53. பழைய விருந்தாளிகள்!
ஆக்ரோஷமான அலைகள் பாறையை மோதும் நீண்டதொரு கடல்... அந்த மை-இருளில்!
எதற்காய் உள்ளதென எவரும் அறிந்திருக்கவில்லை. ஆனால், ஒன்றுமட்டும் நிச்சயம், கடலருகில் செல்பவர் அறிந்தே மரணத்தின் வாயிலுக்கு செல்கிறார்கள். அந்த மரணம் எப்படி நிகழும் என்பதுதான் இன்றுவரையில் யாருக்கும் தெரியாது. எனவே, கடலின் அலையோசை காதை அடைந்த நொடியே தங்கள் பாதையை மாற்றிக் கொள்வார்கள் நிழல்தேசத்து மக்கள்.
அத்தகைய கடலின் கரையோரத்தில் அமைந்திருக்கும் அனாலி பர்வதத்தின் உச்சியில் இருக்கும் குன்றின் மேல், அப்போதே திறந்த ஒரு கருநிற மாயவாயிலின் வழியாக வெளியேறி வந்து எவ்வித பயமுமின்றி, கால்களை கீழே தொங்கவிட்டபடி அமர்ந்தவள், தன்னை தொடர்ந்துவந்து அருகில் அமர்ந்தவனை காணாமலேயேஅவனிடம் உற்சாகக் கூக்குரலில் கத்திக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்ததாள்... இருளரசரின் ஒரே மருமகள் சமாரா.
ஆணவம் நிரம்பியிருந்த அவள் விழிகள் இரண்டும் அவளது உள்ளங்கையில் இருந்தக் கருநிறப் பளிங்கு போன்ற வட்டமான ஒன்றின் மீது பேராசையுடன் பதிந்திருக்க... அவள் விழிகள் சிரிக்கும் உற்சாக சிரிப்பை, மழலைகள் தன் புதிய பொம்மையை கண்டதும் பார்க்கும் பார்வையாக நினைத்து ரசித்து கொண்டே அவளருகில் அமர்ந்திருந்தான் அந்த புன்னகை மன்னன். மௌனத்தின் அரசன். அமைதியின் சிகரமான இருளரசனின் மகன் விரோஷன ராணா.
பெரும்பாலும் அக்கடலோரம் செல்லும் மக்கள் மாயங்கள் உபயோகித்து தான் செல்வார்கள். காரணம், சாமான்ய மக்கள் நடை வழியாக செல்வதற்கு தடையாக இருப்பது இந்த மலை. வானை முட்டும் பிரம்மாண்ட மலை அது. ஒளிக்கு அஞ்சிய அரிய உயிர்கள் பலவும், அரிய மூலிகைகள் பலவும், சக்திவாய்ந்த-உணர்வுள்ள தாவரங்கள் சிலவும், தங்களின் சக்திகள் தீமைக்கு மட்டுமல்ல நன்மைக்குக் கூட பயன்பெறக் கூடாதென ஒளிந்து மறைந்திருக்கும் மலை. அதன் தென்முனையில் கடலும் வடமுனையில் முத்து மாளிகையும் அமையப் பெற்றிருக்க. இருள்மாளிகையில் இருந்து புறப்பட்ட நாள்முதல் அந்த முத்துமாளிகையில் தான் வாழ்ந்து வருகிறார்கள் கத்யாயினியின் குடும்பம் மற்றும் அவரின் ஒரே மருமகனான இருளரசனின் மகன் ராணா.
முத்துமாளிகையில் இருந்து ஐந்து கல் தொலைவில் இருக்கும் அராலி பர்வதத்தின் இந்தக் குன்றுதான் வழக்கமாக ராணாவும் சமாராவும் சிறுவயது முதல் விளையாடும் இடம்.
"ஆஹா! எவ்வளவு அற்புதமாக இருக்கிறது இந்த கறுமுத்து! மிக்க்க்க்க நன்றி ராணா! இதை வைத்து என்ன செய்வதென விளங்காமலேயே இத்தனையாயிரம் ஆண்டுகள் இதை உடன் வைத்திருந்திருக்கிறேன் பார்! ஹஹா! சாதாரண ஒப்பனை பொருளென வைத்திருந்த இதன்மூலம், என் சக்தி தாகத்தை தீர்த்துக்கொள்ள எத்துனை எளிய வழியை கண்டறிந்து சொல்லிவிட்டாய் நீ! நன்றி ராணா. நன்றி! நன்றி! நன்றி!... முன்பைப்போல் என் சக்திகளுக்குகாக எவனோ ஒருவனை தேடித்திரிந்து அவன் கிடைக்காமல் சோர்வில் மயங்கிட அவசியமே இல்லை! எவரேனும் என் பார்வையில் சிக்கினால் மட்டும் போதும். நொடியில் அவனை வசியம் செய்திடுவேன். பின்பு, எனக்கு எப்பொழுதெல்லாம் சக்தி தேவையோ அப்பொழுதெல்லாம் அவன் சக்திகளை எடுத்துக் கொள்வேன். ஹஹா!" அந்த கருமுத்தை கையில் வைத்துக்கொண்டு அவள் சொல்லும் ஒவ்வொரு உற்சாக வார்த்தையையும் கண்டு சிரித்துக் கொண்டே அவளருகில் அமர்ந்திருந்தான் ராணா.
"அதுசரி... இது குறித்து நீ எப்படி அறிவாய்?" கேள்வியாக ராணாவை நோக்கி அவள் திரும்ப, "புத்தகம் மூலம்" ஒற்றை வரியில் விடையளித்தான் அவன்.
"ஹான்! ஹான்! நான் மறந்துவிட்டேன். என்றுமே புத்தகத்தில் மூழ்கிக் கிடப்பவன் தானே நீ. நல்லது தான் செய்து-" ஒரு வேகத்தில் பேசிக்கொண்டிருந்தவள் திடீரென தன் வார்த்தைகளை நிறுத்தி அவனை விஷமப் பார்வையில் பார்க்க... புன்னகையுடன், கண்ணசைவிலேயே என்னவென கேட்டான் ராணா.
"ராணா. நான் ஏன் உன்னையே முதன்முதலாக வசியம் செய்துப் பார்க்கக் கூடாது?"
"ஹான்! என்னையா" முகத்தில் விரிந்திருந்த அழகியப் புன்னகையுடன் அவன் வினவ... ஆம் என தலையசைத்து ஆமோதித்தாள் அவள்.
"அதற்கான அவசியமானது நம்மிடையே இல்லையே சமாரா! உனக்கு சக்திகள் அவசியமெனில் என்னிடமிருந்து நீ தாராளமாக எடுத்து கொள்ளலாமே. வசியமெதற்கு?"
"ம்ம்ம்... மெய்தான். பிறகு, அம்மாவிடம் தண்டனை பெறுவது யாராம்? போ ராணா. அம்மா எப்படியேனும் நான் உன் சக்திகளை எடுப்பதை தெரிந்துக் கொள்கிறார். பிறகு என்மீது கோபிக்கிறார். அம்மாவுக்கு நீ தான் செல்லம். உன்னை பற்றிய அக்கறை மட்டுமே அவரிடம்." முதலில் வாய்க்குள்ளேயே முனங்கிக் கொண்டவள் திடீரென அவனிடம் கோபித்து கொள்ள.. "இருக்கட்டுமே.. உன் மீது அக்கறை காட்ட நான் தான் இருக்கிறேனே!" எனக் கூறிய மறுநொடியே அவள் விழிகளில் கருநிற மின்னலொன்று தீப்பொரிபோல் மின்னி மறைந்ததை கண்டுக்கொண்டான் ராணா.
அதன் காரணம் அறிந்தவனாக ஒரு நக்கல் புன்னகையுடன், "உன் பயிற்சிக்கு உதவிட எவனோ ஒருவன் வருகிறான், சமாரா. உபயோகித்து கொள்." சொல்லிக்கொண்டே ராணா அப்புறமாக திரும்பிச் சிரிக்க... விஷம புன்னகை ஒன்றை உதிர்த்த சமாராவின் முன், காற்றில் மிதந்து வந்து நின்றது, இருளரசன் அனுப்பிய அம்மடல்.
"மாய அரக்கனா?" ஆர்வம் மின்னும் கண்களுடன் வாய்க்குள் முணுமுணுத்து கொண்டே மடலை கைப்பற்றி அருகில் வைத்த சமாரா, ஒரு கரத்தால் கருமுத்தை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு கண்களை மூடித் திறந்த நொடி.... வரிவரியாக சுருங்கிய அவளின் முகமும் கரமும் காலும் ஏதோ போல் உருமாற்றம் கொள்ள... அவளின் மணிக்கட்டிலிருந்து பாதம் வரையில் ஜவ்வுபோல் தோன்றியது பெரும் ரெக்கை ஒன்று. அதேநேரம் வெளவாளின் முகம் பெற்று முழு மனித வெளவாலாக மாறியவள், எதிரில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் அந்த மாய அரக்கனை, இரு கைகள் மற்றும் இரு கால்களைக் உபயோகித்துக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு நொடியில் வானில் எகிறிப் பறந்தாள்.
கறுமை படர்ந்திருக்கும் அந்த இருள் வானை ராணா நிமிர்ந்துப் பார்க்க... சமாராவின் கையில் பிடிபட்ட அந்த மாய அரக்கனின் கதறல் அவன் செவியை கிழிக்க... சில நிமிடங்களில் ரத்த வாடை அவ்விடத்தை நிறப்பியது. மேலிருந்து மழையாக கொட்டியது, அந்த மாய அரக்கனின் எலும்புக்கூடு. அடுத்த கணமே சர்ரென வானிலிருந்துத் தரைக்குப் பறந்து வந்தவள், தன் பழைய உருவத்திற்கே மாறி புத்துணர்ச்சியுடன் ராணாவின் அருகில் அமர்ந்தாள். அவனும் புன்னகையுடன் அவளை பார்க்க, "சரியாக செய்துவிட்டேனா ராணா?" வெற்றிப் புன்னகையுடன் அவனிடம் கேட்டதற்கு ஆமென தலையசைத்து கர்வ புன்னகை வீசினான் அவன்.
"சரி, இதென்ன மடல்? பார், சமாரா. மாய அரக்கன் எடுத்து வந்திருக்கிறான் எனில் தந்தையிடம் இருந்துதான் வந்திருக்கும்." அந்த மடலை எடுத்து அவள் கையில் கொடுக்க... பிரித்துப் படித்தவள் குதூகளிப்புடன், "ராணா! மாமாவிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது." என சொல்லிய நொடி ராணாவின் முகத்தில் தோன்றிய பிரகாசம் மறு நொடியில் சமாரா சொன்ன சொல்லால் மறைந்து போனது.
"ஆனால், உனக்கில்லை ராணா. எனக்கும் அம்மாவிற்கும் மட்டுமே. நான் இருள்மாளிகையை இதுவரையில் பார்த்ததே இல்லையென மாமாவிற்கு பலமுறை மடல் அனுப்பியுள்ளேனல்லவா. அதனால் தான் இவ்வளவு காலம் கடந்து என்னை அழைத்துள்ளார் மாமா! ஆஹ்ஹ்! அருமை. அம்மா சொல்லியிருக்கிறார், முத்துமாளிகையை விட இருள் மாளிகை பிரம்மாண்டமாக அழகாக இருக்குமென. இப்போது முதல் முறையாக அங்கு செல்லவிருக்கின்றேன்!" அவள் கற்பனையிலேயே வியந்துக் கொண்டிருக்க, "இல்லை, சமாரா. நீ பிறந்ததே அங்குதான்" அவள் வார்த்தையை மறுத்தான் ராணா.
"ஹஹ்! என்ன ராணா நீ? பிறந்த பொழுது நிகழ்ந்தவை யாருக்கு நினைவிலிருக்கும்? நான் சிசுவாக இருக்கையிலேயேதான் இங்கு வந்துவிட்டோமே!" ராணாவை முறைத்துக்கொண்டே எழுந்தவள், கறுமுத்தை தன் இடையில் இருக்கும் தங்க சங்கிலியில் கோர்த்து தொங்கவிட்டுக்கொண்டு, மாயாவயிலை திறக்கத் தயாராக நிற்க... சட்டென அவள் கரம்பற்றி அவளை தடுத்தான் ராணா.
என்னவென சமாரா அவனை நிமிர்ந்து நோக்கியதற்கு, "உன் சக்திகளை எப்போதும் வீணாக்காதே. நான் வாயிலை திறக்கிறேன். இப்போது அத்தையிடம் தானே?" கேட்டுகொண்டே வாயிலை திறந்துவிட்டு அவளை பார்க்க, "ம்ம்." தலையசைத்துவிட்டு வாயிலருகில் சென்றவள் பின்னால் திரும்பி, "ராணா! மாமா, அம்மாவையும் அழைத்திருக்கிறார். அதனால் நாங்கள் வரும்வரையில் நீ இங்கேயே இரு. நாங்கள் இன்றே புறபடக் கூட வாய்ப்பிருக்கிறது." என்றுவிட்டு புன்னகையுடன் அந்த மாயவாயிலுக்குள் சென்று மறைய.. அவள் சென்றதும் மீண்டும் கீழே அமர்ந்துக் கொண்டான் ராணா.
'நீயன்றி நான் இன்கென்ன செய்வேன் சமாரா. நானும் உன்னுடன் வருவேன். தொலைவில். உன்னருகில் வராமலே உன்னை காப்பேன். என் மரணம் வரையிலும் உன்னை காப்பதே என் வேலை. அதுவே என் கடமை.
பரம பிசாசினியின் சக்திதாகம் குறித்து என்னை தவிர யாருமே அறியமாட்டார்கள். அதனால் உன் சக்திகளை உன்னிடமே காத்துவைக்க நான் எப்போதும் உனக்கு பாதுகாப்பாய் உன்னை சுற்றியே இருந்தாக வேண்டும், சமாரா. இல்லையேல்... அது பேரழிவு!' சமாரா சென்ற திசைநோக்கி மானசீகமாக உரையாடிக்கொண்டான் ராணா.
✨✨✨
நீண்ட நாட்களுக்குபின் தன் தங்கையையும் மருமகளையும் காணப்போகும் ஆர்வம் ஒருபுறமும்... நீண்ட காலம் முன்பாக துவக்கிவைத்த பெரும் சதித்திட்டம் ஒன்றை நிறைவேற்ற போவதற்கான துவக்கப் புள்ளியை இன்றே வைக்கப் போகிறோம் என்னும் ஆவல் மறுபுறமும் என இவ்விரு சிந்தனைகள் மட்டுமே இருளரசனின் சிந்தையை மொத்தமாக ஆக்கிரமித்திருக்க, தன் உறவுகளை எதிர்நோக்கியபடி இருள்மாளிகையின் வாயிலில் இங்குமங்குமாக ஊர்வலம் மேற்கொண்டிருந்தவரை தாண்டி, காற்றை கிழித்து சர்ரென பறந்து சென்றது ஏதோ ஒன்று.
அதை உணர்ந்தவர் சட்டென பின்னோக்கித் திரும்பிப்பார்க்க. அவர் தலைக்குச் சற்று மேலே, அவரையே குரோதமாக முறைத்துப் பார்த்தபடி பறந்துக் கொண்டிருந்தது அந்த மனித வெளவால். அதைக் கண்ட நொடியில் இருளரசனின் விழிகள் மலையென விரிந்தது. அவர் அறிவார், ஒரு மனித வெளவாலின் கண்ணில் சிக்கிடும் எவ்வொரு மனிதரும் உயிருடன் மீள முடியாதென்பதை. பெயருக்குதான் அவைகள் மனித வெளவால்கள். ஆனால், துளியும் மனித உணர்வுகள் அற்றவை. சிந்திக்கும் திறனற்றவை. அவைகளுக்கு தெரிந்த அனைத்தும் பசி, உணவு, உதிரம் இவையே. அனால் இப்போது இருளரசன் முன்பாக இருக்கும் அந்த மனித வெளவால், அவர் இதுவரையில் கண்டிருந்த மற்றைய மனித வெளவால்களை போலெல்லாம் இல்லாமல் விசித்திரமாக இருந்தது. அதன் கண்கள் கருநிற வைரமாய் ஜொலித்துக் கொண்டிருந்தது. அதன் கூரிய நகங்கள் அவரை அப்படியே குத்தித் தூக்கிடக் காத்திருந்தது. பற்கள், எதிரில் நிற்கும் இருளரசனின் சதையை கிழிக்கக் காத்திருக்க... நாவானது அவரின் உதிரத்தை ருசிப்பதற்காக ஆவலுடன் காத்திருந்தது.
தன்னை கொள்ளத் துடிக்கும் அதன் நோக்கம் புரிந்த போதிலும் துணிச்சலுடன் அதனை நேருக்கு நேராக நிமிர்ந்து நோக்கியவர், "யார் நீ? என் இடத்திற்கே வந்து என்னையே எதிர்க்கும் துணிச்சலா உனக்கு?" என உச்ச ஸ்தானியில் கர்ஜித்த அதே நொடியில், "சமாரா. அவர் உன் மாமா." என பின்னிருந்துக் கேட்ட குரலால் ஒரு நொடி ஸ்தம்பித்துப் போய் சட்டென வாயிலை நோக்கித் திரும்பியவரின் கண்ணில் பேரானந்தம் மின்னியது. அதேநேரம், இருளரசரின் பின்னிருந்து தன் மனித உறுவிற்கு மாறி, தரையிறங்கினாள் சமாரா.
"காத்யாயினி!" வாயிலில் நுழைந்த தன் தங்கையைக் கண்டவர் அடுத்த நொடியே மீண்டும் பின்னோக்கித் திரும்பி, "சமாரா?" இன்ப அதிர்ச்சியுடன் தன் மருமகளை அழைக்க... கண்ணசைவிலேயே ஆம் என சொல்லாமல் சொல்லியவள், "என்னையன்றி உங்களை எதிர்க்கும் துணிவு வேறு எவருக்குண்டு மாமா?" சவால் விடும் புன்னகையுடன் இருளரசனை நோக்கி நடந்து வந்தாள் சமாரா.
அவளின் நலின நடையின் ஒவ்வொரு அடிக்கும், அவள் இடையிலிருக்கும் தங்கச் சங்கியியில் கோர்த்துத் தொங்கிடும் கருமுத்து துள்ளிக்குதிக்க... "ஹாஹாஹா. இத்தனை காலமும் மடலிலேயே மாமாவிடம் யுத்தமிட்டுக் கொண்டிருந்த என் மருமகளுக்கு இன்று நேரில் எதிர்க்குமளவிற்கு துணிவு வந்துவிட்டதா?" இருளரசரின் வார்த்தை என்னவோ அவர் மருமகளை நோக்கி இருக்க... அவரின் பார்வை, ஒன்றுக்கு இருமுறையாக சந்தேகத்துடன் அந்த கருநிற பொருளை தீண்டிவந்தது.
"ஆம் மாமா. இன்னும் எத்தனை காலம்தான் மடலிலேயே யுத்தமிடுவதாம்? அதான்... நேரில் வந்துவிட்டேன்." இருளரசனை அவள் அணைத்துக்கொள்ள, "சமாரா, அவர் உன் மாமா. மரியாதையாக பேசு." காத்யாயினியின் கோபக்குரலால் மாமாவிடமிருந்து பிரிந்து அன்னையை சலிப்புடன் நோக்கினாள் சமாரா.
"என் மாமாவிடம் நான் பேசாமல் வேறு யார் இப்படி பேசுவார்கள்? பாருங்கள் மாமா அம்மாவை." அன்னையிடம் முதலில் கத்தியவள் பின் மாமாவிடம் புகார் சொல்ல, "கத்தயாயினி. ஏன் என் மருமகளிடம் குரலை உயர்த்துகிறாய். அவளுக்கு என்னிடம் இல்லாத உரிமையா?" இருளரசரும் தன் மருமகளுக்கு ஆதரவாய் தங்கையிடம் குரலுயர்த்தினார்.
"ம்க்கும். சரிதான். சாதாரணமாகவே என் சொல்லுக்கு இங்கு மதிப்பில்லையாம்! இதில் மாமனும் இனி கூட்டா? இனி இவளை கையில் பிடித்ததுபோல் தான்." அவள் அலுத்துக்கொண்டதில் வாய்க்குள்ளேயே சிரித்து கொண்டார்கள் மாமனும் மருமகளும்.
"சரி, சரி. எவ்வளவு நேரம்தான் வாயிலிலேயே நின்று உரையாடுவதாக உத்தேசம்? வாருங்கள். உங்களுக்கான அறைகள் தயாராக உள்ளது. நீண்டதூர பயணத்தால் களைப்பாக இருப்பீர்கள். முதலில் சென்று ஓய்வெடுங்கள். மற்றதை மாலை பேசிக்கொள்ளலாம்." என்றபடி அவரவருக்கென தயார் செய்யப்பட்டிருக்கும் அறையை நோக்கி இருவரையும் அழைத்துச் சென்றார் இருளரசன்.
அறை இருக்கும் பாதை வழியாக மூவரும் நடந்து கொண்டிருக்க, "காத்யாயினி. ராணா நலமா? அவன் எப்படி இருக்கிறான்? என்னை கேட்பானா?" ஆவலோடு கேட்டார் இருளரசன்.
"அவனுக்கென்ன சகோதரா. நலமாக இருக்கிறான். ஆனால் எவரிடமும் பேச்சுவார்த்தை தான் வைத்துக்கொள்ள மாட்டேன் என்கிறான், என் மகளைத் தவிர. உங்களை பற்றிக்கூட இவளிடம் தான் நலம் விசாரிப்பான். இவள் வந்து என்னிடம் கேட்பாள்." காத்யாயினி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, "இருக்கட்டுமே. அதில் உங்களுக்கேன் பொறாமை? என் நண்பன், என்னிடம் பேசுகிறான். வேறு யார் இருக்கிறார் நம் முத்துமாளிகையில் அவனுடன் பேச? நான் தானே இருக்கிறேன். எனில், என்னிடம் தானே பேசுவான் அவன்?" படபடக்கும் வார்த்தைகளுடன் அன்னையை குறுகிட்டாள் சமாரா.
"ஹ்ம், இப்படிதான் சகோதரா... அவனை எவரிடமும் பேசவோ விளையாடவோ அனுமதிக்க மாட்டாள் இவள். அவனும் கூட இப்படிதான், இவளை வேறு எவரிடமும் பேச அனுமதிக்க மாட்டான். இவளை தவிர எப்போதாவது சில நேரங்களில் மட்டுமே இவளுக்கு ஆதரவாக என்னிடம் பேசுவான்." மருமகனின் நினைவில் புன்னகையுடன் சொன்னார் காத்யாயினி. காலம் கடந்தும் இன்னும் மாறாமல் இருக்கும் மகனை நினைக்கையில் இருளரசருக்கு ஒருபக்கம் வருத்தமாக இருப்பினும், நல்லவேளையாக இன்னுமும் எவ்வொரு அசம்பாவிதமும் அவனால் நடக்கவில்லை என்னும் நிம்மதியே மேலோங்கி இருந்தது.
"சரி, அது போகட்டும் மாமா. நீங்கள் ஏன் ராணாவை இங்கு அழைக்கவில்லை? அவனும் இங்கு வந்திருந்தால் நன்றாக இருக்குமல்லவா?" இவ்வளவு நேரமும் தங்கை மற்றும் மருமகளின் வாக்குவாதத்தை கண்டு சிரித்துக் கொண்டிருந்த இருளரசனின் முகம், சமாராவின் திடீர் கேள்வியால் நொடியில் மாறியது. அவர் முகத்தில் பதற்றம் விரைந்து படற... அதை அவளறியாமல் மறைக்க முயன்றவருக்கு பாதி வெற்றியே கிட்டியது.
"அம்- அது- அவன் இங்கு வந்தால் அவனுக்கு பாதுகாப்பில்லையம்மா." என்றபோது தன் சகோதரனின் முகத்திலிருந்த பதற்றத்தை கண்டுகொண்டார் காத்யாயினி.
ஆனால், அதை கவனிக்காத சமாரா, அலங்கார பொம்மைகளைப் போல் வரிசையாக நிற்கும் காவலர்களை கண்டுக்கொண்டே, "ஏன் மாமா? நாம் பாதுகாப்புடன் தானே உள்ளோம்? ராணா இங்கு வந்தால் ஏன் அவனுக்கு மட்டும் பாதுகாப்பில்லை?" அவள் கேட்க, "அது. அம்- அ-அவன் என் மகனல்லவா. இங்கே எனக்கு நிறைய எதிரிகள் உள்ளார்கள சமாரா. என் மகன் இங்கிருப்பது என் எதிரிகளுக்குத் தெரிந்துவிட்டால். அவனை தாக்க முயற்சிப்பார்கள். அதற்கு நான் என்றும் அனுமதியேன்." எப்படியோ மருமகள் நம்பும்படியாக ஒரு காரணத்தை தேடிப்பிடித்துச் சொல்லிவிட்டார் அவர்.
"ஆம், மாமா! அதுவும் சரிதான். அவன் உங்களைப் போலெல்லாம் கிடையாது. மிகவும் அப்பாவி. சிறுவயதில் முத்துமாளிகையில் கூட சிறுவர்கள் அவனை வம்பிழுக்கும் சமயத்தில் கூட அவன் எதுவுமே செய்யமாட்டான். நான் சென்று தான் அவனை காக்க வேண்டும். ஹம்ம்... மிகவும் சோதனைதான் அவனுடன்."
"ஹாஹாஹா. என் மகனைக் காட்டிலும் மருமகள் தைரியசாலி என்பதை அறிந்துதானே அவனை உன் பொறுப்பில் அனுப்பி வைத்தேன்." என்னும்போதே, அருகிலிருந்த அறையின் வாயிலில் தன் நடையை நிறுத்தியவர், "சரி மருமகளே, நம் உரையாடல்களை பிறகு தொடர்ந்துக்கொள்ளலாம். நீ களைப்பாக இருப்பாயல்லவா.. இதுதான் உன் அறை. சென்று ஓய்வெடுத்துக்கொள். மாலையில் உன்னை சந்திக்கிறேன்." என அந்த அறையை சுட்டிக்காட்ட... அவளுக்கும் சிறிது ஓய்வு தேவைப்பட்டதால் இருவரிடமும் விடைபெற்று அறைக்குள் சென்றுவிட்டாள். அவள் சென்றதும் காத்யாயினியை அழைத்துக்கொண்டு அருகிலிருக்கும் அடுத்த அறைக்குள் நுழைந்தார் இருளரசன்.
"இப்பொழுது சொல்லுங்கள், சகோதரா... எக்காரணத்திற்காய் இத்தனை அவசரமாக எம் இருவரையும் அழைத்தீர்கள்? சமாராவிற்கு வேறொரு விதமாக தனியாகவேறு ஒரு மடலை அனுப்பியிருக்கிறீர்கள்! மெய் காரணம் என்ன சகோதரா?" குழப்பமாகக் கேட்க, "ஹம்ம். காத்யாயினி! காலம் நெருங்கிவிட்டது." பெருமூச்சுடன் தீர்க்கமான குரலில், தீவிரமான முக பாவனையுடன் கூறினார்.
"என்ன சொல்கிறீர்கள் சகோதரா? என்ன காலம் நெருங்கியது?"
"காத்யாயினி. நான் ராணாவை எக்காரணத்திற்காய் இங்கிருந்து தொலைவிற்கு அனுப்பினேன். என்ன சொல்லி அனுப்பினேன் என்பது நினைவிருக்கிறதா உனக்கு?"
"அது? ம்ம். அவன் இங்கிருக்கும் வரையில் அவனறையில் உள்ள அமில அகழியினுள் பலரை மாய்த்துக்கொண்டு இருக்கிறான். இது இவ்வாறே தொடர்ந்தால் பலியாகும் பெண்களின் சக்திளுக்கு நிகராக அவனது சக்திகளும் குறைந்து, இறுதியில் அவனே மரணிக்க கூடுமென அஞ்சி இங்கிருந்து அனுப்பினீர்கள்? அதுதானே சகோதரா."
"ஆம்! ஆனால் இன்னுமொன்று சொன்னேன். நினைவிருக்கிறதா?"
"என்ன சகோதரா அது?"
"சமாரா."
"என்ன?"
"ஆம் காத்யாயினி. அவனை இங்கிருந்து உன்னுடன் அனுபியதற்கு உன் மகளும் ஒரு காரணம். முதலில் நாம் அவளை சாதாரண பிசாசினி என்று தான் நினைத்திருந்தோம். ஆனால், அவள் ஒரு பரமபிசாசினி. அவளின் சக்தி-தாகம் குறித்து அறிவாய் தானே நீ?"
"ஆம் சகோதரா. பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன். சக்திகள் குறைந்த நிலையில், வேறு நபரின் சக்திகளை உறிஞ்சிடுவதற்கு அப்படித் துடிப்பாள். எவரும் கிடைக்காத சமயம் அவளின் உக்கிர ரூபம்! அந்த கோர ரூபத்தை கண்கொண்டு பார்க்க முடியாது. அத்தனை கொடிய காட்சி. அந்த சமயத்தில் ஆடவர் எவரேனும் அவள் கையில் சிக்கினால் அந்நபரின் இறுதி நொடிகள் அத்தனை கோரமாக இருக்கும். அப்படி எவருமே கிடைக்காத பட்சத்தில் ராணா தான் வேண்டுமென்றே அவள் முன் சென்று தன் சக்திகளை அவளுக்குக் கொடுத்து அவளை காத்து வருகிறான். நான் என்னதான் சொன்னாலும் அவன் கேட்கமாட்டேன் என்கிறான். ஹ்ம்ம். இருவருக்கும் ஒருவரால் மற்றவரின் உயிருக்கு எவ்வித தீங்கும் நேராதென நீங்கள் சொன்னதாலேயே நான் சிறிது அமைதிகாத்து வருகிறேன்."
"ஹ்ம்ம். ஆம் காத்யாயினி. இதுநாள் வரையில் எதுவும் நிகழ வாய்ப்பில்லை. ஆனால்.... இனியும் இது தொடரக் கூடாது. அதை நிறுத்துவதற்காகத்தான் நேரம் நெருங்கி விட்டது."
"........ ... எனக்கு எதுவும் விளங்கவில்லை சகோதரா."
"தெளிவாக சொல்கிறேன், கேள். ராணா பற்றி நீயே அறியாத ரகசியங்கள் பல உள்ளது காத்யாயினி, அவன் பிற குழந்தைகளை போல் பிறந்தவனல்ல. அவன் என் மகன். எனக்கு மட்டுமே மகன். ஏன் செயற்கை மகன்"
"என்ன?" சகோதரனின் சொல்லைக் கேட்டு உறைந்து நின்றாள் காத்யாயினி.
"ஆம் காத்யாயினி. அவன் செயற்கை குழந்தை தான். முற்பிறவியில் மரணித்தவனின் ஆன்மாவினை எடுத்துவந்து இப்பிறவியில் செயற்கையாக அவனை உருவாக்கி அவனுக்கு உயிர் கொடுத்திருக்கிறேன்."
"என்ன சொல்கிறீர்கள்? எனில், அண்ணி? குழந்தை பிறந்ததும் அவர் பஞ்ச பூதங்களுடன் கலந்துவிட்டதாக சொன்னீர்கள்?"
"ஹ்ம்ம்.. அன்று, ராணாவை உருவாக்கும் தகவலறிந்து அவள் என்னை தடுத்தாள். கோபத்தில் தள்ளிவிட்டேன். அவள் சென்று விழுந்தது ராணாவிற்காக நான் உருவாக்கி வைத்திருந்த அந்த அமில அகழியில்."
"எனில், ராணா உங்கள் மகனில்லையா?"
"ராணா என் மகன் தான். எனக்கு கிடைத்த வரம். தாயில்லாமல் பிறந்த காலதேவனின் வரம் அவன். அதே நேரம், அவன் வாழ்வு ஒரு சாபமே. அது-. அதை விளக்கினாலும் உனக்குப் புரிய வாய்ப்பில்லை. அதுபோல், சமாராவின் விஷயத்திலும் இதுவே. அவள் ஒரு பரம பிசாசினி. ஆதிமஹா யுத்தத்தில் அடியோடு அழிந்த பரமபிசாசினி இனத்தில், மறு பிறபெடுக்கும் வரம் பெற்ற ஒரே பெண் இவள். ஆனால் இங்கு, இச்சூழலில் ஒரு பரமபிசாசினியாக அவள் உயிர்வாழ்வது அவளுக்குக் கிடைத்த ஒரு சாபம்போல் தான். அவளின் வளர்ச்சிக்கு ஏற்ப அவளின் சக்திதாகமும் வளர்ந்துக்கொண்டே தான் போகும். காலம் செல்லச் செல்ல அவளுக்கு வேண்டிய சக்திகளை கொடுக்கும் அளவிற்கு எவரும் இருக்க மாட்டார்கள். அதனால் அவளின் சக்திதாகம் வெகுவாக அதிகரிக்கும். அவளின் உயிர்சக்திகள் குறைந்துப் போகும். மரணவேதனை அவளை கொள்ளும். ஆனால், அந்த மரணம் மட்டும் அவளை நெருங்காது. ஹ்ம்ம்."
"சகோதரா? என்ன- என்ன இதெல்லாம்? என்ன சொல்கிறீர்கள்? என் மகள் இத்தனை கஷ்டங்களை அனுபவிக்க வேண்டுமா? ஏன் சகோதரா? ஆனால்- ஒரு நிமிடம், ராணா இருக்கிறானே? அவனால் என் மகளை காக்கமுடியும் தானே? பிறகென்ன?"
"இல்லை, காத்யாயினி. இதுநாள் வரையில் முடிந்திருக்கலாம். இன்னும் சில காலம் கூட அது முடியலாம். ஆனால், அதுவே தொடராது. சமாராவின் சக்திதாகம் வளர்ந்துக்கொண்டே தான் செல்லும். இதேநிலை நீடித்தால், ராணாவின் சக்திகளும் குறைந்து அவனும் மரணிக்க நேரும்." இருளரசன் விளக்கம் கொடுத்த நொடியில் காத்யாயினி வாயடைத்து நிற்க... மேலும் தன் விளக்கங்களைத் தொடர்ந்தார் இருளரசன்.
"ராணாவை குறித்தும் அவன் சக்திகள் குறித்தும் நீ அறிய வேண்டியவை நிறைய உள்ளது காத்யாயினி. அவன் சக்திகள் சற்று சிக்கலானவை. அதே நேரத்தில் சமாராவின் உயிர் சக்திகளும் என்றும் குறையக்கூடாது."
"இது எப்படி சாத்தியம் சகோதரா? இப்பொழுது தானே சொன்னீர்கள் அவளின் சக்திதாகத்தை எவராலும் தீர்க்க முடியாதென? இனி ராணாவலும் முடியாது"
"ஆம்! ஆனால்- ஹ்ம்ம். நேரடியாக விஷயத்தை சொல்வது நலமென நினைக்கிறேன்! நம் சமாராவிற்கு உடனடியாக திருமணம் செய்திட வேண்டும்."
"சகோதரா! அவள் ஒரு பரமபிசாசினி. திருமணம் என்ற ஒன்று நிகழ்ந்தால் அதன்பின் அவளுக்கு சக்தி தேவையெனில் அவள் முதலில் செல்வது கணவனை நாடித்தான். எத்தகைய சக்தி கொண்டவனாயினும் ஒரு திங்களுக்கு மேல் தாக்குப் பிடிப்பது கடினம்."
"ஆம், காத்யாயினி. ஆனால் ஒருவன் இருக்கிறான் சாமாராவின் சக்திதாகத்தை போக்க. காலம் முழுவதும் அவளின் உயிர் சக்திகள் குறையாமல் அவளை பாதுகாக்க... அவளை ராணாவிடம் நெருங்கவிடாமல் காக்க இங்கேயே ஒருவன் இருக்கிறான்."
"இங்கேயேவா? யார் சகோதரா?"
".. ஷேனா."
"ஷேனா? அந்த ரட்சக ராஜ்யத்தின் வாரிசு?"
"ஹான். அவனே தான். நம் சமாராவிற்கும் அவனுக்கும் விரைவில் திருமணம் நிகழ்த்திட வேண்டும் காத்யாயினி. அதுவே அனைவருக்கும் நலம்."
"ஆனால் சகோதரா, அவன் அன்னை ஒப்புக்கொள்வாளா?"
"ஹ்ம்ம். அவளின் ஒப்புதலெல்லாம் நமக்கெதற்கு காத்யாயினி. நமக்கு சமாராவின் ஒப்புதல் மட்டுமே போதுமானது." என்றதுடன் இருளரசரின் முகத்தில் வன்மம் கலந்த வெற்றிப் புன்னகை ஒன்று இழையோட. ஒன்றும் விளங்காமல் சகோதரனை பார்த்திருந்தாள் காத்யாயினி.
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro