்களின் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன், மாமா. இவனையும் நிரந்தர வசியம் செய்துவிட்டேன். இவன் அம்மாவையும் இயற்கையிடம் அனுப்பிவிட்டேன்." அவள், வெற்றிப் புன்னகையுடன் கூற, "சபாஷ்! இவள்தான் என் மருமகள்! நீயே என் மருமகள் சமாரா... சபாஷ்! சபாஷ், சமாரா!" தலைகால் புரியாமல் ஆடத் தொடங்கினார் இருளரசன்.
✨✨✨
இருளரசனும் சமாராவும் தங்களின் அடுத்தகட்ட திட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக, வசியம் செய்யப்பட்ட ஷேனாவுடன் அந்த அறையிலிருந்து புறப்பட்டுச் சென்று வெகுநேரம் ஆகிவிட்டது. எவருமற்ற அனாதையாய் கிடப்பது, இம்முறை, காத்தியாயினியின் உயிரற்ற உடலுக்காகியது.
ஆதிலோகத்தில் மரணிக்கும் ஒவ்வொரு உடலும் ஆன்மாவும் பஞ்சபூதங்களில் ஏதேனும் ஒன்றுடன் தாமாகவே கலந்துவிடும். அதை எண்ணிக்கொண்டே இருளரசன் அவரின் தங்கையின் உடலை அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். ஆனால், காத்யாயினி மரணித்து அரைமணி நேரம் கடந்த நிலையிலும் எவ்வொரு பஞ்சபூதமும் அவரின் உடலை, ஆன்மாவை தீண்டவேயில்லை. அவைகளுக்குக் கோபம், தங்களின் தலைவனான ரட்சகனை வதைக்கவே இந்த ஆன்மா தன்னை தியாகித்துள்ளது என்பதால், அவைகளில் எவையுமே காத்யாயினியின் உடலையும் ஆன்மாவை நெருங்காமலேயே இருக்க... அந்நொடி, முகத்தில் எவ்வித சலனமும் காட்டாமல் அந்த அறைக்குள் நுழைந்தான் ராணா.
அங்கிருந்த ஒவ்வொன்றையும் கவனித்தான். சிலைகள்... சங்கிலிகள்... அதைப் பிடித்திருந்த ஒரு அலங்கோல உருவம்... தரையில் சரிந்துக்கிடக்கும் தன் அத்தையின் உடல்... சுற்றிலும் பரவிக்கிடக்கும் அவரின் உதிரம் என அனைத்தையும் நோட்டம் விட்டபடியே வந்தவன், காத்யாயினியின் காலருகில் நின்று சிலநொடிகள் வரையில் அத்தையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
வாய் திறந்த நிலையிலேயே விழிகள் பிதுங்கி அசைவற்று அவர் கிடக்க... சட்டெனப் பின்நோக்கித் திரும்பி, மேடையில் இருக்கும் அந்தத் தன்னந்தனி சிலையை நோக்கி விரைந்தான் ராணா. அங்கே, இருளரசனால் குறுவாள் கொண்டு வரையப்பட்ட அந்த முத்திரை இன்னமும் அப்படியே இருக்க. சற்றுமுன் தான் கண்ட காட்சி, ராணாவின் மனக்கண்ணில் தோன்றியது.
~ தான் கூறிய இரண்டு வேலையையும் தன் மருமகள் செய்துவிட்டாள் என்பதை அறிந்துகொண்ட இருளரசன், தலைகால் புரியாமல் குதித்து முடித்துவிட்டு, "சமாரா, இன்று காத்யாயினியின் உயிரை நம் தேவன்களுக்கு அர்ப்பணித்தே ஆகவேண்டும். அதற்கு என் தேவன்களின் ரூபமான இவர்களுக்குத்தான் கொடுக்க முடியும். என் பின்னே வா" அவளை தனக்குப் பின்னே நகர்த்தியவர், தன் கைகள் இரண்டையும் மேலே உயர்த்த.... காத்யாயினியின் இருபுறமும் இருந்து சிலைகளை நோக்கிச் சென்றிருந்த உதிரச் சுவடிலிருந்து எழுந்த இரண்டிரண்டு சிவப்பு ஒளிவட்டம், அந்த சிலைகளின் பாதங்களை தொட்டுவிட்டு, நேராக விவேகநாசன் சிலையின் கீழே இருக்கும் அந்த ஐலோக சின்னத்துடன் கலந்துவிட்டது."
அதை நினைத்துப்பார்த்த ராணா, அந்தச் சின்னத்தை நோக்கித் தன் வலது கரத்தை நீட்டி, "அத்தையை மன்னித்து விடுங்கள்.. தண்டனையை எனக்குக் கொடுங்கள்." என்றவாறே தன் சக்திகளை அந்தச் சின்னத்தை நோக்கிச் செலுத்த... தங்கநிற ஒளிக்கீற்றாக ராணாவின் ஆத்மசக்தி, ஐந்து வளையங்களுக்கு மத்தியில் இருக்கும் அந்த நட்சத்திரத்தின்மீது சென்று விழுந்தது. அடுத்தநொடியே, நட்சத்திரத்திலிருந்து சீறிக்கொண்டு மேலெழும்பி வந்த பஞ்சபூத சக்திகளும் ராணாவை அதிவேகமாக வட்டமடிக்கத் தொடங்கியது.
அந்த சக்திகள் ஐந்தினையும் தன்னில் தாங்கிக்கொண்டு, அப்படியே கீழே இறங்கிச்சென்றுத் தன் அத்தையின் அருகில் சம்மணமிட்டு அமர்ந்துக் கொண்டான். மெல்லமாக அவரின் ஒற்றை கரத்தை எடுத்துத் தன் இரு கரத்தின் நடுவே அவன் வைத்துக்கொள்ள... ராணாவை சூழ்ந்துக் கொண்டிருந்த அந்த ஐம்பூத சக்திகளும் இப்போது அவன் கரம் வழியே சென்று காத்யாயினை சூழ்ந்துகொண்டது.
ஐந்தே நொடிகள் தான்.. காத்யாயினியின் உடலில் நெருப்பு பற்றி எரியத் தொடங்கியது. அரைமணி நேரம் வரையிலும் தகதகவென எரிந்து முடிந்த அந்த பஸ்பம், திடீரென தோன்றிய ஒரு சுழல் காற்றில் கரைந்து போனதுடன், நீலமும் சிவப்பும் கலந்த நிறத்தில் ஒரு கையளவு ஒளிவட்டம் தரையில் இருந்து மெல்ல மேலே எழும்பியது.
ராணாவின் கண்கள் அந்த ஒளிபந்தையே நோக்க... அந்த ஒளிவட்டம், தரையிலிருந்து பத்தடி உயரத்தில் பறந்த நொடி, ஐம்பூதங்களும் அதைச் சுற்றிச் சுழலத் தொடங்கியது. முதலில் மெல்லமாகவே சுழலத் தொடங்கியவைகள், பின், அதிவேகமாகச் சுழலத் தொடங்க... சில நொடிகளிலேயே அனைத்தும் ஒன்றுசேர்ந்து படாரென வெடித்துத் தடையமே இல்லாமல் அங்கிருந்து மறைந்துப்போனது. அத்துடன், பெருமூச்சுவிட்டபடி அங்கிருந்து நகர்ந்துச் சென்றான் ராணா.
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro